கற்றது -கடுகள்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்றது -கடுகள்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

திருவெழுக் கூற்றிருக்கை..என் பாணியில்


                          திருவெழுக்கூற்றிருக்கை...என் பாணியில்
                          ----------------------------------------------------------


திருவெழுக்கூற்றிருக்கை என்பது ரதபந்தனக் கவி எனப் படும் ஒன்று. கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி கோயிலிலும், கும்பேஸ்வரர் கோயிலிலும் இது எழுதி இருப்பது கண்டு, முன்பே ஒரு முறை விளக்கம் கேட்டு இடுகை இட்டிருந்தேன். சோமாயணம் கலாநேசனும் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அம்மாவும் இது குறித்து எழுதிய பின்னூட்டங்கள் மிகவும் உதவியாய் இருந்தன.

எனக்குள் நானும் ஒரு திருவெழுக்கூற்றிருக்கை  எழுதினால் என்ன என்று ஆசை எழுந்தது. என் தமிழ் தேர்ச்சி குறித்து எனக்கு உயர்வான எண்ணம் கிடையாது. இருந்தாலும் ஊர்க்குருவியாக வாவது பறக்க முடியுமா என்றும் ஒரு ஆசை. கடைசியில் கான மயிலாடக் கண்ட வான்கோழி போல் நானும் ஆட முடிவெடுத்தேன். அந்த முயற்சியே இது.

முதலில் திருவெழுக்கூற்றிருக்கை பற்றி சில குறிப்புகள்.

1 முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல்,பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த் தட்டுபோல் மேலே செல்வதும் கீழே செல்வதுமாக அமைந்திருக்கும் பாடல் பொதுவாக ஆண்டவனைப் போற்றி பாடுவதாகவே இருக்கிறது. வேறு விதமாகப் பாடக் கூடாதா என்று தெரியவில்லை.நான் முயன்றிருக்கிறேன். இலக்கண விதிகள் குறித்த குறிப்புகள் தெரியவில்லை. ஆகவே இதுவும் என் பாணியில் அமைந்திருக்கிறது..

ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி , மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321, என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திருவெழுக்கூற்றிருக்கை எனப் பெயர். இந்த வகையில் திருஞானசம்பந்தரும் ,அருணகிரியாரும் , திருமங்கை ஆழ்வாரும் பாடி இருக்கிறார்கள்.

இனி அடியேனின் பாடல்    
    ஒருவராய்ப் பிறந்து, ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை.

குலம் ஒன்று, சாதி இரண்டொழிய வேறில்லையென முக்காலமும் ஓதி, சக்தி சிவம் ஒன்றென்றே சாற்றுகின்றீர்.

சொல் ஒன்றே,நன்றெனக் கூறி, எதிர்மறை இரண்டாய் இருத்தல் இயல்பென முத்தமிழிலும் நாற்றிசை ஒலிக்க மும்முறை சொல்லும் இருகுணம் கொண்ட ஒருவனும் நீயோ.

குருதி நிறம் ஒன்று,பிறப்பிறப்பு இரண்டும் உண்டு எனப் படைப்பின் முத்தொழில் புரிவோர் நானிலத்தில் ஐம்புலன்களில் நால்வகை வர்ணங்கள் மூவுலகில் எங்கேனும் இரண்டில் ஒன்றாய்ப் படைத்தனரா.

ஓருயிர் பெற்று, இரு பிறப்பெடுத்து, முத்தீ வளர்த்து,நான்மறை பயின்று, ஐவகை வேள்வி மூட்டி, அறுதொழில் செய்து ஐம்புலன் செறுத்து, நான்குடனடக்கி, முக்குணத்தில் இரண்டை அகற்றி ஒன்றுடன் ஒன்றுவோர் இன்றும் உண்டோ.

ஒன்று இரண்டாகி மூன்றுக்கு வழி வகுக்கும் இந்நானிலத்தில் ஐம்புலம் ஆளும் அருகதை ஆறறிவு படைத்த அனைவருக்கும் பொதுவன்றோ. ஏழு ஸ்வரங்களில் பேதம் கொணர்வது இகவாழ்வில் சரியோ. அறுசுவையுடன் அவலச் சுவையும் வேண்டுமோ.. வாய்ப்பென்று வரும்போது கையின் ஐ விரலும் சமம் என்றே உணராது வர்ணபேதம் முக்காலமும் மேடு பள்ளமென இரண்டுக்கும் காரணம் என்ற ஒன்றாவது சரியோ.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் ...என்றோ ஓதியது.எண்ணத்தில் ஓடியது. எண்ணால் எழுத்தால் இறை புகழ் பாட என்னால் இயலவில்லை. கண்முன்னே விரியும் அவலங்கள் அவனும் அறிவான்தானே.சம நீதி கிடைக்க இன்னும் அவன் அவதரிக்காதது என்ன நீதி.?


சக மனிதனிடம் கேள்வி கேட்பது போல் எழுத முயன்றிருக்கிறேன். சில அரும்பதங்கள்  பொருள் கூற வேண்டும் எனத் தோன்றியது . அவை.

முத்தீ = கார்ஹபத்தியம் , ஆஹவநீயம் ,தக்ஷிணாக்கினி போன்ற மூன்று வகை அக்னிகள்.
இரு பிறப்பு = முப்புரி நூல் இடுவதற்கு முன்னும் பின்னுமானது.
நான்மறை  = ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள்.
ஐவகை வேள்வி = தேவ யக்ஞம், பித்ருயக்ஞம், பூத யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், ப்ரஹ்ம்மயக்ஞம்
அறுதொழில், = யஜனம் ( யாகம் இயற்றுதல் ), யாஜுகம் ( மற்றவர்களை யாகம் செய்வித்தல் ) அத்யயனம் ( வேதம் ஓதுதல் ), அத்யாபக்ஞம் ( மற்றவர்களை வேதம் ஓதுவித்தல் ) தானம் ( மற்றவர்களுக்கு அளித்தல் )ப்ரதிக்ரஹம் ( மற்றவர்களிடமிருந்து பெறுதல்)
ஐம்புலன் செறுத்து = கண் முதலான ஐந்து புலன்களையும் அவற்றின் விஷயங்களில் செலுத்தாமல் நிறுத்தி
நான்குடனடக்கி = மனம் ,புத்தி, சித்தம் அஹங்காரம் ஆகிய நான்கையும் அடக்கி,
                 அல்லது ஆகாரம் , உறக்கம் ,பயம் உடலுறவு ஆகியவற்றை அடக்கி                    என்றும் கொள்ளலாம்
முக்குணத்தில் இரண்டை அகற்றி, = ரஜஸ் மற்றும் தாமஸ குணங்களை அகற்றி
ஒன்றுடன் ஒன்றுவோர் = மீதமுள்ள ஒன்றான ஸத்வ குணத்தில் நிலை நின்று.