எண்ணங்கள் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூன், 2016

சில எண்ணப்பதிவுகளும் நினைவுகளும்


                              சில எண்ணப் பதிவுகள் சில நினைவுகள்
                              ---------------------------------------------------------
இன்றைய(31-05-2016) த ஹிந்து பெங்களூர் ஆங்கில பதிப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன் அதில் சைக்கிள் ஓட்டுவது பற்றிய  ஒரு கட்டுரை இருந்தது. நான் சைக்கிள் ஓட்டிய சில நினைவுகள் தோன்ற ஆரம்பித்தது
 நான் சைக்கிள் ஓட்டப் பழகியது 1954 என்று நினைக்கிறேன் என் அக்காவின் மச்சினர்தான் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்  அதுவும் எங்கே தெரியுமா. பெங்களூரில் இப்போது இருக்கும் சிவாஜி நகர் பேரூந்து நிலையம் இருக்கும்  இடத்தில் . அப்போது அது ஒரு பெரிய திறந்த வெளி மைதானமாக இருந்ததுசில நாட்கள் ஓட்டிப்பழகியதில் பாலன்ஸ்  வந்து விட்டது  அப்போதே எனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியும் என்னும்கர்வமும் வந்து விட்டது அந்த கர்வத்துக்குப் பங்கம் விளைக்கும் ஒரு நிகழ்வையும் நான் சொல்ல வேண்டும் சில நாட்களுக்குப் பின் நான் என் அப்பா இருந்த வெல்லிங்டன்( நீலகிரியில் ஒரு இடம் ) சென்றேன் எங்கள் வீடு ஒரு மேட்டில் சர்க்கிள் குவார்ட்டஎஸ் எனும் குடியிருப்பில் இருந்ததுஅங்கிருந்து ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி மறுபடியும் மேடேறினால்  வெல்லிங்டன்  பாரக்ஸ் வரும்  ஒரு நாள் பாரக்சில் இருந்து ஒரு வாடகை சைக்கிளை  எடுத்துக் கொண்டு என் வீட்டின் முன்னால் ஓட்டிக் காண்பிக்க வேண்டும் என்னும் உந்துதலில் இருந்தேன்  நான் சைக்கிளில்  பாரக்சில் ஏறினேன் அநாயசமாக சைக்கிள் மிதித்துக் கொண்டு பள்ளத்தாக்குக்கு வர ஓட்டினேன்  சாலையோ ஒரே ஸ்டீப் . சைக்கிள் தறி கெட்டு ஓடியது  எனக்கு கண்ட்ரோல் செய்யவோ ப்ரேக் போடவோ முடியாமல்  தலை குப்புற வீழ்ந்து இரத்த காயங்களோடு  சைக்கிளை மேட்டில் தள்ளிக்  கொண்டு போய்க்  கடைக்காரரிடம் ஒப்படைத்தேன்  நல்ல வேளை சைக்கிள் டாமேஜ்  ஆகவில்லை. கேரளத்தில் வெளிச்சப்பாடு என்பார்கள் தலையிலும் உடலிலும் வெட்டுக்காயத்தோடு இருப்பார்கள் அது போல் வீடு போய்ச் சேர்ந்தேன்
நான் அப்போது எச் ஏ எல்  ஏரோ எஞ்சின் டிவிஷனில் பணியில் இருந்தேன் போக வர சைக்கிளை உபயோகித்தேன்  இரண்டாம் ஷிஃப்ட் என்பது மதியம் மூன்று  மணிக்குத் துவங்கி இரவு பதினோரு மணிவரை இருக்கும் ஒரு நாள் சைக்கிளில் ஷிஃப்ட் முடிந்து வந்து கொண்டிருந்தேன் என் சைக்கிளுக்கு விளக்கு கெரொசினில் எரியும்  இரவில் விளக்கோடுதான் ஓட்டவேண்டும்  ஒரு நாள் வந்து கொண்டிருந்த போது ஒரு காவல்காரர்  என்னை மடக்கினார்  சைக்கிளில் விளக்கு எரிய வில்லை என்றார்  நான் இப்போதுதான் அணைந்திருக்க வேண்டும் வேண்டுமானால் விளக்கைத் தொட்டுப்பாருங்கள் என்று கூறி  அவர் கையை பிடித்து விளக்கின் மேல் வைத்தேன் அதுவரை எரிந்து கொண்டிருந்த விளக்கு சூடாக இருந்தது காவல்காரரின்  கை சுட்டு விட அவர் இன்னும்  கோபமாக என்னைக் காவல் நிலையத்துக்குக் கூட்டிச் சென்றார்  அங்கிருந்த கண்காணிப்பாளரிடம் விளக்கு இல்லாமல் வந்ததாகக்  குற்றம் சாட்டினார்  நானும் அது வரை எரிந்த விளக்கு அப்போதுதான் அணைந்ததைச் சொல்லி  காவல்காரரின் கை சுட்டதை காட்டினேன்  கண்காணிப்பாளர்  காவல்காரரைக் குறை கூறினார் சட்டத்தை மீறுபவர்களைப் பார்த்தாலேயே தெரியுமே என்றார் 

 1950-ம் வருடம் என்று எண்ணுகிறேன்  நாங்கள் கோயமுத்தூர்  ரெட் ஃபீல்ட்ஸில் இருந்தோம் என் பெரிய அண்ணாவும் நானும் பேரூர் செல்லத் திட்டமிட்டோம். என் அண்ணா சைக்கிளில் போகலாம் என்றார்  அப்போது எனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது பரவாயில்லை டபிள்ஸ் போகலாம்  என்றார் அப்போதெல்லாம் டபிள்ஸ் போவது குற்றம் போகும் போது ஏதாவது காவல்காரர் கண்ணில் பட்டால் நீ இறங்கிவிடு  சற்று தூரம் போனபின் காவல்காரர் மறைந்ததும் மீண்டும் ஏறி கொள் என்றார் சரியென்று பயணம் துவங்கினோம் பழைய சுங்கம் வருவதற்குள்  ஒரு போலிஸ்காரர் தென்பட்டார்  நான் இறங்கி  அண்ணா பின்னால் ஓடிக் கொண்டே போனேன்  இதே போல் சிறிது தூரம் சைக்கிள் பயணம்  பின் சைக்கிள் பின்னால் ஓட்டம் என்றே ஏறத்தாழ பாதி தூரத்துக்கு மேல் நான்  ஓடியே பேரூர் சேர்ந்தோம்  வரும்போதும் அதே மாதிரி  பாதி தூரம் சைக்கிளில் மீதி தூரம் ஓடியே வந்தேன்  மறக்க முடியாத பேரூர் பயணம் அது  
                            -----------------------------------------
என் பதிவுகளைப் படிக்கிறவர்கள் சிலர் வெகு மேலோட்டமாகப் படித்து அப்போது அவர்கள் எண்ணத்தில் உதிப்பதைப் பின்னூட்டமாக எழுதுகிறார்கள்.நான் எழுதுவதே என் எண்ணங்களை கடத்தத்தான் ஆனால் அவை சிதைந்து போவது பல நேரங்களில் வருத்தம் தருகிறது மாய்ந்து மாய்ந்து எழுதும் பதிவுகளை விட மொக்கையா எழுதும் பதிவுகளுக்கே  பின்னூட்டங்கள் அதிகம் வருகிறது மொக்கை பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் மொக்கையாய் இருந்தாலும் தேவலை .
                            ---------------------------------------------
திரு .வே நடன சபாபதி  அவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் குறித்து  எழுதி வருகிறார் அதன் முன்னணியில் இருந்த திமுக வினர் இந்தி திணிக்கப் பட மாட்டாது என்னும் உறுதி மொழியையும் அதற்கான  சட்ட நடவடிக்கைகளையும்  எடுத்தது குறித்தும் படிக்கும் போது  இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது தமிழ் மொழி வெறியாகி விட்டதோ என்றும் பின்னூட்டமிட்டிருந்தேன்  அவர் எனக்கு மறுதளித்து மறு மொழியையும் எழுதி இருந்தார்  இந்தி திணிப்புக்கு எதிரான கொள்கை உடைய  திமுகவினரின்  சன் டீவியில் இப்போதெல்லாம் இந்தியில் மோடியின் செயலாற்றல் குறித்து  விளம்பரங்கள் அதிகம்  வருகின்றன திமுகவினர்  கொள்கைப் பிடிப்புள்ளவர்கள்தானே  இந்தித் திணிப்பினை எதிர்த்தவர்கள்தானே   அந்த விளம்பரங்கள் இந்தியில் வருவதைப் புறக்கணிக்க வேண்டாமா >அதையே தமிழாக்கமாகக் கோரவேண்டாமா. பணத்தின் முன் கொள்கையாவது ஒன்றாவது குறைந்த பட்சம் அவர்களது எதிர்ப்பையாவது சொல்லக் கூடாதா  போட்டி உலகில் பணமே பிரதானம்
                            --------------------------------------
சில நாட்களுக்கு முன்  foot ball லில்லி  பற்றி எழுதி இருந்தேன் அதில் வருடம் ஒரு முறையே மலரும் பூ நான்கு என் வீட்டில் வரும் அவற்றில் இரண்டு மட்டுமே மலர்ந்த நிலையில்  இருந்தது மற்ற பூக்களின் வரவை எதிர் நோக்கி இருந்தேன்  நல்ல வேளை என்னை ஏமாற்றாமல்  அவையும் வந்து மலர்ந்தன. இன்னொரு பூவும் எக்சோடிக்  ஆக இருக்கிறது ஆண்டுக்கு  ஒரு முறைதான் பூக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் பிறர்  பதிவுகளிலிருந்து நிறையவே பூக்கும் என்று தெரிகிறது  நிஷாகந்தி என்றும் பிரம்ம கமலம்  என்றும் அழைக்கப் படும் பூவின் செடிகள் என் வீட்டில் உண்டு அவற்றின் செடி ஒன்றில் பூ விட்டதை நான் பார்த்தேன்  அது மலரும் வேளை  அதிகாலை அதன் பின்னர் தலை தொங்கி விடுகிறது விடியலில் முயன்று படம்  எடுக்க வேண்டும்
                       --------------------------------------------------------