Saturday, April 20, 2013

மன சாட்சி ( நாடகம் )-11

        மனசாட்சி ( நாடகம் )

காட்சி.:- 12    இடம்.:-கனகசபை வீடு.
பாத்திரங்கள்.;-கனகசபை, வேதவதி, சபாபதி, நவகோடி

( திரை உயரும்போது, கனகசபை அமர்ந்திருக்க, அவர் காலை வேதவதி பிடித்துக் கொண்டிருக்க, சபாபதி வருகிறான்.)

சபாபதி.:- போச்சுடா போச்சு....! எல்லாம் போச்சு..... கட்டியிருந்த மனக்கோட்டை எல்லாம் போச்சு....சும்மாவா சொல்லி இருக்காங்க ...பேராசை பெருநஷ்டம்னு..... அப்பா... இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். நீங்க கேட்கலை.இப்ப எல்லாமே போச்சு.....
கனகசபை.:- ஏண்டா சும்மா ஒப்பாரி வெக்கறே.... துப்பு கெட்ட பிள்ளை ஒன்னைப் பெத்ததுக்கு எல்லாமே போகாம ஏதாவது மிஞ்சுமா.....! சொல்றதை சொல்லிட்டு அப்புறம் நீ ஒப்பாரியைத் தொடர்ந்து பாடு...
வேதவதி.:- ஏங்க.. குழந்தையை சும்மா கரிச்சுக் கொட்டறீங்க....அவனே பாவம் ஏதோ நொந்து கிடக்கான்....
சபாபதி.:- கலியாணம்னு ஆரம்பிக்கறதுக்கு முந்தியே சம்பந்திச் சண்டை போட்டீங்களே...தொடர்ந்து போட்டு கல்யாணத்தையாவது முடிச்சிருக்கக் கூடாதா....?
கனகசபை.:- உன் கல்யாணத்துக்கு இப்ப என்னடா அவசரம்..

சபாபதி.:- இல்லியே... அவசரமே இல்லை... நீங்க பாட்டுக்கு சாவகாசமா என் கல்யாணத்தைப் பற்றி நெனக்கறதுக்குள்ள ஊரிலுள்ள குமரிகள் எல்லாம் கெழவிகளா மாறிடுவாங்க.
கனகசபை.:- அப்ப ஒரு கெழவியையே கட்டிக்க......
சபாபதி.:- என்னப்பா இது சமய சந்தர்ப்பம் இல்லாம ஜோக் அடிக்கிறீங்களே...
வேதவதி.:- விஷயத்தைத்தான் விளக்கமாச் சொல்லேண்டா கண்ணா....
சபாபதி.:- இப்ப அதிர்ச்சி தர செய்தி ரெண்டு சொல்லப் போறேன்......எதை மொதல்ல சொல்றதுன்னு தெரியலை. ஒண்ணைச் சொன்னா நான் மயக்கம் போடுவேன். இன்னொண்ணைச் சொன்னா நீங்க ரெண்டு பேரும் மயக்கம் போடுவீங்க. ..
கனகசபை.:- மொதல்ல இருக்கறதச் சொல்லி நீ மயக்கம் போட்டு விழு..உன் மயக்கத்தை நாங்க தெளிவிச்சப்புறம் இன்னொண்ணைச் சொல்லு. நாங்க மயக்கம் போடறோம்.
சபாபதி.:- அதுதானே நடக்காது...ஒரு சமயம் மயக்கம் போடறதுக்குப் பதிலா ‘பொட்டுன்னு போயிட்டீங்கன்னா..............உயில் எல்லாம் தயாரா சொல்லுங்க.....
வேதவதி.:- டேய்.... டேய்... விஷயத்தைச் சொல்லுடா....
சபாபதி.:- நம்ம நவகோடி சார் பொண்ணு நவநீதத்துக்குக் கல்யாணமாம்..... ஆங்.... நான் மயக்கமா விழலை......! அப்பாடா... தப்பிச்சேன்.....
கனகசபை.:-என்னடா சொல்றே....
சபாபதி>;-இன்னும் வெளக்கமாச் சொல்லணுமா......?நவகோடி அவர் பெண்ணை எனக்குக் கட்டி வைக்கப் போறதில்லை....
வேதவதி.:- ஏனாம்....?
சபாபதி.: - ஷீலாவோட சொத்தும் ,அவர் சொத்தும், நம்ம சொத்தும் எல்லாம் ஒரேயெடத்தில இருக்கணுங்கறதுக்காக நவநீதத்தை எனக்குக் கல்யாணம் பண்ணி வெக்கறதா ஒத்துண்டார்....இப்பத்தான் ஷீலாவோட சொத்து நம்ம கையை விட்டுப் போகப் போவுதே.......
கனகசபை.:- எப்படிடா போகும்....? உயில்ல இருக்கிற கண்டிஷன் நெம்பர் டூ நிறைவேறலியே.......
சபாபதி.:- அதுதான் சொல்ல வந்தேன்.ஷீலாவுக்குக் குழந்தை பிறக்கப் போவுது....இப்ப என்ன செய்வீங்க......?
கனகசபை.:- ஆங்........!
வேதவதி.:-என்னங்க... என்ன ஆச்சு.....?
சபாபதி.:-( ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து அவர் முகத்தில் அடிக்கிறான்) ஐயோ அப்பா... போயிட்டீங்களா....
கனகசபை.:-டேய்...டேய்..... என்னை நீயே அனுப்பிச்சுடுவே போலிருக்கே....நீதான் நாங்க மயக்கம் போடுவோம்னு சொன்னியே.....(நவகோடி வருகை ).. வாங்க சம்பந்தி வாங்க....எப்ப கல்யாணத்துக்கு நாள் வெச்சுக்கலாம்...?

நவகோடி.:- அதெல்லாம் வெச்சாச்சுப்பா....! பத்திரிக்கை கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன். எம்பொண்ணு நவநீதத்துக்கு வேற இடத்திலெ கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டேன். மாப்பிள்ளை....... சும்மா சொல்லக் கூடாது.... சபாபதி மாதிரி இல்லை.... சொம்மா ராஜாவாட்டம் இருக்கான்.... ஹூம்...! எல்லாம் நவநீதத்தோட அதிர்ஷ்டம்.....இல்லேன்னா இந்த சபாபதிய இல்ல கட்டிண்டு  மாரடிச்சிருக்கணும். அப்ப நான் வரேன்... அவசியம் கல்யாணத்துக்கு வாப்பா.......( போகிறார்.)
வேதவதி.:- அடடா....என்ன மனுஷன்....என்ன மனுஷன்...... இருந்தா இப்படியில்லே இருக்கணும்.... வந்தாரு... வக்கணையாப் பேசினாரு..போனாரு.... நீங்களும் இருக்கீங்களே. ...
கனகசபை.:- என்னடீ.... இவ்வளவு நாளுக்கப்புறம் வருத்தப் படறியா,....?
சபாபதி.:- எல்லாம் காலங் கடந்த பின்தானே ஞானோதயம் வருது.... டேய்.... சபாபதி......ரெண்டு கல்யாணம்னு துள்ளினியே........ ஒண்ணுக்குக் கூட வழியில்லை போலிருக்கேடா.......!
                 ( திரை )                       ( தொடரும் )
 

..

4 comments:

 1. சுவாரஸ்யம்... அடுத்து என்னதான் நடக்கப்போகுதோ...?

  ReplyDelete
 2. கதை அருமையாய் நகர்ந்து போகிறது, அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கின்றேன். நன்றி

  ReplyDelete
 3. மனசாட்சி பேசுகிறது ..

  ReplyDelete
 4. முதல் அதிர்ச்சி எதிர்பார்த்ததுதான். இரண்டாவது அதிர்ச்சி எதிர்பாராதது. என்னதான் ரவிமேல் வெறுப்பு இருந்தாலும் ஷீலா முறைதவறிப் போகமாட்டாள் என்ற நம்பிக்கை இன்னும் மிச்சமிருப்பதால்தான் இந்த அதிர்ச்சி! கதையின் முடிவைத் தெரிந்துகொள்ளும் ஆவல் மிகுகிறது. இதுவரை எந்த முடிவையும் யூகிக்க முடியாவண்ணம் அருமையாகக் கதையைக் கொண்டுசென்றவிதத்துக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete