யாதுமாகி நின்றாய் (இது என் நூறாவது பதிவு.)
- --------------------------ஆண்டவனைக் கண் கொண்டு யாரும் கண்டதில்லை.
காண்ப தெல்லாம் அவரவர் கற்பனைத் திருவுருவே.
தூணிலும் துரும்பிலும் அண்டம் பேரண்டம் என
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அவனுக்கு ஓர்
உருவம் தருதல் முறையோ. .?
ஆத்தல் காத்தல் அழித்தல் என எல்லா
செயல்களும் ,யாரும் அறியாமல் புரியாமல்
நித்தம் நிகழ்தல் கண் கூடன்றோ..!
படைத்தவனே அவனைக் காண்பிக்க இயலாத
நிலையில் , பத்துமாதம் பாரம் சுமந்து, பாரினில்
பெற்றுப் போடும் அன்னையே மண் மீது
அவன் மறு உருவம் என்பாரே..!
அன்னையே, என் உயிரீந்து ,உடல் தந்த
அமுதமே, அம்மணியே , உன்னைக் கண்டுன்
அன்பில் திளைக்க எனக்கேன் தரவில்லை வரமே..
இருந்தாலென்...?
இல்லாத ஒன்றை இருப்பதாக பாவித்து,
இருக்கும் அனைத்தையும் மறுத்தலும்
மறத்தலும் சரியோ..?
பொன்காட்டும் நிறங்காட்டி,
மொழி பேசும் விழி காட்டி,
மின் காட்டும் இடை காட்டி,
முகில் காட்டும் குழல் காட்டி,
இசை காட்டும் மொழி காட்டி,
இணையவே என்னுடனே,
ஈன்றெடுத்த உன்னிலும் மேலாக,
நாளெல்லாம் பரிவுடன் பாங்குடன்
ஏழை எனை ஏற்றுக்கொண்ட
ஏந்திழையும் தாயுளம் கொண்டவளே.
இருக்கின்ற ஒரு மருந்தை அறியாமல்
இன்னலுற்றேன் இடர் படவேண்டும்..?
அருமருந்தே அன்னை என்றால்
அவதி போக்க வந்த இவளை என்
அன்னை எனக் கொளல் தவறோ. ?
அன்னை உனைத் தேடி நான் அலைந்தபோது,
சுந்தரி இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே ,
நிறுத்தினேன் இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.
!
!
யாதுமாகி நின்ற உன்னைத தாயுமாகக்
காணாது தாரமாக வந்தவளை நெஞ்சமெலாம்
நிரப்பி , என் சஞ்சலங்கள் நீக்கிய சேய் நான்.
பிள்ளையாய்ப் பிறந்து ,பாலனாய் வளர்ந்து,
காளையாய்க் காமுற்று, எனதவளைக் கைப்பிடித்து,
இளமை ஒழிந்து மூப்புறும் நிலையில்
எல்லாம் செத்து, நாளை எண்ணுகையில்
எனக்கு நானே அழாதிருக்க,
காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற புன்னகையால் ,
ஆறாத மனப் புண்ணின் அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையே,என்னை ஆட்கொள்ள
வேண்டும் தாயே ,எனை ஆளும் சமய புரத்தாளே. .
----------------------------------------------------------