விடுதி
வாழ்க்கை
விடுதி வாழ்க்கை என்று கூறினாலும் எல்லோருக்கும் அனுபவங்கள்
எல்லாம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. .மூன்று தலை முறையினரின்
விடுதி வாழ்க்கை அனுபவங்களைக் உணர்ந்தும் கண்டும் கேட்டும் ஆயிற்று.. இவனுக்கு
படிப்பும் பயிற்சியும் கலந்த வாழ்வுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. கிடைத்த
சந்தர்ப்பத்தை பயன் படுத்தும் முன் அநேக கேள்விகள் , வாழ்வாதாரத்தை நிச்சயிப்பவை,
எழுந்தது. இவன் தேர்வு செய்யப் பட்ட நேரம் இவன் தந்தை காலமாயிருந்த நேரம். இவனை
நம்பி கலம், மரக்கால், படி, ஆழாக்கு என்று பலரும் பின்னால் நின்றிருந்த
சமயம்.அவர்கள் கூடவே இருந்து படிப்பையும் பயிற்சியையும் தியாகம் செய்வதா, இல்லை
படிப்புக்கும் பயிற்சிக்கும் செல்வதன் மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கனவு
காண்பதா என்ற மில்லியன் டாலர் கேள்வி..எழுந்த அந்த நேரமும் சந்தர்ப்பமும்
உணர்ந்திருந்தால்தான் விளங்கும். மனசுக்கும் அறிவுக்கும் நடந்த பலப் பரீட்சையில் அதிசயமாக அறிவு வெற்றி பெற்று
உற்றாரின் பிரிவை எதிர்கொள்ளத் துணிந்தான்
நினைவுகள் 63 வருடங்கள் பின்னோக்கிச்
செல்கிறது..பம்பாய்க்கு அருகே உள்ள அம்பர்நாத், பயிற்சியும் படிப்பும் தொடர
நிர்ணயிக்கப்பட்ட இடம். பெங்களூரிலிருந்து HAL-மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50- பேர்
குழுவில், இவனும் ஒருவன். ஹாஸ்டல் வாழ்க்கையைப் பற்றி எழுத இருப்பதால், மற்ற விஷயங்கள்
உரிமை இழக்கின்றன.
அம்பர்நாத் மெஷின் டூல் ப்ரோடோடைப் ஃபாக்டரி ராணுவ
அமைச்சகத்தின் கீழ் வருவது. அதை ஒட்டிய பயிற்சிப் பள்ளியில் அகில
இந்தியாவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கிருந்தவர்களைவிட இவன் குழுவில்
இருந்தவர்கள் தங்களை ஒரு படி மேலானவர்களாகக் கருதினர். இவர்களுடைய பயிற்சி ஒரு
மேற்பார்வையாளர்க்குரியது.அவர்கள் தொழிலாளியாக அமர்த்தப்பட தேர்ந்தெடுக்கப்
பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தென் இந்தியர்கள்.அவர்கள் அகில இந்தியப்
பிரதிநிதிகள். ஒட்டு மொத்தத்தில் விடுதியில் இருந்தவர்கள் ஒரு மினி இந்தியாவைப்
பிரதிபலிப்பவர்களாக இருந்தனர். ஐந்து இரண்டு மாடிக் கட்டிடங்களைக் கொண்ட
விடுதியில், ஒரு கட்டிடத்தில் சுமார் 100- பேர் வீதம் மொத்தம் 500- பேர். ஒவ்வொரு
தளத்திலும் நான்கு டார்மிடரிகள். ஒவ்வொன்றும் 12- பேரைத் தங்க வைக்கக் கூடியது.
ஒவ்வொருவருக்கும் ஒரு கயிற்றுக் கட்டில், ஒரு நாற்காலி , ஒரு சைட் ராக்-கம்
மேசை.தளத்தில் இரண்டு பகுதிகளிலும் பொதுவான கழிப்பிட மற்றும் குளியல் வசதிகள். ஒரு
பொதுவான பெரிய சாப்பாட்டு ஹால்.உடற்பயிற்சிக்கான எல்லா வசதிகளும் கொண்ட மைதானமும்,
எல்லா இண்டோர் விளையாட்டு வசதிகள் கொண்ட லாஹூர் ஷெட், என்ற ஒரு கட்டமைப்பும் இருந்தது. 5- நிமிட நடையில் பயிற்சிப் பள்ளி இருந்தது.
இவர்களது இருப்பிட வசதிக்கும் உணவுக்கும் HAL நிறுவனம் இவர்களது ஸ்டைபெண்ட் –ல் இருந்து மாதம் ரூபாய் 50- பிடித்து அதை
பயிற்சிப் பள்ளிக்காக செலுத்தினர். அவர்களுடைய பயிற்சி மாணவர்களுக்கு அனைத்தும்
இலவசம். இதுவும் இவர்கள் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணிக்கொள்ள ஒரு காரணம். இந்த
எண்ணத்தின் தாக்கம் இவர்கள் அங்கு போய்ச்
சேர்ந்த ஓரிரு மாதங்களில் வெளிப்பட்டது..பெரும்பாலும் தென் இந்தியர்களான
இவர்களுக்கு தினமும் சப்பாத்தி, பூரி என்று சாப்பிடுவது கடினமாகத்
தெரிய தென் இந்திய சாப்பாடு வேண்டி உணவைப் புறக்கணிக்கும் ஒரு போராட்டம்
உருவெடுத்தது. என்னவெல்லாமோ சமாதானம் கூறினாலும் போராட்டம் நிறுத்தப் படவில்லை.” நாங்கள்
ஒன்றும் போட்டதை இலவசமாகத் தின்பதில்லை.பணம் கொடுக்கிறோம். அரிசி சாப்பாடு,
சாம்பார், ரசம் எல்லாம் கொடுக்கப் பட வேண்டும்” என்று
கூப்பாடு போட்டனர். அங்கிருந்தவர்களுக்கு தென் இந்திய உணவு சமைக்கத் தெரியாது
என்று கூறப்பட்டது. கற்றுக் கொடுக்கிறோம் என்று இவர்கள் முன்வர, சாம்பார், ரசம்
என்ற பெயரில் ஏதோ சமைத்துப் பறிமாறப்பட்டு, போராட்டம் கை விடப் பட்டது.
பயிற்சியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு இந்தக்
காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்யச்
செல்பவர்கள் ஒரு முட்டையும் ஒரு பெரிய டம்ளர் பாலும் அருந்திச் செல்வர்.காலை
உணவாக, டீயுடன் பூரி கிழங்கு அல்லது ரொட்டி கொடுக்கப் படும். அளவு ஏதும் கிடையாது.
பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, சாண் உயரம் ,முழ உயரம் என்று அளந்து,
எடுத்துச் சென்று உண்பதைப் பார்த்து இவனுக்கு ஆச்சரியம். இவனுக்கோ நான்கு அல்லது
ஐந்து பூரிகள் சாப்பிடுவதே பெரும்பாடு. காலை பத்து மணி அளவில் கணக்கில்லாத
தேவைப்பட்ட அளவு பிஸ்கட் ( க்ரீம் உட்பட ) தேனீருடன். மதிய உணவில் சப்பாத்தி
சப்ஜி, ஒரு ஸ்வீட், அசைவ உணவு உண்பவர்களுக்கு அதுவும் உண்டு. மதியம் மூன்று
மணிக்கு மீண்டும் பிஸ்கட் ,டீ.மாலை ஆறு மணிக்குத் தேனீருடன் பஜ்ஜியோ பகோடாவோ. இரவு
மதியம் போல் உணவு.
சமைக்கப் படும் உணவுகள் முதலில் அருகிலிருந்த ராணுவ ஆஸ்பத்திரியில் சோதிக்கப் பட்டு, சமச் சீர் உணவுதான் என்று உறுதி செய்யப்பட்டு பிறகுதான் வழங்கப் படும்.
இவ்வளவு விரிவாக உணவு பற்றிக் குறிப்பிடக் காரணம் நம் மக்களின் மனோபாவத்தை உணர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பை விளக்கத்தான். பயிற்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் அடிமட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.அவர்களுக்கு இந்த மாதிரியான சத்தான, அளவில்லாத உணவு கனவு கூடக் காண முடியாதது. நிர்வாகத்தில் சில மாதங்கள் கழிந்த பிறகு செலவு கூடிப் போவதால், எண்ணற்ற பிஸ்கட்கள் என்பதை மாற்றி தேநீருடன் இரண்டு பிஸ்கட்கள் என்று குறைத்தார்கள். கேட்கவா வேண்டும் .மீண்டும் போராட்டம். இந்த முறை சாப்பாட்டுச் செலவுக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிதியில் செலவு செய்ய ,பயிற்சியில் உள்ளவர்களே தேர்ந்தெடுக்கப் பட்டதோடு, அது சரிவர நடை பெறுகிறதா என்று கண்காணிக்க பிரதி தினமும் ஒருவர் நியமிக்கப் படுவார் என்றும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன் விளைவு , தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெட்டியில் பிஸ்கட் பாக்கெட்கள் அடுக்கப் பட்டன. பகிர்ந்துண்ணும் பிஸ்கட்களின் எண்ணிக்கை குறைந்தது , ஒரு வேளை ஊழலுக்கு வித்திட்டது என்று கூறலாமா.?
சில நாட்களில் மாலை நேரங்களில் அறிவிக்கப் படாமலேயே பாட்டுப் போட்டிகள் தொடங்கி விடும். ஒரு கட்டிடத்திலிருப்பவர் யாராவது உரக்கப் பாட ஆரம்பிக்க எதிர் கட்டிடத்திலிருந்து எதிர் பாட்டு வந்து சுவையான அந்தாக்ஷரியாக மாறிவிடும். பெரும்பாலான நேரங்களில் இவனுடைய கட்டிடத்தில் இருப்பவர் வெற்றி வாகை, சூடுவர். ஏனென்றால் இங்கிருப்பவர்கள் ஹிந்தி, தமிழ் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் பாடுவார்கள். மற்றவர்களிடமிருந்து பெரும்பாலும் ஹிந்தியில் மட்டுமே எதிர்பாட்டு வரும்.
எல்லா விளையாட்டுகளுக்கும் வசதியான லாஹூர் ஷெட் ஒரு முறை தீயில் எரிந்தது. சாதாரணமாக விளையாட வராதவர்கள் அன்று வந்து சிகரெட் புகைத்து துண்டுகளை எங்கோ போட இரவு ஷெட் கொழுந்து விட்டு எரிந்தது. யாரையும் குறிப்பிட்டுக் குறை கூற முடியாத நிலையில், , மீண்டும் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக சில காலமாயிற்று. டேபிள் டென்னிஸ் என்னும் விளையாட்டை இவன் அங்கு கற்று , ஓரளவு தேர்ச்சி பெற்று, போட்டியில் பரிசும் பெற்றிருக்கிறான்.
ஒரு முறை நண்பர்கள் ஆர்வமாக எதையோ பார்த்துக் கொண்டிருக்க, என்னவென்று கேட்ட போது, “ பைரனின் கவிதைகள் “என்று எதையோ காட்டினர். படித்துப் பார்க்கும் போது, அவை உடலுறவை குறித்த பச்சையான செய்திகள் கவி நடையில் ஆங்கிலத்தில் எழுதப் பட்டவை என்று தெரிந்தது..இது நாள் வரை அதன் மூலம் என்ன, உண்மையிலேயே பைரனின் கவிதைகளா என்று இவனுக்குத் தெரியாது.
இன்னொரு முறை சில நண்பர்கள் சில ஃபோட்டோக்களை கூடி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் காண அவர்கள் சொன்ன ஒரே விதி, அவற்றை நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும். பலரும் ஆர்வத்துடன் விதிக்குட்பட்டு படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க, கூடியிருந்தவர்கள் நிற்பவனின் முன் பக்கத்தை நோட்ட மிட்டுக் கொண்டிருப்பார்கள். நிற்பவன் ஒரு சில வினாடிகளில் உட்கார்ந்து விடுவான். !
சிகரெட் புகைப்பதில் போட்டி நடக்க இவன் அதில் கலந்து கொண்டு , மறுநாள் உதடெல்லாம்
வீங்கி, வார்டனிடம் டோஸ் வாங்கியது மறக்க முடியாது.
அடுத்திருந்த உல்லாஸ் நகருக்கு நடந்து சென்று, சிந்திப் பெண்களை சைட் அடிக்கும் வாடிக்கையும் உண்டு
ஒரு வருடம் தட களப் போட்டியில் இவன் கலந்து கொண்டு, உயரந் தாண்டுதலில் முதல் பரிசு வென்றபோது, பலராலும் தோள் மேலேற்றிச் செல்லப் பட்டான். ஏதடா, திடீரென்று இவ்வளவு மதிப்பு என்று பார்க்கும்போது, இவன் வெற்றி பெற்றதால் இன்னொரு வீரன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது தெரிந்தது
ஹோலி பண்டிகையை அவர்கள் கொண்டாடுவது தென் இந்தியர்கள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். அதிகாலையில் எழுந்து எல்லோரையும் எழுப்பி முகத்தில் சாயம் பூசி தெருவெங்கும் கலாட்டாவுடன் உலா வருவார்கள். அடுத்திருந்த சிவன் கோவில் பழமை வாய்ந்தது. சிவராத்திரி வெகு விசேஷம். சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் தரையின் சற்று அடியில் ஆழத்தில் இருக்கும். எல்லோரும் லிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்யலாம். ஊரே திரண்டு பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.
அங்கிருந்தபோது ஆங்கிலத்தில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை கொண்டு வரப்பட்டது. அழகான கையெழுத்துடன் பிரமாதமான படங்களுடன், விடுதி வாசிகளாலேயே எழுதப் பட்டு இர்ண்டு மாதத்துக்கு ஒன்றாக வெளியிடப்பட்டு ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.
.ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோருக்கும் பொதுவான ஒரு வேலை உண்டு. அது கயிற்றுக் கட்டிலில் இருக்கும் மூட்டைப் பூச்சிகளை அகற்றுவது ஆகும். மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க ஒரு வழி என்று விளம்பரம் செய்யப் பட்டு,, லூதியானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பார்சலில் ஒரு குப்பியும் , ஒரு சிறிய ஹாமரும், ஒரு கல் தட்டும் இருந்தது. கூடவே ஒரு செய்முறைத் தாளில் விளக்கமும் இருந்தது. மூட்டைப் பூச்சியைப் பிடித்து தட்டில் வைத்து ஹாமரால் கொன்று குப்பியில் சிறிது நீர் விட்டு அதில் போட்டால் மூட்டைப் பூச்சி போச்சு போயே போச்சு.!
விடுதியில் இருந்த போது அங்கே இரண்டு மூன்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வந்த பணம் கொண்டு ஊருக்குப் போகவும் சில்லறைத் தேவைகளையும் இவன் கவனித்துக் கொண்டான்.
விடுதியில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மக்களிடம் பழகும் வாய்ப்பு ஒரு நல்ல படிப்பினையாக இருந்தது. கடைசியாக ஒன்று சொல்ல வேண்டும். இந்தியப் பிரிவினையின் போது அகதிகளாய் நம் நாட்டிலேயே பல இடங்களில் குடி வைக்கப் பட்ட சிந்திகள் நல்ல உழைப் பாளிகள் நல்ல வியாபாரிகள். ஏதாவது பொருளில் MADE IN USA என்று பார்க்க நேர்ந்தால் அது உல்லாஸ்நகர் சிந்தி அசோசியேஷனால் தயாரிக்கப் பட்டிருக்கலாம் கவனிக்கவும்.!
---------------------------------------------------------------------------
:
.
.
.
விடுதி வாழ்க்கையில் நிறை குறைகள் இருந்தாலும் நீங்கள் கூறுவதைப் போல பலருடன் பழகும் வாய்ப்பினைத் தரும்.
பதிலளிநீக்குvவிடுதி வாழ்க்கையில் நிறைகள் அதிகம் குறைகள் நம்மிடம்
நீக்குவிடுதி வாழ்க்கை என்றாலும் இது போன்று பல மாநிலத்தவருடன் ஒரே விடுதியில் வாழ்வது என்பது சிலருக்கே அமையும். அதனால் பல பாடங்களையும் பழக்கங்களையும் படித்து விட்டீர்கள். சிறுவனாக இருந்த உங்களை இளைஞனாக உருமாற்றியது அம்பர்நாத் பயிற்சி என்று கூறலாம். சொல்லிய விதம் சுவாரசியம்.
பதிலளிநீக்குJayakumar
ஒரு விதத்தில் உங்கள் எண்ணம் சரியே
நீக்குமிகவும் சுவாரஸ்யமான நினைவுகள். நிறைய சம்பவங்களை சுருக்கமாக, மேலோட்டமாகச் சொல்லிச் சென்று விட்டீர்கள். ஒவ்வொன்றாக தனித்தனிப் பதிவுகளாகக் கூட சம்பவங்களை விவரித்திருக்கலாம்.
பதிலளிநீக்குஇதைப் படிக்கவே பலருக்கும் தயக்கம்
நீக்குநீளமான பதிவு. சில ஏற்கெனவே படித்த நினைவு.
பதிலளிநீக்குநீங்கள் நினைக்காததா இருக்க என்ன செய்ய வேண்டும்
நீக்குசுவாரசியமான ஹாஸ்டல் நினைவுகள்.
பதிலளிநீக்குஉணவைப் பற்றிக் குறிப்பிட்டது ஆச்சர்யமாக இருந்தது (எப்படி கட்டுப்படியாகும் என்று). இருந்தாலும் எண்ணெய் வழியும் பூரியை எவ்வளவுதான் சாப்பிடமுடியும்?
படத்தை நின்று பார்ப்பது, உட்காருவது என்று ரொம்ப டீசண்டாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்
நெல்லையாரே, மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் வரும் உணவகங்கள்/சிற்றுண்டிச்சாலைகளில் உணவின் தரம்/அளவு எல்லாமும் நன்றாக இருக்கும். நீங்க ராணுவ உணவகங்களில் பார்க்கணும்! அதிலும் அதிகாரிகளுக்கான உணவகத்தில் பார்த்தால் சாப்பாடு தரம்/விதம்விதமாக மயக்கமே தரும். நாங்க ஒரூ முறை அஹமதாபாதில் ராணுவ அதிகாரிகளின் விருந்தினர் இல்லத்தில் தங்கினோம். ஒரு வீட்டைக் கொடுத்துடுவாங்க. உணவு சமைத்து வேளாவேளைக்கு வந்துடும். காஃபி, தேநீர் மட்டும் அங்கேயே உள்ள சமையலறையில் போட்டுக்கலாம். குளிர்சாதனப் பெட்டிப் பழவகைகள், மதுவகைகல், பால், பால் பொருட்கள் என நிரம்பி இருக்கும். நாங்க இருந்த இரண்டு நாட்களுக் காஃபி, தேநீர் தவிர்த்து வேறே மற்றவை எல்லாம் உணவகத்திலிருந்தே வரவழைத்துக் கொண்டோம். ஆனால் ஒரு விஷயம் என்னவெனில் ஏதேனும் யூனிட்டில் பார்ட்டி எனில் அன்றிரவு பிரிகேடியர் வந்து உணவைச் சாப்பிட ஆரம்பித்த பின்னரே பரிமாற ஆரம்பிப்பார்கள். அப்போல்லாம் சாப்பாடு வரப் பதினோரு மணி ஆயிடும். நமக்கெல்லாம் அந்த நேரம் இறங்காது என்பதால் ஐஸ்க்ரீம், இனிப்பு வகைகள் மட்டும் வாங்கிக் கொண்டு மறுநாள் சாப்பிட்டுப்போம். மத்தியான உணவையே கூட வாங்கி வைத்துக் கொண்டு சூடு பண்ணிச் சாப்பிட்டுடுவோம்.
நீக்குகண் தெரியாமல் இருக்கும் இடங்களில் உள்ள எழுத்துப் பிழைகளைப் பொறுக்கவும். அங்கே என்ன எழுதினோம் என்பதே தெரிவதில்லை! :(
நீக்குஅப்போ..யுத்தம் என்று ஒன்று வராத வரை, இராணுவம் ரொம்பவே சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லுங்கள். கஷ்டப்படுவது field staffமட்டும்தான் போலிருக்கு
நீக்குஅதெல்லாம் இல்லை. வேலை நெட்டி வாங்கிடும். சும்மா எல்லாம் இருக்க முடியாது. காலை/மாலை இரு நேரமும் கட்டாயமாய் ரோல் காலுக்குப் பதிவு செய்துவிட்டுப் பயிற்சிகளை அன்றாடம் கட்டாயம் செய்யணும். காலை எட்டு மணியிலிருந்து இரண்டு மணி வரை வேலை/வேலை/வேலை. பின்னர் சாப்பாட்டு நேரம் முடிந்த பின்னால் மாலை வேறுவிதமான வேலைகள். இரவு கட்டாயமாய் எட்டு மணிக்குப் படுக்கப் போயிடணும். ஆங்காங்கே வந்து விசில் ஊதி எல்லோரும்படுக்கப் போயாச்சா எனப் பார்ப்பார்கள். பின்னர் ஒரு முறை பதிவாய்ப் போடுகிறேன். இங்கே இதுவே அதிகம்/தேவை இல்லாததும் கூட.
நீக்குகீதா சாம்ப்சிவம் ....மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் வரும் உணவகங்கள்/சிற்றுண்டிச்சாலைகளில் உணவின் தரம்/அளவு எல்லாமும் நன்றாக இருக்கும். நீங்க ராணுவ உணவகங்களில் பார்க்கணும்!எல்லாம் அடுத்தவீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பதுபோல்
நீக்குநெத,,,,சுவாவரசியமான நினைவுகள் மட்டுமல்ல இரண்டு ஆண்டுகள் பார்த்ததுஅனுபவித்தது
நீக்குநெத யுத்தம்வந்தால் கஷ்டப்படுவது சிவிலியன்களும் கூடத்தான்
நீக்குகீதா சம்பசிவம் எப்போதும் அதிகரிகள்பாடு சுகம்தான்வேலை என்பதே உடலை நன்கு கவனித்துக் கொள்வதுதான்
நீக்குகீதா சம்பசிவம் கண் தெரியாமல் இருக்கும் இடங்களில் உள்ள எழுத்துப் பிழைகளைப் பொறுக்கவும். அங்கே என்ன எழுதினோம் என்பதே தெரிவதில்லை! எல்லொருக்கும் வயதாகிற்தே
நீக்குராணுவத்தில் அதிகாரிகளும் சோம்பி உட்கார முடியாது என்பதே உண்மை.
நீக்குஉடலைப் பேணுவதே முக்கியவேலைபோர் இல்லாதபோது
நீக்குவிடுதி வாழ்க்கை -அது ஒரு அழகிய பொற்காலம்...!
பதிலளிநீக்குஅதை நினைத்து மகிழ்வதெ இன்பம்
நீக்குவிடுதி வாழ்க்கை உண்மையிலேயே மறக்க இயலாத நினைவுகளைத் தருவதுதான் ஐயா
பதிலளிநீக்குஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்
நீக்குவிடுதி வாழ்க்கையின் அனுபவங்களைக் குறித்துப் பலர் கூறக் கேட்டு மகிழ்ந்துள்ளேன் . சுவையாய் எழுதியுள்ளீர்கள். எனக்கு அந்த அனுபவம் இல்லாமை ஒரு குறை .
பதிலளிநீக்குவிடுதி வாழ்க்கையின் பல தடங்களை தொட்டு சென்றிருக்கிறேன்
நீக்கு