வியாழன், 4 ஆகஸ்ட், 2011

நினைவலைகள் தடைபட்டால்....

டெமென்ஷியா எனும் மறதி நோய்.
-----------------------------------------------

அந்தக் கலியாண வீட்டில், அங்கும் இங்குமாய்,பரபரப்பாக
ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.பக்கத்தில் போவோரைப்
பார்த்து ஒரு ஸ்நேகபாவத்துடன் ஒரு புன் முறுவல். அவரை
எனக்கு அறிமுகப்படுத்துகிறான் என் நண்பன்.அவர் அவனுடைய
மாமனார். என் பெயரைச் சொல்லி என்னை அவருக்கு அறிமுகம்
செய்கிறான்.அதே ஸ்நேகபாவச் சிரிப்பு, ஒரு சிறு தலையசைப்பு.
பிறகு எங்கோ சென்று விடுகிறார். சற்றுப் பொறுத்து வந்து என்
நண்பனிடம் என்னை யார் என்று கேட்க, மறுபடியும் அறிமுகம்
செய்யப்படுகிறேன். ஒரு புன் சிரிப்புடன் சென்றவர்சிறிது நேரம்
கழித்து வந்து மீண்டும் விசாரிக்கிறார். நான் யாரென்று. என்
நண்பனும் சளைக்காமல் என்னை மீண்டும் அறிமுகப்படுத்து
கிறான்.அவரை மறுபடியும் நான் பார்க்கும்போது அவர் இடுப்பில்
கட்டியிருந்த வேட்டி, நழுவுவது கூடத் தெரியாமல் நடந்து
கொண்டிருந்தார்.கால் இடறிக் கீழே விழுந்து அடிபட்டு காயமாகி
சிராய்ப்புகள் தெரிந்தும் ஒன்றுமே நடவாததுபோல் எழுந்து ஒரு
புன்சிரிப்புடன் சென்றார். அவருடைய வேட்டியை சரியாகக் கட்டி
வேறொருவரை உதவிக்கு இருக்கும்படி கூறினான். என் முக
பாவங்களைக் கண்ட என்நண்பன் தன் மாமனார் அல்ஜிமர் எனும்
நோயால் தாக்கப் பட்டிருப்பதாகக் கூறினான்.

ஹரித்துவாரில் கங்கைக் கரையில் கங்கா மாதாவுக்கு தீப
ஆராதனை தினம் விமரிசையாய் நடக்கும். நூற்றுக்கணக்கானோர்
பார்த்துப் பங்கு கொண்டு மகிழ்வார்கள். அங்கு அருகிலேயே
சிறு கோவில் இருக்கிறது. கோவிலை வலம் வந்து கங்கா
மாதாவை தரிசனம் செய்ய வேண்டும். நாங்கள் அனைவரும்
காலணிகளுடன் இருந்தோம். அவற்றை பாதுகாப்பாக அங்கு
வைக்க இடமில்லை. இருவர் காலணிகளுக்குப் பாதுகாப்பாக
அங்கிருப்பது ,மற்றவர் தரிசனத்துக்கு செல்வது என்று ஏற்பாடு.
நானும் என் மனைவியும் இருக்க மற்றவர் தரிசனத்துக்குச்
சென்றனர். சற்று நேரம் கழித்து வந்தவர்களில் ஒருவரைக்
காணோம். கூட்ட நெரிசலில் கூட வர முடியவில்லைபோலும்
என்று நாங்கள் அவருக்காகக் காத்திருந்தோம்..முன்பின்
தெரியாத இடம், மொழியும் புரியாது என்ற நிலையில் அவரைத்
தேட நாங்கள் கிளம்பினோம். சுற்றி சுற்றி வந்தும் அவர் தென்
படாததால், ஆளுக்கொரு பக்கம் தேட ஆரம்பித்தோம். சற்றுத்
தொலைவில் எதையும் கவனிக்காமல் அவர் சென்று கொண்டு
இருந்தார்.ஓடிப்போய் அவரைப் பார்த்து அழைத்து வரும்போது
அவர் பின்னால் ஏன் வந்தோம் என்று எங்களைக் கடிந்து
கொண்டார். தரிசனம் எல்லாம் முடிந்து உணவு தேடி
அலைந்தோம்.தென்னிந்திய உணவு கிடைக்கும் இடம் தேடி
உண்ணத்துவங்கினால் அவர் மட்டும் எதுவும் வேண்டாம்
என்று கூறுகிறார்.பசியில்லை என்றார். கட்டாயப்படுத்தி
கொஞ்சம் உணவருந்தச் செய்தோம். எங்கள் அறைக்கு வந்த
அவர் , அவருடைய காலணிகளை எங்கள் அறையில் தேடத்
துவங்கினார். அங்கு இல்லையென்று சொல்லியும் நம்பாமல்
எல்லா இடமும் தேட ஆரம்பித்தார். கூடவே தான் காலணிகளை
அங்குதான் விட்டதாகவும் அடம் பிடிக்கத் துவங்கினார்.ஒருவாறு
சமாதானப்படுத்தி அவர் அறையிலேயே அவர் கட்டிலருகேயே
அவர் காலணிகள் இருப்பதைக் காண்பித்தோம்.

இந்த நிகழ்ச்சிகளை நான் பதிவிடும் காரணம் அவர்களுக்கே
தெரியாமல் அவர்கள் அல்ஜீமர் நோயால் ( பெரும்பாலும் மறதி
நோய் என்று அறியப்படுகிறது)பாதிக்கப் பட்டிருந்தார்கள் என்று
தெரியப் படுத்தவும், குறிப்பிட்ட சம்பவங்கள் நோயின்
அறிகுறிகளே என்று தெரியப்படுத்தவுமேதான்.

இந்த நோய் அநேகமாக வயதாகும்போது சுமார் அறுபது வயதுக்கு
மேல் தாக்குகிறது. நோய்க்கான காரணம் குறிப்பிட்டுச் சொல்லும்
படியாக ஏதுமில்லை. சாதாரணமாகவே வயதாகும்போது ஞாபக
மறதி எதிர்பார்க்கக்கூடியதுதான். ஆனால் கூடவே வார்த்தைகள்
தடுமாற்றம், புரிந்து கொள்ளாமை, நடவடிக்கைகளில் மாற்றம்,
செயல் திறனிழத்தல், பசியின்மை, தூக்கமின்மை,என்று அடுத்து
அடுத்து வருவது நோயின் தீவிரத்தன்மையைக் காட்டுவதாய்
இருக்கக்கூடும்.

டெமென்ஷியா மூளையின் செயல்பாட்டின் குறைவால் ஏற்படும்
மனநோய். அல்ஜீமர் நோய் அவற்றில் ஒன்று. அது நாள்பட நாள்
பட தீவிரமடையக் கூடியது. நியூரான்ஸ் எனும் நரம்பு செல்கள்
அழியும்போது நரம்பு மண்டலத்துக்குசெய்திகள் அனுப்பும்
ரசாயனக் குறைவால் மூளையும் நரம்பு மண்டலமும் ஒன்றாக
இணைந்து செயல்படுவது குறைகிறது. இதுவே இந்நோய்க்கான
காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அல்ஜீமர் நோயால்தானா, இல்லை
இந்தமாதிரி நிகழ்வுகள் மூளையில் ஏற்படும் பழுதால்,அல்லது
கட்டி போன்றவற்றால் ஏற்படுகிறதா என்று முதலில் சோதித்துத்
தெரிந்துகொள்கிறார்கள். அல்ஜீமர் நோய்க்கு இதுவரை மருந்து
கண்டு பிடிக்கப் படவில்லை. நோயின் தீவிரத் தன்மையை தள்ளிப்
போட மருந்து மாத்திரைகள் கொடுக்கிறார்கள். இந்த நோயால்
பாதிக்கப் படுபவரைவிட ,அடுத்துள்ளவர்க்குத்தான் கஷ்டங்கள்
கூடும். வயதான காலத்தில் புரிதலும் அனுசரணையுமே முக்கிய
தேவை.

ஏற்கெனவே இந்த காலத்தில் வயதானவர்களைப் பராமரிப்பது
கஷ்டமான காரியமாகக் கருதப் படுகிறது. இம்மாதிரி நோய்
இருப்பவரின் நடவடிக்கைகள் அவரால் கட்டுப்படுத்த முடியாதது
மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாவிட்டால் எரிச்சல் ஊட்டக்
கூடியதாய் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட தொல்லை
கொடுத்து மன உளைச்சலை அதிகரிக்கச் செய்யும்.

எனக்குத் தெரிந்து , இந்த நோயின் தீவிரம் உணர்ந்து, இப்படிப்
பட்டவர்களுக்குக் காப்பகம் போன்ற அமைப்பு தேவை ,என்று
உணர்ந்து, தான் தீவிரமாக ஈடுபடுகையில் ஒருவரை அவருடைய
மனைவி, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் குடித்தனம் நடத்தியவர்
விவாகரத்து செய்து கொண்டு ,அவருடைய சொத்தின் பெரும்
பகுதியை சுயார்ஜிதப் படுத்திக் கொண்டுவிட்டார்.

இந்நோய் குறித்த விவரங்கள் அறியப்பட வேண்டும். இன்னும்
விவரமாக எழுதினால் அனாவசிய பீதி ஏற்படுத்தக்கூடும்.
என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.
--------------------------------------------------------------

.

.

11 கருத்துகள்:

  1. தனக்கும் தன்னைச் சேர்ந்தோருக்கும் மிகுந்த சிரமங்களைக் கொடுக்கக் கூடிய நோய்.

    மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருந்தால் இந்நோய் வருவதைத் தள்ளிப் போடலாம் என்று சொல்கிறார்கள். சான் பதிவுலகிற்கு வந்து தொணர்ந்து இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு
    மறதி நோய் குறித்து தெளிவாக புரிந்து கொள்ளும்படியாக
    சொல்லிப் போகிறீர்கள்
    படிக்க எங்களுக்கு சிரமம் இல்லை
    தங்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சி கொள்வோம்

    பதிலளிநீக்கு
  3. என்ன சொல்ல இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் பரிவாக நடந்துகொள்வது அவசியம். மறதி நோய் யாருக்கு எப்ப வருனே சொல்லமுடியாதுதான்.

    பதிலளிநீக்கு
  4. இன்னும்
    விவரமாக எழுதினால் அனாவசிய பீதி ஏற்படுத்தக்கூடும்.//

    புலி கொல்லும்முன் கிலி கொல்லுவதைப்போல் பயங்கரமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. இந்த நோயை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம். தொடர்ந்து இதை போல நிறைய எழுதுங்கள்.
    http://en.wikipedia.org/wiki/Dementia

    பதிலளிநீக்கு
  6. தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை
    எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
    தங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க
    வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  7. ஐயா!
    மறதி நோய் பற்றிய
    விளக்கம் இன்று, இப் பதிவு
    மூலமே அறிந்தேன்
    நன்றி! நல்ல பதிவு!

    புலவர் சாஇராமாநுசம்

    பதிலளிநீக்கு
  8. நன்றி! நல்ல பதிவு! மறதி நோய் குறித்து தெளிவாக புரிந்து கொள்ளும்படியாக
    சொல்லிப் போகிறீர்கள்.-----

    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  9. ஆரோக்கியமே பெரும் செல்வம் ஐயா
    அருமையான பதிவு
    விளங்க சொன்னிர்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  10. நான் அறிந்தவரை, மீன் மாத்திரை சாப்பிட்டு வர வேண்டும் என்று கூறுகிறார்கள்.
    மூளையும் சதை பகுதி போல உழைப்பு கொடுக்க கொடுக்க உறுதி பெறும்.
    வயதானாலும் இந்த மூளை மட்டும் நன்கு உழைக்கும்.
    முடங்கி இருக்காமல் பலரையும் பார்த்து பேசி வருவதும் நல்லது.
    மூளைக்கு எதாவது விளையாட்டு, சிந்தனை கொடுத்து கொண்டே இருக்க மூளை பலமிலக்காது.
    தொடர்ந்து டிவி பார்ப்பது நல்லதல்ல.

    பதிலளிநீக்கு
  11. மறதிநோய் பற்றி மிகத் தெளிவான விளக்கங்களோடு சந்தித்த மனிதர்களுடனான அனுபவத்தையும் பகிர்ந்துள்ளீர்கள். தாங்கள் குறிப்பிடுவது போல் மறதிநோயால் பீடிக்கப்பட்டவரை விடவும் அவருடன் வாழும் உறவுகளுக்கு அதன் பாதிப்பு மிக அதிகமாகவே இருக்கும். பொறுமையும் நிதானமும் கொண்டவர்களால் மட்டுமே இதுபோன்ற முதியவர்களை அனுசரணையுடன் கையாள இயலும். அல்ஜைமர் நோயை அடிப்படையாகக் கொண்ட, மனத்தை மிகவும் பாதித்த ஒன்றிரண்டு அயல்மொழித் திரைப்படங்களின் பாதிப்பில்தான் மறதி கவிதையை எழுதினேன். சுட்டி கொடுத்து வாசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு