Friday, October 10, 2014

கீதைப் பதிவு-11


                                   கீதைப் பதிவு -அத்தியாயம் 11
                                   ----------------------------------------
விசுவ ரூபம் --ஒருகற்பனைகீதைப் பதிவு-11
விஸ்வரூப தர்சன யோகம்
அர்ஜுனன் சொன்னது
என்னைக் காத்தருளுதற்கு உம்மால் உரைக்கப்பட்ட மேலானதும் மறை பொருளுமாகியாஆத்ம தத்துவத்தைப் பற்றிய மொழியால் என் மயக்கம் ஒழிந்தது(1)
கமலக் கண்ணா,உயிர்களின் பிறப்பு, இறப்பு,  விரிவாக உம்மிடம் என்னால் கேட்கப்பட்டன;உமது முடிவற்றமஹிமையும் கேட்கப்பட்டது.(2)
பரமேசுவரா, தாம் தம்மைப் பற்றிப் பகர்ந்தது முற்றும் முறையே.( இனி) புருஷோத்தமா, உமது ஈசுவர வடிவத்தைக்காண விரும்புகிறேன்(3)
இறைவா,அதைப்பார்க்க எனக்கு இயலும் என்று எண்ணுவீராயின், யோகேசுவரா, உமது அழிவற்ற உருவத்தைக் காட்டி அருள்க.(4)

ஸ்ரீ பகவான் சொன்னது
பலவகைப்பட்ட, பல நிறங்களும் வடிவும் உடைய எனது தெய்விக உருவங்களை நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாய், இனிப் பார் பார்த்தா.(5)
ஆதித்தியர்களையும், வஸுக்களையும், ருத்திரர்களையும், அச்வினிகளையும் அங்ஙனமே மருத்துக்களையும் பார், முன்பு காணாத அதிசயங்கள பலவற்றைப் பார்.(6)
அர்ஜுனா, எனது இவ்வுடலிலே ஒன்று சேர்ந்துள்ள ஜங்கம ஸ்தாவரங்களாகிய ஜகத் முழுவதையும், மேலும் பார்க்க விரும்பும் வேறு எதையும் இப்போது பார்.(7)
ஆனால் உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண இயலாது.உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். எனது ஈசுவர யோகத்தைப் பார்(8)
ஸஞ்ஜயன் சொன்னது
 வேந்தே, யோகத்துக்குப் பேரிறைவனாகிய ஹரியானவர், இங்ஙனம் உரைத்த பின்பு பார்த்தனுக்கு, தம் மேலாம் ஈசுவர வடிவத்தைக் காட்டி அருளினார்.(9)
அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது;பல அதிசயக் காட்சிகள் கொண்டது.தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்விக ஆயுதங்கள் பல ஏந்தியது.(10)
திவ்யமான மாலைகளும் ஆடைகளும் அணிந்தது, திவ்ய கந்தம் பூசியது; பெரும் வியப்பூட்டுவது, பிரகாசிப்பது, முடிவற்றது, எங்கும் முகமுடையது.(11)
வானத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒருமிக்க உதித்திருக்குமானால் அது அம்மஹாத்மாவின்  ஒளிக்கு ஒப்பாகும்.(12)
அப்பொழுது பலவாய்ப் பிரிந்துள்ள உலகம் யாவும் தேவ தேவனுடைய  தேகத்தில் ஒன்றுகூடி இருப்பதைப் பாண்டவன் பார்த்தான்/(13)
பின்பு தனஞ்ஜயன் வியப்படைந்து, உரோமம் சிலிர்த்து, தேவனைத் தலையால் வணங்கிக் கை கூப்பிக் கூறுவானாயினன்(14)
அர்ஜுனன் சொன்னது.
தேவா. உமது உடலில் தேவர்கள் எல்லாரையும், உயிர்த் தொகுதிகள் அனைத்தையும், தாமரை மலர் மிசை இறைவன் பிரம்மாவையும், ரிஷிகள் எல்லாரையும், தேவ சர்ப்பங்களையும் காண்கிறேன்.(15)
உலக வடிவுடைய உலகநாயகா, எண்ணிறந்த கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள உடைய உமது அலகில்லா உருவத்தை எங்கும் பார்க்கிறேன். மேலும் உமது முடிவையோ, இடையையோ, துவக்கத்தையோ காண்கிறேனில்லை.(16)
கிரீடம் தரித்து. கதை தாங்கி, சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப்பிழம்பாய், காண்பதற்கரியவராய், சுடும் சூரியாக்கினி போன்றவராய், அளப்பரியவராய் உள்ள உம்மை நான் எங்கும் காண்கிறேன்.(17)
தாம் அழியாத பரம்பொருள்;அறியத் தகுந்தவர்இவ்வுலகுக்கு ஒப்பற்ற உறைவிடம் நீர்; மாறாதவர்; ஸநாதன தர்ம ரக்ஷகர்; என்றென்றும் உள்ள பரமாத்மா தாம் என என்னால் அறியப் படுகிறீர். (18)
ஆதி நடு அந்தம் இல்லாதவரும், முடிவில்லாத சக்தியை உடையவரும், சந்திர சூரியர்களைக் கண்களாக உடையவரும், வெந்தழல் வாய் படைத்தவரும், தமது தேஜஸினால் உலகம் யாவையும் எரிக்கின்றவரும் ஆகிய உம்மைக் காண்கிறேன் (19)
மஹாத்மாவே விண் மண் உலகின் உடைவெளியும் மற்ற திசைகள் யாவும் உம்மாலே நிரம்பப் பட்டிருக்கின்றன.உமது இந்த அற்புதமான உக்கிர வடிவத்தைக் கண்டு மூவுலகும் நடு நடுங்குகிறது.(20)
இவ்வானவர் எல்லோரும் உன்னிடம் புகுகின்றனர்.சிலர் அஞ்சிக் கை கூப்பி நின்னைப் புகழ்கின்றனர்,மஹரிஷி சித்தர் கூட்டத்தார் வாழ்கவென்று நிறைபுகழ் புரிந்து நின்னைப் போற்றுகின்றனர்..(21
உருத்திரர், ஆதித்தியர், வசுக்கள், சாத்தியர், விசுவேதெவர், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர், இவர்கள் கூடி வியப்படைந்து உம்மையே பார்க்கிறார்கள்,(22)
நெடுந்தோளோய், பல முகங்கள் கண்கள், பல கைகள், துடைகள், பாதங்கள், பல வயிறுகள், பயமுறுத்தும் பல வளைந்த பற்கள் உடைய உமது பேருருவைக் கண்டு,, உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.(23)
விஷ்ணுவே, வான் அளாவிப் பல நிறங்களுடன் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களை உடைய, கனல் வீசும் விசால்க் கண்களையுடைய  உம்மைக் கண்டு கலங்கிய நான் தைரியத்தையும் அமைதியையும் காண்கிறேன் இல்லை.(24)
தேவர் தலைவா, அச்சமூட்டும் கோரப் பற்களுடன் ஊழித் தீக்கு ஒப்பான உனது முகங்களைக் கண்டதும் எனக்குத் திசைகள் தெரியவில்லை.அமைதியும் அடைந்திலேன், வையகத்துக்கு வைப்பிடமே அருள புரிக.(25)
திருதராஷ்டிர புத்திரர் எல்லோரும் பார் ஆளும் வேந்தர் கூட்டத்துடனும் பீஷ்மர், துரோணர், சூதபுத்திரனுடனும், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும், பயங்கரமான கோரப் பற்களுடைய உமது வாய்களுள் பரபரப்புடன் பிரவேசிக்கிறார்கள், சிலர் பொடிபட்ட தலைகளோடு உமது பல் இடுக்குகளில் அகப்பட்டவர்களாகக் காணப் படுகிறார்கள்.(26,27)
பெருக்கெடுத்து விரைந்தோடும் நதிகள் பல கடலையே நோக்கிப் பாய்வது போன்று, யாண்டும் வெந்தழல் வீசும் உமது வாய்க்குள் இவ்வையக வீரர்கள் புகுகின்றனர்.(28)
நாசமடைதற்கு விட்டிற் பூச்சிகள் வெந்தழலில் விரைந்து வீழ்வது போன்று, நானிலத்து மாந்தரும் நாசமடைதற்கே நும் வாய்களுள் நுழைகின்றனர்(29)
வெங்கதிர் வாய்களால் உலகனைத்தையும் விழுங்கி, யாண்டும் நக்கி ருசி பார்க்கிறீர்.விஷ்ணுவே உமது கொடுஞ்சுடர்கள் வையகம் முழுவதையும் கதிர்களால் நிரப்பிச் சுடுகின்றன.(30)
பயங்கர மூர்த்தியாகிய தாம் யார் என்று எனக்கு இயம்பும்.உம்மை வணங்குகிறேன். தேவர் தலைவா, அருள் புரிக.முதல்வனாகிய தம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உம் செயல் எனக்கு விளங்கவில்லை.(31)

ஸ்ரீபகவான் சொன்னது.
உலகங்களை அழிக்கவல்ல காலம்நான். உலகங்களை சங்கரிக்கத்(சம்ஹாரம் செய்ய) தலைப்பட்டிருக்கிறேன்.நீ போரினின்று பின் வாங்கினாலும், எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர் வீரர்கள் எல்லோரும் வாழ மாட்டார்கள்(32)
ஆகையால் நீ எழுந்திரு.புகழைப்பெறு, எதிரிகளை வென்று செல்வம் நிறைந்த ராஜ்ஜியத்தை அனுபவி. இவர்கள் ஏற்கனவே என்னால் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இடது கையாலும் அம்பு எய்யும் வீரா, நீ நிமித்தமாக மாத்திரம் இரு,(33)
என்னால் கொலையுண்ட பீஷ்மரையும். துரோணரையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் அங்ஙனம் மற்ற போர் வீரர்களையும் நீ(என் கருவியாய் இருந்து) கொல். அஞ்சி வருந்தாதே. போரில் பகைவரை வெல்வாய். போர் புரி(34)
ஸஞ்ஜயன் சொன்னது
கேசவருடைய இம்மொழி கேட்டு கிரீடியானவன் நடுங்கிக் கை கூப்பி நமஸ்கரித்து அஞ்சி நன்கு வணங்கி மீண்டும் கிருஷ்ணனிடம் நாக்குளறி நவிலலுற்றான்(35)

அர்ஜுனன் சொன்னது
ஹிரிஷிகேசா, உமது புகழில் உலகம் இன்புற்று மகிழ்கிறது.ராக்ஷசர்கள் அஞ்சி நாலாபக்கமும் ஓடுகிறார்கள், சித்தர் கணங்கள் எல்லோரும் உம்மை வணங்குகிறார்கள். இவை யாவும் பொருத்தமானவைகளேயாம்(36)
மஹாத்மாவே, அந்தமில்லாதவரே, தேவேசா, ஜகந்நிவாசா, பிரம்மாவுக்கும் பெரியவரே, முதற்காரணமே உம்மை ஏன் அவர்கள் நமஸ்கரிக்க மாட்டார்கள்? தோன்றியதும் தோன்றாததும் அவ்விரண்டுக்கும் அப்பாற்பட்டதும் அழியாப் பொருளும் நீரே(37)
எண்ணிலா வடிவங்களை உடையோனே, முதற்பொருளே, தொல்லோனும் இவ்வுலகுக்கு மேலான இருப்பிடமும் தாமே ஆவீர். அறிபவரும், அறியப்படு பொருளும், அருட்பெரு நிலமும் ஆவீர்.உம்மால் உலகம் யாவும் நிறைந்துள்ளது(38)
வாயு,யமன்,அக்கினி, வருணன் சந்திரன்,பிரஜாபதி, முப்பாட்டனார் ஆகிய எல்லாம் ஆனவர் நீர். உமக்குப் பன்முறை நமஸ்காரம். ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரம்.(39)
எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும் பின் புறதிலும் நமஸ்காரம். எல்லாப் பக்கங்களிலும் உமக்கு நமஸ்காரம். அளவற்ற வீரியத்தையும் எண்ணிறந்த  பராக்கிரமத்தையும் உடைய நீர் அனைத்திலும் நன்கு வியாபித்து இருக்கிறீர். ஆதலால் நீரே யாவுமாயிருக்கிறீர்(40)
உமது இப்பெருமையை அறியாது, கவனமின்றி அன்பால் தோழன் என்று கருதி “ஏ கிருஷ்ணா யாதவா, ஏ கூட்டாளி என்று பணிவின்றி எது பகரப் பட்டதோ, அச்யுதா  விளையாடியபொழுதும் படுத்திருந்தபொழுதும், அமர்ந்திருந்தபொழுதும், உண வருந்துகையிலும், தனித்தோ பிறர் பார்வையிலோ இருந்தபொழுதும் , ஏளனமாக எங்ஙனம் அவமதிக்கப் பட்டீரோ அதை எல்லாம் , அளப்பிலோய் மன்னித்தருள்க.(41, 42)
ஒப்பற்ற பெருமை உடையவரே தாம் இந்த சராசர லோகத்துக்குத் தந்தை. போற்றுதற்குரியவரும் குருவுக்கு குருவும் ஆகிறீர். மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மிலும் மிக்கார் ஏது.?(43)
ஆதலால், தேவா, நான் காயத்தால் வீழ்ந்து வணங்கிப் போற்றத்தக்க ஈசனாகிய உமது அருளை வேண்டுகிறேன். மைந்தனுக்குத் தந்தை போன்றும், தோழனுக்குத் தோழன் போன்றும், காதலிக்குக் காதலன் போன்றும் பொறுத்தருளக் கடவீர்.(44)
தேவா, முன்பு காணாததைக் கண்டு மகிழ்ந்தவனாய் இருக்கிறேன்.மேலும் மனது அச்சத்தால் நடுங்குகிறது, முன்னைய இனிய வடிவத்தையே எனக்குக் காட்டுக. தேவேசா, ஜகந்நிவசா அருள் புரிக.(45)
முன்போலவே கிரீடமும்,கதையும், கையில் சக்கரமும் உடையவராய் உம்மைக் காண விரும்புகிறேன். ஆயிரம் கைகளுடைய விசுவ மூர்த்தியே, நான்கு கைகளுடைய அந்த வடிவத்தில் மட்டும் இருப்பீராக.(46)
ஸ்ரீபகவான் சொன்னது
அர்ஜுனா, அருள் நிறைந்த என்னால் யோக வலிவைக் கொண்டு, இந்த ஒளி நிறைந்ததும் முடிவில்லாததும், முழு முதலானதும் ஆகிய எனது மேலாம் விசுவரூபம் உனக்குக் காண்பிக்கப் பட்டது. உன்னைத்தவிர வேறு யாரும் இதை முன்பு கண்டதில்லை.(47)
குருகுலப் பெருவீரா, மனுஷ்ய லோகத்தில் உன்னைத் தவிர வேறு யாராலும், வேதம் ஓதி அறிவதாலும் , யக்ஞத்தாலும், தானங்களாலும், கிரியைகளாலும், உக்கிர தவங்களாலும் நான் இவ்வடிவத்துடன் காணக் கூடியவன் அல்லன்.(48)
இப்படிப்பட்ட எனது கோர ரூபத்தைக் கண்டு உனக்குக் கலக்கமும் மயங்கிய மன நிலையும் வேண்டாம். அச்சம் நீங்கி, மகிழ்ந்த மனதுடன் திரும்பவும் எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக.(49)
ஸஞ்ஜயன் சொன்னது
வாசுதேவர் இங்ஙனம் அர்ஜுனனுக்கு இயம்பிய பின்பு தனது சொந்த வ்டிவத்தை அப்படியே காண்பித்தார். மஹாத்மாவானவர் இனிய வடிவெடுத்து அஞ்சினவனைத் திரும்பவும்  தேற்றினார்.(50)
அர்ஜுனன் சொன்னது
 ஜனார்த்தனா, உமது இந்த இனிய மானுட வடிவங் கண்டு இப்பொழுது நான் மனம் தெளிந்து என் இயல்பை அடைந்தவனாய் இருக்கிறேன்.(51)
ஸ்ரீபகவான் சொன்னது
தரிசிப்பதற்கரிய எனது இந்த ரூபத்தை நீ தரிசித்திருக்கிறாய் இந்த ரூபத்தை தரிசிக்கத் தேவர்களும் எப்பொழுதும் இச்சிக்கிறார்கள்.(52)
நீ என்னை எவ்வாறு தரிசித்தாயோ அவ்வாறு நான் வேதங்களாலும் தவத்தாலும், தானத்தாலும் யாகத்தாலும் தரிசிக்க இயலாதவன்(53)
எதிரிகளை வாட்டவல்ல அர்ஜுனா, மாறாத பக்தியாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும் , காணவும் , அடையவும் கூடும்.(54)
பாண்டவா, எனக்காகக் கர்மம் செய்கிறவனும், என்னைக் குறியாகக் கொள்கிறவனும் என்னிடத்து பக்தி பண்ணுபவனும், பற்றற்றவனும் எல்லா உயிர்களிடத்தும் வெறுப்பற்றவனும் எவனோ அவன் என்னை அடைகிறான்(55)
                 விசுவ ரூப தரிசனம் நிறைவு.          
     
  

 


 

16 comments:

 1. தொடர்கிறேன்.

  இந்தப் படத்தை முன்னரே உங்களின் ஒரு பதிவில் பார்த்திருக்கிறேன்! :)))

  ReplyDelete
 2. //எதிரிகளை வாட்டவல்ல அர்ஜுனா, மாறாத பக்தியாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும் , காணவும் , அடையவும் கூடும்.(54)//


  உள்ளபடி உணரச் செய்யப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 3. பதிவு ரொம்பப் பெரிசு. விஷயம் ரொம்பக் கனமானது. இரண்டு முறை படிச்சேன். :)

  ReplyDelete
 4. மனதைத் தொட்ட சிறப்பான பகிர்வு ! மகாபாரதம் படம் பார்க்கும் போது
  கிட்டிய அதே உணர்வு கிட்டியது !தங்களின் இப் பகிர்வுக்குத் தலை
  வணங்குகின்றேன் ஐயா .

  ReplyDelete

 5. @ ஸ்ரீராம்
  ஆம் பர்த்திருக்கிறீர்கள். இந்தப் படம் பதிவுக்கு ஏற்ப இருந்ததால் மீண்டும். வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 6. @ கீதா சாம்பசிவம்
  விசுவரூபதரிசம் பெரிய அத்தியாயம் ஆகவே பதிவின் நீளம் அதிகமாய் இருக்கிறது. மாறாத பக்தியால் அடைய் முடியும் என்று பகவானே சொல்லி இருக்கிறாரே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete

 7. @ அம்பாளடியாள் வலைத்தளம்.
  இது பதினெட்டு அத்தியாயத் தொடர். நீங்கள் வந்திருப்பது பதினொன்றாம் அத்தியாயம் கீதையை ஒரு முறையேனும் வாசிக்க இதனை ஒரு வாய்ப்பாகக் கருதியே வெளியிடுகிறேன். வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 8. விஸ்வரூப தரிசனம் ..
  தொடர்கின்றேன்.. ஐயா!..

  ReplyDelete
 9. விசுவரூபத்தை நானும் மனக்கண்ணால் தரிசித்தேன்! நன்றி!

  ReplyDelete
 10. ஒப்பற்ற பெருமை உடையவரே தாம் இந்த சராசர லோகத்துக்குத் தந்தை. போற்றுதற்குரியவரும் குருவுக்கு குருவும் ஆகிறீர். மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மிலும் மிக்கார் ஏது.?

  விஸ்வரூப தரிசனத்தை அறியத்தந்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.!

  ReplyDelete

 11. @ துரை செல்வராஜு
  தொடர் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 12. @ வே.நடனசபாபதி
  விசுவ ரூபம் தரிசித்து மகிழ்ந்தற்கு நன்றி சார்

  ReplyDelete

 13. @ கரந்தை ஜெயக்குமார்
  தொடர் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 14. @ இராஜராஜேஸ்வரி
  வருகை தந்து மேலான கருத்துப்பகிர்ந்தமைக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 15. இந்த பாகம் மட்டும் தான் படித்தேன். பகிர்வுக்கு நன்றி முழுதும் படிக்க முயல்கிறேன்

  ReplyDelete