Friday, June 3, 2016

சில எண்ணப்பதிவுகளும் நினைவுகளும்


                              சில எண்ணப் பதிவுகள் சில நினைவுகள்
                              ---------------------------------------------------------
இன்றைய(31-05-2016) த ஹிந்து பெங்களூர் ஆங்கில பதிப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன் அதில் சைக்கிள் ஓட்டுவது பற்றிய  ஒரு கட்டுரை இருந்தது. நான் சைக்கிள் ஓட்டிய சில நினைவுகள் தோன்ற ஆரம்பித்தது
 நான் சைக்கிள் ஓட்டப் பழகியது 1954 என்று நினைக்கிறேன் என் அக்காவின் மச்சினர்தான் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்  அதுவும் எங்கே தெரியுமா. பெங்களூரில் இப்போது இருக்கும் சிவாஜி நகர் பேரூந்து நிலையம் இருக்கும்  இடத்தில் . அப்போது அது ஒரு பெரிய திறந்த வெளி மைதானமாக இருந்ததுசில நாட்கள் ஓட்டிப்பழகியதில் பாலன்ஸ்  வந்து விட்டது  அப்போதே எனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியும் என்னும்கர்வமும் வந்து விட்டது அந்த கர்வத்துக்குப் பங்கம் விளைக்கும் ஒரு நிகழ்வையும் நான் சொல்ல வேண்டும் சில நாட்களுக்குப் பின் நான் என் அப்பா இருந்த வெல்லிங்டன்( நீலகிரியில் ஒரு இடம் ) சென்றேன் எங்கள் வீடு ஒரு மேட்டில் சர்க்கிள் குவார்ட்டஎஸ் எனும் குடியிருப்பில் இருந்ததுஅங்கிருந்து ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி மறுபடியும் மேடேறினால்  வெல்லிங்டன்  பாரக்ஸ் வரும்  ஒரு நாள் பாரக்சில் இருந்து ஒரு வாடகை சைக்கிளை  எடுத்துக் கொண்டு என் வீட்டின் முன்னால் ஓட்டிக் காண்பிக்க வேண்டும் என்னும் உந்துதலில் இருந்தேன்  நான் சைக்கிளில்  பாரக்சில் ஏறினேன் அநாயசமாக சைக்கிள் மிதித்துக் கொண்டு பள்ளத்தாக்குக்கு வர ஓட்டினேன்  சாலையோ ஒரே ஸ்டீப் . சைக்கிள் தறி கெட்டு ஓடியது  எனக்கு கண்ட்ரோல் செய்யவோ ப்ரேக் போடவோ முடியாமல்  தலை குப்புற வீழ்ந்து இரத்த காயங்களோடு  சைக்கிளை மேட்டில் தள்ளிக்  கொண்டு போய்க்  கடைக்காரரிடம் ஒப்படைத்தேன்  நல்ல வேளை சைக்கிள் டாமேஜ்  ஆகவில்லை. கேரளத்தில் வெளிச்சப்பாடு என்பார்கள் தலையிலும் உடலிலும் வெட்டுக்காயத்தோடு இருப்பார்கள் அது போல் வீடு போய்ச் சேர்ந்தேன்
நான் அப்போது எச் ஏ எல்  ஏரோ எஞ்சின் டிவிஷனில் பணியில் இருந்தேன் போக வர சைக்கிளை உபயோகித்தேன்  இரண்டாம் ஷிஃப்ட் என்பது மதியம் மூன்று  மணிக்குத் துவங்கி இரவு பதினோரு மணிவரை இருக்கும் ஒரு நாள் சைக்கிளில் ஷிஃப்ட் முடிந்து வந்து கொண்டிருந்தேன் என் சைக்கிளுக்கு விளக்கு கெரொசினில் எரியும்  இரவில் விளக்கோடுதான் ஓட்டவேண்டும்  ஒரு நாள் வந்து கொண்டிருந்த போது ஒரு காவல்காரர்  என்னை மடக்கினார்  சைக்கிளில் விளக்கு எரிய வில்லை என்றார்  நான் இப்போதுதான் அணைந்திருக்க வேண்டும் வேண்டுமானால் விளக்கைத் தொட்டுப்பாருங்கள் என்று கூறி  அவர் கையை பிடித்து விளக்கின் மேல் வைத்தேன் அதுவரை எரிந்து கொண்டிருந்த விளக்கு சூடாக இருந்தது காவல்காரரின்  கை சுட்டு விட அவர் இன்னும்  கோபமாக என்னைக் காவல் நிலையத்துக்குக் கூட்டிச் சென்றார்  அங்கிருந்த கண்காணிப்பாளரிடம் விளக்கு இல்லாமல் வந்ததாகக்  குற்றம் சாட்டினார்  நானும் அது வரை எரிந்த விளக்கு அப்போதுதான் அணைந்ததைச் சொல்லி  காவல்காரரின் கை சுட்டதை காட்டினேன்  கண்காணிப்பாளர்  காவல்காரரைக் குறை கூறினார் சட்டத்தை மீறுபவர்களைப் பார்த்தாலேயே தெரியுமே என்றார் 

 1950-ம் வருடம் என்று எண்ணுகிறேன்  நாங்கள் கோயமுத்தூர்  ரெட் ஃபீல்ட்ஸில் இருந்தோம் என் பெரிய அண்ணாவும் நானும் பேரூர் செல்லத் திட்டமிட்டோம். என் அண்ணா சைக்கிளில் போகலாம் என்றார்  அப்போது எனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது பரவாயில்லை டபிள்ஸ் போகலாம்  என்றார் அப்போதெல்லாம் டபிள்ஸ் போவது குற்றம் போகும் போது ஏதாவது காவல்காரர் கண்ணில் பட்டால் நீ இறங்கிவிடு  சற்று தூரம் போனபின் காவல்காரர் மறைந்ததும் மீண்டும் ஏறி கொள் என்றார் சரியென்று பயணம் துவங்கினோம் பழைய சுங்கம் வருவதற்குள்  ஒரு போலிஸ்காரர் தென்பட்டார்  நான் இறங்கி  அண்ணா பின்னால் ஓடிக் கொண்டே போனேன்  இதே போல் சிறிது தூரம் சைக்கிள் பயணம்  பின் சைக்கிள் பின்னால் ஓட்டம் என்றே ஏறத்தாழ பாதி தூரத்துக்கு மேல் நான்  ஓடியே பேரூர் சேர்ந்தோம்  வரும்போதும் அதே மாதிரி  பாதி தூரம் சைக்கிளில் மீதி தூரம் ஓடியே வந்தேன்  மறக்க முடியாத பேரூர் பயணம் அது  
                            -----------------------------------------
என் பதிவுகளைப் படிக்கிறவர்கள் சிலர் வெகு மேலோட்டமாகப் படித்து அப்போது அவர்கள் எண்ணத்தில் உதிப்பதைப் பின்னூட்டமாக எழுதுகிறார்கள்.நான் எழுதுவதே என் எண்ணங்களை கடத்தத்தான் ஆனால் அவை சிதைந்து போவது பல நேரங்களில் வருத்தம் தருகிறது மாய்ந்து மாய்ந்து எழுதும் பதிவுகளை விட மொக்கையா எழுதும் பதிவுகளுக்கே  பின்னூட்டங்கள் அதிகம் வருகிறது மொக்கை பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் மொக்கையாய் இருந்தாலும் தேவலை .
                            ---------------------------------------------
திரு .வே நடன சபாபதி  அவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் குறித்து  எழுதி வருகிறார் அதன் முன்னணியில் இருந்த திமுக வினர் இந்தி திணிக்கப் பட மாட்டாது என்னும் உறுதி மொழியையும் அதற்கான  சட்ட நடவடிக்கைகளையும்  எடுத்தது குறித்தும் படிக்கும் போது  இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது தமிழ் மொழி வெறியாகி விட்டதோ என்றும் பின்னூட்டமிட்டிருந்தேன்  அவர் எனக்கு மறுதளித்து மறு மொழியையும் எழுதி இருந்தார்  இந்தி திணிப்புக்கு எதிரான கொள்கை உடைய  திமுகவினரின்  சன் டீவியில் இப்போதெல்லாம் இந்தியில் மோடியின் செயலாற்றல் குறித்து  விளம்பரங்கள் அதிகம்  வருகின்றன திமுகவிர்  கொள்கைப் பிடிப்புள்ளவர்கள்தானே  இந்தித் திணிப்பினை எதிர்த்தவர்கள்தானே   அந்த விளம்பரங்கள் இந்தியில் வருவதைப் புறக்கணிக்க வேண்டாமா >அதையே தமிழாக்கமாகக் கோரவேண்டாமா. பணத்தின் முன் கொள்கையாவது ஒன்றாவது குறைந்த பட்சம் அவர்களது எதிர்ப்பையாவது சொல்லக் கூடாதா  போட்டி உலகில் பணமே பிரதானம்
                            --------------------------------------
சில நாட்களுக்கு முன்  foot ball லில்லி  பற்றி எழுதி இருந்தேன் அதில் வருடம் ஒரு முறையே மலரும் பூ நான்கு என் வீட்டில் வரும் அவற்றில் இரண்டு மட்டுமே மலர்ந்த நிலையில்  இருந்தது மற்ற பூக்களின் வரவை எதிர் நோக்கி இருந்தேன்  நல்ல வேளை என்னை ஏமாற்றாமல்  அவையும் வந்து மலர்ந்தன. இன்னொரு பூவும் எக்சோடிக்   இருக்கிறது ஆண்டுக்கு  ஒரு முறைதான் பூக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் பிறர்  பதிவுகளிலிருந்து நிறையவே பூக்கும் என்று தெரிகிறது  நிஷாகந்தி என்றும் பிரம்ம கமலம்  என்றும் அழைக்கப் படும் பூவின் செடிகள் என் வீட்டில் உண்டு அவற்றின் செடி ஒன்றில் பூ விட்டதை நான் பார்த்தேன்  அது மலரும் வேளை  அதிகாலை அதன் பின்னர் தலை தொங்கி விடுகிறது விடியலில் முயன்று படம்  எடுக்க வேண்டும்
                       --------------------------------------------------------
                              


43 comments:

 1. எழுத்துகள் சிதைந்துள்ளபடியால் சரியாகப் படிக்க முடியவில்லை ஐயா! முதல் இரு பத்திகள் மட்டுமே படிக்க முடிந்தது. உங்கள் பதிவில் இந்தக் குறை அடிக்கடி காண முடிகிறது. ஏனென்று தெரியவில்லை. எனக்கு மட்டுமா என்றும் புரியவில்லை! சைகிள் ஓட்டக் கற்றுக் கொண்டது குறித்துச் சொல்லி இருக்கிறீர்கள். அப்புறம் உங்கள் பதிவை யாரும் சரியாகப் படிக்கவில்லை என்றும் மேலோட்டமாகக் கருத்துச் சொல்வதாகவும் சொல்கிறீர்கள் இல்லையா? கடைசியாக ஹிந்தித் திணிப்புப் பற்றி ஏதோ வந்திருக்கிறது. கடைசிப் பத்தி முழுதும் படிக்கவே முடியவில்லை. :(

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. சில இடங்களில் மட்டுமே எழுத்துக்கள் மாறியிருக்கின்றன !

  வெளிச்சமே வராத விளக்கு இல்லாவிட்டாலும் ,சைக்கிளில் டபிள்ஸ் போனாலும் அன்று குற்றம் ,இப்போ நினைச்சா சிரிப்பாதான் இருக்கு :)

  ReplyDelete

 4. @ கீதா சாம்பசிவன்
  மீண்டும் ட்ராஃப்டுக்குப் போய் சரி செய்திருக்கிறேன் இப்போது பாருங்கள். சிரமத்துக்கு மன்னிக்கவும் வருகைக்கும் சுட்டியதற்கும் நன்றி

  ReplyDelete

 5. சைக்கிளைப்பற்றிய தங்களது நினைவலைகள் நன்று நான் ஒரு வருடத்திற்க்கும் மேலாக சரக்கு ஏற்றி உருட்டிக்கொண்டே வருதேன் பிறகு சறுக்கத்தில் வரும் பொழுது ஒரு காலில் ஏறி வருவேன் பிறகு நானாகவே ஓட்டி பழகினேன் எனக்கு யாரும் பழகி கொடுக்கவே இல்லை இரண்டு வருடங்களாகி விட்டது பழகி முடிக்க....

  ReplyDelete
 6. எழுத்துருக்களில் பிரச்சினை இருக்கிறது. எனக்கும் தெரிகிறது. நானும் முழுதாகப் படித்தேன். சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட அனுபவம் எனக்கும் இருக்கிறது.

  ReplyDelete
 7. கடைசிப் பத்தி இன்னும் சரியாகலை ஐயா! அடிக்கடி உங்கள் பதிவில் இந்தப் பிரச்னை வருகிறது. பூக்கள் பத்தி நீங்கள் எழுதினதையும் ஏற்கெனவே படிச்சிருக்கேன். :)

  ReplyDelete
 8. எழுத்துருக்கள் பிரச்சினை நீங்கள் தட்டச்சு செய்யம்போது ஷிப்ட் கீயைத் தவறுதலாக அழுத்தியிருந்தாலும் வரலாம். கவனமாக இருக்கவும்.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. சைக்கிள் பற்றிய நினைவுகள் எனது பால்யத்தின் நினைவுக்குள் ஆழ்த்தியது. நன்றி.

  ReplyDelete
 11. I also had some problem while started learning cycling. So started developing cycle fear as well as road fear. I gave up and now I cannot do cycling.which I regret even today. Any way hats off to you for continuing it .

  ReplyDelete
 12. பாலு சார்,நீங்கள் எழுதுவது உங்களது மன வெளிப்பாடுகள். இதை படிப்பதும் விமரிசனம் செய்வதும் அவரவர்களது விருப்பம். முதுமைச்சுமையை தாரளமாக இறக்கி வையுங்கள்.
  தங்களின் பதிவுகள் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

  ReplyDelete

 13. @ கில்லர்ஜி
  நான் சைக்கிளைப் பற்றி எழுதவே காரணம் த ஹிந்துவில் வந்த அசோக மித்திரனின் கட்டுரைதான் அவரது கட்டுரை த ஹிந்துவில் என் கட்டுரை என் வலைபூவில் .வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 14. @ ஸ்ரீ ராம் எழுத்துருவில் பிரச்சனை வரக் காரணம் தெரியவில்லை. திருமதி கீதா சாம்பசிவம் சொன்ன பின் மீண்டும் எழுதியபோது என் பதிவில் பிரச்சனை ஈருக்க வில்லை சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதும் காவல் நிலையத்துக்குப் போனதும் நினைவில் வர எழுத உந்துகோல் ஆக இருந்தது அசோக மித்திரனின் கட்டுரையே வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 15. @ கீதா சாம்பசிவம்
  என் தளத்தில் பிரச்சனை ஏதும் தெரியவில்லை. மீள் வருகைக்கு நன்றி பதிவிடும் முன் ஒரு முறை ப்ரிவியூவில் பார்ப்பேன் சரியாக வந்திருந்தால் பதிவிடுகிறேன்

  ReplyDelete
 16. @ டாக்டர் கந்தசாமி
  தட்டச்சு செய்யும்போது ஸ்பேசுக்காக ஷிஃப்ட் கீ உபயோகிப்பது தவிர வேறெப்போதும் உபயோகிப்பது இல்லை வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 17. @ பாண்டிய ராஜ் ஜெபரத்தினம்
  என் தளத்துக்கு நீங்கள் தொடர்பாளர் என்று தெரிகிறது இருந்தும் இதுவே முதல் பின்னூட்டமா வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 18. @ அபயா அருணா
  என் மனைவி சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முனைந்தபோது என் மகன் ஓட்டப் பழக்கினான் அவள் விழுந்து நல்ல காயம் ஏற்பட அத்துடன் சைக்கிள் ஓட்டுவதை மறந்து விட்டாள் உங்கள் பின்னூட்டம் அதை நினைவு படுத்துகிறது என்னால் இப்போதெல்லாம் சைக்கிள் ஓட்ட முடியாது வயதாகிறதே . வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 19. @ கல்னல் கணேசன்
  நாம் எழுதுவதைப் பிறர் படித்து விமரிசிக்கும்போதுதான் அதன் பயணம் பூர்த்தியாகிறதுஎன் எழுத்துக்களை நான் என் எண்ணங்களை கடத்த எழுதுகிறேன் சில சீரியஸ் சப்ஜெக்ட்கள். சில மொக்கையானவை அதைத்தான் பதிவில் குறிபிட்டிருக்கிறேன் மற்றபடி யாரையும் வற்புறுத்த முடியாது என்பதும் தெரியும் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 20. சைக்கிள் பழகிய நினைவுகள் எனக்குள்ளும்..... பள்ளியில் ஒரு Ramp இருக்கும். அதன் மேலிருந்து கீழே வர சைக்கிளைப் பயன்படுத்தி, அதுவும் முதன் முறை சைக்கிள் ஓட்டும்போது கீழே விழுந்து அடி பட்டது......

  ReplyDelete
 21. சைக்கிள் நினைவுகளைக் கிளப்பியிருக்கிறீர்கள். சைக்கிள் ஓட்டுதல் எனக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது பதின்பருவத்தில். பஸ் ரூட்டுகள் சரியாக இயங்காத காலகட்டத்தில், கிராமத்திலிருந்து 13 கிமீ தூரத்திலிருந்த டவுன் காலேஜுக்கு 13+13 கி.மீ தினம் ஓட்டியிருக்கிறேன், வருடக்கணக்கில். இன்னும் என்னென்னமோ சிறுவயது சாகஸங்கள். காரியங்கள்.

  பால்ய நினைவுகளைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அப்போது வாழ்ந்திருக்கிறோம். இப்போது வாழ்க்கையை சற்றுத் தள்ளியிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிருக்கிறோம்.

  ReplyDelete
 22. சார், சைக்கிள் பற்றிய உங்கள் எண்ணங்கள் நினைவுகள் பற்றி மட்டுமே வாசிக்க முடிந்தது. எங்களுக்கும் பல நினைவுகள். (கீதா) கற்றுக் கொண்டது, கீழே விழுந்தது, அடி பட்டது, கால் பாதங்களில் ஃப்ராக்சர் ஆனது என்று.

  மற்ற பாராக்கள் எழுத்துகள் வரவில்லை சார். உரு மாறி உள்ளன அதனால் வாசிக்க இயலவில்லை

  ReplyDelete
 23. தங்களின் சைக்கிள் கற்றுக்கொண்ட அனுபவமும், காவலரின் கையை சுட்டுக்கொள்ள வைத்த அனுபவமும், கோவையில் பேரூர் வரை காவலருக்கு பயந்து சைக்கிளில் தங்கள் அண்ணனோடு பாதி தூரம் பயணித்தும் இறங்கி கூடவே ஓடியும் சென்றதை சுவைபட எழுதியிள்ளீர்கள். இரசித்தேன்!

  எனது தொடரான ‘இந்தி திணிப்பு போராட்டம்’ பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். நான் எழுதுவது உண்மையில் நடந்ததை. இன்னும் என்னைப் போன்ற பலர் இந்தி மொழியை வெறுக்காவிட்டாலும், அதை பிறர் மேல் திணிப்பதை எதிர்க்கிறோம். சன் தொலைக்காட்சி இந்தியில் விளம்பரத்தை வெளியிடுவதற்கு நான் என்ன செய்யமுடியும்? அது அவர்களுடைய வணிக கோட்பாடு.

  மேலும் திமுக மட்டுமே இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தவில்லை. .தமிழ் உணர்வாளர்கள் தான் அதை ஆரம்பித்தார்கள்.

  ReplyDelete

 24. @ வெங்கட் நாகராஜ்
  எல்லோருக்கும் இளவயதில் சைக்கிள் ஓட்டிப்பழகிய அனுபவங்கள் இருக்கும் என் அனுபவங்களை எழுதத் தூண்டியது ஹிந்துவில் வந்த அசோகமித்ரனின் கட்டுரை வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 25. @ ஏகாந்தன்
  எனக்கு சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொடுத்தவர் இன்னும் சைக்கிளில் பயணிக்கிறார் என்வயதோ என்னைவிட மூத்தவரோ அவர் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 26. @ துளசிதரன் தில்லையகத்து,
  என் தளத்தில் எழுத்துருக்கள் சரியாகவே இருக்கின்றன.சன் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் மோடியின் செயலாற்றல்கள் விளம்பரமாக ஹிந்தியில் வருகிறது அது குறித்த ஆதங்கத்தையும் எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 27. @ வே நடன சபாபதி,
  ஹிந்தி திணிப்பு போராட்டம் திமுகவினராலேயே நடத்தப் பட்டது. அதில்லையென்றால் அவர்கள் ஒரு முக்கிய பங்கு வகித்தனர் என் ஆதங்கமே வணிகக் கோட்பாடு என்று வரும்போது கொள்கைகள் காற்றில் பறக்கின்றன என்பதுதான் இதுவும் ஒரு வித மறை முகத் திணிப்புதான் வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 28. தயாநிதி மாறனும் கனிமொழியும் பேசும் ஹிந்தி நான் கூடப் பேச மாட்டேன்! ஹிந்தி எதிர்ப்பாளர்கள் வீட்டுக் குழந்தைகள்!

  ReplyDelete
 29. பதிவுகளின் நீளம், மற்றும் சுவாரஸ்யம் முழுவதும் படிப்பதற்கு உதவியாக இருக்கும். இதனாலேயே பலர் கமெண்ட் போடாமலும் செல்லக் கூடும். நம் கருத்தை நாம் எழுதுகின்றோம் எல்லோரும் பின்னூட்டம் இடவேண்டும் என்று நினைக்க வேண்டாம். சிலர் சம்பிரதாயத்திற்காக மொய்க்கு மொய் வகையில் பின்னூட்டம் இடுவதும் உண்டு. இதைப்பற்றியெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியது இல்லை. சைக்கிள் ஓட்டியது பற்றிய உங்கள் நினைவலைகள் ரசிக்க வைத்தன. குறிப்பாக போலீஸ்காரர் சூடு வாங்கியது சிரிப்பலைகளை எழுப்பியது. நன்றி!

  ReplyDelete

 30. @ ஸ்ரீ ராம்
  ஒருவர் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை ஆனால் ஹிந்தித் திணிப்புக்கு எதிரானவர்கள் விளம்பரம் எனும்போது அது மறை முகமாய்த் திணிக்கப் படுவதை உணர வில்லையா என்பதே கேள்வி. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீ

  ReplyDelete
 31. @ தளிர் சுரேஷ்
  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார். எழுதுவதை அவர்கள் இஷ்டத்துக்குப் பொருள் கொள்வது புரிந்து கொள்ள முடியவில்லை பின்னூட்டங்கள் பெரும்பாலும் மொய்க்கு மொய் தான் ஆனால் நீங்கள் அப்படி இல்லை. நான் உங்கள் தளத்துக்கு எப்பொழுதாவதுதான் வந்திருக்கிறேன் நன்றி

  ReplyDelete
 32. ஐயா
  தவறாகக் எண்ண வேண்டாம். இந்தப் பதிவில் time chronology சரியில்லை. ஏதோ மனதில் தோன்றியதை அப்படியே எழுதிவிட்டீர்கள். சாதாரணமாக உங்கள் பதிவுகளில் ஒரு சிறிய ஆராய்ச்சி (Analysis) இருக்கும். இதில் அது இல்லை.

  உங்கள் பதிவுகளில் இருந்து நான் ஊகித்தது நீங்கள் தமிழ் நாட்டிலும் கர்நாடகத்திலும் பல ஊர்களில் இருந்துள்ளீர்கள். பெங்களுருக் காலம் கோவைக்காலம் ஊட்டிக்காலம் இரண்டாம் பெங்களுருக்காலம் அம்பர்நாத் காலம் திருச்சிக் காலம் கடைசி பெங்களுருக் காலம் என்று வரிசைப்படி malgudi days போன்று ஒரு தொடர் பதிவு எழுதலாம். இதில் நான் குறிப்பிடாத சில ஊர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  --
  Jayakumar

  ReplyDelete

 33. @ ஜேகே 22384ஒப் பின்னூட்டத்தில் கூறியதற்கு நன்றி. நீங்கள் சரியாகக் கவனித்தீர்கள் என்றால் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு இடத்தில் நடந்தவை நிகழ்வின் வருடங்களைக் கூறி இருக்கிறேன் எச் ஏ எல்-லில் பணி புரிந்த வருடம் குறிப்பிடவில்லை. நான் 1956-ல் எச் ஏ எல்லில் சேர்ந்தேன் ஒரு வருடம் கழிந்ததும் இரண்டாண்டு காலம் அம்பர் நாத்தில் இருந்தேன் மறு படியும் பெங்களூர் வந்து 1965 வரை இருந்தேன் பின்பு ஓராண்டுகாலம் சென்னையில் பின் திருச்சியில் . திருச்சியில் இருக்கும்போது நான்காண்டுகள் விஜய வாடாவில் இருந்திருக்கிறேன் என் பதிவுகளில் ஒவ்வொரு நிகழ்வையும் நினைக்கும்போதும் அந்த ஆண்டுகளையும் குறிப்பிட்டு இருப்பேன் என் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்க்கு அது தெரியும் இதை உங்களுக்குஒரு தகவலுக்காகவே எழுதுகிறேன் ஏற்கனவே ஏறத்தாழ என் இருப்பிடங்களின் நிகழ்வுகளை எல்லாம் எழுதி இருக்கிறேன் என் ஆறாவது வயது முதல் பத்தாவது வயது வரை அரக்கோணம் நாட்கள் என்று எழுதி இருக்கிறேன் மால் குடி டேஸ் ஒரே இடத்தில் நடந்த நிகழ்வுகள் நீங்கள் சொல்வது போல் எழுத வேண்டும் என்றால் அது என் சுய சரிதையாய் விடும் / அதையும் எழுதி வருகிறேன் வருகைக்கு மீண்டும் நன்றி சார்

  ReplyDelete
 34. சைக்கிள் சிந்தனைகள் அருமை :)

  ReplyDelete
 35. தங்களுடைய சைக்கிள் அனுபவங்களைப் படிக்கும்போதே என்னுடைய அனுபவங்களும் நினைவில் வந்தன. அப்போதெல்லாம் , காலை தரையில் ஊன்றாமல் ‘பாலன்ஸ்’ பண்ணி ஓட்டக் கற்றுக் கொள்வதற்குள் கால் முட்டியில், கையில் என்று வீரத்தழும்புகள் வாங்க வேண்டும். இப்போது பாலன்ஸிற்கு என்று ஒரு பக்கம் ’சைடு வீல்’ வைத்த சைக்கிள்கள் வந்து விட்டன. இதனால் இன்றைய தலைமுறையினர், யாருடைய தயவும் இன்றி, தரையில் கால் பாவாமலேயே சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.
  ”சைக்கிளில் பிரேக் இருக்கிறதா, லைட் இருக்கிறதா, கார்ப்பரேஷன் வில்லை இருக்கிறதா” என்று போலீஸ் கேட்டது ஒருகாலம். இன்று போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள், சைக்கிளும் இருக்கிறது. சட்டம் இல்லை; டபிள்சும் போகலாம். எம்ஜிஆர் செய்த நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.

  தங்கள் வீட்டு பிரம்ம கமலம் பற்றிய பதிவை எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
 36. உங்களுடைய சைக்கிள் அனுபவங்கள் எனது கடந்த கால நினைவுகளை நினைவூட்டின. பாலன்ஸ் செய்ய முடியாமல் நண்பர்களிடம் முதுகில் அடி வாங்கியது இன்னும் நினைவிருக்கிறது.

  ReplyDelete

 37. @ தேனம்மை லக்ஷ்மணன்
  மேலான உங்கள் வருகைக்கு நன்றி. பதிவர் ஒற்றுமை ஓங்குக.

  ReplyDelete

 38. @ தி தமிழ் இளங்கோ
  வருகைக்கு நன்றி ஐயா சற்றே பிராயம் கூடியவர்களின் நினைவலைகளை தூண்டி விட்டதில் மகிழ்ச்சி என் வீட்டு பிரம்ம கமலம் பூச்செடியில் ஒரு பூ பூத்திருக்கிறது ஆனால் அதை முழுமையாகப் பூத்த நிலையில் காண அதிகாலையில் பார்க்க வேண்டும்நான் எழுந்து பார்ப்பதற்குள் அது வாடிவிடும் என்றே தோன்றுகிறது.இன்னும் இரண்டு மூன்று செடிகள் இருக்கின்றன அவை பூக்கும் போதாவது பார்க்க வேண்டும்

  ReplyDelete

 39. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  நான் சைக்கிள் ஓட்டப் பழகிய போது யாரிடமும் நல்ல வேளை அடிவாங்கவில்லை. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 40. சைக்கிள் சாகசம் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன் ... அந்தகால பியுட்டிகள் யாரும் விழுவதை பார்க்கவில்லைத்தானே ஐயா....

  ReplyDelete
 41. உங்கள் வீட்டுக்கு வரநேர்கையில் அந்த ப்ரும்மகமலம் செடியை பார்க்க விரும்புகிறேன். வெற்றிலைச் செடிகொடிகள் எப்படி இருக்கின்றன?

  மேலே, ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம் ஒரு relevant-ஆன கேள்வி கேட்டுள்ளார். உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்!

  ReplyDelete

 42. @ ஸ்ரீ மலையப்பன் ஸ்ரீராம்
  ஐயா இன்னும் சில விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறேன் சைக்கிள் சாகசம் அவற்றுக்குப் பொறுந்தாதேஅந்தக்காலத்தில் சிலர் நான் விழுவதைப் பார்த்திருக்கலாம் அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது சின்னப் பையன் ஐயா வருகைக்கு நன்றி

  ReplyDelete

 43. @ ஏகாந்தன்
  புலி வருது கதையாக இருக்கிறது உங்கள் கதை. ஆல்வேஸ் வெல்கம் . பிரம்ம கமலம் செடியைப் பார்க்காலாம் பூ ...அது பற்றி ஒன்றும் சொல்ல முடியாது வெற்றிலைக் கொடிகள் மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete