Monday, September 5, 2011

தனிமைப் பறவை.

(  மாதங்கி மாலி அவர்கள் ஃபேஸ் புக்கில் ஆங்கிலத்தில் The Lonely Bird 
என்று ஒரு பத்தி எழுதியிருந்தார். அக்கருத்தை எடுத்தாண்டு நானும் 
தமிழில் “தனிமைப் பறவை “ என்றொரு பத்தி ஃபேஸ் புக்கில் எழுதியிருந்தேன். 
அதனை இங்கே பதிவாக இடுகிறேன். மாதங்கிக்கு நன்றி )  


                                                 தனிமைப் பறவை
                                   ----------------------------
மஞ்சள் வெயில் மாலை மதி மயங்கும் வேளை
ஆதவன் மேற்கே மறைய மறைய
செக்கர் வானச் சிவப்பினூடே கருமேகம்
களைகட்ட ,இருட்டு கோலோச்சத் துவங்க
மென்காற்று வீச மெய் குளிரத் துவங்கியது.

அகண்ட வானில் புள்ளினங்கள் அழகாக ஓர்
ஒழுங்கில் சீராகப் பறந்து தத்தம் கூடுகள் நாட,
எல்லாம் சென்றதைக் கண்ட நான்
தூரத்தே தன்னந்தனியே ஒரு சிறு பறவை
ஆயாசத்துடன் பறந்து வருதல் கண்டேன்.

“புள்ளே நீ ஏன் பின் தங்கி விட்டாய்.?
சிறகில் வலிமை குறைந்ததோ ?
உன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்க நீ
வெகுவாகப் பாடுபட்டாயோ.?
தானியங்கள் சிதறிக் கிடக்க வில்லையோ.?
புழுக்கள் மண்ணுக்கடியில் பதுங்கி விட்டனவோ?
இரையின்றி நீ சென்றால் அவற்றின்
ஏமாற்றம் தாங்க முடியாததோ.?

இருந்தாலும் சின்னப் பறவையே
உன் கூட்டம் விட்டு நீ பின் தங்கிச் செல்வது
எனக்கு என்னவோ போல் தோன்றுகிறது
இருட்டி விட்டால் உனக்குப் பாதை தெரியுமா.?
விரைவாய் சிறகசைத்துச் செல் சின்னப் பறவையே
தனியே இருத்தல் இவ்வுலகில் கொடிது.

நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.
நீ உன் சிறகசைப்பை விரைவாக்குகிறாய்
இருட்டினூடே நீ மறைந்து விடுகிறாய்.
உன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.
உன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்
அவற்றுக்கு ஆகாரம் ஊட்டுகிறாய்.

நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.
சென்று வா என் சின்னப் பறவையே.”
-------------------------------------------------
  

21 comments:

 1. அருமையான கவிதை...
  ஒரு சந்தேகம்,
  கவிதையின் ஆரம்பத்தில்
  மஞ்சள்
  ஆதவன்
  சிவப்பு
  கருப்பு
  என்று குறிப்பிட்டுள்ளீர்கள்
  அது தி.மு.க வை குறிப்பிடவில்லை தானே..

  ReplyDelete
 2. @சூர்யஜீவா என் வலைக்கு வந்தமைக்கு நன்றி. எனக்கும் கட்சிகளுக்கும் காத தூரம்.

  ReplyDelete
 3. //உன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.
  உன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்
  அவற்றுக்கு ஆகாரம் ஊட்டுகிறாய்.//

  ஆஹா!
  எப்படிப்பட்ட அழகிய காட்சி அது!
  என் கண்முன்னே நிற்கிறது!!

  மிக அழகாகவே எழுதியுள்ளீர்கள்.
  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. நலிந்தோரை வீழ்ந்தோரை இனம் கண்டு
  உயர்த்த் துடிக்கும் ஒரு நல்ல் உள்ளம் குறித்த
  வெளிப்பாடாக வந்த கவிதையை மூலம் போல் சுருதி குறையாது
  மிகச் சரியாக படிப்பவர்கள் உணரும்படி படைப்பாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி .த.ம.1

  ReplyDelete
 5. அருமையான கவிதை...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. காட்சி கண் முன்னே விரிகிறது.

  ReplyDelete
 7. மாலை நேரக் கற்பனை
  மனதை மயக்க வந்துள்ளது
  அருமை

  த -ஓ 4
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. @ரமணி பின்னூட்டத்தில் த.ம. 1 என்று எழுதியிருக்கிறது.புரியவில்லை. என் வலைப்பூவை தமிழ் மணத்தில் இணைத்திருக்கிறேன். தமிழ்மணப் பட்டை ஏதும் பதிவுகளில் வருவதில்லை. பதிவினை ப்ரிவ்யூ பார்க்கும்போது தமிழ்மணம் லோகோ வருகிறது நான் இதுவரை இதைப் பற்றி நினைக்க வில்லை. உங்களது மற்றும் புலவரது பின்னூட்டங்கள் என்னை யோசிக்க வைக்கிறது. முடிந்தால் தெளிவிக்கவும் (மின் அஞ்சலில். )

  ReplyDelete
 9. @கோபு சார், புலவர், ரெவெரி, ஸ்ரீராம், ரத்னவேல் ரம்ணி அவர்களுக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 10. தனிமையில் எத்தனை மன இரைச்சல் பதுங்கி இருக்கிறது, பார்த்தீர்களா?..

  ReplyDelete
 11. http://www.virtualvinodh.com/avalokitam

  நீங்கள் இந்தப் பக்கத்தை விரும்பலாம். வேலன் பக்கத்தில் அவர் அறிமுகப் படுத்தியதில் பார்த்தேன். வேலன் பக்கம் லிங்க் கீழே. ஒரு செய்யுளை உள்ளீடு செய்தால் யாப்பு, எதுகை, அணி, அசை, எல்லாம் கண்டு பிடிக்க முடியும்.

  http://velang.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. விநோத் நல்லதொரு நண்பர். இப்போது தொடர்பில் இல்லை! :(

   Delete
 12. மென்மையான ஒரு கவிதை.. ஆரவாரமில்லாமல்... குத்துவிளக்கு சுடர் போல்...

  ReplyDelete
 13. பறவைகளுக்காய் படைத்த வரிகள் மிக்க சிறப்பு வாழ்த்துகள்

  ReplyDelete
 14. பறவைகள் சிறகை அடிக்கும் சத்தமின்றி அமைதியான அழகான கவிதை..ஐயா. படிக்கும் போது மனதிலும் அமைதி நிலவுகிறது.

  ReplyDelete
 15. பறவைகள் சிறகடித்துப் பறக்கும் காட்சி கண் முன்னே தோன்றுகிறது. அதன் இணைப்பறவை வரலைனாக் கூடக்கொஞ்சம் சோர்வோடு தான் வரும்.

  அப்படித் தான் ஒரு சிட்டுக்குருவி தன் இணைக் குருவிக்காகக் காத்திருந்ததையும், அது வரும் வரை குஞ்சுகளைக் கூடக் கவனிக்காமல் தன் அலகைத் தாழ்த்தியவண்ணம் சிறகுகளுக்குள் முகத்தை மூடிக் கொண்டு தியானம் செய்த கோலத்தில் அமர்ந்திருந்ததும் இன்றும் மறக்க முடியாக் காட்சி. :)) நாங்க குளிர் நாட்கள் என்பதால் கதவைச் சாத்திட்டோம். வெளியே தாமதமாக வந்த பறவை குரல் கொடுக்க, உள்ளிருந்து இது பதில் கொடுக்க, குஞ்சுகள் கிரீச்சிட, அப்புறமாத் தான் எங்களுக்குப் புரிஞ்சது. கதவைத் திறந்து வெளியே இருந்ததை உள்ளே விட்டோம். :))))

  ReplyDelete
 16. ஆண்டுகள் பல ஆயினும் மறக்க முடியாத நிகழ்வு அது.

  ReplyDelete
 17. நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
  உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.
  சென்று வா என் சின்னப் பறவையே.”//

  இன்று பறந்து போய் விட்டது எங்கள் வீட்டில் இருந்த குஞ்சு
  நானும் மேல் உள்ள வரிகளை கூறி வாழ்த்துகிறேன்.
  அருமையான கவிதை.
  நன்றி , சுட்டி கொடுத்தமைக்கு.

  ReplyDelete
 18. அட, நான் ஏற்கெனவே படிச்சுப் பார்த்துக்கருத்தும் சொல்லி இருக்கேனே!

  ReplyDelete