வியாழன், 25 ஆகஸ்ட், 2011

அவதாரக்கதை-பரசுராமர்

அவதாரக் கதை --பரசுராமர்.
--------------------------------------
(அவதாரக் கதைகளில் அதிகம் கூறப்படாத கதைகளை எழுத எண்ணி, 
 பதிவிட்டு வந்தேன். ஆறு அவதாரக் கதைகள் எழுதப்பட்டிருந்த நிலையில் 
AHTHERAI என்ற பெண் நான் தொடர்ந்து எழுத வேண்டுகோள் வைத்திருந்தார்
இளைய சந்ததிகள் இக்கதைகளை படிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி. மேலும் 
படிக்க வேண்டுகோள் வைக்கிறார்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இந்த 
தாத்தாவிடம் கதை கேட்கும் பேத்தி ஆதெரைக்காக இது. )


பரசுராமர் கதை அறியும் முன் அவர்
பரம்பரையும் தெரிதல் நன்று.
புரூர வசு வம்சத்தில் காதி என்பவரின்
மகள் ,சத்தியவதி என்னும் பெயர் கொண்ட
மங்கை நல்லாளை மணக்க ரிசீகர் எனும்
தவச்சீலர் விருப்பம்தெரிவிக்க ,மகளை மணக்க,
காதொன்று கருப்புடனும் உடல் வெண்மையும்
கொண்ட குதிரைகள் ஆயிரம் சீராகக் கொணர்தல்
வேண்டும் என்றொரு நிபந்தனை காதி வைத்தார்

தவ வலிமை கொண்டு வருணனிடமிருந்து
ஆயிரம் குதிரைகள் பெற்றுத் தந்து சத்தியவதியை
மணந்து இனிதே நடத்திய இல்லறம் கொடுத்த
மகன் ஜமதக்கினிக்கு அவன் பெற்றோர், ரேணுகா
எனும் மாதரசியை மணம் செய்வித்தனர்.

ஜமதக்கினி ரேணுகா தம்பதிகள் பெற்ற
பிள்ளை செல்வங்கள் ஐந்தில் கடைக்குட்டி
பரசுராமர் இவரே பரந்தாமனின் அம்சம். அவரும்
பரமசிவனிடம் தவமியற்றிப் பெற்றார் ஒரு கோடரி
அதுவே அவர் பெயருக்கும் காரணம் கூறியது.
( பரசு = கோடரி ).

ரேணுகா அதிகாலை விழித்தெழுந்து
கங்கையில் நீராடி,நீரில் விரலால் வட்டம்
வரைய, நீர்க் குடமொன்று மேல் வரும் ;அது கொண்டு
அவள் கணவன் காலைக் கடன்கள் முடியும்.
தொடர்ந்து வரும் வழக்கம் போல் ஒரு நாள்
பத்தினியவள் நீரில் வட்டம் வரைய , அப்போது
பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனின் அழகிய
தோற்றம் நீரில் தெரிய, சற்றே மனசில் சஞ்சலம்
ஏற்பட , வெளிப்படும் நீர்க்குடம் வராமல் நின்றது.
பலமுறை முயன்றும் நீர்க்குடம் வராதது
கண்டு திகைத்து நின்றாள் ரேணுகா.

நேரம் கடந்தும் நீர் வராத காரணம் தவவலிமை
கொண்டறிந்த தபசி ஜமதக்கினி கோபம் கொண்டு,
கங்கைக் கரையில் இருந்த அவர் மனைவியை
வெட்டி வீழ்த்த ஆணையிட,மூத்த நால்வரும்
தாயைக் கொல்ல இசையாமல் மறுக்க,ஐந்தாம் மகன்
பரசுராமரிடம் அவர் தாயை வெட்டப் பணித்தார்.
தந்தை சொல் தட்டாத தனயன் தன் கைப் பரசுவால்
தாயின் தலை துண்டித்து தாதையை வணங்கி நின்றான்.

தன் சொல் தட்டாத மகனிடம் வேண்டியது கேட்கப்
பணித்த முனிவரிடம் ,தாயின் உயிர் வேண்டியும்
சோதரர் சாபம் நீங்கவும் வரம் வேண்டிப் பணிந்தார் பரசுராமர்.

கங்கை சென்று வெட்டிய தலையும் உடலும்
 பொருத்தி அவளை அழைத்தால் உயிர்
 பெற்று வருவாள் என வரமருளினார்.

கங்கைகரை சென்ற பரசுராமர் தாயின்
தலைகண்டு உடல்காணாது வருந்த, பின்
அங்கிருந்த வேறோர் உடலில் தலை பொருத்தி
அழைக்க ரேணுகா உயிர் பெற்றெழுந்தாள்,

மகனுடன் வந்த ரேணுகாவைக் கண்ட
ஜமதக்கினி இனி அவள் காளி மாரி எனும்
பெயருடன் வாழ்வாள் என வாழ்த்தினார்.

ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன்,
காட்டில் வேட்டையாடிக் களைத்து வந்தவன்
தனித்திருந்த ஜமதக்கினி முனிவரிடம் தம் பசி
போக்க வேண்டி நிற்க, கேட்டது தரும் பசு காமதேனு
அவர் வந்தோர் அனைவர் பசியைப் போக்கினார்.

காமதேனுவிடம் ஈர்ப்பு கொண்ட கார்த்த வீரியன்
முனிவரைக் கேளாது அதனை ஓட்டிச்சென்றது
அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார்.

தெய்வாம்சம் கொண்டவன் மன்னன், அவன் தவற்றை
மன்னிப்பதே சிறந்தது, மீறிக் கொல்லல் பாவம், அது
போக்கப் புனித நீராடச் சென்றுவர மகனைப் பணித்தார் .

முனிவர் மகன் நீராடச் சென்றதறிந்த கார்த்தவீரியன்
மைந்தர் தனியே தியானத்தில் இருந்த ஜமதக்கினி
முனிவரை வெட்டி வீழ்த்திக் கொன்றனர்.

கட்டிய கண்வன் மறைவு கண்டு மார்பில் மாறி மாறி
மூவேழு முறை அன்னைக் காளி மாரி அறைந்தது கண்ட,
பரசுராமர் இருபத்தொரு தலைமுறை மன்னர் குலம்
அழித்தொழிப்பேன் என சூளுரைத்து அன்று முதல்
நீதி நெறி தவறிய மன்னர்களை கொன்று சபதம் முடித்தார்

பின்னாளில் மிதிலையில் மைதிலி கை பிடித்து
திரும்பும் இராமனுக்குத் தன் தவ வலிமைகளைக்
கொடுத்துக் கடமை முடிந்ததென சென்றார் பரசுராமர். .




13 கருத்துகள்:

  1. பரசுராமர் கதையை ரத்தின சுருக்கமாக, அழகாக எடுத்துக்கூறி முடித்து விட்டீர்கள். நன்றி. பாராட்டுக்கள்.
    vgk

    பதிலளிநீக்கு
  2. அவதாரக்கதை-பரசுராமர்" சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. கவிதையில், அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  4. ரத்தின சுருக்கமாக...அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  5. ரத்தினச் சுருக்கம் என்ற சொல்லுக்கு
    மிகச் சரியான விளக்கம் என்றால்
    இந்தப் பதிவைத்தான் சொல்லவேண்டும்
    மிக அழகாகவும் விஷயங்கள் எதுவும் விடுபடாமலும்
    சுவாரஸ்யமாகவும் சொல்லிச் செல்லும் பாங்கு
    பாராட்டுக்குரியது
    தொடர்ந்து பத்து அவதாரங்களில்
    மீதம் உள்ள அவதாரக் கதைகளையும்
    பதிவிடவேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. அவதாரக்கதை பரசுராமர் பற்றி தெரி
    யாத விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்த்து. நன்றி

    பதிலளிநீக்கு
  7. கதையை வாசிக்க முடிந்தது எங்கள் பாக்கியமே ! நன்றி ஐயா! சுருக்கமாக, விளக்கமாக அறிய முடிந்தது.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  8. இக்கதை முன்னுமே அறிந்திருக்கின்றேன். ஆனாலும், மன்னிக்க வேண்டும். அக்காலக் கதைகளில் இப்படி வெட்டுவது கொத்துவது போன்ற வார்த்தைகள் வரும்போது வாசிக்கும் பலருக்கும் வேதனையாக இருக்குமல்லவா? சட்டரீதியற்ற முறையில் எல்லோரும் எல்லோரையும் தண்டிக்கலாமா? இது என்ன என்ற கேள்விகள் இளம் தலைமுறையினரிடம் வரும் அல்லவா? தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற வார்த்தையை போதிப்பதற்காகக் கூறப்பட்டிருந்தாலும் மன்னிப்ப என்பதும், சலனம் என்பதும் மனிதனுக்கு உண்டல்லவா? குறைநினைக்க வேண்டாம். இப்படி யான் சிந்திப்பவற்றையே கேள்வியாக எழுப்பியிருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு