அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

ஜப்பனில் நான் தொடர்ச்சி

 


                      ஒசாகாவில் ஒரு சிற்றுண்டி சாலையில்

                              டோக்கியோ நகர வீதி ஒன்றில்

நாங்கள் டிஸ்னி லேண்ட் அவசியம் பார்க்க வேண்டும் என்று
அதற்கு வேண்டிய சௌகரியங்கள் செய்து தந்தனர். HATO BUS
என்னும் டோக்கியோவின் சுற்றுலா பேரூந்தில் எங்களை ஏற்றி
அனுப்பி வைத்தனர் டிஸ்னி லேண்ட் முக்கியமாக ஐந்து பிரிவுகள்
கொண்டது Adventure land Western land Fantasy land Tomorrow land
 World  Bazaarஎன்பவற்றில் நாம் எல்லாவற்றையும் ஒரு நாளில்
 காண இயலாதுஅதுவும் எங்களைப் போல் மொழி தெரியாமல்  
ருப்பவர்கள் எங்கு போவது எதை விடுவது என்று குழப்பமடைவது சகஜம்தானே ஒவ்வொரு பகுதியிலும் எதாவது ஒன்றிரண்டு
இடங்களைப் பார்ப்பது என்று தீர்மானித்தோம். முதலில்  
 அட்வென்சர் லெண்டில் Western river rail road என்று கூறப்பட்ட
ரயிலில் ஏறினோம்.அதில் பயணப்பட்டபோது ஆதிகால அமெரிக்க
காடுகளை சுற்றிப் பார்ப்பதுபோல் இருந்தது. திடீரென
ஆதிவாசிகள் தோன்றுவதும் நம்மை பயமுறுத்துவதும்
நம்மைக் கண்டு பயந்து ஓடுவதும் எல்லாம் எதிர்பாரா
அனுபவங்கள்.வெஸ்டெர்ன் லேண்டில் மார்க் ட்வேய்ன் ரிவர்
போட் பயணமும், ஃபண்டசி லேண்டில் சிண்டெரெல்லா காசிலும்
கண்டோம். ஆனால் மறக்க முடியாத அனுபவம் என்றால் அது,
டுமாரோ லேண்டில் ஸ்பேஸ் மௌண்டன் பயணம்தான். இதய
பாதிப்பு உள்ளவர், ஸ்பாண்டிலிடிஸ் மற்றும் பேக் பிரச்சினை
உள்ளவர் அதில் பயணம் செய்யக் கூடாது என்று அறிவிப்பு
இருந்தது. வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பை
நழுவ விட எங்க்ளுக்கு மனசில்லை. ஏறிவிட்டோம். அது
எங்களை இருண்ட அண்டத்துக்கு அழைத்துச் சென்றது. அதி
வேகபயணம். எதிரில் நட்சத்திரங்களும் கிரகங்களும் வேகமாக
எங்களை நோக்கி வருவது போல் பக்கத்தில் பறக்கும் இருட்டில்
அந்த பயணம் ஐந்து நிமிடத்துக்குள் இருக்கும். அதை விட்டு
நாங்கள் இறங்கும் போது எங்கள் கால்கள் தரையில் பாவாமல்
நாங்கள் மிதப்பது போல் உணர்ந்தோம். என் உடன் வந்த நண்பன்
நடக்க முடியாமல் தலை சுற்றல் வந்து அங்கேயே உட்கார்ந்து
விட்டான். அவன் சகஜ நிலைக்கு வர ஒரு மணி நேரத்துக்கும்
மேலாயிற்று. ஊர்பேர் தெரியாத வெளிநாட்டில் மிகவும் பயந்து
விட்டேன்.

இந்த பயணத்தின் கடைசி கட்டமாக இந்தியா திரும்பினோம்.
சென்னை விமானத்துக்கு நிறைய நேரம் இருந்ததால் டெல்லி
சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்தோம். செண்டார் ஓட்டலில்
இருந்து வெளியே வரும்போது என் நண்பன் எதிரே கண்ணாடி
சுவர் போல் இருப்பது கவனிக்காமல் அதன் ஊடே நடக்க அவன்
மேல் அந்தக் கண்ணாடிச் சுவர் தப தப வென விழ, தலையில்
இருந்து ரத்தம் ஆறாகக் கொட்ட யார்யார் உதவியையோ நாடி,
அவனை மருத்துவ மனைக்குக் கொண்டுபோய் சிகிச்சைஅளித்து
தலையில் ஏகப்பட்ட தையல்களுடன் ஓட்டலுக்கு வந்தது ஒரு
மறக்க முடியாத அனுபவம்.

ஏதுமே அறிந்திராத நான் எப்படியெல்லாமோ அனுபவப்பட்டு என்
நண்பனை அவன் வீட்டில் சேர்ப்பித்தபோது நன்றியுடன் அவன்
பெற்றோர் என்னிடம் பேசியதில் பட்ட கஷ்டங்கள் எல்லாம்
மற்ந்து ஏதோ சாதித்தது போல் உணர்ந்தேன்.
-------------------------------------------------------------
 (பழைய புகைப் படங்களை மொபைல் கேமராவில் படம் பிடித்து 
    கணினியில் ஏற்றியது.)
                                                                                     




ஞாயிறு, 16 ஜூலை, 2023

பஞ்சாபில் நான்

 

பஞ்சாபில் நான்.

.பஞ்சாபில் நான். 
-----------------------
      
        சீக்கிசம் என்ற புத்தகம் படிக்கும் வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது  அதை படிக்க துவங்கும் முன்னும், படிக்கும் போதும்  நான்  சீக்கியர்களின் மாநிலமான  பஞ்சாபுக்கும்  அவர்களுடைய  புண்ணிய  தலங்களான  அம்ருதசராஸ் மற்றும் கோவிந்தவால் சென்று வந்த அனுபவங்கள் மனதில் ஓடியது.  1985 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். சம்பவங்கள் நினைவுக்கு வரும் அளவுக்கு மாதம் தேதிகள் நினைவுக்கு வருவதில்லை. நான் திருச்சியில் பாரத மிகுமின் கொதிகல தொழிற்சாலையில் உள்ள வால்வ் டிவிஷனின் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பில்  இருந்த காலம்.

       BHEL நிறுவனம்அகில இந்தியாவில்எல்லா  இடங்களிலும் நீக்கமற  நிறைந்திருக்கும்  ஒரு நவரத்னா கம்பெனி. பஞ்சாப் மாநிலத்தில் சில வகை வால்வுகளை  உற்பத்தி செய்ய ஒரு தொழிற்சாலை நிறுவ எண்ணி கோவிந்தவால் என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அதற்கு டெக்னிகல் மற்றும் தரக்கட்டுப்பாடு  சம்பந்தமான விவரங்களை விளக்கவும் ஆலோசனை கூறவும்  BHEL  திருச்சியிலிருந்து  டிசைன் அல்லது உற்பத்திப் பிரிவிலிருந்து பொறுப்புள்ள அதிகாரி ஒருவர் சென்று கோவிந்தவால் தொழிற்சாலை அதிகாரிகளுக்கு விளக்க வேண்டி இருந்தது..அந்த தொழிற்சாலை அப்போது அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் முடிவுற்று பஞ்சாபே ஒரு கொதிகலன் போல இருந்த நேரம். திருச்சியிலிருந்து அங்கு செல்ல யாரும் துணியவில்லை.டிசைன் மற்றும் மானுபாச்சர்  உடன் நெருங்கிய தொடர்புடைய தரக்கட்டுப்பாடு அதிகாரி யாரையாவது அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. தினமும் இருபது முப்பது கொலைகள் நிகழும் பஞ்சாபுக்கு யாரும் போக விரும்பவில்லை. தரக்கட்டுப்பாட்டின் பொறுப்பிலிருந்த என்னிடமும் கேட்கப்பட்டது. நான் சரியென்று ஒப்புக்கொண்டேன்.அதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று எனக்குப் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யப் பிடிக்கும். இரண்டாவது என் பொறுப்பை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. மூன்றாவது எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்க இருக்கும்t STATISTICAL PROBABILITY அதாவது பஞ்சாப் மாநிலத்தில் 25 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு நாளில் 25 பேர் தீவிர வாதிகளால் கொல்லப்படுகிறார்கள் என்றால் லட்சத்தில் ஒருவர் சாக வாய்ப்பு என்று அர்த்தம். அந்த லட்சத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்பது HIGHLY IMPROBABLE .ஆக  நான் பஞ்சாப் பயணமானேன். 

         வால்வ் தொழிற்சாலை அமைக்கப்பட இருந்த கோவிந்தவால்  அம்ருதசரசிலிருந்து சுமார் அறுபது, எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் முப்பது  கிலோ மீட்டர். கோவிந்த வாலி   கெஸ்ட் ஹவுஸ்  தயாராக  இல்லாத நிலையில் அம்ருதசரசிலிருந்து தான் .         தினமும் பயணிக்கவேண்டும்  தினமும்  கோவிந்தவால்   தொழிற் சாலை    நிர்வாகி என்னைக் காலையில் ஹோட்டலிலிருந்து பிக் அப் செய்து பணிமுடிந்ததும் மலையில் ஹோட்டலில் விடுவதாக ஏற்பாடு.

          எனக்கு ஓரிரு சீக்கிய நண்பர்கள் உண்டு. என்னுடைய பயிற்சி காலத்தில் இந்தியாவின் எல்லா மாநிலத்தவரிடமும் பரிச்சயம் உண்டு. தமிழ் நாட்டில் அநேகமாக சீக்கியர்களை நாம்  அங்கு மிங்குமாக  ஒன்றிரண்டு   பேரைத் தான்   காண முடியும். நான் அம்ருதசராஸ் சென்றபோது  எங்கு பார்த்தாலும் தலைப்பாகை அணிந்த சர்தார்ஜிகளை கண்டபோது என்னை நானே சற்று வித்தியாசமாக உணர்ந்தேன்.

          முதல் நாள் நான் கோவிந்தவால்  தொழிற்சாலை சீக்கிய  நிர்வாகியுடன்  டாக்சியில் பயணப்பட்டேன். அவரிடம் அங்குள்ள நிலைமை குறித்து விசாரித்தால்அவர்அதிகமாகபேச விரும்பவில்லை. அவருக்கு  என்னைப்  பார்த்து பயம் போல் தோன்றியது. அம்ருதசரசிலிருந்து கோவிந்தவால் போகும் வழியில் தரன் தரன் என்ற ஒரு இடம். தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த இடம். அதன் அருகே நாங்கள் சென்றபோது எங்கள் கார் வழி மறிக்கப்பட்டது. பயத்தில் உறைந்து போனேன். கூட வந்த சீக்கிய நிர்வாகி என்னை பயப்படாதிருக்க கூற வண்டியை விட்டு இறங்கினோம் .மூன்று, நான்கு சர்தார்ஜிகள் எங்களை அருகிலிருந்த ஒரு சிறிய குருத்வாராவுக்கு அழைத்துச சென்றனர். அங்கிருந்த லங்காரில் இலவச உணவு அளிக்குமிடம்.) எங்களுக்கு சாப்பிட சப்பாத்தி சப்ஜி கொடுத்து உபசரித்தனர்.அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தாம்பாளம் மாதிரி தெரிந்த ஒரு பாத்திரத்தில் எங்களுக்கு விருப்பமிருந்தால் ஏதாவது பணம் போடலாமென்றார்கள்.என் பாக்கெட்டில் கை விட்டு கிடைத்த (ரூபாய் ஐம்பதோ நூறோ தெரியவில்லை.)பணத்தைப் போட்டேன் .அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் மேல் மதிப்பு சற்றே அதிகமாயிற்று.பார்ப்பதற்கு முரடர்கள் போல் தெரிந்தாலும் வாழ்க்கையில் கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் .இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.சீக்கிரமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். யாரையாவது நம்பினால் அடிமை மாதிரி எது வேண்டுமானாலும் செய்வார்கள். உடலுழைப்புக்கு அஞ்சாதவர்கள். வியாபார நுணுக்கங்கள் தெரிந்தவர்கள்.

         ஒருமுறை போபாலில் ஒரு சர்தார்ஜியின் கடையில் என் பிள்ளைகளுக்காக ஆயத்த உடைகள் வாங்க சென்றேன். அன்று காலை தலைமையகத்திலிருந்து என் வேலை நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கூறி உடனே ட்ராம்பே செல்லப் பணித்திருந்தனர். அதனால் உடை வாங்கி இருக்கும் பணத்தை செலவு செய்ய தயக்கமாயிருந்தது. அந்தக் கடை முதலாளி என்னிடம் பணம் இல்லாவிட்டால் பாதகமில்லை, ஊர் பொய் சேர்ந்தபிறகு அனுப்பிக் கொடுங்கள் போதும் என்று கூறி ,முன்பின் அறியாத என்னிடம் உடைகளைப் பாக் செய்து கொடுத்தார். மனித இயல்பு தெரிந்து பழகுவதில் சர்தார்ஜிக்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை என்னிடம்  ஏற்படுத்தினார் அவர்.  பஞ்சாபில் எனக்கு வேண்டி ஏதாவது  செய்வதற்கு வாய்ப்பு தருமாறு வேண்டி வேண்டி உதவியவர்கள்  நிறையப் பேர்.  பஞ்சாபில் பிச்சைக்கார  சர்தார்ஜிகளைப் பார்ப்பதே   மிகவும்  அரிது.

        பஞ்சாப் சென்றபோது அம்ருதசராஸ் பொற்கோவில் காணும் பாக்கியம் கிடைத்தது.ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடம் காணும்போது, காந்தி படத்தின் காட்சிகள் நடுவே நான் இருந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது. பொற்கோவிலில் சீக்கியர்களின் அதிகார பீடமான அகல் தக்த் இருக்கிறது. அங்குள்ள ஒரு ஓவிய, பட காலரியில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது மனம் பதைக்கிறது. சீக்கியர்களின் தியாகங்களும் உயிர்பளிகளும் கோரமான படங்கள் மூலம் தத்ரூபமாக வெளிப்படுகிறது. அதுதான் அவர்களது உள்ளக் கனலை அணையாது காக்கிறதோ என்னவோ.

         ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். கோவின்தவாலுக்கு ஒரு  தொழிற்சாலை கிடைத்ததில் மகிழ்ந்த அவர்கள் அது சரியாக  சிறப்பாக  நடைபெற ஆலோசனைகள் கூறி வழி நடத்த வந்த என்னிடம் மிகவும்  பவ்யமாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். கோவிந்தவால் குருத்வாரா சீக்கியர்களின் புண்ணிய தலங்களுள் ஒன்று. அங்கு நான் சென்றபோது (நம்மிடையே பூர்ண கும்ப மரியாதை தருவதுபோல்)அங்கு எனக்கு சிரோப்பா எனப்படும் மஞ்சள் காவியில் தலைப்பாகை துணி தந்து மரியாதை செய்தனர். அதை நான்  இன்னும்  பொக்கிஷமாக  வைத்திருக்கிறேன்.  சீக்கியர்களைப்  பற்றி  எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது. அதற்காக தனியே ஒரு பதிவு  வேண்டும். GOD WILLING, I WILL DO IT SOMETIME.

புதன், 30 டிசம்பர், 2020

விடுதி வாழ்க்கை

 


விடுதி வாழ்க்கை

 

 

விடுதி வாழ்க்கை என்று கூறினாலும் எல்லோருக்கும் அனுபவங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. .மூன்று தலை முறையினரின் விடுதி வாழ்க்கை அனுபவங்களைக் உணர்ந்தும் கண்டும் கேட்டும் ஆயிற்று.. இவனுக்கு படிப்பும் பயிற்சியும் கலந்த வாழ்வுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தும் முன் அநேக கேள்விகள் , வாழ்வாதாரத்தை நிச்சயிப்பவை, எழுந்தது. இவன் தேர்வு செய்யப் பட்ட நேரம் இவன் தந்தை காலமாயிருந்த நேரம். இவனை நம்பி கலம், மரக்கால், படி, ஆழாக்கு என்று பலரும் பின்னால் நின்றிருந்த சமயம்.அவர்கள் கூடவே இருந்து படிப்பையும் பயிற்சியையும் தியாகம் செய்வதா, இல்லை படிப்புக்கும் பயிற்சிக்கும் செல்வதன் மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கனவு காண்பதா என்ற மில்லியன் டாலர் கேள்வி..எழுந்த அந்த நேரமும் சந்தர்ப்பமும் உணர்ந்திருந்தால்தான் விளங்கும். மனசுக்கும் அறிவுக்கும் நடந்த பலப் பரீட்சையில் அதிசயமாக அறிவு வெற்றி பெற்று உற்றாரின் பிரிவை எதிர்கொள்ளத் துணிந்தான்

 

நினைவுகள் 63 வருடங்கள் பின்னோக்கிச் செல்கிறது..பம்பாய்க்கு அருகே உள்ள அம்பர்நாத், பயிற்சியும் படிப்பும் தொடர நிர்ணயிக்கப்பட்ட இடம். பெங்களூரிலிருந்து HAL-மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50- பேர் குழுவில், இவனும் ஒருவன். ஹாஸ்டல் வாழ்க்கையைப் பற்றி எழுத இருப்பதால், மற்ற விஷயங்கள் உரிமை இழக்கின்றன.

 

அம்பர்நாத் மெஷின் டூல் ப்ரோடோடைப் ஃபாக்டரி ராணுவ அமைச்சகத்தின் கீழ் வருவது. அதை ஒட்டிய பயிற்சிப் பள்ளியில் அகில இந்தியாவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கிருந்தவர்களைவிட இவன் குழுவில் இருந்தவர்கள் தங்களை ஒரு படி மேலானவர்களாகக் கருதினர். இவர்களுடைய பயிற்சி ஒரு மேற்பார்வையாளர்க்குரியது.அவர்கள் தொழிலாளியாக அமர்த்தப்பட தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தென் இந்தியர்கள்.அவர்கள் அகில இந்தியப் பிரதிநிதிகள். ஒட்டு மொத்தத்தில் விடுதியில் இருந்தவர்கள் ஒரு மினி இந்தியாவைப் பிரதிபலிப்பவர்களாக இருந்தனர். ஐந்து இரண்டு மாடிக் கட்டிடங்களைக் கொண்ட விடுதியில், ஒரு கட்டிடத்தில் சுமார் 100- பேர் வீதம் மொத்தம் 500- பேர். ஒவ்வொரு தளத்திலும் நான்கு டார்மிடரிகள். ஒவ்வொன்றும் 12- பேரைத் தங்க வைக்கக் கூடியது. ஒவ்வொருவருக்கும் ஒரு கயிற்றுக் கட்டில், ஒரு நாற்காலி , ஒரு சைட் ராக்-கம் மேசை.தளத்தில் இரண்டு பகுதிகளிலும் பொதுவான கழிப்பிட மற்றும் குளியல் வசதிகள். ஒரு பொதுவான பெரிய சாப்பாட்டு ஹால்.உடற்பயிற்சிக்கான எல்லா வசதிகளும் கொண்ட மைதானமும், எல்லா இண்டோர் விளையாட்டு வசதிகள் கொண்ட லாஹூர் ஷெட், என்ற ஒரு கட்டமைப்பும்  இருந்தது. 5- நிமிட நடையில் பயிற்சிப் பள்ளி இருந்தது. இவர்களது இருப்பிட வசதிக்கும் உணவுக்கும் HAL நிறுவனம் இவர்களது ஸ்டைபெண்ட் –ல் இருந்து மாதம் ரூபாய் 50- பிடித்து அதை பயிற்சிப் பள்ளிக்காக செலுத்தினர். அவர்களுடைய பயிற்சி மாணவர்களுக்கு அனைத்தும் இலவசம். இதுவும் இவர்கள் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணிக்கொள்ள ஒரு காரணம். இந்த எண்ணத்தின் தாக்கம் இவர்கள் அங்கு போய்ச் சேர்ந்த ஓரிரு மாதங்களில் வெளிப்பட்டது..பெரும்பாலும் தென் இந்தியர்களான இவர்களுக்கு  தினமும் சப்பாத்தி, பூரி என்று சாப்பிடுவது கடினமாகத் தெரிய தென் இந்திய சாப்பாடு வேண்டி உணவைப் புறக்கணிக்கும் ஒரு போராட்டம் உருவெடுத்தது. என்னவெல்லாமோ சமாதானம் கூறினாலும் போராட்டம் நிறுத்தப் படவில்லை.” நாங்கள் ஒன்றும் போட்டதை இலவசமாகத் தின்பதில்லை.பணம் கொடுக்கிறோம். அரிசி சாப்பாடு, சாம்பார், ரசம் எல்லாம் கொடுக்கப் பட வேண்டும்” என்று கூப்பாடு போட்டனர். அங்கிருந்தவர்களுக்கு தென் இந்திய உணவு சமைக்கத் தெரியாது என்று கூறப்பட்டது. கற்றுக் கொடுக்கிறோம் என்று இவர்கள் முன்வர, சாம்பார், ரசம் என்ற பெயரில் ஏதோ சமைத்துப் பறிமாறப்பட்டு, போராட்டம் கை விடப் பட்டது.

 

பயிற்சியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு இந்தக் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்யச் செல்பவர்கள் ஒரு முட்டையும் ஒரு பெரிய டம்ளர் பாலும் அருந்திச் செல்வர்.காலை உணவாக, டீயுடன் பூரி கிழங்கு அல்லது ரொட்டி கொடுக்கப் படும். அளவு ஏதும் கிடையாது. பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, சாண் உயரம் ,முழ உயரம் என்று அளந்து, எடுத்துச் சென்று உண்பதைப் பார்த்து இவனுக்கு ஆச்சரியம். இவனுக்கோ நான்கு அல்லது ஐந்து பூரிகள் சாப்பிடுவதே பெரும்பாடு. காலை பத்து மணி அளவில் கணக்கில்லாத தேவைப்பட்ட அளவு பிஸ்கட் ( க்ரீம் உட்பட ) தேனீருடன். மதிய உணவில் சப்பாத்தி சப்ஜி, ஒரு ஸ்வீட், அசைவ உணவு உண்பவர்களுக்கு அதுவும் உண்டு. மதியம் மூன்று மணிக்கு மீண்டும் பிஸ்கட் ,டீ.மாலை ஆறு மணிக்குத் தேனீருடன் பஜ்ஜியோ பகோடாவோ. இரவு மதியம் போல் உணவு.

 

சமைக்கப் படும் உணவுகள் முதலில் அருகிலிருந்த ராணுவ ஆஸ்பத்திரியில் சோதிக்கப் பட்டு, சமச் சீர் உணவுதான் என்று உறுதி செய்யப்பட்டு பிறகுதான் வழங்கப் படும்.

 

இவ்வளவு விரிவாக உணவு பற்றிக் குறிப்பிடக் காரணம் நம் மக்களின் மனோபாவத்தை உணர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பை விளக்கத்தான். பயிற்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் அடிமட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.அவர்களுக்கு இந்த மாதிரியான சத்தான, அளவில்லாத உணவு கனவு கூடக் காண முடியாதது. நிர்வாகத்தில் சில மாதங்கள் கழிந்த பிறகு செலவு கூடிப் போவதால், எண்ணற்ற பிஸ்கட்கள் என்பதை மாற்றி தேநீருடன் இரண்டு பிஸ்கட்கள் என்று குறைத்தார்கள். கேட்கவா வேண்டும் .மீண்டும் போராட்டம். இந்த முறை சாப்பாட்டுச் செலவுக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிதியில் செலவு செய்ய ,பயிற்சியில் உள்ளவர்களே தேர்ந்தெடுக்கப் பட்டதோடு, அது சரிவர நடை பெறுகிறதா என்று கண்காணிக்க பிரதி தினமும் ஒருவர் நியமிக்கப் படுவார் என்றும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன் விளைவு , தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெட்டியில் பிஸ்கட் பாக்கெட்கள் அடுக்கப் பட்டன. பகிர்ந்துண்ணும் பிஸ்கட்களின் எண்ணிக்கை குறைந்தது , ஒரு வேளை ஊழலுக்கு வித்திட்டது என்று கூறலாமா.?

 

சில நாட்களில் மாலை நேரங்களில் அறிவிக்கப் படாமலேயே பாட்டுப் போட்டிகள் தொடங்கி விடும். ஒரு கட்டிடத்திலிருப்பவர் யாராவது உரக்கப் பாட ஆரம்பிக்க எதிர் கட்டிடத்திலிருந்து எதிர் பாட்டு வந்து சுவையான அந்தாக்ஷரியாக மாறிவிடும். பெரும்பாலான நேரங்களில் இவனுடைய கட்டிடத்தில் இருப்பவர் வெற்றி வாகை, சூடுவர். ஏனென்றால் இங்கிருப்பவர்கள் ஹிந்தி, தமிழ் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் பாடுவார்கள். மற்றவர்களிடமிருந்து பெரும்பாலும் ஹிந்தியில் மட்டுமே எதிர்பாட்டு வரும்.

 

எல்லா விளையாட்டுகளுக்கும் வசதியான லாஹூர் ஷெட் ஒரு முறை தீயில் எரிந்தது. சாதாரணமாக விளையாட வராதவர்கள் அன்று வந்து சிகரெட் புகைத்து துண்டுகளை எங்கோ போட இரவு ஷெட் கொழுந்து விட்டு எரிந்தது. யாரையும் குறிப்பிட்டுக் குறை கூற முடியாத நிலையில், , மீண்டும் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக சில காலமாயிற்று. டேபிள் டென்னிஸ் என்னும் விளையாட்டை இவன் அங்கு கற்று , ஓரளவு தேர்ச்சி பெற்று, போட்டியில் பரிசும் பெற்றிருக்கிறான்.

 

ஒரு முறை நண்பர்கள் ஆர்வமாக எதையோ பார்த்துக் கொண்டிருக்க, என்னவென்று கேட்ட போது, “ பைரனின் கவிதைகள் “என்று எதையோ காட்டினர். படித்துப் பார்க்கும் போது, அவை உடலுறவை குறித்த பச்சையான செய்திகள் கவி நடையில் ஆங்கிலத்தில் எழுதப் பட்டவை என்று தெரிந்தது..இது நாள் வரை அதன் மூலம் என்ன, உண்மையிலேயே பைரனின் கவிதைகளா என்று இவனுக்குத் தெரியாது.

 

இன்னொரு முறை சில நண்பர்கள் சில ஃபோட்டோக்களை கூடி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் காண அவர்கள் சொன்ன ஒரே விதி, அவற்றை நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும். பலரும் ஆர்வத்துடன் விதிக்குட்பட்டு படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க, கூடியிருந்தவர்கள் நிற்பவனின் முன் பக்கத்தை நோட்ட மிட்டுக் கொண்டிருப்பார்கள். நிற்பவன் ஒரு சில வினாடிகளில் உட்கார்ந்து விடுவான். !

 

சிகரெட் புகைப்பதில் போட்டி நடக்க இவன் அதில் கலந்து கொண்டு , மறுநாள் உதடெல்லாம்

வீங்கி, வார்டனிடம் டோஸ் வாங்கியது மறக்க முடியாது.

 

அடுத்திருந்த உல்லாஸ் நகருக்கு நடந்து சென்று, சிந்திப் பெண்களை சைட் அடிக்கும் வாடிக்கையும் உண்டு

 

ஒரு வருடம் தட களப் போட்டியில் இவன் கலந்து கொண்டு, உயரந் தாண்டுதலில் முதல் பரிசு வென்றபோது, பலராலும் தோள் மேலேற்றிச் செல்லப் பட்டான். ஏதடா, திடீரென்று இவ்வளவு மதிப்பு என்று பார்க்கும்போது, இவன் வெற்றி பெற்றதால் இன்னொரு வீரன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது தெரிந்தது

 

ஹோலி பண்டிகையை அவர்கள் கொண்டாடுவது தென் இந்தியர்கள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். அதிகாலையில் எழுந்து எல்லோரையும் எழுப்பி முகத்தில் சாயம் பூசி தெருவெங்கும் கலாட்டாவுடன் உலா வருவார்கள். அடுத்திருந்த சிவன் கோவில் பழமை வாய்ந்தது. சிவராத்திரி வெகு விசேஷம். சிவ லிங்கம்  பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் தரையின் சற்று அடியில் ஆழத்தில் இருக்கும். எல்லோரும் லிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்யலாம். ஊரே திரண்டு பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.

 

அங்கிருந்தபோது ஆங்கிலத்தில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை கொண்டு வரப்பட்டது. அழகான கையெழுத்துடன் பிரமாதமான படங்களுடன், விடுதி வாசிகளாலேயே எழுதப் பட்டு இர்ண்டு மாதத்துக்கு ஒன்றாக வெளியிடப்பட்டு ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.

 

.ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோருக்கும் பொதுவான ஒரு வேலை உண்டு. அது கயிற்றுக் கட்டிலில் இருக்கும் மூட்டைப் பூச்சிகளை அகற்றுவது ஆகும். மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க ஒரு வழி என்று விளம்பரம் செய்யப் பட்டு,, லூதியானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பார்சலில் ஒரு குப்பியும் , ஒரு சிறிய ஹாமரும், ஒரு கல் தட்டும் இருந்தது. கூடவே ஒரு செய்முறைத் தாளில் விளக்கமும் இருந்தது. மூட்டைப் பூச்சியைப் பிடித்து தட்டில் வைத்து ஹாமரால் கொன்று குப்பியில் சிறிது நீர் விட்டு அதில் போட்டால் மூட்டைப் பூச்சி போச்சு போயே போச்சு.!

 

விடுதியில் இருந்த போது அங்கே இரண்டு மூன்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வந்த பணம் கொண்டு ஊருக்குப் போகவும் சில்லறைத் தேவைகளையும் இவன் கவனித்துக் கொண்டான்.

 

விடுதியில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மக்களிடம் பழகும் வாய்ப்பு ஒரு நல்ல படிப்பினையாக இருந்தது. கடைசியாக ஒன்று சொல்ல வேண்டும். இந்தியப் பிரிவினையின் போது அகதிகளாய் நம் நாட்டிலேயே பல இடங்களில் குடி வைக்கப் பட்ட சிந்திகள் நல்ல உழைப் பாளிகள் நல்ல வியாபாரிகள். ஏதாவது பொருளில் MADE IN USA  என்று பார்க்க நேர்ந்தால் அது உல்லாஸ்நகர் சிந்தி அசோசியேஷனால் தயாரிக்கப் பட்டிருக்கலாம் கவனிக்கவும்.!

---------------------------------------------------------------------------                          :      .               .                                  .