Sunday, June 14, 2015

முட்டி மோதும் நினைவுகள்..ஓ..அந்தக்காலம்--2....

                                                 ஓ....அந்தக்காலம்....2
                                      முட்டி மோதும் நினைவுகள்........
                                      ----------------------------------------
அந்தக் கால நினைவுகளே வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்பதன் குறியீடுகளாக இருக்கின்றன. நினைவுகள் முட்டி மோதும் போது நிகழ்வுகள் என்னைப் பதிவிடு, என்னைப் பதிவிடு என்று போட்டி போடுகின்றன, என்னைப்பொறுத்தவரை எல்லா நிகழ்வுகளுமே அனுபவங்களைப் பெற்றுத் தந்து என்னை ஓரளவு ஆளாக்கி இருக்கின்றன. சில நினைவுகள் மகிழ்ச்சியைத் தரும் . சில நிகழ்வுகள் வருத்தம் தரும் சில நினைவுகள் எந்தவிதமான அனுபவத்தையும் வளர்த்திருக்காது. நிகழ்வுகளையும் அது சார்ந்த நினைவுகளையும் பகிர்கிறேன் வாசிப்பவர் கருத்து எடுத்துக் கொள்ளட்டும்
1963 என்று நினைக்கிறேன் சரியான வருடத்தைக் கூற என் பழைய டைரி குறிப்புகளைப் பார்க்கவேண்டும் வருடம் முக்கியம் என்றால் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம் “ திரைப்படம் வந்த வருடம் படம் பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. குமுதம் பத்திரிக்கை அந்த படத்தை ஒட்டி ஒரு போட்டி வைத்திருந்தது அது பெண்களுக்கான போட்டி என்று அறிவித்திருந்தது படத்தில் தேவிகாவின் கணவர் முத்துராமன் உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் அட்மிட் ஆகியிருந்தார். சில காலமே பிழைத்திருக்கும் வாய்ப்பு என்னும் நிலை. அந்த மருத்துவமனையின் டாக்டராக கல்யாண்குமார் தேவிகாவின் முன்னாள் காதலன் இவர்களின் மனப் போராட்டங்களை நேர்த்தியாக சொல்லிப்போன திரைக்கதை. படத்துக்குச் சுவை சேர்க்க நாகேஷ், குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி. ஆகியோரும் இருந்தனர். .சரி குமுதம் பத்திரிக்கை போட்டியில் சில கேள்விகள் கேட்டு பெண்களின் அபிப்பிராயத்தைக் கோரி இருந்தது. மூன்று கேள்விகள் என்று நினைக்கிறேன் மறந்து விட்டது. ஆனால் முக்கியமாக ஒரு கேள்வி. ஒரு வேளை முத்துராமன் இறந்து விட்டால் தேவிகா கல்யாண்குமாரை திருமணம் செய்து கொள்ளலாமா என்பதே
எனக்கு இந்தப் போட்டியில் கலந்து எழுத விருப்பம் இருந்தது. ஆனால் அது பெண்களுக்கான போட்டி. நான் எழுதக்கூடாது. அப்போது நான் காதல் வயப்பட்டிருந்த நேரம் ஒரு ஐடியா வந்தது. நான் அதை எழுதி என் மனைவியின்( அப்போதைய காதலி) பெயரில் அனுப்புவது. பரிசு கிடைத்தால் அதுவே அவள் வீட்டாருக்கு எங்கள் காதலை உணர்த்தும். பரிசை அவளுக்கே கொடுப்பது என்று முடிவெடுத்தேன் இந்த மாதிரி ஒரு போட்டியில் அவர்கள் வீட்டுப்பெண்ணின் பெயரை உபயோகப்படுத்துகிறேன் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தேன் அப்போது யாரும் இதைப்பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நான் என் எண்ணங்களைப் பதிவு செய்து குமுதம் பத்திரிக்கைக்கு அனுப்பினேன் . அதில் என் கருத்து வெகு ஜனக் கருத்துக்கு சற்று மாறாக தேவிகா தாராளமாகக் கல்யாண்குமாரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எழுதினேன் . ஏற்கனவே கல்யாண்குமாரை விரும்பி முத்துராமனை மணந்ததே இராண்டாம் கல்யாணத்துக்கு ஒப்பாகும். முத்துரான இறந்தால் கல்யாண்குமாரை மண் முடிப்பது தவறாக ஆகாது. அதுவே மூன்றாம் மணமாகக் கருதலாம் அதுவும் முன்னாள் காதலன் என்றால் தவறே இல்லை என்னும் ரீதியில் எழுதி இருந்தேன் பரிசுத்தொகை ரூ.50/- இருவருக்குப் பிரித்துக் கொடுத்ததில் என் பெயரும் .சாரி, என் காதலியின் பெயரும் இருந்தது. ஓரிரு நாளில் ரூ25/- பணமும் வந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவள் வீட்டுக்கும் தெரியப் படுத்தி அந்த ரூ25.-ஐ அவளிடம் சேர்ப்பித்தேன் அதன் மூலம் அவள் ஒரு சேலை வாங்கிக் கொண்டாள். திருமணத்துக்கு முன்பே நான் என் மனைவிக்குக் கொடுத்த பரிசு அது. இலைமறை காய்மறையாய் இருந்த எங்கள் காதல் உற்றார் உறவினருக்கும் தெரிந்தது. குமுதம் அனுப்பியிருந்த அந்தச் செய்தி அடங்கிய லெட்டரை எங்கோ வைத்துவிட்டேன் தேடியும் கிடைக்கவில்லை.நான் எழுதியது பத்திரிக்கையில் வந்தது. ஆனால் என்பெயரிலல்ல.
இன்னொரு நினைவினைப் பகிரும் வரை  இது குறித்த உங்கள் கருத்துக்களைப்பகிரலாமே.          
.
    35 comments:

 1. மகிழ்வான நினைவலைகள் எப்போது நினைத்தாலும் சுகம் தரும். உங்கள் மனைவிக்கும் கூடத்தான்! அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

  ReplyDelete
 2. இது ஒரு சுவாரஸ்யமான நினைவாக உங்கள் இருவருக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  ReplyDelete
 3. நிச்சயமாக மறக்க முடியாத
  என்றும் நினத்து நினைத்து
  மகிழத் தக்க செய்தியே

  தாங்கள் மறுமணம் செய்து கொள்ளலாம்
  என்பதற்குச் சொன்ன காரணம் வலுவானது
  மற்றும் வித்தியாசமானது

  அதனால்தான் இதைப் பரிசுக்குத்
  தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்

  பகிர்வுக்கும் நினைவுப் பதிவுகள்
  தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மறக்க முடியாத நிகழ்வு மகிழ்ச்சியை தந்தது ஐயா...

  ReplyDelete
 5. காதல் அனுபவம் இனிமையானதுதான்.

  ReplyDelete
 6. அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அய்யா! இளமை நினைவுகள் என்றுமே இனிமைதான். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 7. உங்களுடைய அந்தக் கால ‘டெக்னிக்’ – இதுவரை யாரும் இந்த டெக்னிக்கை செய்து இருக்க மாட்டார்கள். (போட்டியில் வேறு வெற்றி பெற வேண்டுமே) எனவே முறியடிக்க முடியாத சாதனை.

  ReplyDelete
 8. "காதல் இளவரசன்” ........... நல்ல கருத்து - காலத்துக்கு மீறி.

  ReplyDelete
 9. சொன்னது நீதானா என்று தொடங்கும் அந்த படப் பாடல் ,உங்களை கேட்பதாக தோன்றுகிறது :)

  ReplyDelete
 10. நல்ல ஒரு படத்துடன் கூடிய நினைவலைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. மறக்க முடியாத படங்களில் ஒன்று நெஞ்சில் ஓர் ஆலயம். எங்களுடைய மனதில் பதிந்துவிட்ட பதிவுகளில் தங்களின் இப்பதிவும் ஒன்று.

  ReplyDelete
 11. உங்கள் கருத்து இப்போது வேண்டுமானால் சாதாரணமாக தோன்றலாம். ஆனால் நீங்கள் கருத்தை வெளியிட்ட ஆண்டில் அது ஒரு அசாதாரண கருத்து. யாரும் எளிதில் வெளிப்படையாக சொல்லத் தயங்கும் கருத்து. உங்கள் கருத்தை தைரியமாக சொல்லி போட்டியிலும் காதலிலும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். அதற்காக வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 12. ஒருவரைக் காதலித்து இன்னொருவரை மணப்பதே இரண்டாம் மணம் - interesting view.
  அம்பது வருடத்துக்கு முந்தின டைரி வச்சுருக்கீங்களா!!

  ReplyDelete
 13. அந்தக் காலத்திலேயே விதவை மறுமணத்தை ஆதரித்து அழகாக கருத்து சொல்லியிருக்கிறீர்கள். கணவன் மறைவுக்குப் பிறகு ஒரு பெண் மறுமணம் செய்வதென்பது கணவனுக்கு செய்யும் துரோகம் என்ற பழங்கருத்தில் ஊறியிருந்த பலருக்கும் மத்தியில் தாங்கள் வித்தியாசமானவர்தாம் என்பதை அந்தக் கருத்துகள் உணர்த்துகின்றன. அப்படியான காலகட்டத்தில் இந்த முற்போக்குக் கருத்துக்கும் பரிசு கிடைத்திருக்கிறது என்றால் வியப்பாகத்தான் உள்ளது. காதல் மனைவிக்கு நல்லதொரு பரிசு. அந்த சமயத்தில் என் அப்பா அம்மாவின் திருமணம் கூட நடந்திருக்கவில்லை. :) நினைவுகள் சுகம். பகிர்ந்தவிதம் சுவாரசியம்.

  ReplyDelete

 14. @ மனோ சாமிநாதன்.
  முதல் வருகைக்கு நன்றி மேடம் . ஆம் எப்போதும் மகிழ்வு தரும் நினைவுகள்தான்

  ReplyDelete

 15. @ ஸ்ரீராம்
  எனக்கு சுவாரசியமான நிகழ்வு. அவளுக்கு .? கேட்கவேண்டும். வருகைக்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 16. @ ரமணி
  அந்தக் கால கட்டத்தில் அது வித்தியாசமான சிந்தனையாய் இருந்ததால் பரிசு வென்றிருக்கலாம் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 17. @ திண்டுக்கல் தனபாலன்
  என் பகிர்வு உங்களுக்கு மகிழ்ச்சி தந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே நன்றி டிடி.

  ReplyDelete

 18. @ டாக்டர் கந்தசாமி
  காதல் அனுபவம் தந்தது போல் நினைத்துப் பார்ப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 19. @ எஸ் பி. செந்தில் குமார்
  உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 20. @ தி. தமிழ் இளங்கோ
  டெக்னிக் ஒன்றுமில்லை சார். கிடைத்த வாய்ப்பு பலன் தந்தது. வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 21. @ தருமி
  அன்று காதல் இளவரசன். இன்று காதல் கிழவன் நல்லகருத்துக்கள்நிலைக்கும் என்றே நம்புகிறேன் வருகைக்கு நன்றி தருமி.

  ReplyDelete

 22. @ பகவான் ஜி
  சொன்னதும் நான் தான் சொல்வதும் நான் தான் நன்றி ஜி.

  ReplyDelete

 23. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  அந்தப் படம் எனக்கும் பிடித்த ஒன்று. என் பதிவை ரசித்ததற்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 24. @ வே.நடன சபாபதி
  என் காதலின் வெற்றியை நாங்கள் ஒன்று கூடி வாழும் இந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான காலம் பறை சாற்றும் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 25. @ அப்பாதுரை
  அப்பா இறந்து போனபோது 1959-ம் ஆண்டு என்னை என் பொறுப்புகளை நினைவுபடுத்த டைரி எழுதத் துவங்கினேன் பொறுப்புகள் ஓரளவு முடிந்ததும் டைரி எழுதும் பழக்கமும் குறைந்து 1966-ல் நின்று விட்டது. ஆனால்அந்தக் கால நினைவுகளை சரிபார்க்க டைரியைப் பார்ப்பது உண்டு, தவறாகப் போகக் கூடாதே என்று. ஆனால் சில நினைவுகளுக்கு டைரி தேவையே இல்லை. வருகைக்கு நன்றி அப்பாதுரை சார்.

  ReplyDelete

 26. @ கீதமஞ்சரி
  இப்படி ஆராய்ந்து அலசி பின்னூட்டம் இடும் உங்கள் வழி எனக்குப் பிடித்திருக்கிறது வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 27. பழமையான நினைவுகளை நினைத்துப்பார்த்து அதை எங்களுடன் பகிர்நத விதம் அருமை ஐயா.
  தாமத வருகைக்கு மன்னிக்க... 2 தினங்களாக ஊரில் இல்லை.

  ReplyDelete

 28. @ கில்லர்ஜி
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜி.

  ReplyDelete
 29. பசுமையான நினைவலைகள் என்றுமே எண்ணி எண்ணி மகிழத் தக்கன
  நன்றி ஐயா

  ReplyDelete

 30. @ கரந்தை ஜெயக்குமார்
  ஐயா இப்பொதெல்லாம் நினைவலைகளே வாழ்க்கையாய்ப் போய் விட்டது. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 31. அந்தக் காலக்கட்டத்தில் குமுதம் பத்திரிகைக்கு நல்ல வரவேற்பிருந்ததா? வித்தியாசமான பத்திரிகை புதுமையான பத்திரிகையாக இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்களை மட்டும் கருத்து சொல் அழைத்தது ஒரு சிறு புரட்சி தான்.

  ReplyDelete

 32. @ அப்பாதுரை
  அந்தக்காலகட்டத்தில் குமுதம் பத்திரிக்கை கொடிகட்டிப் பறந்தது ஆனந்தவிகடன் கல்கி போன்ற பத்திரிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் மீள் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 33. அந்தக் காலகட்டத்திற்கு இது வித்தியாசமான கருத்துத் தான். என்றாலும் இது நடக்காமல் இருந்திருக்கவே வாய்ப்பு உண்டு. இப்படி ஒரு போட்டி அந்தக் காலத்திலேயே இருந்ததும் இப்போது தான் தெரியவந்தது. சுவையான பதிவு.

  ReplyDelete
 34. @ கீதா சாம்பசிவம்
  எந்தக் காலத்துக்கும் நம் கருத்து ஒன்றுதான் மேடம் ஆமாம். சில நாட்களாக வலைப்பக்கமே காணோமே. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 35. பத்து நாட்களாகச் சென்னை வாசம் ஐயா. நேற்றிரவு தான் திரும்பினோம். கனிவான விசாரணைக்கு நன்றி.

  ReplyDelete