Wednesday, October 8, 2014

கற்றது கடுகளவு


                                   கற்றது கடுகளவு
                                   -------------------------


கீதைப் பதிவு இட ஆரம்பித்தபிறகு இரு பதிவுகளுக்கிடையில் ஒரு லைட்டான தலைப்பில் ஒரு பதிவு எழுதுகிறேன். கனமான விஷயங்களுக்கு நடுவே ஒரு லேசான தலைப்பு. ஆனால் இந்தப் பதிவை அப்படி லேசானது என்று கூறமுடியாதுஆன்மீக தலைப்புகளில் கவர்ச்சிகரமாக பதிவு இடுபவர்கள் நடுவில் கிடைத்த தலைப்பை ஆன்மீகப் பதிவாக்காமல் என் மனம் சொல்லியதை எழுதுகிறேன் ரத பந்தனக் கவி என்னும் முறையில் இறை இலக்கிய கர்த்தாக்கள் ஆண்டவனை வித்விதமாகக் கவி புனைந்து ஏற்றி வைத்திருக்கிறார்கள். நான் அவ்வளவு  பக்தி உடையவன் அல்ல. இருந்தாலும் இவர்கள் எழுதி இருந்த விதம் என்னைக் கவர்ந்தது.அந்தமாதிரி ஒரு வகைக் கவிதான் திருவெழுக்கூற்றிருக்கை என்பது. இதைப் பற்றி ஏதும் தெரியாமல் இருந்த எனக்கு அதன் வழிமுறைகளை விளக்கிய திரு.VSK அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டவன். சாதாரண வெண்பாவின் இலக்கண விதிமுறைகளையே முழுதும் அறியாத நான் இதன் மரபு வழியையும் அறிகிலேன். இருந்தாலும் என் வழியில் ஒரு கவிதை எழுதினேன். தலைப்பைக் கண்டே காத தூரம் ஓடியவர்கள் பலர் ஆகவே தலைப்பை மாற்றி அதையே மீள் பதிவாக இடுகிறேன்
ரத பந்தனக் கவி- பட விளக்கம்

திருவெழுக்கூற்றிருக்கை என்பது ரதபந்தனக் கவி எனப் படும் ஒன்று. கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி கோயிலிலும், கும்பேஸ்வரர் கோயிலிலும் இது எழுதி இருப்பது கண்டு, முன்பே ஒரு முறை விளக்கம் கேட்டு இடுகை இட்டிருந்தேன். சோமாயணம் கலாநேசனும் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அம்மாவும் இது குறித்து எழுதிய பின்னூட்டங்கள் மிகவும் உதவியாய் இருந்தன.

எனக்குள் நானும் ஒரு திருவெழுக்கூற்றிருக்கை  எழுதினால் என்ன என்று ஆசை எழுந்தது. என் தமிழ் தேர்ச்சி குறித்து எனக்கு உயர்வான எண்ணம் கிடையாது. இருந்தாலும் ஊர்க்குருவியாக வாவது பறக்க முடியுமா என்றும் ஒரு ஆசை. கடைசியில் கான மயிலாடக் கண்ட வான்கோழி போல் நானும் ஆட முடிவெடுத்தேன். அந்த முயற்சியே இது.

முதலில் திருவெழுக்கூற்றிருக்கை பற்றி சில குறிப்புகள்.


முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல்,பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த் தட்டுபோல் மேலே செல்வதும் கீழே செல்வதுமாக அமைந்திருக்கும் பாடல் பொதுவாக ஆண்டவனைப் போற்றி பாடுவதாகவே இருக்கிறது. வேறு விதமாகப் பாடக் கூடாதா என்று தெரியவில்லை.நான் முயன்றிருக்கிறேன். இலக்கண விதிகள் குறித்த குறிப்புகள் தெரியவில்லை. ஆகவே இதுவும் என் பாணியில் அமைந்திருக்கிறது..

ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி , மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321, என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திருவெழுக்கூற்றிருக்கை எனப் பெயர். இந்த வகையில் திருஞானசம்பந்தரும் ,அருணகிரியாரும் , திருமங்கை ஆழ்வாரும் பாடி இருக்கிறார்கள்.


இனி அடியேனின் பாடல்

 ஒருவராய்ப் பிறந்து, ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை.(121)

குலம் ஒன்று, சாதி இரண்டொழிய வேறில்லையென முக்காலமும் ஓதி, சக்தி சிவம் ஒன்றென்றே சாற்றுகின்றீர் ( 12321).

சொல் ஒன்றே,நன்றெனக் கூறி, எதிர்மறை இரண்டாய் இருத்தல் இயல்பென முத்தமிழிலும் நாற்றிசை ஒலிக்க மும்முறை சொல்லும் இருகுணம் கொண்ட ஒருவனும் நீயோ.(1234321)


குருதி நிறம் ஒன்று,பிறப்பிறப்பு இரண்டும் உண்டு எனப் படைப்பின் முத்தொழில் புரிவோர் நானிலத்தில் ஐம்புலன்களில் நால்வகை வர்ணங்கள் மூவுலகில் எங்கேனும் இரண்டில் ஒன்றாய்ப் படைத்தனரா.(123454321)


ஓருயிர் பெற்று, இரு பிறப்பெடுத்து, முத்தீ வளர்த்து,நான்மறை பயின்று, ஐவகை வேள்வி மூட்டி, அறுதொழில் செய்து ஐம்புலன் செறுத்து, நான்குடனடக்கி, முக்குணத்தில் இரண்டை அகற்றி ஒன்றுடன் ஒன்றுவோர் இன்றும் உண்டோ.(12345654321)

ஒன்று இரண்டாகி மூன்றுக்கு வழி வகுக்கும் இந்நானிலத்தில் ஐம்புலம் ஆளும் அருகதை ஆறறிவு படைத்த அனைவருக்கும் பொதுவன்றோ. ஏழு ஸ்வரங்களில் பேதம் கொணர்வது இகவாழ்வில் சரியோ. அறுசுவையுடன் அவலச் சுவையும் வேண்டுமோ.. வாய்ப்பென்று வரும்போது கையின் ஐ விரலும் சமம் என்றே உணராது வர்ணபேதம் முக்காலமும் மேடு பள்ளமென இரண்டுக்கும் காரணம் என்ற ஒன்றாவது சரியோ ( 1234567654321)


எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் ...என்றோ ஓதியது.எண்ணத்தில் ஓடியது. எண்ணால் எழுத்தால் இறை புகழ் பாட என்னால் இயலவில்லை. கண்முன்னே விரியும் அவலங்கள் அவனும் அறிவான்தானே.சம நீதி கிடைக்க இன்னும் அவன் அவதரிக்காதது என்ன நீதி.?
 
சக மனிதனிடம் கேள்வி கேட்பது போல் எழுத முயன்றிருக்கிறேன். சில அரும்பதங்கள்  பொருள் கூற வேண்டும் எனத் தோன்றியது . அவை.

முத்தீ = கார்ஹபத்தியம் , ஆஹவநீயம் ,தக்ஷிணாக்கினி போன்ற மூன்று வகை அக்னிகள்.
இரு பிறப்பு = முப்புரி நூல் இடுவதற்கு முன்னும் பின்னுமானது.
நான்மறை  = ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள்.
ஐவகை வேள்வி = தேவ யக்ஞம், பித்ருயக்ஞம், பூத யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், ப்ரஹ்ம்மயக்ஞம்
அறுதொழில், = யஜனம் ( யாகம் இயற்றுதல் ), யாஜுகம் ( மற்றவர்களை யாகம் செய்வித்தல் ) அத்யயனம் ( வேதம் ஓதுதல் ), அத்யாபக்ஞம் ( மற்றவர்களை வேதம் ஓதுவித்தல் ) தானம் ( மற்றவர்களுக்கு அளித்தல் )ப்ரதிக்ரஹம் ( மற்றவர்களிடமிருந்து பெறுதல்)
ஐம்புலன் செறுத்து = கண் முதலான ஐந்து புலன்களையும் அவற்றின் விஷயங்களில் செலுத்தாமல் நிறுத்தி
நான்குடனடக்கி = மனம் ,புத்தி, சித்தம் அஹங்காரம் ஆகிய நான்கையும் அடக்கி,
                 அல்லது ஆகாரம் , உறக்கம் ,பயம் உடலுறவு ஆகியவற்றை அடக்கி                    என்றும் கொள்ளலாம்
முக்குணத்தில் இரண்டை அகற்றி, = ரஜஸ் மற்றும் தாமஸ குணங்களை அகற்றி


ஒன்றுடன் ஒன்றுவோர் = மீதமுள்ள ஒன்றான ஸத்வ குணத்தில் நிலை நின்று.

பின் குறிப்பு:
( என் ஆசான் இதைப் படித்துப் பாராட்டினார். பின்னூட்டத்தில் இது சுவாமிமலை குருநாதனை போற்றிப் பாடும் அற்புதப் பாடல் என்று எழுதி இருந்தார். நான் எண்ணி எழுதாதது அவருக்கு அப்படித் தோன்றியது எப்படி.? விளங்கவில்லை.)
 

 
 
 
 

30 comments:

 1. திருவெழுக்கூற்றிருக்கை என்பது ரதபந்தனக் கவி எனப் படும் ஒன்று. //

  சார்! இதைப் பற்றியே இன்றுதான் கற்றுக் கொண்டோம் தங்களிடமிருந்து! புதிய ஒரு விஷயம். இது எப்படி எழுதப்படுகின்றது என்பதையே தங்களின் கவி மூலம் தான் கற்றுக் கொண்டோம்!

  மிக மிக அறிவும், ஞானமும் வெளிப்படும் கவிதைப் படைப்பு! எங்களுக்கு நீங்கள் எழுதியதில் பல வடமொழிச் சொற்ககள், அதாவது நம் வேத தத்துவங்களில் சொல்ல்ப்படும் வார்த்தைகள் இருந்ததால் முதலில் புரியவில்லை1 தாங்கள் கொடுத்துள்ள விளக்கங்களை வாசித்த பிறகு வாசித்த போது புரிந்தது! தாங்கள் சகமனிதனிடம் கேட்க நினைத்து எழுப்பிய கேள்விகள் புரிந்தது! மிகவும் நியாயமானக் கேள்விகள்! ஆனால் பதில் கிடைக்குமா? தாங்கள் மிகவும் ஹை லெவலில் சிந்திக்கின்றீர்கள் சார்! நீங்களே கற்றது கடுகளவு எனும் போது நாங்கள் அந்தக் கடுகிலும் கடுகாய் ஒரு சிறிய தூசியாய் ஆகி விடுகின்றோம்! எங்கள் அறிவும் சிற்றறிவுதான்.

  இந்தக்கவிதை அமைப்பு முதலில் புரியவில்லைதான். தேர் அடுக்கு என்று நீங்கள் சொல்லியிருந்ததை மனதி வைத்துப் படிக்க நினைத்ததால். பின்னர்தான் வரிகளில் உள்ள வார்த்தைகளில் தான் அந்த அடுக்கு உள்ளது என்று புரிந்தது. இப்படிக் கூட கவிதை அமைப்பு இருக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்ட போதுமிகவும் வியப்பாக இருந்தது!

  சரி கற்றுக் கொண்டோம்! முயற்சி செய்து பார்க்கலாமே என்றா ஆர்வம் எழுந்துள்ளது. முடியுமா என்று தெரியவில்லை.

  இன்றுதான் நாங்களும் கிட்டத்தட்ட இதைப் போன்ற, எங்களாலும் கவிதை எழுத முடியுமா, வெண்பா இலக்கணமோ, மரபுக் கவிதைய்லக்கணமோ ஒன்றும் அறியாத நாங்கள் என்று நினைத்து இடுகை ஒன்றை இட்டுள்ளோம். எங்கள் சிற்றறிவுக் கவிதைகள் படைத்து. எங்கள் நடையில்! தங்கள் கவிதகள் போல் அறிவு மிக்கது கிடையாது!

  சமீபத்தில் கும்பகோணம் சென்றிருந்த போது கும்பேசுவரர் கோயில் சென்றிருந்தோம். ஆனால், அன்று பிரதோஷம் கூட்டம் காரணமாக இதையெல்லாம் பார்க்க முடியவில்லை. மேலும் சென்ற சமயம் அந்தி மறையும் நேரம் என்பதால். அடுத்த முறை கெஹ்ல்லும் போது கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

  மிக்க நன்றி சார்! ஒரு புதிய விஷயம், கவிதை அமைப்பு பற்றிக் கற்றுக் கொண்டோம்.

  ReplyDelete
 2. ரதபந்தனக் கவி பற்றி தங்களின் விளக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டேன்..

  தாங்கள் வடித்த கவியைப் படிக்க - பிரமிப்பு ஏற்படுகின்றது!..

  வாழ்க வளமுடன்!..

  ReplyDelete
 3. திருப்புகழில் ஓருருவாகிய தாரகப்பிரமத்து எனத்தொடங்கும் பாடலும் ,திரு எழு கூற்றிருக்கையும் பிரார்த்தனையாகப் பாடப்படும் பெருமை பெற்றவை..

  தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.. வாழ்த்துகள்.!

  ReplyDelete
 4. திருப்புகழில் ஓருருவாகிய தாரகப்பிரமத்து எனத்தொடங்கும் பாடலும் ,திரு எழு கூற்றிருக்கையும் பிரார்த்தனையாகப் பாடப்படும் பெருமை பெற்றவை..

  தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.. வாழ்த்துகள்.!

  ReplyDelete
 5. பிரமாதம். உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

  ReplyDelete
 6. தங்களின் கவி கண்டு மய்ங்கினேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
 7. ராதா பந்தனக் கவியின் அமைப்பை அறிந்தோம்.மிகக் கடினமான பா வகையாக தோன்றுகிறது. முயற்சி செய்து வெற்றியும் பெற்று விட்டீர்கள்.
  திருஞானசம்பந்தர் ,அருணகிரியார் , திருமங்கை ஆழ்வாரர் இவர்க பாடிய திருவெழுக்கூற்றிருக்கையையும் எடுத்துக் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஐயா

  ReplyDelete
 8. இந்தக் கவிதை வடிவைப் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 9. வணக்கம் ஐயா !

  கவிதை எழுதும் போது எதுவும் புரியவில்லை சமீப காலமாகத் தான்
  கவிதை எழுதுவதில் பல்வேறு நுட்பங்கள் இருப்பதாக அறிந்து கொண்டேன் அதில் இதுவரை அறியாத புதிய தகவல் "ரத பந்தன "கவியாகும் !பிரமிக்க வைக்கும் தங்களின் தேடலும் அதைத் தொடர்ந்து முயற்சித்து மிகவும்
  சிறப்பான முறையில் எழுதப்பட்ட கவிதையையும் காணும் போது நானும் மட்டற்ற மகிழ்ச்சியடைத்தேன் ஐயா !தங்களின் முயற்சிகள் மேலும்
  சிறப்பாகத் தொடரட்டும் .மிக்க நன்றி ஐயா அழைப்பிற்கு !

  ReplyDelete
 10. வணக்கம் ஐயா!

  இத்தனை திறமையை உங்களுக்குள் வைத்துக் கொண்டா எனக்கு ஒன்றும் தெரியாது என்றீர்கள்!..

  அற்புதம் ஐயா! மொழித்திறமை, வழுவின்றி எழுதும் வல்லமை, இனிமை எப்படி எல்லாம் உங்களிடம் காண்கின்றேன்!
  மிக அருமை ஐயா!

  ஐயா!.. என் தந்தையின் தந்தை ஒரு தமிழ்ப் பண்டிதர்.
  அவர் காலத்தில் புத்தங்களில் தேர்க்கவி வெண்பா என இயற்றிப் பதிவிட்டவர் என என் தந்தை கூறக் கேட்டிருக்கின்றேன். என் தந்தையும் வெண்பாவாக அல்லாமல் கலிவிருத்தமாக இப்படித் தேர்க்கவி எழுதியதை நான் பார்த்திருக்கின்றேன்.
  கைவசம் அவர் எழுதியது ஒன்றும் இல்லை.
  கிடைத்தால் மீண்டும் இங்கு தருகிறேன்.

  உங்கள் முயற்சி மிக அருமை ஐயா!
  உளமார வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 11. வணக்கம்!

  வாழ்த்துக்கள்!

  எழுகூற்றிருக்கையைக் கண்டு மகிழ்வுற்றேன்.

  இறைவன் மீது பாடியதால் திருவெழுகூற்றிருக்கை எனப் பெயா்பெற்றது.

  இதன் இலக்கணத்தை மாறனலங்காரம் சொல்லணியியல் 297 ஆம் நுாற்பா உரைக்கும்.

  இதுவரை வந்த எழுகூற்றிருக்கை அனைத்தும் ஆசிரியப்பாவால் உள்ளது.

  திருஞானசம்பந்தா், திருமங்கை மன்னன், அருணகிரி நாதா் ஆகிய மூவர் எழுதிய திருவெழுகூற்றிருக்கை ஒவ்வொன்றும் தோ் அமைப்பில் மாறுப்பட்டுள்ளது.

  எழுகூற்றிருக்கை மரபுக்கவி வகையைச் சாரும். மரபுக்கவி இன்றி, ஒன்று இரண்டு, மூன்று, என்ற கருத்துக்களை மட்டும் வைத்து எழுதுவது எழுகூற்றிருக்கை ஆகாது.

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 12. அறியாதன அறிந்தேன். தங்களின் கவிதை எழுகூற்றிருக்கையின் இலக்கணப்படி எழுதப்பட்டதா இல்லையா என தமிழ் புலமை உள்ள கவிஞர் கி. பாரதிதாசன் போன்றோர் சொல்லலாம். ஆனாலும் தங்களின் முயற்சி பாராட்டக்குறியதே.

  ReplyDelete

 13. @ துளசிதரன் தில்லையகத்து
  உங்கள் வரவும்பின்னூட்டமும் மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் சிந்திக்கிறோம். சிலர் வெளிப்படுத்துகிறோம். சிலர் மனதில் பூட்டி வைக்கிறோம். கற்றுக் கொள்ள வயது ஒரு பொருட்டல்ல. இதை நான் எழுதி பல நாட்களாயிற்று. ஆனால் வலைப்பூவில் மேலோட்டமாகப்படிக்கும் வழக்கமே பலருக்கும் இருக்கிறது. யாரையும்குறை சொல்லமுடியாது. வாழும் வாழ்க்கையின் வேகம் அப்படி. இருந்தாலும் எழுதினவனுக்கு அது பலரால் படிக்கப்பட்டால் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி. ஆகவேதான் இதனை மீள் பதிவாக்கினேன்; உங்கள் வலைப் பூவின் தொடர்பாளன் நான். எந்தக் கவிதையும் பார்க்கவில்லையே. மீண்டும் நன்றி.

  ReplyDelete

 14. @ ஸ்ரீராம்
  பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete

 15. @ துரை செல்வராஜு
  இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் கவிஞர்.கி. பாரதிதாசன் பின்னூட்டம் பாருங்கள். நம் இறை இலக்கிய கர்த்தாக்கள் எழுதியதைப் படிக்கும் போது இதெல்லாம் நான் கற்றது கடுகளவு என்று எண்ண வைக்கிறது. என் சிறு முயற்சியைப் பாராட்டுவதற்கு நன்றி.

  ReplyDelete

 16. @ இராஜராஜேஸ்வரி
  திருப்புகழில் ‘ஓருருவாகிய தாரகப் பிரம்மத்து’ என்னும் கவிதை படித்துப் பார்த்தேன். உங்கள் சில பின்னூட்டங்கள் படிக்கும் போது உங்களுக்குத் தெரியாத விஷயமே இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. really genius madam. உங்கள் பதிவுகளைப் பார்க்கும் என் மனைவி ஒரு முறைஉங்களைக் காண வேண்டும் என்கிறார். பாராட்டுக்கு நன்றிமேடம்.

  ReplyDelete

 17. @ டாக்டர் கந்தசாமி
  வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 18. @ கரந்தை ஜெயக் குமார்
  வரவுக்கும் ரசிப்புக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 19. @ டி. என். முரளிதரன்
  கடினமான பா வகைதான். கவிஞர்.கி. பாரதி தாசன் பின்னூட்டமும் பாருங்கள். ஞான சம்பந்தர் திருமங்கை ஆழ்வார் ஆகியோரது திருவெழுக்கூற்றிருக்கை இரு பாடல்கள் முன்பே பதிவிட்டிருந்தேன் அப்போது யாரும் பார்த்துப் படித்து ரசித்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை பொருள் புரிவது கஷ்டமாயிருந்ததால் இருக்கலாம். ஆகவேதான் என் இந்தப் பாடலுக்குவிளக்கமும் சில அருஞ்சொற்பத அர்த்தங்களும் கொடுத்தேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 20. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
  வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete

 21. @ அம்பாளடியாள் வலைத் தளம்
  பதிவுகளில் கவிதைகளே எழுதி வரும் உங்களைப் போன்றோரின் கருத்து அறியவே அழைத்திருந்தேன். வருகைக்கு நன்றி மேடம்.

  ReplyDelete

 22. @ இளமதி.
  வஞ்சனை இல்லாமல் பாராட்டுகிறீர்கள் நன்றி. உண்மையிலேயே எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உண்டு. மரபுக் கவிதைகள் எழுத முயன்றபோது எழுதுவதற்காக வார்த்தைகளைத் தேடும்போது எண்ணங்கள் சிதை படுவது தெரிந்தது. ஆகவேதான் அதைத் தொடரவில்லை. வார்த்தைகளும் எண்ணங்களும் ஒன்றிப் போய் எழுதுவோரைக் கண்டால் கோபிக்கக் கூடாது, எனக்குப் பொறாமை. உங்கள் தந்தையின் தேர்க்கவி வெண்பா ஏதாவது கிடைத்தால் அனுப்பித் தாருங்களேன் இந்த ஊர்க்குருவியைப் பாராட்டுவதற்கு நன்றி.

  ReplyDelete

 23. @ கவிஞர்.கி. பாரதிதாசன்
  உங்கள் வருகையும் பின்னூட்டமும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது you call a spade . a spade இந்த முறை எனக்கு உடன்பாடே. அதனால்தான் கவிஞர்களுக்கும் கவிதாயினிகளுக்கும் வாசிக்க அழைப்பு விடுத்தேன் நான் எழுதியது எழுக்கூற்றிருக்கையின் சாயல் கொண்டது . அதனால்தான் நானே என் பாணியில் என்றேன். நீங்கள் கூறி இருக்கும் மாறனலங்காரம் சொல்லணி எனக்கு படிக்கக் கிடைக்காதது. இந்த முயற்சியும் நான் கான மயிலாட என்னும் முறையில் முயன்றதே. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 24. @ வே.நடன சபாபதி
  நானே இது இலக்கணமரபுப்படி எழுதியது என்று சொல்லவில்லையே. என் பாணியில் ஒரு முயற்சி அவ்வளவுதான். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 25. தமிழ் இலக்கணமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் ரதபந்தனக் கவி குறித்து அறிந்திருக்கிறேன். தங்கள் முயற்சி மிக அரியது. அருமையான முயற்சிக்குப் பாராட்டுகள். உங்கள் குருவுக்கும் பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete

 26. @ கீதா சாம்பசிவம்
  எனக்கும் தமிழ் இலக்கணமெல்லாம் தெரியாது. ஏதோ ஒரு உந்துதல் .முயன்றேன். தமிழ் இறை இலக்கியகர்த்தாக்கள் எழுதி இருப்பதைப் படித்தால் பொருள் புரிவதில்லை. அப்படி இருக்கக் கூடாதென்றே இதை எழுத முயற்சித்தேன். என் எழுத்தில் என் ஆதங்கம் என்னை அறியாமலே வெளிப்படுகிறது. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 27. ரத பந்தனக் கவி – இப்பொழுதான் முதன் முறையாகக் கேள்விப்படுகிறேன். இதிலும் நீங்கள் நுழைந்து வந்து விட்டீர்கள். என்னால் சட்டென்று புரிந்து கொள்ள இயலவில்லை. திரும்பத் திரும்ப இந்த பதிவைப் படித்தால்தான் நுட்பம் புரியும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete

 28. @ தி தமிழ் இளங்கோ
  நுட்பம் புரிய வேண்டுமென்றே இவ்வொரு படியின் போதும் எண்ணிக்கை கொடுத்திருக்கிறேன் நானும் முதன் முதலில் இது பற்றிக் கேள்விப்பட்டவுடன் என் பாணியில் எழுத வேண்டுமென்று தோன்றியதால் , நீங்கள் சொல்வதுபோல் நுழைந்து விட்டேன் வந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 29. அய்யா,
  வணக்கம். முதலில் உங்களின் முயற்சி பாராட்டிற்குரியது என்பதில் சந்தேகமில்லை.
  சித்திரக்கவிகள் எனப்படும் மிறைகவிகள் எனக்குத் தெரிந்து தமிழகத்தில் யாருமிருப்பதாகத் தெரியவில்லை.
  நிரொட்டகம் எழுத்துவருத்தனம் போன்ற எளிய வடிவங்களை முயலுவோர் இருக்கலாம்.
  இலக்கண நூல்களில் இவ்வடிவம் தெளிவுபட இல்லை.
  முதல் ஏழு நிலங்களிலும் எண் ஏறி இறங்கி, ஏழாம் நிலத்தில் உச்சம் பெற்று, பின்னேழு நிலங்களும் ஒன்று இறுதி இறங்கிய பேரிறக்கமுமாக அமைக்கப்பட்டுள்ளது.
  முழுமையான வடிவில்லை.
  நான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.
  நான் தமிழ்ப்பண்டிதனில்லை.
  கற்ற பெரியாரின் துணையும் எனக்கில்லை.
  முட்டி மோதித்தானே கற்றபதுதான் என் வரமும் சாபமும்.
  நிச்சயம் தங்களுக்கான பதிலோடு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
  நன்றி

  ReplyDelete