எண்ணங்கள்-அனுபவம் -தொகுப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள்-அனுபவம் -தொகுப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 ஜூன், 2013

கருணைக் கொலை...?


                                                  கருணைக் கொலை. ..?
                                                  ------------------------------



சென்றமாதம் நாங்கள் நாராயணீயம் பாராயணத்துக்காகக் குருவாயூர் சென்றிருந்தோம். மூன்று நாட்கள் ஊரிலிருக்கவில்லை.  நாங்கள் பெங்களூரில் இல்லாதிருந்தபோது  இரண்டு நாட்களுக்கு அடை மழை பெய்திருந்தது. பல வருடங்கள் காணாத முன் மாரி மழை என்றார்கள். எங்கள் வீட்டில் இரண்டு தென்னை மரங்கள் (முன்புறம் ஒன்று பின் புறம் ஒன்று)  ஒரு மாமரம் இருக்கின்றன. அவை எல்லாமே பயன் தருபவை. தென்னை மரத்தில் தேங்காய்க் குலைகளும் மாமரத்தில் மாங்காய்களும் நல்ல ஈல்ட் கொடுப்பவை. அவற்றை பறிக்க ஆள் கிடைப்பதே குதிரைக் கொம்பு. ஒரு தென்னை மரத்தில் ஒரு முறை ஏற ரூ. 150/ கேட்பார்கள். அதுவும் தக்க சமயத்தில் கிடைக்க மாட்டார்கள். அப்படியே பறித்த காய்களைமட்டை எடுத்து வெட்டிக்கொடுக்கவும் ஆட்கள் கிடைப்பதில்லை. எங்களுக்காக இந்த மாதிரி வேலைகளை செய்து கொடுத்துக்கொண்டிருந்த பையன் கத்தார் போய் விட்டான். அதே போல் மாமரக் காய்களை பறிக்கவும் மிகவும் சிரமம்ம்
மரம் வெட்டல் நன்றி - கூகிள் இமேஜெஸ்

.
 நிலைமை இப்படி இருக்கையில், நாங்கள் ஊரிலில்லாத போது பெய்த மழையின் போது பின் புறத்தில் இருந்த தென்னை மரத்தின் மேல் இடி விழுந்ததாம். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூறினார்கள். நாங்கள் வந்து பார்த்தபோது தென்னையின் உச்சியில் மட்டைகள் சரிந்து தொங்கிக் கொண்டிருந்தன. என்னேரமும் மட்டைகள் விழுந்து விடுவது போல் இருந்தது. நாங்கள் முதலில் சாய்ந்திருந்த மட்டைகளை வெட்டி இருக்கும் காய்களைப் பறிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் தகுந்த ஆட்கள் கிடைக்க வில்லை. வந்து பார்த்துப் போகிறவர்கள் எல்லாம் மரம் பட்டு விட்டது வெட்டி விட வேண்டும் என்றார்கள். நான் அவசரப் படவேண்டாம் , இன்னும் சிறிது காலம் பார்க்கலாம் மறுபடி துளிர்க்கிறதா என்று பார்த்து பிறகு முடிவு செய்யலாம் என்று சொன்னேன். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சாலையில் போவோருக்கும் மரம் ஒட்டி யிருக்கும் வீட்டாருக்கும் அதனால் ஆபத்து என்று சொல்லவே மரத்தை வெட்ட முடிவு செய்தோம். எனக்கோ, அந்த மரத்துக்கு உயிர் இருப்பது போலவும் பட்டுப்போய் சாகும் தருவாயிலிருப்பது போலவும் தோன்றியது. என்ன எண்ணி என்ன பயன்.? இன்றில்லாவிட்டால் நாளை வெட்ட வேண்டியதுதானே என்று சமாதானப் படுத்திக் கொண்டு அதை வெட்ட ஆட்கள் கிடைப் பார்களா என்று விசாரிக்கத் துவங்கினோம். மரம் வெட்ட ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. ஓரிருவர் வந்து பார்த்து அதை வெட்டி , மரத்தை எங்காவது கொண்டு போட ரூ.7000/ - கேட்டனர். எங்களுக்கு மயக்கம் வராத குறை. இந்த மாதிரி மரம் வெட்டிகளுக்கு என்று ஒரு சிண்டிகேட்  இருப்பதுபோல் தோன்றுகிறது. யாரிடம்சொல்லி விசாரித்தாலும் முன்பு வந்தவர்களையே காட்டுகின்றனர். அந்த மரத்திலிருந்து இதுவரை அந்த அளவு வரவு இருந்திருக்குமா என்பதே சந்தேகம். அக்கம் பக்கத்தோர் என்று பலரையும் கூட்டி பேரம் பேசினோம். ரூ.3000/- கொடுப்பதாகவும் வெட்டிய மட்டை மரம் முதலியன அங்கிருந்து அகற்றப் பட்டு எங்காவது எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று முடிவாயிற்று. ஐந்து பேர் வந்தார்கள். டீசல் போட்டு இயக்கும் ஏதோ இயந்திரத்தில் ரம்பம் போல் எதையோ சேர்த்தார்கள். உச்சியில் இருந்து அறுத்துக் கொண்டு வந்தார்கள் எல்லா வேலையும் சுமார் மூன்று மணி நேரத்தில் செய்து விட்டார்கள். எனக்கு மட்டும் ஒரு வேளை அந்த மரத்துக்கு உயிர் இருந்திருந்தால் நாங்கள் செய்தது கொலை அல்லவா என்று தோன்றுகிறது. இருந்தாலும் அது கருணைக் கொலையே என்று சமாதானப் படுத்திக் கொள்கிறோம்.  .  

.    .