எண்ணத்துணுக்குகள் மீள்பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணத்துணுக்குகள் மீள்பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

எண்ணத் துணுக்குகள்


                            எண்ணத் துணுக்குகளா எண்ணிய துணுக்குகளா?
                            ------------------------------------------------------------------------------
    பழைய புகைப்படங்களை அவ்வப்போது புரட்டுவதும் ஒரு பொழுது போக்கு அப்படி செய்கையில் எப்படி இருந்த நான் இப்படியாகி விட்டேனே என்று எண்ணாமல் இருக்கமுடியவில்லை. 
1955-ல் நான்        

1962-ல்  நான் 
2015-ல் நான் 
சில எண்ணங்கள் உடல்நலம் குறையும் போது வந்து மோதுகின்றன. பழைய இடுப்புவலி சில நாட்களாய்ப் படுத்துகிறது. இந்த இடுப்பு வலி இப்போதெல்லாம் யாருக்கெல்லம் வராது என்று கூற முடியவில்லை. உடலின் எந்த ஒரு பாகமும்  தன் இருப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கக் கூடாது. கையோ காலோ கண்ணோ  காதோ தான் இருப்பதைத் தெரிவிக்காமல் இயங்கினால் நலமாக இருப்பதாக எண்ணலாம்  அம்மாதிரி இல்லாமல் இருக்கும்  போது பல நினைவுகளும்  வருகின்றன. எனக்கானால் இதை மூப்பின் குணம் என்று எடுத்துக்கொள்ள முடியும்  மூப்பின் குறைபாடுகளைக் குறித்து எழுதிய பதிவொன்று நினைவுக்கு வருகிறது
செய்யாத   குற்றம்.
-----------------------------
தொலைகாட்சி   நிகழ்ச்சிகள்
நிறையவே   பார்த்து  விட்டு,
நித்திரை  செல்லப் போகுமுன்,
அன்றைய   நிகழ்வுகள் 
நினைவினில்  நிழலாடும்.

 
என்னென்னவோ   செய்ய  எண்ணியவை
செய்தே   முடிக்காமல்   மறக்கப்பட்டிருக்கும்.
மறந்தாலும்   பாதகமில்லை
முக்கியமானதாய்   இல்லாதவரை.

கண்ணயர  சில நேரம்   பிடிக்கும்
பின் கண்   மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க்  கனவுகள்அலை அலையாய்
கதை போல  விரிந்து  பரவும்
எழுத்தில்   கொண்டு வந்தால்
இனிதே   ரசிக்கலாம்,
இடுகையில்   பதிக்கலாம்
என்றெல்லாம்   கனவினூடே  
நினைவுகளும்   கூடவே   வரும்,

விடியலில்   எழுந்து  இனிய   கனவுகளை
அசை   போட  முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித்  தோன்றுவதை  எழுத்தில்
வடிக்க  வார்த்தைகளும்  வராது,
கற்பனையும்   கை  கொடுக்காது.
     
அதிகாலை   நடை பயிலுகையில்
 
எழுதுவதற்கு   விஷயங்கள்  யோசிக்க
 
நடையினூடே   வார்த்தைகளும்
அழகாக  வந்து   வீழும்.

சற்றே  மலர்ந்து  வீடு  வந்து,
பேனா   பிடித்தால்   என்னதான் 
எழுதுவதுஒன்றும்   தோன்றாது
நினைப்பது   ஏன்  மறக்க  வேண்டும்..?
 பார்த்த   முகம்  பரிச்சயமானது , பேர்மட்டும் வேண்டும்போது   நினைவுக்கு   வராது.
ஆடும்   சிறார்  கண்டு  மனம்  மகிழும்
கூடவே   ஓடியாட  உடல்   மறுக்கும்.
எண்ணங்களில்   இளமை  என்றுமிருக்கும்
 
உடல் உபாதைகள்  முதுமையை  நினைவூட்டும்.
வேண்டியதை  விரும்பிச்  செய்ய  விழையும் மனமே, உன்னால்  முடியாது  என்று  கூடவே உடல்  கூறும்.

உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன்
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட   தண்டனையா..?
------------------------------------------------------------------
கூடவே மூப்பு என்பதை ஒரு வரமாகப் பார்க்க வேண்டும் என்று  எழுதி இருந்தேன் ஒரு நெகடிவ் அண்ட் பாசிடிவ் அப்ரோச். வாசகர்களுக்கு எப்போதும் பாசிடிவ் அப்ரோச் தான் பிடிக்கும் 
முதுமை ஒரு வரம்..?
-------------------------------
சுருங்கிய தோலும்,சரிந்த தொப்பையும்,
நீர் கோத்த பை போன்ற கண்களுடன்,
கண்ணாடியில் காணச் சகிக்காத தோற்றம்
காணுமுன்பே,கண்களை உறுத்தும் பிம்பம்.,
முதுமை அளிக்கும் பரிசா.? இருந்தால் என்ன.?

செய்யாத குற்றத்துக்கு தண்டனையா
என்றே கேள்வி கேட்ட எனக்கு உருவம்
அன்றி முதுமை அளிக்கும் பரிசு-வாழ்வில்
நான் நானாக இருக்க ஒரு வாய்ப்பல்லவா

பெற்றோருக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்றவற்றுக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்ற கூலிக்காக உழைத்ததும் போதுமடா
சாமி. இது எனக்காக நான் வாழும் வாழ்க்கை.

.கருத்த முடிக்கும் இருகிய இடுப்புக்கும்
என் இப்போதைய இருப்பை நான் பணயம்
வைக்க மாட்டேன்.வயது முதிர்ந்து,அறிவும்
வளர்ந்த என்னை முன்னைவிட நேசிக்கிறேன்.


என் குறைகள் மறந்து முன்னை விட
என்னை நான் நேசிக்கிறேன்..விரும்பும்
இனிப்பை உண்ணும்போதும் படுத்த
படுக்கை சுருட்டாதபோதும் வேண்டாத
பொருள் ஒன்று வாங்கும்போதும் யாருக்கும்
பதில் சொல்லத் தேவையில்லாத இருப்பும்
கிடைத்த விடுதலை உணர்வின் வெளிப்பாடல்லவா?.

.சில சுற்றமும் உற்றாரும் இம்மாதிரி
வாழ்வாங்கு வாழ்வது காணாது சென்றது
கண்டவன் நான்.கிடைத்த வாய்ப்பை விடுவேனா
உறங்கச் செல்வதோ விழித்து எழுவதோ,
புத்தகம் படிப்பதோ கணினியில் ஆடுவதோ
என் விருப்பம்.-இனிய அறுபது எழுபதுகளின்
இன்னிசைப் பாடல்களை கண்மூடி ரசிப்பேன்,
தோன்றினால் துள்ளி எழுந்து ஆடவும் செய்வேன்.
சில நேரம் இளமையில் தொலைத்த காதலுக்கு
கண்ணீர் வடிக்கவும் செய்வேன்.யாருக்கு என்னைக்
கட்டுப் படுத்தவோ கேட்கவோ முடியும்?

கடலோரம் நடப்பேன்,நீரில் கால்கள் நனைப்பேன்
மணலில் மல்லாந்து கிடப்பேன்.- எனைக் கடந்து
ரசித்துப் போகும்,எள்ளி நகையாடும்
பார்வைகளை அலட்சியம் செய்வேன்.

தஞ்சாவூர் ஓவியம் தீட்டுவேன் கண்ணாடியில்
கடவுளர்களை வரையவும் செய்வேன். அதை
சட்டமிட்டு மாடத்தில் வைத்து அழகு பார்ப்பேன்
எனக்குப் பிடித்த என்னைப் பிடித்தவர்களுக்கும்
பரிசாகக் கொடுத்து மகிழ்வேன், மகிழ்விப்பேன்


சில நேரங்களில் மறதி வந்து அவதிப் படுத்தும்.
மறக்க வேண்டியதை மறந்துதானே ஆகவேண்டும்
நான் வளர்ந்த விதம்,இருந்த இருப்பு,இருக்கும் நிலை.
என்றும் என் மனம் விட்டு அகலாது.

ஆண்டுகள் கழியும்போது சில நேரம்
மனமுடைந்து போயிருக்கிறேன்.- உற்றார்
இழப்பும்,சிறார்களின் தவிப்பும்,அன்பின்
புறக்கணிப்பும்,போதாதா மனமுடைக்க?.
நிலவும் ஏற்ற தாழ்வு கண்டு இதயம்
நொருங்காதவர் வாழ்வின் நிலை உணராதவர்.

நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
என் இளமையின் சிரிப்பே என்
முகச் சுருக்கத்தின் அடையாளம்
சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
இருந்து இறந்தோர் ஏராளம்.

வயதாகும்போது உள்ளதை உணர்வது
எளிதாகிறது. ஏனையோர் நினைப்பேதும்
என்னை பாதிக்க விடுவதில்லை.
என்னை நானே ஏதும் கேள்வி கேட்பதில்லை.
தவறு செய்யும் உரிமையும் எனக்குண்டு
முதுமை எனக்களித்த சுதந்திரம் எனக்குப்
பிடித்திருக்கிறது. என்றும் நான் இருக்கப்
போவதில்லை.- இருந்த காலம் இருக்கும்
காலம் இப்படி அப்படி இருந்திருக்கலாமோ
இருக்க வேண்டுமே எனக் கவலைப் பட்டுக்
கழிப்பதில் எனக்கேதும் உடன்பாடில்லை.
உள்ளத்து உணர்வுகள் உண்மை பேசுகின்றன.
அடி மனத்தின் ஆழத்தில் இருந்து வருகின்றன.
அனைவரும் இன்புற்றிருக்கவும் வானவில்லின்
நிறங்கள் முகத்தில் தோன்றி ஒளிர் விடவும்
வேண்டுதல் செய்வதன்றி வேறொன்றும் வேண்டேன்.

அப்போது என்னையே நான் எண்ணிப்பார்த்து எழுதியதும் மீண்டும் உங்கள் பார்வைக்கு
 .
எண்ணிப்பார்க்கிறேன்
 --------------------------------
அன்றொரு நாள் பதிவொன்றில் குப்புற வீழ்ந்தெழுந்தபோது
முண்டாசுக் கவிஞனின் வரிகளை எண்ணி,
காலா, அருகினில் வாடா, சற்றே மிதிக்கிறேன் உனை என்
காலால் என்றே எழுதினேன். காலன் யானையின் காலாக
வந்து அவனையே மிதித்து விட்டான். நான் எம்மாத்திரம்.?

காலனுக்கென்ன பைத்தியமா பிடித்தது என் காலருகே வர.?
என் தோளில் தொற்றி ஏறி,காதருகே முணுமுணுக்கிறான்,
உன் நாட்களை எண்ணிக்கொள்”.எண்ணிப் பார்க்கிறேன்
இருக்கும் நாட்களை அல்ல, இருந்து வந்த நாட்களை.

பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,
காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?

ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
யாரும் சிறியர், நானே பெரியோன்,எதிலும் சிறந்தது
என் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்
பயனிலா சொற்கள் பகர்ந்தேனா.?
காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
-----------------------------------
என் எண்ணத் துணுக்குகள் சில மீள்பதிவுக்கு வழிவகுத்துவிட்டன முழுவதும் படியுங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்





   





.