Monday, October 4, 2010

UNNIL AANDAVAN ULLAAN ---- ORU KARUTHTHURAI

                                    உன்னில்     ஆண்டவன்    உள்ளான் - ஒரு  கருத்துரை

      எங்கும்  எதிலும் நீக்கமற  நிறைந்திருக்கும் ஆண்டவனை தரிசனம்  செய்ய உள்ளக்  கோவில் ஒன்றே போதும் .இருப்பினும் நம் கலாச்சாரத்தில் ஆலய தரிசனம் முக்கிய இடம் வகுக்கிறது. ஆலயத்துக்கு  வருபவர்கள்  மன அமைதி வேண்டியும்  ஆண்டவனிடம் வரம் வேண்டியும் வருகின்றனர் .
      வருபவர் என்ன வேண்டி தொழுகின்றனர்  அல்லது வணங்குகின்றனர் ?ஆத்ம  விடுதலை வேண்டியும் மனநிம்மதி  வேண்டியுமே  தொழுகின்றனர். ஆத்ம விடுதலை யார் செய்ய முடியும்?  தொழுபவந்தான் ! அவன் விடுதலைக்காக  அவன் அவனைத்தான்  வணங்கவேண்டும் . குதர்க்கமாகத்  தோன்றலாம். அதுதான் வேதங்கள்
முதலானவை   கூறுவதாகத்  தோன்றுகிறது .ஒரு சிலையோ படமோ  ஒருவனின்
பிரதிபலிப்பைத்தான் தோற்றுகிறது  உண்மையில்  ஒரு பூவோ பழமோ நிவேதனமோ வைத்து ஆராதிக்கையில் வேண்டுபவனும்  வேண்டப்படுபவனும் ஒரே  நிலையில் நிறுத்தப் படுகிறார்கள்.சிலையோ  படமோ, தன  உள்ளத்தின்  மெல்லிய திரை  இடப்பட்ட பிரதிபலிப்பேயாகும்.அந்நிலையில் எண்ணத்தின் வாயிலாக அகமும் புறமும்
ஒன்றரக்கலந்து, தேடுபவனும்  தேடப்படுபவனும்  ஒன்றாகிறது .இந்நிலையில்  ஒரு
கண்ணாடி முன் அமர்ந்து "நீதான் அது" என்று தன பிரதி பிம்பத்தைப் பார்த்து சொல்ல
முடிந்தால்  படம் சிலை பிம்பம்  எல்லாம் ஒன்றுதான்.  இதெல்லாம் சாதாரண
மக்களுக்கு ஒத்து வருவதில்லை. அவர்களுக்கு அவர்கள் மனம் லயிக்க ஆண்டவனுக்கு
ஒரு உருவகம் தரவேண்டும். அவையே அவரவர் வளர்ந்த முறை வளர்க்கப்பட்ட
முறைக்கேற்ப சிவனாகவும் விஷ்ணுவாகவும் முருகனாகவும் இன்னும் ஆயிரம்
விதங்களிலும் பிரதிபலிக்கிறது.
       சில இடங்களில் ஆண்டவன் வழிபாடும் ஆலய தரிசனமும் கால தேச வர்த்த
மானங்களுக்கு உட்பட்டு நடக்கின்றன. சில ஆலய வழிபாட்டுக்கு சில கட்டுப்பாடுகளும் சடங்குகளும்  நியமிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம்
காணும்போது கட்டுப் பாடுகளும் சடங்குகளும் ஏற்படுத்தப்பட இருந்த காரணங்கள்
மறைந்து போய வெறும் சடங்குகளுக்கே  முக்கியத்துவம்  அளிக்கப்படுவதைக்  காணலாம்.
       ஒரு மண்டல காலம் கடும் விரதம் இருந்து சபரி மலைக்கு போவது என்பது
விதிக்கப்பட்ட கட்டுப்பாடு. இன்றைய வசதிகள் இல்லாதிருந்த அந்தக் காலத்தில்
கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும்.
கரடு முரடான மலைப்பாதை நெடுந்தூர நடைப்பயணம் போன்ற வற்றுக்கு தயார்
படுத்திக்கொள்ள ஒரு மண்டல கால அவகாசம்  தேவைப்பட்டது. மாலை அணிந்து
இந்திரிய சுக போகங்களை தவிர்த்து, புலால் உண்ணாமல்  மது புகை  போன்றவற்றை தவிர்த்து உடலை அடக்கி, மனசை ஒரு நிலைப்படுத்தி காலணி
இல்லாமல் நடந்து பாயில் படுத்துறங்கி மனசையும் உடலையும் ஒரு ஒழுங்குக்குள்
கொண்டுவர விரத காலம் பயன்பட்டது. விரதம் இருப்பவர்களை அடையாளம்
காண்பிக்க கருப்பு உடை உபயோகப் படுத்தப்பட்டது. மற்றவர்களால் இவர்களுக்கு
எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது சபரி மலைக்கு செல்ல
சகல சவுகரியங்களும் வந்து விட்டன.விரத கால அனுஷ்டானங்கள் பெயரளவில்
மட்டுமே உள்ளன. அதுவும் பெரும்பாலும் ஒரு வார காலத்துக்குள்ளாகவே உள்ளது.
உடல் மனம் இவற்றை ஒரு கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து அதுவே பழக்கமாகிவிட உபயோகப்படும் விரதங்கள் எல்லாம் கை விடப்பட்டு விட்டன. சபரி
மலைக்கு செல்வது பெரும்பாலோருக்கு ஒரு பெருமைப்படும் விஷயமாகிவிட்டது.
நம்பிக்கையும் ஆண்டவன் தேடலும் இரண்டாம் பட்சமாகிவிட்டது. கருப்பு உடையும்
தாடியும் வெறும் அடையாள சின்னங்களாகிவிட்டன. ஆண்டவன் தரிசனம் என்ற 
பெயரில் உடலுக்கும் மனசுக்கும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப்
படாமல் காற்றோடு போய்விட்டன.
      சில சம்பிரதாயங்கள் கடை பிடிக்கப்படுவதின் அர்த்தமே புரிவதில்லை. குருவாயூர்
கோவிலில் கண்ணனை தரிசனம் செய்ய ஆண்கள் வெறும் வேட்டி துண்டுடனும்
வெற்றுடம்புடனும்தான் செல்ல வேண்டும். கூட்ட நெரிசலில் ஒருவர் உடல் மற்றவர்
உடம்புடன் உரசி வியர்வையும் நாற்றமும் எல்லோருக்கும் பங்கிடப்படும் . இது
தவிர்க்கப்பட கூடியதுதானே. .
     பழனி முருகன் கோவிலில் ஆண்டவன் தரிசனம் வெறும் வர்த்தகமாகி விட்டது.
அவனை வேண்டி அரை கணம் கூட தொழ முடியாது. பணம் இருப்பவன் அதை செலவு
செய்பவன் பிரத்தியேக மாக கவனிக்கப்படுவான்.
    கர்நாடகத்தில்  பெரும்பாலான கோவில்களில் இலவச உணவு அளிக்கப்படுகிறது..இது
போற்றப்பட வேண்டியதுதான். இருந்தாலும் ஆண்டவன் முன்னிலையில் நாம்
எல்லோரும் ஒன்றுதானே. உணவிடும் விஷயத்தில் பிராமணர்களுக்கு  தனிச்சலுகை
பிரத்தியேக இடம், முதல் மரியாதை. என்று நடை முறையில் சில கோவில்கள்
உள்ளன.பிராமணர்களை அடையாளம் கண்டுகொள்ள பூணூல் இருக்கிறதா என்று
பார்க்கிறார்கள்.
    பூணூல் அணிவது என்பது வெறும் அடையாளச் சின்னமாகிவிட்டது. பிராமணன்
என்பவன் யார்? அந்தக்கால வர்ண பேதங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிவினர்.
அவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகளும் விதி முறைகளும் வழக்கத்தில் இருந்தன.
பரமனுக்கும்  பாமரனுக்கும் பாலமாய் இருப்பவனே பார்ப்பனன் எனும் பிராமணன்.
அவன் தனக்காக உழைக்ககூடாது. மற்றவர் இடும் பிச்சையில் உயிர் வாழவேண்டும் .மொத்தத்தில் தனக்காக வாழாமல் பிறர் நலனுக்காக ஆண்டவனிடம வேண்டுபவனே பிராமணன். கோழிக்கு இரண்டு பிறவி. ஒன்றுமுட்டை
உருவில். மற்றது முட்டையில் இருந்து வரும் குஞ்சு. அதற்கு பார்ப்பு என்று பெயர். அதை
போல இரு பிறவி உடையவன் பிராமணன் அல்லது "பார்ப்பு" அனன் பூணூல் போட்டு
ஆண்டவனிடம் வேண்டும் பிறவியே பார்ப்பனன். ஆனால் இக்காலத்தில் பூணூல்
என்பது மற்றவரிடமிருந்து பிரித்து அடையாளம் காட்டவே உபயோகப்படுகிறது இங்கு
யாரும் பிராமணன் இல்லை.
      இத்தனை விஷயங்கள் இருந்தும் கோயில்களில் கூட்டம் அலை மோதுகிறது.
வருபவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஈர்க்கப்பட்டே வருகின்றனர்.
ஆண்டவன் தூணிலும் துரும்பிலும் எங்கும் இருந்தாலும் ஆலயங்களில் அதிகமாக
இருக்கிறான். பிரார்த்திப்பவரின் அலை வரிசையும் பக்தியும் அங்கு ஒரு சாந்நித்யத்தை  ஏற்ப்படுத்துகிறது. ஆங்கிலத்தில் AURA என்று சொல்லலாமா? சில
கோயில்களில் இது அதிகமாக உணரப்படுகிறது. திருமலையில் சமயபுரத்தில்
குருவாயூரில் பழனியில் என்று பல ஆலயங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. வெறும்
நம்பிக்கையில் வணங்குபவர்களும் பகுத்தறிந்து வணங்குபவர்களும்  தெரிந்து
கொள்ள வேண்டியது ஒன்றுதான்.  உன்னில் ஆண்டவன் உள்ளான்.
 

 

 .

3 comments:

 1. அருமையான் கட்டுறை..உண்மை இதுதான்...நல்ல விளக்கம..என்னில் ஒத்துப்போகக்கூடிய கருத்துகள்..

  ஏன் இந்த மனிதர்கள் புரிய மறுக்கிறார்கள்...சிந்திக்க மறுக்கிறார்கள்..ஏன் குறுகிய வட்டத்தில் பயணிக்கிறார்கள்...

  எத்தனை பெரியார்கள் தேவைப்படுகிறது...இருந்தும் வெளிவற மறுக்கும் மனிதர்கள்..படிப்புக்கூட அந்தஸ்த்துக்கும்...பணம் பண்ணுவதற்க்கு மட்டுமே என்றாகிவிட்டது..சிந்திக்கவும்...சீர் தூக்கிப்பார்க்கவும் என்ற பொருள் இல்லைஅங்கு..

  பெற்றோர்களும் காரணம்...

  உங்களைப்போல சில மனிதர்கள் இருக்கிறார்கள்....காணாது...நிறைய மனிதர்கள் வரவேண்டும்..சமுதாய மாற்றம் நிகழவேண்டும்....பொன்.

  ReplyDelete
 2. நிதர்சனம். ஆண்டவன் பல நேரங்களில் வெறும் சம்பிரதாயமாகி விடுகிறார் (விட்டது). நல்ல கட்டுரை.

  ReplyDelete
 3. thanks a lot for the comments.it is heartening to receive encouraging comments

  ReplyDelete