ஒ , அது அந்தக் காலம் .
------------------------------------------
மூன்றாண்டு முற்றுப் பெறாத இளவயது,
எண்ணமும் சொல்லும் இணையப் பெறாத மழலை,
சொல்வதை, கேட்பதை, கிரகிக்க விழையும் தன்மை,
ஒ , அது அந்தக் காலம் !
கதை கேட்கும் ஆர்வம்,
கதா பாத்திரமாகும் உற்சாகம்,
ராமனாக , அனுமனாக, அரக்கி சூர்ப்பனையாக,
மாறுவான் நம்மையும் மாற்றுவான்,
ஒ , அது அந்தக் காலம். !
நான்கு மாடுகள் கதையில் அவனே சிங்கம் ,
முதலையும் குரங்கும் கதையில் அவனே குரங்கு,
பீமன் வால நகர்த்த திணறும் கதையில் அவனே அனுமன்,
ஒ , அது அந்தக் காலம், !
ஆறு காண்ட ராமாயணம் அழகாக சொல்லுவான்,
பாசுரப்படி ராமாயணமும் பிரமாதப் படுத்துவான்,
கலைஞரின் வீரத்தாய் வசனமும் விட்டு வைத்தானில்லை,
ஒ , அது அந்தக் காலம், !
விநாயகர் துதி பாடுவான், வள்ளிக் கணவன் பெயர் பாடுவான்,
கண்ணனின் கீதை சொல்லுவான், காண்பவர் கேட்பவர்
மனம் மகிழ திரை இசையும் பாடுவான்,
ஒ , அது அந்தக் காலம், !
கதை சொல்லி மகிழ்ந்தேன் , அவனோடு நானும் நடித்தேன் ,
அவனைப் போல் என்னை நான் மாற்ற , என் வயதொத்தவன் போல்
அவன் மிளிர , எனக்கு அவன், அவனுக்கு நான் என,
ஒ , அது அந்தக் காலம், !
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்,
காலத்தின் முன்னே எல்லாம் மாறும்,
மாற்றங்கள் என்றால் ஏமாற்றங்களா, ?
நேற்று இன்றாகவில்லை, இன்று நாளையாகுமா, ?
ஓராறு வயதில் இல்லாத எண்ணம்,
மூவாறு வயதில் வருவது ஏனோ, ?
இதுதான் தலைமுறை இடைவெளியோ, ?
கடந்த நிகழ்வுகள் நினைவுகளாய்த் திகழ,
நடக்கும் நிகழ்வுகள் மகிழ்வாக மாற ,
இன்றும் ஒரு நாள் , ஒ அது அந்தக் காலமாகும், !
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக