புனைவு அல்ல நிஜம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவு அல்ல நிஜம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 மார்ச், 2012

ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும்.


                              ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும்
                             ---------------------------------------------------
                               ( நிஜமான கதை கற்பனை கலந்து.)
.
          தலைப்பைப் பார்த்துவிட்டு இது ஒரு நகைச்சுவைக் கதை என்று யாராவது நினைத்தால் அதற்கு இவன் பொறுப்பல்ல. இவர்களைப் பார்த்ததனால் வந்த ஒரு திடீர் உந்துதலே இதற்குக் காரணம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிறார்களே இவர்கள் வாழும் வாழ்க்கையா இது.? எப்படி முடியும்.? முடிகிறதே. .என்ன ரகசியம்..?

     மணிக்கு ஜாக்கி மணி என்று பெயர் கொடுத்தபோது, அவரது குடும்பப் பின்புலம்
தெரியாது. குதிரைப் பந்தயத்தில் குதிரை மீதமர்ந்து விரட்டும் ஜாக்கிகளைப் பார்த்தீர்களானால் ஒரு ஒற்றுமை புலப்படும்.அநேகமாக அனைவரும் குள்ளமாக இருப்பார்கள். மெலிந்திருப்பார்கள். அவர்களது எடை குதிரையின் வேகத்தைக் குறைக்கக் கூடாது என்ற அக்கறையே அம்மாதிரியான ஆட்களைக் பந்தயத்தில் குதிரை ஓட்டிகளாக பங்கேற்க வைக்கக் காரணம். ஆனால் ஜாக்கி மணி குதிரை ஓட்டுபவரல்ல. இவனோடு சேர்ந்து பணியாற்றியவர்.எப்பொழுதும் (புன்)நகை முகம். வாழ்க்கையை முழுதும் அனுபவிப்பவர் போல ஒரு தோற்றம். இவன் வீட்டுக்கு வருவார். நன்றாகப் பேசுவார். கலகலப்பாக இருப்பார். ஆனால் மறந்தும் கூட அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேச மாட்டார். ஒரு நாள் இவன் கேட்டே விட்டான்.

      என்ன மணி, ஒரு முறை என்னை உன் வீட்டுக்குக் கூப்பிட்டு ஒரு வாய் காப்பி தர மாட்டாயா.?”

      “ தந்தால் போச்சு.ஒரு முறை கூப்பிட்டால் மறு முறை கூப்பிடுவதையோ, வருவதையோ எதிர் பார்க்க மாட்டாயே என்றுதான் யோசிக்கிறேன்.”-மணி பேசும்போது சற்றே கண் கலங்கின மாதிரி இருந்தது. இவனுக்கு மணியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம். “ ஒரு முறைக் கூப்பிட்டால் மறுமுறை கூப்பிடாமலேயே வருவேனாக்கும்.”என்றான்.

        ஒன்றிரண்டு முறை இவன் வற்புறுத்தல் தாங்காமல் மணி இவனை வீட்டுக்கு அழைத்தார்.” மணி, நான் இதுவரை உன் பர்சனல் லைஃப் பற்றிக் கேட்டதுமில்லை. நீயும் சொன்னதும் இல்லை. இன்று கேட்கிறேன். சொல்லேன். “

       “ நீதான் வந்து பார்க்கப் போகிறாயே.எல்லாம் ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மணி.

      அலுவல் முடிந்ததும் ஒரு நாள் இவன் மணியுடன் அவர் வீட்டுக்குச் சென்றான். வெளியில் இருந்து பார்க்க சுமாராக இருந்தது வீடு. வீட்டில் போனதும் ஒரு வெராந்தா. தாண்டி நுழைந்தால் ஓரளவு பெரிய ஹால். ஹாலின் இரண்டு பக்கத்திலும் அறைகள்.. ஹாலை ஒட்டி உட்புறம் நடைவழியின் ஒரு புறம் சமையல் அறையும் மறுபுறம் குளியல் , டாய்லெட் அறை. ஹாலில் ஒரு திவான் இருந்தது. படுக்கையாகவும் உபயோகிப்பது போலிருந்தது. மற்றபடி மினிமம் தேவையான மேசை நாற்காலி இத்தியாதிப் பொருட்கள் தென்பட்டன. இவன் வீட்டுக்குள் நுழைந்ததும் இவனை எதிர்கொண்ட மாது, மணியின் மனைவி போல் தோன்றவில்லை. எதிர் பாராத ஒரு புது முகம் கண்ட திகைப்பு முகத்தில் தெரிந்தது.

      “ என் நண்பன். ஒரு காப்பி போட்டுத் தர முடியுமா.?”என்று பவ்யமாகக் கேட்டார் மணி. “கொஞ்சம் இருப்பா. எல்லோரையும் அறிமுகப் படுத்துகிறேன் “ என்றார்.

      சற்று நேரத்தில் காப்பி வந்தது. குடித்து முடிக்கும் வரை ஒன்றுமே பேசாமல் மௌனம் காத்த மணி, முடித்தவுடன் ஒரு FLOURISH-உடன், வேகத்துடன்.”ப்ளீஸ் மீட் மை ப்ரின்ஸ் சார்மிங் நம்பர் ஒன்.” என்று கூறி இடப்புறம் இருந்த அறைக் கதவைத் திறந்து, இவனை அழைத்தார். இவன் அங்கே கண்ட காட்சி இவனை விக்கித்து விட்டது.படுக்க வைத்த நெடுமரம் போல் ஒரு வாலிபன்,விழித்துக் கொண்டு படுத்துக் கிடந்தான். எந்தக் குறையும் காண முடியாத உடல் ஆரோக்கியம். ஆனால் உணர்ச்சியற்ற முகத்தில் கண்கள் மட்டும் இமைத்துக் கொண்டு இருந்தது. தவிர வேறு எந்த சலனமுமில்லை.

      இவன் கையைப் பிடித்துக்கொண்டு, வலப் புற அறைக்குக் கூட்டிச் சென்ற மணி,
“ஹியர் ஈஸ் மை ப்ரின்ஸ் சார்மிங் நம்பர் டூ” என்று காட்டினார். இவனுக்குக் கண்கள் குளமாகி விட்டது. அந்த அறையிலும் இன்னொரு வாலிபன் முன்னவனைப் போலவே படுத்துக் கிடந்தான். இவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.” என்ன மணி.? எப்படி இது.? உன்னால் எப்படி இப்படி இருக்க முடிகிறது.?” என்றெல்லாம் கேட்கத் தோன்றி, ஒன்றுமே கேட்க முடியாமல் வாயடைத்து நின்றான்.

    ” மை டியர் ஃப்ரெண்ட், இவர்கள் இரண்டு பேரும், ஆண்டவன் எனக்குக் கொடுத்த சொத்து. இரட்டையர்கள். ஒரேபோல் தோற்றம் மட்டுமல்ல, குறைபாடுகளும் ஒரே மாதிரிதான். இருபத்திரண்டு வயதாகிறது. இவர்களை ஐந்து வருடங்கள் வரை வளர்த்த என் மனைவி துக்கம் தாங்காமல் போய்விட்டாள். வீட்டோடு இருக்கும் இந்த அம்மாதான் ஒத்தாசையாய் இருக்கிறார். வேளா வேளைக்கு இவர்களுக்கு சமைத்து உணவு கொடுப்பது, இவரது வேலை. மற்ற தேவைகளை நான் காலையிலும், மாலையிலும் வந்து கவனித்துக் கொள்வேன். நீ எதற்கு கலங்குகிறாய்.? எனக்கு இது பழகி விட்டது. தெரிந்தோ தெரியாமலோ, இரண்டு உயிர்களுக்கு நான் பொறுப்பு. வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம் தவிர்க்கப் பட முடியாதவை அனுபவிக்கப் பட்டே ஆகவேண்டும் “


     அன்றைக்கு ஜாக்கி மணியால் ஏற்பட்ட தாக்கம்,  மறுபடியும் நினைவுக்கு வந்து இவனை கலங்க வைக்கிறது. காரணம் நேரில் இவன் கண்ட இன்னொரு அனுபவம். ஆனால் இப்போது காண்பது ஒரு பெண். ஜாக்கி மணிக்கு ஒரு பெயர் காரணம் இருந்ததுபோல் இந்தப் பெண்ணை கண்டதும் , இவன் வழக்கம்போல் ஒரு பெயர் சூட்டிவிட்டான். =பார்ப்பதற்கு மதமதவென்று இருந்தவளைக் கண்டதும் நினைவுக்கு வந்தது பந்தயக் குதிரையே. அதையே அடையாளப் பெயராகச் சூட்டிவிட்டான்.ஆனால் பின்னர் அறிமுகமாகி,அவள் கதையைக் கேட்டதும்,இவன் வாய்க் கொழுப்பிற்காக இவனையே கடிந்து கொண்டான்.பெயர் சூட்டுவதில் எந்த OFFENCE-ம் இருக்கவில்லை.சட்டென்று மனதில் தோன்றுவதுதான். இதில் இன்னொரு அட்வாண்டேஜ். இவர்களது உண்மை ஐடெண்டிடி காக்கப் படும். ஆனாலும் அப்படியே அழைப்பதற்கு மனம் இடங்கொடுக்காததால்,இனி அவளைப் பெண் என்றே இவன் குறிப்பிட முடிவெடுத்து விட்டான்.

      முதன் முதலில் காணும் யாரும் அந்தப் பெண்ணின் பின்னணியில் அப்படி ஒரு சோகம் இருக்கும் என்று நம்ப முடியாது. எப்போதும் சிரித்த முகம். எங்கு போவதானாலும் கூடவே ஒரு பையனும். அவள்து மகன்தான். அவனுக்கு இருபதிலிருந்து இருபத்திரண்டு வயதிருக்கும். பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம், ஏதோ ஒரு குறை இருக்கிறதென்று.. பேச்சு வராது. கண் பார்வை தீர்க்கமாய்த் தெரியாது. அவ்வப்போது வலிப்பு வந்து விடுமாம். தாயைப் பிரிந்து இருக்க மாட்டானாம். இவனுக்கு ஒரு அண்ணன். அவனும் குறைபாடு உள்ளவன்.பார்த்தால் எந்தக் குறையும் இருப்பது தெரியாது. அவனுக்கும் பேச்சு வராது. தம்பியைப் போல் நடக்கவும் முடியாது. சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்வானாம். இருவரும் ஒரு வித அமானுஷ்யக் குரல் எழுப்புவார்கள்.அந்தப் பெண்ணின் கணவர், வாரத்தில் ஒரு முறை வீட்டுக்கு வருவார்.ஞாயிறு காலை வந்தால், மாலையில் திரும்பி விடுவார். வீட்டில் தங்குவதே கிடையாதாம். ஏதோ பிசினஸ் செய்கிறார். பணி செய்யும் இடத்திலேயே இருந்து விடுவாராம். அந்தப் பெண்தான் வீடு குறித்த எல்லா வேலைகளுக்கும் பொறுப்பு. உடல் வளர்ச்சி உள்ள, ஆனால் மனம் வளராத, பேச முடியாத , நடக்க முடியாத பிள்ளைகள்.

      கணவனும் மனைவியும் சேர்ந்திருந்தால், இன்னும் இது மாதிரிக் குழந்தைகள் பிறந்து விடுமோ என்ற பயத்தில்,நெடுங்காலமாகப் பிரிந்து வாழும் தம்பதிகள்.சொந்தத் தாய் மாமனையே மணந்து கொண்ட அந்தப் பெண், கூடவே தன் பாட்டியும், மாமியாருமான மூதாட்டியையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

       எப்போதும் சிரித்து மகிழ்ச்சியாகக் காணும் அந்தப் பெண், ஒரு நாள் கண்ணீருடன் நின்றாள். விசாரித்தால், கணவனுக்கு ஒரு புறம் வசமில்லையாம். ஸ்ட்ரோக் என்று சொல்கிறார்களாம். இதைத்தான் பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்கிறார்களோ. ! வாழ்க்கை உறங்கிக் கனாக் காணும்போது, இன்ப மயமாகத் தெரிகிறது. விழித்து உணர்ந்தால் கடமைக் கடலாகத் தோன்றுகிறது.. இவனுக்கு அண்மையில் இதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்க முடியுமா என்ற அறியாமையில் பிறந்த ஆர்வமும் அச்சமும் எழுகிறது. யாரைக் குறை கூற முடியும். பதில் அறிய முடியாத கேள்விகள். இம்மாதிரி நிகழ்வுகளுக்கு உறவில் மணமுடிப்பது ஒரு காரணம் என்று கூறப் படுகிறது. ஆனால் நம் சமூகத்தில் காலங்காலமாக நடந்து வருவதுதானே இது..எல்லோரும் குறைபாட்டுடனா பிறக்கிறார்கள்.?

அன்று ஜாக்கி மணி கூறியது இவனுக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது. தவிர்க்கப் பட முடியாதவைகள் ,அனுபவிக்கப்பட்டே தீர வேண்டும். இருந்தாலும் கூடவே ஒரு சமாதானம். இதுவும் கடந்து போகும். எதுவும் கடந்து போகும். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்.
-----------------------------------------------------------------------------
(நெருடலான நிகழ்ச்சிகளை கூறியதால்,மனம் வாடுபவர்கள் சற்றே மகிழ )

   . 
.





    

     


-

திங்கள், 23 மே, 2011

இப்படியுமா.....? கதை அல்ல நிஜம்.

இப்படியுமா.....?  கதை அல்ல நிஜம்..
================================

       உறவுகள் பற்றியும், அதன் திரிபுகள்  பற்றியும் ,
       யார் யாரோ, என்னவெல்லாமோ எழுதி விட்டார்கள்.
       நானும் எழுதி இருக்கிறேன்.
 
உணர்வுகள் திரிந்து ஏற்படும் உறவுகள் -மனசாட்சி
துணையுடன் நியாயப்படுத்தப்படும் செயல்கள்,
நிகழ்வுகளைத் தடுக்க இயலாத ,காரணகாரியங்களை
அலசி ஆராயும் மனோபாவங்கள் எல்லாம் மீற

        எண்ணத்தறியில்  ஏதேதோ எண்ணங்கள் 
       முன்னுக்குப்பின் முரணாய்  முற்றும்  கற்பனையாய் 
       சில சமயம் பாழாய் பழம் பொய்யாய்,பகற்கனவாய், 
       சிலநேரம் எதிர்கொள்ள வொண்ணா சீற்றத்துடன் 
       நம்பவே முடியாத நிகழ்வுகள் கண் முன்னே விரிகிறது.

        உள்ளத்து உணர்ச்சிகளுக்கு, வார்த்தைகளில்
       உயிரூட்டினால் உண்மையில் ஜொலிக்கும்
       நிஜங்களில் கற்பனை கலந்தால்  வீரியம் குறைந்து,
       உண்மை நிலை மங்கிப் போகாதோ.

இதுவும் அயல்தேசத்தில் நடந்த இந்தியக் கதை அல்ல,
நிஜம்.உணரப்பட வேண்டிய உண்மைகள் இருப்பதால்
பகிர்ந்து  கொள்கிறேன்.

       மணம் முடித்து மனைவி குழந்தையுடன்
       வசிக்கும் தன் மகனைப் பார்க்கச் சென்ற
       பெரியவர் அவனைச் சிறையில் சந்தித்தார்.
       மாமனாரைப் பார்க்க மருமகள் விரும்பவில்லை.
       எங்களுக்குள் சிறு பிணக்கம், பெரிது படுத்த
       வேண்டாம், வெளியில் வருவேன் சடுதியில்
       கவலை வேண்டாம் என்று உறுதி அளித்த
       மகன் சொல் கேட்டு ஊர் திரும்பி வீடு
       சேரும் முன் வந்தது மகன் தன்னைத்தானே
       தூக்கிலிட்டு  மாய்த்துக் கொண்டான் என்ற
       பேரிடிச் செய்திஒன்று.

மறுபடியும் பறந்து சென்று, விசாரித்து அறிந்தால்
கிடைத்தது அதனினும் பெரிய பேரிடிச் செய்தி.

        பெற்ற மகளிடம் வன்புணர்ச்சி கொண்டான் கணவன்
        என்ற மனைவியின் வாக்குமூலம் பெற்றுத்தர
        இருக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்க அவன்
        தேர்ந்தெடுத்த வழியே தற்கொலை.
-----------------------------------------------------------------------
      

           ( வக்கிர உணர்வுகளின் எல்லை மீறிய வெளிப்பாடு 
                இப்படியுமா.. என்ற ஆதங்கத்தில் பகிர்ந்தது. )






..



,
      .