Tuesday, June 23, 2015

ஓ...அந்தக் காலம் சில சந்திப்புகள்


                       ஓ.. அந்தக்காலம் சில சந்திப்புகள்
                        -------------------------------------------------


ஓ ... அந்தக் காலம் பதிவில் சிலநேரங்களில் முன்பே பகிர்ந்த விஷயங்களும் இருக்கலாம் ஒரு முறை நினைவில் வந்தால் மறு முறை வரக்கூடாது என்றில்லையே.
நாங்கள் என் சிறு வயதில் அரக்கோணத்தில் இருந்தபோது தேசப் பிதா மகாத்மா காந்தியைப் பார்த்தது  குறித்து எழுதி இருக்கிறேன் இது அது பற்றி அல்ல. இருந்தாலும் ஒருசில உலகத் தலைவர்களை சந்தித்தது பற்றியே எழுதுகிறேன்
முன்பெல்லாம் இப்போது போல் தொலைக்காட்சிகள் இருக்கவில்லை. பத்திரிக்கைகளில் படித்தும் புகைப்படங்களைப் பார்த்துமே தலைவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் அந்த மாதிரியான சூழலில் நான் மிக அருகில் இருந்து பார்த்த தலைவர்களைப்பற்றிய நிகழ்ச்சியை நினைவு கூர்கிறேன்
 நான் கண்ட உலகத் தலைவர்களுள் மறைந்த சீனப் பிரதமர் சூ-என் -லாய் 
பிரத்தியேகமாய் நினைவுக்கு வருகிறார்.HAL-ல் பயிற்சியில் இருந்த சமயம்.
1956- 1957-ம் வருடம் என்று நினைவு.

மெயின் ஃபாக்டரியில் பயிற்சி என்பது, அங்குள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஓரிடம் இரண்டு வாரம் என்பதுபோல் இருந்தது. மெஷின் ஷாப், ஷீட்மெடல் போன்ற இடங்களில் நிறைய பிரிவுகளில் பயிற்சி. பயிற்சி என்றால் நம்மை யாரும் வேலை செய்ய விடமாட்டார்கள். தொழிலாளிகள் செய்வதை நாம் அருகிருந்து பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களோ நாம் முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பணிக்கு ஏற்ற செட்டிங் ஏதாவது செய்யும்போது நம்மை ஏதாவது காரணம் சொல்லி அகற்றிவிடுவார்கள். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் அனுபவத்தில் கற்றதை, பயிற்சி என்ற பெயரில் சின்னப் பையன்கள் நாங்கள் கற்றுக் கொண்டு பிற்காலத்தில் அவர்களையே அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்து விடுவோம் என்ற பயமே அவர்களது செயல்களுக்குக் காரணம். அனுபவமிக்கத் தொழிலாளியிடம் நட்புடன் பழகி எவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்வது நம் சாமர்த்தியம். கூடியவரை அவர்கள் சொல் பேச்சுக் கேட்டு, அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் எடுபிடி வேலையெல்லாம் பழகி கொஞ்சம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அங்கிருந்தவர்களில் வேலை அறிந்தவர்கள் அதிகம் படிக்காதவர்கள்.


           இந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது சீனப் பிரதமராயிருந்த சூ-என் லாய் இந்தியா வந்திருந்தார். அவர் எச்.ஏ.எல்.-க்கு வருகை தந்தார். அவரை மெஷின் ஷாப்புக்கு அழைத்து வரும்போது, வரும் வழியில் ஆட்டோமேடிக் லேத் மெஷின்களில் எனக்குப் பயிற்சி. அவர் உள்ளே வரும் வழியில் ஒரு புறத்தில் இந்த மெஷின்கள் ஓடிக்கொண்டிருக்க, அதன் அருகே சீனியர் ஆப்பரேட்டருடன் நானும் நின்று கொண்டிருந்தேன். வரிசையாகப் பார்வை இட்டுக்கொண்டு வந்தவர் எங்கள் அருகே வந்து ஏதோ கேட்டார். எங்களை சுட்டிக் காட்டிக் கேட்க, பயிற்சி எடுக்கும் பையன் என்று சொல்லி இருக்க வேண்டும். என் அருகில் வந்தவர், செல்லமாக என் கன்னத்தில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்திச் சென்றார். உலகத் தலைவர்களில் ஒருவரின் செல்லத்தட்டு கிடைத்தது நினைத்து அன்றெல்லாம் மகிழ்ந்திருந்தேன்.
     1962-ம் வருடம் இந்திய சீன யுத்தம் வந்த போது, ஒரு சமயம் கோபத்தில் சூயென்லாய் தட்டிய என் கன்னத்தை நான் அடித்துக் கொண்டிருக்கிறேன்
   
  HAL-ல் பயிற்சி எல்லாம் முடிந்து Aero Engine Division-ல் வேலையிலிருந்தோம். அந்த டிவிஷன் தொடக்கத்திலிருந்தே அங்கு பணியிலிருந்தோம். போர்விமானத்துக்கான ORPHEUS ENGINE தயாரிப்பில் BRISTOL  SIDDELY நிறுவனத்துடன் ஒப்பந்தம். தொழிற்சாலைக்குத் தேவையான மெஷின்கள் வந்து ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சில மெஷின்கள் ஏற்கனவே உபயோகத்தில் இருந்தன. அந்த சமயம் (1959 ம் வருடக் கடைசி என்று நினைவு. )இந்தியப் பிரதமர் ,மனிதருள் மாணிக்கம் ,தொழிற்சாலைகளே இந்தியக் குடியரசின் கோவில்கள் என்று நம்பியவர், திரு, ஜவஹர்லால் நேரு, விஜயம் செய்தார். என்னென்ன மெஷின்கள் எதற்காக என்பன போன்ற விஷயங்களைத் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டார். அங்கு வந்திறங்கிய மெஷின்கள் ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன.ஃப்ரான்ஸிலிருந்து வந்த BERTHIEZ  என்ற வெர்டிகல் டரெட் மெஷினைப் பார்த்து எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார். அவர் அங்கிருக்கும்போது அவரைப் பொல ஒரு சிறிய BUST உருவம் அலுமினியத்தில் HYDROTEL என்னும் மெஷினில் அவர் முன்னாலேயே பிரதியெடுத்துக் கொடுத்தோம். மிகவும் மகிழ்ந்தார். இதன் நடுவே ஒரு தொழிலாளி, அவரை மாதிரியே ஒரு படம் வரைந்து ஆட்டோகிராஃப் கேட்டான். இதற்குள் அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாகவும் அதனையும் மீறி அந்தப் படத்தில் கையெழுத்துப் பொட்டுக் கொடுத்தார்.

      மேற்குறிப்பிட்ட சந்திப்புகள்  க்ளோஸ் குவார்ட்டர்ஸ் என்றால், சற்றுத் தொலைவிலிருந்து ராணி எலிசபெத், ப்ரின்ஸ் ஃபிலிப், ரஷ்யத்தலைவர்கள்  புல்கானின், க்ருஷ்சேவ் போன்றோரையும் பார்த்திருக்கிறேன்.

                                             ----------------------------------------------------------------------.
    


32 comments:

 1. நான் பார்த்தவர்களெல்லாம் உள்ளூர் தலவர்களே. திரு. காமராஜ், திரு பக்தவத்சலம், திரு சி.சுப்பிரமணியம், திரு.மு. கருணாநிதி பொன்றவர்களையே. அவர்கள் எல்லோரும் எங்கள் கல்லூரிக்கு பல நிகழ்ச்சிகளுக்காக வந்தவர்கள். பிரபல விஞ்ஞானி டாக்டர். எம்.எஸ் ஸ்வாமிநாதன் அவர்களைப் பலமுறை நெருக்கமாக சந்தித்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. இனிமையான சந்திப்புகள். நான் சந்தித்தவர்களுள் திரு காமராஜர், பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், ராஜாஜி, டிடிகிருஷ்ணமாச்சாரி ஆகியோர் மிக முக்கியமானவர்கள். டிடிகேயிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறேன். மற்றபடி எல்லா சினிமா நடிகர்களையும் நெருங்கி இருந்து பார்க்கவும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன.

  ReplyDelete
 3. உங்களின் கோபத்திற்கு காரணம் புரிகிறது... அருமையான சந்திப்புகள் ஐயா...

  ReplyDelete

 4. @ டாக்டர் கந்தசாமி
  நான் தலைவர்களைச் சந்தித்த விவரங்கள் கூடவே அப்போதைய சில நடப்புகள் பற்றியும் எழுதி இருக்கிறேனேவருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 5. @ கீதா சாம்பசிவம்
  அவர்கள் உலகத் தலைவர்கள் என்னும் காரணமே என்னைப் பதிவிடத் தூண்டியது வௌகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 6. @ திண்டுக்கல் தனபாலன்
  நட்புக்குக் கை கொடுத நம் மீதே போர் துவக்கினர் என்றால் கோபம் வராதா. வருகைக்கு நன்றி டிடி.

  ReplyDelete
 7. போர் என்பது எப்போதும் கொடுமையே. யார், யார் மீது தொடுத்த போதும். நல்ல பதிவு. நேருவுடனான சந்திப்பு மிகவும் அருமை.

  ReplyDelete
 8. சந்திப்புக்களின்...மலரும்நினைவுகள்... அருமை ஐயா.

  ReplyDelete
 9. நம் காலத்து பிரபலங்களை (அவர்களது செயல்பாடுகளில் நமக்கு உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) நேரில் பார்த்து இருக்கிறோம், பேசி இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது அய்யா!

  ReplyDelete
 10. அடேயப்பா... எவ்வளவு பெருமையான தருணங்கள். இந்தக்காலம் போல அந்தக்காலத்தில் அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தும் வசதி இல்லாதது பெருங்குறைதான். அதனால் என்ன? இதோ காட்சியாய் இல்லாது போனாலும் எழுத்தாய் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டனவே அந்த அற்புதத் தருணங்கள். பயிற்சி இடத்தில் கற்றுக்கொள்ள காட்டவேண்டிய பொறுமையும் சாதுர்யமும் வியக்கவைத்தன. பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 11. //1962-ம் வருடம் இந்திய சீன யுத்தம் வந்த போது, ஒரு சமயம் கோபத்தில் சூயென்லாய் தட்டிய என் கன்னத்தை நான் அடித்துக் கொண்டிருக்கிறேன்//
  ஹா....ஹா...ஹா...

  இனிமையான நினைவுகள்.

  ReplyDelete
 12. கொடுத்து வைத்தவர் நீங்கள். அந்த அனுபவங்களைக் கேட்டு இன்புறும் நாங்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete

 13. @ செல்ல பாண்டியன்
  பெயர் பெற்ற ஒரு உலகத்தலைவர் சூஎன்லாய் அவரிடம் கன்னத்தில் செல்லத் தட்டு வாங்கியது அப்போது சந்தோஷமாய் இருந்தாலும் போர் நேரத்தில் கோபம்வந்தது நிஜம் தொழிற்சாலைகள் நவீன இந்தியாவின் கோவில்கள் என்பார் நேரு. அவரிடம் அடுத்து அறிமுகமானது என்று நினைவில் நிற்கும் வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 14. @ கில்லர்ஜி
  சில நிகழ்வுகள் நினைவுகள் ஆகிவிட்டன ஜி. வருகைக்கு நன்றீ.

  ReplyDelete

 15. @ உமையாள் காயத்ரி.
  சந்திப்புகள் நிகழ்வுகள் அவை இப்போது நினைவுகள் வருகைக்கு நன்றி மேடம்

  ReplyDelete

 16. @ தி தமிழ் இளங்கோ
  அந்தப் பிரபலங்கள் உலகப் புகழ் பெற்றவர்கள் என்று நினைக்கும்போது மகிழ்ச்சி கூடுகிறது. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 17. @ கீதமஞ்சரி
  அன்று பயின்றது இன்றும் உதவுகிறது. உங்கள் பின்னூட்டங்கள் மனதுக்கு இதம் தருகின்றன, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்

  ReplyDelete

 18. @ ஸ்ரீராம்
  இவர் தட்டிக் கொடுத்ததற்கா பெருமை என்று கோபம் வந்தது. இப்போது நினைவுகளாக. வருகைக்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 19. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  எதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை. தற்செயலாகவே நடந்தது என்றாலும் நினைவுகள் சுகம்தான் இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது.? வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 20. வணக்கம்
  ஐயா
  நினைவை விட்டு அகலாத நினைவலைகள்... படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 21. நீங்காத நினைவலைகள்..... மேலும் தொடரட்டும்.

  தங்கள் கன்னத்தை அடித்துக் கொண்டீர்களா? சமீபத்திய பயணம் ஒன்றில் சீன யுத்தம் நடந்த இடங்களுக்குச் சென்றபோது எத்தனை கஷ்டப்பட்டார்கள் என உணர முடிந்தது.....

  ReplyDelete
 22. சூ என் லாய் இந்தியா வந்தபோது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு ‘இந்தியா என் கையில் இருக்கிறது.’ என்று சொன்னாராம் அவர் வேடிக்கையாய் சொல்கிறார் என நினைத்தபோது பின்னால் சீன ஆக்கிரமப்பு நடந்தபோது அவர் எண்ணியதைதான் சொன்னார் என்பார்கள். எனவே அவர் உங்கள் கன்னத்தை தட்டியதும் உங்களைப் போன்ற நம் நாட்டினரெல்லாம் தனது குடிமக்கள் ஆவார்கள் என்ற நினைப்பில் தான் இருக்கும். அதற்காக உங்களை அடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.பதிவை இரசித்தேன்!

  ReplyDelete

 23. @ ரூபன்
  நினைவை விட்டு அகலாத நினைவலைகளை ஆங்காங்கே பதிவாக்கி மகிழ்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 24. @ வெங்கட் நாகராஜ்
  அந்த நொடியின் அதீத கோபத்தின் வெளிப்பாடு. போரின் அவலங்கள் அனுபவித்தவர்க்கே புரியும் .வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 25. @ வே.நடனசபாபதி
  அவருக்கு அன்று ஒரு சிறுவனைத் தட்டிக் கொடுக்கத் தோன்றியிருக்கலாம் அந்த ஒரு நொடியில் அன்பின் வெளிப்பாடு. ஆனால் அவர் மனதில் நினைத்தை யார் அறிவார். கோபத்தில் நான் என் கன்னத்தை அடித்துக் கொண்டதும் அப்போதைய என் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடோ. வருகைக்கும் சில செய்திகளை நினைவு கூர்ந்தமைக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 26. பிரபலங்களை சந்தித்ததானால் நீங்களும் வலையுலகில் பிரபலமானவர்தான்!பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 27. மரியாதைக்குரிய அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்! உங்களது வாசகர்களில் நானும் ஒருவன் என்பதனை சொல்லவும் வேண்டுமோ?

  நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப் பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

  தங்களின் வலைத்தளத்தினை இன்று (25.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
  நினைவில் நிற்போர் - 25ம் திருநாள்
  http://gopu1949.blogspot.in/2015/06/25.html

  ReplyDelete

 28. @ தளிர் சுரேஷ்
  பிரபலங்களை சந்தித்தது பற்றி பகிரும் முன்பே, நான் வலையுலகில் பிரபலமானவன் ஹாஹாஹா. வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 29. @ தி தமிழ் இளங்கோ
  /இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்./ நன்றி ஐயா

  ReplyDelete
 30. எவ்வளவு இனிமையான பெருமையான தருணங்கள் வாழ்க்கையில்! ஆம் மறக்க முடியாதவைதான் சார்..சீனப் பிரதமர் கன்னத்தில் தட்டியதை போர் வந்த போது நீங்கள் தட்டிப் பார்த்தது சரிதானே....போர் என்பது எவ்வளவு கொடூரமானது! துளசி கருணானிதி அவர்களைப் பார்த்த அனுபவம் அருகில்.... கீதா இந்திராகாந்தியை மாலையிட்டு கை குலுக்கி பேசியிய அனுபவம்...வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கேட்டதுண்டு...மதராசப் பட்டணத்தில் இருந்தவர்கள்...போரைப் பற்றி....

  நல்ல மலரும் நினைவுகள்..

  ReplyDelete