கீதைப் பதிவு அத்தியாயம் --2
----------------------------------------
ஸாங்கிய யோகம்
ஸஞ்ஜயன் சொன்னது
அங்ஙனம் இரக்கம் ததும்பி,கண்களில் நீர் நிறைந்து,பார்வை
குறைந்து துக்கப்பட்ட அர்ஜுனனுக்கு
,மதுசூதனன் இவ்வாக்கியத்தைச் சொன்னார்(1)
அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும்,
புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை
வந்தடைந்த்து,?(2)
பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே.அது உனக்குப்
பொருந்தாது.எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வை துறந்துவிட்டு எழுந்திராய்(3)
அர்ஜுனன் சொன்னது
பகைவரைத் தொலைப்பவரே,மதுவைக் கொன்றவரே போற்றுதற்குரிய
பீஷ்மரையும் , துரோணரையும் நான் எங்ஙனம் போரில் எதிர்த்துப் பாணங்களால் அடிப்பேன்
(4)
மேன்மை பொருந்திய பெரியோரைக் கொல்லாமல், பிக்ஷை ஏற்று
உண்பதும் சாலச் சிற்ந்தது. ஆனால் முதியோர்களைக் கொன்றால் ரத்தம் கலந்த பொருளையும்
போகத்தையும் இம்மையிலேயே அனுபவிப்பவன் ஆவேன் (5)
நாம் இவர்களை ஜெயிப்பது அல்லது இவர்கள் நம்மை ஜெயிப்பது இதில்
நமக்கு எது மேலானது என்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர் வாழ விரும்ப
மாட்டோமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் எதிரில் வந்து நிற்கின்றனர்.(6)
சிறுமை என்ற கேட்டினால் நல்லியல்பை இழந்த நான் அறநெறியை அறியப்
பெறாது மயங்கி உம்மை வினவுகிறேன்.எனக்குச் சிறப்பீனுவதை உறுதியாக இயம்பும்..நான்
உமது சிஷ்யன், தஞ்சமடைகிறேன், உபதேசித்தருளும்.(7)
பூமியில் நிகரற்றதும் ஆக்கத்தையுடையதுமான ஆட்சியைப் பெறினும்,
அமரர்க்கு,அதிபதியாயிருக்கப் பெறினும் , என் புலன்களைப் பொசுக்குகின்ற துன்பத்தை
அவை துடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை(8)
ஸஞ்ஜயன் சொன்னது
பகைவனைப் பொசுக்கும் குடகேசனாகிய அர்ஜுனன், ஹிருஷிகேசனாகிய
கோவிந்தனுக்கு இங்ஙனம் இயம்பிப் “போர்
புரியேன்” என்று
பேசாதிருந்துவிட்டான்(9)
திருதராஷ்டிரா, இரண்டு சேனைகளுக்குமிடையில் இன்னற்படுகிற அர்ஜுனனுக்கு
இளமுறுவல் பூத்தவராய் ஹிருஷிகேசன் இவ்வார்த்தைகளை இயம்பினார்.(10)
ஸ்ரீபகவான் சொன்னது
துயரத்துக்குரியவர் அல்லார் பொருட்டுத் துயருறுகிறாய்.ஞானியரது
நல்லுரையையும் நவில்கிறாய். இருப்பார்க்கோ இறந்தார்க்கோ புலம்பார் பண்டிதர்.(11)
முன்பு எப்பொழுதாவது நான் நீ இவ்வரசர்கள் ஆகியவர்களில்
யாராவது இல்லாதிருந்ததில்லை. இக்காயங்கள் அழியுமிடத்தும் நாம் இல்லாமற்
போகமாட்டோம்.(12)
ஆத்மாவுக்கு இவ்வுடலில் இளமையும் யௌவனமும் மூப்பும்
உண்டாவதுபோல் வேறு உடல் எடுப்பதும் அமைகிறது.தீரன் அதன் பொருட்டு மயங்கான் (13)
குந்தியின் மைந்தா, பொறிகள் புலன்களிடத்துப் பொருந்துதலால்
குளிர் வெப்பம் இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றுதலும் மறைதலும்
நிலையாமையும் அவைகளின் இயல்பு.பாரதா அவைகளைப் பொறுத்துக்கொள்.(14)
புருஷ சிரேஷ்டனே, எவன் இவற்றால் இன்னலுறாது,இன்பதுன்பங்களை
ஒப்பாக உணர்கிறானோ அத்தீரனே சாகா நிலைக்குத் தகுந்தவனாகிறான்(15)
இல்லாததற்கு இருப்பு கிடையாது. இருப்பது இல்லாமற்
போவதுமில்லை.உண்மையை அறிந்தவர்க்கே இவ்விரண்டின் முடிவு விளங்கும் (16)
உலகெலாம் பரவிய பொருள் அழிவற்றதென்று அறிக.அழியாப் பொருளை
அழிக்க யாருக்கும் இயலாது.(17)
நித்தியமாய் நாசமற்றதாய் அளப்பரியதாய் உள்ள ஆத்மாவின்
உடலங்கள் யாவும் அழியும் தன்மையினவாம் ஆதலால் பார்த்தா போர் புரிக.! (18)
ஆத்மாவைக் கொலையாளி என்றும் கொலையுண்பானென்றும் எண்ணும்
இருவரும் அறியாதார். ஆதமா கொல்வதுமில்லை, கொல்லப்படுவதும் இல்லை.(19)
இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இது
இல்லாதிருந்து பிறகு பிறந்ததன்று( இருந்து பிறகு இறந்து போவதன்று)இது பிறவாதது,
இறவாதது, தேயாதது, வளராதது.காயம் கொல்லப்படுமிடத்து ஆத்மா கொல்லப் படுவது
இல்லை(20)
பார்த்தா,இவ்வாத்மாவை அழியாதது,மாறாதது, பிறவாவது,
குறையாததுஎன்று அறிபவன் யாரைக் கொல்வான், யாரைக்கொல்விப்பான்.?(21)
பழுதுபட்ட துணிகளைக் களைந்துவிட்டு மனிதன் புதியவைகளைப்
போட்டுக் கொள்வது போன்று ஆத்மா பழைய உடலங்களை நீத்துப் புதியன புகுகிறது.(22)
ஆயுதங்கள் அதை வெட்ட மாட்டா, தீ அதை எரிக்காது, நீர்
நனைக்காது, காற்றும் அதை உலர்த்தாது.(23)
இவ்வாத்மா வெட்டுண்ணான்,வேகான்,நனையான், உலரான். இவன்
நித்தியமாய், நிறைவாய் நிலையாய் அசைவற்றவனாய் என்றும் இருப்பான்(24)
இவ்வாதமா பொறிகளுக்குத் தென்படாதவன், சிந்தனைக்கு
எட்டாதவன்,மாறுபடாதவன் எனப்படுகிறான்.ஆத்மாவை இங்ஙனம் அறிந்து துன்பத்தை
அகற்று.(25)
ஒருவேளை இவ்வாத்மா என்றும் பிறந்து என்றும் மடிவடைகிறான்
என்று எண்ணுவாயானால், அப்போதும் , பெருந்தோளுடையோய், அவன் பொருட்டு நீ வருந்துதல்
பொருந்தாது(26)
பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் உறுதி எனின் விளக்க
முடியாத விஷ்யத்தில் நீ வருந்துவது பொருத்தமாகாது(27)
பாரதா உயிர்கள் துவக்கத்தில் தோன்றாமலும் , இடையில்
தோன்றியும் , இறுதியில் தோன்றாமலும் இருக்கின்றன.இதைக் குறித்து வருந்துவானேன்(28)
இவ்வாத்மா வியப்புக்குரியது என்று விழிக்கிறான் ஒருவன் இது
என்ன விந்தை என்று விள்ளுகிறான் வேறு ஒருவன்,ஆச்சரியம் என்று காது கொடுக்கிறான்
இன்னொருவன், மற்றொருவன் இதைக் கேட்டும் அறிந்திலன்(29)
பாரதா,உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆத்மா என்றும் வதைக்கப்
படாதவன். ஆகையால் உயிர்களின் பொருட்டு நீ வருந்துதல் வேண்டாம்(30)
ஸ்வதர்மத்தை நோக்குமிடத்தும் நீ மனம் நடுங்கலாகாது.அறப்போரைக்
காட்டிலும் வேறு சிறப்பு அரசனுக்கில்லை.(31)
பார்த்தா தற்செயலாய் நேர்ந்ததும் திறந்த சொர்க்க
வாயில்போன்றதுமான இந்த யுத்தத்தை பாக்கியவான்களாகிய க்ஷத்திரியர்களே
அடைகிறார்கள்.(32)
அற்ப்போர் ஆகிய இதனை ஆற்றாயேல்,அதனால் நீ ஸ்வதர்மத்தையும்
கீர்த்தியையும் இழந்து பாபத்தை அடைவாய்.(33)
மானுடர் உன்னை யாண்டும் இழிந்து பேசுவார்கள்.போற்றுதலுக்குரிய
ஒருவன் தூற்றப்படுதல் இறப்பதிலும் இழிவே.(34)
பயத்தால் நீ போரினின்று பின் வாங்கினாயென்று மகாரதிகர்கள்
எண்ணுவார்கள்.எவர்பால் நீ பெருமை பெற்றிருந்தாயோ அவர்பால் நீ சிறுமையுறுவாய்(35)
உன் பகைவர்களுன் திறமையைப் பழித்துப் பகரவொணாச் சுடு சொற்களைச்
செப்புவார்கள். அதைவிடப் பெருந்துன்பம் யாது உளது.(36)
போரில் மடிந்தால் பொன்னுலகைப் பெற்றிடுவாய்.வென்றால் மண்ணுலகை
ஆண்டு அனுபவிப்பாய்.ஆகையால் கௌந்தேய.போரின் பொருட்டு உறுதி கொண்டு எழுந்திரு.(37)
இன்பம் துன்பம் லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளைச்
சமமாகக் கருதிப் போரில் முனைக. அதனால் நீ பாபம் அடையாய்.(38)
ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவு உனக்குப் புகட்டப் பட்டது.இனி
பார்த்தா யோகத்தைப் பற்றிக் கேள். யோக புத்தியைப் பெறுவாயாகில் நீ கர்ம
பந்தத்திலிருந்து விடுபடுவாய்.(39)
இதில் முயற்சி ஒன்றும் வீண்போதல் இல்லை.குற்றமொன்றும்
வராது.இதைச் சிறிது பழகினும் பெரும் பயத்தினின்று இது காப்பாற்றும்.(40)
குருகுலத்துதித்தோய், இந்த யோகத்தில் உறுதி கொண்டவனுக்குப் புத்தி ஒன்றேயாம்.உறுதி
கொள்ளாதவர்களின் புத்திகள் பலகிளைகளை உடையனவும்
முடிவற்றவைகளுமாம்.(41)
வேதமொழியில் விருப்பமுடையவர்கள்,சுவர்க்கத்தை விளைவிக்கிற
கருமத்துக்கு அன்னியம் ஒன்றுமில்லை என்பவர்கள்,கர்மம் நிறைந்தவர்கள், சுவர்க்கமே
முடிவான பேறு என்பவர்கள்-இத்தகைய அவிவேகிகளுடைய புஷ்பாலங்காரமான வசனத்தைக் கேட்டு
அறிவு கலங்கப் பெறுபவர்க்கும் போக ஐசுவரியத்தில் பற்று உடையவர்க்கும், உறுதியான
புத்தி உள்ளத்தில் உண்டாவதில்லை. அவர்களது புஷ்பாலங்காரமான சொற்கள் போக
ஐசுவரியத்தைப் பெறுவதற்கான காமிய கரும விசேஷங்கள் நிறைந்தனவாயும்,புதிய பிறவிகளை உண்டு
பண்ணுவனவாயும் இருக்கும்(42-44)
அர்ஜுனா, வேதங்கள் முக்குணமயமான ஸம்ஸாரத்தைப் பற்றியவைகள், நீ
இருமைகளினின்று விடுபட்டு எப்போதும் நடுவு நின்று, யோக க்ஷேமங்கள் அற்று, ஆத்ம
சொரூபத்தில் நிலைத்திருந்து, முக்குணங்களைக் கடந்தவனாகுக,(45)
எங்கும் நீர் பெருக்கெடுத்திருக்கையில் கிணறு பயன் படுகிறவளவு
ஞானத்தை உடைய பிரம்ம நிஷ்டனுக்கு வேதங்கள் பயன் படுகின்றன(46)
வினையாற்றக் கடமைப் பட்டுள்ளாய் வினைப் பயனில் ஒரு போதும்
உரிமை பாராட்டாதே.வினைப்பயன் விளைவிப்பவன் ஆகிவிடாதே.வெறுமனே இருப்பதில் விருப்பு
கொள்ளாதே. (47)
தனஞ்ஜெயா. யோகத்தில் நிலை பெற்று,பற்று அற்று, வெற்றி
தோல்விகளை சமமாகக் கொண்டு கருமம் செய். நடுவு நிலை யோகம் என்று சொல்லப் படுகிறது(48)
சமபுத்தியோடு செயல் புரிவதைவிட ஆசையோடு செயல் புரிவது மிகக்
கீழானதே. சமபுத்தியின்கண் சரணடைக. பயன் கருதுபவர் கயவர் ஆவர்(49)
மன நடுவு பெற்றவன் நன்மை தீமை இரண்டையும் இம்மையில்
துறக்கிறான். ஆகையால் நீ யோகத்தைச் சார்ந்திடு.திறமையுடன் செயல் புரிதல்
யோகம்.(50)
நடுவு நிற்கும் ஞானிகள் வினைப்பயனை விட்டொழித்து, பிறவித்தளை
நீங்கி,கேடில்லாப் பெரு நிலை அடைகின்றனர்(51)
உன் அறிவானது எப்பொழுது அவிவேகம் என்னும் அழுக்கைக்
கடக்குமோ,அப்பொழுது கேட்டதிலும் கேட்கப் போவதிலும் பற்றின்மையைப் பெறுவாய். (52)
(பல்பொருள்) கேட்டுக்கலங்கும் உன் அறிவு ஆத்மாவின்கண் என்று
அசையாது உறுதி பெறுமோ, அன்று நீ யோகம் அடைவாய்.(53)
அர்ஜுனன் சொன்னது
கேசவா, சமாதியில் நிலைத்த நிறை ஞானியின் லக்ஷணம் யாது?
உறுதியான அறிவுடையவன் எதைப் பெறுகிறான், எப்படி அமர்கிறான் எவ்வாறு நடக்கிறான்(54)
பகவான் சொன்னது
பார்த்தா, மனதிலெழுகின்ற ஆசைகளையெல்லாம் அகற்றிஆத்மாவில் ஆத்ம
திருப்தி அடைந்திருப்பவன் ஸ்திதப் பிரக்ஞன் என்று சொல்லப் படுகிறான்.(55)
துன்பத்தில் துடியாத, இன்பத்தில் நாட்டமில்லாத பற்று, அச்சம்
சினம் அற்ற உறுதியான உள்ளத்தை உடையவன் முனி எனப்படுகிறான்(56)
எவன் எங்கும் பற்றிலனாய்நலம் தருவதை அடைந்து மகிழாதும்கேடு
தருவதை அடைந்துநொந்து கொள்ளாமலுமிருக்கிறானோ அவன் அறிவு உறுதி பெருகிறது.(57)
ஆமை தன் அவயவங்களை அடக்கிக் கொள்வதுபோல
பொருள்களிடமிருந்துபொறிகளை முழுதும் உள்ளிழுக்க வல்லவனுக்கு நிறைஞானம் நிலை
பெறுகிறது.(58)
இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்களில்லை ஆசையுண்டு
பரமாத்மாவை தரிசித்தபின் அவனுடைய ஆசையும் அழிகிறது(59)
நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள
இந்திரியங்கள் பலவந்தமாகப் பற்றி இழுக்கின்றன. (60)
யோக நிஷ்டன் அவைகளையெல்லாம் அடக்கி என்னைப் பரகதியாகக்
கொண்டிருக்கிறான்.இந்திரியங்களை வசமாக்கியவனுக்கு
அறிவு நிலை பெறுகிறது.(61)
பொருள்களை நினைப்பதால் பற்றுண்டாகிறது.பற்று ஆசையாகப்
பரிணமிக்கிறது.ஆசை சினமாக வடிவெடுக்கிறது.(62)
சினத்தால் மனக் குழப்பம், குழப்பத்தால் நினைவின்மை,, நினைவு
நாசத்தால் புத்தி நாசம், புத்திநாசத்தால் ஆள் அழிகிறான்(63)
விருப்பு வெறுப்பற்றனவும் ஆத்மவசப் பட்டனவும் ஆகிய
இந்திரியங்களால் விஷயங்களில் உலவுகின்ற மனவேந்தன்
மனத் தெளிவடைகிறான்(64)
மனவமைதியில் மனிதனது துன்பங்கள் அனைத்தும் ஒழியும்.ஏனெனில் மன
வமைதி உடையவனுக்கு அறிவு விரைவில் ஆத்ம சொரூபத்தில் நிலை பெறுகிறது(65)
மனமடங்காதவனுக்கு ஆத்ம போதமுமில்லை, ஆத்ம பாவனையுமில்லை. ஆத்ம
தியானமில்லாதவனுக்கு சாந்தி கிடையாது. சாந்தி இல்லாதவனுக்கு இன்பமேது.?(66)
கப்பலைக் காற்றானது நீர்மேல் நிலைகுலைப்பது போன்று,அலைகின்ற
இந்திரியங்களைப் பின் தொடரும் மனது அவனது விவேகத்தை அரிக்கிறது.(67)
ஆகையால் ஆற்றலுடையாய்,யாருடைய பொறிகள்புலன்களிருந்து
பிரிக்கப்பட்டு இருக்கின்றனவோ அவனது அறிவு நிலை பெற்றுள்ளது(68)
உயிர்கள் அனைத்துக்கும் எது இரவோ அதில் யோகி விழித்திருக்கிறான்
உயிர்களெல்லாம் துய்த்துணரும் நிலை தத்துவ ஞானிக்கு இரவு(69)
அசைவற்ற நிறைகடலில் ஆறுகள் சென்றடங்குவதுபோல எம்முனிவன்பால்
ஆசைகளனைத்தும் சென்று ஒடுங்குகின்றனவோ அவனே சாந்தி அடைகிறான்.ஆசையுள்ளான்
சாந்தியடையான்(70)
எப்புருஷன் ஆசைகளைஅறவே அகற்றி பற்றற்று அகங்கார மமகாரமின்றி
நடமாடுகிறானோ அவன் சாந்தி அடைகிறான்(71)
பார்த்தா, இதுவே பிரம்ம நிலைப்பேறு ஆகும்.இதை அடைபவனுக்கு
மோகமில்லை.இறுதி காலத்திலாவது இதில் நிலைத்திருப்பவன் பிரம்ம நிர்வாணத்தை
அடைகிறான்(72)
ஸாங்கிய
யோகம் நிறைவு