நிகழ்வுகளும் நினைவுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகளும் நினைவுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஜூன், 2015

முட்டி மோதும் நினைவுகள்..ஓ..அந்தக்காலம்--2....

                                                 ஓ....அந்தக்காலம்....2
                                      முட்டி மோதும் நினைவுகள்........
                                      ----------------------------------------
அந்தக் கால நினைவுகளே வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்பதன் குறியீடுகளாக இருக்கின்றன. நினைவுகள் முட்டி மோதும் போது நிகழ்வுகள் என்னைப் பதிவிடு, என்னைப் பதிவிடு என்று போட்டி போடுகின்றன, என்னைப்பொறுத்தவரை எல்லா நிகழ்வுகளுமே அனுபவங்களைப் பெற்றுத் தந்து என்னை ஓரளவு ஆளாக்கி இருக்கின்றன. சில நினைவுகள் மகிழ்ச்சியைத் தரும் . சில நிகழ்வுகள் வருத்தம் தரும் சில நினைவுகள் எந்தவிதமான அனுபவத்தையும் வளர்த்திருக்காது. நிகழ்வுகளையும் அது சார்ந்த நினைவுகளையும் பகிர்கிறேன் வாசிப்பவர் கருத்து எடுத்துக் கொள்ளட்டும்
1963 என்று நினைக்கிறேன் சரியான வருடத்தைக் கூற என் பழைய டைரி குறிப்புகளைப் பார்க்கவேண்டும் வருடம் முக்கியம் என்றால் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம் “ திரைப்படம் வந்த வருடம் படம் பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. குமுதம் பத்திரிக்கை அந்த படத்தை ஒட்டி ஒரு போட்டி வைத்திருந்தது அது பெண்களுக்கான போட்டி என்று அறிவித்திருந்தது படத்தில் தேவிகாவின் கணவர் முத்துராமன் உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் அட்மிட் ஆகியிருந்தார். சில காலமே பிழைத்திருக்கும் வாய்ப்பு என்னும் நிலை. அந்த மருத்துவமனையின் டாக்டராக கல்யாண்குமார் தேவிகாவின் முன்னாள் காதலன் இவர்களின் மனப் போராட்டங்களை நேர்த்தியாக சொல்லிப்போன திரைக்கதை. படத்துக்குச் சுவை சேர்க்க நாகேஷ், குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி. ஆகியோரும் இருந்தனர். .சரி குமுதம் பத்திரிக்கை போட்டியில் சில கேள்விகள் கேட்டு பெண்களின் அபிப்பிராயத்தைக் கோரி இருந்தது. மூன்று கேள்விகள் என்று நினைக்கிறேன் மறந்து விட்டது. ஆனால் முக்கியமாக ஒரு கேள்வி. ஒரு வேளை முத்துராமன் இறந்து விட்டால் தேவிகா கல்யாண்குமாரை திருமணம் செய்து கொள்ளலாமா என்பதே
எனக்கு இந்தப் போட்டியில் கலந்து எழுத விருப்பம் இருந்தது. ஆனால் அது பெண்களுக்கான போட்டி. நான் எழுதக்கூடாது. அப்போது நான் காதல் வயப்பட்டிருந்த நேரம் ஒரு ஐடியா வந்தது. நான் அதை எழுதி என் மனைவியின்( அப்போதைய காதலி) பெயரில் அனுப்புவது. பரிசு கிடைத்தால் அதுவே அவள் வீட்டாருக்கு எங்கள் காதலை உணர்த்தும். பரிசை அவளுக்கே கொடுப்பது என்று முடிவெடுத்தேன் இந்த மாதிரி ஒரு போட்டியில் அவர்கள் வீட்டுப்பெண்ணின் பெயரை உபயோகப்படுத்துகிறேன் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தேன் அப்போது யாரும் இதைப்பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நான் என் எண்ணங்களைப் பதிவு செய்து குமுதம் பத்திரிக்கைக்கு அனுப்பினேன் . அதில் என் கருத்து வெகு ஜனக் கருத்துக்கு சற்று மாறாக தேவிகா தாராளமாகக் கல்யாண்குமாரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எழுதினேன் . ஏற்கனவே கல்யாண்குமாரை விரும்பி முத்துராமனை மணந்ததே இராண்டாம் கல்யாணத்துக்கு ஒப்பாகும். முத்துரான இறந்தால் கல்யாண்குமாரை மண் முடிப்பது தவறாக ஆகாது. அதுவே மூன்றாம் மணமாகக் கருதலாம் அதுவும் முன்னாள் காதலன் என்றால் தவறே இல்லை என்னும் ரீதியில் எழுதி இருந்தேன் பரிசுத்தொகை ரூ.50/- இருவருக்குப் பிரித்துக் கொடுத்ததில் என் பெயரும் .சாரி, என் காதலியின் பெயரும் இருந்தது. ஓரிரு நாளில் ரூ25/- பணமும் வந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவள் வீட்டுக்கும் தெரியப் படுத்தி அந்த ரூ25.-ஐ அவளிடம் சேர்ப்பித்தேன் அதன் மூலம் அவள் ஒரு சேலை வாங்கிக் கொண்டாள். திருமணத்துக்கு முன்பே நான் என் மனைவிக்குக் கொடுத்த பரிசு அது. இலைமறை காய்மறையாய் இருந்த எங்கள் காதல் உற்றார் உறவினருக்கும் தெரிந்தது. குமுதம் அனுப்பியிருந்த அந்தச் செய்தி அடங்கிய லெட்டரை எங்கோ வைத்துவிட்டேன் தேடியும் கிடைக்கவில்லை.நான் எழுதியது பத்திரிக்கையில் வந்தது. ஆனால் என்பெயரிலல்ல.
இன்னொரு நினைவினைப் பகிரும் வரை  இது குறித்த உங்கள் கருத்துக்களைப்பகிரலாமே.          
.
    



செவ்வாய், 22 ஏப்ரல், 2014

களவு கொடுத்த மற்றும் ஏமாந்த நிகழ்வுகள்


            களவு கொடுத்த மற்றும் ஏமாந்த நிகழ்வுகள் நினைவுகள்.

         ----------------------------------------------------------------------------------

எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும் என்று தெரியாது. ஆனால் சென்னையில் பேரூந்தில் பயணம் செய்திருப்பவர் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். 1976 ல் என்று நினைக்கிறேன். திருச்சியில் பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த என்னை சற்றும் எதிர்பாராத வகையில் பணி மாற்றம் செய்தார்கள். அனல்மின் தயாரிப்பு இந்தியாவின் பல பாகங்களில் நடந்து கொண்டிருந்தது. அதன் தென் பிராந்திய அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. எனக்கு எந்த இடத்தில் போஸ்டிங் என்று தெரியும் முன் சென்னை அலுவலகத்தில் பணி. இடமாற்றம் பல பிரச்சனைகளை உருவாக்கியது. அதில் தலையாயது என் பிள்ளைகளின் படிப்பு. எங்கு போஸ்டிங் என்று தெரியாத நிலையிலும் , ஏற்கனவே பள்ளிகள் திறந்து விட்ட படியாலும் முதலில் அவர்களை சென்னையில் குடியமர்த்திவிட்டு பள்ளியில் சேர்த்து விடலாம் என்று முடிவெடுத்தேன் நுங்கம்பாக்கத்தில் ஒரு பள்ளியில் அட்மிஷன் வாங்கி கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புரத்தில் வீடும் பார்த்துக் குடியமர்த்தினேன். என்று எனக்கு எந்த இடத்துக்குப் போஸ்டிங் என்று தெரியாத நிலையில் தினமும் கோடம் பாக்கத்திலிருந்து நந்தனம் வரை பேரூந்தில் பயணம் என்பது வாடிக்கையாய் இருந்தது. அப்படி இருக்கும் போது ஒரு மாதம் சம்பளம் வாங்கி பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஏதோ உள்ளுணர்வு கூற என் பாண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தால் என் பர்ஸ் போயிருந்தது. கூச்சல் போட்டு பேருந்தை நிறுத்தி காவல் நிலையத்துக்குப் போனோம். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் என்னை கடிந்து கொண்டார். சம்பளம் வாங்கிய ஒரு நாளாவது ஆட்டோவில் பயணிக்கக் கூடாதா என்றார். என்ன சொல்லி என்ன. பர்ஸ் போனது போனதுதான்
வீட்டில் மனைவியிடம் தெரியப்படுத்தி வாங்கிக் கட்டிக்கொள்வது நினைத்து மனம் சஞ்ச்லப் பட்டது நான் சம்பளம் வாங்கியதும் அதை பர்சில் வைக்க முயன்று அது மிகவும் பல்ஜ் ஆகி துருத்திக் கொண்டிருந்ததால் ஒரு நூறு ரூபாய் மட்டும் பர்சில் வைத்து மீதிப் பணத்தை பாண்ட் பாக்கெட்டில் தனியே வைத்திருந்தேன் ஆக என் பர்சும் அதில் இருந்த சில முக்கிய பேப்பர்களும் களவு போயிற்றே தவிர பணம் போகவில்லை. பர்ஸ்  களவு போயிருந்தாலும் என் சாமர்த்தியத்தால் சம்பளப் பணம் போகாமல் தப்பித்ததைக் கூறி என் மனைவியின் வசவுகளை மட்டுப்படுத்தினேன் ..!
ஒரு முறை என் மகன் பேரூந்தில் பயணிக்கும் போது ஒருவர் பர்சைத் திருடுவதைக் கண்ணால் கண்டு கத்த வாயெடுத்திருக்கிறான். அப்போது அவனது கழுத்தில் ஒருவன் கத்தியை வைத்து அழுத்திக் கத்தாதே என்றானாம் . இவன் வெலவெலத்துப் போய் ஏதும் செய்ய முடியாமல் இருந்திருக்கிறான் இதைப் பொருட்படுத்தாது அவன் கூச்சல் போட்டு இருக்க வேண்டுமோ...தெரியவில்லை.
ஒரு முறை ஒரு மழைநாளில் பஸ்ஸில் ஏறும்போது என் பாக்கட்டில் ஒருவன் கைவிட எத்தனித்த்போது நான் அவன் கையைப் பிடிக்க அவன் அதை உருவிக் கொண்டு கூட்டத்தில் மாயமானான்.
நானும் என் மனைவியும் மூகாம்பிகா கோவில் போய் திரும்பி வரும்போது என் மனைவியின் கைப்பை காணாமல் போயிருந்ததை நாங்கள் வீடு வந்த பிறகுதான் அறிந்தோம். அதில் அவள் பொக்கிஷமாய்க் கருதும் பல தோத்திரப் புத்தகங்களும் வீட்டின் உள் அறைச் சாவிகளும் இருந்தன. வீட்டுக்கு வந்து மெயின் கதவைத் திறந்து அறைக் கதவுளைத் திறக்க வேண்டியபோதுதான் கைப்பைக் காணாமல் போனது தெரிந்தது. உடனே ஆட்டோபிடித்து பஸ் டெப்போவுக்குப் போய் நாங்கள் வந்த பஸ்ஸைக் கண்டு பிடித்து  பை இருக்கிறதா என்று தேடினோம்  ஏமாற்றமுடன்  வீட்டுக்கு வந்து தாழ்ப்பாள்களை உடைத்து அறைக் கதவுகளைத் திறந்தோம்.
என் வீட்டில் அப்போது முதல் தளத்தில் தங்கிக் கொண்டிருந்தோம் . கீழ் போர்ஷனை வாடகைக்கு  ஒரு டாக்டருக்கு வாடகைக்கு விட்டிருந்தோம். வீட்டுக்கு யாராவது வந்தால் சன்னல் கதவு வழியே பார்த்து தெரிந்து கொள்வோம் . ஆள் யாரென்று தெரியாமல் கதவைத் திறப்பதில்லை. ஒரு நாள் மாலை சுமார் ஏழு மணி அளவில் ஒருவர் அவசரமாக மாடிக் கதவைத் தட்டினார், ஆசுபத்திரியில் யாரோ உடல் நலமில்லாமல் இருப்பதாகவும் அவருக்குக் காஃபி வாங்கிக்கொடுக்க ஒரு தெர்மோஸ்ஃப்லாஸ்க் எங்களிடம் வாங்கிக் கொள்ளுமாறு கீழ் வீட்டில் குடி இருந்த டாக்டர் சொன்னதாகவும் கூறினார். என் மனைவி எங்களிடம் இருந்த ஒரு பெரிய நல்ல ஃப்லாஸ்கை சன்னல் வழியே கொடுத்தார். இரவு டாக்டர் கிளினிக்கிலிருந்து வந்தவுடன் அவரிடம் நடந்ததைத் தெரிவித்தார். டாக்டர் தான் அப்படி யாரிடமும்சொல்ல வில்லை என்றதும் நாங்கள் ஏமாந்தது தெரிந்தது.



இதை எழுதும்போது நினைவுக்கு வருவது. நான் சிறு வயதில் என் தந்தைவழிப் பாட்டியின் வீட்டில் பாலக் காட்டில் கோவிந்தராஜபுரம் எனும் கிராமத்தில் சுமார் ஓராண்டு காலம் இருந்தேன். ஒரு நாள் இரவில் உறக்கத்தின் நடுவே என் பாட்டி என் அப்பா சித்தப்பா பெயர்களை சத்தமாகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார் மறுநாள் காலை இது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் இரவில் ஏதாவது சந்தேகமான சப்தம் எழுந்தால் வீட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று (வந்த, வராத ) திருடனுக்குத் தெரிவிக்க என்றாரே பார்க்கலாம்.....!  . 
.