உபாதைகள் அனுபவப் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உபாதைகள் அனுபவப் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

உபாதைகள் பலவிதம்-ஒவ்வொன்றும் ஒரு விதம்--3


                   உபாதைகள் பலவிதம் -ஒவ்வொன்றும் ஒருவிதம்- 3
                  ----------------------------------------------------------------------------------


உபாதைத் தொடரினை சீக்கிரமே முடிக்க முயற்சி செய்தாலும் அது நீண்டு கொண்டே போகுமளவுக்கு பலவித உபாதைகளின் வகைகளும் அதை  சமாளிக்கும் அனுபவங்களுமே காரணமாகும்
விருப்ப ஓய்வில் பெங்களூரு வந்தபோதே என் கேட்கும் திறனை சோதிக்க விரும்பினேன். எங்காவது வெடி வெடித்தால் என்ன புகைகிறது என்று கேட்கும் அளவுக்கு காதின் திறன் குறைந்து கொண்டு வந்தது. இளவயதிலேயே எனக்குக் காது மந்தம் என்று பிறர் சொல்லிக் கேள்வி. பெங்களூருவில் ஒரு பிரபலமான ENT Specialist ஐப் பார்த்தேன். அவர் சோதனை செய்து அறுவைச் சிக்கிச்சை செய்து விடலாம் STAPIDECTOMY  என்னும் குறை என்றார். அறுவை சிகிச்சை செய்தால் பலன் கிடைக்குமா. காது நன்றாகக் கேட்க எத்தனை சதவீதம் வாய்ப்பு என்று கேட்டேன். அவர் 95 சதம் வெற்றிகிடைக்கும் என்றார். எனக்கோ அந்த5சதம் வாய்ப்பில் இருப்பதும் போய்விட்டால் என்ற பயம். பேசாமல் வந்து விட்டேன். என் அம்மான் மகன் இன்னொரு நிபுணரைப் பரிந்துரைத்தான். அவரும் காதில் மைக்ரோ சர்ஜெரி மூலம் சரிப்படுத்தலாம் என்றார். அவரிடமும் எத்தனை சதம் வெற்றி வாய்ப்பு என்று கேட்டேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர் “ உங்களுக்குக் காது கேட்கும் “ என்று உறுதியாய்க் கூறினார். அந்த நம்பிக்கை எனக்கும் வர அறுவை சிகிச்சைக்கு நான் உடன்பட்டேன். அறுவைச் சிகிச்சை முடிந்தது எனக்குக் காதும் (இடது) கேட்டது. வலது காதையும் அறுவைச் சிகிச்சைக்கு இதுவரை உட்படுத்தவில்லை
நாங்கள் காசி ஹர்த்வார் பயணத்துக்கு டிக்கெட் எல்லாம் முன்பதிவு செய்து அந்த நாளுக்காகக் காத்திருந்தோம். எனக்கு என் இடுப்புவலி கூடவே வரும் sciatica என்று மருத்துவர்கள் கூறும் காலில் வலி வந்து மிகவும் படுத்தியது. எங்கள் பயணமே தடை படுமோ என்று பயந்தேன். அருகில் இருந்த ஒரு ஹாஸ்பிடலுக்குச் சென்றேன். அவர்கள் என்னைப் பரிசோதித்து எங்கள் பயணத்தை உத்தேசித்து உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் இல்லாவிட்டால் பயண நடுவில் பிரச்சனை அதிகமாகலாமென்றும் கூறினர். . நான் அதற்கு உடன் படும் பட்சத்தில் லாப்ரொஸ்கோபிக்கான கருவிகளைக் கொண்டு வருவதாகவும் கூறினர். எனக்கு அவர்கள் பேசும் விதத்தைப் பார்த்ததில் அது என்னை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய மார்க்கெட்டிங் டெக்னிக் என்று தோன்றியது. சிறிது அவகாசம் கேட்டு வந்து விட்டேன் நான் என்னைச் சோதித்த யுராலஜிஸ்டிடம் சென்று அபிப்பிராயம் கேட்டேன். அவர் அது ஹெர்னியாவின் ஆரம்பஅறிகுறி என்றும் சிறிது ஓய்வில் இருந்தால் சரியாகிவிடும் என்றும் பிறிதொரு சமயம் தேவைப்பட்டால் ஆப்பரேஷன் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். அதன் பிறகு நாங்கள் 22 நாட்கள் பயணத்தில் இருந்தோம் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை அதன் பிறகு.
சிறிது தூரம் நடந்தால் இடது தொடையின் நடுவேஅடிக்கடி வலி வரத் தொடங்கியது. சிறிது ஓய்வெடுத்தால் சரியாகும். மருத்துவரை அணுகியபோது Hernia  என்று சொல்லி அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளச் சொன்னார். செய்து கொண்டேன். பிரச்சனை தீர்ந்தது. இதற்கு முன்பே சிறு நீர் கழிக்க வேண்டும் என்னும் எண்ணம் அடிக்கடி வரும். ஒரு மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரம் கூடத் தாக்கு பிடிக்க முடியவில்லை UROLOGIST ஒருவரைப் பார்த்தேன் ஸ்கான் எடுத்துப்பார்த்து prostate enlargement   இருக்கிறது என்றும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் அறிவுரை கூறினார். எனக்கு அறுவை சிகிச்சை செய்வதில் உடன் பாடு இருக்கவில்லை. நான் இதுவரை பார்த்த மருத்துவர்களிலேயே என்னைக் கவர்ந்தவர் இவர். மருந்து மாத்திரைகள் சிம்ப்டொமெடிக் ரிலீஃப் தரலாம் ஆனால் அறுவைச் சிகிச்சை தேவை என்றார். நான் முதலில் எனக்கு இந்த சிம்ப்டொமெடிக் ரிலீஃப் கிடைக்கட்டும் .பிறகு அறுவை சிகிச்சை பற்றி யோசிக்கலாம் என்று கூறினேன். என் திடமும் முடிவெடுக்கும்திறனும் அவருக்குப் பிடித்தது.இன்றும் மாத்திரைகளில்தான் இருக்கிறேன் ( சுமார் 15 ஆண்டுகளாக). அவர் எனக்குக் கூறிய ஒரு அறிவுரை. மனதுக்குப் பிடித்த வேலைகளில் ஈடுபட்டு உபாதைகளின் நினைப்பை மறக்க    (diversion of  the mind)முயற்சி செய் என்றார். அப்போதுதான் நான் தஞ்சாவூர் ஓவியங்கள் தீட்டக் கற்றுக் கொண்டிருந்தேன்.மும்முரமாக அதில் ஈடுபட்டு சுமாரான திறனை வளர்த்துக் கொண்டேன் அவருக்கு என்னால் நன்றாக வரைய பட்ட ஒரு தஞ்சாவூர் ஓவியக் கிருஷ்ணனைப் பரிசாகக் கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்தார். தன் வீட்டு ஹாலை அது அலங்கரிப்பதாகவும் கூறினார். இந்த நேரத்தில்தான் 2010 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தி பார்த்து வலைப்பூ பற்றி அறிந்தேன். மனசை ஈடுபடுத்த எழுதலாம் என்னும் எண்ணம் தோன்ற. என் பேரன் மூலம் இந்த வலைப்பூவைத் தொடங்கி எழுதி வருகிறேன்.
அம்மாதிரி ஒரு நாள் நான் கணினியில் இருந்தபோது நெஞ்சு சற்று பாரமாக இருப்பது போல் தோன்றியது. எனக்குத்தான் இது பழக்கப்பட்டதாயிற்றே என்று வாளா இருந்தேன். ஆனால் இன்னும் சிறி நேரத்துக்குப் பின்னும் அது சற்றே வித்தியாசமாய் தொடரவே அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று ecg எடுக்கக் கேட்டுக் கொண்டேன். அவர்கள் ஈசீஜீ எடுத்து ஸ்பெஷலிஸ்டைப் பார்க்கச் சொன்னார்கள். நானும் என் மனைவியோடு நிபுணரைப் பார்க்கச் சென்றேன். அங்கும் ஈசீஜீ எடுத்து என்னை மருத்துவ மனைக்குப் போகச் சொன்னார்கள். மாலை ஏழு மணி ஆகி இருந்தது. அவர்கள் என்னைப் பல சோதனைகளுக்கு உட்படுத்தி என் மனைவியிடம் வந்திருப்பது ஹார்ட் அட்டாக் என்றார்கள். நாங்கள் தனியே இருந்தோம். என் மக்களுக்குச்செய்தி பறந்தது. பதறி அவர்களும் வர மறு நாள் angiography  செய்தார்கள் ஒரு குழாய் ஏறக்குறைய முழுவதும் அடைப்பு என்று கூறி angioplasty  செய்தார்கள் என்னிடம் அரை முதல் முக்கால் மணி நேரத்துக்குள் முடிந்து விடும் என்றவர்கள் ஒன்றரை மணி நேரமாயும் முடிக்க முடியாமல் இருந்தனர். எனக்கு அவர்கள் பரிதவிப்பு புரிந்து கேட்டேன். பயப்பட ஒன்றுமில்லை என்று கூறி சிறிது நேரத்தில் முடித்தனர். எனக்கு BP கிடையாது சர்க்கரை நோய் கிடையாது கொலோஸ்திரல் கிடையாது இருந்தும் ஏன் இந்த அடைப்பு என்பது புரியாத புதிர். முக்கால் ,மணி நேர procedure  ஏன் தாமதமாயிற்று என்று கேட்டதற்கு ரத்தக் குழாயில் கால்ஷ்யம் டெபொசிட் இருந்தது என்று கூறி அது நான் சிகரெட் புகைக்கும் பழக்கமுள்ளவனாய் இருந்ததனால் இருக்கலாம் என்றார்கள் எனக்கு இந்த பிரச்சனை வந்தபோது நான் புகைப் பழக்கத்தை நிறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாகி இருந்தது.என்ன ஏதோ காரணம் கொண்டு அடைப்பு ஏற்பட்டு நான் ரூ மூன்று லட்சம் வரை செலவு செய்ய வேண்டி இருந்தது. என் மனதின் எங்கோஒரு ஓரத்தில் இது தேவை இல்லாத செலவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி பார்த்தால் சாலையில் நடந்து செல்வோரில் பத்துக்கு மூன்று பேராவது இம்மாதிரி சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டால் சிகிச்சை தேவைப் படுபவராகவே இருக்கும்.


விருப்ப ஓய்வு பெற்று நான் பெங்களூரு வந்தபோதே எனக்கு அடிக்கடி சளி பிடிக்கத் தொடங்கியது. பெங்களூருவின் சீதோஷ்ண நிலை எனக்குஒவ்வாமை ஆயிற்று. பெங்களூருவில் இருக்கும் பார்த்தீனிய செடிகளின் மகரந்தத் தூள் காற்றில் பரவி இருப்பதால் இங்கு வசிக்கும் 25 சத வீதத்தினர் ஆஸ்த்மா அல்லது சளித் தொல்லையால் பீடிக்கப் பட்டு உள்ளனர் என்பது புள்ளி விவரம் சில நேரங்களில் நான் சாலையில் நடந்து செல்வதைக் காணும் பலரும் ஏன் இவர் அழுதுகொண்டு போகிறார் என்று எண்ணி இருந்தால் ஆச்சரியமில்லை.
Syncopy  என்றால் என்னவென்று தெரியுமா. காரணம் தெரியாமல் வீழ்ந்து விடுவதாம். ஒரு முறை அப்படி வீழ்ந்து இருந்ததை முன்னமே கூறி இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக ஒரு இருமல். அதை எவ்வாறு வகைப் படுத்துவது என்று தெரியவில்லை. தொடர்ந்து இருமல் வரும் . ஏதாவது உண்ணும்போதோ அருந்தும் போதோ புரை ஏறுகிறமாதிரி தொடங்கு மூச்சே நின்று விடும் போல் இருக்கும். என்னை ent ஸ்பெஷலிஸ்டிடம் போகச் சொன்னார்கள். அவர் இதை ஒவ்வாமையால் இருக்கும் என்று கூறி மாத்திரை கொடுத்தார். அதிக பலன் இல்லை. மீண்டுமொரு பொது வைத்திய நிபுணரிடம் காட்டினோம். எனக்கு PFT என்னும் நுரையீரல் செயல் திறமையைச் சோதித்துப் பார்த்தனர் சரியாகவே இருந்தது. இருந்தும் ஒரு puff மாதிரியான மருந்து கொடுத்து. உள்ளே இழுக்கச் சொன்னார்கள் இதுவரை பலன் தெரியவில்லை. ஆனால் அந்த பொது மருத்துவர் நான் எனது இதய சிகிச்சைக்காக எடுக்கும் மாத்திரைகளைக் குறை கூறினார். என் கார்டியாலஜிஸ்டும் அவரும் கருத்து வேறு பாடு கொண்டனர். என் கார்டியாலஜிஸ்ட் எனக்கு 24 மணிநேர ஈசீஜீ எடுக்கும் ஒரு கருவியை (holter monitor) பொறுத்திவிட்டார். அதிலும் எந்தக் குறைபாடும் வெளியாகவில்லை. நான் சென்ற முறை ஆலய தரிசனம் சென்றிருந்தபோது வைத்தீஸ்வரன் கோவில் தரிசனம் முடித்து வரும்போது வீழ்ந்து விட்டேன். அதன் பலன் எனக்கு எங்கும் தனியே போக உரிமை இல்லை. கூட யாராவது இருந்தால் என்ன பலன் கிடைக்கப் போகிறது. எனக்கு ஒரு முறை அமெரிக்கா போய் வர வேண்டும் என்னும் ஆசை உண்டு. அது நிறைவேறும் போல் இருந்த சமயம் இந்தமாதிரி syncopy ஆல் அவதிப்பட்டதால் என் மனைவியும் மக்களும் தடா போட்டு விட்டனர். எப்படியோ பல உபாதைகளுடன் மகிழ்ச்சியாகவே இருக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். பிறந்தவர் இறந்துதான் ஆகவேண்டும் அதையே நினைத்துக் கவலை படுவதில் அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது .என்ன சில நேரங்களில் நம்மால் பிறருக்குக் கஷ்டம் கொடுக்கிறோமே என்று தோன்றும் .நான் என்னைச் சார்ந்தவரிடம் அடிக்கடி கூறுவது THAT WHICH CAN NOT BE CURED MUST BE ENDURED. கவலைப் படுவதில் பலன் இல்லை. என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் சில உபாதைகள் குறித்த ஒரு விழிப்புண்ர்ச்சி வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன் 
இந்த உபாதைகள் எனக்கு தனித்தனியாகவோ ஒன்றாகவோ வந்து கொண்டிருந்தது. ஆகவே கூறிய வரிசைகளில் மாற்றம் இருக்கலாம். இப்போதும் இந்த வித்தியாசமான இருமல் விட்டொழிந்தபாடில்லை. மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் கண்களில் புரைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் இருந்தும் இடது கண்ணில் ஏதோ நிழலாடுவதுபோல் வரும். படிக்கவும் தட்டச்சு செய்யவும் சற்று கஷ்டமாக இருக்கும். அது வயோதிகத்தினால் வருவது என்று சொல்கிறார்கள். காதும்கேள்வித்திறனை இழந்து கொண்டு வருகிறது. ஒரு செவிட்டு மெஷின் வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும்வாழ்க்கையை அனுபவிக்க எல்லா உறுப்புகளும் செவ்வனே செயல் படவேண்டும். குறைகள் இருந்தாலும் சமாளித்துப்போகிறேன். இன்னும் வளர்த்தினால் யாரும் படிக்க வர மாட்டார்கள். ஆகவே முற்றும் கார்டு போடுகிறேன் பதிவு முடிகிறது. ஆனால் உபாதைகள் தொடர்கின்றன. . 
.   
               .  



திங்கள், 23 பிப்ரவரி, 2015

உபாதைகள் பலவிதம்--ஒவ்வொன்றும் ஒருவிதம்---2


                 உபாதைகள் பலவிதம் --ஒவ்வொன்றும் ஒருவிதம்...2
                -----------------------------------------------------------------------------------


திருச்சியில் பணியில் இருக்கும்போது எனக்கு அவ்வப்போது நெஞ்சு பாரமாக இருப்பது போல் தோன்றும் எதுவுமே வாய்க்கு ருசிக்காது. மிகவும் சோர்வடைந்து விடுவேன். மருத்துவமனைக்கு நான் அடிக்கடி செல்ல வேண்டி வந்தது. டாக்டர்கள் இது ஏதாவது டென்ஷனால் இருக்கலாம். மற்றபடி ஏதுமில்லை என்று அனுப்பிவிடுவார்கள். சில மருத்துவர்கள் நான் அவரிடம் போகுமுன்பே “உங்கள் நலத்துக்கு ஒன்றுமில்லை. எல்லாமே உங்கள் மனம் சம்பந்தப்பட்டதுஎன்று அனுப்பி விடுவார்கள். ஏதோ டாக்டரிடம் போக வேண்டியே நான் குறை சொல்வதாக நினைப்பார்கள் இப்படியும் டாக்டர்கள்...! பலமுறை போய் வந்த என்னை பிரதம மருத்துவரிடம் அனுப்பினார்கள். அவர் எனக்கு அமீபாசிஸ் இருக்கலாம் என்று கூறி அதற்கான சிகிச்சையாக எமெடின் எனும் இஞ்செக்‌ஷன் போட்டார் இரண்டு மூன்று நாட்களுக்குக் காலை அசைக்க முடியாமல் போனதுதான் மிச்சம்.ஒரு முறை விடுப்பில் பெங்களூரு வந்தேன். என் மாமாவைப் ( அவர் அந்தக் கால மருத்துவர் LMP) எனக்குக் குடலில் க்ஷயம் வந்திருக்கலாம் என்றும் அதற்கான மருந்துகளை நான் எடுப்பதில் தவறு ஏதும் இல்லை என்றும் கூறினார். மீண்டும் திருச்சியில் நான் எங்கள் மருத்துவமனை பிரதம டாக்டரை அணுகி என் மாமா சொன்ன கருத்தைத் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு சோதனை dose ஆக montaux எனும் இஞ்ஜ்செக்‌ஷன் போட்டார்கள். அதில் பாசிடிவ் ரிசல்ட் வந்தது. அதாவது எனக்கு அந்த நோய் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சொல்லும் அறிகுறியாம் அது. அதன் பேரில் எனக்கு steptomisin இஞ்செக்‌ஷன் இரண்டு நாளுக்கு ஒரு முறையும் NITROZID  எனும் மாத்திரையும் கொடுத்தார்கள். என் மாமாவுக்குத் தகவல் சொன்னேன். அவர் அந்த இஞ்செக்‌ஷனின் வீரியம் 24 மணி நேரம் மட்டுமே என்றும், அதனைத் தினமும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். திருச்சி பிரதம மருத்துவர் அதெல்லாம் old school of thought  என்றுகூறிவிட்டார். எனக்கு எந்த முன்னேற்றமும் தெரியவில்லைஇந்த உபாதைகளினால் எனக்குத் தொழில் முறையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே இடுப்பு வலியுடனும் சோர்வுடன் கலந்த நெஞ்சு பாரத்துடனும் காலம் கழிந்தது. ஒரு நாள் காலையில்.பல் துலக்கும் போது குமட்டிக் கொண்டு வந்து வாந்தி எடுத்தேன். அதில் இரத்தமிருந்தது. நான் அதைப் பெரிது படுத்தாமல் வேலைக்குப் போனேன். அங்கு டிஸ்பென்சரியில் விவரம் சொன்னேன். அவர்கள் காலம் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்லச் சொன்னார்கள். அங்கே எனக்கு barium meal என்று ஒரு கரைசலைக் குடிக்கக்  கொடுத்து உடலின் பாகங்களை அவ்வப்போது x-ray எடுத்தார்கள். அதிலிருந்து எனக்குக் குடலில் புண் இருப்பதாகக் கூறி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். பொதுவாகவே எந்த இரு மருத்துவரும் ஒத்துப் போவதில்லை என்று கணிப்பு எனக்கு. பெங்களூரு வந்து மீண்டும் என் மாமாவிடம் விவரம் சொன்னேன். அவர் என்னிடம் ஒரு endoscopy எடுத்துப் பார்க்கச் சொன்னார்.திருச்சி குடியிருப்பு மருத்தவ மனையில் அப்போது அந்த வசதி இருக்கவில்லை என்று நினைக்கிறேன் பெங்களூரு வந்து  அப்படி எடுத்துப் பார்த்ததில் குடலில் புண்ணிருப்பது உறுதியாயிற்று..ஆனால் அறுவைச் சிகிச்சை வேண்டாம் என்றும் மருந்து மாத்திரையில் சரி செய்யலாம் என்றும் சொன்னார்கள்.நாட்பட்ட வைத்தியம். உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கச்சொன்னார்கள். நான் பொதுவாகவே மிதமாகவே உண்பவன் . முழு வயிறும் நிரம்பும் வரை உண்ண மாட்டேன். இன்னும் சிறிது உண்ணலாம் என்று இருக்கும்போதே உணவை முடித்து விடுவேன். 70 சதம் உணவும் 20 சதம் நீரும் மீதி 10 சதம் காலியாகவே இருக்குமாறு உண்ணப் பழகிக் கொண்டு விட்டேன்.நான்கு மாதங்களுக்கு ஒரு முறை endoscopy எடுத்துப் பார்ப்பேன். நாளாவட்டத்தில் புண் ஆறி வருவதாகக் கூறினார்கள். என் மாமாவின் மகன் ( மாமா இப்போது இல்லை) அவனும் ஒரு டாக்டர்தான் சொல்லுவான். “ அத்தான், இந்தப் புண்ணானது ஆறுவதுபோல் இருக்கும். அது சாலை ரிபேரில் தற்காலமாகக் குண்டு குழிகளை மூடுவது போல்தான். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் காயம் வெளியே வரலாம்என்பான் அவன் டாக்டரல்லவா.நன்றாகவே புரிய வைத்தான். போன ஆண்டு நான் மலம் கழிக்கும் போது மலமானது அட்டைக் கருப்பாய் இருந்தது. மீண்டும் புண்ணின் அறிகுறி . சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று மருத்துவ மனைக்குச் சென்றேன். அங்கே மீண்டும் endoscopy எடுத்து  இரத்தம் இன்னும் ஒழுகுவதாகக் கூறி அந்தப் புண்ணில் adrenalin என்னும் இஞ்செக்‌ஷனும் போட்டார்கள். மூன்று நாள் மருத்துவமனை icu வில் இருந்தேன். பல இரத்தப் பரிசோதனைகளுக்குப் பின் நான் உட்கொள்ளும் மருந்துகளை பற்றி கேட்டார்கள். எனக்கு இதயத்தில் stent  பொறுத்தியபின் உட்கொள்ளும் மாத்திரைகளைக் குறிப்பிட்டு சில மாத்திரைகளை நிறுத்தச் சொன்னார்கள். ( இதயத்தில் stent பொறுத்தி கதைக்கு பிறகு வருகிறேன் ) அதை என் cardiologist இடம்  சொன்ன போது அது அவருக்கு உடன் பாடாய் இருக்கவில்லை. . என் உடம்பு அல்லவா. நானே அவரிடம் கூறி சில நாட்கள் சில மாத்திரைகளை நிறுத்தலாமே என்றேன். அவர் அரை மனதோடு சில மாத்திரைகளின் டோசேஜைக் குறைத்தார். இப்போது அந்தத் தொந்தரவு இல்லை.மருத்த்வர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம் என்று சொல்லலாமா.? ( முடியவில்லை. தொடரும் )     .