நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.....
----------------------------------------------------
அதுதான் பலநேரங்களில் நடப்பதில்லையே நாங்கள் ஆண்டுதோறும்
மேற்கொள்ளும் ஆலய விஜயங்கள் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில்
நிகழவில்லை.ஆண்டுதோறும் ஜூன் மாதக் கடைசியிலோ ஜூலை மாத ஆரம்பத்திலோ பயணம் செய்வது
வழக்கம். இந்த ஆண்டு என் இரு பிள்ளைகளும் உடன் வந்து காரிலேயே அழைத்துச்
செல்கிறோம் என்றனர்,. இருவருக்கும் தங்களைப் பணியில் இருந்து விடுவித்துக் கொள்ள
இயலாத நிலையில் எங்கள் பயணமும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு சமயம் நாங்களே
தனித்துச் செல்ல அனுமதித்தனர். ஆக பயணச் சீட்டு தங்குமிடம் போன்ற விஷயங்களில்
கவனம் செலுத்தினோம். சாதாரணமாகத் திருச்சி சென்று அங்கிருந்து கும்பகோணம
வைத்தீஸ்வரன் கோவில் சிதம்பரம் என்று பயணிப்பது வழக்கம் . இந்த முறை ஒரு
மாற்றத்துக்காக மயிலாடுத்துறை சென்று அங்கு தங்கி ஆலய தரிசனங்களை முடித்துவிட்டு
கடைசியில் திருச்சி வந்து பிறகு பெங்களூர் வரத் திட்டமிட்டோம். எனக்கு
மயிலாடுதுறையில் பதிவர் கோமதி அரசு இருப்பது நினைவுக்கு வந்து அவருக்கு மெயில்
அனுப்பினேன். மயிலாடுத்துறையில் தங்குமிடங்கள் குறித்துத் தகவல்கள் தருமாறும்
கேட்டேன். ஐந்தாறு தங்குமிட முகவரியுடன் தொலைபேசி எண்களும் தந்தார்கள். எத்தனை
சிரமம் கொடுக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். என் பயண திட்டத்தை திருச்சிப்
பதிவர்கள்திரு. வை. கோபாலகிருஷ்ணன், திரு ரிஷபன் . திரு ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி
திரு தமிழ் இளங்கோ போன்றோர்களுக்குத் தெரியப் படுத்தினேன் . திருமதி கீதா
சாம்பசிவம் மும்பையில் இருப்பதாகத் தெரிந்ததால் அவர்களுக்குத் தகவல்
கொடுக்கவில்லை. இவர்கள் என்னை திருச்சியில் சந்திப்பதாகக் கூறினார்கள்
ஒன்பதாம் தேதி காலை
மயிலாடுதுறையைச் சமீபிக்கும் போது திருமதி கோமதி அரசுவிடம் இருந்து தொலைபேசியில்
அவர்கள் ரயில் நிலையத்தில் எங்களுக்காக காத்திருப்பதாகத் தகவல் வந்தது. நாங்கள்
மிகவும் நெகிழ்ந்து விட்டோம். திருமதி. கோமதியும் அவர்கள் கணவர் திரு
திருநாவுக்கரசும் எங்களை அவர்கள் காரிலேற்றி நாங்கள் தங்க முன் பதிவாயிருந்த
ஹோட்டல் பாம்ஸில் கொண்டு சேர்த்தனர். நாங்கள் திருக்கடையூர் மற்றும் திருவிடைக்கழி
முருகன் ஆலயம் சென்றுவர டாக்சியும் ஏற்பாடு செய்து தந்தனர். மாலை மயிலாடுத்துறையில்
இருக்கும் பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்கும் அபயாம்பிகை உடனுறை மயூரநாதர்
கோவிலுக்கும் எங்களை அவர்கள் காரிலேயே கூட்டிப் போவதாகவும் கூறினர்.
காலையில் குளித்து உணவருந்தி திருக்கடையூர் திருவிடைக்கழி
நோக்கிப் பயணித்தோம் திருக்கடையூருக்கு முன்பே வந்திருக்கிறோம். என்னுடைய அறுபதாம்
ஆண்டு விழா அங்குதான் நடந்தது. திருவிடைக்கழி ஆலயம் முதல்தடவை யாகச் சென்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆலய தரிசனம் செல்லும் போது அதுவரைக் கண்டிராத ஒரு கோவில் செல்வது
வழக்கம் இம்முறை இந்த முருகன் கோவில். பழமையான சிறிய ஆலயம் . இருக்குமிடம்
தெரியாமல் தொலைவில் எந்தக் களேபரமும் இல்லாமல் அமைதியாகக் காட்சி அளிக்கிறது.முருகன்
சன்னதியில் ஒரு சிவ லிங்கமும் இருக்கிறது. எந்த திட்டமும் இல்லாமல் போனதால்கோவில் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கவில்லை. எல்லாக் கோவில்களுக்கும் இருக்கும் சில
கதைகள் இக்கோவிலுக்கும் உண்டு என்று பிறகு அறிந்தேன். . திருக்கடையூரில்.... அப்பப்பா....... அப்படி ஒரு
கூட்டம் நெரிசல். வெயிலும் அதிகம். திருமண ஆண்டு விழாக்கள் எங்கு பார்த்தாலும்
நடந்து கொண்டிருக்க அமைதியாக தரிசனம் என்பது இயலாத காரியம் முக்கிய சன்னதிகளான அமிர்தகடேசர் கால சம்ஹார மூர்த்தி, கள்ளப்
பிள்ளையார் அன்னை அபிராமி சென்று வழிபட்டோம். என் அறுபதாம் ஆண்டு விழா நினைவுக்கு
வந்தது. என் பேரக்குழந்தைகள் தாத்தா பாட்டிக் கல்யாணம் என்று கூறி மகிழ்ந்தது
நினைவிலாடியது. அந்த வெயிலில் மிகவும் களைப்பாக உணர்ந்தேன். பிறகு கோவில் அலுவலகம்
சென்று எங்கள் நட்சத்திரத்துக்கு மாதம் ஒரு முறை பூஜை செய்து பிரசாதம்
அனுப்பக்கேட்டுக் கொண்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்தினோம். அந்தநாளையநினைவுகள் பழையபுகைப்படங்களைத்
தேடி எடுத்து அவற்றையே காமிராவில் பிடித்து இத்துடன் வெளியிடுகிறேன்.
 |
அமிர்தகடேசர் சன்னதி முன் பேரன்வலது ஓரத்தில் பேத்தி மனைவியின் அருகே. |
 |
திருமாங்கல்யத்துக்குப் பூஜை..? |
 |
இரண்டாம் முறையாக தாலி கட்டல் |
 |
நெற்றியில் திலகமிடல் |
 |
இரண்டாம் மகன் மருமகள் பேத்தியுடன் |
 |
மூத்தமகன் மருமகள் பேரனுடன் |
 |
மச்சினன் , அவன் மனைவி மகளுடன்( இந்தப் பெண்தான் இங்கிலாந்தில் sky dive செய்தவள் |
 |
அன்று விழாவில் பங்கெடுத்தசுற்றமும் நட்புகளும் |
இந்த சஷ்டியப்த பூர்த்தி நடந்த்ததே பல உறவுகளுக்கும் தெரியாது......!
மதியம் அறைக்கு வந்து உண்டு களைப்பாறினோம் மாலை சுமார் ஐந்து
மணி அளவில் அரசு தம்பதியினர் எங்கள் அறைக்கு வந்தனர். நான் சற்றும் எதிர்பாரா
நிலையில் எனக்கு ஒரு சால்வையைப் போர்த்தினார்கள். என் மனைவிக்கு ஒரு கல்கத்தா காளி
உருவத்தை பரிசாகக் கொடுத்தனர்.ஒரு டப்பாவில் போளிகளும் பழங்களும் கொடுத்து எங்களை
திக்கு முக்காடச் செய்தனர். பிறகு அவர்கள் காரிலேயே திரு பரிமள ரங்கநாதர்
ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர் சற்றே பெரிய கோவில். ரங்கநாதர் பின்னணியில் பாதி
மறைக்கப் பட்டு இருக்கிறார்.( எண்ணைக்காப்புபோல )108 திருப்பதிகளுள் ஒன்று. ஐந்து
நிலை ராஜ கோபுரம் பெருமாளின் தலைப்பகுதியில் காவிரியும் கால் பகுதியில் கங்கையும்
சேவிக்கிறார்கள்.இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி சந்திரன் தன் சாபம் நீங்கப்
பெற்றான் என்றும் கதை உண்டு. வீர சயனத்தில் கிழக்குப் பார்த்து அருள் பாலிக்கும்
பெருமாள் தீபாராதனைபோது முகமும் காலும் காட்டப் படுகிறது ஓரிரு புகைப்படங்கள்
எடுத்தேன்
அதன் பிறகு அபயாம்பிகை சமேத மயூர நாதர் கோவில் சென்றோம்.
முதலில் சிவன் கோவில் என்று தெரியவில்லை. முருகனின் ஆலயம் என்று நினைத்திருந்தோம்.
இந்தக் கோவிலில் திருமதி. கோமதியின் கணவர் திரு. திருநாவுக்கரசு நாயன்மார்கள்
பற்றிய உபன்யாசம் செய்திருப்பதாக பேச்சு வாக்கில் அறிந்தோம் திருநாவுக்கரசு
அவர்கள் தமிழ் அறிஞர். முனைவர் பட்டம் பெற்றவர். திருமுறைகள் பற்றிய நூலை
எழுதியவருள் இவரும் ஒருவர். பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகக் காட்சி தருகிறார். கோவில்
கோபுர உச்சியில் மோக்க்ஷ தீபம் ஏற்றுவதாகப் பிரார்த்திப்பவர்களும் உண்டாம் அப்படி
ஏற்றப்பட்ட மோக்ஷ தீபத்தைப் புகைப் படமாக எடுத்திருக்கிறேன் கோவில் தரிசனம்
முடிந்தபின் திருமதி .கோமதி அரசுவின் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்கள்.
மல்லீப்பூ போன்ற இட்லிகளும் தோசைகளும் கொடுத்தார்கள்.கூடவே செவிக்குணவாக பல
விஷயங்களையும் கேட்டுத்தெரிந்து கொண்டோம் கடவுளர் பற்றிய விஷயங்களில் முதலில்
நம்பிக்கையே முக்கியம் என்பது திரு அரசுவின் வாதம். கேள்வி கேட்டுபுரிந்து கொள்ள
முயல்வது என் குணம். பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று ஒப்புக் கொண்டோம்
முகமறியா வலை நண்பர் ஒருவர் பல நாட்கள் பழகியது போல் நடந்து கொண்டது மனசுக்கு
மகிழ்ச்சி அளித்தது. அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கும் அறைக்குத்
திரும்பினோம். . .
 |
மயூரநாதர் கோவில் கோபுரம் மேல் “மோக்க்ஷ தீபம்” |
 |
திருமதி கோமதிஅரசு, திருநாவுக்கரசு , நான் |
 |
திருமதி.கோமதி அரசு என் மனைவிக்குக் கொடுத்தபடம் |
 |
என் சிறுகதைத் தொகுப்பு”வாழ்வின் விளிம்பில்” என் பரிசாக. |
 |
அருள்மிகு பரிமள ரங்கநாதர் ஆலயம் முன் |
 |
மயூரநாதர் கோவிலில் அன்னை மயிலாக ஈசனைப் பூசிக்கும் சிற்பம் |
 |
அரசு தம்பதியினர் அவர்கள் இல்லத்தில் |
மறுநாள் பத்தாம் தேதி வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் புறப்படும்
முன் கோவில் குருக்களிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு. பிரதி வருடமும் ஜூலை மாதம்
வருகை தருவோர் இதுவரை வரவில்லையே என்று கேட்டார். நாங்கள் இன்னும் அரைமணியில்
வருவதாக்ச் சொன்னோம். வழக்கம் போல் பூஜைக்கான பொருட்களுடன் குருக்களை சந்தித்து வைத்தீஸ்வரன்
தையல்நாயகி, முத்துக் குமாரஸ்வாமி, அங்காரகன் என்று அனைவரையும் சேவித்துவிட்டு குருக்களிடம்
வழக்கம்போல் வருடாந்திர அர்ச்சனைகளுக்கும் பணம் கொடுத்துவிட்டு சிதம்பரம் நோக்கிப்
பயணிக்க வெளியில் வந்து கொண்டிருந்தோம். திடீரென எனக்கு இருமல் வந்தது. என் மனைவியின்
கையைப் பிடித்துக் கொண்டு இருமினதுதான் தெரியும். நான் மயங்கி கீழே
விழுந்துவிட்டேன். என்மனைவி எப்படிப் பதறிப் போய் இருப்பாள் என்று இப்போது எண்ணிப்
பார்க்கிறேன் அருகில் இருந்தவர்கள் எனக்கு வலிப்பு வந்து விட்டது என்று கருது
இரும்புச் சாவி கொடுக்க முற்பட்டார்கள். இதற்குள் நான் மயக்கம் தெளிந்து எழுந்து
விட்டேன் அது ஒரு மாதிரி இருமல்..சிலசமயம் இந்த மாதிரி syncopi யில்
கொண்டுவிடும் மிகவும் சோர்வாக இருந்தது. சிதம்பரம் கோவில் மிகப் பெரியது அங்கு
சென்று தரிசனம் செய்ய அப்போது உடலில் தெம்பு இருக்கவில்லை. ஆண்டு தோறும் எங்களைக்
கூட்டிச் சென்று தரிசனம் செய்விக்கும் தீக்ஷிதர் வீட்டில் நானிருக்க என் மனைவி
ஆடலரசனைக் கண்டு சேவித்து வந்தாள். அந்த தீக்ஷிதரின் பெண்ணுக்குத் திருமணம்
நடந்திருந்தது. எங்களால் போக முடியவில்லை. அவர்கள் வீட்டில் அப்பெண்ணை வாழ்த்திவிட்டு
தில்லை காளியம்மன் கோவில் வாசலில் நான் காரில் இருக்க என் மனைவி தரிசித்து
வந்தாள். என் நிலைமையில் திருச்சிக்குப் போக என் மனைவிக்கு துணிவு இருக்கவில்லை.
எனக்கும் இந்த வெயில் ஒத்துக் கொள்ள வில்லை. நேரே பெங்களூர் திரும்ப
முடிவெடுத்தோம். என் மகன்களுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டு
மயிலாடுதுறையிலிருந்து தத்கலில் டிக்கெட்
பதிவு செய்யப் பட்டது. 11-ம் தேதி பகல் நேரம் முழுவதும் அறையிலேயே இருந்தோம்.
எதுவும் உண்ணவோ அருந்தவோ பிடிக்கவில்லை. ஹோட்டலில் ஒரே ஒரு தயிர் சாதம் பாக்
செய்து கொண்டு மாலை கிளம்பினோம் திருச்சியில் சந்திப்பதாக இருந்த அனைவருக்கும்
தகவல் தெரிவித்தோம். ரயிலில் ஏறியதும் ஏதாவது சாப்பிடக் கிடைத்தால் தேவலாம்
என்றிருந்தது. எங்கள் துரதிர்ஷ்டம் கும்பகோணத்திலோ தஞ்சையிலோ எதுவும் வாங்க
முடியவில்லை. மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது டெல்லியில் இருந்த என் மூத்த
மகனுக்கு தொலை பேசியில் விஷயங்களைச் சொன்னோம் அவன் திருச்சியில் இருந்த நண்பர்
ஒருவரிடம் எங்களுக்கு இரவு உணவு ரயில் நிலையத்தில் கொண்டு வந்து கொடுக்கச்
சொன்னார். திருச்சி ரயில் நிலையத்தில் அந்த நண்பர் சூடான இட்லி தோசையுடன்
காத்திருந்தார் இன்றைய வேக வாழ்க்கையில் இது சாத்தியமாயிற்று. ஒரு மணி நேரத்தில்
தகவல்களும் அதன்படி செயல் களும் நடந்து முடிந்தன. நண்பருக்கு நன்றி சொன்னோம். 12-ம்
தேதிகாலை ஐந்தரை மணிக்கு எங்கள் இளைய மகன் ரயில் நிலையம் வந்து எங்களை வீட்டுக்குக்
கூட்டி வந்தான்
சொல்ல நினைத்ததை சொல்லும்போது சற்றே நீண்ட பதிவாகி விட்டது.
.
.
. .