
iஇது நாள் வரை ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி சமயம் ஏதோ சிறிய அளவிலாவது கொலு வைப்பது வழக்கம். இந்த வருடம் முறைப்படி கொலு வைக்க இயலவில்லை. படத்தில் காண்பது சென்ற ஆண்டு வைத்த கொலு. இம்முறை வைக்க வாங்கிய கண்ணனின் விக்ரகம் பூஜைக்கு வைக்கப் பட்டுள்ளது. என் பங்குக்கு நானும் ஒரு துதிப் பாடல் ( முதன் முறையாக )
எழுதி உள்ளேன். அது கீழே.
அணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்
இயக்கும் சக்தியே
உன்னை நான் வணங்குகிறேன்.
உருவமும் பெயரும் ஏதுமில்லா உன்னை என்ன சொல்லி
போற்றுவேன் .மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-
புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை- ஜெய மடந்தை என்பேனா-
சர்வசக்தி பொருந்திய சர்வாங்க
சுந்தரி என்பேனா--நான்
அவலத்தில் அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்
முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- ஏனையோர் துதிக்கும்
எல்லா நாமங்களும் கொண்டவளும் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்
காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் தேவியே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே
உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,
எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே


