தலைமுறை நினைவுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைமுறை நினைவுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

கடிகார நினைவுகள்


                                       கடிகார நினைவுகள்
                                      ----------------------------


ஒரு செய்தி படிக்கும்போது மனம் அந்த செய்தியை ஒட்டிய நினைவுகளில் சங்கிலித் தொடர்போல் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறது அந்த மாதிரியான நினைவின் ஒரு சஞ்சரிப்பே இப்பதிவு. இரண்டு நாட்களுக்கு முந்தைய THE HINDU பெங்களூர் பதிப்பில் HMT  கைக்கடிகாரங்களின் விற்பனை இரண்டு மூன்று நாட்களாகக் கூடி யிருக்கிறது என்றும் தும்கூரில் இருக்கும் அந்த தொழிற்சாலை மூடப்படலாம் எனவும் செய்தி படித்தேன். கண்கள் செய்தியில் இருந்தபோதே மனசு இறக்கை கட்டிக்கொண்டு பின்னோக்கிப் பயணித்தது. 1964-ம் வருடம் என்று நினைக்கிறேன் அப்போது எனக்கு மனைவியாக வரப் போகிறவள் HMT வளாகத்தில் இருந்த வாட்ச் ஃபாக்டரியில் பயிற்சிக்காகச் சேர்ந்திருந்தாள்.அவளுக்கு தர உறுதி அளிக்கும் செக்‌ஷனில் பயிற்சி. ஜப்பானியர்களோடு ஏற்பட்ட ஒப்பந்தப் படி தொடங்கப் பட்ட தொழிற்சாலை அது. மூன்றாண்டு  பயிற்சி முடிந்த பிறகு  குறைந்தது ஐந்து ஆண்டுகாலம் பணி செய்வேன் என்று பத்திரத்தில் எழுதிக் கையொப்பமிட்டிருந்தாள். இல்லையென்றால்  அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடு தருவதாகவும் ஒப்பந்தம். அதற்கு பொறுப்பேற்று அவளது மாமா surety  கையொப்பம் இட்டிருந்தார்.
எங்களுக்கு 1964-ம் ஆண்டு நவம்பரில் திருமணம் நிகழ்ந்தது. நான் அப்போது HAL ENGINE DIVISION-ல் பணியில் இருந்தேன். என் பணி முன்னேற்றம் கருதியும் சிலபலகுடும்ப சூழல்களாலும் நான் HAL வேலையை ராஜினாமா செய்து சென்னையில்(அப்போது மெட்ராசில்) லூகாஸ் டிவிஎஸ் சில் பணியில் அமர்ந்தேன். அது ஏப்ரல் மே மாதம் 1965-ல். காதல் மனைவியைப் பிரிந்து சென்னையில் வாழ்க்கை நடத்த எனக்கு விருப்பமில்லை. அவளது பய்ற்சி வேலையை ராஜினாமாச் செய்யச் சொல்லி தனிக்குடித்தனம் மெட்ராசில் அமைத்தேன்.
அவள் HMT யில் ஒப்பந்தத்தில் இருந்ததால் எப்பாது கேஸ் போடுவார்களோ என்ற பயத்திலேயே இருந்தாள். நான் என்ன ஆனாலும் சமாளிக்கலாம் என்று தைரிய மூட்டினேன்.அவளுக்கு அவள் மாமா என்ன சொல்வாரோ .செய்வாரோ எனற பயம்.
பயப்பட்டது போலவே HMT ல் இருந்து வக்கீல் நோட்டீஸ் வந்தது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருந்தாள். நான் அவளிடம் JUST IGNORE என்றேன். பத்து நாட்களுக்குஒருமுறை அம்மாதிரி நோட்டீஸ் வந்து கொண்டிருந்தது. அவளது மாமாவுக்கும் அதே போல் போயிருக்கிறது. நான் அப்படி நிலைமை கட்டுக்கு மீறிப் போனால் நஷ்ட ஈட்டின் தொகையை மாதாமாதம் ஒரு சிறிய தொகை கொடுக்கலாமென்றும் நஷ்ட ஈட்டை ஒரே தடவை கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தமில்லை என்றும் சொல்லி தைரியப் படுத்தினேன். ஆனால் அவர்களது ஒரு கடிதத்துக்காவது பதில் போடவில்லை. நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும்படியும் கடிதங்கள் வந்தது. ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் எழுதி கடிதங்கள் வந்தது/.நான் அவளிடம் சொன்னபடி we just ignored every letter.  நாளாவட்டத்தில் கடிதங்களும் நோட்டீசுகளும் வருவது நின்றன. இப்போது நினைத்துப் பார்க்கும்போது நான் செய்தது சரியா என்னும் கேள்வி எழுகிறது அவள் மொத்தமாக ஒன்பது மாதங்கள் பயிற்சியில் இருந்தாள். எல்லாம் சேர்த்த தொகையாக மாதம் 90 ரூபாய் வருமானம். நஷ்ட ஈடு என்றால் மூன்றாண்டு பயிற்சிப் பணமும்  பிறகு பணியில் கிடைக்கப் போகும் ஐந்தாண்டுகால சம்பளமும் அடைக்க வேண்டி இருந்திருக்கும்.
வாழ்க்கையில் எதையும் சமாளிக்கலாம் என்ற இள ரத்தம் ஓடிய காலம் அது.
நினைவுகள் திசை மாறுகின்றன.
நான் அம்பர்நாத்தில் பயிற்சியில் இருந்தபோது என் நண்பன் ஒருவன் நல்லவசதியான குடும்பத்திலிருந்து வந்தவன் ஒரு கைக்கடிகாரம் கட்டியிருந்தான். அதை மிகவும் பெரூமையோடு எல்லோருக்கும் காட்டிப் பெருமை கொள்வான். அது ஒரு ரோலெக்ஸ் வாட்ச். உலகிலேயே சிறந்தது என்று கூறுவான். அதை அடுத்தது OMEGA வாட்ச் சிறந்தது என்பான். என் கையில் கடிகாரம் ஏதுமிருக்கவில்லை. அப்போது உறுதி எடுத்தேன் நான் காசு கொடுத்து எனக்காக வாட்ச் வாங்குவதென்றால் அது ஒரு ரோலெக்ஸோ அல்லது ஒமேகாவோ வாகத்தான் இருக்க வேண்டும் என்று. ஆனால் என்னால் அம்மாதிரி வாட்ச் காசு கொடுத்து வாங்க முடியவே இல்லை.நான் ஜப்பான் போயிருந்தபோது நண்பர்களுக்காக மூன்று சோலார் வாட்சுகள் வாங்கி வந்தேன். 1971-ல் என் நண்பன் ( இப்போது அமேரிக்காவில் இருக்கிறான்)ஒரு சீகோ வாட்ச் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான் அது வைப்ரேஷனில் ஓடும். சாவி கொடுக்க வேண்டாம் பேட்டரி கிடையாது. இன்றும் என்னிடம் இருக்கிறது ஒரு முறையேனும் ரிப்பேர் என்று ஆனதில்லை. ஆனால் சற்றுக்கனமாக இருக்கும்.
அதன் பின் என் மகன் அவனது முதல் சம்பளத்தில் ஒரு TITAN வாட்ச் வாங்கிக்கொடுத்தான் (1988 என்று நினைக்கிறேன்) அதைத்தான் இப்போது கட்டிக் கொண்டிருக்கிறேன்  என் பேரன் சொல்லுவான். அவனது முதல் சம்பளத்தில் அவன் வாங்கிக் கொடுக்கும் கைக்கடிகாரம் என் கையிலிருக்க வேண்டும் என்று. அவனும் படிப்பு எல்லாம் முடிந்து இப்போது வேலைக்குப் போகிறான். எனக்காக வாட்ச் வாங்கி வைத்திருக்கிறானாம்.
HMT வாட்ச் தொழிற்சாலை பற்றிய செய்தி தலை முறை நினைவுகளில் முடிகிறது
 
என் பேரன்
.