சனி, 30 ஏப்ரல், 2011

ஆலயம் சென்றதனாலாய பயன்..............

ஆலயம்  சென்றதனாலாய பயன்...
----------------------------------------------
      
       என் இளைய மகனின் இரண்டாம் பிள்ளையின் பிறந்த 
நாளுக்கு சென்னையில் இருந்தேன். கேக் வெடடும் பிறந்த  நாளை
விட  வேறு நல்ல முறையில் பிறந்த நாள் கொண்டாடலாம், என்ற
என் பேச்சுக்கு எதிர்ப்பின்றி உடன்பட்டு, ஒரு முதியோர் இல்லத்
துக்கு உணவளித்து மகிழ்ந்தனர். விளைவு என் பதிவு; “ ஹாப்பி
பர்த்டே, விதையாகி பின் விருட்சமாக...” அருகில் இருந்த சந்தான
சீனிவாச பெருமாள் ஆலயத்துக்கும் சென்றிருந்தோம்.ஆலயத்தில்
ஆங்காங்கே கல்வெட்டில் படிப்பினைகள் செதுக்கி வைத்துள்ள்னர்.
அவற்றைக் குறிப்பெடுத்துக் கஷ்டப்படாமல் இருக்க,கைப் புத்தகம்
விற்கிறார்கள். அவற்றை வலையுலக நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன். ஆலயம் சென்றதனாலாய பயன்........

                            மகிழ்ச்சி
                           -------------
ஏழு ஸ்வரங்களை முறையாக வரிசைப் படுத்தினால் இனிய
இசை கிடைக்கும். அதுபோல்:

பேசும் முன் கேள்.
எழுதும் முன் படி.
செலவழிக்கும் முன் சம்பாதி.
முதலீடு செய்யும் முன் விசாரி.
குற்றம் செய்யும் முன் நிதானி.
ஓய்வு பெறும் முன் சேமி.
இ றக்கும் முன் தருமம் செய்.


என்ற ஏழு நியதிகளின் அடிப்படையில் நம் வாழ்க்கையை
அமைத்துக்கொண்டால் இனிதாய் அமையும் அல்லவா..


                            நாகாக்க  காவாக்கால்...
                            -------------------------------
கோபமாய்ப் பேசினால் குணத்தை  இழப்பாய்.
அதிகமாய்ப்  பேசினால்  அமைதியை  இழப்பாய்.
வெட்டியாய்ப் பேசினால்  வேலையை  இழப்பாய்.
வேகமாய்ப்  பேசினால்  அர்த்தத்தை  இழப்பாய்.
ஆணவமாகப் பேசினால்  அன்பை இழப்பாய்.
பொய்யாய்ப் பேசினால்  பெயரை  இழப்பாய்.
சிந்தித்துப் பேசினால் சிறப்பாய்  இருப்பாய்.


                            வாழ்க்கைக்  கணக்கு.
                             ----------------------------
நல்லவற்றைக்  கூட்டிக்கொள்.
தீயவற்றைக்  கழித்துக்கொள்.
அன்பைப்  பெருக்கிக் கொள்
நல் வாழ்க்கையை  வகுத்துக்கொள்.


                              மனிதப்  பிற்வி
                               -------------------
ஜனனம்  என்பது  தாய்  தந்தையர்  படைப்பு.
மரணம் என்பது  இறைவனின்  அழைப்பு.
இடைப்பட்ட வாழ்க்கை  அத்தனையும்  நடிப்பு.


                              பயனில்லா  ஏழு
                               ----------------------
ஆபத்துக்குதவா  நண்பன்.
அரும்பசிக்குதவா  அன்னம்
பெற்றோர்  சொல் கேளா  பிள்ளை.
தரித்திரம்  அறியா  பெண்டிர்
வறியோர்க்குதவா  பொருள்.
எழுத்தறிவில்லா  பிறவி.
பிறர்க்குதவா வாழ்க்கை.


                            செயல்கள்.
                            ---------------
நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கின்றோம்.
நம் செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன.


                         மாதா,பிதா, குரு ,தெய்வம்.
                         ========================
தாயின்  அருமை,குழந்தையின் பிறப்பில்.
தந்தையின் அருமை ,  பிள்ளையின்  வளர்ச்சியில்.
ஆசிரியரின்  அருமை,  மாணவனின்  படிப்பில்.
இறைவனின்  அருமை,  இயற்கையின் படைப்பில்.


                             அனுபவம்
                              ---------------
அறுபது சொல்வது அனுபவ  நிஜம்.
அதை  இருபது  கேட்டால் ஜெயிப்பது  நிஜம்.


                            கொடுப்பதும்   தடுப்பதும்
                             ---------------------------------
இறைவன்  கொடுப்பதை  யாராலும்  தடுக்க  முடியாது.
இறைவன்  தடுப்பதை  யாராலும்  கொடுக்க  முடியாது.


                              நற்குணம்
                                ------------
விட்டுக்கொடுப்பவர்  கெட்டுப்போவதில்லை.
கெட்டுப்போனவர்  விட்டுக்கொடுத்ததில்லை.


                              விடா  முடற்சி.
                               ------------------
மிகப்பெரிய  சாதனைகள் சாதிக்கப்படுவது
வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்.
                             
 .                            பொறுமை.
                              --------------
தண்ணீரையும் சல்லடையில்
எடுத்துச் செல்லலாம் அது
பனிக்கட்டியாக உறையும் வரை
பொறுத்த்திருப்போமேயானால்.

                             எதிர்பார்ப்பு
                              ---------------
கடமையைச் செய்யுங்கள்
பலனை எதிர் பாருங்கள்.
மனிதர்களிடத்தில் அல்ல,
இறைவனிடத்தில்.

                            வெற்றி
                            -----------
விழித்து எழுந்தவுடன்
கிடைப்பதல்ல வெற்றி
விழுந்து எழுந்தபின்
கிடைப்பதே வெற்றி

                            முயற்சியின்மை
                             ---------------------=
முயலும் வெற்றி பெறும்
ஆமையும் வெற்றி பெறும்
முயலாமை ஒன்றுதான்
வெற்றி பெறாதது.

                             உயர்வானவை
                              --------------------
பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட
பிறர்க்கு உதவும் கரங்கள் உயர்வானவை.

                           வாழ்க்கை
                           --------------
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது
                                               திருவாசகம்
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது
                                               கீதை
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது
                                               குறள்
அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது
                                               திருவருட்பா
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது
                                               திருமந்திரம்
மகன் சொல்ல மகேசன் கேட்பது
                                               பிரணவம்
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது
                                               வாழ்க்கை.

=====================================   
 
  என்னுடைய  கணினி  செயலிழந்து இருப்பதால் வலையில்
தொடர்பு கொள்ளவும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்
இயலாத நிலையில், கிடைத்த ஒரு மணி நேரத்தில் , ஏற்கனவே
தட்டச்சில் ஏற்றியதை பதிவாக இடுகிறேன். கணினியை  சரி
செய்து சீக்கிரமே தொடர்பு எல்லைக்குள் வருவேன். நன்றி.  
 














ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

KAELVIKKENNA PATHIL.?

கேள்விக்கென்ன  பதில்.?
---------------------------------
தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 
ஆடிக்கொண்டிருந்தாள்  மாது ஒருத்தி. 
யாரந்த அழகி, பேரென்ன அவளுக்கு 
என்று அறியாமல் கேட்டு விட்டேன்  
அருகில் இருந்த சிறுவனை   கவனியாமல். 
   
            பட்டென்று நிமிர்ந்து பார்த்தான் 
            பேர் சொல்ல வந்த பேரன். 
            வீட்டில் மனைவி தவிர மற்றோர் 
            எல்லாம் அழைப்பதென்னை அப்பா என்றுதான். 

ஆங்கிலத்தில் கேட்டான் ஆறுவயது சிறுவன், 
" அப்பா, டூ  யூ லவ் ஹெர்..?"
அதிர்ச்சியில் ஆடிப்போனேன் ஓரிரு கணங்கள் 
"அனைவரும் அன்புக்கு உரியோரே. 
உன்னை, உன் அப்பா, அம்மா, அக்கா 
அனைவரையும்  நான் லவ் செய்கிறேன். 
அதுபோல் உயிரோடிருக்கும் எல்லா 
ஜீவ ராசிகளையும் அன்பு செய்கிறேன்.
அன்புதான் கடவுள்; அன்பே சிவம் என்றெல்லாம் 
கூறி ஒரு உரையே நிகழ்த்தினேன். 

             அவன் எதையும் உணர்ந்தவன் போல் 
              தோன்றவில்லை. அவன் முகத்தில் 
              தெரிந்தன சிந்தனைக் கோடுகள் சில பல. 
              சில நொடிகள் கழித்து சிவந்த முகத்துடன் 
              கேட்டானே ஒரு கேள்வி, பதிலென்ன சொல்ல.?

"லைக்  யூ ஹக் அண்ட் கிஸ் மீ 
 வில் யூ  ஹக் அண்ட் கிஸ் ஹெர் டூ.?"

( "LIKE YOU HUG AND KISS ME, 
 WILL YOU HUG AND KISS HER TOO.?")

என்னைக் கட்டிப் பிடித்து அணைத்து முத்தம்தருகிறாய்
அதுபோல் அவளையும் கட்டி அணைத்து முத்தம் தருவாயா.?
===============================================











 






   


சனி, 23 ஏப்ரல், 2011

அவதாரக் கதைகள் பாகம்----1

அவதாரக் கதைகள்......பாகம்---1--
---------------------------------------------- 
      திருமாலின் அவதாரம் எத்தனை என்று கேட்டால், 
      பத்தென்று கூறிவிடுவான் பத்து வயது பாலகனும
     அவதாரக் கதைகளில் பரிணாமம் பற்றி
     எண்ணியவர் எண்ணிக்கை எவ்வளவோ
     யூகித்துக் கொள்ளும் எண்ணம் இல்லை எனக்கு.


நீர்வாழ் உயிரினமாக மீன் வடிவம் ,பின்
நீர்நில உயிரினம் என்றாகும் ஆமையுருவம்
அதன் பின்னே மண்ணில் வாழ் மிருகம் பன்றி,
உருவமேடுத்தவர் சீறும்  சிங்க முகம் கொண்ட
நரனாக நான்காம் அவதாரம் ,அதன் பின்னெடுத்த
அவதாரங்களும்  பரிணாமத்தின் நிலை மாற்றங்களோ
என்ற என் எண்ணம் சரியோ தவறோ தெளிந்தவனில்லை.


      முதல் மூன்று அவதாரங்களும்  தாத்தா பாட்டி
      கதைகளில் அதிகம் காண்பதில்லை , கதைகளில்
      குழந்தைகள் அதிகம்  ஒன்றாததும்  ஒரு காரணமோ. ?
      அதிகம் கூறப்படாததென்றாலும்அவதாரக் கதைகள்
      அறிந்தே இருக்க வேண்டும் அல்லவா.?

நான்மறைகளுக்கு  உரியவன் நான்முகன் ஆணவம்
அடக்கவும், ,அவன் பறிகொடுத்த மறைகளை
பரிமுக  அரக்கனிடம் இருந்து மீட்கவும்
மீன் உரு எடுத்ததே திருமாலின் ஆதி அவதாரம்.

         ஓர்  ஊழிக்காலம் முடிவடைந்த வேளையில்
         பாம்பணையில் படுத்திருந்த பரந்தாமன்,
         மீண்டும்  உலகை படைக்க  எண்ணி
         முதலில் தன்  நாபிக்கமலத்தில் இருந்து,
         நான்முகனை  படைததெடுத்து நான்மறைகளையும்
         கொடுத்து ,படைக்கும்  தொழிலையும் கற்பித்தார்.

படைக்கும்  தொழிலைப் பாங்குடனே கற்ற  நான்முகனுக்கு,
தான் படைத்து முடித்த உலகையும் உயிரினங்களையும்
கண்டு ,அவனுள்ளே எழுந்ததோர் ஆணவம் ,அதனை
அடக்க அவனையே படைத்த பரந்தாமனும்
காலம் கனியக் காத்திருந்தார்.

         பரிமுகன்  என்ற பேர்கொண்ட அரக்கன், 
         வரம் பல பெற்றவன், வலிமை மிக்கவன்,
         படைக்கும்  தொழிலையும் நான்மறைகளையும் 
          பிரம்மனிடமிருந்து பறிக்கப் பார்த்திருந்தான்  நேரம். 

நான்முகன்  விழித்திருக்கையில் பெற முடியாத 
மறைகளை ,அவன் உறங்கும் ஊழிக்காலத்தில் 
கவர எண்ணிக் காத்திருந்தான்..

            சத்தியவிரதன்  என்றோர் அரசன், 
            நெறி பிறழாது அரசோச்சி வந்தவன், 
            வைகுண்ட வாசனின்  பரம பக்தன் 
            பரந்தாமனின் ஊழிக்கால் திருவிளையாடல் 
            காண விருப்பம் கொண்டே வேண்ட ,அவன் 
            ஆசையை நிறைவேற்றவும், பிரம்மனின் 
            ஆணவம் அடக்கவும் நேரம்  குறித்தான் மகா விஷ்ணு..


ஒருநாள்  காலைக்கடன் கழித்துப்பின், 
ஆற்றுக்கு சென்று நீராடி நீர்க்கடன் ஆற்ற 
கைகளில் அள்ளிய ஆற்று நீரில்  ஒரு மீன் 
இருக்க, அதனை ஆற்றில் விட்டு மீண்டும் 
நீரெடுக்க மீனும் வர வருந்திய அரசனிடம் 
மீனும், " வேண்டாம், நீரில் விட வேண்டாம், 
மீறி விட்டால் பெரிய மீனுக்கு இறையாவேன் , 
என்னை நீர் காத்தருள்வீர்," என வேண்டியது கண்டு 
வியப்படைந்த சத்தியவிரதன் கருணையால் 
கைகள் அள்ளிய நீருடன் மீனையும்  சேர்த்து 
தன கமண்டலத்தில் விட்டான், அதன் பின் 
அவன்  அவனது நீர்க்கடனையும் ஆற்றினான்.

         அரண்மனை மீண்ட அரசன், கமண்டலம் அளவு 
         மீனும் வளர்ந்திருக்கக் கண்டு வியந்து ஒரு 
         தொட்டியில் நீரேற்றி அதனுள் மீனையும் விட்டான். 
         மறுநாள தொட்டியளவு மீன் வளர்ந்தது கண்ட 
         அரசன்  அதனை ஓர் ஏரியில் விட ஏரியளவு 
         வளர்ந்த மீனைக்கண்டு  வியப்பொழிந்து 
          ஐயமும்  அச்சமும் கொண்டான் பின் 
         எழுந்த ஆழ்ந்த சிந்தனை முடிவில் அது, 
         மாலின் திருவிளையாடல் என்று உணர்ந்தான்.

மீனை வணங்கிய  மன்னன் மீனுருவின் 
காரணம் கேட்க, பரந்தாமன் " என் ஊழிக்கால 
திருவிளையாடல் காண விழையும் உன் 
விருப்பத்துடன் மேலும் ஒரு செயல் மீதமுள்ளது..
நான் சொல்வது நன்கு கவனி. இன்றிலிருந்து 
ஏழாம் நாள் கடல் பொங்கி உலகழியும் ; ஏழாம் 
நாள்  படகொன்று அனுப்புகிறேன். மருந்துச் 
செடிகளுடன், விதைகளையும்  எடுத்துப் படகினில் 
ஏற்றிக்கொள். உடன் வர ஏழு முனிவர்களும் இருப்பர்
அவர்தம் ஞான ஒளி வழி காட்டும்.. திமிங்கில வடிவில் 
நான் என் செதில்களில் வாசுகிப் பாம்பினைக் கட்டி, 
உன் படகுடன் பிணைத்துக் கொள்வேன். ஊழிக்காலமாகிய 
நான்முகனின் இரவு முடியும்வரை, படகினை இழுத்துத் 
திரிவேன். என் ஊழிக்காலத் திருவிளையாடல் நீ காணலாம்,"
என்று கூறி மறைந்தார்.

         பரந்தாமன் சொன்னபடி படகுவர, 
         கடல் பொங்கி ஊழிக்காலம் வர 
         நான்முகனும் உறங்கத் துவங்க, வானம் 
         கருத்து, மழை பெய்து உலகைக் கடல் கொண்டது. 

காலம் பார்த்திருந்த பரிமுகன் 
நான்முகன் வாயிலிருந்து  உறக்கத்தில் 
வெளிப்பட்ட நான்மறைகளை கவர்ந்து 
சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்தான். 

         விழித்தெழுந்த நான்முகன் படைப்புத் 
         தொழிலை துவங்க இயலாது திகைத்து,
        ஆணவம் அடங்கித் திருமாலிடம் 
         மன்னித்து அருள வேண்டினான். 

திருமாலும் மீன் வடிவம் தாங்கி, 
கடலடியில் மறைந்திருந்த பரிமுகனைக் 
கொன்று, நான்கு மறைகளை, நான்கு 
குழந்தைகளாக்கி நான்முகனிடம் சேர்த்தருளினார்.

         நான்முகனும் படைக்கும் தொழில் 
         தொடர, திருமால் முனிவருக்கும் 
        அரசனுக்கும் மூலப் பொருளை 
        உபதேசித்து அருளினார். 

   ( மீன் அவதாரம்  முற்றிற்று.)
-------------------------------------------
 
( அவதாரக் கதைகளை தொடர்வதா என்பது  இந்தப்பதிவுக்குக் கிடைக்கும் 
வரவேற்பைப் பொறுத்தது. )





 







 







  . 








. .
 
 


     

 ,





 








 

 

திங்கள், 18 ஏப்ரல், 2011

கேள்விகளே பதிலாய்..........

கேள்விகளே  பதிலாய்.  (ஒரு  சிறுகதை .)
---------------------------------------------------- 

       கமலம் மற்றும் கண்ணனின் நடவடிக்கைகள் சற்றே
வித்தியாசமாகவும், விநோதமாகவும் பட்டது பாபுவுக்கு. சில 
நாட்களாகவே மாலை நேரத்தில் அவர்களை வீட்டில்  பார்ப்பதே 
அரிதாக இருந்தது. பார்க்க முடிந்தபோதோ, சோகத்துடன் கூடிய
ஒரு  பரபரப்பும் எதிர்பார்ப்பும் உணர முடிந்தது.திருமணமாகி
ஐந்தாறு  வருடங்களாகியும் மகப்பேறு இல்லாத குறை அவர்
களுக்குண்டு, என்று பாபுவுக்குத் தெரியும் பரிகாரம் தேடிகோயில்
குளங்கள் என்று அவர்கள் அலைவதும் தெரியும். மருத்துவரிடம்
சென்று குறை ஏதாவது, யாரிடமாவது இருக்கிறதா என்று அறிந்து
கொள்ள இருவருக்கும் துணிவில்லை. மகப்பேற்றுக்கு வாய்ப்பு
இல்லை என்று சொல்லி விடுவார்களோ என்று உள்ளூரப் பயம்
இருந்தது..ஆலய வழிபாடுகளும் ஆண்டவன் தரிசனமும் மாகப்
பேற்றுக்கு வழிவகுக்கும் என்றால் அந்தப் பாக்கியம் இல்லாத
வர்களே  இருக்க முடியாதே. வாழ்க்கையில் குறை எது, நிறை
எது, என்று பகுத்தறியும் அறிவையும், தெரிந்த குறைகளைத்
திருத்த முடியும் நம்பிக்கையையும், திருத்த முடியாத குறைகளை
பொறுத்துக்கொள்ளும் பக்குவமும் எல்லோருக்கும இருப்பது
இல்லை. இப்போது இந்த ஆராய்ச்சிகள் செய்வதால் யாருக்கு
என்ன லாபம்.? இருந்தாலும் மிகவும் வேண்டப்பட்டவர்கள்
தவறான பாதையில் செல்கிறார்கள் என்றால் பார்த்துக் கொண்டு
இருக்க முடிவதில்லையே. பாபு கண்ணனிடம் கேட்டே விட்டான்.

      " அம்மாஜி,என்றொருவர்.பெண்மணி. மிகவும் சக்தி வாய்ந்தவர்.
அவருடைய கடைக்கண் பார்வை பட்டால் துன்பங்கள் எல்லாம்
உருண்டோடிவிடும்.அவர்களைப் பார்க்கத்தான் நானும் கமலமும்
போகிறோம்.அவர் தரிசனம் கிடைக்க ஏராளமானவர்கள் காத்திருக்
கிறார்கள்.வேண்டுமென்றால் நீயும்தான் வந்து பாரேன்..."

       வாழ்க்கையை எப்பவும் எதார்த்த நிலையிலேயே பார்க்கும்
பாபுவுக்கு, மக்களின் அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும்
வருத்தமுண்டு. இவன் மட்டும் வருந்தி என்ன பயன்.?காலங்கால
மாக நிகழ்வுகளுக்குக் காரணம் காண முயன்று, முடியாது
போகையில் , வேண்டாத நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டு,
ஆறுதல் தேடி அலையும் நிறையப் பேரிடம் பேச்சுக்கொடுத்து,
வாங்கிக் கட்டிக்கொண்ட அனுபவம் பாபுவை அவனுடையக்
கருத்துக்களைச் சொல்ல தயங்க வைத்தது.

        இருந்தாலும் இந்த அம்மாஜியை ஒரு முறைப் பார்க்க
வேண்டும். எந்த விஷயம் மக்களை அவரிடம் ஈர்க்கிறது என்று
தெரிந்து கொள்ள வேண்டும்.என்ற  உந்துதலில் பாபு  தன நண்பன்
நாதனையும் தன்னுடன் வரக் கேட்டுக்கொண்டான்.நாதன் ஏன்
என்றால், அதிகம் படிக்காதவன், பாமரன், எல்லோருக்கும்
நல்லதே நடக்க விரும்பும் அப்பாவி; அவனுக்கு எந்த ஒரு
சித்தாந்தமோ கோட்பாடோ கிடையாது. உள்ளும் புறமும்
உண்மையானவன்..மனதில் பட்டதைப் பட்டென்று சொல்லி
விடுவான். அவன் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்ற 
எண்ணத்தோடு, அவனைத் தன கூட வருமாறு அழைத்தான் பாபு.

       அம்மாஜி எனும் பெண்மணி, வயது 35 லிருந்து, 40 க்குள்
இருக்கும். நடுத்தர உயரம்,மாநிறம், நெற்றியில் ஒரு பெரிய
குங்குமப்பொட்டு, நூல்புடவை, ஆபரணங்கள் அதிகம் இல்லை.
வசீகரம் என்று சொல்லும்படியாக ஏதும் இல்லை.அவருடைய
பக்தர் /பக்தி /சீடர் யாரோ ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.
மாலை விளக்கு வைக்கும் நேரம், அந்த வீட்டிற்கு நிறைய
ஜனங்கள் வருகை தரத் துவங்கினர். கணிசமான எண்ணிக்கை
யில்  ஆண்களும் பென்க்களுமாகக் குழுமி இருந்தனர். அந்த
வீட்டின் ஹாலில் நரசிம்ஹ  சுவாமியின் உருவப்படம் ஒன்று
வைத்திருந்தது. பக்திப் பாடல்களும் பஜனையும் ஆரம்ப
மாகியது. இவை எல்லாவற்றையும் மனசில் உள்வாங்கிக்
கொண்ட பாபு, நாதனிடம் நன்றாகக் கவனித்துப் பார்த்துக்
கொள்ளக் கூறினான்.

         பக்திப்  பாடல்களும்  பஜனைகளும் கூடி இருப்பவர்களின்
எண்ணங்களை பக்தியின்பால் ஒருமுகப்படுத்த இசைக்கப்
படும் ஒன்று. ஒருமித்த தாள கதியில் இனிய குரலில் ஒருவர்
இசைக்க,கூடியுள்ளவர்கள் தொடர,அங்குள்ள சூழ்நிலையையே
வேறு ஒரு தளத்துக்கு இட்டுச் செல்ல வேண்டியது பஜனைப்
பாடல்கள். ஆனால், அந்த வீட்டில் பாபுவுக்கு எதுவுமே சுருதி
சேராமல் ,அபஸ்வரத்தில் எழுந்த ஒரு CACOPHONY   இரைச்சல் 
என்றே தோன்றியது.அம்மாஜி மெதுவாக நடந்து,ஹால் முழுதும்
சுற்றிவந்து வந்திருப்பவர்களை அடையாளம் தெரிந்து கொண்டு,
கண்களாலும் தலையசைப்பாலும் விசாரித்துக்கொண்டு, தான்
கைகொட்டிக் கொண்டே நடந்தார். அந்த இடத்தில் பாபுவும் ,
நாதனும் புதியவர்கள் என்று புரிந்து கொண்ட பாவனையில் ,தன்
புருவத்தை ஒரு மாதிரி நெரித்து ,கண்களில் ஒரு கேள்வி எழுப்பும்
பாவனையில் ஒரு முறைப்பான பார்வையை வீசினார்.பாபுவுக்கு
அம்மாஜியை பார்த்ததும், அடையாளம் தெரியாதவர்களிடம்
காட்டப்படும் மரியாதை ,கூடவர மறுத்தது. "ஓ.! இந்தப் பெண்மணி
யிடம் என்ன சக்தி இருக்கிறது என்று இவ்வளவு பேர்
கூடுகிறார்கள் "என்ற எண்ணமும் தலை காட்டியது. நாதனுக்கோ
மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் "வா, பாபு, போகலாம் ",என்று
கையைப் பிடித்திழுத்துக்கொண்டு வெளியேறினான்.

        அடுத்தநாள், கண்ணனும் கமலமும் பாபுவை ஒரு பிடி பிடித்து
விட்டார்கள். "எவ்வளவு சக்தி வாய்ந்த அம்மாஜி, அவர் அருகில்
வந்தவுடன், நீங்கள் வெளியேறியது, அவர்களை அவமதித்தது
போலாகி விட்டது. உங்களுக்கு நல்ல காலமில்லை ", என்று கூறி
சாபம் வேறு கொடுத்தனர். "கண்ணா, எனக்கு அவர்கள் மீது எந்த
நம்பிக்கையும் இல்லை. அவர்கள் பார்வையும், நோக்கும் ஒரு
வெறுப்புதான் அவர்கள் மேல் வருகிறது. அந்தப் பெண்ணிடம்
ஏதோ குறை இருக்கிறது என்று என்  உள் மனசு கூறுகிறது.
அவர்களுடன் உள்ள தொடர்பையே வெட்டி விடுங்கள். அதுவே
உங்களுக்கு நல்லது. அவரும் நம்மைப் போன்ற ஒரு சாதாரண
மனித ஜீவி. இல்லாத சக்திகளை அவர்களிடம் கொடுத்து, பின்
ஒரு காலத்தில் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். இந்த மாதிரிக்
கூட்டங்களைக் கூட்டுவதும் ,ஆட்களைக்  கவருவதும், ஏதோ
ஒரு உள்நோக்கம் இருக்க வேண்டும்.அவ்வளவுதான் நான்
கூறுவேன்," என்ற பாபுவை இருவரும் எரிச்சலுடனே பார்த்
தார்கள்.பாபுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
"என் மனதில் பட்டதை உங்களுக்குக் கூறினேன்.அதை ஏற்றுக்
கொள்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம் " என்று கூறி
வந்து விட்டான்.இது நடந்து ஓரிரு மாதங்கள் சென்றன. ஒரு
நாள் நாதன் பாபுவிடம், "அன்றைக்கு ஒரு நாள் ஒருஅம்மாஜியை
பார்க்க போயிருந்தோமே அவர்களுடைய  போட்டோ ஒன்றை
நண்பன் ஒருவன் வீட்டுப் பூஜை அறையில் பார்த்தேன்.அவரது
அருளால்,பல காலம் வேலை கிடைக்காமல் இருந்தவனுக்கு,
நல்ல வேலை கிடைத்திருக்கிறதாம்.எல்லாம் நரசிம்மருடைய
அருளும், அமமாஜியின்சக்தியும்தான்,என்று மகிழ்ச்சி பொங்கக்
கூறுகிறான்,"என்றான். " இதெல்லாம் காக்கை உட்கார பனம்
பழம் விழுந்த கதைதான். நம்பிக்கைகளைப் பற்றி மட்டும் நான்
அதிகம் பேச மாட்டேன். எனக்குத் தெரியும், அறிவுக்கும் 
உணர்வுக்கும் போராட்டம் நடந்தால் அறிவு தோற்று உணர்வு 
தான் வெல்லும். இது எப்போதைக்கும் பொருந்தும் உண்மை
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ",என்று கூறிய பாபுவைப் 
பரிவுடன் பார்த்த நாதன், "இருந்தாலும் இந்த நிகழ்வுகள் உன் 
உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை என்னால் உணர 
முடிகிறது ",என்றான்.
        நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி ஓடின. நாதனின் 
நண்பன் ஒரு சேதியைக் கொண்டு வந்தான்.அமமாஜியின் 
சிஷ்யர்களில் இதுவரை இரண்டு பேர் தற்கொலை செய்து 
கொண்டிருக்கிறார்கள். இருவரும் பெண்கள். மனசுக்கு 
என்னவோ போல் இருக்கிறது, என்றான்.அவர்களுடைய 
தற்கொலைக்கும் அம்மாஜிககும் தொடர்பு இருக்கிறதா 
என்ற கேள்விக்கு,பதில் சரியாகத் தெரியாது என்றும் அரசல்
புரசலாக கொஞ்சம் சலசலப்பு இருக்கிறது என்றும் கூறினான்.
      அமமாஜியின் போட்டோ உங்கள் பூஜையறையில் இன்னும் 
இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலேதும் கூறாமல் சென்று
விடடான் பாபுவுக்கு கண்ணன் கமலம் பற்றிய கவலை எழுந்தது.
உற்ற நண்பர்கள், உண்மையில் நல்லவர்கள், எதையும் அதிகம் 
சிந்திக்காமல் வெறுப்போ விருப்போ எதுவாயிருந்தாலும் 
உடனுக்குடன் வெளிப்படுத்தி விடுவார்கள்.கடவுள் பக்தியும்,
நம்பிக்கையும் தங்களுக்கு மிக அதிகம் என்று நம்புபவர்கள். 
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மிகவும் ஈடுபாடு கொண்டு 
இருப்பவர்கள். கேள்வி ஏதும் கேட்காமலேயே எதையும் ஏற்றுக் 
கொள்வார்கள்.இல்லாவிட்டால் ஒதுக்கித் தள்ளி விடுவார்கள்..
அவர்கள் வீட்டுக்கு ஒரு முறை போக வேண்டும். எப்படி இருக் 
கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக்   
கொள்ளும் பாபுவுக்கு சரியான நேரமும் சந்தர்ப்பமும் அமைய 
வில்லை,போக முடியவில்லை. உள்ளத்தின் ஒரு மூலையில் 
ஒரு குறுகுறுப்பு மட்டும் அவ்வப்போது தோன்றும்.
       கூறப்படும் நிகழ்வுகளும் சம்பவங்களும் நிகழ்ந்த காலத்தில்
இப்போதிருப்பதுபோல தொலைபேசி வசதியோ, கைபேசியோ 
கிடையாது. எதையும் அறிய வேண்டுமென்றால், யாராவது 
சொல்லக் கேட்க வேண்டும். இல்லையென்றால் நேரில் சென்று 
அறிந்து கொள்ள வேண்டும். கடிதத் தொடர்புகள் பெரும்பாலும் 
அயலூர்க்காரர்களுடந்தான்.
      சமயமும் சந்தர்ப்பமும் சரியாக அமைந்த ஒரு நாள், கண்ணன்  
வீட்டிற்கு பாபு சென்றான். கண்ணன் மட்டுமே இருந்தான்.கப்பலே 
கவிழ்ந்ததுபோல கவலையுடன் இருந்தான். பாபுவை வா என்று 
கூடக் கூப்பிடவில்லை. பாபுவுக்கு எங்கோ எதுவோ சரியில்லை 
என்று மட்டும் நன்றாகத் தெரிந்தது. "கமலம் வீட்டில் இல்லையா,
எனக்கு ஒரு கப் காப்பி கிடைக்காதா?"என்றான். "ஆமாம் ..இங்கு 
கும்பி கூழுக்கழுகிறதாம் அங்கு குடுமி பூக்கழுகிறதாம்.வெறுப்பு 
ஏத்தாதே பாபு.",என்று கண்ணன் கடுகடுத்தான். இறுக்கமாக 
இருந்த நிலையை சற்றே தளர்த்த பாபு இவ்வாறு கூறினான். 
"சரிதான் ,புகழ் பெற்ற அமமாஜியின் பிரிய சிஷ்யனுக்கா இந்த 
வெறுப்பும் கோபமும்...அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் .?"
"பாபு தமாஷ் வேண்டாம். கமலம் வீட்டில் இல்லை. நாலைந்து 
நாட்களாக இல்லை. என்னவோ ஏதோ என்று பேதலித்து இருக் 
கிறேன்.உனக்கென்னவோ தமாஷும், எகத்தாளமும். "
சீரியசான விஷயம் என்று அறிந்தவுடன் பாபு கேள்விகள் கேட்க 
முற்பட்டான். "எவ்வளவு நாளாகக் காணோம்..கடைசியில் எங்கு 
போனார்கள்.. போலீசில் அறிவித்தாயா...உன் அம்மாஜி என்ன 
சொல்கிறார்...முக்காலமும் உணர்ந்தவர்  ஆயிற்றே.அவர்.
கண்ணா நீ இருக்கும் நிலையைப் பார்த்தால், உனக்கு ஏதோ 
தெரிந்திருக்கிறது. இக்கட்டான சூழலில் இருக்கிறாய் என்று 
தெரிகிறது. என்னிடம் கூறலாம் என்றால் தெரிவி. "
     " குழந்தை இல்லாக் குறைக்கு பரிகாரமாக அம்மாஜி சொல்லக் 
கேட்டு எங்கெங்கோ யார்யாருடனோ போகிறாள். வீட்டுக்கு 
கூப்பிட்டால் வர மாட்டேன் என்கிறாள்.என்ன செய்வது என்று 
தெரியவில்லை."என்று கூறி கண்ணன் அழத் தொடங்கினான். 
      "கண்ணா, படித்தவன் நீ. குழந்தை பெறுவதோ, முடியாமல் 
போவதோ, உடல் சார்ந்த விஷயங்கள். இன்று மருத்துவம் 
வளர்ந்திருக்கும் நிலைக்கு, காரணங்களை எளிதில் தெரிந்து 
கொள்ளலாம். அம்மாஜியும் அப்பாஜியும் எதுவும் செய்ய முடியாது. 
ஏதாவது தவறான பாதையைக் காட்டி இருக்கப் போகிறார்கள். 
வேண்டுமானால் போலீசில் புகார் கொடேன். " என்ன சொல்லியும் 
கண்ணன் ஆறுதல் அடையவில்லை. 
       பகுத்தறிவு என்று பேசினாலேயே அது கடவுள் மறுப்பைக் 
குறிப்பதுதான், என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் இடத்தில் 
சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் , அது எவ்வளவுதான் 
கூடுதல் புரிதலும், நட்பும் இருக்கும் நண்பனிடம் கூட, விவாதிக்க 
முடிவதில்லை. தெரிந்தே செய்யும் அறியாமையால் நடக்கும் 
தவறுகளைக் காலம்தான் திருத்த வேண்டும். அன்று என்ன 
என்னவோ பேசியும் பலனில்லாமல் போகவே பாபுவும் வந்து 
விடடான். 
      என்னென்னவோ அலுவல்கள் தவிர்க்க முடியாத பயணங்கள்  
கண்டு பேசி தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் என்று 
பாபுவும் கண்ணனும் பேசியே விளையாட்டாக இரண்டு ஆண்டு 
கள் ஓடிவிட்டன. 
       எதிர்பாராத விதமாக சந்திப்பு நடந்தபோது, கண்ணன் பாபுவை 
அவன் வீட்டிற்கு அழைத்தான். சென்றபோது அழகான ஒரு பெண் 
குழந்தையுடன் கமலம் அவனை வர வேற்றாள். 
      "கண்ணா, இந்தக் குழந்தை.?"என்று பாபு கேட்டபோது கண்ணன், 
"இது எங்கள் குழந்தை.வேறெந்த கேள்வியும் கேட்காதே.
இப்போது நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் ",என்று சொல்லி 
பாபுவின் வாயடைத்து விடடான். 
       கேள்விகளுக்கு பதில் காண விழைந்த பாபுவுக்கு மேலும் 
கேள்விகளே பதிலாக அவன் மனதில் ஓடியது.  
================================================
 
.  


                

 













.
  ..

திங்கள், 11 ஏப்ரல், 2011

பாம்பென்றால்...........

பாம்பென்றால்............
---------------------
        சித்ராவின் பதிவு, அமெரிக்காவின் நஞ்சுபுரம் படித்தபோது 
பாம்பைப்  பற்றிய பல நினைவுகள் நெஞ்சில் படமாக ஓடத்
துவங்கியது. பாம்புக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அது என்ன 
ஏழாம்  பொருத்தம்.? எனக்கும்  பாம்புக்கும்  பொருத்தமே இல்லை,
ஆகவே ஆகாது. என் கையால் பரலோகம் அல்லது சிவபதவி 
அடைந்த பாம்புகளின் எண்ணிக்கை நாலைந்து இருக்கும். பாம்பு
களை  அடிக்கக்கூடாது கொல்லக் கூடாது, என்று நம்பும் நம் 
மக்களிடையே நான் பாம்புகளைக் கொன்றது, பயத்தாலும் தற்
காப்புக்காகவும்தான்.வசிக்கும் வீடுகளில் பாம்பு வந்து விட்டால் ,
அது  இருப்பவர்களைத் தீண்டித் தொலைத்து விட்டால், என்பன
போன்ற பல சந்தேகங்கள் சிந்திக்கக்கூட நேரம் கொடுக்காமல்,
அதனை அழிப்பதிலேயே மனம் சென்று விடும். சர்ப்ப தோஷம்
சும்மா விடாது என்று பயமுறுத்துபவர்கள் மத்தியில் ,இதுவரை
எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறேன். நான் பாம்புகளைக்
கொல்வதை நியாயப் படுத்தவில்லை. தற்காப்பால்  உந்தப்
பட்டு தற்செயலாகச் செய்யும் செயலே, வீட்டில் வந்த பாம்பு
களுக்கு முக்தி கொடுத்தது. பாம்புகள் வயல்களிலோ காடு
களிலோ சுற்றுச் சூழல் சமன்பாட்டுக்கு உதவும் வகையில் உலா
வந்தால், பாம்பை நான் ஏன் அடிக்கிறேன்.அவை நகரங்களில
வீட்டுக்குள்ளும்  தோட்டத்துக்குள்ளும் வரும்போது, அவைகளை
அமைதியாய் பிடித்து, எங்கோ கொண்டுவிட நான் கற்றுக்கொண்டு
இருக்கவில்லை.

        பாம்புகளை தெய்வமாக வழிபடும் பலரை நான் பார்க்கிறேன்.
எறும்புகளால் எழுப்பப்பட்ட புற்றுகளுக்குள் பாம்பிருப்பதாக நம்பி,
அந்தப் பாம்புகள் குடிக்கும் என்று எண்ணி, பாலைப் புற்றுக்குள்
ஊற்றும் ஜனங்களைக் காணும்போது, அறியாமையின் விளைவு
கள் அறியப்படாமலேயே போவது கண்டு மனம் வருந்துகிறது.
பாம்புகள் பால் குடிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்ட விஷயம்.
அந்தப் பாம்புகளுக்கு புற்றின் மேல் பால் ஊற்றி, பூவைத்து ,தூப,
தீபம் காட்டி எல்லாவற்றையும் விரயமாக்கும் மக்கள், கூடவே
தம் மக்களையும் அல்லவா சிந்திக்க விடாமல் வளர்க்கிறார்கள்.

        குழந்தை பிறவாமைக்கு நாக தோஷம் ஒரு காரணம் என்று
நினைத்து, சில கோயில்களில் நாகராஜாவைக் கல்லில்
பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கி நலமுன்டாகும்  என்ற
நம்பிக்கையும் பரவலாக நம் நாட்டில் உண்டு.

         நாங்கள் ஒருமுறை திருச்சியிலிருந்து கர்நாடக மாநில
கோயில்களை தரிசிக்க காரில் பயணித்துக் கொண்டிருந்தோம்..
மாலை இருட்டிய நேரம். காட்டுப்பகுதி; நல்ல மழை பெய்து
கொண்டிருந்தது. திடீரென்று ட்ரைவர் காரை நிறுத்தி விட்டார்.
ஏனென்று கேட்க, காரின் முன்புறம், சாலையைக் காண்பித்தார்..
அங்கு சுமார் ஆறேழு அடிக்கும் மேலான பாம்பு பாதையில்
படுத்திருந்தது. " பாம்பால் காருக்கு சேதமிருக்காது; ஒட்டிக்
கொண்டு போங்கள் " என்றேன். ட்ரைவர் மறுத்துவிட்டார்.
பாம்பின் மேல்  காரேற்றினால், அதனால் பாதகங்கள் மிகவும்
அதிகமாகும் என்றார். பாம்பு நகர்ந்த பிறகு போகலாம் என்று
கூறி, ஹெட் லைட்டை ஆன்  ஆப  செய்தும் ஹாரன் அடித்தும்
ஒரு பதினைந்து நிமிடம் காத்திருந்த பிறகு, பாம்பு நகர்ந்து,
நாங்களும் பயணம் தொடர்ந்தோம்.

       கேரளத்தில் பாடங்களில் ( வயல்களில்)பாம்புகள் தாரளமாக
நடமாடும். விளையும் நெல்லைத் தின்ன எலிகள் செய்யும்
அட்டகாசங்கள் பாம்புகளால் ஓரளவுக்கு கட்ட்ப்படுத்தப்
படுவதாக கூறுவார்கள். கேரளத்தில் பாம்பு கோயில்கள் மிகப்
பிரசித்தம். மன்னார்சாலை என்னும் இடத்திலுள்ள பாம்பு
கோயிலுக்கு போய் பாம்பைக் காணமுடியுமா என்று தேடினால்
" அவர்கள் நம் கண்ணில் படமாட்டார்கள் " என்று மிகவும்
மரியாதையுடன்  பதில் தருகிறார்கள். அங்குள்ள " இல்லத்தில்"
(வீட்டில்" )இருக்கும் நம்பூதிரி மூதாட்டியை தரிசித்து, குங்குமம் ,
பஸ்மம் பெற்றுத் திரும்புகிறார்கள்.

      தமிழ் நாட்டில் நாகர்கோயிலில்  இருக்கும் நாகர்கோயிலுக்கு
நிறையபேர் வழிபாட்டுக்கு வருகிறார்கள். அந்த ஊரில்
குடும்பத்தில் ஒருவராவது நாகராஜன் என்ற பெயருடன்
இருப்பார்.

        பாம்பு பிடிக்கும் பலரை வியப்புடன் பார்த்திருக்கிறேன். அது
ஒரு லாகவமான செயல். பாம்பின் வால்  பகுதியைப் பிடிக்கும்
போது பாம்பு வளைந்து வரமுடியாமல் பிடிப்பார்கள்.அந்தக்
காலத்தில் HAL AERO ENGINE FACTORY துவக்கக் காலத்தில் அந்த 
இடத்தில் நிறைய பாம்புகள் இருந்தன. ஆங்கிலேயக் கூட்டு 
முயற்சியால் துவங்கப்பட்ட அந்த நிறுவனத்தில் ஆரம்ப 
காலத்தில் நிறைய வெள்ளையர்கள் இருந்தனர்/வருவார்கள். 
பாம்பு பிடிப்பதில் வல்லவராக ஒரு செக்யூரிட்டி அதிகாரி 
இருந்தார். பாம்பைப் பிடித்து தரையில் கிடத்தி, அதற்கு முன்
தன தொப்பியை அங்கும் இங்கும் ஆட்டி, கொபமூட்டுவார்.
பாம்பு சீறித் துள்ளி கொத்த வருவதை ஆங்கிலேயர்கள் பார்த்து
படம் பிடித்து மகிழ்வார்கள். ஒரு பாம்பு பிடித்து காண்பித்தால்,
அந்த செக்யூரிட்டி அதிகாரிக்கு, குறிப்பிட்ட ஒரு தொகை
வழங்கப்படும் பழக்கம் இருந்தது.

        இந்திய புராணக் கதைகளில், பாம்பு பற்றிய கதைகள் ஏராளம்
பாம்பு  சிவனின் தோளிலும்,கையிலும் கணபதியின் இடுப்பிலும்,
முருகனின் மயிலின் காலடியிலும் இருக்கும். பாம்பு  வழிபாடு,
இந்து, புத்த மதத்தினரிடையே மட்டுமல்ல, உலகின் எல்லா
பகுதிகளிலும் பாம்பு வழிபாடும் அது சார்ந்த கதைகளும் நிறைய
இருக்கின்றன.

         இந்து மதத்தில் புகழ் பெற்ற பாம்புகள் :-1.)சேஷா.(ஆதிசேஷா,
சேஷநாகா.அல்லது 1000 தலை கொண்ட பாம்பு.)உலகைத் தன்
தலைகளால் தாங்குவதாக நம்பப்படுவது. விஷ்ணுவின் படுக்கை 
யாக இருப்பது. கண்ணனை இடி, மின்னல் மழையிலிருந்து 
காக்க, குடையாக, வசுதேவருடன் யமுனையைக் கடந்தது. 
2.) வாசுகி:- மந்தார மலையைச் சுற்றி கயிறாகக் கட்டப்பட்டு 
அமுதம் கடைய உதவியது. 
3.) காலியா ( காளிங்கன்.) யமுனையை விஷமாக்க  கண்ணனால் 
அதன் தலைமேல் ஏறி அடக்கப்பட்டது. 
4.)மானசா அல்லது மா மானசா:-உலகின் தாயாகக் கருதப்படுவது.
5.)அனந்தன்:-இந்த புவியை சுற்றி இருப்பதாக கருதப்படுவது. 
6.)பத்மநாபா அல்லது பத்மாகா:-தென் திசையைக் காப்பதாக 
நம்பப்படுவது. 
பாம்பு பற்றிப் எழுதத் துவங்கினால் எழுதிக் கொண்டேபோகலாம்.

      பாம்பை ஒரு ஜீவ சக்தியாகக் கருதி, அதைக் கட்டுக்குள் 
கொண்டு வரும் முறையில் யோகா தவ யோகிகளால் பயிலப் 
படுகிறது, என்று நம்பப்படுகிறது. 

      பாம்பு துரத்தினால் நேராகவும் , யானை துரத்தினால் வளைந்து 
வளைந்து ஓடுவதுதான் தப்பிக்கச் சிறந்த வழி என்று சிறுவயதில் 
சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். இதுவரை எந்த அனுபவமும் 
ஏற்பட்டதில்லை. 

EEL எனப்படுவது பாம்பினமா, இல்லை மீனினமா.?எனக்குEEL 
தோலால் செய்யப்பட்ட ஒரு கைப்பை நண்பன் ஒருவனால் 
பரிசளிக்கப்பட்டது. அதனை என்னிடமிருந்து என் மகன் எடுத்துக் 
கொண்டு விட்டான். 

       பாம்பு பற்றிய உண்மை நிலைகள் நன்றாக அறியப்பட்ட இந்த 
காலத்தில் பாம்பை தின்பவர்களும் இருக்கிறார்கள், பாம்பை 
வழிபடுபவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் அவரவர் செளகரியம் 
மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயம். 

      கடைசியாக பாம்பு பற்றிய கவிதை ஒன்று. கவிதை வரிகள் 
நினைவுக்கு வரவில்லை. கருத்தினைக் கூறுகிறேன்.:- 
ஆலமரத்தில்  பாம்பு தொங்க, விழுதென்று குரங்கு தொட்டு 
பயந்தோடி உச்சாணி கிளையில் ஏறி தன் வால் பார்த்தும் 
பாம்பென்று பயப்ப்படுமாம்.
=====================================================   
.  










.

புதன், 6 ஏப்ரல், 2011

உங்கள் ஓட்டு யாருக்கு.?

உங்கள் ஓட்டு  யாருக்கு.?
----------------------------------
         ஓட்டுப் போடுவது நமது ஜனநாயக உரிமை, கடமை. தேர்தல் 
நாளில் மட்டும் இந்நாட்டு மன்னராகி ,நம்மை ஆள்பவரை தேர்வு 
செய்யும் ஒரு மகத்தான பொறுப்பு நமக்குக் கிடைக்கிறது. நமது 
வாக்கின்  மதிப்பை நாம் உணர்ந்து வாக்களிக்க வேண்டியது நம் 
கடமை. .அது சரி, யாருக்கு வாக்களிப்பது.?வாக்களிக்கும் முன் 
நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்தான்  என்ன.? நம் 
தொகுதியில் வேட்பாளராக நிற்பவரைப் பற்றி நமக்கென்ன 
தெரியும்.?வாக்களிப்பது வேட்பாளருக்கா இல்லை அவர் சார்ந்த 
கட்சிக்கா.?நம் வாக்கைப் பெறுவதற்கு வேட்பாளர்களோ 
கட்சிகளோ எந்த விதத்தில் தகுதி உள்ளவர்கள்.?நம் ஒருவரது 
வாக்கு என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.?இருக்கும் 
நிலவரம் திருப்திகரமாக உள்ளதா.?இல்லாவிட்டால் எதில் எதில் 
மாற்றங்கள் வரவேண்டும்.?மாற்றங்களைக் கொண்டுவர நம் 
பலம் என்ன.?மாற்றம் வந்தாலும் நிலவரம் மாறுமா.?ஆயிரம் 
கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம். அரசியல் அறிவு 
நமக்கு எவ்வளவு தூரம் இருக்கிறது.?இதையெல்லாம தெரிந்து 
நாம் ஓட்டுச்சாவடியில  பத்து நொடிகளுக்குள் ஓட்டுப் போடும் 
நேரத்தில் கடைசி நொடியில் தன்னிச்சையாக நம்மை அறியாமல்
வேண்டாதவருக்கே ஓட்டு போடும் பரிதாபம் நிகழக் கூடாது. நம் 
ஓட்டு நம் தலை எழுத்தையே மாற்றும் சக்தி கொண்டது.

            தேர்தலுக்கு நிற்கும்/ நிறுத்தப்படும் வேட்பாளர்களில் நாம்
ஒருவருக்குத்தான் ஓட்டுப் போடமுடியும். வேட்பாளரை நாம்
தேர்ந்தெடுக்கும் முன் நாம் சிந்திக்க வேண்டியதில்
முக்கியமானது மாற்றம் வேண்டுமா என்பதுதான். மாற்றம்
வந்தால் இதைவிட நல்ல ஆட்சி அமையுமா என்பதும்தான்.

             தற்போதைய ஆட்சி என்னவெல்லாம் செய்திருக்கிறது
என்னவெல்லாம் செய்திருக்கக் கூடாது ;தற்போதைய ஆட்சியின்
செயல்பாடுகளில் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன. தமிழ்
மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடக்க இருப்பதால் அது பற்றிக்
கொஞ்சம் அலசலாம்.

            இந்த ஆட்சி மக்களுக்காக செய்திருப்பதாக கூறுவது
1) .ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. 
2). பள்ளிகளில் இலவச மதிய உணவு, ஐந்து நாட்கள் முட்டை
3).இலவச தொலைக்காட்சிப் பெட்டி. 
4).இலவச நிலம். 
5).மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டம். 
6)/இலவச பஸ் பாஸ் ,சைக்கிள் etc etc.(மாணவ மாணவிகளுக்கு.)
தமிழகத்தில் சுமார் ஆறு கோடி மக்கள் இருப்பதாகக் வைத்துக் 
கொண்டால் இந்த வசதிகள் யார் யாருக்கு கிடைத்துள்ளது .?
குறைந்தது  மக்கள் தொகையில் 50% ஆவது இந்த சலுகைகள் 
பெற்றிருக்கிறார்களா.?பலனடைந்தவர் போற்றியும் மற்றோர் 
தூற்றியும் பேசுகிறார்களா.?ஆட்சி மாற்றம் வந்தால் இந்த 
சலுகைகள் தொடருமா, இல்லை அதிகரிக்குமா. இல்லை 
குறையுமா.?

           அரசாங்க நல திட்டங்களுக்கு வேண்டிய செலவுகளை 
எப்படி சமாளிக்கிறார்கள் மத்திய அரசின் பங்களிப்போடு 
டாஸ்மாக் மூலம் வருமானம், பெட்ரோல் விலையில் வரும் 
கணிசமான பங்கு,தவிர வரிவிதிப்பின் மூலம் கிடைக்கும் 
வருமானம். 

          இந்த நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மாற்றம் 
வேண்டுமா, வந்தால் நலமா என்றெல்லாம் யோசித்து மக்கள் 
வாக்களிக்க வேண்டும். 

         நான் ஒருமுறை திருமீயச்சூர் என்ற ஊருக்கு லலிதாம்பிகா 
கோவில் காண சென்றிருந்தேன்.அப்போது அந்த கிராமத்து 
மக்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது ,அரசாங்க நல 
திட்டங்கள் வந்தடைகிறதா என்ற கேள்விக்கு அவர்கள் சொன்ன 
பதில் என்னை சிந்திக்க வைத்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களோ 
சலுகைகளோ  வராமல் இருக்க விடமாட்டோம், எப்படிப் 
பெறுவது என்பது எங்களுக்குத் தெரியும் என்றனர். 
          பாட்டாளியை  நல்ல  " குடி மகனாக்கி"அதன் மூலம் வரும் 
வருவாயில் இந்த நலத் திட்டங்கள் நிறைவேற்றப் படிகிறதா. ?
நலத்திட்டங்களுக்கான செலவுகள் எல்லாம் ஊழல் இல்லாமல் 
செலவாக்கப்படுகிறதா.?
           கோடிக்கணக்கில் செலவு செய்து, பதவியில் அமருபவர்கள் 
செலவு செய்த பணத்தை எப்படி மீட்கிறார்கள்.?இதில் கட்சி 
வேறுபாடுகள் உண்டா.?
           எது எப்படியாயினும் அனைவரும் ஓட்டுப் போடவேண்டும். 
அதன் மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் மக்களின் ஆதரவு உள்ளவர் 
என்று கருதலாம். வாக்களிக்காமல் வீட்டில் இருந்து அரசியல் 
பேசுவது நல்ல அறிகுறி அல்ல. இருந்தாலும் இந்திய சாமானியன் 
விவரமானவன். 
            அரசியல் ஆதாயத்துக்கு கட்சி மாறும் அல்லது ஆதரவை 
மாற்றும் பச்சோந்திகளை வாக்காளன் அடையாளம் கண்டு 
கொள்வான். 
            ஜனநாயகம் என்பது ஓட்டுப் போடுபவர்களில்
மிகையானவர் கழுதையைக்  குதிரை என்றால் கழுதை
குதிரையாகத்தான் இருக்க வேண்டும். இது சாபமா வரமா புரிய  
வில்லை. நல்லதே நடக்கும் என்று நம்புவோம். 
======================================================







                                        
                              

 
 


        



திங்கள், 4 ஏப்ரல், 2011

திமுக ஆட்சி. முதல் நூறு நாட்கள்

திமுக  ஆட்சி............. முதல் நூறு நாட்கள். 
---------------------------------------------------------
           திமுக ஆட்சி வெற்றியா அல்லவா என்பதை ஆட்சி
பீடத்தில் அமர்த்திய முதல் நூறு நாட்களில் ஆராய்வதே சரியா 
தவறா என்பது முதலில் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம். 
இருப்பினும் முதல் நூறு நாட்களில் வெற்றி பெறுவதற்கான 
வழிமுறைகளை வகுக்கிறார்களா,கையாளுகிறார்களா என்பதை 
சிந்தித்து நோக்கி விளக்கம் காண முயலுகையில் பெரும் 
ஏமாற்றமே ஏற்படுகிறது. இவர்கள் பெரியதாக சாதித்து 
விடுவார்கள் என்று நம்பி, அது பலனடையாமல் போவதை 
கண்ணாரக் காண்பதால், ஏற்பட்டதல்ல ஏமாற்றம்; ஏழைப் பாமர 
மக்களை அடுக்குமொழி அலங்கார வாய் சொற்களை வீசி மயக்கி 
பதவியில் அமர்ந்ததனாலும் ,நடுத்தர மக்களை அவர்களை வாட்டி
கொண்டிருந்த பசி போக்கும் அரிசியின் விலை ஏற்றத்தைக் காட்டி 
ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம், என்று பசப்பு மொழி 
கூறி, அரசியலை அரிசி இயலாக்கி காண்பதாலும், இள 
வயதினரின் தமிழ் பற்றை மொழி வெறியாக மாற்றி, அதன் மூலம் 
ஆட்சியை அடைந்தவர்களின் சாதனையைக் காண்பதனாலும்
ஏற்படும் வருத்தம் , இவர்களது நடைமுறைக் கொள்கைகளையும் 
வழிமுறைகளையும் அறியும்போது ஐயகோ இந்த அவல 
நிலைக்கு ஆளாகிறோமே என்ற ஏக்கப் பெருமூச்சுதான் ஏமாற்ற 
மாகப் பிரதிபலிக்கிறது.

     அனைத்திந்தியாவிலும் யாரும் எண்ணியும் பார்க்க முடியாத 
விஷயம் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்பது. மற்றவர்களுக்குத் 
தெரியாத மாய மந்திரங்களும் இந்திர ஜாலங்களும் இவர்களுக்குத் 
தெரியுமோ என்னவோ; இல்லை, நாங்கள் அரிசி போடுகிறோம் 
ஆனால் மத்திய அரசு குறுக்கே நிற்கிறது என்று சொல்ல மற்றவர் 
களுக்குத்தான் தெரியவில்லையோ.!ஏழைப் பாட்டாளியை 
ஏமாற்றுவதில் கைதேர்ந்த வாய்ச்சொல் வீரர்கள் இன்னொன்றும் 
கூறுகிறார்கள். ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்று ஆரம்பிக்கிறோம் 
ஆனால் அதற்கு பொறுப்பு மத்திய அரசு ஏற்கவேண்டும். காஷ்மீர் 
மக்களுக்கு மட்டும் கோதுமை எப்படி குறைந்த விலைக்கு கொடுக் 
கிறார்கள் ? காஷ்மீரில் இருக்கும் அபாயம் தமிழகத்தில் இருக்கக் 
கூடாதா.?இவர்களுடைய சாயம் வெளுக்க வில்லையா.பயம் 
காட்டப் பார்க்கிறார்கள். நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு குழி 
வெட்டப் பார்க்கிறார்கள். இதே கதியில் ஒவ்வொரு மாநில அரசும் 
கூற முடியாதா.?கூறினால் ஏற்படும் பலன் அறிய முடியாததா ? 
இவர்களுக்கு ஒட்டுக் கொடுத்து ஆட்சி பீடத்தில் ஏற்றிய மக்கள் 
நெஞ்சு கொதிக்காதா? 

      மேலும் அரிசியிலும் ஏழை அரிசி, பணக்காரன் அரிசி, ரேஷன் 
அரிசி,கடைஅரிசி என்று என்னவெல்லாமோ கூறுகிறார்கள் ஐயா, 
ஏழை அரிசிதான் ரூபாய்க்கு ஒரு படி தருகிறேன் என்கிறாயே,
அதை ஏன் எல்லா மாவட்டங்களுக்கும் பொதுவாக்கக்  கூடாது.
நான் அடிக்கிறார் போல் அடிக்கிறேன் நீ அழுகிறாற்போல் அழு 
என்று சொல்வார்களாம். அதுபோல இவர்கள் ரூபாய்க்கு ஒரு படி 
போடுகிறார்போல் போடுகிறார்களாம் நாம் பெறுகிற மாதிரி 
பெற வேண்டுமாம். என்னே இவர்களது புத்திசாலித்தனம் !
தேர்தல் வாக்குமூலத்தை நிறைவேற்றுகிறாற்போல் நடிப்பு, 
அதுதான் அவர்களுக்கு கைவந்த வித்தை ஆயிற்றே. 

    ஆட்சி மொழியை எடுத்துக்கொள்வோம் .தமிழை பாதுகாப்பதாக
கூறுகிறார்கள். எப்படி.? பலகை எழுதுவதன் மூலமும், சினிமா
மூலமுமா.?ஒன்று மட்டும் கூறுகிறேன். தமிழனுக்கு மொழி பற்று 
உண்டு.ஆனால் அதையே ஊதி வீசி வெறியாக்க முனைகிறார்கள் 
திமுகவினர். இவர்களின் அடுக்குமொழி வாதங்களைக் கேட்டு 
இவர்கள்தான் தமிழை தோற்றுவித்து ,பேணிக் கட்டிக் 
காக்கிறார்கள் என்று எண்ணும் இளைஞர்கள இன்று இல்லா 
விட்டாலும் என்றாவது ஒருநாள் விழிக்கப் போகிறார்கள், பின் 
மனம் நொந்து கொதிக்கப் போகிறார்கள்.ஆனால் அதற்கு  முன்பே 
போட்டி மிகுந்த இந்த சமுதாயத்தில் அவர்கள் பின் தங்கி விடக் 
கூடாதே என்பதுதான் என் வருத்தம். இப்போது பள்ளிகளில் 
தமிழும் ஒழுங்காயில்லை, ஆங்கிலமும் சரியில்லை, இந்தியோ 
இல்லவே இல்லை. திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து நிற்கட்டும் 
கூடவே விரும்பிப் படிப்பவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கலாமே. 
ஆங்கிலம் போதிக்கப்படும் தரத்தை உயர்த்தலாமே. ஆக்க 
வேலையில் ஈடுபடுபவனுக்கு ஊக்கம் கொடுக்கலாமே. 
      மதுவிலக்கு திட்டம் பொறுத்தவரை திமுகவின் கொள்கைகள் 
மதில்மேல் பூனைக்கு ஒப்பிட முடியும். என்ன செய்வதென்று 
புரியாமல் மக்களின் தீர்ப்புக்கு விடுகிறோம் என்று சப்பை கட்டு 
கட்டுகிறார்கள். இவர்களுடைய முடிவினால் ஏற்படும் 
விளைவுகளின் பொறுப்புக்கு ஆளாக மறுக்கிறார்கள். இவர்களே 
இவர்களின் நிலை புரிந்து கொள்ளாத பரிதாப நிலை. !குதிரைப் 
பந்தயங்களை ஒழிப்போம் என்கிறார்கள். இப்போது காசு 
வைக்காமல் ஆடும்  பந்தயங்கள் பரவாயில்லை என்கிறார்கள் 
இந்த மாதிரி விஷயங்களில் இவர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு 
வராததைக் காணும்போது, இன்னும் ஒன்றும் கேட்டுப் போக 
வில்லை என்ற மன ஆறுதல் ஓரளவுக்கு ஏற்படுகிறது. 
      இன்னும் என்னென்ன வேடிக்கைகள். தொண்டர் படை 
அமைக்கப் போகிறார்களாம். எதற்கென்று கேட்கிறோம். சீனச் 
செங்காவலர் படையினை முன்னோடியாகக் கொள்ளும் 
திமுகவினரின் தொண்டர் படை, அண்ணாவின் எண்ணங்களை 
மக்கள் மீது திணிக்கவா.?கிடைத்த ஆட்சிக்கு வன்முறை  நீர் 
ஊற்றி வேரூன்றப் பார்க்கிறார்களா.? செயலால் ஏற்படுத்த 
முடியாத வெற்றிக்கு "தம்பிகளின்" ஆர்வ வெறியால் அஸ்தி
வாரமிடப் பார்க்கிறார்களா.?
      கலப்பு மணம் செய்பவருக்கு தங்கப் பதக்கமாம்..!கண்டதும் 
காதல் என்ற மோகம் அலைக்கழிக்க பால் உணர்ச்சிக்குப் பலி 
யாகி, வெறியைத் தணிக்க சற்றே வளைந்து கொடுத்து, சுய 
மரியாதைத் திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கை 
எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறது என்பதன் புள்ளி விவரங்கள் 
இவர்களுக்குத் தெரியுமா.? திருமணம் என்பது ஆயிரம் காலப் 
பயிர். ஆணும் பெண்ணும் உள்ளங்க்கலந்து ஒருமித்துச் செயல் 
படவே என்றிருக்கும் வாழ்க்கைத் தோணி. இதில் தூண்டுதல் 
என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆசை வார்த்தைகளுக்கும் தங்க 
பதக்கங்களுக்கும்  அர்த்தமே இல்லை. கலப்புத் திருமணங்கள் 
நடந்து வெற்றி பெற தங்கப் பதக்கங்கள் உதவாது. ஒரு சமயம் 
அடகு வைக்க உதவலாம், அதுவும் நல்ல தங்க மானால்.!

     திமுகவினர் தங்களது குறைபாட்டுகளுக்கெல்லாம்  காரணம் 
மத்திய அரசுதான் என்கிறார்கள். இந்திய சட்ட அமைப்புப்படி 
ஏற்படுத்தப்பட்ட மாநிலங்களின் உரிமைகளைக் கொண்டு 
இவர்களால் இதற்குமேல் சாதிக்க முடியுமா என்பதே கேள்வி. 
சாதிக்கிறோம் என்று விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டு. 
ஆட்சியில் இருக்கிறார்கள்.முடியாத போது  சட்ட அமைப்புதான்
காரணம் என்று கூறி தப்பிக்க முயல்வது, ஏமாற்று வித்தை.
முடிவாக நூறு நாட்களில் இவர்கள் சாதித்ததைக் கண்டும்,
சாதிக்கப்போவதாக கூறி எடுத்து நடத்தும் வழிமுறைகளை
காணும்போதும், வருத்தமும் ஏமாற்றமுமே மிஞ்சி நிற்கும்.
தமிழக மக்கள் இவர்களது ஆட்சியை வெற்றி என்று எப்படி
கூறுவர்.? ஏமாற்றிப் பதவியில் அமர்ந்ததே திமுகவின் வெற்றியே
தவிர, இவர்களின் ஆட்சிப் போக்கு வெற்றியே அல்ல

=================================================
திரு வாசன்  அவர்கள் என் உத்தயோக காலத்தில் அரசு 
நடவடிக்கைகளை ,செயல்பாட்டை எப்படி பொறுத்துக் 
கொண்டேன் என்று வினவி இருந்தார். அந்த காலத்திய 
எண்ணங்களுக்கு வடிகாலாய் நான் நான் எழுதி வைத்திருந்தது 
இப்போது இங்கு பதிவாகிறது. நன்றி வாசன்.
                            +++++++++++++++++++





 





       

சனி, 2 ஏப்ரல், 2011

உஷ்..............! தொந்தரவு செய்யாதீர்கள்

உஷ் ..........!  தொந்தரவு செய்யாதீர்கள். 
--------------------------------------------------
 இலவசங்கள் எல்லோருக்கும் எப்போதும் கிடைப்பதில்லை. 
 எல்லாமே இலவசமும் இல்லையே, அதை வைத்தே 
 வாழ்க்கை வாழ முடியுமா, வாழ்வை ஓட்ட முடியுமா,?
 அடிப்படைத் தேவைக்கு உழைத்தே ஆக வேண்டுமல்லவா. ?
 ஓடியாடி, உழைத்துக் களைத்துஉறங்குகிறான் இவன் 
 ஓட்டு கேட்டு,  உஷ்...........!   தொந்தரவு செய்யாதீர்கள். 
        
            ஆலை சங்கின் ஓலத்துக்குக் கட்டுப்பட்டவன்,
             காலை முதல் மாலை வரை உழைக்க வேண்டியவன் ,
             கனவுத் தொழிற்சாலை கதாநாயகன் அல்ல இவன், 
            ஒரே பாட்டில் உழைத்து முன்னேறி லட்சங்கள் சேர்க்க 
             உழைப்பதாக பாவனை காட்ட முடியாது. 
             கதாநாயகன் கன்னியின் கைப் பிடிக்க .
             சுவை எல்லாம் கூடி விடும் திரைக் கதையில், 
             சுமை எல்லாம் முடிந்து விடும் அவன் வாழ்வில்.   
             அதற்குப் பிறகுதான் வாழ்வே துவங்கும் 
             சாமானியன் வாழ்க்கைப் பயணத்தில். 
             கனவுகளில் மகிழ்ந்து முறுவல் செய்யும் இவனை, 
             ஓட்டு கேட்டு  உஷ்.......! தொந்தரவு செய்யாதீர்கள். 

கண்மூடித் துயிலும் போதாவது இவனை 
அண்டி நிற்கும் அவலங்கள் சற்றே மறையட்டுமே, 
 நனவில் இயலாத எத்தனையோ ஆசைகள்
கனவுலகில் நடத்தியும் கண்டும் களிக்கின்றான்
வானில் பறக்கின்றான், வெள்ளியினைத் தொடுகின்றான்,
கூடவே காதலியின் கண் பார்த்து மகிழ்கின்றான்.
எண்ணாமலேயே துணிய முடிந்த கனவுலகில்
நன்றாகவே இவன் மிதக்கின்றான் -இவனை
ஓட்டு கேட்டு உஷ் .........! தொந்தரவு செய்யாதீர்கள்.

             தந்தையாகவும் தனயனாகவும் தான்படும் துயர் தீர்க்க
             வாழ்க்கைத் தேரின் அச்சாணி இவன் யாராரோ
             ஏவியதெல்லாம் செய்தாக வேண்டும் வாழ்வில்.
             அர்த்த மண்டபத்தில் அழகாகக் கொலுவிருக்கிறான்;
             ஆரங்கே ,மாதம் மும்மாரி மழை பொழிகிறதா,
             என்றே முழங்குகிறான். கைகட்டி, வாய் பொத்தி (?),
             பதிலளிக்கப் பலபேர் சூழ அழகாக
             ஆட்சி செய்து மகிழ்கிறான் கனவில் -இவனை
             ஓட்டு கேட்டு  உஷ் .........! தொந்தரவு செய்யாதீர்கள்.

ஓட்டு கேட்டு வரும் உங்களுக்கு,
இன்று மட்டும் இவனே ராஜா, இவனே மந்திரி,
இதனாலென்ன லாபம்... யாரையுமே என்றுமே,
எதற்கும் ஏவ இயலாதவன்தானேபாவம் -இவனை
ஓட்டு கேட்டு உஷ்.........! தொந்தரவு செய்யாதீர்கள்
==============================================.