தாய்மொழிசில சந்தேகங்கள்
----------------------------------------
சென்றபதிவில் என் பதிவிற்காக என் ஒன்பது வயது பேரன் எழுதிக் கொடுத்த ஒரு
ஆங்கில சிறுகதை பதிவிட்டேன். அதற்கு பின்னூட்டமிட்ட சிலர் அவனுக்குத் தமிழ்போதிக்கும்படியும்
கூறினர். தாய்மொழி ஒருவனுக்கு அவசியம் தெரிந்திருக்கவேண்டும் என்பதில் எனக்கு
எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் ... ஒரு பெரிய்ய்ய்ய்ய ஆனால்...... எது தாய்மொழி
என்பதுதான் சிக்கல் விலாவரியாகக் கூறினால்தான் சிக்கல் புலப்படும். என் பேரப்
பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது அவர்களது தாய்மொழி மலையாளம் என்று
கொடுத்தனர். என் மகன்களிடம் கேட்ட போது அவர்களது தாயின் மொழி மலையாளம்தானே என்று
கூறினர். அதாவது தாய் பேசும் மொழி என்னும் பொருள் கொண்டிருந்தனர். சந்தேகத்துக்கு
இடமில்லாமல் என் தாய்மொழி தமிழ். நான் ஒரு மலையாளப் பெண்ணைத் திருமணம் செய்து
கொண்டாலும் வீட்டில் பேசும் மொழி தமிழே இருந்தது. என் மகன்கள் வளர்ந்து திருமணம்
செய்து கொண்டது மலையாளப் பெண்களையே. ஆனால் இவர்கள் தமிழிலும் அவர்கள் மலையாளத்திலும்
பேசுவார்கள் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்ததும் வீட்டில் இரு மொழி புழக்கம்
இருந்தது. பேரக் குழந்தைகள் தந்தையிடம் தமிழிலும் தாயிடம் மலையாளத்திலும் பேசுவது
பார்ப்போருக்குப் புதிதாய் இருந்தது. என் பிள்ளைகள் துவக்கத்தில் தமிழ் படித்து
வந்தனர். ஆனால் என் பணி மாற்றம் காரணமாக விஜயவாடாவில் ஹிந்தி பயிலத் தொடங்கினர்.
ஆக தமிழில் கஷ்டப் பட்டுப் படிக்க முடிந்தாலும் தேர்ச்சி பெற முடியவில்லை. என்
பேரக் குழந்தைகள் இரு மொழியிலும் நன்கு பேசக் கற்றாலும் எழுதப் படிக்க என்பது
ஆங்கிலம் ஆகி விட்டது நான் பேரக் குழந்தைகள் கட்டாயம் தமிழ் எழுதப் படிக்க வேண்டும்
என்று வற்புறுத்த முடியாது. அப்படிச்செய்தால் ஒரு வேளை மொழி வெறியன் என்னும் பெயர்
வரலாம் என் மகன்கள் தமிழ் ஆங்கிலம் மலையாளம் ஹிந்தி கன்னடம் தெலுங்கு என்று பல
மொழிகளில் சரளமாகப் பேசுவார்கள். என் பிள்ளைகளாவது தமிழைப் படிக்கவும் பேசவும்
கற்றிருக்கிறார்கள். ஆனால் என் பேரப் பிள்ளைகள் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழிகளையே
கற்கிறார்கள். எனக்குப் பல முறை சந்தேகம் வருவதுண்டு. தாய்மொழி என்பது வ்ளரும்போது
பழகும் மொழி என்றால் என் பேரக் குழந்தைகளின் தாய் மொழி ஏது. நிச்சயம் தாய் பேசும்
மொழி என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. இணையத்திலும் அகராதியிலும் அப்படிச்
சொல்லவில்லை
இம்மாதிரிக் குழந்தைகள் எந்த மொழி பேச வேண்டும் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தே
இருக்கிறது என் சின்ன பேரன் அவன் தாயிடம் அதிக நேரம் செலவு செய்வதால் ஓரளவு
மலையாளம் பேசுகிறான். தந்தையை விடுமுறை நாட்களில் பார்ப்பதோடு சரி. அவரோடு பேச
ஆங்கிலம் இருக்கிறது. தமிழில்தான் பேசவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது சரியல்ல
என்றே நினைக்கிறேன் மற்ற இரு பேரக் குழந்தைகளும் மும்மொழிகளிலும் உரைடாடுவதில் வல்லவர்கள்.
காலத்தின் கட்டாயத்துக்காக ஆங்கிலக் கல்வி பெறுகிறார்கள். நம் மொழியைப்
பயிலும் வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் என்னுடனே இருந்தால் நான்
அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க முயன்றிருக்கலாம் . //
( சென்ற பதிவில் ஒரு ஆங்கிலக்கவிதை பதிவிட்டு அதத் தமிழில் மொழி பெயர்க்கவோ மொழியாக்கம் செய்யவோ பதிவர்களிடம் வேண்டி இருந்தேன் ஆங்கிலத்தில் பட்டப் படிப்பும் முதுகலைப் படிப்பும் படித்தவ்ர்கள் என் தளத்துக்கு வருகை தருவதை நான் அறிவேன் நிச்சயம் மொழி வல்லுனர்கள் இருக்கிறார்கள். ஏன் தயங்குகிறார்கள் தெரியவில்லை.இதன் மூலம் மீண்டும் என் அழைப்பைப் புதுப்பிக்கிறேன்)