செவ்வாய், 11 ஜூன், 2013

பதிவுலகில் மூத்த பதிவர்கள்


                                      பதிவுலகில் மூத்த பதிவர்கள்.
                                      ----------------------------------------



என்ன பதிவு எழுதுவது என்று மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது. சீரியஸாகவும் இருக்கக் கூடாது;மொக்கையாகவும் இருக்கக் கூடாது.என்னைப் போல் எழுதுவதற்கு பொருள் தேடி பதிவர்கள் சிந்திப்பது தெரியும். இன்று காலை என்னுடைய மெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சுப்புத் தாத்தா, என்கிற சூரி சிவா என்கிற சூரியநாராயண சிவா, என்னைப் போல் ஒரு இளைஞர் அமேரிக்காவில் நியூ யார்க் சென்று செம ஜாலியாகப் பதிவு ஒன்று போட்டிருப்பது கண்களில் பட்டது. உடனே எனக்குள் ஒரு பொறி தட்டிற்று. பதிவுலகில் ( மன்னிக்கவும்; த்மிழ் பதிவுலகில் )என் போன்றோர் எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்று சிந்தனை ஓடியது. அதுவே எனக்கு ஒரு பதிவுக்கு வழி செய்து விட்டது.


நான் ரெகுலராகப் படிக்கும் பதிவுகள் சொற்பமே.அவ்வப்போது வலைகளில் மேய்வேன். Cross section of Tamil bloggers  என் மனதில் ஓடியது. இப்போது வயது முதிர்ந்த பதிவாளர்கள் பற்றி எழுதலாமே என்று தோன்றியது. வயது முதிர்ந்தவர்கள் என்று நான் குறிப்பிடும் போது எழுபது வயதைத் தாண்டியவர்கள் எழுதுவதுதான் விசேஷம். பெரும்பாலும் பலதரப்பட்ட உடல் உபாதைகளால் சிரம மேற்படுத்தும் வயது. இதையெல்லாம் மீறி எழுதுகிறார்கள் ( என்னையும் சேர்த்துத்தான்) என்றால் ஏதோ ஒரு உந்து சக்தி இருக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி எழுதுமுன் என்னை எழுத வைப்பது எது என்று யோசித்தேன். பல காரணங்கள் நான் முன்னே நீ முன்னே என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தன. உண்மையை பேச வேண்டும் என்று நினைப்பவன் நான். உடல் நலக் குறைவால் ( 2010-ல்ஆஞ்சியோ ப்லாஸ்டி செய்தர்ர்கள் ) ஓய்வில் இருந்தேன். நேரம் போக வேண்டும், ஏதாவது உருப்படியாகச் செய்யலாமே என்று தோன்ற என் சுயசரிதை எழுதத் துவங்கினேன். ( சுய சரிதை எழுதும் அளவுக்கு நீ என்ன அவ்வளவு பிரபலமா என்று யாரும் கேட்கக் கூடாது.)ஒரு சாதாரணன் எப்படி எப்படி வாழ்க்கையை சந்தித்தான் என்பது அந்த சாதாரணனின் சந்ததிகளுக்கே தெரிய வேண்டும் அல்லவா, அதற்கான ஒரு முயற்சியே அது.. அப்போதுதான் இணையத்தில் வலைப்பூவில் எழுதலாம் என்று ஆனந்த விகடன் மூலம் அறிந்தேன். என்னுள் உறங்கிக் கொண்டிருந்த எழுத்தாளன் விழித்துக் கொண்டான். என் சுய திருப்திக்காக அன்றெல்லாம் கொஞ்சம் எழுதுவேன். அவற்றை தூசிதட்டி படித்துப் பார்த்தபோது துவக்கத்துக்கு இவை உறுதுணையாய் இருக்கும் என்று தோன்றியது. கணினி அறிவு சிறிதுமே இல்லாத நான் ஆரம்பத்தில் (                   ஆரம்பத்தில் என்ன  இப்போதும் கூடத்தான் ) வெகுவாகவே சிரமப் பட்டேன்.
ஏதோ ஒரு உந்துதலில் எழுத ஆரம்பிப்பேன். எழுதி முடிக்கும்வரை என்ன எழுதினேன் என்று எனக்கே தெரியாது. பிறகு படித்துப் பார்த்தால் பல நேரங்களில் எனக்கு நானே ( பிறர் தராவிட்டால் என்ன ) ஷொட்டுக் கொடுத்துக் கொள்வேன்.சும்மா சொல்லக் கூடாது பல படைப்புகள் என் பெருமையை பறை சாற்றி இருக்கின்றன.பாராட்டுகளில் மயங்கி நின்றதும் உண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் நான் சொல்ல வருவது சரியாகப் போய்ச் சேரவில்லையா இல்லை மற்றவர்களுடைய WAVE LENGTH-க்கு தக்கபடி எழுதவில்லையா என்று யோசிப்பதுண்டு, நான் எனக்கு சரியென்று பட்டதை எழுதுகிறேன். அதற்கு வலைப்பூ ஒரு வடிகால் தருகிறது.

சரி விஷயத்துக்கு வருவோம்.தமிழ்ப் பதிவுலகில் என் கண்ணில் பட்ட எழுபது வயதைத் தாண்டியவர்கள் யார் யார் என்று பார்ப்போமா. முதலில் இந்தப் பதிவுக்கு வழிவகுத்தவர் சூரி சிவா. அவ்வப்போது அவர் எழுதியதைப் படித்ததில் இருந்து அவரது வயது 71 அல்லது 72 இருக்கலாம். மிகுந்த நகைச் சுவை மிகுந்தவர். இசையில் ஆர்வம் கொண்டவர். மெத்தப் படித்தவர். பல விஷயங்களில் யாரும் எண்ணாத கோணத்தில் எழுதுபவர். சென்னையில் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தபோது அங்கே என்னை சந்திக்கலாம் என்று எண்ணியிருந்தாராம். அவர் நினைத்தாலும் பாடுவதை அவரால் தவிர்க்க முடியாது என்று எழுதி இருந்தார். சிவகுமாரன் கவிதைகள் பலவற்றைப் பாடி ஆடியோ வாக அனுப்புவார். ஒரு முறை கன்னட நாட்டுப்பாடல்  ஒன்றைத் தமிழ்ப்படுத்தி ( மாத்தாடு மாத்தாடு மல்லிகே) எழுதி இருந்தேன் . அதைப் பாடி எனக்கு ஆடியோ அனுப்ப வேண்டி இருந்தேன். எந்த ஒரு தகவலும் இருக்க வில்லை. பிறிதொரு சமயம் நான் எழுதிய ஒரு பாட்டுக்கு மெட்டமைத்துப் பாடி அதன் ஆடியோவை அனுப்பி இருந்தார். முன்பு நான் கேட்டு எழுதிய பாடல் பாட மனம் ஒப்பவில்லை என்று எழுதி இருந்தார்.அப்பாதுரையின் பதிவுகளுக்கு அவர் எழுதும் பின்னூட்டங்களை நான் ரசித்துப் படிப்பேன்.அவர் பதிவில் படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது “ இன்றைய நாளை இனிதே கழிக்க இரண்டே வழிகள். உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் நாளை நன்றாகவே இருக்கும் என்று நம்புங்கள்ஏறத்தாழ இதுவே அவரை அடையாளம் காட்டும்.

 அடுத்தவர் திரு. காஸ்யபன் என்பவர். நாக்பூரில் வசிக்கிறார்.என்னைவிட இராண்டு வயது மூத்தவராக இருப்பார் என்று தோன்றுகிறதுஇந்த வயதிலும் இவரை எழுத வைப்பது எது என்று சிந்திக்கையில் அவர் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். எழுத்துவது அவர் தொழிலாக இருந்தது.இருந்தாலும் இப்போது எழுத வைப்பது அவரது கொள்கைப் பிடிப்பே என்று தோன்றுகிறது. பொதுவுடமைவாதி. முன்பொரு பதிவில் சில நடைமுறை வழக்கங்களுக்குத் தெளிவு கேட்டு எழுதி இருந்தேன். அதன் பின்னூட்டத்திலவர் “I am a non believer, but I believe those who believe in God, because of the simple reason , they are my fellow beings” என்று எழுதி இருந்தார். ஒரு முறை பசுவதைச்சட்டம் பற்றி அவரது வலையில் வந்தது. அதற்கு நானும் பின்னூட்டம் எழுதீருந்தேன். அந்தப் பதிவு வேறு ஒருவர் எழுதியதை இவர் பிரசுரித்து இருந்தார். அந்தப் பதிவருக்கு என் வலையின் முகவரியைக் கொடுத்து அவர் எனக்கு நன்றி கூறி எழுதியிருந்தார். என்னுடைய சில எழுத்துக்களை இன்னார் படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்போது அவருக்கு அந்தப் பதிவை அனுப்பி வைப்பேன். அது மாதிரி கடவுள் அறிவா உணர்வாஎன்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதற்கு அவரது கருத்தை கேட்டு எழுதி இருந்தேன். கடவுள் என்பது ஒரு கான்செப்ட் என்று தொடங்கி விரிவான பின்னூட்டம் எழுதி இருந்தார்.மற்றும் ஓரிரு பதிவுகளுக்கு கருத்து கேட்டு எழுதியிருந்தேன். எனக்கு அஞ்சலில் அந்தப் பதிவுகள் திறப்பதில்லை என்றும் கணினிக்கு எதிராகப் பல வருஷங்கள் போராடியவர். இப்போது அதனுடன் மல்லுக் கட்ட சிரமமாய் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார்.

அடுத்து நான் கூறப்போவது கோவையில் இருந்து சாமியின் மன அலைகள் என்ற வலைப்பூவில் எழுதிவரும் டாக்டர். பழனிச்சாமி கந்தசாமி என்பவரைப் பற்றி. நான்  வலையில் எழுதத் துவங்கிய காலம் முதல் என் பதிவுகளைப் படித்துக் கருத்து எழுதுபவர்.  ஊக்கம் கொடுத்து வருபவர். பின்னூட்டங்கள் மிகவும் க்ரிஸ்ப்பாக ஓரிரு வார்த்தைகளில் இருக்கும். எந்த விஷயமாவது யாராவது சொல்லி விட்டால் அது பற்றி அவர் பதிவு எழுதி விடுவார். நாம் மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் பல விஷயங்களைஅதன் முக்கியத்துவம் தெரிந்து எழுதுவார். போர்த்திக்கொள்ளும் போர்வையின் தலைமாடு கால்மாடு அடையாளப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் பாணியில் எழுதி விடுவார். சில நேரங்களில் அவர் எழுதியது குறித்து சில சர்ச்சைகள் எழுவதுண்டு. மனிதன் கவலைப்படவே மாட்டார். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த மனிதர் என்பதே என் அனுமானம்.

ஒருமுறை நான் சிதம்பரம் ஆனித்திருமஞ்சனம் விழா காணச் சென்றிருந்தேன். சிவ பெருமானைக் கைலையோடு ராவணன் தூக்குவதை சுவாமி உற்சவத்தின் போது ரதத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்றார்கள். அதில் ராவணனுக்குப் பத்து தலைகள் இல்லாமல் ஒன்பதே இருந்தது என்று எழுதி இருந்தேன். டாக்டர் கந்தசாமி கதையுடன் விளக்கம் கூறி எழுதி இருந்தார். புராணக் கதைகளையும் விட்டு வைக்கவில்லை அவர். கொங்கு நாட்டுக் கல்யாண சடங்குகளையும் விலாவாரியாக எழுதி இருக்கிறார்.

வலையுலகில் எழுத்தாளர்களை மிகவும் நேசித்துப் படிப்பவர் ஜீவி என்ற பெயரில் பூவனம் என்னும்வலைப்பூவில் எழுதி வருபவர். நான் அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இசை ஞானம் இருப்பவர். ராகங்கள் இசை என்பன வற்றில் தேர்ந்தவர். தெரிந்தவற்றைக் கதையில் அனுபவித்து எழுதுபவர். செய்யாத குற்றம் என்னும் என் பதிவுக்கு அவர் பின்னூட்டமாகஉள்ளம் உடல் எனும் இரட்டை மாட்டுச் சவாரியில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவுதானே தவிர பிரிதுப் பார்க்க முடியவில்லை “ என்று எழுதி இருந்தார். அவர் பல எழுத்தாளர்களை படித்து விமரிசனம் செய்யும் பாங்கு கண்டு என் சிறுகதை வாழ்வின் விளிம்பில் கதையையும் அவர் விமரிசிக்கக் கேட்டேன். எழுதியிருந்தார். ஒரு முறை நான் பின்னூட்டத்தில் ஒரு பதிவரைக் குறித்து எழுதியதை உடன் படித்து அதை நீக்குவது நல்லது என்றார். நானும் என் பிழை உணர்ந்து அதற்குக் கட்டுப்பட்டு நீக்கி நன்றி கூறி எழுதி இருந்தேன்.

1எனக்கு ஒரு மூத்த பதிவரின் வலைத்தளத்துக்கு  கீத மஞ்சரி அறிமுகப் படுத்தினார் . அவர் பெயர்  சொ.ஞானசம்பந்தன்.என்னைவிட 12 வயது மூத்தவர். இலக்கியச் சாரல் என்னும் வலைப்பூவில் எழுதுகிறார் ஆங்கிலம் ஃப்ரென்ச், லத்தீன் போன்ற பிற மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற தமிழறிஞர். பிறபிலேயே உயர்வு தாழ்வு பண்டைக்காலத்தில் இருந்தது என்று பழைய பாடல்களை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார். பெரும்பாலும் இலக்கியப் பதிவுகளே. மிகவும் குறைவாகவே எழுதுகிறார். இந்த வயதிலும் எழுதும் ஆர்வம் போற்றத்தக்கது.

கடைசியாக நான் கூறப்போகும் மூத்த எழுத்தாளர் புலவர் சா.இராமானுசம்.
பலருக்கும் பரிச்சயமான மூத்த எழுத்தாள்ர். முன்பெல்லாம் என் பதிவுகளுக்குத் தவறாமல் வருகை தந்து ஊக்கப் படுத்துவார். எனக்கு நான் எழுதுவது கவிதையில் சேராது என்ற எண்ணம் கவிதையின் இலக்கணங்களையாவது கற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. கவிதை கற்கிறேன் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதற்குப் பின்னூட்டமாக பாதை தெரிந்து விட்டது. பயணம் போகத் தயங்காதீர் “ என்று எழுதி உற்சாகப் படுத்தினார். பின்னொரு பதிவின் பின்னூட்டமாக நான் புலவன் சொல்கிறேன் நீங்கள் எழுதுவது கவிதைதான் என்று எழுதி ஊக்கப் படுத்தினார்.
பதிவுலக வாழ்வில் பலரும் அவர்களைப் பற்றிய பல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முன் வருவதில்லை. இன்னும் மூத்த பதிவர்கள் இருக்கலாம் அறிமுகப் படுத்தினால் மகிழ்வேன். பதிவுலகில் பெண்கள் பலரும் எழுதுகிறார்கள்.  அவர்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதலாமா.? ,
.    .    
 




27 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா. உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருந்த எழுத்தாளன், சிறிது தாமதமாக எழுந்துள்ளார் என்றே எண்ணுகின்றேன். முன்பே எழுந்திருந்தால் தங்களுக்கு ஆஞ்சியோ ப்ளாஸ்ட்டி செய்ய வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.
    இப்பதிவு மிகவும் பயனுள்ள பதிவு அய்யா. ஒன்றிரண்டு பதிவர்கள் மட்டுமே எனக்குப் புதிதாக உள்ளார்கள். ஒரு வேண்டுபோள் அய்யா. தாங்கள் குறிப்பிட்டுள்ள மூத்த பதிவர்களின் வலைப் பூ முகவரியினையும், தஙகள் கட்டுரையுடன் இணைப்பீர்களேயானால்,என் போன்றோருக்கு உதவியாக இருக்கும். நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவுகளோடு, நீங்கள் குறிப்பிடும் சூரி சிவா என்கிற சுப்புத் தாத்தா, டாக்டர் பழனி கந்தசாமி, புலவர் ராமனுசம் ஆகியோரது பதிவுகளையும் படித்து வருகிறேன். எனது கருத்துரைகளையும் எழுதி இருக்கிறேன். காஸ்யபன், சொ. ஞானசம்பந்தன் ஆகியோரது பதிவுகள் சிலவற்றை படித்து இருக்கிறேன்.

    உங்களது பதிவுகளையும் டாக்டர் பழனிகந்தசாமி அவர்களது பதிவுகளையும் படிக்கும்போது, சிலசமயம் இருவரும் ஒருவர் போலவே எனக்கு பிரம்மை உண்டாகும்.

    சூரி சிவா என்கிற சுப்புத் தாத்தா அவர்கள், மற்றவர் பதிவுகளில் அவர் தரும் கருத்துரைகளைத் தொகுத்தாலே பல பதிவுகள் வரும். இசைப் புலமையும்,நகைச்சுவையும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்அவர்.

    புலவர் ராமானுசம் அய்யா போன்று மரபுக் கவிதைகள் படைக்க ஆசை. (கல்லூரி நாட்களில் மரபுக் கவிதைகளை எழுதுவேன். இப்போது புதுக் கவிதைதான் சட்டென வருகிறது)

    ஜீவி என்பவரது பூவனம் இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

    உங்களின் இந்த பதிவிற்கு வரும் பின்னூட்டங்களை வைத்து பல மூத்த பதிவர்களை கண்டு கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    ( கொஞ்சம் அதிகம் செப்பி விட்டேன். மன்னிக்கவும் )

    பதிலளிநீக்கு
  3. சுப்புத் தாத்தா அவர்கள் எந்த தளத்திலும் கருத்துரை இட்டாலும் ரசிக்கும் படி இருக்கும்... இளமைத் துள்ளலுடன்... நகைச்சுவையுடன்... சுருக் நறுக்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

    அதே போல் வைகோ ஐயா (http://gopu1949.blogspot.in/) அவர்களின் கருத்துரைகளின் ரசிகன் நான்... பகிர்வுகளை விட அவர்களின் கருத்துரை நீளமாக... ரசிக்கும் படி... வரிக்கு வரி... விரிவாக... விளக்கமாக... ஊக்குவிக்கும் படி... உற்சாகமாக... உரிமையோடு... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

    கரந்தை ஐயா அவர்களுக்கும், கருத்திட வருபவர்களும் :

    திரு. காஸ்யபன் அய்யா - http://kashyapan.blogspot.com/

    திரு. டாக்டர். பழனிச்சாமி கந்தசாமி அய்யா - http://swamysmusings.blogspot.com/

    திரு. சுப்புத் தாத்தா அய்யா - www.subbuthatha.blogspot.in

    திரு. ஜீவி அய்யா - http://jeeveesblog.blogspot.in/

    திரு. புலவர் ராமானுசம் அய்யா - http://www.pulavarkural.info/

    பதிலளிநீக்கு
  4. பதிவுலகத்தின் சிறப்பான பதிவர்கள்பற்றி அருமையான பகிர்வுகள்.. ..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. தருமி அவர்களும் கடுகு அவர்களும் எல்லோரிலும் மூத்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    என்னை நினைவு கூர்ந்ததிற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் பாராட்டிய அத்துனைபேரும் தகுதியானவர்களே. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  7. @ கரந்தை ஜெயக்குமார்
    @ தி. தமிழ் இளங்கோ
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ இராஜராஜேஸ்வரி
    @ டாக்டர் கந்தசாமி
    @ கவியாழி கண்ணதாசன். அனைவருக்கும் நன்றி.

    திரு.தனபாலனுக்கு ஸ்பெஷல் நன்றி.
    தருமி அவர்களின் சில பதிவுகள் படித்துள்ளேன். அவர் மூத்தவரா என்பது தெரியவில்லை. கடுகு அவர்களின் தளம் தெரியாது இந்த வயதிலும் எழுதுகிறார்கள் என்பதே அவர்கள் தகுதிக்குச் சான்று. அதிலும் பலரால் விரும்பிப் படிக்கப் படுகிறார்கள் என்பது இன்னும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. நல்ல முறையில் அவர்கள் வயதுக்கும், அவர்கள் தமிழ்த் தொண்டுக்கும் மரியாதை செலுத்தி இருக்கீங்க, ஐயா!

    நீங்க நீடூழிவாழ்க!

    பதிலளிநீக்கு


  9. இரு நொடிகட்கு முன்பு தான் தங்கள் மடலைக்கண்டேன். வியந்தேன்.
    மூத்த பதிவர்களில் ஒருவ‌ரென என எனைக்குறிப்பிட்டு அதிலும் எனை அவ்வரிசையில் முதலில் அமரச் செய்தது தங்கள் பெருந்தன்மையே என்பதில் எனக்கோர் ஐயமில்லை.

    மூத்தது மோழை இளையது காளை என்பர். இன்றைய பதிவுலகம் காளைகளின் சிலம்பாட்டம். மூத்த பதிவர் எனைப்போன்று வயதில் மூத்தவர் பலர் உளர் . இல்லை எனச்சொல்ல வில்லை எனினும் எண்ணங்களிலும் எழுச்சிதரும் எழுத்துக்களின் முதிர்விலே முன்னணியில் நிற்பவர் என்னைக் கவருபவர்கள் இளைஞர்கள் தான் .

    பொழுது போகவில்லை. நான் எழுதுகிறேன். வனம் போகும் வயதிலே மனம் போகும் வழியிலே , எழுதுகிறேன் . ஒரு நாள் அறம் எனின் ப‌ல நாள் புறம். இசையே எனைச் சுற்றியுள்ள உலகத்தின் நிறங்கள் என எனக்கென ஒரு கற்பனை உலகிலே காணாத பல நூறு நண்பர்களுடன் காஷ்மீரன்ன குளிரிலே காசில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.

    பொழுது போறாது இருப்பினும் சிலர் எழுதுகிறார் பாருங்கள். பொறாமையாக இல்லை . எனக்கு பெருமையாக இருக்கிறது. திண்டுக்கல் தனபாலன் ஒரு திண்டு போட்டுக்கொண்டு கல் போன்று இலாது தன் தனத்தை பாலிப்பதே போதுமென்று இராது தமிழ்த்தொண்டு செய்கிறாரே அவரைப்போன்று அவர் வயதை ஒத்த காலத்தில் என்னால்
    ஏன் இயங்க இயலவில்லை என என் நெஞ்சம் இடித்துரைக்கிறது. சமுத்ரா என ஒருவர் அண்மையில் வலைச்சரத்தில். ஆழ்கடல் அமைதி அவர் எழுத்துக்களில். என்னைப்போல் ஆரவாரம் இல்லை.

    கணேசன் என் கணேசன் என எழுதுபவர். என் கண்களுக்கும் நெஞ்சத்துக்கும் ஈசன் அவர்.

    இன்றைய மூத்தவர் பதிவுகளிலே விவேகம் இல்லாமல் இல்லை.
    இருப்பினும் இளையோர் பதிவுகளிலே இருக்கும் வேகம் என்னை எழச்செய்கிறது.
    எழுதத்தூண்டுகிறது.

    இன்றைய இளைஞர்களின் சிந்தனை நாளைய உலகின் இலக்கு. போக்கு.

    டு பி யங் இஸ் வெரி ஹெவன் என யார் எழுதினார் என்று கேட்காதீர்கள்.

    திருமதி ராமலக்ஷ்மி படித்தால் அந்தக் கவிதையை அழகான தமிழ்க்கவிதையாக உருக்கித் தருவார்கள்.

    நன்றி.

    சுப்பு தாத்தா.
    www.Sury-healthiswealth.blogspot.com
    www.movieraghas.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com
















    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள ஐயா.

    வணக்கம். இந்தப் பதிவு குறித்து சில கருத்துக்கள்.

    எனக்குத் தெரிந்து உங்கள் வயதும் உங்கள் வயதைக் கடந்தவர்களும் பெரும்பாலும் காலைவேளைகளில் மெதுவடையும் டீயும் மாலை வேலைகளில் அல்வா அல்லது பக்கோடா அல்லது மணி காராபூந்தி அப்புறம் காபி என்றுதான் வழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சாப்பிடுவது தவறு என்று சொல்ல வரவில்லை. இதைத்தவிர பொழுதைக் கழிப்பது இல்லை. அப்புறம் உட்கார்ந்து வரவேண்டிய பென்ஷன் அரியர்ஸ் இதர விஷயங்கள்...

    எனவேதான் உங்களை வலைப்பதிவில் கண்டபோது மிகுந்த மரியாதையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. பயனானது என்று.

    இன்றைய பதிவு உங்களைவிட வயதானவர்களின் பதிவுகுறித்த உங்களின் பொதுநலம் சார்ந்த பொறுப்புணர்ச்சியையும் உங்களைப்போன்றோரின் சொற்கள் வரும் தலைமுறைக்கு வழிகாட்டல் அனுபவங்கள். அந்த வகையில் இந்தப் பதிவு முக்கியமாகிறது.

    எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். எல்லாமும் இன்றைய சமுகத்தின் தேவையை உள்ளடக்கியே இருக்கின்றன. வாசிக்கக் காத்திருக்கிறேன்.

    என்னுடைய கணிப்பொறி பழுதின் காரணமாக குறுந்தொடரில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன். தவிரவும் தொடர்ச்சியாக சொல்வதைவிட திரில்லாகத் தொடரிடுவதில் படிக்கும் ஆர்வம் கூடும். எனவேதான் அப்படி சாதாரணக் கதைகளில்கூட திரில் வைக்கிறேன்.

    சந்திப்போம்.

    என்னுடைய ஈமெயில் uthraperumal@gmail.com

    பதிலளிநீக்கு
  11. பதிவர்களைப் பற்றிய உங்களின் பகிர்வு வெகு சிறப்பு! என் போன்ற இளைஞர்களை(?) உயர்த்திப் பேசிய சுப்புத் தாத்தாவிற்கு ஒரு சல்யூட்!

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. ஆழமான சிந்தனையுடன் கூடிய
    பதிவுகள் தருகிற நீங்கள் பதிவுலகின்
    அதிகப்பதிவுகளையும் முழுமையாகப்
    படிப்பதனை இந்தப் பதிவின் மூலம்
    அறிந்து கொள்ளமுடிந்தது
    உங்களிடம் நாங்கள் கற்றுக் கொள்ள
    நிறைய இருக்கிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. வயதில் முதிர்ந்த பதிவர்களின் பதிவுகளில் அவர்களின் அனுபவம் நிச்சயம் எதிரொலிக்கும்.
    மூத்த பதிவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. நான் இணையத்துக்குள் நுழைவது குறைவு ஐயா நேரப்பிரச்சனை ஆனாலும தங்களது வாழ்க்கை அனுபவம் எழுத்தில தெரிகிறது

    அன்புச் சகோதரன்
    என் உயிருடன் விளையாடிய வல்லைப் பாலமும் ஊடகங்கள் காணாத பக்கமும் வீடியோவாக

    பதிலளிநீக்கு
  16. அன்புள்ள GMB,
    கடுகு எழுதும் தளம் -

    http://kadugu-agasthian.blogspot.in/2013/03/blog-post_15.html

    அந்தக்காலத்தில் இவர் கட்டுரைகள் விகடனில் வெளியாகும். மிகவும் சுவாரஸ்யமானவை.

    பதிலளிநீக்கு
  17. ராவணனுக்கு ஒன்பது தலை பற்றிய பதிவின் தலைப்பு/சுட்டி சேருங்களேன்? தேடிப் படிக்கத் தோன்றியது. திரு.கந்தசாமி சொன்ன கதை என்ன?

    சுப்புத்தாத்தா வயதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை - உங்களைப் போலத்தான்.

    ஞானசம்பந்தன் அவர்களது ப்லாக் பெயர் என்ன?

    ஒவ்வொரு நாளையும் எந்தவிதக் கவலையுமின்றி (அல்லது கவலையுடனும்)அனுபவிக்க முடிவதே உங்கள் உந்துதலுக்குக் காரணம்னு தோணுது.

    பதிலளிநீக்கு
  18. யாரய்யா என் பெயரை இங்கே இழுத்து விட்டது. I am disqualified ... ஏன்னா //வயது முதிர்ந்தவர்கள் என்று நான் குறிப்பிடும் போது எழுபது வயதைத் தாண்டியவர்கள் எழுதுவதுதான் விசேஷம். // என்னைத் தவிர்க்கவே இம்முடிவு எடுக்கப்பட்டது என்றே நினைக்கிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏன் எழுபதை அறுபத்தி ஒன்பதாக வைத்திருக்கக் கூடாது??
    இதையும் படியுங்கள் .. அந்தக் காலத்தில் அவசரப்பட்டு எழுதியது.
    http://dharumi.blogspot.in/2005/07/29_11.html

    பதிலளிநீக்கு

  19. @ நண்டு@நொரண்டு
    @ வருண்
    @ சூரி சிவா
    @ ஹரணி
    @ பாலகணேஷ்
    @ ரமணி
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ மதி சுதா
    @ அப்பாதுரை
    @ தருமி
    @ டாக்டர் கந்தசாமி
    அனைவருக்கும் நன்றி.
    இந்தப் பதிவு எனக்கு சில புதிய வாசக/எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தி உள்ளது. ( வருண், பாலகணேஷ், மதிசுதா, தருமி) மிக்க மகிழ்ச்சி.
    நான் பலமுறை எழுதி இருக்கிறேன் ஹரணியின் பின்னூட்டம் எனக்கு ஒரு டானிக் மாதிரி . நன்றி ஐயா.
    நான் மதுரை வந்திருந்தபோது திரு.தருமியை சந்திக்காதது எவ்வளவு பெரிய இழப்பு என்று தோன்றுகிறது ரமணி. உங்கள் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றி.
    அப்பாதுரைக்கு, டாக்டர் கந்தசாமி எழுதிய பின்னூட்டத்தை என் பதிவு ஆலய தரிசனம் gmbat1649.blogspot.in/2012/07/3.html -ல் காணலாம். திரு ஞானசம்பந்தனவர்களது தளம்
    sgnanasampandan.blogspot.com
    தருமி ஐயாவுக்கு ஒரு மினஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.
    முடிந்தவரை எல்லோர் பதிவுகளையும் படிக்க முயல்வேன். மதிசுதா மூலம் பல இலங்கை பதிவர்களின் முகவரிகள் கிடைத்தது/ மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. இளைஞர்களின் எழுத்தில் புதிய சிந்தனைகளும் முதியவர்களின் எழுத்தில் பழுத்த அனுபவங்களும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்க படிக்கும் நேரம்தான் பத்தமாட்டேன் என்கிறது. தங்களைப் போன்ற வயதில் மூத்தப் பதிவர்களின் எழுத்துக்கள் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. வாழ்க்கையின் பல நெளிவு சுளிவுகளைக் கண்டறியும் அற்புதத்தோடு, பலவித உபத்திரவங்களால் உடல் சோர்ந்தவேளையிலும் உள்ளம் சோர்வுறாது எழுத்தில் தங்களை அர்ப்பணித்து முதுமையை வெல்லும் வித்தையையும் கற்றுத்தருபவர்கள். அனைவரையும் அன்பாய் வணங்குகிறேன். இப்படியொரு பதிவின் மூலம் பல மூத்த பதிவர்களை அடையாளங்காட்டிய தங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  21. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லாரும் இதிலே இருக்காங்க. மத்தவங்க பதிவுகளையும் போய்ப் படிக்கணும். நேரம் இருக்கையில் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அருமையான பதிவர்கள் நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லோரும்.. தருமி அவர்களை மதுரையில் சந்தித்து இருக்கிறேன்.

    கீதமஞ்சரி சொல்வது போல் எல்லோரும் நன்கு எழுதுகிறார்கள் படிக்க தான் நேரம் இல்லை.
    ஊருக்கு போய்விட்டதால் எல்லா பதிவுகளையும் இப்போது தான் படித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. ஐயா , மற்றவர்களை வெளிச்சம் போட்டுக்காட்டப் பற்பலர் விரும்புவதில்லை . நீங்கள் பிறரை அறிமுகப்படுத்திப் பாராட்டுகிறீர்கள் . எவ்வளவு பெருந்தன்மை ! தொடர்க உங்கள் பணி !

    பதிலளிநீக்கு
  24. ஐயா , மற்றவர்களை வெளீச்சம் போட்டுக் காட்டப் பற்பலர் விரும்பவதில்லை . பிறரை அறிமுகப்படுத்திப் பாராட்டும் உங்களை மனமார வாழ்த்துகிறேன் . தொடர்க உங்கள் தொண்டு !

    பதிலளிநீக்கு
  25. ஐயா , மற்றவர்களை வெளீச்சம் போட்டுக் காட்டப் பற்பலர் விரும்பவதில்லை . பிறரை அறிமுகப்படுத்திப் பாராட்டும் உங்களை மனமார வாழ்த்துகிறேன் . தொடர்க உங்கள் தொண்டு !

    பதிலளிநீக்கு