செவ்வாய், 13 ஜூன், 2023

த னிம பறவை

தனிமைப் பறவை.

(  மாதங்கி மாலி அவர்கள் ஃபேஸ் புக்கில் ஆங்கிலத்தில் The Lonely Bird 
என்று ஒரு பத்தி எழுதியிருந்தார். அக்கருத்தை எடுத்தாண்டு நானும் 
தமிழில் “தனிமைப் பறவை “ என்றொரு பத்தி ஃபேஸ் புக்கில் எழுதியிருந்தேன். 
அதனை இங்கே பதிவாக இடுகிறேன். மாதங்கிக்கு நன்றி )  


                                                 தனிமைப் பறவை
                                   ----------------------------
மஞ்சள் வெயில் மாலை மதி மயங்கும் வேளை
ஆதவன் மேற்கே மறைய மறைய
செக்கர் வானச் சிவப்பினூடே கருமேகம்
களைகட்ட ,இருட்டு கோலோச்சத் துவங்க
மென்காற்று வீச மெய் குளிரத் துவங்கியது.

அகண்ட வானில் புள்ளினங்கள் அழகாக ஓர்
ஒழுங்கில் சீராகப் பறந்து தத்தம் கூடுகள் நாட,
எல்லாம் சென்றதைக் கண்ட நான்
தூரத்தே தன்னந்தனியே ஒரு சிறு பறவை
ஆயாசத்துடன் பறந்து வருதல் கண்டேன்.

“புள்ளே நீ ஏன் பின் தங்கி விட்டாய்.?
சிறகில் வலிமை குறைந்ததோ ?
உன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்க நீ
வெகுவாகப் பாடுபட்டாயோ.?
தானியங்கள் சிதறிக் கிடக்க வில்லையோ.?
புழுக்கள் மண்ணுக்கடியில் பதுங்கி விட்டனவோ?
இரையின்றி நீ சென்றால் அவற்றின்
ஏமாற்றம் தாங்க முடியாததோ.?

இருந்தாலும் சின்னப் பறவையே
உன் கூட்டம் விட்டு நீ பின் தங்கிச் செல்வது
எனக்கு என்னவோ போல் தோன்றுகிறது
இருட்டி விட்டால் உனக்குப் பாதை தெரியுமா.?
விரைவாய் சிறகசைத்துச் செல் சின்னப் பறவையே
தனியே இருத்தல் இவ்வுலகில் கொடிது.

நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.
நீ உன் சிறகசைப்பை விரைவாக்குகிறாய்
இருட்டினூடே நீ மறைந்து விடுகிறாய்.
உன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.
உன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்
அவற்றுக்கு ஆகாரம் ஊட்டுகிறாய்.

நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.
சென்று வா என் சின்னப் பறவையே.”
-------------------------------------------------
  

21

10 கருத்துகள்:

  1. சிலரது  சிரமங்களை நம் சிரமமாக உணர்கிறோம்.  

    அந்தப் பறவைக்கு இயலாமையோ..  மன ஆற்றாமையோ...    

    கூடடைந்து குஞ்சுகள் முகம் பார்த்தபின் அதன் மூட் மாறலாம்.  நாளை அது இன்னும் வேகமாகப் பறக்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. இம்மாதிரிக் கவிதைகளால் மனித மனம் இளகும்; இரக்கக் குணம் வளரும்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு