சனி, 30 அக்டோபர், 2010

VALAIPPOO PATHIVIL EN KURAIKAL

                                                வலைப்பூ  பதிவில்   என் குறைகள்                   

                 11-08-2010  தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான "வலைப்பூ  ..ஒரு
வாய்ப்பூ " என்ற கட்டுரையைப் படித்தவுடன் நாமும் ஒரு வலைப்பூவைத் துவக்கினால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. இளவயதில் என் சுய திருப்திக்காக   நிறையவே எழுதுவேன். பத்திரிகைகளில் பிரசுரிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.நாடகங்கள்  எழுதி இயக்கி நடிக்கும் ஆர்வமிருந்தது. ஐந்தாறு நாடகங்களை  மேடைஏற்றிய  அனுபவமும்  உண்டு. இந்தப்பின்னணியில்  என் எழுத்தார்வம் ஆனந்த விகடன்  கட்டுரையைப்  படித்தவுடன் வலைப்பூ துவங்கலாமா என்று சிந்திக்கசசெய்தது. கணினியில் மின்னஞ்சல் எழுத, படிக்க, மற்றும் சீட்டு விளையாடுவத என்ற அளவில் மட்டுமே என் அறிவு ,அனுபவம் இருந்தது. எனக்காக என் பேரன ஒரு வலைத்தளம் அமைத்துக்கொடுத்தான். முன்பின் வலைப்பூக்களையே  பார்த்திராத எனக்கு gmb writes என்ற தலைப்பும் வைத்துக் கொடுத்தான். என் முதல பதிவே அவனுக்கு நன்றி சொல்வதாக இருந்தது.
               நான் ஒரு வலைத்தளம் ஆரம்பித்து  எழுதினால்  படிப்பது யார். ? இப்படி ஒரு வலைத்தளம் இயங்குவதையே  யார்  அறிவார் ?என் உறவுகளுக்கு  தெரியப்படுததினால் ,தமிழில் படிக்கவும் ஆர்வம் காட்டவும் உள்ள உறவுகள் மிகச் சொற்பம் .என கனிடம் நான் இது பற்றிக் கூற, என்னையறிந்த  ஓரிருவர் எனக்கு உற்சாகமூட்டஎன் வலைப்பூவைப் படிப்பதாகவும்  அவனுக்கு வாக்களித்தனர். 
              இந்த நிலையில்  என் வலைப்பூவைத்  தமிழ்மணத்தில்  இணைக்க முயன்றேனநிறைய  முயற்சிகள்  தோல்வியடைந்தன.. தமிழ்மணத்தில்  இணைக்கும்  முறை தமிழில் இருந்ததாலும்  , எனக்குத் தெரிந்த  கணினி        அறிவுள்ளவர்களுக்குத தமிழ் ெரியாததாலும் (என் பேரன்  உட்பட ) ஆங்கிலத்தில் செய்முறை கேட்டு  எழுதிப் பெற்று  ஒரு வழியாக தமிழ்மணத்தில்  இணைத்தும்  விட்டேன். சரி ..! தமிழ்மணத்தில் நான் இடுகை இட்ட ஒரு நாள் மட்டுமே  என் வலைப்பூ இருக்கும் .கூடவே  முந்நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளும் இருக்கும். இந்நிலையில் நான் எழுதுவதை  யார்யார் படிப்பார்கள்  என்று எப்போதுமே எனக்கு ஒரு எண்ணம் உண்டு. இருந்தாலும்   என்  மகன்  மூலம் கணினி மூலம் மட்டுமே அறிமுகமான சித்திரன்  என்று அறியப்படும்  திரு. ரகுவும் திருமதி. ஷக்திப்பிரபா அவர்களும் என் பதிவுகளைப் படித்து என்னை உற்சாகப்படுத்துகின்றனர் ,மேலும் சில பின்னூட்டங்களைப் பார்க்கும்போது இன்னும் சிலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள்  என்று அறிய முடிகிறது. அவர்களுக்கெல்லாம்  என் நன்றி.
             நான் இந்தக்  கட்டுரையை  எழுதுவதன்  நோக்கமே, என் வலைப்பதிவுகளில்   என் எழுத்துக்கள்  மட்டுமே          ஈர்க்க  வேண்டும்  பெரும்பாலானவர்களின்வலைத்தளங்கள்  தோற்றப்பொலிவிலும்  கணினியை  உபயோகப்படுத்தும்  திறமை மற்றும் கணினி நுட்பங்களை கையாளும்  விதத்திலும்  எங்கோ இருக்கிறார்கள். தினம் தினம்  எத்தனைபேர்  உலகின்  எங்கெங்கிருந்து வலைப்பதிவுகளைப்  பார்க்கிறார்கள்
படிக்கிறார்கள் போன்ற செய்திகள் scroll  ஆவதும் பதிவுகளைத் தொடருபவர்கள்   யாரயார் என்ற விவரங்களும் , பதிவுகள் தமிழ்மணத்தில்  வரும்போதே நிறைய  மறுமொழி, பின்னூட்டங்களுடன்  பிரசுரமாவதும்  பிரமிப்பூட்டுகிறது. நான்  அந்த நிலையை இப்போது எனக்கு  இருக்கும் கணினி அறிவில்  எட்ட முடியுமா என்று தெரியவில்லை.
            நான் என் வலைப்பூவில் பதிவிடும்போது  இருக்கும் தோற்றம்  தமிழ்மணத்தில வெளிவரும்போது நிறையவே  மாறி வருகிறது. அதைப் பார்க்கும்போது  எழுத்தால ஈர்க்கப்படுபவர்கள்  கூட அது பிரசுரமாகும் குறையால்  படிக்காமல்  விட்டு  விடுவார்களோ  என்று தோன்றுகிறது.
           தமிழில்  எழுத்துப்பிழை  இல்லாமல் வெளியாக ஆங்கில  எழுத்துக்களை  கணினியில்  தட்டும்போது  நிறையவே சிரமப்பட வேண்டியுள்ளது. ஒரு சிறிய  பதிவை வெளியிட  சில சமயம் ஒரு நாளைக்கு  மேல் மேனக்கேடவேண்டி  இருக்கிறது.
           சுலபமான  முறையில் என் பதிவுகளை தோற்றத்தில்  மெருகேற்ற  ஏதாவத வழி       இருந்தால்   மற்ற  பதிவர்கள் ஆலோசனை  கூறலாம். பதிவுகளின்  தரத்துக்குநானே  பொறுப்பு. வலைப்பூ தொடங்கிய இரண்டு  மாதத்தில்  உற்சாகமூட்டும்  வகையில்  என்னை முற்றுமே  அறியாத சிலர் என்னை ஊக்குவிப்பது   திருப்திஅளிக்கிறது. 
          எழுதப்படும்  விஷயத்தில், தரத்தில், சிறப்பாக  செயலாற்ற முயற்சி  செய்ய ேண்டும். எனக்கு  எழுதுவதற்கு  நிறையவே  விஷயங்கள்  இருக்கின்றன. அதைபபடித்துப்  பகிர்ந்து  கொள்ள என் வாசகர் ட்டமும்  விரிவடையும்  என்று  நம்புகிறேன். 
                                         ----------------------- ------------------------ -- --------



  














    









சனி, 23 அக்டோபர், 2010

PATHIVARKALUKKU ORU VAENDUKOL.

                    பதிவர்களுக்கு   ஒரு  வேண்டுகோள்
                    ------------------------------------------------------
வலைப்பூக்களில்  எழுதப்படும்  எல்லாப்   பதிவுகளையும்
படிக்க  முடிவதில்லை. சில  தலைப்புகளைப்  பார்த்து  அதனால்
ஈர்க்கப்பட்டு  சில பதிவுகளைப்  படிக்கிறோம் .படிப்பவர்
கவனத்தை  ஈர்க்கும்  தலைப்புகளில்  எழுதப்பட்டிருக்கும்
பதிவுகள்  பதிவர்களின்  எண்ணங்களைப்  பிரதிபலிப்பதாக
கொள்ளலாம். பதிவர்கள்  தங்களுடைய  கருத்துகளுக்கு
எழுத்துருவம்  கொடுக்கும்போது  அவை  மற்றவர்களின்
மீதுள்ள வெறுப்பின்  வெளிப்பாடாகவோ ,மற்றவர்களின் மனதை   காயப்படுத்தும்
விதமாகவோ  இருக்க  வேண்டாமே ..! மாறு பட்ட கருத்துகள்  உலவ வருவது
சகஜமே.  கருத்துகளுடன்  முரண்படலாம்;  நம் கருத்துகளை   ஏற்காதவர்களை
இகழ  வேண்டாமே...! இகழ்ச்சிகளை  வெளிப்படுத்தவே  கருத்துகளைப்  பதிவு
செய்வதையும்   தவிர்க்கலாமே...!

சில  பதிவுகளைப்   படிக்கும்போது எவ்வளவு  குரோத  உணர்ச்சிகள்  எவ்வளவு கசப்பு
எண்ணங்கள் எவ்வளவு விரோத  மனப்பான்மை இருந்தால்  எழுத்துகள் இவ்வளவு  ஆக்ரோஷமாக  வெளிப்படும் என்பதை  நினைத்தால் வருத்தமாகவே  உள்ளது.

யாரும்  இவ்வுலகில்  விருப்பப்பட்டு  விதைக்கப்படவில்லை. பிறப்பொக்கும்  என்பது
சான்றோர்  வாக்கு .சகோதரத்துவமும்  நல்லிணக்கமும்  நடைமுறையில்  கொண்டு
வர எழுதுபவர்கள்   முயற்சிக்க  வேண்டும். நல்லது  எது, அல்லாதது எது, என்று
பகுத்தறியும்  அறிவு  வேண்டும். நல்லவை  அல்லாதவற்றை  முறைப்படுத்த  முயற்சி
செய்ய அறிவும்  சக்தியும்  வேண்டும்; அதுவும்  முடியவில்லை  என்றால்  இருப்பதை
ஏற்று அதற்கேற்ப வாழும்  மனநிலையை  வளர்க்க வேண்டும்.

ஜாதி ,இனம் ,மொழி , போன்றவை  உணர்ச்சிகளைத் தூண்டும்  விஷயங்கள்.. இவற்றைப்  பற்றி  எழுதும்போது  சம நிலையோடு , காய்தல் , உவத்தல்  அகற்றி
ஆய்தல்  செய்ய வேண்டும். காய்தல் மூலம் நல்லவைகள்  அறியப்படாமல்  போகலாம்
உவத்தலினால் மாற்றுக்  கருத்துகள்  வெளிப்படாமல்  போகலாம்

ஜாதியைப்  பற்றி  எழுதும் சில  பதிவுகளில்  பிராமணர்  மற்றும்  பிராமணர் அல்லாதவர்   என்று இரண்டே  ஜாதிகள்  இருப்பதுபோல  ஒரு மாயத்  தோற்றத்தைக்
காண  முடிகிறது. .வர்ணாசிரம  வழக்கப்படியான  பிரிவுகளை  பிறப்பால்  மட்டுமே
அடையாளம்  காட்டி  பேதப்படுத்துவது  இந்தக் காலத்தில்  முடியாத  காரியம்;  கூறப்
போனால் அறியாமையின்  விளைவேயாகும் .

பகுத்தறிவு  என்ற போர்வையில்  பிரித்தறிவதையே  அணுகு  முறையாகக்கொள்ளல்
தவறு.  எழுதுபவர்  எழுதுவதை  எல்லோரும்  ஏற்றுக்கொள்கிறார்களா  என்று ஒரு
கணம்  சிந்திக்கவேண்டும். மாற்றுக் கருத்துகளை  பிறர்  மனம்  புண்படாத  வகையில்
எழுதுவதே  நலம்  பயக்கும். அவரவர்க்கு  அவரவர்  நம்பிக்கை.

எழுதுபவர்களைப்  பற்றியும் அவர்களின்  பதிவுகளைப் பற்றியும் குறிப்பிட்டு  இங்கு
எழுதவில்லை. எழுதுகிறவர்களுக்கும்  படிக்கிறவர்களுக்கும்  புரிந்தால் சரி.
               ------------ --------------------------------------------- --------------------------------------------





  


















               

வெள்ளி, 22 அக்டோபர், 2010

KAITHTHALAM PATRA VAA


                        கைத்தலம்    பற்ற    வா.
                       --------------------------------------
பாவாடை   தாவணியில்   பதினாறு   வயசுப்   பாவை   நீ,
ஓரடி  ஈரடி  சீரடி  வைத்தென்முன் நாலடி  நடந்து  வர,
உன் வலை வீசும்  கண்கள்   கண்டு,
நாலாறு வயசு நிரம்பப்  பெறாத என்
மனசும்  அலைபாயும், மெய்  விதிர்க்கும் ,
வாய்  உலரும் , தட்டுத் தடுமாறும்   நெஞ்சும்.

ஆடிவரும்  தேரினை  யாரும்  காணாதிருக்க
செய்தல்  கூடுமோ ..?
அயலவர்  உன்னை    ஆராதிப்பதை
தடுக்கவும்  இயலுமோ ...?
எங்கும்  நிறைந்தவன் ஈசன்  என்றால்
என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ ...?
என்னுள் நிறைந்த உனை என் கண்ணுள் நிறுத்தி
நீ வரும் வழி நோக்கித  தவமிருக்கும்
நானும்  ஒரு   பித்தனன்றோ...?

யாருனைக்  காணினும்   யாதே  நேரினும் ,
நிலம்  நோக்கி  என் முன்னே  மட்டும்
என்கண்  நோக்கி என்னுள் பட்டாம்பூச்சி
பறக்கச்செய்யும்  வித்தை   அறிந்தவளே ...!

உன் விழி  பேசும்  மொழியறிந்து
உனைக் கண்ட   நாள்  முதல்  கணக்கிட்டு  விட்டேன்
எனக்கு  நீ , உனக்கு  நான் , எனவே ,
கைத்தலம்  பற்ற காலமும்  நேரமும்  குறித்து  விட்டேன், .
                              -----------------------------------


 
       
                      







                      



 








                                                                                                                           
       


   

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

MANASAATCHI-------------ORU SIRUKATHAI

                                           மனசாட்சி  -------  ஒரு   சிறுகதை
      அழகாக  உடுத்தி  இருந்தான் அவன் ;"ஸ்பாட் லெஸ் வைட்" தூய்மையான   வெண்மை. " போ  டை " அணிந்திருந்தான். விளம்பரங்களில்  வரும்  ஆண  மாடல்கள்  கெட்டனர். நல்ல  உயரம்;   உயரத்திற்கேற்ற   பருமன்; தன்னம்பிக்கை  மிகுந்த  நடை ;ஆனால் கண்களில்  மட்டும்  விவரிக்க  முடியாத  ஏதோ  ஒரு ஏக்கம் _ வெறும்  பிரமையாக  இருக்கலாம்.
      பொன்னிற  மேனி ; துடிதுடிக்கும்  அதரங்கள்; படபடக்கும்  இமைகள் ; வண்டாடும்  விழிகள்; கொடியிடை , மென்னடை; :"சிக்:" காக  உடை அணிந்திருந்தாள் . புன்னகைத்த  முகம் . இடை யிடையே இதழ்  விரியும்போது பளிச்சிட்டு  தெரிந்தன  முத்துப் பற்கள்
      மொத்தத்தில்  ரவி  ஒரு ஆணழகன் . மாலதி  ஒரு பெண்ணழகி  இருவரும்  அந்த டான்ஸ்  ஹாலில்தான்  சந்தித்துக்கொண்டனர் . முதல் சந்திப்பிலேயே  மாலதி தன  மனசை  முழுமையாக  அவனிடம்  பறி கொடுத்துவிட்டாள்
      துரித கதியில்   அடித்த "பீட்"டுக்கு  ஏற்ப  டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர். தனித்தனியே  ஆடாமல் ஓரத்திலேயே  நின்று கொண்டிருந்த  இருவரும்   ஒருவரை யொருவர்  நோக்கினர் .கண்ணசைவிலேயே  இசைவினை   உணர்ந்தனர் .அவன் அவளது  இடையைப  பற்றினான் .அவள்  அவன் மீது   கொடியென துவண்டாள் . நன்கு தேர்ச்சி  பெற்ற  பாதங்கள் மொசைக்  தரையில்   இசைக்கேற்ப  நழுவின. உடல்கள்  ஒன்றையொன்று  தழுவியது.
      " யூ  ஆர்   பியூட்டிபுல் "
      "ஒ,  யூ  ஆர்  மார்வலஸ் "
       கண்டு களித்ததிலும்  பேசி  மகிழ்ந்ததிலும்  கொண்ட  இன்ப  உணர்வு , உடற்சோர்வு
கொள்ளாமல்  தடுத்தது, ஆடினர் ஆடினர் விடாமல்  ஆடினர் , மேலும்  ஆடியிருப்பார்கள்  ஆட்டிப்  படைத்த  இசை மட்டும் தொடர்ந்திருந்தால் ,
       டான்ஸ் முடிந்ததும்   ஒருவரையொருவர்   பிடித்திருந்த   பிடியும்   நழுவியது.  நிலைத்திருக்கும்  அதே ஏக்கப்பார்வையுடன் --இதுவும் பிரமையோ? --ரவி  அவளைக்கண்டான்   அவளோ ஏதோ நினைத்துக்கொண்டவள்  போல திடீரென  சிரித்தாள். அந்தச் சிரிப்பில்   அவனும் கலந்துகொண்டான்.
        " ஒ,  மறந்து விட்டேனே,  ஐ  யாம்  மிஸ் . மாலதி,"
        " ஐ   யாம்   ரவி. "
        கை  குலுக்கல், அர்த்தமற்ற   சிரிப்பு,  அதே ஏக்கப் பார்வை.
        " பார்"  க்கு   போவோமே"
        பல நாள் பழகினவர்கள் போல கை கோர்த்துச் சென்றனர் .
       "வைன்?"
       " நோ  தாங்க்ஸ். சாப்ட்  டிரிங்க்ஸ். "
       பிறகு  பேசினார்கள்  பேசினார்கள்   என்னென்னவோ  பேசினார்கள்.  எதேச்சையாகப
பழக்கப்பட்டவர்கள்  அடிக்கடி  கண்டு களித்தனர். , கூடிக்  குலவினர்; தொட்டு  மகிழ்ந்தனர். மொத்தத்தில்  நிரந்தரமாக  இன்புற்றிருக்க  வென்றே  ஒருவரை ஒருவர்
நாடினர்.
       மாலதிக்கு  ரவியிடம்  காதல்  ஏற்பட்டு விட்டது. "எவ்வளவு  கண்ணியமானவன்,
எந்த நிலையிலும்   தன்னிலை  இழக்காத  உன்னத  புருஷன். மணந்தால்  இவரைத
தான்  மணக்கவேண்டும்"  கன்னியவள்  கற்பனையில்  சிறகடித்துப்  பறக்கத்   தொடங்கினாள்.
      மாற்றங்கள்   மாறி மாறி வரும் நிகழ்ச்சி  நிரலின்  மறு பெயர்தான்   வாழ்க்கை   என்றாலும்  அடிப்படை  எப்போதுமே  ஏமாற்றமாகத்தான்   இருக்க  வேண்டும்   என்பது
மட்டும்  என்ன  நியதி?  தனக்காகவே ஏங்கும்   ஒருத்தியும்   இல்லாமல்  போய
விடவில்லை . நிரந்தரமாக  நெஞ்சில்  குடி  கொண்டுள்ள  ஏக்கம்   தீராதா   என்ன? --இது
மட்டும் பிரமையல்ல.  ரவியும்  சிந்திக்கத்  தொடங்கினான்.
    " நம்  திருமணத்தைப்பற்றி   என்ன நினைக்கிறீர்கள்   ரவி?" - ஆரம்பத்திலிருந்தே    அறியத  துடித்ததை  கேட்டேவிட்டாள்   ஒரு நாள்.
     ரவிக்கு   நெஞ்சே  வாய்க்குள் வந்து  விடும்  போலிருந்தது. இந்தக் கேள்வியை   அவன்  எதிர்  பார்த்துத்தான்  இருந்தான்.. என்றாலும் அதற்கென்ன  பதில்  சொல்வது
என்பது  மட்டும் அவனால் முழுவதும்  சிந்திக்கப்படாமல்  இருந்தது,  மேலெழுந்தவாரியாக  கிளுகிளுப்பூட்டும்  அந்தக் கேள்வி அவனது நெஞ்சின்  அடித்
தளத்தில் நெருஞ்சி  முள்ளின் நெருடலைத்தான்  உண்டு  பண்ணியது.
      ஆவலோடு   தன்னையே  கண்ணிமைக்காமல்  நோக்கிக்கொண்டிருக்கும்  கன்னியிடம்  என்ன பதிலைக்  கூறுவது?  சமாளித்துப்  பார்க்கலாமே.
    " திருமணங்கள்  சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்படுகின்றன   மாலதி. மேலும்  நாம்   திரு
மணம் செய்து கொண்டு  ஆக வேண்டியதுதான்  என்ன?--அவனுக்கே  அவனுடைய  பதில்   உள்ளத்தைப் புண்  படுத்துவதாக  இருந்ததை  அவன்   உணர்ந்தான்.  மாலதியின்   கண்களில்  நீர்த்திரையிட்டது.
     " நீங்கள்  என்னைக் காதலிக்கவில்லை,  யு   டோன்ட்  லவ்  மீ,  நீங்கள் என்னை  
விரும்பவில்லை"
     " நீ  தவறாக எண்ணுகிறாய்  மாலதி.  திருமணம் என்பது ஒரு "லைசென்ஸ்"   கேவலம் மனிதர்களது அப்பட்டமான மிருக வெறியை , உடற்பசியைத தணித்துக்
கொள்ள  ஊருலகம் வழங்கும்  ஒரு "பெர்மிட்"  அது இருக்கிறது என்ற ஒரே காரணத்
துக்காக மனித நிலையிலிருந்து  மாறுகிறோம் . தூய அன்பு  புறக்கணிக்கப்படுகிறது.
நாம் பாவிகளாகிறோம்.  அது இல்லாமலேயே  நாம் அன்பில் இணைய  முடியாதா?".
    "ஆண்களுக்கு  அது சரியாகத் தோன்றலாம். கண்ணிறைந்த புருஷனுடன் --நீங்கள்
கூறும்  திருமண லைசன்ஸ்  பெற்று --கருத்தொருமித்து  வாழ்வதுதான்  பெண்களுக்கு
அணிகலன்.  அதை பாவச்செயலின்  வித்து என்று  குதர்க்கமாகக்  கூறுவது  வாழ்வின்
அடிப்படை  தத்துவத்திற்கே  விரோதமான பேச்சு ".
      பேச்சின்  போக்கே   ரவிக்கு  என்னவோ போல்  இருந்தது. ஆனால் ஒன்றை  மட்டும் நிச்சயமாக  தெரிந்து கொள்ள  விரும்பினான்.
      "திருமணத்தின்  முக்கிய  நோக்கமே  இருவருக்கும்  உள்ள  பரஸ்பர  அன்பினை
ஊருலகத்துக்கு  தெரியப் படுத்த வேண்டும்   என்பது மட்டுந்தானா?"
      " இதைப் புரிந்து  கொள்ள இவ்வளவு நேரமா  உங்களுக்கு?"
      " அதுவானால்  நான் திருமணத்துக்கு  உடன்படுகிறேன்.  ஐ  அக்ரீ. "
       ரவிக்கும்  மாலதிக்கும்  திருமணம் முடிந்தது .இருவரது  வாழ்விலும்  திருமணம்
வெறும்  உறவாகவே  மட்டும் அமைந்தது.  மற்றபடி  எல்லாம்   பழையபடிதான்
இருந்தது. ரவி  அதே  ஆணழகனாக, கண்ணியமுள்ளவனாக , கண்களில் ஏக்கம்
சற்றே  குறையப்பெற்றவனாக --இது பிரமையா?--தொடர்ந்திருந்தான்.  அடிக்கடி
"நான் மனிதனை மிருகமாக்கும்   உடலுறவை  வெறுக்கிறேன்"  என்றும் கூறி  வந்தான்
      வெறுக்கிறேன்  என்று அவ்வளவு  எளிதில் கூற முடிகிறதா?  அப்படியே  கூற
முடிந்தாலும் அது உண்மை  உள்ளத்து  பிரதிபலிப்பா?  வெறுமே உதட்டசைவின்
விளைவா?
       அது சரி .இந்த ஆராய்ச்சிகளெல்லாம்  எதற்கு?  பேரமைதி  என்றில்லாவிட்டாலும்
அமைதி  என்று  ஒப்புக்கொள்ளும்  அளவுக்கு  நிச்சலனமாக  இருந்த  வாழ்க்கை   நதியில்
சூறாவளியின்  கொந்தளிப்பு   குமிழியிடுகிறதோ  என்று மட்டும் அடிக்கடி  தோன்றும்.
       மாலதிக்கு  ஒன்றுமே  விளங்கவில்லை.  விளங்கியது  போலத் தோன்றினாலும்
உள்ளம்  ஒப்புக்கொள்ள வேண்டாத  ஒரு  வேதனை. மாலதி  மனம் வாடி இளைக்கத்
தொடங்கினாள் .
       குழந்தை  இல்லாத  குறைதான், ஏக்கம்தான்  இதற்குக்  காரணம். இது நீங்க  பிள்ளை  வரம்  வேண்டி , ஆலய தரிசனம்  செல்ல  அறிவுரையும்  வழங்கினர்  பெற்றோர்.
      " பிள்ளை பெற்றுத்தான்  தீரவேண்டும்  என்று அப்படி  என்ன   ஒரு கட்டாயம்?
அதற்கு  ஆலய தரிசனமாம், ஆண்டவன் வழிபாடாம்!  சில்லி !" ---ஒரேயடியாக    அடக்கி  விட்டான்  ரவி.
      சாதாரணமாகக்  கிடைக்கும்  பொருளை , நாமாக  வேண்டுமானால்  வேண்டாம்   என்றால்  ஒதுக்கலாம்; சஞ்சலமிருக்காது.  மணவினையின் இன்பங்கள்  தற்காலிகமாக
  நிறுத்தப்பட்டு  ஒதுக்கப்பட்டுள்ளன  என்றுதான் முதலில்  மாலதி நம்பினாள். ஆனால்
ஆனால்  அதுவே தொடர்ந்து  அரிதாகவே இருப்பதை  உணர்ந்த போது ஏக்கம்
ஏமாற்றம் பதின்மடன்காக  இருப்பதை   அறிந்தாள். .
       ரவி  இன்றைய  நாகரிகத்தின்  வாரிசாக  இருக்கலாம், பொருளாதார  முறையில்
தரம்  தெரிந்தவனாக  இருக்கலாம், ; ஆணும் பெண்ணும்  சமம் என்று  உணர்ந்தவனாக
இருக்கலாம்; இருந்தாலும் அவனும் ஒரு சாதாரண மனிதன்தான். மாலதி  தன்னிடம்
இருந்து விலகிச் செல்வதை  உணர்ந்தான். காரணம் தெரிந்தாலும் அதை நீக்க  வழி
தெரியாமல் --தெரியாமலென்ன? --முடியாமல் வேதனைப் பட்டான்.
        நாளாக ஆக ஏக்கமும் தாபமும் அதிகரித்தது. பலர் முன்னிலையில் வெளியிடப்
படாத ஏக்க உணர்ச்சி  சாசுவதமாக  முகத்தில் தெரியும்  அளவுக்கு  இருவரும் மனம்
வேதனைப்பட்டனர்.
        ஒரு நாள் " மாலதி டியர், இந்த மாதிரி  வருந்திக்கொண்டும் ஏங்கிக்கொண்டும்
இருப்பதில்  பயனில்லை.  பிள்ளைச் செல்வம்  வேண்டும் என்ற ஆசை  உனக்கிருக்கும்
அளவுக்கு எனக்கும்  உள்ளது.  ஒரு படி மேலாகவே உள்ளது என்று  வேண்டுமா    
னாலும் சொல்வேன். காரணம் நான்  ஒரு ஆண்பிள்ளை.  என்  ஆண்மை,  என் வீரியம்
ச்சே ....! மாலதி என் மனசே வெடித்துவிடும்  போலிருக்கிறது.  கையாலாகாதவன்
என்று என்னை  வெறுக்கிறாயா  மாலு ?--சொல்லப்படாமல்  நினைக்கப்பட்டே  வந்த
எண்ணங்கள்  கூறப்பட்டு  விட்டன.
        அழகன் ,வலியவன் போல்  தோன்றிய  ரவி  மாலதிக்கு  அரை நொடியில்  ஒரு பேடி  போல்  காட்சியளித்தான்  அந்த வினாடியில்  அடி  வயிற்றிலிருந்து  குமட்டிக்கொண்டும்
வந்தது. அவளுக்கு. .ஆண   ஆணாக  உள்ள வரையில்  எது நேர்ந்தாலும்  எதிர்த்துப்
போராடும்  மன வலிமை பெண்களுக்கு  உண்டு. ஆனால் நிலைமை  மாறினால்.....?
பெண்ணே  ஆணுக்கு ஆறுதல் கூறவோ ,கொண்டு நடத்தவோ வேண்டிய  குணம்
கொள்ள  வேண்டும்  என்றால்.....?அகிலமே  அப்படி மாறுகிறது  என்றால் ....? பூமி
தாங்காது.  ! வெறுமே  வெடித்துவிடும் ....!
       ஆத்திரம் ,வெறுப்பு, பச்சாத்தாபம், ஆகிய உணர்ச்சிகள்   மாலதிக்கு மாறிமாறி
வந்தன. முதன்முதலாக  ரவியிடம் மதிப்பு குறைவதையும் உணர்ந்தாள். ரவிக்கு
மாலதி அவனை நன்றாகப்  புரிந்து  கொள்ள வேண்டும் என்ற  எண்ணம்; மாலதிக்கோ
அவன்  இரக்கம் நாடுகிறான்  என்று  உணர்ந்ததும்  ஒரு வித  தலைக்கனம்;  அவனிடம்
இல்லாத ஒன்று  தன்னிடம்  இருப்பதைப்போல்  ஒரு எண்ணம்  மின்னல் காட்டி
மறைந்தது.
        "இப்போது  வெறுத்து  என்ன பயன் ...?"
        " அப்படியானால்   யு  ஹெட்  மீ.....?:
        "  அதை  சொல்லித்தான்  தெரிய  விடுமா.?என்ன இருந்தென்ன  ? வாழ்க்கையை
ருசிக்க  முடியாத  அளவுக்கு  வெறுத்து விட்டது. "
        " குழந்தை  இல்லாத  ஏக்கம்  உன்னை  வெகுவாக பாதித்து விட்டது. என்ன   பேசு
கிறோம்  என்றே புரியாத அளவுக்கு  உன்  கண்ணையும்  பகுத்தறிவையும்  மறைக்கிறது. ."
        " ஷட்  அப் ..! குழந்தை இல்லாத ஏக்கமாம்   மண்ணாங்கட்டியாம் .! ஒரு உண்மையான  ஆணோடு  வாழ்ந்தால்  குழந்தை ஏன் பிறக்காது..? யு  ஆர்  இம்போடேன்ட் .! ஐ  ஹேட் யு..! உங்களை  நான் வெறுக்கிறேன். .! இங்கிருந்து  போய
விடுங்கள். ..!"
        சும்மா  கிடந்த சங்கை  ஊதிக்கெடுத்தானாம்.  ஒ ..அதுதான் விஷயம். குழந்தை
இல்லாத ஏக்கம்  என்பது எல்லாம் போலி .வாழ்க்கையை  ருசிக்க முடிய வில்லையே
என்ற  ஏக்கம்தான்  காரணமா..?பாவி,  பிள்ளை  இல்லா ஏக்கத்தால்   பரிதவிக்கிறாள்
என்று  பச்சாதாபப்   பட்டால் ...என் மீதே  சாடுகிறாளே...! அவளைச் சொல்லியும்
குற்றமில்லை. அவள்  கூறியது அத்தனையும்  உண்மைதானே...வேறு  எந்தப் பெண்ணோடு  நான்  வாழ்ந்தாலும் இதே  கதைதான். ஆனால்..... அவள் ....?
        முதன் முதலாக  ரவிக்கு தன  இதயத்தில் ஒரு விரிசல்  கண்டுவிட்ட  உணர்ச்சி.
தன மீதே வெறுப்பு நஞ்சு  போல் கலந்து  பரவத்தொடங்கியது. .திடீரென்று  சுவற்றில்
மண்டையை  மோதிக்கொள்ளத  தொடங்கினான். . கையாலாகாத்தனம்  மீறும்  போது
தன்னையே  வருத்திக்கொள்வதில் கொஞ்சமாவது  நிம்மதி  தோன்றுகிறதோ  என்னவோ ..
        ஆண்மையின்மை   என்ற உண்மையை மீறி  ஆலய தரிசனங்களும்  ஆண்டவன்
வழிபாடுகளும்  பிள்ளை பெறச்செய்து  விடுமா..?பிள்ளைத்தவமாவது ஒன்றாவது.. .!
எல்லாமே  வாழ்க்கையை வாழ்கிறோம்  என்று நிரூபிக்கத்தானே  என்ற விதத்தில்
சற்று  முன்புதானே  உணர்த்தினாள் .. அப்படிஎன்றால்  வாழ்க்கையை நாங்கள்  அனு
பவித்து வாழ வில்லை என்ற உண்மை  எல்லோருக்கும்  தெரிந்து  விடுமா...?என்னுடைய  இயலாமை  வெட்ட வெளிச்சமாகி  விடுமா...?என்னால் தாங்க  முடியாது .. இது நடக்கக்கூடாது ..
        " வீடு   வரை  உறவு....! வீதி  வரை  மனைவி ...!
          காடு   வரை  பிள்ளை...! கடைசி  வரை  யாரோ...!"
         தெருக்கோடியில்  ரெக்கார்டு  அலறிக்கொண்டிருந்தது , நாராசம்  போல்  காதில்
விழுந்தது. சுவற்றில்  மோதிய தலை   விண் விண் என்று வலிக்கத்தொடங்கியது.
"கடக்.  கடக் " வீட்டுக்  கூரையிலிருந்து  சப்தம்.  அண்ணாந்து  நோக்கினான். . ஓடியது
ஒரு பல்லி..எதிர் கொண்டழைத்தது  இன்னொன்று. . ஒரு  வினாடி வாலைத்தூக்கி
போருக்கு  ஆயத்தம்  செய்வது போல் நின்றது  ஒன்று.  அழைப்பை  உணர்ந்தது 
மற்றொன்று .அருகில்  சென்றது  முதலாவது. .அணைப்பில்  தம்மை  மறந்தன  இரண்டும் .இவற்றுக்கல்லவா  குடும்பக்  கட்டுப்பாடு  வேண்டும்....!
சன்னல் வழியே  நோக்கினான் .ஒரு நாயைத் தொடர்ந்து  பல நாய்கள் .ஒன்று மட்டும்
அடுத்து  ஓடியது. மற்றவை  தொடர்ந்தன. .ஓட்டம் .. ஓட்டம்   அப்படி ஒரு ஓட்டம்.
வாழ்க்கையை  அனுபவிக்க நாய்களுக்கு  உள்ளேயே  அப்படி  ஒரு  ஓட்டம்  என்றால் ..
         "எண்ணித்  துணிக கருமம்...!" என்றார   வள்ளுவர்.  எண்ணாமலேயே  துணிந்து
விட்டான் ரவி. உண்மையில்  எண்ணாமலேயே  துணிந்து  விட்டானா..? சூனியத்தில்
நிலைத்த  பார்வையில்   ஒரு சின்ன ஒளி..." ஆம்.. அதுதான்  சரி..!: என்ன இது..?     .
ஞானோதயம்  பிறந்து   விட்டதா  இவனுக்கு..?
         " மாலதி..! விரும்பியோ  விரும்பாமலோ நாம்  மணந்து இதுவரை  சேர்ந்தும்
வாழ்ந்தாகி விட்டது. உனக்கு  என்மேல் வெறுப்பேற்பட்டுப்   பலனில்லை.  ஒரு சமயம்
நாம் விவாகரத்து  செய்து  கொள்ளலாம். .இந்த சமுதாயத்தில்  நான் விரும்பினால்
மறுமணம்  புரிந்து  வாழலாம். என் சக்தி  எனக்குத்  தெரிந்து மறுபடியும்  நான்  மணப்பது  என்று  நினைத்தாலே அது பைத்தியக்காரத்தனம் . ஆனால்  நீ...? என்னதான்
இந்த சமூகம்  முன்னேறி  இருப்பது  போலத் தோன்றினாலும் , ஏற்கெனவே  மணந்த
ஒரு பெண்ணை  மறுமணம்  செய்து வாழ்வளிக்கக்  கூடியவர்  இந்த நாட்டில் மிகக்
குறைவு. மணம செய்யாமல் , கட்டுக்கடங்காமல்  பெண்மையைப்  புணர  வேண்டு
மானால்  ஆயிரமாயிரம்  பேர்க்  கிடைப்பார்கள். இதை  நீ விரும்ப  மாட்டாய். .உன்னை
போலுள்ள எவரும்  விரும்ப முடியாது. அதனால்  டிவோர்ஸ்  என்பது  அவுட்  ஆப
க்வெஸ்டின் .என்னோடு  வாழ்ந்தே , என் மனைவி என்ற ஸ்தானத்தில்  இருந்தே
 நீ வாழ்க்கையை  அனுபவிக்க முடிந்தால்..., ஐ  ஆம்  அஷேம்ட்  டுசே (I am ashamed to say)
சொல்வதற்கே  வெட்கப்படுகிறேன் ...=- எனக்கு ஆட்சேபணை இல்லை, நீ அனுபவிக்கலாம் . என் மனசாட்சிக்கு  விரோதமில்லாமல் நான் கூறுவதை  நீ  எப்படி
வரவேற்பாயோ , என்ன எண்ணுவாயோ எனக்குத் தெரியாது. "
        இரத்த  நாளங்கள்  புடைக்க , உணர்ச்சிப்  பெருக்கீட்டினால் , ஒரே  மூச்சில்  கூறிய
ரவியை  ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் அருவருப்போடு  பார்த்தாள் மாலதி. ஆனால்
அவன் கூறியவற்றின்  சாராம்சம்  சம்மட்டி கொண்டு  அடித்ததுபோல்  தலைக்கேறியது .
        "ப்ளீஸ்   லீவ்  மீ  எலோன் .என்னைத  துன்புறுத்தாதீர்கள் , என்னை நிம்மதியாக
இருக்க  விடுங்கள் .
         ஸ்டாண்டில்  கிடந்த கோட்டை  எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டான். சற்றே
அவளைத் தலை தூக்கிப் பார்த்தான். ஆயிரம் கதைகள்  கூறி இருக்கும்  அந்தப் பார்வை
என்று வேண்டுமானாலும்  கூறலாம்; இல்லை அர்த்தமற்ற சூனியப் பார்வை  என்று
வேண்டுமானாலும் கொள்ளலாம். .ரவி சென்று  விட்டான். விரக்தியே  மனித  உருக்
கொண்டு செல்வது போல அவன் போவதையே  மாலதி  கண்டாள்.
         இருந்த  நிலை உணர இரண்டு  மணி நேரம்  பிடித்தது. உணர்ந்ததும் தன்னை
சுதாரித்துக்கொள்ள  இரண்டே  விநாடிகள்தான் பிடித்தது அவளுக்கு. உடனே  அவள்
காலேஜ் "பாய்  பிரெண்ட்ஸ் "ஒவ்வொருவர்  முகமும்  அவள் அகத்தில்  திரையிடப்
பட்டு காட்டப்பட்டது. கூடவே  ரவியின்  நண்பர்  சிலரும்  அவள் மனத்திரையில்
தோன்றினர் .அகம் சிறிதே  மலர்ந்திருக்க  வேண்டும். . ஒரு சிறிய  கீற்றுப்போல்
புன்னகை  இதழ்  ஓரங்களில்  நெளிந்தது.
        சொன்னபடியே  நடந்தும்  காட்டினான் ரவி. தன  நண்பர்களை வீட்டிற்கு  அடிக்கடி
வரவழைத்தான்   மாலதியோடு  கலந்துற வாட  வாய்ப்புக்கள்  ஏற்படுத்திக்கொடுத்
தான்.  "நாகரிக  சொசைட்டி"  அல்லவா...? கண்முன்  நடப்பவற்றை காணாததுபோல்
இருக்கவும் முடியும்  என்று  எண்ணினான். ஆனால் அவன்  எதிர்பார்த்த  அளவுக்கு
எதுவும்  நடக்கவில்லை. மாற்றான் மனைவி என்ற முறையில் வந்தவர்கள்  ஒரு
வரம்புக்குள்தான்  பழகவும் செய்தனர். ரவிக்கு  மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவன்
கவலை  அவனுடைய  இயலாமை  எங்கே மற்றவர்களுக்கு  தெரிந்து விடுமோ  என்பது
தான். அப்படித் தெரியாமலிருக்கச் செய்ய  எதையும் செய்யத் துடித்தான் ரவி.
         அவனுடைய போக்கில்  கண்ட  மாற்றத்தைக் கண்டும்  காணாததுபோல்  இருக்க
முயன்றாள் மாலதி. மேலும்  என் மனைவி என்ற ஸ்தானத்திலிருந்து  உனக்குத
தோன்றுகின்ற  முறையில் வாழ்க்கையை  நீ  அனுபவி  என்று ரவி கூறியதன்  அர்த்த
மும்  விளங்கியும்  விளங்காதது போலவே  இருந்தது.
         " மனசாட்சிக்கு  விரோதமில்லாமல்  கூறுகிறாராம் ..! மனசாட்சிதான்  என்ன..?
கொண்ட  கொள்கைகளின்  மேல், எண்ணத்தின் மேல்  இருக்கும் அசையாத  நம்பிக்கையின்  நிரந்தரமான  சாசுவதத்  தன்மையைக் குறிப்பிடுவது  அல்லவா..?அப்படியானால்  கொள்கைகள் அல்லது  எண்ணங்கள் ---அவைகள்  சரியாகவும்   இருக்
கலாம்  தவறாகவும் இருக்கலாம்--- காரணமாக எழும் செயல்கள்  மனசாட்சியின் பிரதி
பலிப்பாகும்  அல்லவா...? அதாவது செய்யும்  எல்லா செயல்களுக்கும்  காரணங்காட்டி
தெளிவு படுத்தி  ஏதாவது  ஒரு  கோணத்தில்  இருந்தாவது  மனசாட்சிக்கு  விரோத
மில்லாதது என்று நிரூபிக்க  முடியும்....!"
        தர்க்க  குதர்க்க வாதங்களின்  மூலம் தன்னையே  தேற்றிகொள்ளவோ   இல்லை
மாற்றிகொள்ளவோ மாலதி  மிகவும் சிரமப்பட்டாள்.  தானாக  முன்னின்று  இன்னபடி
செய்யலாம்,  இன்னபடி  வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று தலைமை  தாங்கி
நடத்தும்  அளவுக்கு பக்குவம் அவளுக்கு  ஏற்பட  வில்லை. என்றாலும் காலவெள்ளத்
தின்  சுழற்சியில்  அடித்துச் செல்லப்பட்டால்  சந்தர்ப்பங்கள்  சரியாக  வாய்த்தால் எதிர்த்துப்  போராடாமல்  அனுபவிக்க  வேண்டிய  அளவுக்கு தன்னைத் தானே   தயார்
செய்து  கொண்டாள். எதற்கும்தான்  சமாதானம்  கற்பித்துக் கொள்ளலாமே                        
        சந்தர்ப்பங்களை மறைமுகமாக  ஏற்படுத்திக்  கொடுத்தாலும் அவற்றை  பற்றிக்
கொண்டு செயலாற்ற  யாரும் முன்  வராத  நிலையில் ரவி  நேரடி  தாக்குதலில்
இறங்கினான்.. உற்ற  நண்பன்  சேகரிடம்  மனந்திறந்து  கொட்டி விட்டான்  எல்லா
வற்றையும்  ஒரு நாள்.
       " எனக்கு  வேண்டியது  ஒரு குழந்தை சேகர். . என் மனைவிக்குப  பிறந்தாக  வேண்டும் .என்  ஆண்மையின்மை   யாருக்கும்  தெரியக்கூடாது. எங்கே  மாலதி  காட்டி
கொடுத்து  விடுவாளோ  என்று பயமாக  இருக்கிறது.  வில்  யு  ப்ளீஸ்  ஹெல்ப்  மீ  அவுட் ...?எனக்கு நீ  உதவுவாயா  சேகர்....?
          இந்த  உலகம் கரும்பு  தின்னக் கூலியா  கேட்கும்...?வலிய வருவதை  விரும்பி
அனுபவித்தான்  சேகர். மாலதியும் மனசாட்சியின்  துணையோடு   வாழ்க்கையை
அனுபவித்தாள்.  ஆண பெண்  புணர்ச்சியில் விளையும்  விபத்தும்  நேர்ந்தது. . மாலதி
கருவுற்றாள் .
         ஆரம்பத்தில்  மகிழ்ந்த  ரவியும்  நாளா வட்டத்தில் எதையோ  பறி கொடுத்த  ஏக்கம் தன்னை  வாட்டுவதை  உணர்ந்தான். என்ன இருந்தாலும் அவன்  ஒரு ஆண
மகனல்லவா..? ஆண்டவனே  தனக்கு துரோகம்  செய்து விட்டது போல் வெதும்பினான் ,உடல்  நலிந்தான்;  உள்ளம்  குமைந்தான் . மொத்தத்தில்  வாழ்வில்
இருந்த பிடிப்பையே  விட்டொழித்தான். நடை  பிணமானான். ஒரு நாள் அவனுக்கு
சித்தம்  கலங்கி  பைத்தியமே  பிடித்து  விட்டது.
         " நான் ஒரு ஆண்பிள்ளை.  என் மனைவி  கருவுற்றிருக்கிறாள் . எனக்கு  குழந்தை
பிறக்கப் போகிறது.....ஹா ...ஹா.. ஹா.. நான் ஒரு  ஆண்பிள்ளை. " என்று கத்தவும்
தொடங்கி  விட்டான்.
          இதுகாறும்  தன்னோடு  ஒத்து  வந்த  மனசாட்சி  திடீரென்று  கட்சி  மாறி  விட்டதை  மாலதி உணர  ஆரம்பித்தாள். ஆரம்பத்தில்  சரிகட்ட  முயன்றாள். முயல
முயல அது அவளை மூர்க்கமாக  எதிர்த்துச் சாடியது. .தன வயிற்றில்  உள்ள  கருவின்  அசைவினை  உணரும்போதேல்லாம்  தன உடல் சில்லிடுவதைப்போல்  உறைவதை
உணர்வாள். கற்பு  நெறி  பற்றி  கட்சி சார்பற்ற  உண்மைகளை  எண்ணி அலசுவாள்.
எப்படி முயன்றாலும் அவளால்  அவளையே  சமாதானப்  படுத்திக்கொள்ள  முடிய
வில்லை. மனதின் அடித்தளத்தில்  எங்கோ  ஒரு மூலையில் ஒரு சிவப்பு  ஒளி   முணுக்  முணுக் கென்று  தோன்ற  ஆரம்பித்து  சற்றைக்கெல்லாம்   பூதாகாரமாக
"நீ ஒரு  பாவத்தின்  சின்னத்தை தாங்கிக்  கொண்டிருக்கிறாய். .நீ ஒரு  பாவி.  பழிகாரி "
என்று ஒளி போட்டு---- சிவப்பு  ஒளிதான் --- பிரகாசிக்கவும்  தொடங்கியது. மாலதிக்கு
நிலை கொள்ளவில்லை. .ஆயிரம்  யானைகள் நெஞ்சில்  ஏறி  மிதிப்பதுபோல்  இருந்தது
          கண்  நிறைந்த  கணவன்,கருத்திழந்து  பித்துப் பிடித்த  நிலையில்  இருக்க, கருத்
திசைந்து  கணவனுடன்  வாழ வேண்டியவள், பொலிவிழந்து ,புன்னகையிழந்து
கற்பு  நெறி தவறி ,மனசாட்சியை  துணைக்கழைத்தால் அது ஏன் வருகிறது..?அவளை
அம்போ  என்று விட்டதுமல்லாமல்  குத்திக் குதறி  கத்திக் கதறவும்  வைத்தது.
          நெஞ்சத்து  வலியோடு  உடல் உபாதையும்  சேர தாங்க  முடியாமல்  தன நிலை
தவறினாள். மனசாட்சியின்  பூதாகாரமான   சிவப்பு ஒளி உள்ளமெங்கும்  ஒளியூட்டி
வியாபிக்க உடலிலும்  சிவப்பு நிறம்  பரவியது., சிவப்பு ரத்தத்தால் . எல்லாமே  தெளிவாக  உணர்வது  போல் ஒரு பிரமை. கண்கள்  காணும்  காட்சிகள்  அனைத்தையும்  காணவே  விரிந்தனவோ...!செவிகள்  கேட்கும்  அனைத்தையும்
கிரகிக்க முடுக்கி  விடப்பட்ட  நிலை அடைந்ததோ.../மாலதிக்கு   ஒரு சில வினாடி 
களுக்கு  நினைவு  மீண்டது. அப்போது  அவள் ரவி  அவளையே  வெறி பிடித்து   நோக்கு
வதை கண்டாள். " நான்  ஆண்மை உள்ளவன். எனக்கு  குழந்தை  பிறந்து விட்டது "---
ரவியின்  அலறல்  அவளால் கேட்டு  கிரகிக்கப் பட்டவுடன் அவள் தலை  சாய்ந்தது.
பிறகென்ன....?  அமைதி... . ஒரே  மயான  அமைதி....!.
                                                             ----------------------------------


 





  
 .   . 









.






        sa                                                                                                                                                                                                               
             



  

























.




 .

















    




.

வெள்ளி, 8 அக்டோபர், 2010

OH, ATHU ANTHAKKAALAM--!

                                                    ஒ ,  அது   அந்தக்   காலம் .
                                                  ------------------------------------------
       மூன்றாண்டு   முற்றுப்   பெறாத   இளவயது,
       எண்ணமும்   சொல்லும்   இணையப்   பெறாத   மழலை,
       சொல்வதை,   கேட்பதை, கிரகிக்க  விழையும்   தன்மை,
                             ஒ ,  அது  அந்தக்  காலம் !
       கதை    கேட்கும்    ஆர்வம்,
       கதா   பாத்திரமாகும்   உற்சாகம்,
       ராமனாக , அனுமனாக,  அரக்கி  சூர்ப்பனையாக,
       மாறுவான்  நம்மையும்   மாற்றுவான்,
                              ஒ , அது   அந்தக்   காலம்.  !
       நான்கு   மாடுகள்   கதையில்   அவனே  சிங்கம் ,
       முதலையும்   குரங்கும்   கதையில்   அவனே  குரங்கு,
      பீமன்    வால   நகர்த்த   திணறும்  கதையில்  அவனே  அனுமன்,
                              ஒ , அது    அந்தக்   காலம்,  !
      ஆறு    காண்ட   ராமாயணம்   அழகாக   சொல்லுவான்,
       பாசுரப்படி   ராமாயணமும்   பிரமாதப்   படுத்துவான்,
       கலைஞரின்   வீரத்தாய்   வசனமும்  விட்டு வைத்தானில்லை,
                                ஒ , அது   அந்தக்  காலம், !
       விநாயகர்  துதி   பாடுவான், வள்ளிக்  கணவன்  பெயர்  பாடுவான்,
       கண்ணனின்   கீதை  சொல்லுவான், காண்பவர்  கேட்பவர்
       மனம்  மகிழ  திரை  இசையும்   பாடுவான்,
                               ஒ , அது    அந்தக்   காலம்,  !
       கதை   சொல்லி  மகிழ்ந்தேன் , அவனோடு  நானும் நடித்தேன் ,
       அவனைப்  போல்  என்னை   நான் மாற்ற ,  என் வயதொத்தவன்   போல்
       அவன்  மிளிர , எனக்கு  அவன், அவனுக்கு  நான் என,
                               ஒ , அது   அந்தக்    காலம்,   !
       காலங்கள்    மாறும்  காட்சிகள்    மாறும்,
       காலத்தின்   முன்னே   எல்லாம்   மாறும்,
       மாற்றங்கள்   என்றால்   ஏமாற்றங்களா, ?
      நேற்று   இன்றாகவில்லை, இன்று   நாளையாகுமா, ?
       ஓராறு   வயதில்  இல்லாத  எண்ணம்,
      மூவாறு   வயதில்  வருவது    ஏனோ, ?
      இதுதான்    தலைமுறை   இடைவெளியோ, ?
      கடந்த   நிகழ்வுகள்   நினைவுகளாய்த்   திகழ,
      நடக்கும்   நிகழ்வுகள்   மகிழ்வாக   மாற ,
      இன்றும்    ஒரு நாள் , ஒ அது   அந்தக்   காலமாகும், !
       -----------------------------------------------------------------------------


 





 







 





 
 
                                             

திங்கள், 4 அக்டோபர், 2010

UNNIL AANDAVAN ULLAAN ---- ORU KARUTHTHURAI

                                    உன்னில்     ஆண்டவன்    உள்ளான் - ஒரு  கருத்துரை

      எங்கும்  எதிலும் நீக்கமற  நிறைந்திருக்கும் ஆண்டவனை தரிசனம்  செய்ய உள்ளக்  கோவில் ஒன்றே போதும் .இருப்பினும் நம் கலாச்சாரத்தில் ஆலய தரிசனம் முக்கிய இடம் வகுக்கிறது. ஆலயத்துக்கு  வருபவர்கள்  மன அமைதி வேண்டியும்  ஆண்டவனிடம் வரம் வேண்டியும் வருகின்றனர் .
      வருபவர் என்ன வேண்டி தொழுகின்றனர்  அல்லது வணங்குகின்றனர் ?ஆத்ம  விடுதலை வேண்டியும் மனநிம்மதி  வேண்டியுமே  தொழுகின்றனர். ஆத்ம விடுதலை யார் செய்ய முடியும்?  தொழுபவந்தான் ! அவன் விடுதலைக்காக  அவன் அவனைத்தான்  வணங்கவேண்டும் . குதர்க்கமாகத்  தோன்றலாம். அதுதான் வேதங்கள்
முதலானவை   கூறுவதாகத்  தோன்றுகிறது .ஒரு சிலையோ படமோ  ஒருவனின்
பிரதிபலிப்பைத்தான் தோற்றுகிறது  உண்மையில்  ஒரு பூவோ பழமோ நிவேதனமோ வைத்து ஆராதிக்கையில் வேண்டுபவனும்  வேண்டப்படுபவனும் ஒரே  நிலையில் நிறுத்தப் படுகிறார்கள்.சிலையோ  படமோ, தன  உள்ளத்தின்  மெல்லிய திரை  இடப்பட்ட பிரதிபலிப்பேயாகும்.அந்நிலையில் எண்ணத்தின் வாயிலாக அகமும் புறமும்
ஒன்றரக்கலந்து, தேடுபவனும்  தேடப்படுபவனும்  ஒன்றாகிறது .இந்நிலையில்  ஒரு
கண்ணாடி முன் அமர்ந்து "நீதான் அது" என்று தன பிரதி பிம்பத்தைப் பார்த்து சொல்ல
முடிந்தால்  படம் சிலை பிம்பம்  எல்லாம் ஒன்றுதான்.  இதெல்லாம் சாதாரண
மக்களுக்கு ஒத்து வருவதில்லை. அவர்களுக்கு அவர்கள் மனம் லயிக்க ஆண்டவனுக்கு
ஒரு உருவகம் தரவேண்டும். அவையே அவரவர் வளர்ந்த முறை வளர்க்கப்பட்ட
முறைக்கேற்ப சிவனாகவும் விஷ்ணுவாகவும் முருகனாகவும் இன்னும் ஆயிரம்
விதங்களிலும் பிரதிபலிக்கிறது.
       சில இடங்களில் ஆண்டவன் வழிபாடும் ஆலய தரிசனமும் கால தேச வர்த்த
மானங்களுக்கு உட்பட்டு நடக்கின்றன. சில ஆலய வழிபாட்டுக்கு சில கட்டுப்பாடுகளும் சடங்குகளும்  நியமிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம்
காணும்போது கட்டுப் பாடுகளும் சடங்குகளும் ஏற்படுத்தப்பட இருந்த காரணங்கள்
மறைந்து போய வெறும் சடங்குகளுக்கே  முக்கியத்துவம்  அளிக்கப்படுவதைக்  காணலாம்.
       ஒரு மண்டல காலம் கடும் விரதம் இருந்து சபரி மலைக்கு போவது என்பது
விதிக்கப்பட்ட கட்டுப்பாடு. இன்றைய வசதிகள் இல்லாதிருந்த அந்தக் காலத்தில்
கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும்.
கரடு முரடான மலைப்பாதை நெடுந்தூர நடைப்பயணம் போன்ற வற்றுக்கு தயார்
படுத்திக்கொள்ள ஒரு மண்டல கால அவகாசம்  தேவைப்பட்டது. மாலை அணிந்து
இந்திரிய சுக போகங்களை தவிர்த்து, புலால் உண்ணாமல்  மது புகை  போன்றவற்றை தவிர்த்து உடலை அடக்கி, மனசை ஒரு நிலைப்படுத்தி காலணி
இல்லாமல் நடந்து பாயில் படுத்துறங்கி மனசையும் உடலையும் ஒரு ஒழுங்குக்குள்
கொண்டுவர விரத காலம் பயன்பட்டது. விரதம் இருப்பவர்களை அடையாளம்
காண்பிக்க கருப்பு உடை உபயோகப் படுத்தப்பட்டது. மற்றவர்களால் இவர்களுக்கு
எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது சபரி மலைக்கு செல்ல
சகல சவுகரியங்களும் வந்து விட்டன.விரத கால அனுஷ்டானங்கள் பெயரளவில்
மட்டுமே உள்ளன. அதுவும் பெரும்பாலும் ஒரு வார காலத்துக்குள்ளாகவே உள்ளது.
உடல் மனம் இவற்றை ஒரு கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து அதுவே பழக்கமாகிவிட உபயோகப்படும் விரதங்கள் எல்லாம் கை விடப்பட்டு விட்டன. சபரி
மலைக்கு செல்வது பெரும்பாலோருக்கு ஒரு பெருமைப்படும் விஷயமாகிவிட்டது.
நம்பிக்கையும் ஆண்டவன் தேடலும் இரண்டாம் பட்சமாகிவிட்டது. கருப்பு உடையும்
தாடியும் வெறும் அடையாள சின்னங்களாகிவிட்டன. ஆண்டவன் தரிசனம் என்ற 
பெயரில் உடலுக்கும் மனசுக்கும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப்
படாமல் காற்றோடு போய்விட்டன.
      சில சம்பிரதாயங்கள் கடை பிடிக்கப்படுவதின் அர்த்தமே புரிவதில்லை. குருவாயூர்
கோவிலில் கண்ணனை தரிசனம் செய்ய ஆண்கள் வெறும் வேட்டி துண்டுடனும்
வெற்றுடம்புடனும்தான் செல்ல வேண்டும். கூட்ட நெரிசலில் ஒருவர் உடல் மற்றவர்
உடம்புடன் உரசி வியர்வையும் நாற்றமும் எல்லோருக்கும் பங்கிடப்படும் . இது
தவிர்க்கப்பட கூடியதுதானே. .
     பழனி முருகன் கோவிலில் ஆண்டவன் தரிசனம் வெறும் வர்த்தகமாகி விட்டது.
அவனை வேண்டி அரை கணம் கூட தொழ முடியாது. பணம் இருப்பவன் அதை செலவு
செய்பவன் பிரத்தியேக மாக கவனிக்கப்படுவான்.
    கர்நாடகத்தில்  பெரும்பாலான கோவில்களில் இலவச உணவு அளிக்கப்படுகிறது..இது
போற்றப்பட வேண்டியதுதான். இருந்தாலும் ஆண்டவன் முன்னிலையில் நாம்
எல்லோரும் ஒன்றுதானே. உணவிடும் விஷயத்தில் பிராமணர்களுக்கு  தனிச்சலுகை
பிரத்தியேக இடம், முதல் மரியாதை. என்று நடை முறையில் சில கோவில்கள்
உள்ளன.பிராமணர்களை அடையாளம் கண்டுகொள்ள பூணூல் இருக்கிறதா என்று
பார்க்கிறார்கள்.
    பூணூல் அணிவது என்பது வெறும் அடையாளச் சின்னமாகிவிட்டது. பிராமணன்
என்பவன் யார்? அந்தக்கால வர்ண பேதங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிவினர்.
அவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகளும் விதி முறைகளும் வழக்கத்தில் இருந்தன.
பரமனுக்கும்  பாமரனுக்கும் பாலமாய் இருப்பவனே பார்ப்பனன் எனும் பிராமணன்.
அவன் தனக்காக உழைக்ககூடாது. மற்றவர் இடும் பிச்சையில் உயிர் வாழவேண்டும் .மொத்தத்தில் தனக்காக வாழாமல் பிறர் நலனுக்காக ஆண்டவனிடம வேண்டுபவனே பிராமணன். கோழிக்கு இரண்டு பிறவி. ஒன்றுமுட்டை
உருவில். மற்றது முட்டையில் இருந்து வரும் குஞ்சு. அதற்கு பார்ப்பு என்று பெயர். அதை
போல இரு பிறவி உடையவன் பிராமணன் அல்லது "பார்ப்பு" அனன் பூணூல் போட்டு
ஆண்டவனிடம் வேண்டும் பிறவியே பார்ப்பனன். ஆனால் இக்காலத்தில் பூணூல்
என்பது மற்றவரிடமிருந்து பிரித்து அடையாளம் காட்டவே உபயோகப்படுகிறது இங்கு
யாரும் பிராமணன் இல்லை.
      இத்தனை விஷயங்கள் இருந்தும் கோயில்களில் கூட்டம் அலை மோதுகிறது.
வருபவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஈர்க்கப்பட்டே வருகின்றனர்.
ஆண்டவன் தூணிலும் துரும்பிலும் எங்கும் இருந்தாலும் ஆலயங்களில் அதிகமாக
இருக்கிறான். பிரார்த்திப்பவரின் அலை வரிசையும் பக்தியும் அங்கு ஒரு சாந்நித்யத்தை  ஏற்ப்படுத்துகிறது. ஆங்கிலத்தில் AURA என்று சொல்லலாமா? சில
கோயில்களில் இது அதிகமாக உணரப்படுகிறது. திருமலையில் சமயபுரத்தில்
குருவாயூரில் பழனியில் என்று பல ஆலயங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. வெறும்
நம்பிக்கையில் வணங்குபவர்களும் பகுத்தறிந்து வணங்குபவர்களும்  தெரிந்து
கொள்ள வேண்டியது ஒன்றுதான்.  உன்னில் ஆண்டவன் உள்ளான்.












 

















 





















 .

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

VIBATHTHIN VILAIVU - ORU KAVITHAI.

                                விபத்தின்   விளைவு   --ஒரு கவிதை

கண்ட  கண்ட மனிதரெல்லாம்
வளைவும்  நெளிவும்  கண்டென்னிடம்
அண்ட வொண்ணா   இயல்பினன் எனத்
தொலைதூரம்  சென்றும்  எண்ணுவர்
       அற்றைத்திங்கள்   அன்றொருநாள்
        எந்தையும்  தாயும்   மகிழ்ந்து  குலவ
        சிந்தையில்  தோன்றாமலே   சிந்திய  வித்து நான்
        விந்தை உலகில்  விளைந்த  விபத்தேயன்றோ
தோன்றிற்  புகழோடு தோன்றுக -- என்றான் வள்ளுவன்
தோன்றலும் தோன்றாமையும் நம் செயலல --அறிந்திலனோ  அவன்?
        ஏற்ற தாழ்வு கண்டு எரியும் மனம்
         மாற்று வழிகளை விழையும் உள்ளம்
        எண்ணியதாங்கே செயல்படுத்த இயலாமை
        சொல்லில் செயலில் எழுத்தில் எழும்  ஆற்றாமை
எண்ணி  எண்ணி என் குறைகள் ஏனோ கூறுவீர்
மண்ணில் யான் செல்லும் வழியும் நேர்வழியேயாம்
மற்றவ்வழியை  மாற்றோர் நோக்கிடும்
விழியின் வளைவே விளையும் பிழையெலாம்
         எனைப் பொல்லான் எனச்சொன்னாலும்  என்ன
         நல்லான் எனச்சொன்னாலும்  என்ன
         சொல்லில் வசைகள் சொன்னாலும்  என்ன
         என்றும்  எவரும் நலம் பெற வேண்டும்
         என்றே எண்ணும் என்  மனமே .