பயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.
------------------------------------------------------------------
மறுநாள்
என் மனைவியின் தகப்பனார் இடம் வெள்ளிநாழியில் நேர்த்திச் சடங்கு.
அதிகாலையில் எழிந்து குளித்து புறப்பட்டோம். அங்கு சென்றுதான் காலை ஆகாரம்
என்றார்கள். போகும் வழியில் மனைவியின் தந்தையாரின் குலக் கோவிலான மாங்கோட்டுக்
காவுக்குச் சென்றோம் அந்தக் கோவிலில் பூரம் திருவிழாவுக்காக ஏற்பாடுகள் நடந்து
கொண்டிருந்தன. யானையை அலங்கரித்துப் பட்டம் கட்டி ஊரில் வலம் வருவார்கள். அப்போது
பக்தர்கள் காணிக்கை பணமாகவோ பொருளாகவோ தருவார்கள், என் உறவினரும் பூரத்
திருவிழாவுக்கு அவர்களால் முடிந்த காணிக்கை செலுத்தினார்கள்.
எங்களுக்கு வந்த அழைப்பில் அங்கு ”பானை” எனும் வேண்டுதல் சடங்கு
நடை பெறும் என்றார்கள். இந்தச் சடங்கில் முதலில் பானைப் பந்தல் என்று
நிறுவுகிறார்கள். ஆறடிக்கு ஆறடி பந்தல் பெரும்பாலும் வாழை மட்டையில் தென்னை இள
ஓலைகளைச் செருகி அலங்கரிக்கிறார்கள். அந்தப் பந்தலில் பகவதியைபிரதிஷ்டை
செய்கிறார்கள்.மாஙோட்டுப் பகவதி க்ஷேத்திரத்தில் இருந்து வாள் ஒன்று கொண்டு
வரப்பட்டு பகவதியுடன் ஆராதிக்கப் படுகிறது பந்தலைச் சுற்றிலும் வாழை இலையில் அரிசி
மேல் தேங்காய் வைக்கப் பட்டிருக்கிறது. திசைக்கு நான்கு வீதம் பனிரெண்டு இலைகள்.
முதலில் கணபதி பூஜை. செய்விப்பவர் பூசாரியோ புரோகிதரோ அல்ல. இம்மாதிரி பூஜைகள்
நடத்துவதில் பயிற்சி பெற்றவர் போலத் தெரிகிறதுஎந்த வித மந்திர உச்சாடனமும் இல்லை.
எல்லாம் கையால் சைகைகள்தான் பஞ்ச வாத்தியங்களுடன் ஜெண்டை முழங்க பூஜை செய்கிறார்.
அருகே தோட்டத்தில் இருந்த பாலை மரக் கிளையை கொம்போடு வெட்டி எடுத்து வருகிறார்கள்.
இந்த சடங்குக்கு பெண்கள் கையில் தாலமேந்தி (தட்டில் விளக்கு ) செல்கிறார்கள் தாள
வாத்தியத்துடன் அந்த மரக் கிளையை கொண்டு வந்து பந்த்லுக்குள் நடுகிறார்கள் அதன்
பின் பூஜை செய்பவர் விஸ்தாரமாக திசைக்கு நான்கு இலைகளில் உள்ள தேங்காய் முன்
நின்று தூப தீபம் காட்டுகிறார். ஒவ்வொரு இலையின் முன் நின்று செய்வது நிறையவே
நேரம் எடுக்கிறது மொத்தம் 16 இலைகள் ஒவ்வொன்றின் முன்னும் மூன்று முறை அடுத்து
என்ன செய்யப் போகிறார் என்று தெரியாமல் நமக்கு அவஸ்தை. ஒவ்வொரு முறையும் தூபமோ
தீபமோ காட்டும் போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஏதோ நாட்டிய ஸ்டெப்
போல இருக்கும் இது முடிந்து பந்தலைச் சுற்றி ஒன்பது முறை வலம் வருகிறார். ஒவ்வொரு
திசை முன்பும் இந்த நாட்டிய ஸ்டெப்புடன்.... நிறையவே பொறுமை சோதிக்கப் படுகிறது.
இது முடிந்தபின் குருதி பூஜை. ஒரு உருளியில் குங்குமம் மஞ்சள் கலந்த நீர் சிவப்பு
நிறத்தில். இந்த நாட்டிய நடையுடன் மேள தாளங்கள் அதிரடி அடிக்க அவர் குருதியைக்
குடிப்பதுபோல் பாவனை செய்கிறார். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் குருதியைக்
கலைத்துக் குடிப்பது போல் பாவனை. ஒரு வேளையில் குருதி எல்லாம் கீழே சிந்தி ஜெண்டை
முழக்கம் ஒரு crescendo நிலையில் எல்லோரும்
கட்டிப்போட்டு விட்டது போல் இருக்கிறார்கள். இவருடைய முறை முடிந்ததும் பந்தலைச்
சுற்றி நாட்டிய பாவனையில் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தீப்பந்தங்களுடன் ஆடியாடி
சுற்றி வருகிறார்கள். ஒரு சமயம் பந்தலைச் சுற்றி ஆடி வருபவர் எண்ணிக்கை அதிகரித்து
விடுகிறது. சிறு பிள்ளைகளும் கலந்து கொள்கிறார்கள் , இந்த சடங்கு முடியும்
தருவாயில் கேரளத்துக்கே உரிய “ வெளிச்சப்பாடு” வருகிறார் அவர் குளித்து முடித்து தலை விரி கோலமாய்
சிவப்பு உடையில் கயில் ஒரு பெரிய வாளுடன் முதலில் பூஜௌ செய்ய வருகிறார். அவரது
சடங்கு தொடங்கும் முன்னே இந்தப் பானை பந்தல் பிரிக்கப் பட்டு விடுகிறது அவரும்
பந்தலைச் சுற்றி வருகிறார். அதே நாட்டிய ஸ்டெப்புடன் . பிறகு தாள வாத்தியங்களின்
துரித கதிக்கேற்ப ஓடுகிறார். பிறகு இந்த சடங்குக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள்
முன் வந்து அருள் வாக்கு சொல்கிறார். பெரும்பாலும் பகவதிக்கு மகிழ்ச்சி என்றே கூறு
கிறார்கள், இபடியாக ஒரு வழியாகப் பானை நடந்து முடிந்தது.
இணையத்தில் இந்த சடங்கு குறித்துத் தேடினேன்.
சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. அங்கு வந்திருந்த பலரிடம் கேட்டதில் இது ஒரு
நேர்த்திச் சடங்கு என்றே தெரிகிறது.எனக்கு கிராம தேவதைகளுக்குப் படையல் செய்வது
பற்றி எதுவும் தெரியாது. இந்த வழிபாடு பிரத்தியேகமாக நாயர் ஜாதியில் காணப்
படுவதாகத் தெரிகிறது மந்திரங்கள் ஏதும் இல்லை இருந்தாலும் பகவதிக்குப் ப்ரீதி
செய்ய ஒரு அணுகு முறை என்றே தோன்றுகிறது அன்னை என்பவளை உக்கிரம் கொண்டவளாகப்
பாவித்து அவளது அனுக்கிரகம் பெற குருதி பூஜை செய்கிறார்களென்றே தோன்றுகிறது முன்
காலத்தில் விலங்குகளை பலியாகக் கொடுக்கும் வழக்கம் மறைந்து குருதியை நிவேதனம்
செய்வதாக ஒரு பாவனை பிற்காலத்தில் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது எது எப்படி
இருந்தாலும் இந்தக் கலாச்சார வழிபாடுகள் மூலம் நம் பாரம்பரியக் கலைகள் முற்றிலும்
அழிந்து விடாமல் இன்னும் இருக்கிறது என்று தோன்று கிறது. “ யாதேவி சர்வ பூதேஷு
மாத்ரு ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம” என்று எண்ணும் எனக்கு அன்னையைக்
கொடூரமானவளாகவும் ரத்த வாடை கொண்டவளுமாக நினைக்க முடியவில்லை. இம்மாதிரி
வழிபாடுகள் primitive ஆகத் தோன்றுகிறது.
இந்த வழிபாடுகள் ஊடே வயிற்றுப் பாடும் கவனிக்கப்
பட்டது. இந்தச்சடங்குகளை நான் என் விடியோ காமிராவில் பதிவு செய்திருக்கிறேன் இது
முடிந்து மஹாராஜாவின் கொட்டாரம் செல்லும் முன் செருப்புளச்சேரி என்னுமிடத்தில் ஒரு
ஐயப்பன் கோவில் காண விரும்பினார்கள்.
அந்தக் கோவிலின் விசேஷமே அங்கிருக்கும் ஐயப்பன் நின்ற கோலத்தில் இருப்பதுதான்.
ஆனால் பேண்ட் அணிந்திருந்த எனக்கு அனுமதி இல்லை என்றார்கள். தூரதிலிருந்தே
சேவித்துக் கொண்டிருந்த என்னையும் என் மச்சினன் ஒருவனையும் பார்த்த அந்தக்
கோவிலில் பொறுப்புள்ள ஒருவர் நாங்கள் உள்ளே சென்று தரிசிக்க அனுமதி கொடுத்தார்
ஒரு வழியாய் அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள்
என் மாமியார் வீட்டுக்குலக் கோவிலுக்கு மீண்டும் சென்றோம் . இம்முறை என் கடைசி
மச்சினியின் பிரார்த்தனை நிறைவேற்ற. அவளுக்கு ஒரு சாலை விபத்தில் உயிர் பிழைத்ததே
அதிர்ஷ்டம் என்னும் நிலையில் ஒரு காலில் சிதைவு ஏற்பட்டு நிறையவே காஸ்மெடிக்
சர்ஜெரி செய்து ஓரளவு நடமாடுகிறாள். அவளுக்குக் காலில் “ஆணி“ என்னும் தொல்லை வந்து
குணமாக பரியாம்பட்தக் காவில் நேர்த்திக்கடன் கோவிலில் எண்ணையும் அப்பளமும்
வாங்கிக் கொடுக்க அவர்கள் அவற்றைப் பொரித்துத் தருகிறார்கள் அந்த பொரித்த
அப்பளங்களை பகவதியின் சன்னதி முன்னால் ஒரு வாழை இலையில் வைக்கிறார்கள். இவள் “ஆணியுள்ள
காலாஇ அதை மிதித்து நொறுக்க வேண்டும் பிறகு அங்கிருந்த ஒரு ஓட்டலில் காலை ஆகாரம்
நாங்கள் பத்து பேர் ( ட்ரைவர் உட்பட ) காலை உணவு வயிறார உண்டதற்கு ரூ.
நானூறுக்குள்தான் ஆயிற்று. இதையே நாங்கள் இருந்த கொட்டாரத்தில் உண்பதாயிருந்தால்
ரூபாய் ஆயிரத்தைநூறுக்கு குறையாமல் ஆகி இருக்கும். காலை பதினொன்றரை மணிக்கு பாலக்
காட்டில் ரயில் ஏறினோம். பகல் வேளைப் பயணம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே தெரிந்தது.
இரவு எட்டு மணி அளவில் வீடு சேர்ந்தோம்
இனி சில புகைப் படங்கள்.
![]() |
| பானை பந்தல் தயாராகிறது |
![]() |
| பகவதி பிரதிஷ்டை வாளுடன் |
![]() |
| தூப தீப வழிபாடு |
![]() |
| பால மரக் கிளை பந்தலில் |
.
![]() |
| கேரளா ஸ்டைல்....! |














