சீச்சீ.... இந்தப் பழம் புளிக்கும்
---------------------------------------
பதிவர் திருவிழா இனிதே நடந்து
முடிந்ததாகச் சில பதிவுகள் பார்க்கிறேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்,
ஒருவரது எழுத்துக்கள் குறிப்பிட்ட சிலரால் படிக்கப் படுகிறது, அல்லது விரும்பப்
படுகிறது. இதைப் பதிவுகளைப் படிக்கும்போதே தெரிந்து கொள்ளலாம். முகந்தெரியாத
பதிவர்கள் என்று குறிப்பிடும்போது நாம் விரும்பிப் படிக்கும் பதிவர்களின் முகம்
என்றே தோன்றுகிறது. சிலரது நட்பை நாமே நாடிப் போயிருப்போம். நாடிப்போன இடத்தில் நன்றாகவே கவனிக்கப் பட்டிருக்கலாம்.
ஆனால் எனக்கு அவை அதன் பின்னால் தொடர்புகள் வேறூன்றுவதாகக் காணோம். ஒரு வேளை அது
வயதின் காரணமாகக் கூட இருக்கலாம்
.
நான் அறிந்து கொள்ள விரும்பியதெல்லாம்,
சென்னையிலேயே இருக்கும் பதிவர்கள் ஒரு சிலரைத் தவிர நேரடி நட்பு
வளர்த்திருக்கிறார்களா. ஏனென்றால் பெங்களூரிலேயே எத்தனைத் தமிழ் பதிவர்கள்
இருக்கிறார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இப்படி இருக்கும்போது ஒரு
பதிவர் சந்திப்பும், அதன் விளைவாக ஏற்படும் நட்பும் நான் எதையுமே இழக்கவில்லையோ என்று சிந்திக்கவும் வைக்கிறது
பதிவர் சந்திப்பு விழா பற்றி
சிலர் எழுதிய சில பதிவுகளைப் படித்தேன். பெரும்பாலானவை வழக்கம் போல் எப்படி
பதிவர்கள் எதையும் குறையோடோ, நிறையோடோ இல்லாமல் விமரிசிப்பது போல்தான் எழுதி
இருக்கிறார்கள். இருந்தாலும் சிலரது பதிவுகள் பதிவர் விழா எதிர்பார்க்கப்பட்ட
நிறைவினைத் தரவில்லை என்றே கோடி காட்டுகின்றன.திரு.வெங்கட் நாகராஜின் புகைப் படப் பதிவு நிறைவை தருகிறது.சிறப்பான படப் பிடிப்பு. இம்மாதிரி சந்திப்புகள் பல
நேரங்களில் எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிட்டு ஏமாற்றும் திரைப் படங்கள் போல் ஆகிவிடும்
வாய்ப்புகள் அதிகம்..
ஏன் இதைக் கூறுகிறேன் என்றால்
நாங்கள் பயிற்சியில் இருந்தபோது ( சுமார் 500 பேர் ஒரே வளாகத்தில் ) எல்லோரையும்
தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒன்று சேர்ந்து
வசித்திருந்தவர்கள் உலகின் பல கோடிகளில் வாழ்பவர்கள் சந்தித்தால் எப்படி இருக்கும்
என்ற எண்ணம் ஒரு சிலருக்கு ஏற்பட்டு முகவரிகள் திரட்ட ஆரம்பித்தனர். என்
முகவரியும் அதில் அடங்கி இருக்க அழைப்பு கொடுக்கப் பட்டது. சென்னை நேரு விளையாட்டு
அரங்கில் நடந்தது அந்த சந்திப்பு. அன்று இளைஞர்களாக இருந்த அனைவரும் இன்று
கிழடுகள். பலரும் மனைவியரோடு வந்திருந்தனர். தொடர்பில் இல்லாதிருந்ததால் யார்
யாரென்றே தெரியவில்லை. அதையும் ஈடுகட்ட அடையாள அட்டைகள் வழங்கப் பட்டன. அதில்
அவரது பெயர் அவர் எந்த பிரிவின் கீழ் பயிற்சியிலிருந்தவர் என்பனபோன்ற விவரங்கள்
இருந்தது. இந்த விவரங்களையும் அவர்கள் வந்து ரெஜிஸ்டெர் செய்தபோது பெறப் பட்டது.
ஒருவர் தென்படும்போது , அவர் முகத்தை பார்க்கும்முன் அவர் கழுத்தில் தொங்கிய அட்டையைக்
கவனித்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு கை குலுக்கி மகிழ்ந்தோம் ஒரு சில
நிமிடங்களில் சம்பாஷணை தொடர வாய்ப்பில்லாமல் அடுத்தவ்ரை நாடிக் கைகுலுக்கி இப்போது நினைத்தாலும், அதை விட வேறெதுவும்
செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது இத்தனைக்கும் அதே பயிற்சிகூடத்தில்
பயிற்சி பெற்றிருந்த முதல் பேட்ச்சை சேர்ந்திருந்தவர்கள் தனியாக அடையாளம் காட்டப்
பட்டனர்.அதில் ஒருவர் அதே பயிற்சிக்கூடத்தின் வைஸ் ப்ரின்சிபாலாக பணியில் உயர்வு
பெற்றவர்.
அந்தக் கூட்டத்தில் ஒருவர்
பெயரைப் படித்ததும் எனக்கு அவர் நான் பயிற்சியில் இருக்கும்போது நடந்த டேபிள்
டென்னிஸ் டபிள்ஸ் போட்டியில் என் பார்ட்னராக இருந்து இறுதிப் போட்டிவரை வந்ததும்
நினைவுக்கு வந்தது. அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு நாங்கள் விளையாட்டில்
பார்ட்னராக இருந்ததை நினைவு படுத்தினேன். அவர் ஒரு முறை என்னைப் பார்த்து அவருக்கு
எதுவும் நினைவிலில்லை என்றாரே , அப்போது எனக்கு மிகவும் அவமானமாய் இருந்தது. அற்ப
புழு போல் உணர்ந்தேன். அன்று ஒரு உறுதி எடுத்தேன். என்னை அடையாளம் தெரியாதவரை எனக்கும்
இனி தெரியாது. என்று.
.