வாழ்வியல்- அலசல்- கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வியல்- அலசல்- கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஜூன், 2011

உறவுகள்.

உறவுகள்   (தொடராக்கலாமே )
-------------

உறவுகளை கொஞ்சம் அலசவும் ,புரிந்து  கொள்ளவும், முடிந்தவரை 
விருப்பு  வெறுப்பின்றி எழுத  விரும்புகிறேன். எதை  எப்படி எழுத 
முயன்றாலும் ,என் அடிப்படை எண்ணங்களும்  குணங்களும் 
குறுக்கிடாது என்று உறுதியாகக் கூறமுடியாது. 

உறவுகளில் தலையாயது, தாய்__மகன், மகள் உறவுதான். தொப்புள் 
கொடி  உறவு உதிரம்  சம்பந்தப் பட்டது. அன்னையின்  வயிற்றில் 
சாதாரணமாக ஒன்பது மாதங்களுக்கும்  மேலாக உருவாகி வளர்ந்து 
வெளி வரும்போது, அதை வெளிக்கொணர ,அதில் அனுபவிக்கும் 
வேதனையும்,வெளிக்கொணர்ந்த பிறகு அனுபவிக்கும்  மகிழ்ச்சியும் 
என்னால் விவரிக்க முடியாது. ஏனெனில் நான் ஒரு ஆண் . கண்டதும் 
கேட்டதும் கூடவே இருந்து பங்கு கொண்டதிலும் அறிந்த மறக்க , 
மறுக்க முடியாத உண்மை.

 ஒரு சேய  கருவுருவதோ இந்த  உலகில் உதிப்பதோ திட்டமிட்டு 
செய்யப் படுவது அல்ல. தடுக்காமல் இருப்பதே திட்டமிடுதல்  என்றால் 
என்னிடம் பதிலில்லை. என்னைப் பொறுத்தவரை நாம் எல்லோரும் 
விபத்தின் விளைவுகளே. அறிந்தே விபத்து நடப்பதை தடுக்காததால்
தான் மக்கள் பெருக்கம் கூடுகிறது. அது  வேறு ஒரு தலைப்பு. அதை 
நான் விவாதிக்க வரவில்லை. 

தொப்புள் கொடி  உறவுக்கு உறுதுணையாய்  இருப்பவன் ,அந்தப் 
பெண்ணின் கணவன்,குழந்தைக்குத் தந்தை. பிறந்ததிலிருந்தே 
இவ்விருவரையும் சார்ந்தே (பெரும்பாலும் )வளரும் குழந்தை 
அவர்களிடம் அதிக ஈர்ப்பு கொண்டிருப்பது  இயற்கை. அவர்கள் 
இல்லாமல் குழந்தை இல்லை..ஆக, பிறந்த உடனே  சேய்,தன தாய் 
தந்தையரிடமிருந்து, அன்பை, பரிவை, ஆதரவை தன்னையறியாமலே 
எதிர்பார்க்கிறது..பெரும்பாலும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது. 

இந்த தாய் தந்தை -மக்கள்  உறவை ஒட்டியே மற்ற உறவுகள் அறியப்
படுகின்றன. இந்த தாய்,தந்தை ,மக்கள் உறவு நாட்பட, நாட்பட கிளை 
விட்டுப் பெருகி, பெரிய மரமாக உருவாகிறது. இந்த குடும்ப மரத்தின் 
அங்கத்தினர்கள்  ஆலின்  விழுதுகளுக்கு  ஒப்பாவார்கள். ஒவ்வொரு 
வரும்  ஒரு தனி மரமாக இல்லாமல் தோப்பாக மாறி கிளைவிட்டு ,
விழுதூன்றி, உறவுகளை பலப் படுத்த வேண்டும். 

ஆனால் தற்கால நிகழ்வுகளைப் பார்க்கும்போது, விதையிலிருந்து 
புறப்பட்ட செடி, மரமாகிக் கிளைவிட்டு ,கனி தந்து, பட்டுப்போனால் 
அந்தக் கனியிலிருந்து வேறு ஒரு மரமாக  உருவாகிவெவ்வேறு 
இடங்களில் மரமாக நிற்கின்றன. பழைய ஆலின் உதாரணம் 
எடுபடுவதில்லை. 

இந்த மாற்றத்துக்கு காரணங்கள்தான் என்ன.?உறவுகள் ஒட்டுதலும், 
பரிவும் இல்லாமல், தானுண்டு, தன சேயுண்டு, (கவனிக்க:சேய்கள் 
என்று சொல்லவில்லை நான். )என்று இருப்பதுதான். தற்காலத்திய 
குழந்தைகள் உறவு முறைகள் தெரியாமலே வளர்கின்றன.

மக்களும் ,விலங்குகளைப் போல்  மாக்களாக மாறிவருகிறார்கள். 
தன்னால் விளைந்த விபத்துக்கு மட்டுமே பொறுப்பேற்று ,அதையும் 
காலூன்றி நிற்கும் வரை பராமரித்து, விட்டு விடுகிறார்கள். உறவுகள் 
எல்லாமே எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைவதே இந்த நிலைக்கு
காரணம். உறவுகள் " ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோன் 
ஆக்குதல் தந்தைக்குக் கடனே "என்ற வகையில் மட்டுமே அனுஷ்டிக்கப் 
படுகின்றன. அதையும் மீறி, உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட்டு, உறவு 
கள் ஒன்றோடு ஒன்று அன்பினால் பிணைக்கப்பட்டு, பல்கிப் பெருகி 
கிளைவிட்டு, தோப்பாக இருந்த காலம் பழங்  கதையாய்ப் போய் 
விட்டதோ.?

வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்திருந்த காலத்தில் ஒட்டுதலும் 
உறவும் இறுகி இருந்தது. குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து 
இருந்ததில் மகிழ்ந்திருந்தது. அந்த நிலையை இன்றைக்கும் ஓரளவு 
கிராமங்களிலும், வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களிடமும் 
காணலாம். வாய்ப்பு தேடி நகரத்துக்கு வந்து தங்கள் வேர்களையே 
தொலைத்து நிற்கும் மக்களையே பெரும்பாலும் நகரங்களில் 
காண்கிறோம். இங்கெல்லாம் வாழ்க்கையில் உறவு முறைகளில்கூட 
வியாபாரத் தன்மை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. 
ஆங்கிலத்தில்  NO LUNCH IS FREE  என்றொரு சொல் வழக்கில் உண்டு .
எதைச் செய்தாலும் அதற்கு ஒரு விலை உண்டு :எதிர்பார்ப்புகளும் 
கூடவே வருவதுண்டு. போதாக்குறைக்கு மேற்கத்திய கலாச்சாரம் 
வேரூன்றி உறவின் உன்னதங்களை சீரழித்துவிட்டது. 

பெற்ற தாய் தந்தையரையே பேண முடியாமல் முதியோர் இல்லங்
களுக்கு அனுப்புவதை நியாயப் படுத்தவும் நிறைய பேர் இருக்கிறார்கள்
ஆண்-பெண் (கணவன் -மனைவி)உறவிலும் யார் பெரியவர் யார் 
சிறந்தவர், யாருக்கு யார் பணிந்து செல்வது போன்ற கேள்விகளும் 
சர்வ சாதாரணமாகி விட்டது. அன்பின் பால் கட்டுப்பட்டு இருக்கும் 
உறவில் விட்டுக் கொடுத்தல் தானாக வருவதனறோ.?

இன்றைய வாழ்க்கை முறையில் குறைந்த பட்ச வசதிகளுக்கு கணவன் 
மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றாகி விட்டது. 
இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு ஒருவர் ( அதிக பட்சம்  இருவர் )
என்ற எண்ணங்கள் தானாகவே வந்து விட்டது. இது தவிர வேறு 
அனைவரும் வேண்டாதவர்களே என்ற எண்ணம் அவர்கள் அறியாமலே 
மனதில் பதிந்து விடுகிறது.

எதையெல்லாமோ  தாண்டி, மீதமிருக்கும் உறவுகளை.,பெண்கள் 
ஓரளவுக்குப் பேணுகிறார்கள். ஆண்கள் உறவுகளைப் பேணுவதில்லை 
என்று சொல்வதைவிட  பேண முடிவதில்லை என்பதே உண்மை. கணவன் 
மனைவியின் உறவுகளில் மிகவும் அதிகமாக அறியப்படும் உறவு 
தாய் வழி உறவே.உறவுகளைப் பேணும் பெண்களைப் பெற்றெடுப்பதில் 
என்னதான் குறையோ.?பெண் சிசுக் கொலைகள் நிகழ்வது, மிகவும் 
தவறான ,அடிப்படை உண்மைகள் உணராத மக்களின் அறியாமையின் 
விளைவே. வயதான காலத்தில் மகன் பேணுவான் என்று எண்ணுவது 
தற்கால சூழ் நிலையில் சரியாகத் தோன்றவில்லை. 

ஒரு பெண்ணுக்கு தன வீட்டு உறவுகள் முக்கியமாகப் படுகிறது. அதுவும் 
ஓரளவுக்குச் சரிதானோ ! பெண் நாற்றங்காலைப்  போன்றவள் , வேறு 
ஒரு நிலத்தில் (  குடும்பத்தில் )விளைந்து பலன் கொடுப்பவள் என்பது 
இப்போதெல்லாம் வெறும் கதையாக உள்ளது. என்ன இருந்தாலும் 
கணவன் தேவை. அவன் உறவுகள்  தேவையா,?தன உதிரம்  சம்பந்தப்  
பட்ட உறவுகளிடம், ஒட்டுதல் இருப்பது சகஜந்தானே. ஆனால் நியாயமா 
என்று கணவன்  கேட்க முடியாது.. தன மனைவி தன தாயைப் போல் 
இருக்க வேண்டும் என்கிற  ஈடிபஸ்  காம்ப்ளெக்ஸ்  சாதாரணமாக 
அநேக ஆண்களுக்கு உண்டு. தாய் தனக்குத  தாலாட்டாகப் பாடிய ,
"  அத்தை வீட்டு வாசலிலே, நித்தம் நித்தம் போகாதே. --பழிகாரி அத்தை
அவள்  பாம்பெடுத்து மேலிடுவள்" போன்ற வரிகள் உணர்வுகளால் 
உந்தப்பட்டு வருவதே. எல்லோரும் தாலாட்டுக் கேட்டிருக்காவிட்டாலும் 
அதில் பொதிந்துள்ள கருத்துக்களை  உணர்த்தப் பட்டவர்களே. அது தன 
மனைவியிடமும் இருக்கும்போது கணவன் ஏதும் பேச முடியாதவன் 
ஆகிவிடுகிறான். வாழ்க்கையில் அமைதிக்காக ,நிம்மதிக்காக, பெற்றவரை 
விட்டுக் கொடுத்துப் போவதே உத்தமம்  என்று உணரத் துவங்குகிறான். .

சாதாரணமாக குழந்தைகளுக்கும்  தாய் வழி உறவே அதிகமாக அறிமுகம் 
செய்யப்படுகிறது.. மீறி தந்தை வழி உறவுகள்  அவர்களாகவே வந்து 
அன்பு செலுத்தினாலும்  வாய்ப்புக்கள் குறைக்கப் படுகின்றன. தாயின் 
அன்பும் அரவணைப்பும் HIGHLY POSESSIVE IN NATURE. பங்கு போட 
விரும்பாதது. அன்பென்ன பங்கு போட்டால் அளவில் குறையக் 
கூடியதா..?. அள்ள அள்ளக்  குறையாத அன்பினை வாரி வழங்கி 
அனைவரும் அன்பு மழையில் நனைந்து  உறவுகளைப் பேணிக் 
காப்போம். 
------------------------------------------------------------------------------------------
.  .                   ( எனக்குத் தெரியும். இதற்கு எதிர்மறை கருத்துக்கள் 

                         நிறையவே இருக்கும். வழக்கம்போல் என் கருத்துக்கள் 
                 
                         அநேகம் வாசகர்களை சிந்திக்கத் தூண்டும்  என்று 

                         நம்புகிறேன். இந்தத் தலைப்பில் இதை ஒரு தொடராக 

                          பலரும் எழுதினால் நலம் விளையும் என்று நம்புகிறேன். 

                          நானாக இன்னவர் எழுதலாம் என்று கூறுவதைவிட 

                          அவர்களாகவே பங்கு கொள்வது நன்றாயிருக்கும். 

                          ஆண்  பெண் இரு சாராரும் எழுதுவது பல கருத்துக்கள் 

                          வெளிவர உதவும். நன்றி. )
 


           





   












செவ்வாய், 31 மே, 2011

அறியாமை ..இருள்.

அறியாமை  இருள்.

              என்னுடைய விடியலுக்காகக் காத்திருக்கிறேன் என்ற
பதிவில்,விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும், விளங்கா நிலையில்,
என்றோ, எவனோ, வரைந்து முடித்துவிட்ட வட்டத்தின்
தொடக்கப் புள்ளி தேடி,நாம் ஏன் சோர்வுற வேண்டும்,
அறியாமை இருளில் இருப்பதே சுகம் என்று எழுதி இருந்தேன்..
அண்ட  வெளியின்  இருட்டின் வியாபிப்பும், அதில் ஒளி தருவதே
ஞாயிறின் ஜொலிப்பு என்றும், அறியாமையும் ,அவலங்களுமாய்
இருண்டிருக்கும் வாழ்வியலில், நம்பிக்கையே ஞாயிறின்  ஒளி
என்றும், அந்த ஞாயிறின் விடியலுக்காகக்  காத்திருக்கிறேன்
என்று ம் எழுதியிருந்தேன்.

           அப்படியே நான் எழுதி விட்டாலும், நம்பிக்கை என்று வரும்
போது, அது அறிவு சார்ந்த்ததாக இருக்க வேண்டும் என்பதில்
குறியாய் இருக்கிறேன்..அணு, அண்டம் அறிவியல் என்று ஒரு
பக்கம் எழுதியதைப் படிக்கும்போதும், ஒரு பக்கம் உருவமே
இல்லாத ஒன்றுக்கு ஆயிரம் உருவங்களும் ,நாமங்களும்
கொடுத்து, “ ஐயனே ,உம்முடைய அழகான பாதத்தை அர்ச்சித்து
இருப்பதும் நான் எப்போ.?”என்று  உள்ளத்தாலும், உதடுகளாலும்,
எழுத்துக்களாலும், ஏங்கிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும்போது,
இரண்டுக்கும்  பாலமாகப் பதிலாக, சாதாரணன் பகுத்தறிவின்படி,
ஒப்புக்கொள்ளும் படியான விளக்கங்கள் கிடைப்பதில்லை.
இல்லையென்றால் கிடைத்தவற்றைப் புரிந்து கொள்ளும் அறிவு
இருப்பதில்லை. நான் என்னைக் குறித்தே குறைபடுகிறேன்.

          அறியாத ஒன்றைப் பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம், அதே சமயம் எல்லாம் அறிந்துவிட்டதாகச் சிலர்
நம்பி உண்மையில் அந்த அறிவைத்தேடி, விளக்கில் மாயும்
விட்டில் பூச்சிகள் போல், ஏதும் அறியாமல் புரியாமல் சாதிக்காமல்
செத்து மடிவதைக் காணும்போது மனம் ஆயாசப்படுகிறது

            யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே, ஐயன் புகழ்
பாடு, என்று அறியாத ஒருவனுக்குள்ள ஆயிரம் நாமங்களில்,
சிலவற்றைப் பாடி, அவனுக்காக கற்பிக்கப்பட்ட ஆயிரம் கதை
களையும் அப்படியே உண்மை என்று நம்பி, நான் முன்பு கூறியபடி
அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பதே சுகம் என்று காலம் கடத்த
வேண்டும்..ஆனால் என் செய்ய.? என் பாழும் மனம் ஒப்புவதில்லை.

           நான் முன்பே ஒருமுறை எழுதியிருக்கிறேன்.கடவுள்களும்
அவர்களுக்கான உருவங்களும், கதைகளும் ,ஏதோ ஒரு
நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட புனைவுகளே.ஆனால்
ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் புனைவுகள் இந்தியத் துணை
கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக
உலவுவதுதான்.ஆதியிலிருந்தே மனிதன், தன்னைக் காத்துக்
கொள்ள, தன்னிலும் மேலான சக்தியிடம், தன்னை ஒப்படைத்து
இனி அவன் பாடு, என்று பொறுப்பை, விட்டுக்கொடுத்துவிட்டான்.
தன்னில் அடங்காத, தன் சக்திக்கும் மேலான, அதே சமயம் தன்
வாழ்வுக்கு இன்றியமையாத, பொருள்களுக்கு உருவகம் கொடுத்து,
அதையே வழிபட்டு நம்பிக்கையை வளர்த்து வருகிறான்.நீர், நிலம்
நெருப்பு, அண்டம் ,காற்று, என்பவற்றைக் கடவுளாக பாவிக்கத்
தொடங்கினான். விஞ்ஞானம் வளர வளர, அவையே மனிதனின்
உடலில் இருப்பவை என்று உணரத்துவங்கி, அதையே கடவுள்
உன்னில் உள்ளான் என்று மெய்ஞ்ஞானம்கூறுவதாக
எண்ணினால், ஏதோ புரிகிறது போல் தெரிகிறது.

        இதையே ஸ்ரீ நாராயணகுரு அவர்கள்கூறியது ,நான் படித்துப்
புரிந்து கொண்டபடிஆத்ம விடுதலைக்காக ஆண்டவனை                                            வேண்டும ஒருவன், அவனையே ஆராதிக்கலாம்  என்றும், ஒரு                 கடவுள்  சிலையோ ,ஆண்டவன் உருவப்படமோ உண்மையில்        அவனுடைய பிரதிபலிப்பே என்றும், நிலைககண்ணாடி முன்                         நின்று, அவனையே அர்ச்சித்துக் கொள்வதற்கு ஒப்பாகும் என்றும்                தேடுப வனும், தேடப்படுபவனும், ஒன்றாகிறான் என்றும்,         வேண்டுபவனும்  வேண்டப்படுபனும் ஐக்கிய
மாக வேண்டும் என்றும்  கூறுவார்.இதையே “அஹம்
ப்ரம்ஹாஸ்மி”என்று கூறுகிறார்கள் போலும்.

             ஆனால் இப்படி வழிபடுவது சாதாரணனுக்கு சாத்தியம்
இல்லையே. அவனுக்கு உருவம் வேண்டும், உருவகம்
வேண்டும், கதை வேண்டும் ,அதில் ஒன்றிக் கலக்க வேண்டும்.
ஆனால் கடைசி வரையில் பெரும்பாலும் உண்மை உணரப்
படாமலேயே போய் விடுகிறது.
        
              நம் முன்னோர்கள் கூறிவிட்டுச் சென்ற  கதைகள்
பொய்யா.?கதையை நடந்தவையாகப் பாவித்தால்தான்
நம்பிக்கை வரலாம். கதைகளின் நிகழ்ச்சிகளால் மனிதனின்,
வாழ்வியலுக்குத் தேவையான அனேக விஷயங்கள்
அறிவுறுத்தப் படுகின்றன.ஆனால் உண்மை நிலை என்ன.?
நாம் அந்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திடம் மயங்கி, அதனால்
சொல்லப்படும் கருத்துகளை மறந்து விடுகிறோம்.நமது
பதிவர்களின் ஒரு பதிவில், கதைகளின் கருத்தை மறந்து,
கருத்து சொல்பவர்களைப் பற்றிய கருத்துகளையே  உலாவ
விடுகிறார்கள் என்று படித்த நினைவு.
              என்னுடைய எண்ணங்களும், கேள்விகளும், ஏற்ற
தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை அபத்தமானதுஎன்பதும்
எனக்குத் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவிடை
இ ல்லாமல் மயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை நியதிகளுக்கு
விடை காண இயலுமா. ? “ பரித்ராணாய  ஸாதூனாம்
விநாசாய  ச துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே “ சாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுத ற்கும் யுகந்தோறும்
வந்துதிப்பேன்” என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
பகவான் கூறியது  உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார்  என்று

நம்பிக்கையோடு காத்திருக்க  வேண்டுமா.?

            எப்போதும்போல் என் சந்தேகங்கள் சில. 1). விலங்கு
களிலும், பறவைகளிலும் ஏழை பணக்காரன், படித்தவன்
படிக்காதவன், சாதி வேறு பாடுகள் இல்லையே.மனிதனுக்குள்
ஏன்.? 2).மனிதனுக்கு மட்டும்தான் பூர்வ ஜென்ம பலா பலனா.?

            தலைவிதி , பூர்வ ஜென்ம  பலன் இன்ன பிற போன்ற
விஷயங்கள் தலையைப் பிய்க்கின்றன. மறுபடியும்
தோன்றுகிறது.அறியாமை இருளில் இருப்பதே சுகமோ.?
================================================                                                                                                                                                              







    .