எண்ணங்கள் தொகுப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் தொகுப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

UTOPIAN DREAM...?


                   உத்தோப்பியக் கனவா,.?
                   -----------------------------------


திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியின் பிறப்பும் இறப்பும் என்ற பதிவினைப் படித்தேன். மிக அழகாகச் சில கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அதைப் படித்து முடித்த பிறகு என்னுள் இருப்பவர்களைப் பற்றிய சிந்தனை ஓடியது. வலைப்பூவில் எழுதுபவன் என்ற முறையில் நானும் ஒரு எழுத்தாளன்தானே.எழுத்தின்மூலம் எங்காவது ஒரு நல்ல , சிறிய மாற்றத்துக்கு விதை விதைத்தால் நல்லதுதானே. . ஒருமுறை திரு அப்பாதுரை,.எழுத்தின் வெளிப்பாடு பலசமயம் பலவித புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதால், படிப்பவரும் திறந்த மனத்தோடு அடிப்படை நம்பிக்கையோடு படித்தால், இணையத்தில் அருமையான கலந்தெழுத்தாடல்களில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்என்று எழுதியிருந்தார் நானும் என் கருத்துகளை எடுத்துச் சொல்ல என்றும் தயங்கியது இல்லை.

இருப்பவர் பற்றிய எண்ணங்களில் எப்பொழுதும் என்னை வருத்தும் மனிதரில் ஏற்ற தாழ்வின் காரண காரியங்கள் பற்றியே இப்போதும் எழுதுகிறேன் அனைவருக்கும் சம வாய்ப்பு இருந்தும் ஏற்ற தாழ்வுகள் நீடித்தால் யாரும் யாரையும் குறை கூற முடியாது. ஆனால் உண்மை அப்படி இல்லையே. போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் பந்தயத்தில் பங்கேற்கும் அனைவரும் , ஓட்டப் பந்தயமானால் ஒரே கோட்டிலிருந்தோ, , மல்யுத்தமாகவோ, குத்துச் சண்டையாகவோ இருந்தால் அதே எடை எதிராளியுடனோ மோதுவதுதானே நியாயம். ,? ஆனால் நம் சமூகத்தில் போட்டி மிகுந்த HANDICAP –உடன் அல்லவா நடக்கிறது.

எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானென்றாலும் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதா என்பது சந்தேகத்துக்குரியதே.பிறப்பொக்கும் என்று வாய்கிழியப் பேசுவோர் உண்மையில் அதில் நம்பிக்கை கொண்டுள்ளனரா, ? சிந்தித்துப் பார்க்க வேண்டும். SURVIVAL OF THE FITTEST- எனும் தேற்றம் மனிதனைப் பொறுத்தவரையில் ஒரு மாற்றுக் குறைந்தே உண்மையாகி இருக்கிறது. இல்லையென்றால் பலம் மிகுந்த யானையையே அதன் பலம் தெரியாதபடி அடக்கி இருக்க முடியுமா. ? ஆதியில் உடல் பலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவன் நாளாவட்டத்தில் புத்தியை உபயோகித்து செய்யும் தொழில் மூலம் பேதம் உண்டாக்கினான். கடவுள் என்றும் சாதி என்றும் மதம் என்றும் பாகுபாடுகள் ஏற்படுத்தி ஆண்டை என்றும் அடிமை என்றும் வகைப் படுத்தி அடுத்தவன் நிமிர முடியாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்தான். செய்யும் தொழிலால் அடையாளப் படுத்தப்பட்டு இன்னாருக்கு இன்ன வேலை என்று கூறி மற்றவன் வேறு எந்த தொழிலுக்கும் போகமுடியாதபடி அடிமைப் படுத்த மதம் என்றும் சாதி என்றும் , மனுதர்மம் என்றும் சாஸ்திரம் என்றும் கூறி சிந்திக்க வைக்கும் கல்விஅவர்களுக்கு தேவை இல்லை என்று நியாயப் படுத்தினான். ஆண்டாண்டுகாலம் அடிமையாய் இருந்து பழகி விட்ட மக்கள் மாக்களாகவே நடத்தப் பட்டனர். ஆங்கிலேயன் ஆட்சிக்கு வந்தபோது அவனது ஆட்சிக்குத் துணைபோனது அப்போது ஆண்டையாகஇருந்தவர்கள்தான். அப்போது படித்தவர்கள் அவனது ஆட்சிக்கு தேவைப் பட்டனர். நம்மிடம் இருந்த மனோபாவத்தை நன்கு பயன்படுத்தி அவனது ஆட்சி விருட்சமாக வளர நம்மிடையே இருந்த பிரிவுகளைப் பயன்படுத்திக் கொண்டான். கல்வி பெற்றவர்கள் சிந்திக்கத் துவங்கியபோது அவனது ஆட்சி அசையத் தொடங்கியது.


கல்வி என்பது சிந்தனையைத் தூண்டுவது. சுதந்திரம் பெற்றபோது, சமூகத்தின் அடியில் இருந்த மக்களுக்கு கல்வி தேவை என்று உணரப் பட்டு 25 ஆண்டுகாலத்தில் ஒதுக்கீடு முறையில் அவர்களை மேலே கொண்டு வரலாம் என்று எண்ணப் பட்டது. ஆனால் 25 ஆண்டுகாலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாழ்த்தப் பட்டவர்களும் பின் தங்கியவர்களும் கல்வியிலும் HANDICAP  பந்தயத்தில் வெற்றிபெறும் வாய்ப்பு இல்லாமலேயே இருந்தனர்.

இம்மாதிரியான ஒதுக்கீடுகள் தேவையா என்னும் கேள்வி எழுகிறது. படித்த குடும்பப் பின்னணியில் இருப்பவன் படித்து முன்னுக்கு வருவது இயல்பே. ஆனால் ஆண்டாண்டுகாலமாக கல்வியறிவே இல்லாத குடும்பப் பின்னணியில் இருப்பவன் பந்தயத்தில் ஓடுவதே சிரமம் . அப்படி இருப்பவருக்கு சலுகை அவசியம்தானே. ஆனால்... எத்தனை ஆண்டுகள்.?ச்லுகை பெற்று முன்னுக்கு வருபவன் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள இவன் ஆண்டை மனோபாவத்தை வளர்த்துக் கொள்கிறான். இப்போதெல்லாம் முன்பு உயர் சாதி என்று கருதப் பட்டவர்கள் முகவரி காணாமல் போய் அவர்களது இடத்தை சாதி இந்துக்கள் எடுத்துக் கொண்டு விட்டார்களோ என்றே தோன்றுகிறது. கிராமங்களில் மதில் சுவர்களும் தேனீர் குடிக்கத் தனி குப்பிகளும் யார் கடை பிடிக்கிறார்கள் ? சிந்திக்க வேண்டும். .

அரசு கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர முயல்வது தெரிகிறது. இலவச மதிய உணவு, சீருடை, பேரூந்துகளில் சலுகை, இலவச சைக்கிள், என்றெல்லாம் கொண்டு வந்தாலும் அளிக்கப் படும் கல்வி தரமாயில்லை என்று உணர்ந்து சமச்சீர் கல்வி என்று கொண்டுவந்தாலும் கல்வியின் தரம் போதுமானதாக இல்லை. இப்போது கல்வி ஒரு வியாபாரமாகி விட்டது. ஆங்கிலக்கல்வி, கான்வெண்ட் கல்வி என்று புற்றீசல்போலக் கல்விக் கடைகள் எங்கும் வியாபித்து இருக்கிறது. நான் கல்வி கற்றது தமிழ்வழியில்தான் ஏறத்தாழ எல்லா பள்ளிக்கூடங்களிலும் தமிழ் வழியில்தான் கற்பித்தனர். கல்வி வியாபாரமாகக் கருதப் படவில்லை. இந்த மாற்றத்துக்கு ஈடு கொடுக்கவே ஏழைகளுக்கு 25 % இட ஒதுக்கீடு எல்லாப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும் என்று சட்டம் வந்திருக்கிறது. அதை அமல் படுத்துவதில் ஏகப்பட்ட தடங்கல்கள்.

இப்போதெல்லாம் நாம் எந்த விஷயத்தையும் நடுத்தர வர்க்க மனப் பான்மையுடனே அணுகுகிறோம் கல்வியில் மூன்று வயதுக் குழைந்தையைப் பள்ளியில் சேர்க்க அதிகாலை நான்கு மணிக்கே வரிசையில் நின்று ஆண்டொன்றுக்கு ரூ.50,000/ தருவதை பெருமையாய் நினைக்கிறோம். கேட்டால் தரமான கல்விக்கு அவ்வளவு செலவு செய்யத்தான் வேண்டி இருக்கிறது என்று மூக்கைச் சிந்துகிறோம். அதிகப் பணம் கொடுத்துப் பெறுவது எல்லாம் தரமானது என்னும் தவறான எண்ணம் நம்மை ஆட்கொண்டு விட்டது. இந்த மனோபாவம் சிறிது சிறிதாக சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பரவி வருவது வருந்தத்தக்க விஷயம் நகர வசதிகள் கொண்ட கிராமப்புறங்கள் எதிர்மறை விளைவுகளைக் கொண்டு வருகிறதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது.

மனிதரில் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் மறைய வேண்டுமென்றால்  நூறு சதவீதக் கல்வி அவசியம். அதுவும் எல்லோருக்கும் சம மாயிருக்க வேண்டும். இதை அமல் படுத்த வேண்டுமானால் கல்வி அரசுடமை ஆக்கப் பட வேண்டும். கல்வி வியாபாரம் முற்றிலும் ஒழிக்கப் பட வேண்டும் இருப்பவன் இல்லாதவன் என்ற பாகுபாடு இல்லாமல் கல்வி இலவசமாக அனைவருக்கும் வழங்கப் பட வேண்டும். சமச்சீர் கல்வி சமச்சீர் உடை, சமச்சீர் உணவு என்று எல்லோருக்கும் கட்டாயமாக்கப் பட வேண்டும்.அந்த விதத்தில் பிஞ்சு உள்ளங்களில் உயர்ந்தவன் ,தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் என்ற என்னாண்ங்கள் எழாமல் அனைவரும் சமம் என்னும் எண்ணம் வளரும். வாய்ப்புகள் சமமாயிருக்கும்போது வாழ்க்கையில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கும்.   

 தேவைப் பட்டால் தனி மனித உரிமை இவற்றில் மறுக்கப் பட வேண்டும் இதை நிறைவேற்ற ஒரு BENEVOLENT  சர்வாதிகார ஆட்சி வந்தாலும் நல்லதே. இது நடந்தால் நமது வருங்காலத் தலை முறையில் ஏற்ற தாழ்வு இருக்காமல் இருக்கலாம் என்று நம்புகிறேன். ஆனால் மனசின் இன்னொரு மூலையில் நான் நினைப்பது ஒரு UTOPIAN  தேசத்தில்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.      
           
. 



   



  

                   

செவ்வாய், 2 அக்டோபர், 2012

நரைத்திடாக் காதல்..........


                                     நரைத்திடாக் காதல்......
                                     ----------------------------


அன்புள்ள காதலிக்கு, இந்தக் கடிதம் படிக்கத் துவங்கும் போது உன் முகம் சிவப்பது உணருகிறேன். இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று  வெட்கத்தால் ஏற்படுவது அடுத்தது கோபத்தால் ஏற்படுவது. வெட்கம் புரிந்து கொள்ளக் கூடியது. கோபம்....? பொத்தாம் பொதுவாகக் காதலிக்கு என்று எழுதினால் கோபம் வராதா என்ன...?இந்தக் கடிதம் , அன்பே, எல்லாக் காதலிகளுக்கும் பொருந்தும். அதனால்தானே யாவரும் படிக்கும்படியாக எழுதுகிறேன்.

அநேகமாக காதலிப்பவர்கள் என்ன பேசுகிறார்கள்.? எல்லாம் பேசுவார்கள். ஆனால் எதுவுமே பேசி இருக்க மாட்டார்கள். இதுதானே நடைமுறை. ?. ஒருவரின் ரூப லாவண்யத்திலோ , கம்பீரத்திலோ மனதைப் பறி கொடுக்கிறார்கள், ஏதோ சொல்லத் தெரியாத கவர்ச்சியே அடுத்தவரிடம் மனம் ஈர்க்கச் செய்கிறது. அழகு என்பது அதில் ஒன்றுதான். இல்லையென்றால் அழகில்லாதவர் காதல் வசப் படுவதில்லையா ? இந்தமாதிரியான எண்ணங்களே, கண்ணே , என்னை “ இன்னார்க்கு இன்னார் “ என்று ஒரு பதிவு எழுத வைத்தது. அறிந்துகொள்ள உந்தப் பட்டால் படித்துப் பார்.

ஒருவர் கண்ணுக்குத் தெரியும் ஒருவித அழகு, மற்றவர் கண்ணுக்குப் புலப் படாமல் போகலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் “  BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER “  என்பார்கள். அது போகட்டும். எனக்கு உன் மீது காதல் ஏற்பட்டது ஒரு அந்திமாலைப் பொழுது. . செக்கச் சிவந்த ஆதவனின் கிரணங்கள் மேற்கே மறையும் தருவாயில் ,  உன் கன்னச் சிவப்பு முன் நிற்க முடியாமல் , கோபத்தில் அவன் வானத்தையே இருளச் செய்ய முயன்று கொண்டிருந்தானே, அப்போதுதான். கூடவே வானில் வெள்ளி நிலவு தலை காட்டி உன் அழகை மேலும் பிரகாசிக்கச் செய்தது கண்டேன். பின்னொரு தினம் அந்த நாளை நினைத்து உன்னிடம் ஒரு கவிஞன் எழுதியதை நினைவூட்டினேன். ஞாபகம் இருக்கிறதா. ?நிலவைப் பிடித்து , அதன் கறைகள் துடைத்து, ,குறு முறுவல் பதித்த முகம் “ இப்பொழுது அதை எண்ணிப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து குறு முறுவல் பதித்தால் எப்படி இருக்கும். ? கணினியில் உபயோகிக்கப் படும்  SMILEY  போல் இருக்கும். ..!ஒரு விஷயம் பிடித்து விட்டால் என்ன குறை இருந்தாலும் அடிபட்டு விடும். அன்பே.... இது முக்கியம்...! இந்தமாதிரியான விருப்பும் வெறுப்பும் புற அழகில் கட்டுண்டிருக்கும்போதோ, அதிலிருந்து மீண்ட போதோ மட்டும்தான் தலை தூக்கும். உண்மையான காதல் முதலில் புற அழகால் தோன்றினாலும்  நாள்பட நாள்பட ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்போது வலுவாகும்.
கண்டவுடன் காதல் என்பது பொதுவாக ஆண்களுக்குத் தான் ஏற்படுகிறது. பெண்கள் காதல் வசப் பட்டு இருக்கிறார்களா என்பதை அறிவதே பெரும்பாடு அக அழகைக் காண அவர்கள் அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள் போலும். நான் முன்பே சொன்னதுபோல் காதலர்கள் சந்தித்துப் பேசும்போது, அவர்கள் காதலை உறுதிப் படுத்திக் கொள்வதாக நினைத்து அது குறித்து மட்டும் பேசுகிறார்கள். காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை திருமணத்துக்குப்பின்னும் தொடரச் செய்வது மிகவும் அவசியம். காதலிக்கும்போது குறைகள் தெரிவதில்லை. திருமணத்துக்குப் பின் அவைதான் பூதாகாரமாகத் தெரியும். A PERFECT PERSONALITY  என்று யாரும் கிடையாது. குறைகளும் நிறைகளும் ஊடுருவி இருப்பதே மனித இயல்பு.

காதலிக்கும்போது எல்லாம் இன்ப மயமாக இருக்கும். காதலிப்பவரால் தேடப் பட்டும் விரும்பப் பட்டும் இருக்கும் நிலை மகிழ்ச்சிதருவது நிச்சயம் கிடைத்த பிறகு சில எதிர்பார்ப்புகள் நிறை வேறாதபோது வருத்தம் தோன்றுவதும் நிதர்சனம். இவ்வளவையும் நான் உன்னிடம் நேரில் சொல்ல முடியாதா என்ன. ? முடியும். ஆனால் மூடியாது. .! எங்கே என்னைப் பற்றிய உன் எண்ணங்கள் மாறிவிடுமோ என்னும் பயம் என் வாயை அடைத்து விடும். உனக்குள் ஆயிரம் கனவுகள் இருக்கும். கனவுகளும் நிதர்சனங்களும் ஒரு கோட்டில் சந்திக்கும்போது திருப்தியும் மன நிறைவும் ஏற்படுமானால் காதல் வெற்றி அடைந்து விட்டதாகக் கொள்ளலாம்.


பொதுவாகக் காதலிக்கும்போது ஒன்றை மறந்து விடுகிறோம். காதலிக்கும் நபர் தனி மனிதர் என்று தோன்றினாலும் அவருக்கும் உறவு, சுற்றம்  எல்லோரும் இருக்கிறார்கள்.என்பதை மறக்கக் கூடாது. பதின்பிராயங்கள் வரையிலும், சில நேரங்களில் அதற்கு மேலும் வளர்ந்த சூழலை  எல்லாம் மறந்து விட்டு கணவன் , மனைவி என்று மட்டும் நினைப்பது சரியாகாது. நம் சமுதாயத்தில் பெண்களை நாற்றுக்கு ஒப்பிடுகிறார்கள். அவள் வேறு ஒரு நிலத்தில் பயன் தர வேண்டியவள் என்று எண்ணுகிறார்கள்.நாற்று நடும்போது, நாற்று மண்ணும் சேர்ந்திருந்தால்தன் பயிரின் பலன் சிறப்பாய் இருக்கும் . ஆகவே பெண்ணின் பிறந்த வீட்டு நல்லெண்ணங்களுடன் அவள் வாழ்க்கை துவங்க வேண்டும். ஆனால் மாறிவரும் சூழ்நிலையில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ வேண்டும். அதே சமயம் உறவுகளுடனான பந்தங்கள்  பலமாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அன்பே, திருமண பந்தத்தில் சேரவிரும்பும் நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. இந்த பந்தத்தினால் தழைக்கப் போகும் வம்ச வுருட்ச வேரூன்றி இருக்க  கண்வன் மனைவி பங்களிப்பு மகத்தானது. இது செய் ,அது செய் என்று கூறி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, நாம் வாழ்ந்து காட்டும் முறையைப் பின் பற்றும் பிள்ளைகளே அதிகம். ஆகவே அவர்களது வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக நாம் இருப்பது அவசியம்.

என்னடா இது  காதல் கடிதம் எதிர் நோக்கி இருப்பவளுக்கு ,, வாழ்வு முறை பற்றிய பாடமாக இருக்கிறதே என்னும் உன் எண்ணம் புரிகிறது. செல்லமே, சிந்தித்துப் பார். நாம் எத்தனை முறை உரையாடி இருப்போம். SWEET NOTHINGS  தவிர ஏதாவது பேசியிருப்போமா. என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்ள என் சிந்தனைகளின் போக்கும் உனக்குத் தெரிய வேண்டும் அல்லவா. நான் எண்ணுவதைக் கூறிவிட்டேன். உன் சிந்தனைகள் ஒத்து இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. மாறுபட்ட கருத்தோ, வித்துயாசமான எண்ணமோ இருந்தால் நீயும் எழுது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையே சிறக்கும்



கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் “ நான் வேண்டுவதெல்லாம்  நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான் “
அப்படி இருக்க இந்த மடலை இன்னுமொரு முறை படித்துப் பார். . வேண்டியது கிடைக்க நினைத்து எழுதப் பட்டதே இக்கடிதம். இது நமக்கு மட்டும் பொருந்துவதல்ல. காதலிப்பவர் அனைவரும் உணர வேண்டியது.
எங்கெங்கு நோக்கினும் சக்தியடா... என்றான் முண்டாசுக் கவிஞன். ஆனால் எனக்கோ எங்கெங்கு நோக்கினும் உன் உருவே என் முன் நிற்கிறது. என்றும் உன் நினைவுடன்........ உன் அன்பன்.    
  .

    







  



 . 

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

பதிவுலகில் இரண்டு வருடங்கள்.


                            பதிவுலகில் இரண்டு வருடங்கள்
                            ---------------------------------------------
                                  ( திரும்பிப் பார்க்கிறேன். )

   2010-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 28-ம் நாள் என் பேரன் எனக்கு இந்த வலைப் பூவை அமைத்துக் கொடுத்தான். ஆயிற்று இரண்டு வருடங்கள்.

இந்த இரண்டு  ஆண்டு காலத்தில் சுமார் 250 இடுகைகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன். கொஞ்சம் சுய புராணம் தேவைப் படுகிறது. பதிவுலகம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நான் இப்போது ஓரளவுக்குப் பலராலும் அறிந்தவனாக இருக்கிறேன். ஆரம்பத்தில் ,என் இளவயதில் என் ஆத்ம திருப்திக்காக எழுதி வைத்திருந்த சில கவிதைகள், கட்டுரைகள், கதைகள் போன்றவற்றைப் பதிவிட்டேன். எழுதுவதில் ஒரு வெரைட்டி இருக்க வேண்டும் என்பதிலும், எழுதுவது என் உள்ளக்கிடக்கைகளைக் கடத்துவதற்குப் பயன்பட வேண்டும் என்பதிலும், குறியாய் இருந்தேன். பல பதிவுகள் என் கற்பனை என்றாலும்சில பதிவுகள் நான் படித்து மகிழ்ந்ததை தமிழாக்கம் செய்ததாலும் உருக் கொண்டதாகும். சில கதைகளைக் கவிதை வடிவில் கொடுத்திருக்கிறேன். பலருக்கும் தெரிந்த அவதாரக் கதைகளை எழுதி இருக்கிறேன். ‘ சாதாரணன் ராமாயணம் ‘என்ற தலைப்பில் ராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன். கிருஷ்ணனின் கதையைக் ’கிருஷ்ணாயணம் ‘என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். முருகனிடம் உரிமை எடுத்துக் கொண்டு எனக்கு அவனை ஏன் பிடிக்கும் என்றும், எனக்கென்ன செய்தாய் என்று கோபித்துக் கொண்டும் எழுதி இருக்கிறேன். என் மனைவியைப் பற்றி மூன்று நான்கு பதிவுகள் எழுதி இருக்கிறேன். அதில் ஒன்று ‘பாவைக்கு ஒரு பாமாலை’என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் வகையில் அந்தாதியாக எழுதி இருக்கிறேன்.

பல பதிவுகளில் என் ஆதங்கங்கள் முன் நிற்கும். நம்முள் காணும் ஏற்ற தாழ்வுகள் என்னுள் ஒரு அலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அதற்குக் காரணங்கள் என்றும் தீர்வுகள் என்னவாக இருக்கலாம் என்றும் எழுதி வருகிறேன்.

வாழ்க்கையில் பல உணர்வுகளைச் சந்தித்த வகையில் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். என் அனுபவங்கள் பலவற்றைத் தொகுத்திருக்கிறேன். அந்த நாளில் எழுதிய நாவல் ஒன்றைத் தொடராக வெளியிட்டிருக்கிறேன்

இந்த நேரத்தில் ஒன்றைக் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும். ஆரம்ப காலத்தில் என் பதிவுகள் சீந்துவாரின்றிக் கிடந்தது. அது என் எழுத்தின் குறையல்ல. கணினி அறிவு அறவே இல்லாதவன் நான். எனக்கு எழுத மட்டுமே தெரியும்.(இப்பொழுது மட்டும் என்ன வாழ்ந்ததாம்.?)தமிழ் மணத்தில் இணைக்க நான் பட்ட பாடு!.தமிழ் தெரியாதவர்கள் உதவியோடு எப்படியோ இணைத்து விட்டேன். சித்ரன், டாக்டர் கந்தசாமி,சக்திபிரபா,காளிதாஸ்போன்றோர் மட்டுமே என் வாசகர்களாய் இருந்தனர். நான் பல தளங்களுக்குச் சென்று பிறருடைய வாசகனாகி பின்னூட்டம் இடத் தொடங்கியபோது,மேலும் பலர் என் பதிவுகளைப் படிக்கத் தொடங்கினர். நான் அப்போது படித்த சில தளங்களில் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கொந்தளிக்கக் கண்டேன். வெறுப்பைக் காட்டாமல் சொல்ல வருவதை மனம் நோகாமல் சொல்லலாமே என்று என் பதிவில் எழுதி இருக்கிறேன். என்னைக் குறைந்த கால அவகாசத்தில்பிரபல பதிவராக்க முடியும் என்ற கருத்துக்கு எதிராக என் இடுகைகளின் பலத்தால் பலரும் வாசகர்களாவார்கள் என்று நம்பினேன்.

பலரும் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் கருத்திடுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதற்கு முக்கியமாக நான் பலரது பதிவுகளுக்குச் சென்று கருத்திடாததும் காரணமாயிருக்கலாம். கருத்திடுவது பற்றி என் எண்ணம் வேறு. பலரும் கருத்துகளைப் பார்வையிட்ட பிறகே பிரசுரிக்க அனுமதிக்கிறார்கள். ஒரு சமயம் குறை சொல்லிக் கருத்துக்கள் வந்தால் ஒதுக்கிவிட வாய்ப்பிருப்பதாலோ என்னவோ. இங்கொன்றும் அங்கொன்றுமாக எங்கோ சிலரது பதிவுகளுக்குப் பின்னூட்டமாக மாறுபட்ட கருத்துக்கள் வருகின்றன. பொதுவாக இந்திரன் சந்திரன் என்றும், உங்களைப்போல் எழுதுபவர் இல்லையென்றும், எப்படி உங்களால் மட்டும் இப்படி நன்றாக எழுத முடிகிறது என்பன போன்ற கருத்துக்கள் அதிகம். என் பதிவுகளின் கருத்துக்களோடு எல்லோரும் ஒத்துப் போக வேண்டும் என்று நான் எண்ணுவதில்லை. நன்றாக இருக்கிறது ,நன்றாக இல்லைஎன்று மட்டும் சொல்லாமல் அபிப்பிராயங்களையும் தாராளமாகக் கூறலாம் என்று பல முறை எழுதி இருக்கிறேன். நாம் எழுதுவது வாசிப்பவருக்குப் புரிய வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்கள் ABSTRACT -ஆக இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். எழுதுபவர் நினைக்காத கோணத்தில் பொருள் கொண்டு பின்னூட்டமிடுவதையும் காண்கிறேன்.

கவிதை என்னும் பெயரில் பல பதிவுகள் நான் எழுதி இருந்தாலும் முறையாக மரபுக் கவிதை பற்றி ஏதும் தெரியாதவனாகவே இருக்கிறேன். வெண்பா இலக்கணம் கற்று எழுத முயற்சித்தேன். அது சரியாக வந்ததா என்ற என் கேள்விக்குப் பதிலே கிடைக்க வில்லை. அந்த வகையில் திருவெழுக்கூற்றிருக்கை என்னும் ரத பந்தனக் கவிதை பற்றி விளக்கம் கேட்டு எழுதி இருந்தேன், முற்றிலும் புரியும்படியான விடை கிடைக்க வில்லை. பல வலைத்தளங்களுக்குச் சென்று அண்மையில் ஒரு பதிவு எழுதினேன். மனதுக்கு நிறைவாக இருந்தது. எங்கிருந்து கற்றுக் கொண்டேனோ அங்கிருந்தே பின்னூட்டமும் கிடைத்தது. நம்மில் பலரும் தமிழ் கற்றவர்களே. இருந்தாலும் நம் தமிழ் ஞானம் எவ்வளவு என்று நமக்கே தெரிவதில்லை. அநேக பாடல்களுக்குப் பொருளே தெரிவதில்லை. நான் என்னையே அளவுகோலாக எடுத்துக் கொண்டு தெரிவிக்கும் இக்கருத்து மற்றவருக்குப் பொருந்தவில்லை என்றால் மன்னிக்கவும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக எழுதுகிறார்கள். வெறுமே பொழுது போக்க எழுதுபவர் குறைவாகவே இருப்பர். கணினி நமக்குக் கிடைத்த வரம். இருந்த இடத்தில் இருந்தே நம்மை தெரியப் படுத்திக் கொள்ள உதவும் இந்த அற்புத வாய்ப்பை வீணாக்காமல் பல விஷயங்களில் விவாதிக்க, தெளிவாக்க, ஒத்தக் கருத்து உருவாக்க எனப் பயன் படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். ஆனால் நாம் சிறந்தது என்று எழுதுவது அதே கருத்தில் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. ஆக எழுதுவது ஏன் யாருக்காக என்பதில் தெளிவு இருந்தால்தான் பதிவுலகில் தொடர்ந்து எழுதத் தோன்றும். இந்தக் கருத்து என் பதிவுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை வைத்து எழுந்தது. நான் சிறப்பாக அமைந்தது எனக் கருதும் பதிவுகளுக்கு வரும் வாசக்ர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் அள்வைவிடக் குறைவாய் இருப்பதும், சுமார் எனக் கருதும் பதிவுகள் அதிக வாசகர்களை ஈர்ப்பதும் என்னால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை..

எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் சீரியஸாக அணுகும் என் குணம் என்னை இந்த மாதிரி எல்லாம் சிந்திக்கச் செய்து எழுத வைக்கிறதோ. ?         .  
                     

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

பணம் பொருட்டே...MONEY MATTERS


                                பணம் பொருட்டே....MONEY MATTERS.
                                --------------------------------------------------


அஞ்சு ரூபா நோட்டு கொஞ்சம் முன்னே மாத்தி, மிச்சமில்லெ, காசு மிச்சமில்லெ” “கத்திரிக்கா விலெ கூடக் கட்டுப்படியாகலே, காலங் கெட்டுப் போச்சு “இந்த பாடல் வரிகள் இப்போது கேட்கும்போது நகைச்சுவை போல் தோன்றினாலும் காலம் மாறியும் காசின் மதிப்பு குறைவது குறையவில்லை. என்பது நன்றாக விளங்குகிறது. வயதான காலத்தில் மனசுக்குத் தெம்பு கொடுக்க கையில் காசு அவசியம். ஆனால் பெரும்பாலான வயது முதிர்ந்தவர்கள் அது இல்லாமல் அவதிக்கு உள்ளாகிறார்கள். இள வயதிலேயே அரை வயிற்றுக்கு அவதிப் படுபவர் எப்படி வயதான காலத்தைப் பற்றி சிந்திக்க முடியும். வயதான காலத்துக்கு சேமிக்க வேண்டும் என்னும் ஆலோசனை சரியே. சேமிக்க முடிபவர்கள் எப்படி சில விஷய ஞானம் இல்லாமல் கோட்டை விடுகிறார்கள் என்பதையாவது சொல்லலாமே என்னும் நோக்கம்தான் இப்பதிவு.

அன்றைக்கு நூறு ரூபாய் சம்பாதித்தால் சுமாராக இருவர் அடங்கிய குடும்பம் ஒப்பேற்றிவிடும். ஆனால் இன்றோ.... எண்ணிப் பார்க்க முடியுமா.?அன்றைய ரூபாயால் வாங்க முடிந்த பொருள்கள் இன்றைக்கு முடியுமா. அன்றைக்கு சம்பாதித்ததைப் போல் பல மடங்கு இன்று சம்பாதிக்கிறார்கள். இருந்தும் ஏன் இந்த நிலை. இங்குதான் நமக்குப் பண வீக்கம் பற்றிய தெளிவு அவசியமாகிறது.


கிடைக்கும் சேவைக்கும், வாங்கும் பொருளின் விலைக்கும் கொடுக்க வேண்டிய அதிக பணமே பண வீக்கத்தின் காரணத்தால் விளைவது என்று கொள்ளலாமா.?பணவீக்கம்  விலை ஏற்றத்தையோ பணத்தின் மதிப்புக் குறைவையோ குறிக்கும் குறியீடு  வாரம் ,மாதம் வருடம் என்று ஒப்பிடப்பட்டுக் கணக்கிடப் படுகிறது. இதை கணக்கிட குறிப்பிட்ட தேவையான பொருட்களின் விலை ஏற்றமோ குறைவோ குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்கப் பட்டு ஒப்பிடப்பட்டு பண வீக்கம் கணக்கிடப் படுகிறது.

பணவீக்கத்தின் மாற்றத்துக்கு ஏற்ப ரூபாயின் (கரன்சி )மதிப்பும் மாறும். பணவீக்கம் 10% என்றால், ஒரு ரூபாய்க்கு வாங்கிய பொருளுக்கு ஒரு ரூபாய் பத்து காசு கொடுக்க வேண்டி இருக்கும். பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது பணவீக்கம் இன்றியமையாதது என்று கருதப் படுகிறது.

பணவீக்கத்தின் காரணம் இரண்டு வகையாக கருதப் அடுகிறது. 1) DEMAND PULL INFLATION. 2.) COST PUSH INFLATION  அருகிய பொருளை அதிகம் பேர் துரத்துவதால் ஏற்படுவது முந்தையது.( Demand is more than the supply. ) உற்பத்தி செலவு அதிகரிப்பால் ஏற்படுவது பிந்தையது.


DEFLATION, STAGFLATION, HYPER INFLATION   என்றும் பொருளாதார நிலைகள் இருக்கும். பணவீக்கம் குறைவது, எந்த மாற்றமும் இல்லாது இருப்பது, கட்டுப்பாடு இல்லாமல் பணவீக்கம் ஏறுவது போன்றவையும் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல.

பணவீக்கம் பலரை பல விதமாக பாதிக்கிறது. அன்றாட செலவுகளுக்கு கஷ்டப் படும் ஏழைகள் அத்தியாவசிய செலவுகளுக்குக் கடன் வாங்க வேண்டி இருக்கும் சில்லறை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், அதிக விலையை ஈடுகட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை சமாளிக்க அதிக சம்பளம் , அதை ஈடுகட்ட வங்கிக் கடன் அதிகமாகத் தேவைப் பட வட்டிவிகிதம் அதிகம் என்று சுழற்சியாக எல்லோரையும் பாதிக்கிறது பண வீக்கம்.

இந்த நிலையில் ஓய்வு காலத்துக்காக சேமித்தல் அவசியம் நான் ஓய்வு பெற விரும்பி வேலையை விட்டபோது யூனிட் ட்ரஸ்டில் 15% வட்டி சேமிப்புக்குக் கிடைத்தது. இப்போது ஒரு இலக்க வட்டி வீதமே கிடைக்கிறது. மாதம் 5000 ரூபாய் இருந்தால் மிகவும் சௌகரியமாக இருக்கலாம் என்று கணக்குப் போட்ட என்னால் இப்போது மிகவும் அவசியமான செலவு கூட சிந்திக்க வைக்கிறது. வரவு கூடாமல் செலவு அதிகமாகும் நிலையை ஓய்வு காலத்தில் அனுபவிக்கிறேன். இது அநேகமாக எல்லா முதியவர்களுக்கும் பொருந்தும். டாக்டர் கந்தசாமி ஐயா அவர்கள், சேமிப்பின் அவசியத்தை இரண்டு மூன்று பதிவுகளில் எழுதி இருக்கிறார். நான் ஆரம்பத்திலேயே சொன்னபடி கைக்கும் வாய்க்கும் ஈடுகட்டவே கஷ்டப் படுபவர் சேமிப்பு பற்றி எப்படி யோசிப்பது. ஏதாவது செய்து அதிக வருவாய் ஈட்டத்தான் வேண்டும் அனாவசிய செலவினங்கள் குறைக்கப் பட வேண்டும் இதிலும் அவசியம் எது அனாவசியம் எது என்பதிலும் அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம் . இருந்தாலும் தவிர்க்கப் படக் கூடியதற்கு செய்யும் செலவு அனாவசியம். வெளியே உண்பது, நடந்து போகக் கூடிய தூரத்துக்கு ஆட்டோ என்றும் டாக்சி என்றும் செலவு செய்வது போன்றவை தவிர்க்கக் கூடியதே. இங்கு காந்திஜியின் ஒரு வாக்கு நினைவுக்கு வருகிறது. தேவைக்கு மீறி செலவு செய்பவன் எங்கோ ஓர் ஏழை அல்லது திருடனை உருவாக்குகிறான்.

சேமிப்பது என்று தீர்மானித்து விட்டால் , சேமிக்க வேண்டிய தொகையும் கணக்கில் கொள்ள வேண்டும். இன்றைக்கு ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும் பொருளுக்கு ஒருவர் ஓய்வு பெரும்போது என்ன மதிப்பு இருக்கும் என்று ஓரளவாவது கணக்கில் கொள்ள வேண்டும் பணவீக்கம் இப்போதெல்லாம் இரண்டு இலக்கத்தில் இருக்கிறது. ஏதோ சேமிக்கிறேன் என்று இருந்தால் போதாது. எல்லாக் காலத்தையும்  சமாளிக்கும் வகையில் இருத்தல் அவசியம். இதெல்லாம் நல்ல ஆரோக்கியம் இருக்கும் வரை தான் செலாவணியாகும். நோய்நொடி என்று வந்து விட்டால் எல்லாக் கணக்கும் பணால்

எனக்கு வெகு நாட்களாக ஒரு ஆலோசனை. யார் மணி கட்டுவது.? வங்கிகளில் காசோலை வசதி இருக்க  குறைந்த அளவு  இவ்வளவு பணம் இருப்பில் இருக்க வேண்டும் என்பது விதி. அந்தப் பணத்துக்கும் சேமிப்பு வட்டியாக 4- லிருந்து 5 சதவீதமே கொடுக்கிறார்கள். அந்தப் பணத்துக்கு ஏன் அதிக வட்டி FIXED DEPOSIT –க்கு             
தருவதுபோல் கொடுக்கக் கூடாது. ?               










ஞாயிறு, 3 ஜூன், 2012

வாழ்வியலில் சினிமாப் பாடல்கள்

                                     வாழ்வியலில் சினிமாப் பாடல்கள்.
                                    -------------------------------------------------


ஆண்:- ப்ரேமை எனதே பாரின் மீதே பாக்யம் வேறேதே
பெண்:-ப்ரேமா ரூபனே என்றனைப் புகழ்ந்தால் பதியே நானுந்தன் இன்பரூபமே
ஆண்:- சந்திர பிம்பமே. ! சரசாங்கியே நீ.! சாரச நயனீ எனதாருயிரே
பெண்.: ப்ராண நாயகா நீயன்றோ. !
ஆண்:- மங்கை நீயென் மானச தேவி.!
பெண்:-மங்களாகர  மன்மத ரூபா.?

வாழ்வியலில் சினிமாப் பாடல்கள் என்று எழுதத் துவங்கிய எனக்கு அந்த காலத்து டூயட் பாட்டு மனதில் ஓடியது. வரிகள் முன்னே பின்னே இருக்கலாம்.
ஆனால் சங்கதி அது அல்ல. வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் சினிமாப் பாடல்களில் பதிவாகி இருக்கிறது என்பதுதான். காதல், கலியாணம், மகப் பேறு என்று எழுதி வாழ்வின் எல்லா சுவைகளும் பாடல்களிலேயே தெரிய வரும்.

ஆண்:-வாடிக்கை மறந்ததும் ஏனோ
      என்னை வாட்டிடும் ஆசை தானோ
      பல கோடி மலர் அழகை மூடி வைத்து
      மனதைக் கொள்ளை அடிப்பதும் ஏனோ
பெண்:- வாடிக்கை மறந்திடுவேனோ
        எனை வாட்டிடும் கேள்விகள் ஏனோ
        இளமங்கை எந்தன் மனதில் பொங்கி
        வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ.

ஊடல் கலந்த ஆசை பறிமாற்றங்கள் எழுத்தில் வந்துஇசையில் பரிமளிப்பது மேலே காணலாம். .

கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ
காதலிசை பாடியதும் நீயேயன்றோபெண்மனதில் ஏற்றி வைத்த தீபமல்லவோ
ஒளி பரவும் முன்னே அணைத்தல் பாபமல்லவா....

வேறூன்றி வளரும் என்று விதை விதைத்தேன்
இரு விழியாலே காத்திருந்து நீருமிறைத்தேன்
பூமுடிக்கும் ஆசைகொண்டு சோலை அடைந்தேன்
அங்கு புயல் வீசி காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன்


காதல் தோல்வி எதிர்கொள்வதை மிக அழகாகப் பதிவு செய்யும் பாட்டு. 

காதல் வெற்றி கல்யாணத்தில் முடிய வேண்டியதுதானே.ஒரு கல்யாணம் பாட்டில் விமரிசையாக நடை பெறுவதை இந்தப் பாட்டை விட அழகாக எழுத முடியுமா என்ன,? 

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்

தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்.

 
மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...
குலம் வாழ்க...

கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட


பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி, கண்ணில் நீரெழுதி.

திருமணம் நடந்துவிட்டால் போதுமா.? மணமான பெண்ணை எப்படி வரவேற்கிறார்கள் பார்ப்போம்.

மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா.

பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில்
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன்மணமும் பொருள்மண்மும் உங்கள் வாசலில்
புதுப் பூமணமும் பா மணமும் எங்கள் வாசலில்

கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலை வணங்கும் கோவில் எங்கள் வாசல்
செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல்
செல்வமுடன் புகழ் மணமும் சேர வந்த வாசல்

தங்க நகை வைரநகை நிறைந்திருக்காது இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி இருக்காது.

வரவேற்புக்கு ஏதும் குறைவில்லை. இருந்தாலும் வந்த இடத்தையும் இருந்த இடத்தையும் ஒப்பு நோக்குவது குறித்துக் கொள்ள வேண்டும். .

திருமணம் முடிந்து மணமகள் வந்தாயிற்று.இனி என்ன.? முதலிரவுதானே.? 

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம்கொண்டு சேரும் நன் நேரம்

சப்ர மஞ்சத்தில் ஆட சொப்ன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்கள் பாட சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
சயன நேரம் மன்மத யாகம்
புலரி வரையில் நம்முடே யோகம்.
ஆஆ  அ அ ஆ ஆ..........

இருவரும் ஒருவராக இணைய மூன்றாமவர் வருவதுதானே நியதி. வரவேற்பு எப்படி என்று பார்ப்போமா. ?

 
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான்
இச் இச் இச் இச்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்

காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்

கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
இருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ
உன்னை ரகசியமாய் தொடும்போது குரல் கொடுத்து விழிப்பானோ
(
காது கொடுத்து கேட்டேன் )

ஓராம் மாசம் உடல் அது தளரும்
ஈராம் மாசம் இடை அது மெலியும்
மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்
நாலாம் மாசம் நடந்தா இறைக்கும்
மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்
சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து
சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து
ஆரீ ரா ரோ ...ஆரீ ரா ரோ .. ...
(
காது கொடுத்து கேட்டேன்
  
விருப்பப்படி குழந்தை பிறந்து விட்டால் தாலாட்டும் பாட்டும் பிரமாதம் ..
வளர வேண்டிய சூழல் எப்படியெல்லாம் பாட்டில் வருகிறது .பார்ப்போம். .

 இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட

( என்றெல்லாம் தாலாட்டுப் பாடி,முத்தாய்ப்பாக அறிவுரையுடன் முடிக்கும் பாடல்)
ந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே

தூக்க மருந்தினை போன்றவரை பெற்றவர்
போற்றும் புகழுரைகள்

நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்

ஆறு கரை அடங்கி நடந்ததில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்ததில்
நாடும் நலம் பெறலாம்

பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை
(
பாதை..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(
இந்த..)

வித்தியாசமான சூழல் தரும் பாட்டு இது..

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏன்பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

நான் பிறந்த காரணத்தை நானே அறியு முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

கொஞ்சம் வளர்ந்ததும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் கொண்டுவிடும்போது பிள்ளைகளுடன் மனப்போராட்டம் எஆதாரணமாய் நிகழ்வதுதானே. 

கண்ணா…… 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
காலம் மாறினால் கௌரவம் மாறுமா 
காலம் மாறினால் கௌரவம் மாறுமா… NEVER 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம் 
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம் 
அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம் 
நடந்தது அந்த நாள் 
முடிந்ததா பாரதம் 
நாளைய பாரதம் யாரதன் காரணம் 
ஹேநீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 

உள்ளப் போராட்டத்தின் விளைவாய் உதிக்கும் எண்ணங்கள் தேடல்களில் கொண்டு போய் விடுகிறது.விளைவு.? அருமையான தத்துவப் பாடல்கள். ,


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
இன்னும் ஒன்று.


போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது



வாழ்க்கை என்பது வியாபாரம் வரும்
ஜனனம் என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும்
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா அவன்
நாலும் தெரிந்த தலைவனடா தினம்
நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா

கடைசியாக ஒன்று

ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தை என்ன
தேடிய செல்வமென்ன
திரண்டதோர் சுற்றமென்ன
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன.

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ

ஆடும்வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடும்வரைக் கூட்டம்
கொள்ளி வரை வருமா.?

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்டபின்பு ஞானி

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்றுவிடு என்பான்

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு
சூனியத்தில் நிலைப்பு.

வீடு வரை உறவு..............

வாழ்வியலில் தமிழ் சினிமாப் பாடல்கள் நவ ரசங்களிலும் இருக்கிறது. ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. ஏதோ அங்கும் இங்குமாகக் கோடி காட்டியிருக்கிறேன். இதுவே மிகவும் நீ.........ளமாகிவிட்டது.  
--------------------------------------------------------------------..