வியாழன், 22 செப்டம்பர், 2011

வீழ்வேனென்று நினைத்தாயோ. ?

வீழ்வேனென்று நினைத்தாயோ.?
----------------------------------------------

பதினாறாம் தேதி மதியம் உணவருந்திக் கொண்டிருந்தேன்.
தொலைக் காட்சிப் பெட்டி எதிரே சோபாவில் அமர்ந்து
இருந்தேன். இடுப்பு வேதனையால் எழுந்து நடமாட முடியாமல்
இருந்ததால் மனைவியே சாதம் பிசைந்து கொடுப்பாள். குழம்பு
சாதம் சாப்பிட்டு தயிர் சாதத்துக்காக சாப்பாட்டுத் தட்டை
மனைவியிடம் கொடுத்தேன்.திடீரென்று தலைக் குப்புற
வீழ்ந்து இருக்கிறேன். ஏதும் புரியாத மனைவி அழுது அலறத்
துவங்கி இருக்கிறாள். கண்களில் கண்ணீர் கரகரவென வழிய,
"ஐயோ ,என்ன ஆயிற்று" என்று கதறிக் கொண்டிருந்தாள்.சில
வினாடிகளில் எழுந்திருந்த நான் “என்னம்மா அழுகிறாய்;
என்ன ஆயிற்று.?”என்று விசாரிக்கவும், அழுது கொண்டே
நடந்ததை விவரித்தாள். அப்போதுதான் நான் சோபாவின் கீழே
இருப்பதும், என் கண்ணாடி கீழே விழுந்து கிடந்ததும்,பார்த்தேன்
அந்த அவசரத்திலும் நான் இடுப்புக்கு அணிந்திருந்த பெல்ட்
பேடை என் மனைவி அவிழ்த்திருந்தாள். என் இடது கண்ணின்
மேல் புருவ பாகம் நேராகத் தரையில் மோதியதும் என் மூக்குக்
கண்ணாடி என் இடக்கண்ணின் பக்க வாட்டில் குத்தி மெட்டல்
ஃப்ரேம் கோணலாகிப் போனதும் தெரிந்தது என் மனதில்
தோன்றியதை உடனே என் மனைவியிடம் கூறினேன். “நீ
அழாதே. நான் தான் அவனை எட்டி உதைத்துவிட்டேனே. I HAVE
JUST KICKED HIM " என்றேன்.

உடனே என் மக்களுக்கு செய்தி பறந்தது. பெரியவன் வெளியூரில்
இருந்தான். சின்னவன் அடுத்த நாள் டெல்லி செல்ல திட்டமிட்டு
இருந்தான். அதை கேன்சல் செய்து உடனே ஓடி வந்தான். என்னை
அவன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

எந்தஒருமுன் அறிவிப்புமின்றிதிடீரென்று நான் குப்புறவீழ்ந்திருக்
கிறேன். எனக்கு இடுப்பு வலி தவிரவேறு உபாதைகள் இருக்க
வில்லை. ரத்த அழுத்தம் சர்க்கரை, கொழுப்புஎன்று எதுவும்
கிடையாது. தலைசுற்றல் மயக்கம் எதுவும் இருக்கவில்லை.
சுருங்கச் சொல்லப்போனாலெந்த மாதிரி முடிவு எனக்கு வர
வேண்டுமென்று நான் வேண்டிக் கொண்டிருந்தேனோஅது அடுத்து
வந்து எகிறி விட்டது. நான் “ காலா, என்னருகே வாடா, ;உன்னை
சற்றேமிதிக்கிறேன் என் காலால்” என்று அடிக்கடி நினைப்பதும்
கூறுவதும் எழுதுவதும் உண்டு. எனக்கே தெரியாமல் என்னை
அழைக்க வந்தவனை நிஜமாகவே நான் உதைத்து விட்டேனா.?
என் மனைவியைப் பார்த்தபோது நான் உணர்ந்தது இதுதான்.
நான் போய்விட்டேன் என்றே நினைத்துக் கதறி இருக்கிறாள்.
நான் உண்மையில் போனால் எப்படிக் கதறுவாள் என்றும்
கண்டு கொண்டேன்.

முண்டாசுக் கவிஞனின் கவிதை வரிகளில் உள்ளதுபோல்தேடிச்
சோறு நிதம் தின்று,கவலைகளில் உழன்று, ( ஆனால் நான்
அறிந்து யாரையும் கவலையில் உழலச் செய்ய வில்லை )நரை
கூடிக் கிழப் பருவமெய்தி வேடிக்கை மனிதர் போல் வீழ்வே
னென்றுநினைத் தாயோஎ ன்று கேள்வி கேட்பது அபத்தம் போல் தோன்றுகிறது.

நம்மால் வீழாமல் இருக்க முடியுமா.?அவனே வீழ்ந்தவன் தானே.
 காலனை காலால் என்றும் எப்போதும் உதைக்க முடியுமா? (இப்
போது நான் உதைத்து விட்டாலும் )தவிர்க்கப்பட முடியாதது
தானே மரணம்.?அனுபவிக்கப்பட வேண்டியதுதானே என்று
கூறும்போது  அனுபவம் பகிர்ந்து கொள்ள்க் கூடியதா?வீழ்ந்தவன்
நான எழாமல் போயிருந்தால் நான் பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து
 கொண்டிருக்க முடியாதே. இந்த அனுபவம் ஒன்று தெரிவிக்கிறது.
மரணம் நிகழ்வது நொடி நேரத்துக்குள். வலி என்று ஏதும் கிடை
யாது.அப்படி  இருந்தாலும் யாரிடமும் தெரிவிக்க இயலாது.
நினைத்து ஏற்படும் பீதியும் பயமும்தான் அதிகம்.
மரணிப்பவனால் அவனுக்கு எந்த பாதகமும் இல்லை. இருப்பவர்
களுக்கே எல்லா கஷ்டங்களும் நஷ்டங்களும். அதுவும் சிறிது காலத்துக்குத்தான் பிறகு எல்லாம் மறந்து விடும். என்னைப்போல்
இருப்பவர் போவதால் எந்த பாதகமும் யாருக்கும் இருக்கப்
போவதில்லை. நான் எனக்கிடப்பட்ட எல்லா கடமைகளை
முடித்துவிட்டேனே.!இனி நான் இருப்பதால் எந்த பலனும் இல்லை.
போவதால் எந்த நஷ்டமும் இல்லை.

இன்று நான் என் இல்லத்துக்கு போவதாக இருக்கிறேன். என்னை
மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். தலையில் எம்.ஆர். ஐ.
எடுத்தார்கள். எந்த பாதிப்போ பிரச்சனையோ இல்லை.கண்கள்
மட்டும் பாக்சிங்கில் குத்து வாங்கியவன் கண்கள் போல ப்ளாக்
ஐயுடன் இரத்த சிவப்பாக இருந்தது. இப்போது அதுவும் தேவலை.

என் இடுப்பும் நிதானமாகத் தேறி வருகிறது. ஆங்கிலத்தில் சொல்
வது போல ALL IS WELL THAT ENDS WELL. உட்காரவும் எழுந்து
நிற்கும்போதும் சிறிது சிரமமாக இருக்கிறது. மற்றபடி 90%
நலமாகி விட்டேன்.

ஒரு கொசுறு செய்தி. -என் மனைவி பாத் ரூம் சென்றிருந்தபோது
யாரோ அழைப்பு மணியை விடாது அழுத்த நிதானமாக எழுந்து
நான் கதவைத் திறக்கச் சென்றிருந்தேன். பாத்ரூமிலிருந்து
வந்த என் மனைவி என்னைக் கட்டிலில் காணாமல் கீழே
தேடியிருக்கிறாள்.!

ஒரு கற்பனை.- நான் மட்டும் நானாக இல்லாமல் என் நினைவாக
மாறியிருந்தால் என்ன மாதிரி சம்பாஷ்ணைகளும் பேச்சுகளும்
நடந்து கொண்டிருக்கும். !

விடாமல் தொடர்ந்து நான் வலைக்கு வர இன்னும் சிறிது காலம்
பிடிக்கலாம். வித்தியாசமான பதிவுகள் இட எண்ணிக் கொண்டு
இருக்கிறேன். என் முந்தைய பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள்
பெரும்பாலும் என் உடல் நலம் வேண்டியே இருந்தன. எல்லோ
ருக்கும் என் மனமார்ந்த நன்றி.
--------------------------------------------------------------------------



.






30 கருத்துகள்:

  1. அய்யா, உடல் நலனைப் பேணுங்கள்.

    உங்கள் நலனுக்காக இறை வேண்டுதல்க்ளுடன்,

    அன்பன்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா, நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு இதே உற்சாகத்துடன் வாழ்ந்து என் போன்றவர்களை வழிநடத்த வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுடனே இருப்பான்.

    பதிலளிநீக்கு
  3. தலைப்பு பார்த்துதான் வந்தெம் அய்யா...


    உடல்நலனை பார்த்துக் கொள்ளுங்கள்..

    இறைவன் துணை இருப்பான்..

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஜி எம் பி அய்யா - உடல் நலம் பேணுக - நூறாண்டு வாழ்க - இறையின் கருணை என்றும் துணை புரியும். பிரார்த்தனைகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. நலம் பெற நானும் வேண்டுகிறேன்
    உங்கள் நலனில் அக்கறை வேண்டும்
    நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டு
    வாருங்கள்
    நலமுடன் இருக்க எனது பிராத்தனைகளும்

    பதிலளிநீக்கு
  6. அருமையான தலைப்பு
    மீண்டும் நல்ல ஆரோக்கிய நிலைக்கு விரைவில்
    வருவீர்கள் என்பதிலோ அதிக பதிவுகள் தருவீர்கள் என்பதிலோ
    எனக்கும் துளியும் சந்தேகமில்லை
    தொடர்ந்து சந்திப்போம் வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  7. நமக்குன்னு வரும்போது எங்கேந்து தான் தைரியமும் துணிச்சலும் கூடவே வருதோ. மத்தவங்க பயப்படும் அளவுக்கு பாதிக்கப்பட்டவங்க பயமே கொள்வதில்லே.உங்க மனதுணிவு அசாத்யம்.

    பதிலளிநீக்கு
  8. நலமுடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.
    //கடைசி அனுபவம் பகிர்ந்துகொள்ள முடியாதது//
    வலி மிகுந்த உண்மை!

    பதிலளிநீக்கு
  9. தாங்கள் மேலும் பல்லாண்டு காலம், உடலும் உள்ளமும் நலமோடு வாழ பிரார்த்திக்கிறேன். vgk

    பதிலளிநீக்கு
  10. உடலினை உறுதி செய்யுங்கள், அது வரை உங்கள் உள்ளம் உறுதியுடன் இருக்கும் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்..

    பதிலளிநீக்கு
  11. //நான் எனக்கிடப்பட்ட எல்லா கடமைகளை
    முடித்துவிட்டேன். இனி நான் இருப்பதால் எந்த பலனும் இல்லை.
    போவதால் எந்த நஷ்டமும் இல்லை.//

    இந்தத் தெளிவு இருந்தால் போதும்.
    ஆனாலும் உங்கள் துணைவியார் கலங்கத்தான் செய்வார்கள்.

    உடல் நலம் தேற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் துணிவும் தெளிவும் வியக்க வைக்கின்றன. என்ன காரணத்தினால் விழுந்தீர்கள் என்று மருத்துவராலும் கண்டு பிடிக்க முடியவில்லையா? உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக ஓய்வு எடுங்கள். எங்கள் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  13. ஐயா, நேற்றே உங்களது இந்தப் பதிவைப் படித்து விட்டேன். உடல்நிலை தேறிவிட்டது என்று நீங்கள் சொன்னாலும் அதற்குள் ஏன் பதிவெழுதுகிறார் என்கிற யோசனை யில் பின்னூட்டமிட்டு இன்னும் உங்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாதென்று பேசாதிருந்தேன்.

    இன்று என் பதிவில் வந்து நீங்கள் பின்னூட்டமிட்டது, மனதை நெகிழச் செய்துவிட்டது. பதிவெழுதியது மட்டுமில்லாது, எல்லாருடைய பதிவையும் உட்கார்ந்து படித்துக் கொண்டு வேறு இருக்கிறீர்களே என்று மனம் வாடியது. ஏன் இப்படி உங்களை சிரமப்படுத்திக் கொள்கிறீர்கள், ஐயா?..

    என் அனுபவத்தில் உணர்ந்ததைச் சொல்கிறேன். என்ன தான் எழுதினாலும் இன்னும் இன்னும் என்று மனத்திற்கு திருப்தி ஏற்படுவதில்லை. அதை வெல்ல ஒரே வழி, ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவு நிறைய இடைவெளி விடுவது தான்.

    ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். மெயிலைப் பார், பின்னூட்டத்தைப் பார் என்று மனசு கிடந்து அலைபாயும். அந்த நமநமப்பை வென்று விட்டால், எழுதாமலிருப்பதே மனதிற்கு ஆரோக்கியத்தை அளித்து அடுத்து எழுதுவதற்கு உற்சாகத்தை அளிக்கும். எப்போதாவது ஒன்றென்றாலும், எழுதுவதைத் தீர்மானமாக எழுதுவது.

    இந்த இடைப்பட்ட காலத்தில், அறையில் அடைந்து கணினியை வெறிப்பதை விட இயற்கையை
    ரசிக்கலாம். வெளிக்காற்றுக்கு வந்துவிட்டாலே, புழுக்கம் போயே போச்! நம் நேரத்தின் பெரும்பகுதியை இந்த கணினி எழுத்து விழுங்கிக் கொண்டிருப்பது வெளியுலகிற்கு வந்தவுடன் தான் புத்தம் புது உணர்வாக மனதிற்கு புரிகிறது.

    நெருங்கிய உறவுகளுடன் நேரத்தைக் கழிக்கும் பொழுது, அவர்கள் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. அவர்களுக்கும் இப்பொழுது தான் புதுசாகப் பார்க்கிற மாதிரி நம்மிடம் ஒரு தனிப்பிரியம்.

    நகைச்சுவையை வாரி வழங்கும் புத்தகங்கள் நிறைய படியுங்கள்.
    அவை தான் நிறைய யோசிக்க வைக்காது, உடல் ஆரோக்கியத்திற்கு
    உறுதுணையாக இருக்கும். படிக்க சிரமமாயிருக்கிறது என்றால், குழந்தைகளோடு குழந்தையாகி மனசை லேசாக்கிக் கொள்ளுங்கள்.

    பின்னூட்டம் தான் எனக்கு டானிக் என்று சொல்லியிருந்தீர்கள். எனக்குத் தெரிந்த டானிக்கை பரிந்துரைத்திருக் கிறேன்.

    உங்கள் உடல் நலனைப் பேணுங்கள்.
    அது தான் முக்கியம்.

    பதிலளிநீக்கு
  14. போதிய ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அனுபவங்கள் இப்படித்தான். திடீரென்று வந்து தாக்கும். வாழ்க்கையின் உண்மைகளை போதி மரம் போல சொல்லிக் கொடுத்து செல்லும். உங்கள் மனைவி மிகவும் க‌லங்கிப்போயிருப்பார்கள். அவர்களுக்கு என் ஆறுதலைச் சொல்லுங்கள்.

    நீங்க‌ள் ரொம்ப‌ நாட்க‌ளுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துக‌ள் உங்க‌ளுக்கு ஒரு வேளை இப்ப‌டிப்ப‌ட்ட‌ பாதிப்புக‌ளைக் கொடுத்திருக்க‌லாம். அந்த‌‌ வ‌ழியிலும் பரிசோத‌னைக‌ளை மேற்கொள்ளுங்க‌ள். அதிக‌ இடுப்பு வ‌லியிலும் இந்த‌‌ மாதிரி பாதிப்பு ஏற்ப‌டும். எத‌னால் இப்ப‌டி ஆன‌து என்று தெரிந்து கொன்டு த‌க்க‌ மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்க‌ள்.

    பதிலளிநீக்கு
  15. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி. உங்கள் அனைவரின் அன்பு என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. சாதாரணமாகவே எனக்கு உடல் நலக் குறைவு என்று என்னை யாரும் விசாரிப்பதில் உடன்பாடு இல்லை. இருந்தும் இப்பதிவை நான் வெளியிட்டதே எனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான். கிட்டத்தட்ட மரணிக்கவே செய்து விட்டேன். ஆனால் மரணம் என்னை தீண்டி ஓடிவிட்டது. அந்த நிலை எனக்குள் ஒரு தைரியத்தை ஏற்படுத்தி விட்டது. நான் அஞசவில்லை. என்னால் மற்றவர் துயர் படக்கூடாதே என்பதே என் கவலை. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாத நிகழ்வு எவ்வ்ளவு நன்றாக இருக்கும். பலர் கூறியுள்ளது போல் என் மனைவியே மிகவும் பாதிப்புக்குள்ளாகி விட்டாள். என்ன செய்வது .? தவிர்க்கப்பட முடியாதவை அனுபவிக்கப்பட்டுத்தானே ஆகவேண்டும். நான் என் சகஜ வாழ்வுக்குத் தயாராகி விட்டேன். மீண்டும் எல்லோருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. ஜி எம் பி ஐயா - உடல் நலம் பேணுக - நூறாண்டு வாழ்க -

    இன்று என் பதிவில் வந்து நீங்கள் பின்னூட்டமிட்டது, மனதை நெகிழச் செய்துவிட்டது. பதிவெழுதியது மட்டுமில்லாது, எல்லாருடைய பதிவையும் உட்கார்ந்து படித்துக் கொண்டு வேறு இருக்கிறீர்களே என்று மனம் வாடியது. ஏன் இப்படி உங்களை சிரமப்படுத்திக் கொள்கிறீர்கள், ஐயா?

    தாங்கள் மேலும் பல்லாண்டு காலம், உடலும் உள்ளமும் நலமோடு வாழ பிரார்த்திக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  17. அன்பின் ஜி எம் பி அய்யா - உடல் நலம் பேணுக - நூறாண்டு வாழ்க

    இன்று என் பதிவில் வந்து நீங்கள் பின்னூட்டமிட்டது, மனதை நெகிழச் செய்துவிட்டது. பதிவெழுதியது மட்டுமில்லாது, எல்லாருடைய பதிவையும் உட்கார்ந்து படித்துக் கொண்டு வேறு இருக்கிறீர்களே என்று மனம் வாடியது. ஏன் இப்படி உங்களை சிரமப்படுத்திக் கொள்கிறீர்கள், ஐயா?..
    தாங்கள் மேலும் பல்லாண்டு காலம், உடலும் உள்ளமும் நலமோடு வாழ பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. ஐயா உங்களின் உடலை நல்ல முறயில் கவனித்துக் கொள்ளுங்கள் இடுப்பு வலி வெந்தயம் நீரில் நினையவைத்து காலையில்மென்று தின்று தண்ணீர் குடிக்கவும் வாதம் உண்டாக்கும் பொருட்கள் வேண்டாம் விரைவில் குணமடைய வேண்டும் .

    பதிலளிநீக்கு
  19. It was chilling to read this!

    please take care sir! hope you get well soon... and write many many more great articles!

    பதிலளிநீக்கு
  20. Daddy!!!

    You are amazing... You are the MAN whom i have always admired so much and will always do forever..

    Sorry for not writing in tamil...

    பதிலளிநீக்கு
  21. உங்களுக்கு நூறாயுசு சார்! இன்னும் நிறைய வேலை இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  22. உங்கள் கடமை முடிந்து விட்டதா...இப்போது தானே ஆரம்பித்துள்ளது சமுகத்துக்கு.
    சமூகத்தினால் வாழ்கிறோம். உங்கள் அறிவின் தெளிவு இங்குள்ள பலருக்கு பயன்.
    நலம் நாடுங்கள் அய்யா.

    பதிலளிநீக்கு
  23. Dear Sir
    I just read this post. Even to a healthy adult, blackout can happen at times for no known reasons. I checked this in Google. Take care.
    Anbudan
    Packirisamy N

    பதிலளிநீக்கு
  24. தங்களின் நெஞ்சுரமும் மனப்பக்குவமும் முன்மாதிரியாக இருக்கிறது. வெளிநாடுகளில் புற்றுநோய் வந்தவர்கள், சற்றும் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தம்மையொத்த பிற நோயாளிகளுடன் ஒரு சங்கம் அமைத்துக்கொண்டு, மாதமிருமுறை கலந்துரையாடுவர். மீதியிருக்கும் வாழ்நாளில் நிரவேர்ரத்தக்க சிறுசிறு லட்சியங்களை வகுத்துக்கொண்டு அதை நோக்கிய தமது முன்னேற்றத்தைப் பரிமாறிக்கொள்வர். மரணம் என்பது இயல்பானது, அதை வரவேற்போம் என்ற அவர்களின் மனநிலையைப் பார்த்து பொறாமை கொள்ளவேண்டும் நாம். உங்கள் பதிவு எனக்கு வழிகாட்டுகிறது. கீதையில் சொல்வதுபோன்ற பக்குவத்தை அடைந்துவிட்டால் மரணமும் மற்றொரு வாழ்வுக்கு வாயில்தானே! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    பதிலளிநீக்கு
  25. இந்தப் பதிவை இப்போத் தான் படித்தேன். உடல் நலம் பேணுங்கள். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

    பதிலளிநீக்கு

  26. @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கு நன்றி. இதில் குறிப்பிட்ட நிகழ்வு நடந்து ஆகிறது ஏறத்தாழ மூன்று ஆண்டுகள்.

    பதிலளிநீக்கு
  27. இந்தப் பதிவை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். ஆனால் எப்படி பின்னூட்டமிடத் தவறினேன் என்று தெரியவில்லை. நினைவு தப்பிப்போய் தரையில் வீழ்ந்துகிடந்தபோதும் தன்னைப் பற்றிய சிந்தனையற்று மனைவியை ஆற்றுப்படுத்திய வார்த்தைகள் மனத்துக்கு இதம். கட்டிலில் இல்லையென்றாலே கீழே தேடுமளவுக்கு தங்கள் மனைவி பயந்துபோயிருக்கிறார்கள்... நியாயமான பயம்தானே...

    பதிலளிநீக்கு

  28. @ கீதமஞ்சரி
    பதிவைப் படிக்கத் தவறி இருந்தவர்கள் மேலும் ஒரு வாய்ப்புபெறவே சுயதம்பட்டத்தில் சுட்டி கொடுத்தேன் வாழ்க்கையின் சில அனுபவங்களைப் பகிர்வதில்சந்தோஷம் இருக்கிறது. வருகைக்கும் அருமையான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  29. முழுவதும் படித்தேன் ஐயா
    “ காலா, என்னருகே வாடா, ;உன்னை
    சற்றேமிதிக்கிறேன் என் காலால்”
    இது உங்களது பேவரிட் வார்த்தையாயிற்றே....

    பதிலளிநீக்கு