Monday, March 7, 2011

வெற்றியும் தோல்வியும்.......

வெற்றியும் தோல்வியும் 
----------------------------------
               தீதும் நன்றும் பிறர் தர வாரா
               வெற்றியும் தோல்வியும் பிறர் தர வாரா 
               நாளும் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் --நல்ல
               படிப்பினையே யன்றி வேறொன்றோ  

தோல்விகள் எல்லாம் தீதல்ல -காணும்
வெற்றிகள் எல்லாம் நன்றும் அல்ல . 

              தோல்விகள் உன்னை பதப்படுத்தும் 
              மேலும் உழைக்க உரமேற்றும் 
              எல்லாம் எளிதில் அடைந்து விட்டால் 
              வாழ்வின் சுவையே குறைந்து விடும். 
             விழுந்து எழுந்து முட்டி மோதி 
             இலக்கடைந்தால் கிடைப்பதன் அருமை கூடிவிடும். 
 
ஊர் கூடி வடம் பிடித்து தேரிழுக்க 
தேரோட்டம் இனிதே நடக்கையில் தேரும்
நேர் செல்ல கட்டுக்குள் வைக்க இடும்
முட்டுக்கட்டையும் தீதாமோ இல்லை
தேரோட்டந்தான் தோல்வியாமோ

             வாழ்வியலில் சந்திக்கும் சறுக்கல்களும் 
             தேரின் முட்டுக்கட்டைக்கு நேரன்றோ
             நட்பிடமும் உறவிடமும் வெற்றி தோல்வி 
             தேடாதே, நடப்பவை எல்லாம் அனுபவமே,
             ஆற அமர சிந்தித்தால் அறிவில் தெளிவைக் காண்போமே.

ஆடும் ஆட்டத்தில் வந்து விழும் பந்துகளை 
நேர்கொள்ள இயலாது சில நேரம் கோட்டை
விடுபவனே ஆட்டம் ஆடியவனாகிறான்; 
விடாதவன் என்றும் ஆடாதவனேயன்றோ
நீ ஆடுகிறாய் வெற்றியும் தோல்வியும் அடைகிறாய். 

              வாழ்வியலில் வீழ்ந்து பட்டாய்
              நீ ஆடித்தான் ஆகவேண்டும் -தேர்வு
              செய்யும் உரிமை இங்கில்லை உனக்கு. 

வேண்டுமென்றே தோற்பதும் சில சமயம்
சுகமாகத் தோற்பதும் உற்றாரின் வெற்றிக்கே -அது
மகனோ மகளோ, பெயர் சொல்ல வந்த பெயரனோ,
உற்ற நட்போ,காதல் ஜோடியோ, கடிமணத்துணையோ, 
யாரேனு மாகலாம் -அவர்கள் காணும் உவகையிலே
நீ அடையும் மகிழ்ச்சிக்கே .

               தோல்வி தீதல்ல எனும்போதே
               வெற்றி என்றும், நன்றென்று ஆவதில்லை.
               வெற்றி என்றும் நன்று, என்றும் ஆவதில்லை.
               அதனை ஏற்கும் முறையே தீர்மானிக்கும். 

வெற்றி சில சமயம் தலைக்கனம் ஏற்றும்
சுற்றில் நடக்கும் நிகழ்வுகள் கண்ணில் படாது,
கருத்தினில் படியாது,முயற்சிகளை முறியடிக்கும்,
கடந்து வந்த பாதை காணாது போகும்.    
வெற்றியின் உச்சியிலிருந்து வீழ்ந்து பட்டால்,
பின் மிச்சம் ஏதும் கிட்டாது மீண்டும் துவங்க.

               விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால், 
               உடலம் விழும்போது காலனிடம் கூறலாம்,
             "வாடா, உன்னை சற்றே மிதிக்கிறேன் என் காலால்"
             -----------------------------------------------------------------

14 comments:

 1. மிகச் சிறப்பான வரிகள் பாலு சார்.

  //தேரும் நேர் செல்ல கட்டுக்குள் வைக்க இடும்
  முட்டுக்கட்டையும் தீதாமோ இல்லை
  தேரோட்டந்தான் தோல்வியாமோ//

  //ஆடும் ஆட்டத்தில் வந்து விழும் பந்துகளை
  நேர்கொள்ள இயலாது சில நேரம் கோட்டை
  விடுபவனே ஆட்டம் ஆடியவனாகிறான்;
  விடாதவன் என்றும் ஆடாதவனேயன்றோ
  நீ ஆடுகிறாய் வெற்றியும் தோல்வியும் அடைகிறாய்//

  ஞானத்தின் சாறு தடவப் பட்ட மஹா வரிகள்.

  மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.
  தாகம் தீர்ந்த பாடாயில்லை.

  ReplyDelete
 2. நாம்தான் ஆடுகிறோம். நாம்தான் வெற்றியும் தோல்வியும் அடைகிறோம். நம்பிக்கையூட்டும் வரிகள். உங்களின் சொற்கள் இன்றைய தலைமுறைக்குத் தேவை. எளிமையும் எதார்த்தமும் கலந்த வாழ்வின் தெறிப்புகள் இவை. நிறைய எழுதுங்கள் ஐயா. காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 3. , நடப்பவை எல்லாம் அனுபவமே,//
  மீண்டும் மீண்டும் வாசித்து வாழ்க்கை அனுபவம் பெறும் வண்ணம் கவிதை முழுவதும் முத்துக்களாக அர்த்தம் பொதிந்த ஆழ்ந்த கருத்துக்கள் விரவியுள்ளன.
  வார்த்து எடுத்து அளித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. அடர்த்தியான கருத்துக்கள்
  எளிமையான சொற்கள்
  கட்டுக்கோப்பான நடை
  அதனால்தான்
  மீண்டும் மீண்டும்
  படிக்கத் தூண்டுகிறதோ?
  சூப்பர் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. //விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால்//

  அருமையான வரிகள், ஐயா. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால்,
  உடலம் விழும்போது காலனிடம் கூறலாம்,
  "வாடா, உன்னை சற்றே மிதிக்கிறேன் என் காலால்"


  ......என்ன அருமையான வரிகள்! வாழ்க்கையை குறித்த நல்ல புரிதலுடன் எழுதப்பட்டு இருக்கிறது. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 7. நல்ல அனுபவங்கள் கவிதை வரிகளாக விழுகின்றன.
  தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. என் எழுத்துக்களைப் படித்துப் பாராட்டியிருக்கும்சுந்தர்ஜி, ஹரணி, ராஜராஜேஸ்வரி,ரமணி, சித்ரா, வை. கோபாலகிருஷ்ணன், ரத்னவேல், அனைவருக்கும் என் நன்றி.உண்மையை சொல்லப்போனால் இந்தப் பதிவுக்கு சுந்தர்ஜி தான் காரணகர்த்தா.அவருடைய பதிவு தோல்வித்தேன் என்னை இதை எழுதுவித்தது. தேஙஸ் டு யூ சுந்தர்ஜி.

  ReplyDelete
 9. உங்க‌ளின் அனுப‌வத்தாலும், த‌கை சான்ற‌ வாழ்வாலும், வ‌சித்தும், வாசித்தும் அறிந்த‌ திற‌னாலும் அழகாய் ஒரு ப‌திவை அனைவரின் ம‌ன‌த்திலும் ப‌திவு செய்திருக்கிறீர்க‌ள் ஐயா. உங்க‌ளால் நாங்க‌ளும் அறிகிறோம், அடிப‌டாம‌லே வ‌லியை, க‌ட‌க்காம‌லே தூர‌த்தை, இழ‌க்காம‌லே துய‌ர‌த்தை, கிட்டாம‌லே அதன் சுக‌த்தையும். வாழி நீ எம்மான், இந்த வையத்து நாட்க‌ளெல்லாம்.

  ReplyDelete
 10. வாசன் உங்கள் பின்னூட்டம் என்னை நெகிழச்செய்துவிட்டது. உங்களைப் போல் வாசகர்கள் என் எழுத்தில் நான் என்றும் கவனமாக இருக்க தூண்டுதலாக இருக்கிறார்கள் அன்புக்கு நன்றி வாசன்.
  உமேஷ் வேலை பளு காரணமாக என் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை என்று எண்ணுகிறேன் முடிந்த மட்டும் வருகை தாருங்கள் .நன்றி

  ReplyDelete
 11. ஒவ்வொரு அனுபவ வரியும் பாடம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. அனுபவங்கள் .பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. தோல்விகள் எல்லாம் தீதல்ல -காணும்
  வெற்றிகள் எல்லாம் நன்றும் அல்ல . //
  தோல்விகள் உன்னை பதப்படுத்தும் மேலும் உழைக்க உரமேற்றும் எல்லாம் எளிதில் அடைந்து விட்டால் வாழ்வின் சுவையே குறைந்து விடும். //
  உண்மை!
  தேரிழுக்க தேரோட்டம் இனிதே நடக்கையில் தேரும் நேர் செல்ல கட்டுக்குள் வைக்க இடும் முட்டுக்கட்டையும் தீதாமோ இல்லை தேரோட்டந்தான் தோல்வியாமோ // நல்ல உவமை சார்! அதில் எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளன! வாழ்வியல் தத்துவமே இல்லையா!

  விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால், உடலம் விழும்போது காலனிடம் கூறலாம், "வாடா, உன்னை சற்றே மிதிக்கிறேன் என் காலால்" //

  அருமையான வரிகள் முடிவில்...அதுவும் பாரதியின் "காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கின்றேன்..எந்தன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்....இது அகந்தையால் வரும் வார்த்தைகள் அல்ல! தன்னம்பிக்கை!

  அனுபவம் யாவும் நமக்குப் பாடமே! வாழ்க்கை கற்றுத் தரும் பாடம். நாம் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்தோம் என்றால் நிறைய கற்கலாம்...
  அருமையான வார்த்தைகள் சார்! அனைத்துமே!

  ReplyDelete