Friday, June 26, 2015

FROM ADOLESCENCE TO ADULTHOOD(அந்தக் காலம்)


                          FROM ADOLESCENCE  TO ADULTHOOD
                        -------------------------------------------------------

பதினாறு வயதில் நான்(மைசூர் லாட்ஜில்  பணியில் இருந்தபோது)
        கூனூரில் ஒரு ஓட்டல். மைசூர் லாட்ஜ் என்று பெயர். அதற்கு ஒரு அன்னெக்ஸ் கூனூர் ரயில் நிலையத்துக்கு எதிரில், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்தது. அதன் உரிமையாளர் கிருஷ்ண போத்தி. அங்கு வேலை செய்ய ஒரு படித்த , சற்றே ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்கும் இளைஞன் தேவை என்றும் தெரிவித்திருக்க, அப்பா அவரிடம் பேசி இருக்கிறார். என்னையும் அறிமுகப் படுத்தினார். என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். வாரம் ஆறு நாட்கள் வேலை. அங்கேயே தங்கி இருக்கவேண்டும். ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்குப் போய் வரலாம்.என் செலவு போக மாதம் ரூ.25/-சம்பளம். வேலையில் சேர்ந்து விட்டேன். அங்கு நான் தங்கி இருந்த நாட்கள் என்னை சிறிய பையனிலிருந்து, ஒரு இளைஞனாகவும் உலகம் தெரிய வழி செய்யும் வகையிலும் அமைந்தது.

                  காலையில் ஆறரை ஏழு மணிக்குள் நான் தயாராகி, கல்லாவில் இருக்க வேண்டும். சாதாரணமாக உள்ளஓட்டல்களிருந்து, சற்றே வித்தியாசப் பட்டதாக அமைந்திருந்தது. மேசை நாற்காலிகளுக்குப் பதில் சோஃபா.டீபாய்.இருக்கும்.  ஒரே நேரத்தில் இருபது நபர்களுக்கு மேல் சேவை செய்ய முடியாது. அங்கு அறை வசதிகள் இருந்தன. மாத வாடகைக்குத் தங்குபவர்கள் சிலர் இருந்தனர். ஒரு நாள் இரு நாள் தங்கிச் செல்வோரும் இருந்தனர். மொத்தத்தில் சற்றே போஷ்  ஆன இடமாக இருந்தது. என் வேலை கல்லாவைக் கவனித்துக் கொள்வதும், அறையில் தங்குபவரின் தேவைகளை பார்த்துக் கொள்வதுமாக இருந்தது. கூனூரின் மேல்தட்டு மத்தியதர
மக்கள் வந்து போயினர். அதிகக் கூட்டம் இருக்காது. இரவு ஒன்பது மணி வரை வேலையில் இருக்க வேண்டும்
.
       வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே என்னிடம் இரண்டு கணக்குப் புத்தகங்களை பராமரிக்கச் சொன்னார்கள். ஒன்றில் சரியான வரவுக் கணக்குகளும், மற்றொன்றில் , அதில் இருபது சதவீதமே வரவாகக் காட்ட வேண்டுமென்றும்
கூறினார்கள். குறைந்த வரவு எழுதிய புத்தகமே விற்பனை வரிக் கணக்குக்குக் காட்டப்படும் என்றும் கூறினார்கள். அது தவறெனப்பட்டு நான் கூறியபோது, “சொன்னதைச் செய் என்று கட்டாயப் படுத்தினார்கள் அப்போது மது விலக்கு அமலில்
இருந்தது. அறையில் வாடகைக்கு வருபவர்கள் மது பானங்களை உபயோகிக்கக் கூடாது. ஆனால் சில பெரிய மனிதர்கள் விதியை மீறுபவராகவே  இருந்தனர். நான் பார்ப்பதற்கு மிகச் சிறியவனாக இருந்ததால், யாரையும் கேள்வி கேட்க முடியவில்லை.  முதலாளியிடம் கூறினால் கண்டு கொள்ளாமல் இருக்கப் பணித்தார்கள். சில பெரிய மனிதர்கள் அவர்களுடைய மனைவி என்று கூறிக்கொண்டு சில பெண்களுடன் தங்குவார்கள். பகல் நேரங்களில் அந்தப் பெண்கள் காட்டும் அதிகாரம், என் தன்மானத்தை பாதிப்பதாக இருக்கும். மாத வாடகைக்குத் தங்கும் சிலர் அந்தப் பெண்களிடம் பேச முயற்சி செய்து, அவர்களைவசப்படுத்த முயல்வார்கள். அந்தப் பெண்கள் என்னிடம் புகார் கூற, நான் மாத வாடகை அறைவாசிகளிடம் ஏதாவது கேட்கப் போனால், அவர்கள் எனக்குப் பாடம் நடத்துவார்கள் அவர்கள் விலை மாதர்கள் என்றும் அவர்களை நான் மதிக்க வேண்டாம் என்றும் கூறுவார்கள். இந்த மாதிரி அறைகளில் தினமும் படுக்கை விரிப்புகளை மாற்றச் சொல்வார்கள். அந்த விரிப்புகள் காட்டும் கோலம், அங்கு நடந்தவைக்குச் சான்றாக இருக்கும். இந்த நாட்கள் adolescent
ஆக இருந்த நான் அடல்ட்- ஆக மாற பெரிதும் காரணமாக இருந்தன

உலக நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிய வந்தது. இதையெல்லாம் நான் முதலாளியிடம் கூறினால் என்னைக் கடிந்து கொள்வார்கள். காலையில் தொடங்கும் பணி இரவு ஒன்பது வரை ஒரேமாதிரி, காப்பி, இட்லி, வடை தோசை, என்ற சொற்களோடும், அறை சுத்தம், தங்குபவரின் தகாத செயல்கள் இவற்றைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. வாரம் ஆறு நாட்கள் வேலை பார்த்தால்ஞாயிறு ஒரு நாள் மட்டும் வீட்டிற்குப் போய் வரலாம், என்ற நிலை. எல்லாம் சேர்ந்து எனக்கு சலிப்பை உண்டாக்கியது, இருந்தாலும் வீட்டின் நிலை அறிந்தும், எனக்கு வேறு வேலை கிடைக்க வாய்ப்பு குறைவு என்பதாலும் சகித்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில், அங்கு வருவோர் சிலரிடம், நல்ல தொடர்பு இருந்தது. அதில் குந்தா ஹைட்ரோ பவர் ஸ்டேஷனில்வேலையிலிருந்த, எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினேர்,மற்றும், டெல்கோ கம்பெனியில் வேலையிலிருந்த ஒரு மார்கெட்டிங் மானேஜர், பர்மா ஷெல் கம்பெனி இன்ஸ்பெக்டர் ஒருவரும், முக்கியமானவர்கள். குந்தா ப்ராஜெக்ட்டில்  வேலை வாங்கித் தருவதாக ஒரு காண்ட்ராக்டருக்கு, சிபாரிசு கடிதம் ஒன்றை அந்த எஞ்சினீயர் கொடுத்தார். நானும் எங்கெல்லாமோ வேலைக்கு மனு போட்டுக்கொண்டிருந்தேன் .இந்த நிலையில் ஓட்டல் முதலாளியிடம் நான்   என்னுடைய வேலை நேரத்தைக் குறைக்கும் படியும்,,தவறான முறைகளில் கணக்கு வழக்குகள் எழுதுவதை என்னிடம் கட்டாயப் படுத்தாமல் இருக்கவும் முறையிட்டேன். அவர்கள் என்னிடம் எதையுமே பேச விரும்பவில்லை. என்னுடைய தந்தையார் மூலம் நான் வேலைக்கு வந்ததால், அவரை வந்து பேசச் சொல்ல சொன்னார்கள். இதற்கு என் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.வேலை செய்வது நான், என் தந்தை பெயரைச் சொல்லி மிரட்டுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது.அப்பாவிடம் சொன்னால் வருத்தப் படுவார்கள் என்பதாலும், குடும்ப நிலைமை நான் வேலைக்குப் போவதை தேவைப் படுத்துவதாலும், யாரிடமும் சொல்லாமல் நான் வேலையை விட்டு விலகுவதாக, என் முதலாளியிடம் கூறி எனக்குச்சேர வேண்டிய சம்பளப்பணம்  சுமார் ரூ. 20/- பெற்றுக் கொண்டு, என் பெட்டியுடன் கோயமுத்தூர் சென்றேன்.எங்காவது வேலையில் சேர்ந்து, அப்பாவை சமாதானப் படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டேன். அந்த முடிவு வாழ்க்கையில் முக்கியமான அனுபவங்களைப் பெற்றுத் தந்தது.
அவை பிறிதொரு சமயம் 
( என் நினைவலைகள் அனுபவங்கள் சுயசரிதையிலிருந்து எடுக்கப் பட்டது).  41 comments:

 1. உடனடியாக முடிவு எடுத்து செயல்படுத்தியது, உங்கள் மன உறுதியை அந்த வயதிலேயே காண முடிகிறது ஐயா...

  ReplyDelete
 2. சிலரது அனுபவங்கள்
  பலருக்கு வழிகாட்டல்

  ReplyDelete
 3. அந்த வயதில் உங்களுக்கு ஏற்ப்பட்ட நிலையில், நீங்கள் எடுத்த முடிவு சரியானதான என்றால் சரியல்ல என்று தான் கூறவேண்டும். காரணம் அப்படிப்பட்ட சூழலில் அதிக அனுபவமில்லாத உங்களுக்கு, உறுதுணையாக யாரும் இல்லை என்பதால் எதிர்த்து நின்று போராடி நீங்களும் வெற்றிபெற்று அந்த நிறுவனத்தையும் சரியான பாதையில் பயணிக்க செய்யவேண்டிய சூழல் ஏற்ப்படாமல் போனது துரதிஷ்டமான ஒன்று. ஒவ்வொருவரின் தனிப்பட்ட வெற்றிதான், அவர்கள் வாழும் சமூகத்திற்கும் அந்த நாட்டிற்கும் கிடைத்த வெற்றி...... என்னசெய்வது... இல்லாமை, இயலாமை என இதுபோன்ற பல ஆமைகள் நிறைந்த வாழ்க்கையில் இளைய சமூகத்தினர் எதிர்த்து நின்று போராடும் சக்தியை இழக்கின்றனர் என்பதுதான், இன்றளவும் உண்மை என்கிற நிலை நீடித்துக்கொண்டிருக்கிறது ... நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி..... நன்றிகளுடன் "ரேடியோ கோகி" என்னும் கோபாலகிருஷ்ணன் ரேடியோ மார்கோனி தற்ப்போது புதுதில்லியிலிருந்து ...

  ReplyDelete
 4. உங்கள் தரப்பு நியாயத்தை உங்கள் தகப்பனார் புரிந்து கொண்டிருப்பார் ,வாலிப வயதில் இந்த வேலை தேவையில்லாதது என்று சொல்லி இருப்பாரே !
  அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் :)

  ReplyDelete
 5. தேசியக் கவி பாரதி சொன்னதுபோல்
  "பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
  பயங்கொள்ள லாகாது பாப்பா,
  மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
  முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா." என்று எதிர்த்து நின்றிருக்கவேண்டும் என சொல்லலாம். ஆனால் அந்த இளம் வயதில் உங்களுக்கு துணை புரிய அருகில் யாரும் இல்லாதபோது நீங்கள் செய்தது சரியே.

  மற்ற அனுபவங்களையும் அறிய ஆவல்.

  ReplyDelete
 6. இந்த மாதிரியான வேகம் மிக இளம் வயதில் தான் வரும். அந்த நிலையில் அதை சமரசம் செய்து கொண்டோமானால் அந்த வலையிலிருந்து விலகி மீண்டு வருவது கடினம். சரியான நேரத்தில் வழிகாட்டல் இல்லமலேயே நீங்கள் சரியான முடிவெடுத்தது உங்கள் மன உறுதியைக் காட்டுகிறது. அந்த மன உறுதிதான் இன்று வரை உங்களையும் உங்கள் சுற்றத்தையும் காத்து வருகிறது.

  God Bless YOU

  ReplyDelete
 7. பல்வேறு விதமான அனுபவங்களே மனதைப் பண்படுத்துகிறது. சுவாரசியமான அனுபவங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

 8. @ திண்டுக்கல் தனபாலன்
  பலமுறை சிந்தித்து எடுத்த முடிவு அது டிடி. ஆனால் சரி எது தவறு எது என்று எனக்குத் தெரிந்தவரை முடிவில் உறுதியாய் இருந்தேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 9. @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
  அந்த வயது என் வாழ்க்கையின் திசை மாற்றும் வயது. அனுபவங்களே ஒருவனைச் செதுக்குகிறது. வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 10. @ கோபால் உத்தம் ஹொ
  மன்னிக்க வேண்டும் உங்களிடம் இருந்து மாறுபடுகிறேன் போராடி வெற்றிபெற என்ன இருக்கிறது. என் வலிமை எனக்குத் தெரியும் தவறு என்றுபட்டதை சுட்டி இருக்கிறேன் சரி தவறு எது என்று பகுத்தறியும் திறன் வேண்டும் தவறுகளை முடிந்தால் திருத்த வேண்டும் முடியாவிட்டால் அது அப்படித்தான் என்று அவரவர் வழி போக வேண்டும் நான் ஒரு சீர்திருத்தவாதி என்று எண்ணியது இல்லை.மோதும்போது நம் பலம் பலவீனம் எதிராளியின் பலம் பலவீனம் தெரிந்திருக்க வேண்டும் வருகைக்கு கருத்துப் பகிர்வுக்கு நன்றி கோபால்

  ReplyDelete

 11. @ பகவான் ஜி
  என் தரப்பு நியாயத்தில் என் தந்தைக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 12. @ வே.நடனசபாபதி
  பாரதி மேற்கோள் காட்டப் பயன் படலாம் , அவர் வாழ்க்கையில் அது அவரால் முடிந்ததா.?இன்று நான் நன்றாக இருக்கிறேன் இப்போது அந்த ஹொட்டல் இருந்த இடத்தில் ஒரு நீதிமன்ற வளாகம் வந்திருக்கிறது. என் முடிவே ஒரு அனுபவப் பயணத்தின் துவக்கம் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 13. @ வெட்டிப்பேச்சு
  சரியான புரிதலுக்கு நன்றி சார்.

  ReplyDelete

 14. @ கீதா சாம்பசிவம் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்

  ReplyDelete
 15. பிடிக்காத இடத்தில் ஒட்டிக்கொண்டிருப்பது சரியில்லை என்பது என்னுடைய கருத்தும் ஐயா! இப்படி நானும் சில வேலைகளை இழந்திருக்கின்றேன்!

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. வேலைக்குச் செல்லும் முதல் அனுபவம் நம் தெரிவில் இல்லாதபோது இவ்வளவு சஹித்துக் கொண்டிருந்திருக்க நேர்ந்திருக்கிறது. இந்த அனுபவங்கள் கொஞ்சம் முன்னரே படித்த நினைவாய் இருக்கிறது.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. சார் சிறிய வயதிலேயே வேலை! பின்னர் எப்போது சார் தங்கள் படிப்பைத் தொடர்ந்தீர்கள்? தங்களது படிப்பை விட தங்களது அனுபவங்கள் உங்களுக்கு நிறையவே வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கும் இல்லையா?! அதனால்தான் சார் உங்களுக்கு சுய அலசல், சுய சிந்தனைகள் சுய முடிவு எடுக்கும் மன வலிமை எல்லாம் வந்திருக்கின்றது.....அந்த வயதிலேயே தனியான முடிவு எடுத்து பயணித்து வேலை தேடிய மன உறுதி, துணிச்சல் அசாத்தியம்...எங்களுக்கும் நிறைய பாடங்கள் கிடைக்கின்றன சார்...தொடர்கின்றோம் அடுத்த பதிவிற்கு ...சஸ்பென்ஸ் ஆக இருக்கின்றது...

  ReplyDelete
 20. உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு வழிகாட்டி ஐயா...
  தொடர்ந்து செல்லுங்கள்... உங்கள் சுயசரிதையில் நாங்களும் பயணிக்கிறோம்...

  ReplyDelete

 21. @ தளிர் சுரேஷ்,
  பிடிக்காத இடத்தில் இருந்தால் வேலையை முழுமனதோடு செய்ய முடியாது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

  ReplyDelete

 22. @ ஸ்ரீ ராம்
  அது முதல் அனுபவமல்ல. இதற்கு முன் வேலைக்குச் சென்றதை பூர்வஜென்மகடன் என்னும் தலைப்பில் எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 23. @ துளசிதரன்
  ஆழ்ந்து படித்து வரும் எண்ணங்கள் சரியே, வருகைக்கு நன்றி. சார்.

  ReplyDelete

 24. @ சுய சரிதையின் சில பக்கங்களை ஆங்காங்கே பகிர்ந்து கொண்டுதான் வருகிறேன் வருகைக்கு நன்றி குமார்

  ReplyDelete
 25. நீங்கள் மனம்மாறி வேறு வேலை தேடி சென்றுவிட்டீர்கள். ஆனால் அந்த மாதிரியான லாட்ஜ்க்கள் இன்று பெரிய ஹோட்டல்களாக மாறி அதே வேலைகளை செய்து வருகின்றன.. உங்களது நினைவு அலைகளை தொடர்ந்து எழுதுங்கள் அந்த அலைகளில் ஊடே நான் நீச்சல் அடிக்க தயாராகவே உள்ளேன் வாழ்க வளமுடன்

  ReplyDelete
 26. உங்கள் மனம் சரி எனச் சொல்லும் பாதையில் செல்லும் திடம் உங்களுக்கு அந்தக் காலத்திலேயே இருக்கிறது என்பது வியப்பு.

  பொதுவாக வேலை செய்யும் இடத்தில் அதிகாரப்பட்டவர்களை அனுசரிக்க வேண்டி இருக்கிறது.

  நம் மனக்கருத்திற்கு, சரி தவறென்பதற்கு அதிகம் வேலை இருப்பதில்லை.

  சொன்னால் ஏற்கும் புரிதலும் பெரும்பாலான இடங்களில் காணப்படுவதில்லை.

  மீறி நம் கருத்தை வலியுறுத்த முற்படும் போது, அவ்விடம் விட்டு வேறிடத்திற்கு வேலைக்குச் செல்லும் மனோபாவமும், வேறிடம் சென்றால் வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே நம் நிலைப்பாட்டைத் தொடர முடியும்.

  பள்ளிகளிலேயே மறைமுகமாகப் பிள்ளைகளுக்கு இதற்கான கற்பித்தல் தொடங்குகிறது என நினைக்கிறேன்.

  படிப்பு முடிந்ததுமே எனக்கு வேலை கிடைத்துவிட்டதால் இந்த உலகியல் நடைமுறைகள் எனக்கு அதிகம் தெரியவில்லை.

  உங்களைப் போன்று நியாயமான ஒரு விடயத்தைச் சொன்னதற்காகப் பணிக்குச் சேர்ந்த மூன்றாம் மாதம் நான் பணிநீக்கம் செய்யப் பட இருந்தேன்.

  இவன் பள்ளியைவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் இருக்க வேண்டும் என்றும் மோதிக் கொண்ட இரு தரப்பில் என் பக்கம் இருந்தவர்கள் அதிகம் என்பதால் நான் பணியைத் தொடர நேர்ந்தது. கடுமையான எச்சரிக்கைக்கும் கண்டனத்திற்கும் பின்தான் முடிவுக்கு வந்தது அந்த மனப்போராட்டம். அதற்குள்ளாக அதைத் தொடரும் மனவலிமையை நான் முற்றிலும் இழந்திருந்தேன் என்பதே உண்மை.

  நமக்குரிய நியாயங்கள் இன்னொரு தரப்பினருக்கு நியாயங்களாய் இருப்பதில்லை , நம் தரப்பு நியாயங்களைக் கேட்கவும் அவர்கள் விரும்புவதில்லை என்ற வாழ்வியல் பாடத்தைக் கற்றுக் கொண்டது அன்று...


  உங்களின் தொடர் அனுபவம் அறியக் காத்திருக்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
 27. தங்களின் ‘16 வயதினிலே’ அனுபவங்களை நன்கு அனுபவித்து எழுதியுள்ளீர்கள். நானும் அதே வயதில், மிகக்குறைவான சம்பளத்தில், கிடைத்ததோர் மிகச்சாதாரண + கடுமையான வேலைக்குச்செல்ல வேண்டிய நிர்பந்தங்களும், குடும்ப சூழ்நிலைகளும் இருந்ததால், என்னால் இந்தத் தங்களின் அன்றைய சங்கடமான அனுபவங்களை மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

  ReplyDelete
 28. நான் பணியைத் தேடவேண்டிய அவசியம் இல்லாமல் விவசாயப் பட்டப் படிப்பு முடிந்து ஒரு மாதத்தில் பணி நியமனம் வீடு தேடி வந்தது. சர்க்கார் வேலை. ஆனாலும் முதல் பணி காலம், ஏறக்குறைய மூன்று வருடம், மிகவும் சோதனைக் காலமாக இருந்து பல படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது. வீட்டு நிலைமையை உணர்ந்து பணியில் நீடித்ததினால் இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன்.

  ReplyDelete

 29. @ அவர்கள் உண்மைகள்
  முதலில் உங்கள் வருகைக்கு நன்றி. நான் உங்கள் தளத்தின் இணைப்பாளன். உங்கள் பதிவுகளை படித்து விடுவேன் ஓரிரு முறை பின்னூட்டம் எழுத முயன்றபோது டெலிவெரி ஃபெயில்ட் என்று என் மின் அஞ்சல் பெட்டியில் வந்தது. கணினி பற்றிய அறிவு குறைவானதால் அடிக்கடி பின்னூட்டம் எழுத முயலவில்லை. மேலும் உங்கள் பதிவுகளில் அரசியல் வாடை நிறைய இருப்பதும் ஒரு காரணம். என் பதிவுகளில் பெரும்பாலும் என் அனுபவங்களே இருக்கும் . அதையும் மீறினால் உயர்வு தாழ்வு பற்றிய என் ஆதங்கம் இருக்கும் என் எழுத்துகளின் மாதிரியை வலைச்சரம் முதல் நாள் பதிவில் எழுதி இருக்கிறேன் தொடர்ந்து வாருங்கள் என் நினைவலைகளில் நீங்களும் நீச்சல் அடியுங்கள். மீண்டும் நன்றி.

  ReplyDelete

 30. @ ஊமைக்கனவுகள்
  என் பதிவு உங்கள் அனுபவ நினைவுகளை மீட்டெடுத்தது தெரிகிறது என்னைப் பொறுத்தவரை நியாயங்கள் என்றும் நியாயங்களே. பெரும்பாலோரால் அறியப் படும் நல்ல வால்யூஸ் போல. வாழ்வில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடமே. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா

  ReplyDelete

 31. @ கோபு சார்
  அதனால் என்னசார்.மனதில் திடமும் உறுதியும் கற்க வழிகிடைத்ததே. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 32. @ டாக்டர் கந்தசாமி
  அப்போதைய நிகழ்வுகள் கஷ்டமாகத்தெரியவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும்போதுதான் அவற்றின் உண்மையான நிலை புரிகிறது வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 33. 16 வயதில் வேலைக்கு வந்து விட்டீர்களா?எதுவரை படித்துள்ளீர்கள்? இவ்வளவு ஞானம் பெற்றது எப்படி என்பதை அறிந்து கொள்ள ஆவல்.உங்கள் அனுபவங்கள் எங்களைப் போன்றவர்க்கு பாடங்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
 34. தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. Really you are great sir! வெளிப்படையாகவே உங்கள் அனுபவங்களை தயக்கம் இல்லாமல் சொன்னதற்காக. எனக்குத் தெரிந்து, தமிழில் கவிஞர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும் மட்டுமே வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள்.

  ”வாழ்வின் விளிம்பில்” – என்ற உங்களது நூல் பற்றிய எனது விமர்சனக் கட்டுரையில் நான் எழுதிய வரிகள் இவை ....

  // நமது G.M.B அவர்களுக்கும் உள்ளுக்குள் போட்டு உடைப்பது பிடிக்கவில்லை போலிருக்கிறது. அவரும் இது மாதிரியான உறவுச் சிக்கல்களை கவிஞர் கண்ணதாசன் போன்று வெளிப்படையாகவே சொல்லுகிறார். //

  இந்த பதிவின் தொடர்ச்சியை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
 35. வேலைக்குச் சென்ற புதிதில் எத்தனை எத்தனை அனுபவங்கள்.....

  அனுபங்கள் நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் தான் எத்தனை.

  உங்கள் அனுபவங்கள் மூலம் நாங்களும் சில பாடங்களை கற்றுக் கொள்கிறோம்.

  ReplyDelete

 36. @ டி.என் முரளிதரன்,
  /16 வயதில்வேலைக்கு வந்து விட்டீர்களா?எதுவரை படித்துள்ளீர்கள்/ இந்த வெளிப்படையான கேள்வி என்னை சிந்திக்க வைக்கிறது. நிச்சயமாகக் கல்லூரி படிப்பு இல்லை.அது வெளிப்படையாகத் தெரிகிறதுஒரு பதிவில் செல்லப்பா யக்ஞசாமி என்னைப் பற்றி எழுதுகையில் பதினோறாம் வகுப்பு படித்துள்ள என்று அறிமுகப் படுத்தி எழுதி இருந்தார். என்னை சந்தித்தபின் எழுதியது அது. ஞானத்துக்கும் பள்ளிப் படிப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா? ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது” படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” என் அனுபவப் பாடங்கள் உதவினால் மகிழ்ச்சியே. வருகைக்கு நன்றி முரளி.

  ReplyDelete

 37. @ தி தமிழ் இளங்கோ
  உண்மைகளைச் சொல்ல நான் என்றுமே தயங்கியது இல்லை. அதுவே என் பல்மும் பலவீனமும் இதை நான் ஓரிரு முறை எழுதி இருக்கிறேன் இல்லை என்று நினைத்துக் கொண்டு ஆம் என்று சொல்வது எனக்குப் பிடிக்காது. பள்ளியில் அதிகம் படிக்காவிட்டால் என்ன. வாழ்வியலில் நிறையவே கற்றுக் கொண்டிருக்கிறேனே. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 38. @ வெங்கட் நாகராஜ்,
  என் அனுபவங்கள் பலவும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் அதில் நல்லது அல்லது ஆய்ந்து எடுத்துக் கொள்வது படிப்பவரைப்பொறுத்தது. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 39. தங்கள் அனுபவங்கள் எங்களுக்குப் பாடங்களாக அமைகின்றன. உங்களின் மனத்திண்மையை அன்று முதல் இன்று வரை காணும்போது வியப்பாக உள்ளது.

  ReplyDelete

 40. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  சந்திக்கும் அனைவரிடத்தும் கற்க ஏதாவது இருக்கும் வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 41. அனுபவம் பிறருக்கு நல்லதொரு பாடமே

  ReplyDelete