சனி, 20 நவம்பர், 2010

இலவசமாக வருவதே தரம்

தரம்   முற்றிலும்   இலவசம்

100%  பரிசீலனை
------------------------
கீழே  கொடுக்கப்பட்டுள்ள  பத்தியைப்  படிக்கும்போதே  அதில்  வரும்  f   என்ற எழுத்தை  எண்ணிக்கொள்ளுங்கள் .இரண்டாம்  முறை  எண்ணாதீர்கள். அது  200%  பரிசீலனை ஆகும்.   100%  ஆகாது.     

The  necessity  of  training  farm  hands  for  first class  farms  in  the  fatherly  handling  of  farm  livestock  is
foremost  in  the  minds  of  farm  owners. Since  the  forefathers  of  the  farm  owners  trained  the  farm  hands for  first  class  farms  in  the  fatherly  handling  of   farm  livestock,  the  farm  owners  feel  they  should  carry  on  with  the  family  tradition  of  training  farm  hands  of  first  class  farms  in  the  fatherly  handling of  farm  livestock  because  they  believe   it  is  the  basis  of  good  fundamental  farm  management.

ஒரு  பொருளை  உற்பத்தி  செய்பவர்  அது  தரமானதாக   இருக்க  வேண்டும்  என்பதற்கு  என்னென்ன   வகைகளில்   முயற்சி   எடுத்துக்கொள்கிறார்  (அல்லது )எடுத்துக்கொள்ள   வேண்டும்  என்று  பார்ப்போம். இது  உற்பத்தி  செய்யப்படும்   எல்லா  பொருள்களுக்கும்   பொருந்தும் .

 1)  வாடிக்கையாளரின்   தேவையைப்   புரிந்து   கொள்ளல்.
 2)  Design   என்று   சொல்லப்படும்   வடிவமைப்பு.
 3)  உற்பத்தி  செய்யப்படவேண்டிய   பொருளுக்கேற்ற   மூலப்பொருள். (Raw material)
 4)  வடிவமைப்பிற்கு   ஏற்றபடி  உருமாற்றம்  செய்யத்  தேவையான   மெஷின்                   
 5) வடிவ  மாற்றம்  செய்ய   வழிமுறைகள் (Operation  Process)
 6) மூலப்பொருளை  வடிவ  மாற்றம்  செய்ய  நல்ல  வேலை  தெரிந்த  பணியாளர்கள்
 7) உற்பத்தியான  பொருட்களின்  தரம் பற்றிக்  கணிக்க  உதவும்  சோதனை  நிலையம்
 8) உற்பத்தி  செய்யப்படும்  பொருட்களை  சீரான  முறையில்  பாக்  செய்யும்  வழிமுறைகளும்  தொழிலாளிகளும் .
 9) உற்பத்தியான  பொருட்கள்  பாதுகாப்பான  முறையில்  டிரான்ஸ்போர்ட்  செய்தல்.


இப்படி  வாடிக்கையாளரின்  எதிர்பார்ப்புக்கு  ஏற்ற  முறையில்  செயல்  படும்போது, தரமானதாக   இருப்பதற்காக  செய்யும் செலவு , அப்பொருளை  பரிசீலனை  செய்ய எடுத்துக்கொள்ளும  நேரத்திற்கானது மட்டுமே.   செய்யப்படும்  வழி முறையிலேயே   தரத்தை உட்புகுத்தி விட்டால் தரத்துக்காக எந்த  விலையும் செலவும் இல்லை. .                                               
பிறகு  தரத்தின்  விலை  என்பதுதான்  என்ன.?
நிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லாமலிருக்கும்போது அதை  சரி  செய்ய  அல்லது  அந்தப்  பொருளையே   மாற்றத்  தேவையான  செலவே  தரத்தின்  விலையாகும். எந்த  மறு  வேலையும்,  அல்லது மாற்று  வேலையும் தேவைப்படாத  விதத்தில்  பொருள்   உற்பத்தி செய்யப்பட்டால்  தரத்திற்கென்று தனி  விலை  கிடையாது. இது  உற்பத்தி   செய்பவருக்கும் , வாடிக்கையாளருக்கும்  கூடவே  பொருந்தும்.

சில உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நூறு  சதவீதம்  பரிசீலனை  செய்து தரம் பிரித்து நல்ல பொருட்களையே   தேர்ந்தெடுத்து  அனுப்புவதாக நம்புகிறார்கள். ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட  சிறு  சோதனை  ஒவ்வொருவருக்கும்   வெவ்வேறு  விடையை  கொடுத்திருக்கும் ..இந்த சோதனை  மூலம்  நூறு சதவீதம் பரிசீலனை மூலம் தரம் பிரிப்பதென்பது உத்தரவாதமானது   அல்ல  என்று அறியலாம். பரிசீலனையில் பிரிக்க வேண்டிய எழுத்து தரமற்றது  என்று
வைத்துக்கொள்வோம்.

தரத்துக்கென்று தனி செலவோ விலையோ  கிடையாது .எதிர்பார்ப்புகளும்  அதை  நிறைவேற்ற  வேண்டி செய்யப்படும் செலவே ஒரு பொருளின்  விலையை  நிர்ணயிக்கும். தரம் என்பதற்கு  தனி செலவு  கிடையாது. அது  முற்றிலும்  இலவசம்.
------------------------------------------------------------------------------






 








     























.

சனி, 13 நவம்பர், 2010

நான் நாத்திகனா ஆத்திகனா..?

 நான் ஆத்திகனா, நாத்திகனா. ஒரு ஆய்வு.
(இங்கு நான் என்பது என்னைப்போல் பலரையும் குறிக்கும் என்று கொள்க.)

இந்தக்  கேள்விக்குப்  பதில்  தேடும்  முன்பு  ஆத்திகன்  என்பவன்  யார்  நாத்திகன்  என்பவன் யார் என்று தெரியவேண்டும். ஆண்டவன்  அல்லது  கடவுள்  இருக்கிறான்  என்று நம்புபவனை  ஆத்திகன் என்றும் ,கடவுள் இல்லை  என்று நம்புபவனை நாத்திகன் என்றும் சாதாரணமாகக்  கூறுகிறோம். ஆக, இரு சாராருக்கும்  அவர்கள்  கொண்டுள்ள எண்ணம் நம்பிக்கையின்பால்  அமைந்ததே. நம்பிக்கை  என்பது உணர்வு  பூர்வமானது. இதில் எது  சரி  எது தவறு  என்ற  பேச்சுக்கே  இடமில்லை.

ஆண்டவன் இருக்கிறான், எல்லாம் அவன் திட்டமிட்டபடிதான் இயங்குகிறது, என்று நம்புகின்றவர்களை ஆத்திகர்கள் என்று சொல்கிறோம். எவரும் எதையும் திட்டமிட்டு
இயக்கவில்லை, ஏதோ ஒரு நியதிப்படி இயங்குகிறது. அங்கு கடவுள் என்று சொல்லப் படுபவர் யாரும் இல்லை என்பதே சாதாரணமாக நாத்திகர்களின் வாதமாக இருக்கிறது. ஆக, நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை இரு சாராரும்  உணருகிறார்கள்.

காண முடியாத சக்தியை சிலரால் உணர முடிகிறது. கடவுள் உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் அந்த சக்தியை உணருகிறார்களா என்ற கேள்வி   எழுந்தால், 90  விழுக்காட்டுக்கு  மேல்  உணராதவரே  இருப்பார்கள். பின்  கடவுள் நம்பிக்கை என்பதே பிறந்து  வளர்ந்த  சூழல் , வளர்க்கப்பட்ட  முறை, கற்றுத்தேரிந்த  விஷயங்கள்  என்பதைச் சார்ந்தே  அமைகிறது.

எங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார்  செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம்.

ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறது. தாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்.  சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாக, ஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்.

இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும், பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  ஆகாயம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின .

இந்த நம்பிக்கைகளினால்   உந்தப்பட்டு, வாழ்க்கை   நடத்தும்  நாம் ஆத்திகர்களா.? ஆத்திகன் என்று சொல்லிக்கொள்ள அடிப்படையிலான குணம்தான் என்ன.?கோவிலுக்குப  போகிறோம் , ஆண்டவனை  ஏதோ ஒரு உருவில்  தரிசிக்கிறோம் ,சில  வேண்டுதல்களை  சமர்ப்பிக்கிறோம் . இவற்றை எல்லாம் செய்யும்போது  நம் மனம்  அல்லது உள்ளம்  எவ்வளவு  ஈடுபாடு  கொண்டுள்ளது.?வேண்டுதல்கள்  வெறும்  வாயளவிலும்  தரிசனம்  சில பழக்க  வழக்கப்படி தன்னிச்சையாகவுமே  நடைபெறுவதாக  நான் உணருகிறேன். இங்கு நான் என்று  சொல்லும்போது  என்போல்  ஏராளமானவர்கள்  இருக்கிறார்கள் என்றும் உணருகிறேன். ஆக, இந்த புற வழிபாடு  செய்பவர்கள்  எல்லோரும்  ஆத்திகர்களா.?

காலங்காலமாக  நமக்குக்  கற்பிக்கப்பட்டுவந்த இந்த நம்பிக்கைகளும்  பாடங்களும்  ஆண்டவன் நல்லது  செய்பவர்களுக்கு  நல்லது  செய்வான்  என்றும், கெடுதல்  விளைவிப்பவர்கள்  அதன் பலனை  அடைவார்கள்  என்பதை வலியுறுத்துவதாகவும்  அமைந்துள்ளது. வினை  விதைத்தவன்  வினை அறுப்பான் , தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான் போன்ற  போதனைகளும்  இவற்றின்  அடிப்படையில்  அமைந்ததே.

மனசால், வார்த்தையால், செயலால்  நல்லதே  நினைத்து , நல்லதே பேசி, நல்லதே செய்து  வாழ  உதவுகின்றன  கடவுள் கதைகளும் வழிபாட்டு  முறைகளும். காலம்  காலமாக  கற்பிக்கப்பட்டுவந்த நம்பிக்கைகளின்  அடிப்படை  உண்மைகளைப்  புரிந்து  கொள்ளாமல்  வெறும் கதைகளிலும்   சடங்குகளில்  மட்டுமே தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு வாழ்பவன்  ஆத்திகனா.? வாழ்வின்  உண்மை  நிலைகளைப்  புரிந்துகொண்டு வெறும் கதைகளையும்  சடங்குகளையும் மறுதளிப்பவன் நாத்திகனா.?

நாயகன் திரைப்படத்தில் ஒரு காட்சி. மகள் தந்தையைப் பார்த்துக்  கேட்கும்  கேள்வி.  
" அப்பா,  நீங்கள் நல்லவரா ,கெட்டவரா" தந்தை  கூறுவார், " தெரியவில்லையே, அம்மா", என்று. நானும்  கேள்வி கேட்டு விட்டேன், இப்போது சொல்லுங்கள்,  நான்  ஆத்திகனா,  நாத்திகனா. .?
       -----------------------------------------------------------------------------------------------------















.





  

தரம் எனப்படுவது யாதெனில்.....

QUALITY  அல்லது  தரம்   ஒரு  அலசல்
--------------------------------------------------------
தினசரி  வாழ்வில்  சில விஷயங்களைப் பற்றி நிறையவே பேசுகிறோம்; கேள்விப்படுகிறோம். ஆனால் அந்த விஷயம் பற்றிய தெளிவு நமக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. அப்படிப்பட்ட  ஒரு விஷயம் குவாலிடி  என்று  சொல்லப்படும்  தரம். உற்பத்தியாளர்களிடம்  தரம் பற்றிக்  கேட்டால்  கொடுக்கப்பட்டுள்ள   வரைமுறைக்குள்  இருப்பதே (Specification  limits ) தரம் என்பார்கள். வெகுஜனங்களிடம்  இது பற்றிக் கேட்டால் குறிப்பிட்டு  எந்த  பதிலும்  சரிவரக்  கிடைக்காது. பெரும்பாலோர்  தரம் பற்றிகருத்துக்  கூறுவது  ஏதோ  ஒரு யூகத்தின்  அடிப்படையிலேதான் .பலரும்  விளம்பரத்தின்  அடிப்படையிலேயே  தரம் பற்றிய எண்ணங்களைக்  கொள்கிறார்கள் .  

  ஒரு  பொருளோ சேவையோ   தரமாகஇருக்கிறதா  யில்லையா  என்பதை  நிர்ணயம் செய்யும் நமக்கு அந்தப் பொருளைப்  பற்றிய விஷய  ஞானமோ  சேயல்திறனோ  முழுவதுமாக இருப்பதில்லை. அதை  ஓரளவு  விளக்கவே  இந்தக்  கட்டுரை.

தரம் அல்லது குவாலிடி என்றால் என்ன.? உபயோகிப்பவரின் தேவையைப பூர்த்தி செய்யும் திறன்  அந்தப் பொருளுக்கோ சேவைக்கோ இருநதால் அது  தரமாக உள்ளது என்று   கொள்ளலாமா.? தேவையைப்  பூர்த்தி செய்வதே  தரம் என்றால், அரிசி  உளுந்து    அரைத்து ஆவியில்  எடுக்கும் இட்லிசெய்யும் பணிஒன்றுதான்.  பசியாற்றும்,.  பின்  எதற்காக  அதன்  விலை வெவ்வேறு   இடங்களில்  வித்தியாசமாய் இருக்கிறது.? கையேந்திபவனில்  கிடைப்பதும் இட்லிதான் , ஸ்டார் ஹோட்டலில்  கிடைப்பதும் இட்லிதான். அதே அரிசி மாவு உளுந்து  மாவு, ஆவியில் வேக வைத்ததுதான். இட்லி உண்பவருக்கு  பசியாற்றல் , வயிறு நிறைத்தல்  மட்டுமின்றி  வேறு  எதிர்பார்ப்புகளும்  உண்டு.

ஒரு தொலைக்காட்சிப் பெட்டி  வாங்குகிறோம். அதில் செய்திகள், சினிமா, பாடல்கள்  பார்க்க  முடிகிறது. நம்மில்  பெரும்பாலோருக்கு  டி வி  எப்படி செய்யப்படுகிறது என்றோ எப்படி வேலை  செய்கிறது என்றோ தெரியாது. இருந்தாலும்  அந்தப் பெட்டியைவிட  இது நல்லது, இது மோசம், என்று எதை  வைத்துக் கூறுகிறோம். தொலைக்காட்சிப்   பெட்டியில்  படம்  பார்ப்பதைத்  தவிர  நமக்கு வேறு எதிர்பார்ப்புகளும்   உண்டு. இதே  போல்  ஒவ்வொரு  பொருளுக்கும்  அது செய்யும் பணியை விட, உபயோகிப்பவருக்கு  வேறு  எதிர்பார்ப்புகள் உண்டு என்று தெரிகிறது.

தரம் என்பதன் முதல் அர்த்தம் அது உபயோகிகப்படக் கூடியதாய் இருக்க வேண்டும்.It should be fit for use. ஆனால் அது மாத்திரம்  போதாது. கையேந்தி பவனில், நின்று   கொண்டு, இலையோ தட்டோ, கையில்  பிடித்துக்கொண்டு  உண்ண  வேண்டும். அது   பசியைப்  போக்கும் பணியைச் செய்துவிடும். அந்தத் தேவை மட்டும் போதுமென்று  வருபவர்கள் கையேந்திபவனில்  உண்பார்கள். அதற்கு  அவர்கள்  கொடுக்கும் விலையும் குறைவு. அதே இட்லி, ஸ்டார் ஹோட்டல்களில் , குளிர்சாதன  அறையில் நல்ல  இருக்கைகளில்  அமர்ந்தவுடன் , உங்களைப்  பெரிய  மனிதராகப்  பாவித்து,  உங்களுக்குச்  சேவை  செய்ய, சீருடை  அணிந்த வெயிட்டர்கள், மெனு  கார்டை  உங்களிடம்  கொடுத்து, கையில் பேனா  புத்தகத்துடன்  உங்கள்  ஆர்டரைப்  பதிவு  செய்து , சிறந்த  தட்டு , ஸ்பூன் , போர்க் , போன்ற  கருவிகளுடன்  இட்லியை  அதற்கு   துணையாகச  சட்டினி  மிளகாய்ப்பொடி, இத்யாதி  வகைகளையும்  வைக்கும்போது , உங்களைப்பற்றிய  உங்கள்  கணிப்பு , உங்கள் மதிப்பு  உயருகிறது . இங்கு  இட்லி பசி  போக்கும் பணியுடன்  உங்கள்  மதிப்பை  உயர்த்தும்  பணியையும்  கூடவே  செய்கிறது.அதற்கு  ஏற்றாற்போல்  நீங்கள் செலவு செய்யும்  தொகையும்  அதிகம். அப்படி  செலவு  செய்யும் மக்களும்  நிறையவே இருக்கிறார்கள். கையேந்திபவன்  இட்லிக்கும்  ஸ்டார்  ஹோட்டல்  இட்லிக்கும் இட்லியைப்  பொறுத்தவரை  பெரிய வித்தியாசங்கள்துவும் இல்லை. கையேந்திபவனில் இட்லி  உண்பவரின்  தேவையும்  ஸ்டார் ஹோட்டலில்  இட்லி உண்பவரின் தேவையும் வித்தியாசப்படுகின்றன. ஆகவே, வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்வதே தரத்தின்  முக்கிய நோக்கம். தேவைக்குத்  தக்கபடி  விலையும் வித்தியாசப்படும்.

வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை  பூர்த்தி செய்வதே   தரம்  என்று கொள்ளலாமா. ?எதிர்பார்ப்புகள்தான்  என்னவாக  இருக்கலாம்.? முக்கியமாக  நிர்ணயிக்கப்பட்ட  பணி நிறைவேற  வேண்டும். அதன் பிறகு  அதன் தோற்றம் , அது கொடுக்கப்படும்  விதம்    சேவை , அதன் விலை, (appearance, packing, service, reliability, price,) நம்பகத்தன்மை  போன்ற விஷயங்கள்  ஒரு பொருளின் தரத்தை  நிர்ணயம் செய்யும். இவை  எல்லாம் இருந்தாலும்  நமக்கு  தேவைப்பட்ட  நேரத்தில்  அந்தப் பொருள்  கிடைக்கா விடடால் பிரயோசனப்படாது. நிறைய  இடங்களில் வாங்கப்படும்  பொருள் பற்றிய விஷய   ஞானமே  இல்லாமல்  தத்தைப் பற்றி நாம்  பேசுகிறோம். வாங்கும்  பொருளைப்  பற்றிய  நமது  தேர்வே  இறுதியானது. சந்தையில்  நமக்கு தேர்வு செய்ய சாய்ஸ்  நிறைய  இருநதால் அது வாங்குபவர்  சந்தையாகும். தேர்வு செய்ய வசதி  இல்லாமல் இருநதால் அது விற்பனையாளரின்  சந்தையாகிறது.  விற்கப்படும்  பொருளைப்பற்றியவிளம்பரம்வியாபாரத்தின் முக்கியஉத்தியாகும். ஆனால்வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகள்  திருப்தி அளிக்கப்படாவிட்டால்  எந்த விளம்பர  தந்திரமும்  நிலைக்காது.

ஐம்பது  பைசாவுக்கும்  சாக்கலேட்  கிடைக்கும், பத்து ரூபாய்க்கும்  சாக்கலேட் கிடைக்கும். எதிர்பார்ப்புகள்தான் வித்தியாசம். தினசரி வாழ்வில்  ஒரே பணியை செய்யக்கூடிய  சாதனங்கள் , பொருட்கள், சேவைகள்  நிறையவே வந்து  விட்டன அவை எந்த அளவுக்கு வாடிக்கையாளரை  திருப்தி  செய்கிறது.?அதிக விலை கொடுத்து  வாங்குவதுதான்  பொருளின் தரத்துக்கு  உத்தரவாதம்என்ற வாதம்சரியல்ல. தரம் என்பது  உற்பத்தி  செய்பவரால்  மட்டும் நிர்ணயிக்கப்  படுவதல்ல வாடிக்கை யாளரை  திருப்திப்  படுத்துவதே  தரத்தின்  முக்கிய பணி.
                     
நாம் நமக்கு அடுத்தவரை வாடிக்கையாளராக கருதத் தொடங்கினால் நம்முடைய
வாழ்க்கை  தரமுள்ளதாக  அமையும்.
                                 ------------------------------------------
  .

சனி, 6 நவம்பர், 2010

DEVAN MAHAA DEVAN ORU SIRU KATHAI

                                                  தேவன்   மகா   தேவன்
VINGHIP   POTTIYA  HIRUTHAYAMUMAI   ஆங்கில  எழுத்துக்களில் எழுதப்பட்ட மலையாள  கடிதத்தின்  ஆரம்பம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது.
பழைய கடிதங்களைப் பாதுகாத்து அதைப் படித்து அந்தக் கடிதங்களின் பின்னணிகளை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில் சில மணி நேரம் வாழ்வது வாசுவின் பொழுது  போக்கு .இந்தக் கடிதத்தை எழுதிய  தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது  வாசுவுக்கு.  தேவனும் வாசுவும் பழகிய நாட்கள்  என்னவோ கொஞ்சம்தான்.இரண்டு  மாதத்துக்கும் சற்று ஏறத்தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த நாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இரண்டு மாத நட்பை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா.. ?ஏன்  முடியாமல் ..? பழைய கடிதங்களைப   பாதுகாத்து  வைத்திருக்கிறானே ... ஆனால் தேவனோ  ...?
பெங்களூரில்  வேலைக்குச் சேர்ந்த  அந்தக் காலத்தில் தங்க நேர்ந்த அந்த லாட்ஜில் "த்ரீ மஸ்கிடீர்ஸ் "என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர்  வாசுவும் தேவனும் சந்துருவும் , இதில் சந்துரு எல்லோரையும் விட மூத்தவன். ஏதோ ஒரு கம்பனியில்  குமாஸ்தாவாக  இருந்தான். தேவன் வேலை தேடி  கேரளத்திலிருந்து  வந்தவன். வாசு  அப்போதுதான்  ஒரு தொழிலகத்தில்  பயிற்சியாளனாகச சேர்ந்திருந்தான் . மற்றவரை விட  இளையவன்.
"இப்போது தேவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? எப்படி இருப்பான்..?  பார்க்க வேண்டும்   போல் தோன்றுகிறதே..! " எண்ணியதை  சொல்லில் கூறி செயலில் காட்டாவிட்டால்  வாசுவுக்கு  தலை  வெடித்துவிடும்போல்  தோன்றியது.
" இந்த பழைய குப்பைகளையெல்லாம்  மாய்ந்து  மாய்ந்து படிப்பதில் அப்படி என்ன சுகமோ "--வாசுவின் மனைவி  தங்கம் அவன் நினைவுகளைக் கலைத்தாள்
"இந்தக் கடிதத்தைப்  படித்துப்  பாரேன் தங்கம் .முடிகிறதா  புரிகிறதா  சொல். "
" உங்களுக்குத்தான்  வேறு வேலை இல்லை என்றால் .. சரி  சரி ..காட்டுங்கள்   VINGHIP   POTTIYA  ...ஐயே .என்ன இது..?இங்கிலீஷில்  இங்கிலீஷுமல்லாமல்  எனக்கு முடியலைப்பா "
" இங்கே  கொண்டா .நான் படித்துக்காட்டுகிரேன்.  விங்கிப  பொட்டிய ஹிருதயமுமாய்  நிங்களை  விட்டுப் போரேண்டி  வன்னதில் எனிக்கி  கூடுதல்  விஷமிச்சு. ..தேவனுக்குத  தமிழ்  தெரியாது.எனிக்கி மலையாளம்  கொறச்சு  அறியும். அதனால்தான் இந்த முறை.
தேவனைப்  பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது தங்கம். அவன் இந்த விலாசத்தில் இருப்பானா.. ? போய்ப்  பார்க்கலாம்... நீயும் வாயேன் ".
"அவ்வளவு  தூரம்  பணம்  செலவு  செய்து  போய  அவர்  அங்கே  இல்லாவிட்டால்  எல்லாம்  விரயமாகும்."
" ஏன்  விரயமாக  வேண்டும் .? நமக்கும் பொழுது  சற்று  மாறுதலாகப்  போகும். ஏற்பாடு  செய்கிறேன். ரெடியாக  இரு. "
பெருங்கோட்டுகா ... வழி திருச்சூர்  என்று  விலாசமிருக்கிறது. எப்படியும் திருச்சூர்  போய  அங்கிருந்து  விசாரித்துப்  போய்க்  கொள்ளலாம். திருச்சூருக்கு  டிக்கெட் புக்  செய்ய வேண்டும்  என்று  எண்ணியவாறே   வாசு  ரெயில்வே   ஸ்டேஷனுக்குப  புறப்பட்டுச்  சென்றான்.
"நீளமாய  கழுத்துள்ள  பெண்கள்  சந்தமாய்  இருக்கும்....அறியோ   வாசு. ?"தேவனின்  குரல்  இப்போதும்  கேட்கிறது.
"வேலை  தேடி  ஊர்  விட்டு  ஊர் வந்து  பெண்களின்  கழுத்தைப்  பற்றி ஆராய்ச்சி  செய்யாதே. முதலில்  வேலை."
 "ஆமாம், இவன்  பேசற  பாஷை  யாருக்கும்  புரியாது. இவனுக்கெல்லாம்  எவன்  வேலை  கொடுப்பான் ", சந்துருவுக்கு  தேவன் சொல்வது   புரியாததால்  வரும் கோபத்தில்  சபிப்பான்.
"அது  எந்தா.. ஆரும்   பணி  தரில்லே..?  இன்னால்   வேண்டா. ..சந்துரு  எனிக்கி  வேண்டி  ஒன்னும் செய்யண்டா.  ஞான   எங்கனே  எங்கிலும்   ஜீவிக்கும் ".
எப்படியாவது  பிழைத்துக்கொள்வேன்   என்று  சொன்ன தேவனுக்கு  அதை நிரூபிக்க   வேண்டிய  நிர்பந்தம்  கூடிய  சீக்கிரத்திலேயே  ஏற்பட்டது. ஊரிலிருந்து  செலவுக்குப்  பணம்  வரவில்லை. லாட்ஜில்  நெருக்கினார்கள். இல்லை என்றால்  காலி  செய்யச்  சொன்னார்கள்.
தேவனும்  வேறு  வழி இல்லாமல்  அவனுடையப்  பெட்டியை  வாசுவிடம்   கொடுத்து   பத்திரமாக  வைத்துக்கொள்ளும்படியும் , பணம்  கிடைத்ததும்  அதைத்  திரும்பப்  பெற்றுக்  கொண்டு  போவதாகவும்  கூறினான்.
"தேவா, உனக்கு  நன்றாகத்தெரியும், எங்களுடைய நிலை. சந்துருவின்  பின்னால்  அவன் சம்பாதிப்பதைக்  கொண்டு  வாழ   ஒரு பட்டாளமே   இருக்கிறது. எனக்கோ  பயிற்சி  நேரத்தில் ரூபாய்  முப்பதுதான்  ஒரு  மாதத்துக்குக்  கிடைப்பது. ..இதில் என்னதான்  செய்ய  முடியும்..?"
"ஏய்ய் .. வாசு  விஷமிக்கண்டா.. எனிக்கி  அறியும். .என்டே  சமயம்  இங்கனேயுண்டு .எந்து  செய்யாம்..?"
அடுத்தநாள்   தேவனின் பெட்டியைப்  பறிமுதல்  செய்ய , லாட்ஜ்  முதலாளி  முயன்றதும் வாசு  அதைக்  கொடுக்காமல்  தகராறு  எழுந்து, போலீஸ்  ஸ்டேஷன்  வரை   தகராறு   போனதும்  வேறு  கதை.
ரயிலில்  இடம்  பிடித்து   அமர்ந்து, பயணம்  செய்யும்போது ,  அந்த  வாலிப   நாட்களே  வந்தது  போலவும்  நிகழ்ச்சிகள்  எல்லாம்  நேற்று   நடந்தது  போலவும்   வாசுவுக்குத்   தோன்றியது.
"தங்கம் , உன்னைக்  காதலித்துக்  கலியாணம்  செய்து   கொள்ளும்   முன்பே   எனக்கு   ஒரு    காதலி   இருந்தாள்   தெரியுமா  உனக்கு,?"
"நீங்கள்   ஆயிரம்   பெண்களைப்   பார்த்திருப்பீர்கள் ,  எல்லோரையும்   மனசால்   காதலிக்கவும்  செய்திருப்பீர்கள். ஆனால்  யாராவது  உங்களை  காதலித்து  இருக்கிறார்களா .?"
 "என்னைக்  காதலிக்க  எந்தப்  பெண்ணுக்குத்தான்  கசக்கும்.? ஆனால்  நான்  சொல்லும்  இந்தக்  காதல்  தேவனால்  தடம்  புரண்டு  விட்டது..நாங்கள்  தங்கியிருந்த   லாட்ஜுக்கு  அருகே  ஒரு பால்  கடை   இருந்தது. அங்கு  பால்  வாங்க  ஒரு பெண்   தினமும்  வருவாள். நாங்கள்  இரவு   உண்ட  பிறகு  சில நாட்களில்  பால்  அருந்த  அங்கு   செல்
வோம். அவளை அங்கு   அடிக்கடி   பார்ப்போம் .ஹூம் .!  பார்த்தால்   எனக்கு உடம்பு  ஒரு  மாதிரியாய்  படபடக்கும் , நாக்கு  வறண்டு   பேச்சு  சரியாக  வராது. இதெல்லாம்   காதலின்   வெளிப்பாடுகள்   என்று தேவன்   விளக்கம்  சொல்லுவான். நானும்  அதை   நம்ப   ஆரம்பித்தேன். ஆனால்   அவளிடம்   எப்படிப்   பேசுவது, எங்கு   பேசுவது,  அவள்  பேசுவாளா   ஒன்றும்  புரியவில்லை. தேவன்   இதற்கு  ஒரு  வழி  செய்வதாகக்   கூறி   அபயமளித்தான். "--வாசு  கதைபோல்  விவரிக்க   தங்கத்துக்கும்    சற்றே   உற்சாகம்  பற்றிக்கொண்டது.
" ஆமாம்.. அப்போது  உங்களுக்கு  என்ன  வயசிருக்கும், ?"
"பதினேழு    பதினெட்டு   இருக்கலாம்"
"அடப்பாவி .! பிஞ்சிலேயே   பழுத்த   கேசா.?"
"இல்லை   தங்கம் ,.உலகத்தையே   புதிசாகப்   பார்க்கும்   வயசு.  எல்லாவற்றையும்   சோதனை   செய்து   பார்க்கும்   வயசு. யாரையும்   உடனே   நம்பும்   வயசு. சந்தர்பபங்கள்   அமைந்திருந்தால் , யார்  கண்டது, ..ஒரு சமயம்  பிஞ்சிலேயே  பழுத்திருக்கலாம்"
"அது சரி . .அந்தப்பெண்ணுக்கு எவ்வளவு  வயசிருக்கும்   என்ன  பேர்  ஏதாவது   தெரியுமா .?'
"அவளுக்கு  பதினெட்டு  இருபது  வயசிருக்கலாம். பெயர்  தெரியாது..ஆனால்  என்   மனசுக்குள்   நான்  அவளுக்கு   வைத்த பெயர்   அகிலா. எனக்கு  எல்லாமே  இந்த   அகிலமே  அவள்தான்  என்று   தோன்றும். "
"சீ..!  நீங்கள்   இப்படிப்பட்டவர்  என்று   தெரிந்திருந்தால்....."
"ஏன் .  என்னைக்  காதலித்து  இருக்க  மாட்டாயா? கலியாணம்  செய்து  இருக்க  மாட்டாயா "                                                                                                                                

 இப்போது   அதைப் பற்றி  நினைப்பது   டூ   லேட் . தவிர்க்க   முடியாததை   அனுபவிக்கதானே   வேண்டும். இருந்தாலும்  இப்போது   நோ  ரிக்ரேட்ஸ் .வருத்தமேதும்  இல்லை. "
"எனக்கு  அதுவும்  தெரியும். தேவனைப்  பற்றி  சொல்லிக்கொண்டிருந்தேன் . எப்படயாவது  அந்தப்  பெண்ணைப்  பற்றிய  செய்திகளை  சேகரிக்கப போவதாகக்  கூறினான். வேலை  இல்லாதவனுக்கு  நல்ல வேலை  என்று சந்துரு  கிண்டல்  பேசினான். அடுத்த  நாள் பயிற்சி  முடிந்து  அறைக்குத்  திரும்பும்போது  தேவன்  அங்கு  பொறுமையில்லமல்    எனக்காகக்   காத்திருப்பது   தெரிந்தது. வாசு ..ஆ  பெண்ணின்டே  ஸ்தலம் அறிஞ்சஎன்று  கூவினான். பிறகு  அந்த  வீட்டையும்  காட்டினான். வீடு  தெரிந்தவுடன் அந்தப்  பெண்ணைப்  பார்க்காவிட்டால்  தலை  தெறித்து விடும்  போல்  தோன்றும் .அந்த  வீட்டின்  முன்பாக அங்குமிங்கும்  அடிக்கடி  நடப்பேன் வீட்டு  முன்னால்  ஷூவுக்கு  லேஸ்  கட்டும்  சாக்கில்  உள்ளே  ஆராய்ந்து  பார்ப்பேன். ஆனால் என்  கண்ணில்  மட்டும்  அவள் தென்பட  மாட்டாள். தேவன்  என்னைத்  தமாஷ்  செய்கிறான்  என்று அவனிடம்  கோபித்துக்  கொண்டேன். தேவன்  சொன்னான் , நான்  அங்கு  போகும்  நேரத்தில்  அவள்  எங்கோ  தட்டெழுத்துப்  பயிலச் செல்கிறாளோ   என்னவோ என்று. அதன் பிறகு  அடுத்துள்ள  தட்டெழுத்துப்  பயில்விக்கும்  இடங்களுக்கு  முன்பு  நின்று  நோட்டம்  விட   ரம்பித்தேன். அவள் என்  கண்களில் படவே இல்லை. பிறகுதான் அது  நடந்தது. " என்றஒரு  சஸ்பென்ஸ்  கொடுத்து  நிறுத்தினான்  வாசு.
"என்ன  பெரிய சஸ்பென்ஸ் ...ஒரு  நாள்  அவளைப்  பார்த்தீர்கள் , பல்  இளித்தீர்கள்   அவள்  உங்களைக் கண்டு   கொள்ளவே இல்லை .பிறகு  சேச்சே ...இந்தப் பழம்  புளிக்கும்    என்று  வந்து  விட்டீர்கள் ..அவ்வளவுதானே "  என்று கிண்டல் செய்தாள்   தங்கம்.
"அதுதான்  இல்லை. அவளுடைய  பெயரை  அறிந்து   வருகிறேன்  என்று  சொன்ன  தேவன் , அவர்கள்  வீட்டின்  அருகே  விளையாடிக்  கொண்டிருந்த  ஒரு   சிறுவனைக்  கூப்பிட்டு ,நிறைய  மிட்டாய்களைக்  கொடுத்து   அந்தச் சேச்சியின்  பெயரைக்  கேட்டு   வா --என்று  அனுப்பி   இருக்கிறான். அந்தப்  பையன்  வீட்டிற்குள்  சென்ற   சற்று   நேரத்
தில்  அந்தப்  பெண்  வெளியே  வந்திருக்கிறாள் .அந்தப்  பையன்  தூரத்தில்  இருந்த  தேவனைக்  காட்டி  ஏதோ சொல்ல , அந்தப் பெண்  உள்ளே சென்று  மறுபடியும்  வெளியே  வந்தபோது, பெரிய  மீசை  வைத்த  இரண்டு  ஆட்களும்  கூட  இருந்தனர். தூரத்தில்   நின்று  பார்த்துக்  கொண்டிருந்த  தேவன்   மெல்ல  நழுவப்  பார்க்க    ஓடி  வந்து  அவனை
பிடித்து  நன்றாக  தர்ம  அடி  கொடுத்து  அனுப்பி  இருக்கிறார்கள் . பாவம், தேவன்  முகமெல்லாம்  வீங்கி  உதடு  காயப்பட்டு  ரத்தம்  தெரிய  வந்ததை  நிறையப்  பேர்   பார்த்திருக்கிறார்கள் . அவமானமாக  இருந்தது,  என்று  சொல்லிச் சொல்லி   மாய்ந்தான்  பாவம், என் காதலுக்காக  அடி  வாங்கினான் " --என்று  பெருமூச்சுடன்  கூறி  நிறுத்தினான்  வாசு.
 "அவர்  உங்களைக்  காட்டிக்  கொடுத்து , உங்களையும்  அவர்கள் புடைக்கவில்லையா .?'
"அந்த  மட்டில்  தேவனுக்கு  நன்றி  சொல்ல வேண்டும் "
திருச்சூர்  சென்று  அங்கு  ஒரு  ஹோட்டலில்  தங்கி , ஒரு நாள் இருந்து  பிறகு , பெருங்
கோட்டுக்கா  என்ற இடம்  எங்கு  இருக்கிறது  என்று  விசாரித்து  அங்கு  சென்றால்  வாசுவிற்கு  முதலில்  ஒன்றுமே  புரிய வில்லை. அந்த  இடத்தில் ஒரே  கூட்டமாக  இருந்தது. அது  ஒரு ஆசிரமாம். அதன்  தலைவர்  பிரம்ம  தேவ  சுவாமிகள்  அன்று  காலையில்தான்  இந்த  பூத  உடலை விட்டு உயிர்  நீத்தாராம்.  அவருக்கு  மரியாதை  செய்ய  கூட்டம்   கூட்டமாக  மக்கள்  சென்று  கொண்டிருந்தனர்.  வாசுவுக்கு   சற்றே  ஏமாற்றமாக  இருந்தது.  சரி  வந்ததுதான்  வந்தோம்  அந்த ச்வாமிகளையாவது  வணங்கி செல்லலாம்  என்று  அருகே  சென்றால்......
 வயதான  தேவன்தான்  பிரம்மதேவ  சுவாமிகள்.  அருகில்  இருந்தது  யார்..? வயதான  தோற்றத்தில்  அகிலாவா..?   வாசுவின்  அகிலாவா...?!
                                                 --------------------------------------
             

சனி, 30 அக்டோபர், 2010

VALAIPPOO PATHIVIL EN KURAIKAL

                                                வலைப்பூ  பதிவில்   என் குறைகள்                   

                 11-08-2010  தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான "வலைப்பூ  ..ஒரு
வாய்ப்பூ " என்ற கட்டுரையைப் படித்தவுடன் நாமும் ஒரு வலைப்பூவைத் துவக்கினால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. இளவயதில் என் சுய திருப்திக்காக   நிறையவே எழுதுவேன். பத்திரிகைகளில் பிரசுரிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.நாடகங்கள்  எழுதி இயக்கி நடிக்கும் ஆர்வமிருந்தது. ஐந்தாறு நாடகங்களை  மேடைஏற்றிய  அனுபவமும்  உண்டு. இந்தப்பின்னணியில்  என் எழுத்தார்வம் ஆனந்த விகடன்  கட்டுரையைப்  படித்தவுடன் வலைப்பூ துவங்கலாமா என்று சிந்திக்கசசெய்தது. கணினியில் மின்னஞ்சல் எழுத, படிக்க, மற்றும் சீட்டு விளையாடுவத என்ற அளவில் மட்டுமே என் அறிவு ,அனுபவம் இருந்தது. எனக்காக என் பேரன ஒரு வலைத்தளம் அமைத்துக்கொடுத்தான். முன்பின் வலைப்பூக்களையே  பார்த்திராத எனக்கு gmb writes என்ற தலைப்பும் வைத்துக் கொடுத்தான். என் முதல பதிவே அவனுக்கு நன்றி சொல்வதாக இருந்தது.
               நான் ஒரு வலைத்தளம் ஆரம்பித்து  எழுதினால்  படிப்பது யார். ? இப்படி ஒரு வலைத்தளம் இயங்குவதையே  யார்  அறிவார் ?என் உறவுகளுக்கு  தெரியப்படுததினால் ,தமிழில் படிக்கவும் ஆர்வம் காட்டவும் உள்ள உறவுகள் மிகச் சொற்பம் .என கனிடம் நான் இது பற்றிக் கூற, என்னையறிந்த  ஓரிருவர் எனக்கு உற்சாகமூட்டஎன் வலைப்பூவைப் படிப்பதாகவும்  அவனுக்கு வாக்களித்தனர். 
              இந்த நிலையில்  என் வலைப்பூவைத்  தமிழ்மணத்தில்  இணைக்க முயன்றேனநிறைய  முயற்சிகள்  தோல்வியடைந்தன.. தமிழ்மணத்தில்  இணைக்கும்  முறை தமிழில் இருந்ததாலும்  , எனக்குத் தெரிந்த  கணினி        அறிவுள்ளவர்களுக்குத தமிழ் ெரியாததாலும் (என் பேரன்  உட்பட ) ஆங்கிலத்தில் செய்முறை கேட்டு  எழுதிப் பெற்று  ஒரு வழியாக தமிழ்மணத்தில்  இணைத்தும்  விட்டேன். சரி ..! தமிழ்மணத்தில் நான் இடுகை இட்ட ஒரு நாள் மட்டுமே  என் வலைப்பூ இருக்கும் .கூடவே  முந்நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளும் இருக்கும். இந்நிலையில் நான் எழுதுவதை  யார்யார் படிப்பார்கள்  என்று எப்போதுமே எனக்கு ஒரு எண்ணம் உண்டு. இருந்தாலும்   என்  மகன்  மூலம் கணினி மூலம் மட்டுமே அறிமுகமான சித்திரன்  என்று அறியப்படும்  திரு. ரகுவும் திருமதி. ஷக்திப்பிரபா அவர்களும் என் பதிவுகளைப் படித்து என்னை உற்சாகப்படுத்துகின்றனர் ,மேலும் சில பின்னூட்டங்களைப் பார்க்கும்போது இன்னும் சிலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள்  என்று அறிய முடிகிறது. அவர்களுக்கெல்லாம்  என் நன்றி.
             நான் இந்தக்  கட்டுரையை  எழுதுவதன்  நோக்கமே, என் வலைப்பதிவுகளில்   என் எழுத்துக்கள்  மட்டுமே          ஈர்க்க  வேண்டும்  பெரும்பாலானவர்களின்வலைத்தளங்கள்  தோற்றப்பொலிவிலும்  கணினியை  உபயோகப்படுத்தும்  திறமை மற்றும் கணினி நுட்பங்களை கையாளும்  விதத்திலும்  எங்கோ இருக்கிறார்கள். தினம் தினம்  எத்தனைபேர்  உலகின்  எங்கெங்கிருந்து வலைப்பதிவுகளைப்  பார்க்கிறார்கள்
படிக்கிறார்கள் போன்ற செய்திகள் scroll  ஆவதும் பதிவுகளைத் தொடருபவர்கள்   யாரயார் என்ற விவரங்களும் , பதிவுகள் தமிழ்மணத்தில்  வரும்போதே நிறைய  மறுமொழி, பின்னூட்டங்களுடன்  பிரசுரமாவதும்  பிரமிப்பூட்டுகிறது. நான்  அந்த நிலையை இப்போது எனக்கு  இருக்கும் கணினி அறிவில்  எட்ட முடியுமா என்று தெரியவில்லை.
            நான் என் வலைப்பூவில் பதிவிடும்போது  இருக்கும் தோற்றம்  தமிழ்மணத்தில வெளிவரும்போது நிறையவே  மாறி வருகிறது. அதைப் பார்க்கும்போது  எழுத்தால ஈர்க்கப்படுபவர்கள்  கூட அது பிரசுரமாகும் குறையால்  படிக்காமல்  விட்டு  விடுவார்களோ  என்று தோன்றுகிறது.
           தமிழில்  எழுத்துப்பிழை  இல்லாமல் வெளியாக ஆங்கில  எழுத்துக்களை  கணினியில்  தட்டும்போது  நிறையவே சிரமப்பட வேண்டியுள்ளது. ஒரு சிறிய  பதிவை வெளியிட  சில சமயம் ஒரு நாளைக்கு  மேல் மேனக்கேடவேண்டி  இருக்கிறது.
           சுலபமான  முறையில் என் பதிவுகளை தோற்றத்தில்  மெருகேற்ற  ஏதாவத வழி       இருந்தால்   மற்ற  பதிவர்கள் ஆலோசனை  கூறலாம். பதிவுகளின்  தரத்துக்குநானே  பொறுப்பு. வலைப்பூ தொடங்கிய இரண்டு  மாதத்தில்  உற்சாகமூட்டும்  வகையில்  என்னை முற்றுமே  அறியாத சிலர் என்னை ஊக்குவிப்பது   திருப்திஅளிக்கிறது. 
          எழுதப்படும்  விஷயத்தில், தரத்தில், சிறப்பாக  செயலாற்ற முயற்சி  செய்ய ேண்டும். எனக்கு  எழுதுவதற்கு  நிறையவே  விஷயங்கள்  இருக்கின்றன. அதைபபடித்துப்  பகிர்ந்து  கொள்ள என் வாசகர் ட்டமும்  விரிவடையும்  என்று  நம்புகிறேன். 
                                         ----------------------- ------------------------ -- --------



  














    









சனி, 23 அக்டோபர், 2010

PATHIVARKALUKKU ORU VAENDUKOL.

                    பதிவர்களுக்கு   ஒரு  வேண்டுகோள்
                    ------------------------------------------------------
வலைப்பூக்களில்  எழுதப்படும்  எல்லாப்   பதிவுகளையும்
படிக்க  முடிவதில்லை. சில  தலைப்புகளைப்  பார்த்து  அதனால்
ஈர்க்கப்பட்டு  சில பதிவுகளைப்  படிக்கிறோம் .படிப்பவர்
கவனத்தை  ஈர்க்கும்  தலைப்புகளில்  எழுதப்பட்டிருக்கும்
பதிவுகள்  பதிவர்களின்  எண்ணங்களைப்  பிரதிபலிப்பதாக
கொள்ளலாம். பதிவர்கள்  தங்களுடைய  கருத்துகளுக்கு
எழுத்துருவம்  கொடுக்கும்போது  அவை  மற்றவர்களின்
மீதுள்ள வெறுப்பின்  வெளிப்பாடாகவோ ,மற்றவர்களின் மனதை   காயப்படுத்தும்
விதமாகவோ  இருக்க  வேண்டாமே ..! மாறு பட்ட கருத்துகள்  உலவ வருவது
சகஜமே.  கருத்துகளுடன்  முரண்படலாம்;  நம் கருத்துகளை   ஏற்காதவர்களை
இகழ  வேண்டாமே...! இகழ்ச்சிகளை  வெளிப்படுத்தவே  கருத்துகளைப்  பதிவு
செய்வதையும்   தவிர்க்கலாமே...!

சில  பதிவுகளைப்   படிக்கும்போது எவ்வளவு  குரோத  உணர்ச்சிகள்  எவ்வளவு கசப்பு
எண்ணங்கள் எவ்வளவு விரோத  மனப்பான்மை இருந்தால்  எழுத்துகள் இவ்வளவு  ஆக்ரோஷமாக  வெளிப்படும் என்பதை  நினைத்தால் வருத்தமாகவே  உள்ளது.

யாரும்  இவ்வுலகில்  விருப்பப்பட்டு  விதைக்கப்படவில்லை. பிறப்பொக்கும்  என்பது
சான்றோர்  வாக்கு .சகோதரத்துவமும்  நல்லிணக்கமும்  நடைமுறையில்  கொண்டு
வர எழுதுபவர்கள்   முயற்சிக்க  வேண்டும். நல்லது  எது, அல்லாதது எது, என்று
பகுத்தறியும்  அறிவு  வேண்டும். நல்லவை  அல்லாதவற்றை  முறைப்படுத்த  முயற்சி
செய்ய அறிவும்  சக்தியும்  வேண்டும்; அதுவும்  முடியவில்லை  என்றால்  இருப்பதை
ஏற்று அதற்கேற்ப வாழும்  மனநிலையை  வளர்க்க வேண்டும்.

ஜாதி ,இனம் ,மொழி , போன்றவை  உணர்ச்சிகளைத் தூண்டும்  விஷயங்கள்.. இவற்றைப்  பற்றி  எழுதும்போது  சம நிலையோடு , காய்தல் , உவத்தல்  அகற்றி
ஆய்தல்  செய்ய வேண்டும். காய்தல் மூலம் நல்லவைகள்  அறியப்படாமல்  போகலாம்
உவத்தலினால் மாற்றுக்  கருத்துகள்  வெளிப்படாமல்  போகலாம்

ஜாதியைப்  பற்றி  எழுதும் சில  பதிவுகளில்  பிராமணர்  மற்றும்  பிராமணர் அல்லாதவர்   என்று இரண்டே  ஜாதிகள்  இருப்பதுபோல  ஒரு மாயத்  தோற்றத்தைக்
காண  முடிகிறது. .வர்ணாசிரம  வழக்கப்படியான  பிரிவுகளை  பிறப்பால்  மட்டுமே
அடையாளம்  காட்டி  பேதப்படுத்துவது  இந்தக் காலத்தில்  முடியாத  காரியம்;  கூறப்
போனால் அறியாமையின்  விளைவேயாகும் .

பகுத்தறிவு  என்ற போர்வையில்  பிரித்தறிவதையே  அணுகு  முறையாகக்கொள்ளல்
தவறு.  எழுதுபவர்  எழுதுவதை  எல்லோரும்  ஏற்றுக்கொள்கிறார்களா  என்று ஒரு
கணம்  சிந்திக்கவேண்டும். மாற்றுக் கருத்துகளை  பிறர்  மனம்  புண்படாத  வகையில்
எழுதுவதே  நலம்  பயக்கும். அவரவர்க்கு  அவரவர்  நம்பிக்கை.

எழுதுபவர்களைப்  பற்றியும் அவர்களின்  பதிவுகளைப் பற்றியும் குறிப்பிட்டு  இங்கு
எழுதவில்லை. எழுதுகிறவர்களுக்கும்  படிக்கிறவர்களுக்கும்  புரிந்தால் சரி.
               ------------ --------------------------------------------- --------------------------------------------





  


















               

வெள்ளி, 22 அக்டோபர், 2010

KAITHTHALAM PATRA VAA


                        கைத்தலம்    பற்ற    வா.
                       --------------------------------------
பாவாடை   தாவணியில்   பதினாறு   வயசுப்   பாவை   நீ,
ஓரடி  ஈரடி  சீரடி  வைத்தென்முன் நாலடி  நடந்து  வர,
உன் வலை வீசும்  கண்கள்   கண்டு,
நாலாறு வயசு நிரம்பப்  பெறாத என்
மனசும்  அலைபாயும், மெய்  விதிர்க்கும் ,
வாய்  உலரும் , தட்டுத் தடுமாறும்   நெஞ்சும்.

ஆடிவரும்  தேரினை  யாரும்  காணாதிருக்க
செய்தல்  கூடுமோ ..?
அயலவர்  உன்னை    ஆராதிப்பதை
தடுக்கவும்  இயலுமோ ...?
எங்கும்  நிறைந்தவன் ஈசன்  என்றால்
என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ ...?
என்னுள் நிறைந்த உனை என் கண்ணுள் நிறுத்தி
நீ வரும் வழி நோக்கித  தவமிருக்கும்
நானும்  ஒரு   பித்தனன்றோ...?

யாருனைக்  காணினும்   யாதே  நேரினும் ,
நிலம்  நோக்கி  என் முன்னே  மட்டும்
என்கண்  நோக்கி என்னுள் பட்டாம்பூச்சி
பறக்கச்செய்யும்  வித்தை   அறிந்தவளே ...!

உன் விழி  பேசும்  மொழியறிந்து
உனைக் கண்ட   நாள்  முதல்  கணக்கிட்டு  விட்டேன்
எனக்கு  நீ , உனக்கு  நான் , எனவே ,
கைத்தலம்  பற்ற காலமும்  நேரமும்  குறித்து  விட்டேன், .
                              -----------------------------------