Wednesday, October 15, 2014

கீதைப் பதிவு-12


                                                               கீதைப் பதிவு--12
                                                              ------------------------   


 அத்தியாயம் -12                                      


பக்தி யோகம்
அர்ஜுனன் சொன்னது
இவ்வாறு யாண்டும் யோகத்தில் உறுதிப் பாடுடன் உம்மை உபாசிக்கும் பக்தர்கள், மற்று நிர்க்குண பிரம்மத்தை உபாசிப்பவர்கள் ஆகிய இவர்களுள் யோகத்தை நன்கு அறிந்தவர்கள் யார்.?(1)
ஸ்ரீபகவான் சொன்னது

என்னிடத்தில் மனதை வைத்து யோகத்தில் நிலைத்தவராய், பெருஞ் சிரத்தை உடையவராய் யார் என்னை உபாசிக்கிறார்களோ அவர்கள் யோகத்தில் மேம்பட்டவர்கள் என்பது என் கருத்து(2)
ஆனால் யார் எங்கும் சம புத்தி உள்ளவர்களாய், இந்திரியக் கூட்டத்தை நன்கு அடக்கி, சொல்லுக்கு அடங்காததும், கட் புலனாகாததும், மனதுக் கெட்டாததும், எங்கும் நிறைந்ததும் மாறாததும் , நகராததும், நிலைத்ததும், அழியாததும் ஆகிய பிரம்மத்தை நன்கு உபாசிக்கிறார்களோ, எல்லா உயிர்களின் நன்மையில் ஈடுபட்டுள்ள அவர்கள் என்னையே வந்தடைகிறார்கள்(3,4)

நிர்க்குணப் பிரம்மத்தில் சித்தம் வைப்பவர்க்குப்பிரயாசை மிக அதிகம் ஏனென்றால் உடலுணர்ச்சி உடையவருக்கு நிர்க்குணப் பிரம்ம நிஷ்டை அடைதல் அரிதாம்,(5)
ஆனால் யார் வினையனைத்தையும் எனக்கு அர்ப்பித்து, என்னையே பரகதியாகக் கொண்டு, சிதைவுறா யோகத்தால் என்னை தியானித்து வணங்குகிறார்களோ, சித்தத்தை என்பால் வைத்த அவ்ர்களை, பார்த்தா, நான் மரண சம்சார சாகரத்தில் இருந்து  விரைவில் கரையேற்றுகிறேன்.(6,7)

என்னிடத்தே மனதை வைத்து என்னிடத்து புத்தியைச் செலுத்துக.பின்பு என்னிடத்தில் வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை.(8)
தனஞ்ஜயா, இனி சித்தத்தை என்பால் உறுதியாக வைக்க இயலாவிடின், அப்பியாச யோகத்தால் என்னை அடைய விரும்பு..(9)
அப்பியாசத்தில் உனக்கு வல்லமை இல்லையாயின் என் பொருட்டுக் கர்மம் செய்வதைக் குறிக் கோளாகக் கொள். எனக்காகக் கர்மம் செய்வதாலும் நீ சித்தியடைவாய்.(10)

இனி, இதைச் செய்தற்கும் இயலாதெனின், என்னிடம் அடைக்கலம் புகுதலில் பொருந்தினவனாய், தன்னடக்கம் பயின்று கர்மபலன் முழுவதையும் எனக்கு அர்ப்பணம் செய்.(11)
அப்பியாசத்தைவிட ஞானம் சிறந்தது. ஞானத்தினும் தியானம் மேலானது.தியானத்தைக் காட்டிலும் கர்மபலத் தியாகம் உயர்ந்தது .தியாகத்தினின்று விரைவில் சாந்தி வருகிறது.(12)
உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி, நட்பும் கருணையும் உடையவனாய், மமகாரம் அகங்காரம் அற்று, இன்ப துன்பங்களை சமமாகக் கருதி, பொறுமை படைத்து எப்போதும் சந்தோஷமாய் இருப்பவன், யோகியாய், தன்னடக்கம் உடையவனாய், திட நிச்சயம் உள்ளவனாய், என்னிடத்து மனம் புத்தியை சமர்ப்பித்தவனாய், யார் என் பக்தனாகிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்(13,14)

யாரிடமிருந்து உலகுக்கு இடர் இல்லையோ யார் உலகத்தினின்று இடர் படுவதில்லையோ, இன்னும் யார் களிப்பு, கோபம், அச்சம், கலக்கம், இவைகளில் இருந்து விடு பட்டவனோ அவன் எனக்கு உவந்தவன்(15)
வேண்டுதல் இலனாய், தூயவனாய்த் திறமை உடையவனாய் ஓரம் சாராதவனாய், துயரமற்றவனாய்க் காமிய கர்மங்களைத் துறந்தவனாய் என்னிடத்து பக்தி பண்ணுபவன் எனக்கு இனியவன் ஆகிறான்(16)
மகிழ்தலும் வெறுத்தலும் துன்புறுதலும் அவா உறுதலும் இன்றி, நன்மை தீமைகளைத் துறந்த பக்தனே எனக்குப் பிரியமானவன்(17)
பகையையும் நட்பையும் , அங்ஙனம் மானத்தையும் அவமானத்தையும் நிகராக்கிக் குளிர் வெப்பம், இன்பம் துன்பம் இவைகளை ஒப்பாக்கிப் பற்றற்றவன், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதும் மௌனி, கிடைத்ததில் திருப்தி அடைபவன் இருக்க இடம் தேடாதவன், உறுதியான உள்ளம் உடையவன், -பக்திமானாகிய அம்மனிதன் எனக்கு உவந்தவன்.(18.19)
சிரத்தை உடைய எந்த அன்பர் என்னையே கதியாகக் கொண்டு அமிர்தம் போன்ற இத் தர்மத்தை ஈண்டு உரைத்தபடி கடை பிடிக்கிறாரோஅவரே எனக்கு மிகவும் இனியவர்.(20)
                 பக்தி யோகம் நிறைவு       
 

   
  


 

 

 

 


14 comments:

 1. மொத்தத்தில் நல்லவன் என்று பெயரெடுக்க என்னென்ன மொத்த குணங்களோ அவைகளை உடையவன் 'அவனு'க்கு இனியவனாகிறான்.

  ReplyDelete
 2. //என்னிடத்தே மனதை வைத்து என்னிடத்து புத்தியைச் செலுத்துக.பின்பு என்னிடத்தில் வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை.//

  அவனிடம் மனம் வைக்க நினைத்தாலும் நிலைப்பதில்லை மனம்.....

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 3. சிரத்தை உடைய எந்த அன்பர் என்னையே கதியாகக் கொண்டு அமிர்தம் போன்ற இத் தர்மத்தை ஈண்டு உரைத்தபடி கடை பிடிக்கிறாரோஅவரே எனக்கு மிகவும் இனியவர்.(

  பக்தியோகத்தை எளிய முறையில் விளக்கியமைக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete

 4. //மகிழ்தலும் வெறுத்தலும் துன்புறுதலும் அவா உறுதலும் இன்றி, நன்மை தீமைகளைத் துறந்த பக்தனே எனக்குப் பிரியமானவன்//

  இதுபோன்ற பக்தனை காண்பது அரிது. இருப்பினும் இறைவன் எல்லா பக்தர்களுக்கும் பிரியமானவராக இருக்கிறார் என்பது சரிதானே.

  ReplyDelete

 5. @ ஸ்ரீராம்
  நல்லவர்களே கடவுளுக்கு இனியவராகின்றனர் என்று சொல்வது சரியா. நிறைய சிந்திக்க வைக்கிறது.

  ReplyDelete

 6. @ வெங்கட நாகராஜ்
  / அவனிடம் மனம் வைக்க நினைத்தாலும் நிலைப்பதில்லை மனம்/ கடவுளுக்கும் இது தெரியும். ஆகவேதான் பல்வேறு உபாயங்களைக் கூறுகிறார். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete

 7. @ இராஜராஜேஸ்வரி
  பாராட்டுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete

 8. @ வே.நடனசபாபதி
  /இதுபோன்ற பக்தனை காண்பது அரிது. இருப்பினும் இறைவன் எல்லா பக்தர்களுக்கும் பிரியமானவராக இருக்கிறார் என்பது சரிதானே./ சந்தேகமா? படிக்கும்போது எனக்குப்பல சந்தேகங்களெழுகின்றன. அவை பிறிதொரு பதிவில் விளக்கமாக. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 9. வெங்கட் நாகராஜை வழிமொழிகிறேன். என்னதான் பகவானிடம் மனம் வைக்க நினைத்தாலும் மனம் அதிலே நிலை பெறுவதில்லை என்பதே உண்மை.

  திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய பதிவு இது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 10. சிரத்தை உடைய எந்த அன்பர் என்னையே கதியாகக் கொண்டு அமிர்தம் போன்ற இத் தர்மத்தை ஈண்டு உரைத்தபடி கடை பிடிக்கிறாரோஅவரே எனக்கு மிகவும் இனியவர்.(20)//

  எல்லோரும் இறைவனை அடைய தான் முயற்சி செய்கிறோம்.
  இனியவராக இருக்க முயற்சிகள் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
  பக்தியோகத்தை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.  ReplyDelete
 11. //என்னிடத்தே மனதை வைத்து என்னிடத்து புத்தியைச் செலுத்துக. பின்பு என்னிடத்தில் வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை.//

  எது எதிலோ மனதைச் செலுத்துவது இனிதாகின்ற போது இறைவனிடத்தில் ம்னதைச் செலுத்துவது கடினமானதா!..

  விசித்ரமானது இதுவே!..

  கடினமாக இருக்கின்றது என அலுவலகப் பணியை வீட்டு விடுகின்றோமா!..

  பக்தி யோகத்தைத் தொடர்கின்றேன்.. ஐயா!..

  ReplyDelete

 12. @ கீதா சாம்பசிவம்
  வெங்கட் நாகராஜுக்குக் கொடுத்த மறு மொழியே உங்களுக்கும். தொடர்ந்து வாருங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 13. @ கோமதி அரசு
  /எல்லோரும் இறைவனை அடைய தான் முயற்சி செய்கிறோம்.
  இனியவராக இருக்க முயற்சிகள் செய்து கொண்டுதான் இருக்கிறோம்./ உண்மையாகவா..?தொடர்ந்து வாருங்கள். நன்றி

  ReplyDelete

 14. @ துரை செல்வராஜு
  நீங்களே கேள்வி எழுப்பி தீர்வும் சொன்னதுபோல் இருக்கிறது. தொடர்வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete