Friday, August 17, 2012

பொருள் தெரிந்து பாட


                                        பொருள் தெரிந்து பாட....
                                       --------------------------------
என்னுடைய “ சொல்லாமல் செல்வதே மேல்” என்ற  பதிவுக்குப்  பின்னூட்டமாக திரு வீ. மாலி அவர்கள்,சொன்னால் தவறாக எண்ணப் படுமோ என்னும் எண்ணம் வரும் போது “சொல்லற சும்மாயிரு “எனும் அருணகிரிக்கு முருகன் அளித்த உபதேசத்தை குறிப்பிட்டிருந்தார்.அந்த சொற்றொடர் என் மனதைப் பிடித்துக் கொண்டு விட்டது. கூடவே ,அதன் பின் தான் அருணகிரிநாதர் திருப் புகழ் எழுதினார் என்பதும் நினைவுக்கு வந்தது.

முருகனின் சொற்படி ஏதும் பேசாமல் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த அருணகிரிநாதரை முருகன் ”நம் புகழ் பாடுக “எனவும் ஏதுமறியாதவன் என்ன பாடுவேன், எப்படிப் பாடுவேன் என்று கேட்க “முத்தைத் தரு “ என்று அடியெடுத்துக் கொடுக்க எழுந்த முதல் பாடலே

முத்தைத் தரு பத்தித் திரு நகை
அத்திக்கிறை சத்திச் சரவண்
முத்திக்கொரு வித்துக் குருபர                      எனவோதும்

முக்கட் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமு வர்க்கத்தமரரும்.........................அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு, 
பட்டப்பகல் வட்டத் திகிரியில்...........................இரவாக

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தருபொருள் 
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் .........................ஒரு நாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர, 
நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
திக்கொடகந டிக்கக் கழுகொடு.............................கழுதாட

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத்தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக........................................எனவோத

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென..............................முது கூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல.................................பெருமாளே

 என்பதாகும்.

இப்பாடல் பலமுறை கேட்டிருந்தும் பொருள் முழுதும் தெரியாமல் இருந்தது. எனக்குப் பொருள் தெரிந்திருக்கவில்லை என்று சொல்வதில் எந்த வெட்கமும் இல்லை. எனக்குத் தெரியும் இதில் நான் தனியாக இல்லை என்று. பொருள் தெரிந்து படித்தால் அதன் மகிழ்ச்சியே வேறு. என்னில் ஒரு வேகத்தைக் கூட்டியவர் திரு. மாலி என்று சொல்வது மிகையாகாது.

நான் அறிந்த பொருளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். . முதலில் சில அருஞ் சொற்கள்
-------------------------------------------

அத்திக்கிறை = தெய்வயானை அம்மைக்குத் தலைவர்
சுருதி = வேதம்;
ஒற்றைக்கிரி = ஒப்பற்ற மந்தரமலை. ;
திகிரி = சக்கரம்;
பச்சைப் புயல் = பச்சை மாமலை போல் மேனி கொண்ட திருமால்.
பரிபுர = சிலம்புகள் அணிந்த
கழுது = பேய்கள்;
சித்ரப் பவுரி= அழகிய கூத்து;
கொத்துப் பறை = கூட்டமாகப் பல பறை வாத்தியங்கள்;
முது கூகை = கிழக் கோட்டான்.;
கொட்பு = சுழலுதல்;
அவுணர் = அரக்கர்;
குலகிரி =கிரௌஞ்ச மலை
பொரவல = போர் செய்ய வல்ல
பெருமாளே = பெருமை மிகுந்தவரே.

முத்தினைப் போல் ஒளிர்விடும் சிரிப்பினை உடைய தெய்வயானை அம்மையின் தலைவரே, அன்னை உமையவள் ஈன்றிட்ட சக்திவேல் ஏந்தும் சரவணபவ எனும் ஆறுமுக, முத்தி எனும் வீடு பெற வித்தாய் இருப்பவனே, தகப்பனுக்கே உபசரித்த குருவான பெருங் கடவுளே,/-

 என்றெல்லாம் உனை துதிக்கும் முக்கண்ணன் சிவபெருமானுக்கும் முந்தைய வேதத்தின்  முழுப் பொருளும் அடங்கும் ஓம் எனும் மந்திரத்தை உபதேசித்து, திருமால் பிரமன் முதலான முப்பத்து  முக்கோடி தேவரும் அடிபணிய ,/

- திக்குக்கு ஒரு தலை என்று பத்துத் தலை சிதற அம்பெய்தி அரக்கரை அழித்து, மந்தர மலை கொண்டு பாற்கடல் கடைந்து , சக்கரத்தால் சிலகணம் சூரியனை மறைத்து இரவாக்கி (ஜயத்திரனைக் கொல்ல வழிவகுத்த )/-

 பக்தனுக்குத் தேரோட்டிய,மரகதம் எனும் பச்சை மணி ஒத்திட்ட , அன்பர்க்குப் புயல்வேகத்தில் வந்தருளும் பச்சை மாமணி வண்ணனும் மெச்சுகின்ற பரம்பொருளே எனைப் பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் நாளும் உண்டோ என இறைஞ்சுகிறேனே. 

தித்தித்தெய் எனும் தாளத்துக்கு ஒப்ப சிலம்பொலி எழும்ப நர்த்தனம் செய்யும் பத்ரகாளி எல்லாதிக்கும் சுழன்றாட பிணங்கொத்தக் காத்திருக்கும் கழுகுகளுடன் பிணந்தின்னிப் பேய்களும் ஆட /-

 எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும் அட்ட பயிரவர் எனும் எண்மரும் இவ்வாட்டத்துக்கு ஏற்ப  த்ரிகடக என தாளமிடக்/

- கூடவே தாரை தமுக்கு எனும் பல வகை தாள வாத்தியங்களும் அதேகதியில் முழங்கிடவும், பலகாலம் வாழ்ந்திருந்த கிழக் கோட்டான்களும் குக்குக்குகு குக்குக்குகுகுகு ,குத்திப் புதை புக்குப் பிடி என்று குழறி வட்டமிட்டு எழ,/

-சிவனாரின் வரம் பெற்றவன் எனும் இணக்கத்தை மறந்து அசுரர்களை வெட்டிக் குவித்து அவுண குலத்துக்கு இசைவாய் நின்ற குலகிரி ( க்ரௌஞ்ச மலை.)யையும் வேலாலே குத்திப் பொடி செய்து அறவழியில் நின்றன்று போர் செய்த பெருமைக்கு உரியவரே.



                                                                                                           
வேலும் மயிலும் துணை
-----------------------------------

  ...

9 comments:

  1. பல பாடகர்கள் பாட பயப்படும் பாடலை, பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருணகிரிநாதர் பாடல் பகிர்வுக்கும், அதன் விளக்கத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  3. இந்தப்பாட்டு பலமுறை அர்த்தம் தெரியாமலே கேட்டு ரசித்திருக்கோம். இனி அர்த்தம் புரிந்து ரசிக்க முடியும் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. //வேலும் மயிலும் துணை//

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. பாடலை முழுமையாகத் தந்தமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  6. நிறைய உழைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. உண்மையில் எனக்கு இதுவரை இந்தப் பாடலுக்கு
    அர்த்தம் தெரியாது .இன்றாவது அறிய்வைத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. அருமை.. அருமை.

    ReplyDelete
  9. கிருபானந்த வாரியார் இந்தப் பாடலுக்குக் கதையோடு பொருள் சொல்வார். சிடி/விடியோ இருக்கிறதா தேடவேண்டும்.
    அருமையான பதிவு சார்.
    அருணகிரி நாதர் திடீரென்று இப்படி நாப்புரட்டும் தமிழில் பாட முடிந்தது என்பது இன்றைக்கும் ஆச்சரியமாகவே இருக்கிறது. திருவண்ணாமலை போன போது கோவிலில் முருகன் அருணகிரிக்கு அடியெடுத்துக் கொடுத்த இடமென்று சொல்லும் இடத்தைப் பார்த்தேன். சுவாரசியம்.

    ReplyDelete