புதன், 2 மே, 2012

சிந்தனைப் பரிணாமங்கள்...


                                             சிந்தனைப் பரிணாமங்கள்----
                                             -------------------------------------

                                   (  கேள்வியும் நானே...பதிலும் நானே ..!

கேள்வி:- சிந்தனைப் பரிணாமங்கள் என்று நீ சொல்ல வருவதுதான் என்ன.?

பதில்:-   உலகில் எத்தனையோ நிகழ்வுகள் நடக்கின்றன.எல்லா நிகழ்வுகளுக்குப் பின்னாலும் ஏதோ காரணம் இருக்கும். பெரும்பாலும் அந்தக் காரணங்களின் பின் புலத்தில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, சிலரதோ பலரதோ சிந்தனைகள் இருக்கும். இந்த சிந்தனைகளின் காரணங்களைக் கொஞ்சம் விவாதிக்கலாம் என்றுதான் சொல்ல வந்தேன்..

கேள்வி:- நிகழ்வுகளுக்குக் காரணம் சிந்தனை. சிந்தனைகளுக்குக் காரணம் என்று தொடர்ந்து குழப்ப மாட்டாயே..?

பதில்:-   சில புரியாத விஷயங்கள் குழப்பம் போலத் தோன்றும். ஆனால் குழப்பும் எண்ணம் நிச்சயம் எனக்கில்லை.

கேள்வி:- சரி, எந்த நிகழ்வுக்கு எந்த சிந்தனை என்று குழப்பப் போகிறாய், மன்னிக்கவும் விளக்கப் போகிறாய்.?

பதில்::-   பல காலமாக என் மனசில் இருந்து வரும் ,நம்முள் இருக்கும் ஏற்ற தாழ்வுகள், நிகழ்பவை என்றும், அதற்குக் காரணம் காணும் முயற்சியே இது என்றும் சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி:- ஏற்ற தாழ்வென்று எதைச் சொல்கிறாய்.?

பதில்:-   பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் ஒரு போலத்தான். ஆனால் வளரும்போது, வளர்க்கப் படும்போது ஏற்ற தாழ்வுகள் பல ரூபங்களில் தென்படுகின்றன.

கேள்வி:- பிறக்கும்போதே குழந்தைகள் ஏற்ற தாழ்வுடன் தானே பிறக்கின்றன, வசதியான குடும்பம், வசதி இல்லாத குடும்பம், படித்த குடும்பம், படிக்காத குடும்பம் என்ற பாகுபாடு இருக்கத்தானே செய்கிறது.இதற்கான காரணங்களை ஆராயப் போய், விடை காண முடியாமல் அவரவர் விதி, பூர்வ ஜென்மபலன் என்று எதையாவது சொல்லித் தப்பிக்காதே. இதற்கும் மேற்பட்ட காரணங்களை கண்டு பிடித்துச் சொல்லப் போகிறாயா.?

பதில்:-  விடை காண முடியாத கேள்விகள் என்று கூறித் தப்பித்துக் கொண்டால், இதற்குத் தீர்வு இருக்க முடியாதே. இத்தனை வருட வாழ்விலும்,அனுபவத்திலும் நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்ல முயற்சிக்கிறேன். பிறக்கும்போது இல்லாத சமத்துவத்தை வளரும்போது ஏற்படுத்திக் கொடுத்தால் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் போகலாம்.

கேள்வி:- அது நடக்கக்கூடிய காரியமா.?

பதில்:-   அதைத்தான் சிந்தனைகளின் பரிணாமத்தை அறிந்து கொள்வதன் மூலம் தீர்க்கலாம் என்கிறேன்.

கேள்வி:- சரி, காரண காரியங்கள் என்று எதைச் சொல்கிறாய்.?

பதில்:-   இதற்கு நாம் கொஞ்சம் பழைய காலங்களில் சஞ்சரிக்க வேண்டும். மனிதன் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக மாறிய காலத்துக்குச் செல்வோம். உலகின் பல பாகங்களில் மனிதனின் தோற்றம் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். நம் புரிதலுக்கு அது தேவை இல்லாதது. மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபட்டு, குழுக்களாக மாறி வசிக்கத் தொடங்கிய காலத்தில் எதிர்பட வேண்டிய இடர்கள் ஏராளம் இருந்தன. உணவின்றி ,உடையின்றி எக்காலமும் அதற்காகப் போராடிக் கொண்டிருந்தான். விலங்குகளை வேட்டையாடி காய் கனி குருக்களை உண்டு வாழ்க்கை நடத்தியவனுக்கு இயற்கையே எதிரியாகத் தோற்றமளித்தது. மழையும் பனியும் வெயிலும் அவனுக்குப் புரியாததாயிருந்தது. அந்தப் புரியாத காரியங்களை நிகழ்த்துபவனுக்கு ப்ரீதி செய்ய வேட்டையாடி, பொறுக்கிக் கண்டெடுத்த பொருட்களை, இனம் தெரியாத , முகம் தெரியாதவனுக்குப் படைத்தளித்தனர். அவன் மகிழ்ந்து இன்னல்களைத் தவிர்ப்பான் என்று நம்பினர்.

கேள்வி:- சிந்தனைகளின் பரிணாமம் என்று தொடங்கி மனிதனின் பரிணாமம் பற்றிக் கூறுகிறாயோ.?

பதில்:-   ஆதிகால மனிதனின் சிந்தனைகள் எவ்வாறு செயல்பட்டு, பிற்காலத்திய நிகழ்வுகளுக்கு அஸ்திவார மிட்டது என்று சொல்ல வரும்போது,மனித இனத்தின் பரிணாமம் கூறாமல் விளக்கினால் விளங்காது

கேள்வி:- சொல்ல வருவதை முடிந்தவரை சுருக்கமாய்ச் சொல். கேட்பதற்கும் படிப்பதற்கும் பொறுமை உள்ளவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

பதில்:-   புரிந்து கொள்ள முடியாத,புதிரான நிகழ்வுகளை நிகழ்த்துபவனை வணங்கவும் வழிபடவும், அவனுக்கு உருவம் தேவைப் பட்டது. ஆதியில் இருந்த உருவங்கள் அநேகமாக பயமுறுத்தும் வகையில் இருந்திருக்கும். பல இடங்களில் பிற்காலத்தில் விலங்குகளின் உருவத்தை மீன், ஆமை. பன்றி, குரங்கு, சிங்கம்,பாம்பு ,மற்றும் விலங்கும்மனிதனும் கலந்த உருவம் என்றும்.பிறகு காலப் போக்கில் நலம் செய்யும் மனித உருவத்துடனும் வழிபட்டனர். சுருங்கச் சொன்னால் உலகின் எல்லா ஜீவ ராசிகளும் கடவுள் அந்தஸ்தைப் பெற்றன. அவற்றை திருப்தி செய்ய அவற்றுக்குப் பலிகள் கொடுத்து ப்ரீதி செய்தனர். திருப்தி செய்யாவிட்டால் அவை நம்மை அழித்துவிடும்,என்று நம்பினர். இந்த ரீதியிலான சிந்தனைகள் மதங்கள் தோன்றுவதற்கு அடி கோலியிருக்கும். அண்மைக் காலம் வரை இந்த பலி கொடுக்கும் வழக்கம் புழக்கத்தில் இருந்தது. இதுவே சற்று மேம்பட்டு கடவுள்களை சாத்வீகமாக அணுகிய போது, நிவேதனம் படைப்பதாக மாறி இருக்கக் கூடும்.

கேள்வி:-  பயத்தின் விளைவே மதங்களின் தோற்றம் என்றா கூறுகிறாய்.?

பதில்:-    கிட்டத்தட்ட அப்படித்தான். மதங்களும் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் எல்லா மதங்களும் தவறு செய்தால் தண்டிக்கப் படுவாய் என்று முக்காலும் பறை சாற்றுகின்றன. தண்டனைக்கு எதிர்ப்பு பரிசு என்ற விதத்தில் நரகம், சொர்க்கம் போன்ற சிந்தனைகள் உருவாகி இருக்க வேண்டும். அதேபோல், இனங்காண முடியாத அழிக்கும் சக்தி இருப்பது போல் ஆக்கும் சக்தியும் இருக்கும் என்று நம்பி, நல்லது செய்யும் கடவுள்களையும் மனிதன் படைத்தான்.

கேள்வி:- அந்தக் காலத்திலேயே எந்த வினைக்கும் எதிரான ,நிகரான செயல் நடக்கும் என்பதைச் சொல்லாமலேயே ஆதிமனிதன் தெரியப் படுத்தினான் என்கிறாயா.?

பதில்:- பரவாயில்லையே. கொஞ்சம் புரிந்து கொள்கிறாய்.ஆதிமனிதன் தனியாக வேட்டையாடி உணவு தேடி வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப் பட்டான். குழுக்களாக இருந்து செயல் பட்டால் திறமை அதிகரித்து கஷ்டங்கள் குறைவதை உணர்ந்தான். எதேச்சையாக தீ வளர்க்கவும் சமைத்து உண்ணவும் கற்றவன், எறும்புகளிடம் இருந்து வேளாண்மை பற்றி அரிச்சுவடிப் பாடம் கற்றிருக்கலாம் என்று எங்கோ படித்தேன். எறும்புகள் நிலத்தை உழுது, விதை விதைத்து அறுவடை செய்யவில்லை. எறும்புகள் உண்ணும் விதைகள் உள்ள செடிகளைச் சுற்றி இருக்கும் புற்களை அகற்றி அச்செடி வளர உதவுவதைக் கண்ட மனிதன், நீண்ட காலக் கணிப்பில், வேளாண்மை குறித்து அறிந்து விதை விதைத்துப் பயிரிடத் துவங்கி இருக்கலாம்.

கேள்வி:- எதையும் திட்ட வட்டமாகக் கூறாமல் இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று கூறுவது சொல்ல வந்த விஷயத்தைச் சுற்றி செல்கிற மாதிரித் தெரிகிறது.

பதில்:-   ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையிலும் சில அனுமானங்களின் அடிப்படையிலும்தான் இருக்க முடியும். 


 கேள்வி:- இதில் சிந்தனையின் பரிணாமம் எங்கு வந்தது.?

பதில்:-   ஆதிமனிதன் குழுக்களாகக் கூடிப் பயிரிட்டு, வேட்டையாடி வசித்தபோது, அதே மாதிரி பல குழுக்கள் இருந்திருக்கும். அதைக் கொண்டு நடத்தத் தலைவன் ஒருவன் தேவைப் பட்டான். ஆதியில் குழுக்களின் அளவு சிறிய தாய் இருந்தபோது, தலைவனும் எல்லாப் பணிகளிலும் ஈடுபட்டான். குழுக்களின் அளவு பெரிதாகிப் போனபோது அதை நிர்வகிக்கவே நேரம் போதாமல், தலைவன் அரசனாக்கப்பட்டான்.அவனுக்கு அதிகாரம் தேவைப் பட்டு அநேக உதவியாளர்களுடன் குழுக்களைக் காப்பதே பணி என்றாகிவிட்டது. அவனுக்கு உதவி செய்பவர் பெரும்பாலும் அவனது உறவினராகவே இர்ந்தனர்.

கேள்வி:- மனிதன் குழுக்களாக வசித்ததும், வேளாண் தொழிலில் ஈடுபட்டதும்  செய்யும் தொழிலிலும் மாற்றம் வந்ததா.?

பதில்.:-  ஆம். தனிமனிதனாக வேட்டையாடி உண்டவரை, அவன் தேவைக்கு மேல் எதையும் சேர்த்துக் கொள்ள முடியாத நிலை.ஆனால் குழுக்களாக சேர்ந்து வேளாண்  தொழிலில் ஈடுபட்ட போது, தேவைக்கு மீறி விளைந்த பொருட்களைக் காக்கவும், பூர்த்தியடையாத மற்ற குழுக்களுக்குக் கொடுக்கவும் வியாபாரம் தொடங்கி இருக்க வேண்டும். ஆக நிலத்தில் வேலை செய்து பயிரிட சிலர்,குழுக்களைக் காக்க சிலர், என்று வேலைகள் பங்கிடப் பட்டன. ஆக செய்யும் தொழிலைப் பிரித்துப் பங்கு போட்டுக் கொண்டவர்கள் அத்தொழில் செய்வதற்கென்றே அடையாளப் படுத்தப் பட்டனர். ஆதியில் இனந்தெரியாத சக்தியைத் திருப்தி படுத்த ஏற்பட்ட இடங்கள் கோயில்களாகவும், அந்த வேலையில் ஈடுபட்டவர்கள் பூசாரிகள், அந்தணர்கள் என்று அறியப் பட்டு சக்தி மிகுந்தவர்களாக விளங்கினர். ஆனால் குழுக்களை நிர்வகிக்கத் தலைவன் தேவைப் பட்டபோது, அவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலைக்கு மாறினர். ஆக மனித இனம், நான்கு குழுக்களாகப் பாகு படுத்தப் பட்டு, க்ஷத்திரியர், பிராம்ணர், வைசியர் , சூத்திரர் 
என்று அறியப் பட்டனர்.



கேள்வி:- அப்படிச் செய்யும் தொழில் மூலம் அடையாளப் படுத்தப் பட்டதில் உள் நோக்கம் இருந்ததா.? இல்லை இந்த முறையே தவறாக இருந்ததா.?

பதில்:-   இரண்டும் இல்லை. ஆனால் மனிதனின் சிந்தனைப் பரிணாமங்கள் சரியான திக்கை நோக்கிப் பயணப் பட்டதா என்பதே கேள்வியாக இருந்திருக்க வேண்டும். ஆதியில் குழுக்களுக்குத் தலைவனாய் இருந்தவன் சகல அதிகாரங்களையும் எடுத்துக் கொண்டு, குழுவில் இருந்த மற்றவர்களை அடக்கி ஆண்டான். பாதுகாப்புக் கருதி மற்றவர்களும் அடங்கி இருந்தனர். மக்களின் அறியாமையைப் பகடையாகப் பயன் படுத்தி இனங் காண முடியாத சக்தியை திருப்திப் படுத்தவென்றே, சில சடங்கு சம்பிரதாயங்களை ஏற்படுத்தி மற்றையோரை பயமுறுத்தியே, சக்தி பெற்ற பூசாரிகளும் அந்தணர்களும், பலம் படைத்த அவர்களுடன் கூட்டு சேர்ந்து, மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக நினைக்கத் துவங்கினர். அடக்கி ஆள்வதும், பிறரது அறியாமையில் பலம் கொள்வதுமாக இருந்த இந்த இருவகைப் பிரிவினர், மற்றவர்கள் மேலே வர இயலாத அளவுக்கு அதிகாரப் பிரயோகம் செய்தனர். விளைந்த  மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை விற்று, அரசுக்குப் பங்கு கொடுத்து, காண இயலாத சக்திகளை, திருப்தி செய்ய, உதவி, தங்களுக்கென ஒரு இடம் மூன்றாவது பிரிவினர் தக்க வைத்துக் கொண்டனர்..இதில் எதிலுமே அடங்காத நான்காவது பிரிவு, தானாக சிந்திக்காமல், சிந்திக்க முடியாமல், உழைத்து உருக்குலைந்து, குழுக்களின் அடிமட்டத்திலேயே இருந்தனர்.

கேள்வி:- எல்லோருமே ஒப்புக் கொண்ட ஒரு முறை எப்படித் தவறாகும்.?

பதில்:-   இங்குதான் சிந்தனைப் பரிணாமங்களின் வளர்ச்சியையோ, தேக்க நிலையையோ காண முடியும்.. எவனாவது சிந்திக்கத் துவங்கி விட்டால், தம் நிலைக்கு ஆபத்து என்று உணர்ந்து, சிந்திக்க இயலாத கட்டுப்பாடுகளை நடை முறைப் படுத்தி, பிறர் மேல் ஆண்டவர், ஆண்டை அடிமை என்று ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

கேள்வி:- இன்ன வேலை இன்னவனுக்கு என்று நடைமுறைப் படுத்தப் பட்ட பிறகு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் எங்கிருந்து வரும்.?

பதில்:-   சரியான கேள்வி. ஆனால் ஆதியில் தற்செயலாக அமைந்த பாகு பாடுகள் ,மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருந்திருந்தால், யார் வேண்டுமானாலும் எந்த நிலைக்கு வேண்டு மானாலும் உயரலாம். ஆனால் தற்செயலாகப் பிரிக்கப்பட்ட, ஏற்படுத்தப் பட்ட பாகு பாடுகளை, ஏதோ இனம் காண முடியாத சக்தியின் சித்தம் என்று ஒரு கோட்பாட்டை மற்றவர்கள் மேல் திணித்து, தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டார்கள். இதை கேள்வி கேட்க சிந்திக்க வேண்டும்.ஆனால் ஒரு சாராருடைய சிந்தனைகளை வளர விடாமல், மழுங்கடித்து, அவர்களது வளர்ச்சியைக் கட்டுப் படுத்த ஆதிக்கச் சக்திகள், மதம் என்றும், கடவுள் என்றும் ,சாஸ்திரம் என்றும் பலவாறு கூறி, எண்ணவே விடாமல் செய்தது. ஒரு விதச் சிந்தனைப் பரிணாமம் வளர்ச்சி என்றால், அதில் அடங்கிப் போனது இன்னொரு பரிணாமம்.

கேள்வி:- என்னதான் சொல்ல வருகிறாய் என்பதைக் கொஞ்சம் தெளிவு படுத்து.

பதில்:-  மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிய போது நிகழ்ந்த மாற்றங்கள் அண்மைய சரித்திர நிகழ்ச்சிகள். அரசுகளும் அரசர்களும் காணாமல் போய் விட்டனர். கேள்வி கேட்பதால்தானே மாற்றங்கள் வருகின்றன. கேள்வியே கேட்க முடியாதபடி செய்து விட்டால், கேள்வி கேட்பதற்குரிய கல்வியறிவை மறுதளித்து விட்டால்......இருக்கும் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளலாமே.

கேள்வி: தற்காலத்திலும் இந்தப் பிரிவுகள் இருப்பது ( பிறப்பினால் வருவது ) தேவையில்லாததுதானே. எல்லோரும் எல்லா வேலைகளும் செய்கிறார்களே இந்தப் பிரிவுகளுக்கு இப்போது அர்த்தம் இருக்கிறதா.?

பதில்:- மேலோட்டமாகப் பார்க்கும்போது உண்மை போல் தோன்றலாம். ஆனாலும் மக்கள் மனசளவில், ஏற்ற தாழ்வுகளை இன்னும் பார்க்கிறார்கள்.

கேள்வி:- இதற்குத் தீர்வுதான் என்ன.?

பதில்-   கல்வியறிவு. எல்லோருக்கும் கல்வியறிவு. நடைமுறையில் நடப்பது போல் தோன்றினாலும், உண்மையில் நடை முறைப் படுத்தப் படாதது. நடைமுறைப் படுத்த சாத்தியப் படாதது.

கேள்வி:-ஏன் யார் வேண்டுமானாலும் கல்வியறிவு பெறலாமே.

பதில்:-  உண்மைதான். ஆனால் இது ஒரு மாயத் தோற்றம். கல்வியறிவு என்பது வெறுமே எழுதப் படிக்கத் தெரிவது மட்டுமல்ல. சிந்திக்கத் தூண்டுவதாய் இருக்க வேண்டும். எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லல் படுபவன், பசியாறுவதைப் பற்றி சிந்திப்பானா, ஏற்ற தாழ்வற்ற கல்வி பற்றி சிந்திப்பானா. கிடைக்கும் கல்வியறிவிலேயே எவ்வளவு வித்தியாசம்.இரண்டு விதக் குழந்தைகள் பள்ளி செல்வதைப் பார்த்தாலேயே தெரிந்து விடுமே கல்வியில் உள்ள ஏற்ற தாழ்வுகள். ஒரு குழந்தை மற்றதை சமமாகப் பாவிக்கச் சந்த்ர்ப்பமே இருக்காதே.

கேள்வி:-இதையெல்லாம் நீ சிந்திப்பது போல் அரசாங்கம் சிந்திக்காதா.?
பதில்:- நிச்சயம் சிந்திக்கிறது. முதலில் வயிற்றுப் பசி அடங்கினால்தான் கல்விக் கண் திறக்கும் என்று அறிந்துதான் இலவச மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.கற்பிக்கும் கல்வியின் தரம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றால், எல்லாக் கல்வி நிறுவனங்களும் ஒரே பாட திட்டம் கொள்ள வேண்டும்.இன்னும் ஒருபடி மேலே போய் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதையும் அமல் படுத்த சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.

கேள்வி:- பின் பிரச்சனைதான் என்ன .?

பதில்:-  கல்வி வியாபார மாகிவிட்ட நிலையில் கல்வி வியாபாரிகள் இவற்றை நடைமுறைப் படுத்த எல்லா முட்டுக் கட்டைகளையும் போடுகிறார்கள்..வங்கிகளை நாட்டுடைமை ஆக்கியவர்கள் கல்வி கற்பிப்பதையும் அவர்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அரசே எல்லோருக்கும் இலவச கல்வி, சமகல்வி கட்டாய மதிய உணவு அளிக்க வேண்டும். பணம் கொடுத்துப் படிப்பவன், சலுகைகளில் படிப்பவன், சாதாரணமாகப் படிப்பவன், என்ற பாகு பாடுகள் ஒழிய வேண்டும். அப்போதுதான், வளரும் பிள்ளைகள் மனசில் சிந்தனை மாற்றங்கள் துவங்கும். எல்லோரும் சமம் என்ற எண்ணம் மேலோங்கும். குறைந்தது அடுத்த தலைமுறைகளிலாவது ஏற்ற தாழ்வுகள் இருக்காது.அடிப்படைக் காரணங்களைக் கூறி விட்டேன். ஓரளவுக்குத் தீர்வையும் கூறி இருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்........!  
---------------------------------------------------------------    .       

       






  







   
   .    .   .









.




      

17 கருத்துகள்:

  1. அடிப்படைக் காரணங்களைக் கூறி விட்டேன். ஓரளவுக்குத் தீர்வையும் கூறி இருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்........! /


    "சிந்தனைப் பரிணாமங்கள்..."
    சிறப்பான பயனுள்ள பகிர்வுகள் ஐயா.
    பாராட்டுக்கள்..
    .

    பதிலளிநீக்கு
  2. "சிந்தனைப் பரிணாமங்கள்..."
    சிறப்பான பயனுள்ள பகிர்வுகள் ஐயா.
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. இயல்பாகத் தோன்றிய பாகுபாடுகளே சாதியாக அழுத்தமாக மாறிவிட்டிருக்கையில் வியாபார நோக்கோடு புகுத்தப்பட்ட கல்வி வேறுபாடு அவ்வளவு சீக்கிரம் மாறுமா?  கவர்மென்ட் மட்டுமே பள்ளிகளை நடத்தவேண்டும் என்று சட்டம் வந்தால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  4. இந்த வயதில் இவ்வளவு சிந்தனைகளை உடம்பு தாங்குமா என்று சிந்தியுங்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. GMB – அவர்களுக்கு வணக்கம்! தங்களது சிந்தனைகள் வாசகர்களது சிந்தனையைத் தூண்டும் வண்ணம் உள்ளன. ” இத்தனை வருட வாழ்வில், வாழ்க்கை என்றால் என்ன என்று உணருகிறீர்கள்? இதுதான் என்று தெரிந்து இருந்தும் மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? “ என்ற என்னுடைய சந்தேகத்தை தங்கள் அனுபவம் கொண்டு விளக்கவும்.

    பதிலளிநீக்கு
  6. @இராஜராஜேஸ்வரி,
    @ லக்ஷ்மி,
    @ கீதா சந்தானம்,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ தி.தமிழ் இளங்கோ
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க
    நன்றி.
    கந்தசாமி ஐயா, வயது என்பது
    உடலுக்குத்தான். உள்ளம் இன்னும்
    எல்லாம் தாங்கும் சக்தியுடந்தான்
    இருக்கிறது.கீதா அவர்களே காரண
    காரியங்களை எழுதி தீர்வையும்
    கூறி இருக்கிறேன். வெறும் சட்டம்
    மட்டும் போதாது. அது குறையின்றி
    அமல் படுத்தப் பட வேண்டும்.
    இளங்கோவுக்கு, வாழ்க்கை என்ன
    என்று அவரவர் அனுபவம்தான் கூற
    வேண்டும்.I DO NOT KNOW OF ANY EMPIRICAL RULE. என் சிந்தனைக்கு
    எட்டியதை அநேக தலைப்புகளில்
    எழுதி இருக்கிறேன்.இன்னும் எழுதுவேன். உங்கள் மின் அஞ்சல்
    முகவரி கொடுத்தால் எனக்குத்
    தோன்றுவதை எழுதி அனுப்புகிறேன். தொடர்ந்து வாருங்கள் மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பணம் கொடுத்துப் படிப்பவன், சலுகைகளில் படிப்பவன், சாதாரணமாகப் படிப்பவன், என்ற பாகு பாடுகள் ஒழிய வேண்டும். அப்போதுதான், வளரும் பிள்ளைகள் மனசில் சிந்தனை மாற்றங்கள் துவங்கும். எல்லோரும் சமம் என்ற எண்ணம் மேலோங்கும். // அனைவரது சிந்தனைக்கும் பதில் அளிக்கக்கூடிய சிறப்பான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  8. @ சசிகலா,வரவுக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. சரியாகத் தொடங்கியிருக்கிறீர்கள். இன்னும் எழுதவேண்டிய தொடர்ச்சி இதன் பின்னே இருக்கின்றன. அவற்றையும் எழுதுங்கள் கேள்வி பதில்களாகவே. இது நல்ல உத்தி ஐயா.

    பதிலளிநீக்கு
  11. மிகச் சிறப்பான, சிந்தனையை தூண்டும் பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. @ ஹரணி,
    @ காளிதாஸ்
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க
    நன்றி.சில எண்ணங்கள் பலரைச்
    சென்றடைய வேண்டும் என்று
    எழுதுகிறேன். இந்தக் கட்டுரை
    பல நாள் சிந்தனையின் வெளிப்பாடு
    ஆனால் படித்துக் கருத்து கூறுவோர்
    எண்ணிக்கை ABYSMALLY POOR.இம்
    மாதிரி நேரங்களில் ஏன் எழுத
    வேண்டும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  13. பழனி கந்தசாமி கலக்குகிறார்!
    சோசலிச சிந்தனைகளை சற்று கவனத்துடனே அணுகுவது எனக்குப் பழகிவிட்டது. சோசலிச சிந்தனை என்பது ஜாடையாக தெரியும்படி எழுதியிருப்பது உங்கள் சாமர்த்தியம்.
    "புரியாத காரியங்களை நிகழ்த்துபவன்" என்ற சிந்தனை ஆதிமனிதனுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். ஆதிமனிதனுக்கு உணவு பாதுகாப்பு தவிர பிற சிந்தனைகளுக்கான மூளை வளர்ச்சி போதவில்லை என்கிறது ஏந்த்ரபாலஜி.

    பதிலளிநீக்கு
  14. @ வாருங்கள் அப்பாதுரை.சிந்தனைகளின் பரிணாமமாகவே இதை நான் அணுகுகிறேன். புரிந்து சிந்தித்திருக்காவிட்டாலும் உணவு பாது காப்பு தவிர மழை ,புயல் ,நிலநடுக்கம் போன்றவையும் அவனை மீறிய சக்தியால் நிகழ்வது என்று உணர்ந்திருக்கிறான். எனக்கு எந்த சோசலிச சிந்தனையும் கிடையாது. எந்த ஏந்த்ரபாலஜி யும் படித்ததில்லை. அனுபவத்தில் வாழ்வில் காணும் வேறுபாடுகள் என்னை அலைக்கழிக்கும். சிந்தித்ததின் விளைவே இப்பதிவு.வரவுக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி அப்பாதுரை சார்.

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. தவறுதலாக இடம் மாறி வந்த, மேலே உள்ள எனது இரண்டு கருத்துரைகளையும் இதனையும் நீக்கி விடவும்!

    பதிலளிநீக்கு