Sunday, July 16, 2023

பஞ்சாபில் நான்

 

பஞ்சாபில் நான்.

.பஞ்சாபில் நான். 
-----------------------
      
        சீக்கிசம் என்ற புத்தகம் படிக்கும் வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது  அதை படிக்க துவங்கும் முன்னும், படிக்கும் போதும்  நான்  சீக்கியர்களின் மாநிலமான  பஞ்சாபுக்கும்  அவர்களுடைய  புண்ணிய  தலங்களான  அம்ருதசராஸ் மற்றும் கோவிந்தவால் சென்று வந்த அனுபவங்கள் மனதில் ஓடியது.  1985 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். சம்பவங்கள் நினைவுக்கு வரும் அளவுக்கு மாதம் தேதிகள் நினைவுக்கு வருவதில்லை. நான் திருச்சியில் பாரத மிகுமின் கொதிகல தொழிற்சாலையில் உள்ள வால்வ் டிவிஷனின் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பில்  இருந்த காலம்.

       BHEL நிறுவனம்அகில இந்தியாவில்எல்லா  இடங்களிலும் நீக்கமற  நிறைந்திருக்கும்  ஒரு நவரத்னா கம்பெனி. பஞ்சாப் மாநிலத்தில் சில வகை வால்வுகளை  உற்பத்தி செய்ய ஒரு தொழிற்சாலை நிறுவ எண்ணி கோவிந்தவால் என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அதற்கு டெக்னிகல் மற்றும் தரக்கட்டுப்பாடு  சம்பந்தமான விவரங்களை விளக்கவும் ஆலோசனை கூறவும்  BHEL  திருச்சியிலிருந்து  டிசைன் அல்லது உற்பத்திப் பிரிவிலிருந்து பொறுப்புள்ள அதிகாரி ஒருவர் சென்று கோவிந்தவால் தொழிற்சாலை அதிகாரிகளுக்கு விளக்க வேண்டி இருந்தது..அந்த தொழிற்சாலை அப்போது அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் முடிவுற்று பஞ்சாபே ஒரு கொதிகலன் போல இருந்த நேரம். திருச்சியிலிருந்து அங்கு செல்ல யாரும் துணியவில்லை.டிசைன் மற்றும் மானுபாச்சர்  உடன் நெருங்கிய தொடர்புடைய தரக்கட்டுப்பாடு அதிகாரி யாரையாவது அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. தினமும் இருபது முப்பது கொலைகள் நிகழும் பஞ்சாபுக்கு யாரும் போக விரும்பவில்லை. தரக்கட்டுப்பாட்டின் பொறுப்பிலிருந்த என்னிடமும் கேட்கப்பட்டது. நான் சரியென்று ஒப்புக்கொண்டேன்.அதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று எனக்குப் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யப் பிடிக்கும். இரண்டாவது என் பொறுப்பை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. மூன்றாவது எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்க இருக்கும்t STATISTICAL PROBABILITY அதாவது பஞ்சாப் மாநிலத்தில் 25 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு நாளில் 25 பேர் தீவிர வாதிகளால் கொல்லப்படுகிறார்கள் என்றால் லட்சத்தில் ஒருவர் சாக வாய்ப்பு என்று அர்த்தம். அந்த லட்சத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்பது HIGHLY IMPROBABLE .ஆக  நான் பஞ்சாப் பயணமானேன். 

         வால்வ் தொழிற்சாலை அமைக்கப்பட இருந்த கோவிந்தவால்  அம்ருதசரசிலிருந்து சுமார் அறுபது, எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் முப்பது  கிலோ மீட்டர். கோவிந்த வாலி   கெஸ்ட் ஹவுஸ்  தயாராக  இல்லாத நிலையில் அம்ருதசரசிலிருந்து தான் .         தினமும் பயணிக்கவேண்டும்  தினமும்  கோவிந்தவால்   தொழிற் சாலை    நிர்வாகி என்னைக் காலையில் ஹோட்டலிலிருந்து பிக் அப் செய்து பணிமுடிந்ததும் மலையில் ஹோட்டலில் விடுவதாக ஏற்பாடு.

          எனக்கு ஓரிரு சீக்கிய நண்பர்கள் உண்டு. என்னுடைய பயிற்சி காலத்தில் இந்தியாவின் எல்லா மாநிலத்தவரிடமும் பரிச்சயம் உண்டு. தமிழ் நாட்டில் அநேகமாக சீக்கியர்களை நாம்  அங்கு மிங்குமாக  ஒன்றிரண்டு   பேரைத் தான்   காண முடியும். நான் அம்ருதசராஸ் சென்றபோது  எங்கு பார்த்தாலும் தலைப்பாகை அணிந்த சர்தார்ஜிகளை கண்டபோது என்னை நானே சற்று வித்தியாசமாக உணர்ந்தேன்.

          முதல் நாள் நான் கோவிந்தவால்  தொழிற்சாலை சீக்கிய  நிர்வாகியுடன்  டாக்சியில் பயணப்பட்டேன். அவரிடம் அங்குள்ள நிலைமை குறித்து விசாரித்தால்அவர்அதிகமாகபேச விரும்பவில்லை. அவருக்கு  என்னைப்  பார்த்து பயம் போல் தோன்றியது. அம்ருதசரசிலிருந்து கோவிந்தவால் போகும் வழியில் தரன் தரன் என்ற ஒரு இடம். தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த இடம். அதன் அருகே நாங்கள் சென்றபோது எங்கள் கார் வழி மறிக்கப்பட்டது. பயத்தில் உறைந்து போனேன். கூட வந்த சீக்கிய நிர்வாகி என்னை பயப்படாதிருக்க கூற வண்டியை விட்டு இறங்கினோம் .மூன்று, நான்கு சர்தார்ஜிகள் எங்களை அருகிலிருந்த ஒரு சிறிய குருத்வாராவுக்கு அழைத்துச சென்றனர். அங்கிருந்த லங்காரில் இலவச உணவு அளிக்குமிடம்.) எங்களுக்கு சாப்பிட சப்பாத்தி சப்ஜி கொடுத்து உபசரித்தனர்.அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தாம்பாளம் மாதிரி தெரிந்த ஒரு பாத்திரத்தில் எங்களுக்கு விருப்பமிருந்தால் ஏதாவது பணம் போடலாமென்றார்கள்.என் பாக்கெட்டில் கை விட்டு கிடைத்த (ரூபாய் ஐம்பதோ நூறோ தெரியவில்லை.)பணத்தைப் போட்டேன் .அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் மேல் மதிப்பு சற்றே அதிகமாயிற்று.பார்ப்பதற்கு முரடர்கள் போல் தெரிந்தாலும் வாழ்க்கையில் கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் .இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.சீக்கிரமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். யாரையாவது நம்பினால் அடிமை மாதிரி எது வேண்டுமானாலும் செய்வார்கள். உடலுழைப்புக்கு அஞ்சாதவர்கள். வியாபார நுணுக்கங்கள் தெரிந்தவர்கள்.

         ஒருமுறை போபாலில் ஒரு சர்தார்ஜியின் கடையில் என் பிள்ளைகளுக்காக ஆயத்த உடைகள் வாங்க சென்றேன். அன்று காலை தலைமையகத்திலிருந்து என் வேலை நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கூறி உடனே ட்ராம்பே செல்லப் பணித்திருந்தனர். அதனால் உடை வாங்கி இருக்கும் பணத்தை செலவு செய்ய தயக்கமாயிருந்தது. அந்தக் கடை முதலாளி என்னிடம் பணம் இல்லாவிட்டால் பாதகமில்லை, ஊர் பொய் சேர்ந்தபிறகு அனுப்பிக் கொடுங்கள் போதும் என்று கூறி ,முன்பின் அறியாத என்னிடம் உடைகளைப் பாக் செய்து கொடுத்தார். மனித இயல்பு தெரிந்து பழகுவதில் சர்தார்ஜிக்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை என்னிடம்  ஏற்படுத்தினார் அவர்.  பஞ்சாபில் எனக்கு வேண்டி ஏதாவது  செய்வதற்கு வாய்ப்பு தருமாறு வேண்டி வேண்டி உதவியவர்கள்  நிறையப் பேர்.  பஞ்சாபில் பிச்சைக்கார  சர்தார்ஜிகளைப் பார்ப்பதே   மிகவும்  அரிது.

        பஞ்சாப் சென்றபோது அம்ருதசராஸ் பொற்கோவில் காணும் பாக்கியம் கிடைத்தது.ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடம் காணும்போது, காந்தி படத்தின் காட்சிகள் நடுவே நான் இருந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது. பொற்கோவிலில் சீக்கியர்களின் அதிகார பீடமான அகல் தக்த் இருக்கிறது. அங்குள்ள ஒரு ஓவிய, பட காலரியில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது மனம் பதைக்கிறது. சீக்கியர்களின் தியாகங்களும் உயிர்பளிகளும் கோரமான படங்கள் மூலம் தத்ரூபமாக வெளிப்படுகிறது. அதுதான் அவர்களது உள்ளக் கனலை அணையாது காக்கிறதோ என்னவோ.

         ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். கோவின்தவாலுக்கு ஒரு  தொழிற்சாலை கிடைத்ததில் மகிழ்ந்த அவர்கள் அது சரியாக  சிறப்பாக  நடைபெற ஆலோசனைகள் கூறி வழி நடத்த வந்த என்னிடம் மிகவும்  பவ்யமாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். கோவிந்தவால் குருத்வாரா சீக்கியர்களின் புண்ணிய தலங்களுள் ஒன்று. அங்கு நான் சென்றபோது (நம்மிடையே பூர்ண கும்ப மரியாதை தருவதுபோல்)அங்கு எனக்கு சிரோப்பா எனப்படும் மஞ்சள் காவியில் தலைப்பாகை துணி தந்து மரியாதை செய்தனர். அதை நான்  இன்னும்  பொக்கிஷமாக  வைத்திருக்கிறேன்.  சீக்கியர்களைப்  பற்றி  எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது. அதற்காக தனியே ஒரு பதிவு  வேண்டும். GOD WILLING, I WILL DO IT SOMETIME.

5 comments:

  1. சுவாரஸ்யமாய் இருந்தது படிக்க..   இதன் தொடர்ச்சியையும் படிக்க ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. 2011 லும் நீங்கள் தொடர்ச்சியை எழுதவில்லை!

      Delete
  2. ரொம்ப நன்றாக இருந்தது உங்கள் அனுபவங்கள்

    ReplyDelete
  3. தங்களது அனுபவம் மிகவும் சுவாரசியமானதாக இருந்தது ஐயா.

    ReplyDelete