சனி, 30 ஜூலை, 2011

எண்ணச் சிறகுகளில்.....


எண்ணச் சிறகுகளில்..
------------------------------

அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.

        அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
        விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
        கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
        இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ

கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.

          அந்த நாள் அக்குயவன் கை
          ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
          இந்த நாளில் ஏழையெனை
          ஏனோ குறைகள் கூறுவரே.
          நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
          நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
          வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
          மறந்து நீக்கிச் சென்றிடவே
          சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.

எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவந்தானே நீ.

        வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
        விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
        நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

          என்னுயிர்ப் பறவையே,
          நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
          நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
          என் நெஞ்சுக்கூட்டை விட்டு
          அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
          மூடிய கண்கள் விழித்து விட்டால்
          இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே.
          ------------------------------------------------------------

வியாழன், 28 ஜூலை, 2011

எது கவிதை.?



    குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் கண்ட ரதபந்தன கவிதை
          -----------------------------------------------------------------------                   
                                    திருவெழுக்கூற்றிருக்கை
                                    -----------------------------------
     
எது கவிதை.?
-----------------
     -


  பாட்டெழுதுவது என்ன பெரிய பாடா, பாட்டா,
  என்றென் பேரன் கேட்டது ,கவிதை எழுத 
  கருவுக்காக காத்திருந்தபோது நினைவிலாடியது.
  உணர்வினால் உந்தப்பட்டு எழுதினால்
  அதில் உயிரிருக்கும், கவிதையும் வசமாகும்
 என்று நான் கூறியதும், உணர்வை சொல்லில்
 குழைத்துப் பார்த்தால் உதடு உதிர்ப்பதும்
 கவிதையாகும் என நண்பர் ரமணி எழுதியதும்
 என் சிந்தனையில் வந்து மோதியது.

       உணர்வுகள் முட்டி மோத நிகழ்வுகள்
       நடந்திருக்க வேண்டும். மனசும் பாதிப்படைந்து
       இருக்க வேண்டும்.புனைவுகளில் சாத்தியமா.?
       எழுதும்போது சொல்லாடல் செய்து
       இல்லாததை இருப்பதாய் கற்பிதம் செய்தால்,
       எழுதும் எழுத்தில் உயிர் இருக்குமோ ,உண்மை
       இருக்குமோ , எண்ணங்கள் கடத்தப்படுமோ.?

எண்ணியதை சொல்லவே தட்டுத் தடுமாறும்
நெஞ்சம் மரபுப்படி எழுத அறிந்திருக்க வேண்டியது
என்னென்ன.?நிலவைப் பிடித்து அதன் கறைகள்
துடைத்து குறுமுறுவல் பதித்த முகம் என்று
எழுதும்போது அது புனைவுதான் என்றாலும்,
எழுதியது உருவகப் படுத்தினால் தோன்றுவதென்ன.?
பார்க்க மனம் விழையுமா, இல்லை சகிக்குமா.?

     சில கவிதைகள் படிக்கையிலே எழுத்தின் பின்புலம்
    அறியப்படாவிட்டால், மொழி அறிவிருந்தும்
    பொருளறிவு தெரியாமல் போகும்.

அடி சீர் தளை என்று அநேகம் உண்டு,
இலக்கணமுண்ர்ந்து கவிதை வடிக்க
எனக்கியலுமோ, தெரியவில்லை. 
    
     அண்மையில் குடந்தையில் திருவெழுக்கூற்றிருக்கை 
     ரதபந்தனக் கவியாகக் கண்டேன். இறைவனிடம் 
     இறைஞ்சும் கவிதை என்றமட்டில் புரிந்தது.
    புரிந்ததன் விளக்கம் வேண்டி பதிவுலகை அணுகினேன். 
    பலரும் உதவினர். கணினியும் உறுதுணை செய்தது. 
    படிக்கப் படிக்க நான் எழுதுவது கவிதை என்றெண்ணுதல் 
    அறியாமையின் உச்சம் என்றே உணர வைத்தது. 

கவிதைக்கு இலக்கணமுண்டு, மரபுண்டு, நியமமுண்டு, 
இன்னும் என்னென்னவோ இருக்க, வெறும் வார்த்தை 
அலங்காரங்களால் போர்த்த முயலுதல் அறியாமையின் 
விளைவன்றி வேறென்ன சொல்ல.?
      
     உணர்ச்சிகளும், உணர்வுகளும் உந்த எழுதுதல் 
     படிக்கப் பலனளிக்கலாம்.நம்மை அறிய உறுதுணை
    செய்யலாம்.. ஆனால் கவிதையாகுமா.?
  -------------------------------------------------------------- 

  




திங்கள், 25 ஜூலை, 2011

எதுவும் கடந்து போகும்.

  
                                                  
                                        கிளாஸ் பெயிண்டிங்
                                         ---------------------------
                       ராதா கிருஷ்ணன் ராஜஸ்தானி ஸ்டைல்
                      ----------------------------------------------------------  
       பத்து வயதிருக்கும்போது, டைஃபாய்ட் வந்து ஆஸ்பத்திரியில் 
அட்மிட் ஆகியிருந்த விவரங்களை என் அரக்கோண நாட்கள் 
பதிவில் எழுதியிருந்தேன்.டாக்டர்களுடன் எனக்கான அனுபவங்
களை எடுத்துக் கூற முடியாத வயது அது.

      HAL -லிருந்து மேல் பயிற்சிக்காக நான் அம்பர்னாத் அனுப்பப் 
பட்டேன். அது என் தந்தையார் இறந்த மூன்று வாரங்களுக்குள் 
இருந்தது. பெரும் பொறுப்பும் ,மனோ வியாகூலமும் சேர்ந்து 
நோயிருக்கவில்லை என்றாலும்,  எனக்கு உடல் அடிக்கடி 
சோர்ந்து தளர்வடையச் செய்யும். இடுப்பின் இடது பக்கம் ஒரு 
வலி ஓயாது இருந்து கொண்டே இருக்கும். அங்குள்ள மருத்துவ 
மனையில்( attached to the defense factory.) காண்பித்து வந்தேன்.அவர்
களும் ஒருவழியாக எல்லாவிதமான மருந்துகளும் கொடுத்தும்
பலன் தராத நிலையில்,எனக்கு மில்க் இன் ஜெக்‌ஷன் என்று 
ஏதோ ஊசி போட்டார்கள். அது எதற்கு என்று நான் கேட்டபோது, 
பால்வினை நோய் ஏதாவது இருக்குமோஎன்று சந்தேகப்படுவ
தாக கூறினார்கள்.! குடிக்கும் பால் தவிர வேறு எந்தப் பாலும் 
அறியாத எனக்குஇது அதிர்ச்சியாக இருந்தது. என் சந்தேகத்தைக் 
கூறினேன். நான் டாக்டரா அவர்கள் டாக்டரா என்று என்னிடம் 
கோபம் கொண்டு, பிறகு என்னை பாம்பே கொலாபாவில் இருந்த 
நேவல் ஆஸ்பத்திரிக்கு என்னை ரெஃபெர் செய்தார்கள். அங்கு 
என்னை அட்மிட் செய்ய படுக்கைகள் இல்லாத காரணத்தால்
பிறிதொரு முறை வரச் சொன்னார்கள்.நான் ஏன் போகிறேன். ?
வலியை பொறுத்துக்கொள்வதே நலம் என்று இருந்து விட்டேன்
           அங்கு நான் இருக்கும்போது, பல் வலி வந்து, ஆஸ்பத்திரி
யில் பல் டாக்டர் இல்லாத காரணத்தால் பம்பாய்க்கு அனுப்பி
னார்கள்..பம்பாய் ஜேஜே ஆஸ்பத்திரி என்று நினைவு,அங்கே
என்னை பரிசோதித்த பல் மருத்துவரின் (பெண் டாக்டர்)அழகில்
மயங்கி நான் வாய் பிளந்திருந்த நிலையில் என் பல்லைப் 
பிடுங்கி அனுப்பி விட்டார்கள்.

           அதன்பிறகு திருச்சியில் நான் BHEL-ல் பணியிலிருந்தபோது
எனக்கு நெஞ்செரிச்சல், பசியின்மை,  சோர்வு எல்லாம் சேர 
டாக்டரை அணுகினேன். அவர்கள் என்னை பரிசோதித்து மருந்து
கொடுத்தார்கள்.எந்த பிரயோசனமும் இல்லாதிருந்ததால் மறுபடி
மறுபடியும் டாக்டரிடம் போனேன். ஒரு கட்டத்தில் என்னைப் பரி
சோடித்து மருந்து கொடுத்துவந்த டாக்டர்,என் தலையைப் 
பார்த்ததுமே, எனக்கு குறை ஒன்றும் இல்லை என்று கூற ஆரம்
பித்தார். உடல் உபாதை எனக்கல்லவா இருந்தது. ?அவர் மருந்து 
கொடுத்தும் எப்படி எனக்கு குணமாகாமல் இருக்கும் என்பது 
அவர் சந்தேகம்.!
       
          அதன்பிறகு பெரிய டாக்டரைப் பார்த்தபோது அவர் பேரியம் 
மீல் சோதனை (பேரியம் என்ற வஸ்துவை திரவ நிலையில் 
ஒன்று இரண்டு டம்ளர்கள் குடிக்கக் கொடுத்து, எக்ஸ் ரே எடுத்து
பார்ப்பது) செய்துகுடலில் புண் இருக்கிறதா என்று 
ஆராய்ந்தார்கள் புண் ஏதும் இல்லாதிருந்தும் எனக்கு ஒரு                 இஞ்செக்‌ஷன் கொடுத்தார்கள்.(EMETINE  INJECTION ) என்ற 
நினைவு..ஒரு வாரத்துக்கு என் காலை அசைக்க முடியவில்லை.
எதற்கும் டாக்டர்களை அணுகவே பயமாக இருந்தது. கொஞ்சம் 
கொஞ்சமாக என் உபாதைகளுடன் சேர்ந்திருக்கப் பழகிக் 
கொண்டேன்.
         பிறகு விஜயவாடா அனல் மின் நிலைய கட்டுமானப் பணிக்கு
என்னை மாற்றல் செய்தார்கள். பொட்டல் காடாக இருந்த 
இடத்தில் இரண்டு 210-/mw அனல் மின் நிலையங்கள் ஆதியில்
இருந்து மின் உற்பத்தி துவங்கும் வரை பணியிலிருந்தேன். 
காலை ஏழு மணியள்வில் சென்றால், எப்போது திரும்பி வருவோம் 
என்று தெரியாத அளவுக்கு வேலைப் பளு. ஒரு தடவை  எதிர்
பாராத முறையில் வேலையில் சிக்கல்கள் ஏற்பட்டு, இரவு பகல் 
பாராமல் மூன்று நாள் வேலை செய்து, சிக்கல்களை சரி செய்து, 
வீட்டிற்கு வந்தும், என்னையறியாமல் நான் வேலை பற்றிய 
விஷயங்களையே பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த என் மனைவி, 
என்னை அருகிலிருந்த டாக்டர் சமரம் என்பவரிடம் அழைத்துச் 
சென்றார். ( அவர் ஆந்திராவின் பெரியார் என்று சொல்லத் தகுந்த
கோரா என்பவரின் மகன்.)அவரிடம் எங்களுக்கு நல்ல பழக்கம்
இருந்தது. அப்போது அவர் கொடுத்த மருந்தை விட அவர் கொடுத்த 
அறிவுரைகளே பெரிய மருந்தாக இருந்தது. “ என்னதான் நடக்கும்
நடக்கட்டுமே, “என்பார். “ எதுவும் கடந்து போகும்” என்ற மந்திர 
வார்த்தைகளை உபதேசித்தார். மருத்துவரின் துணை நாடுவோரின் 
மனமறிந்து சிகிச்சை செய்வது, டாக்டர்களுக்கு முக்கிய பாடமாக 
இருக்க வேண்டும். 

         ஒரு முறை காலையில் படுக்கையிலிருந்து எழ முடியாதபடி 
இடுப்பிலும் காலிலும் வலி. டாக்டர் சோதித்துப் பார்த்து டிஸ்க் 
ப்ரொலாப்ஸ் ஆகியிருக்கிறது குண்டூரில் ஆர்தோ ஸ்பெஷலிஸ்ட்
டிடம் சென்று சிகிச்சை பெறச் சொன்னார். அங்கு சென்று பரிசோ
தனைக்குப் பின் அவர், நான் மூன்று வாரகாலம் கட்டைப் படுக்கை
யில் தலையணை இல்லமல் மல்லாந்து படுத்திருக்க வேண்டும் 
என்றும் , அதன் பிறகும் குணம் தெரியவில்லை என்றால் 
அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

          எனக்கிருந்த பொறுப்பிலும், வேலைப் பளுவிலும், மூன்று 
வாரகாலம் படுத்திருப்பது,கனவில் கூட எண்ண முடியாத 
ஒன்று. ஒரு வாரத்துக்குள்ளாகவே நான் பணியில் இருக்க 
வேண்டிய  கட்டாயங்களால் உந்தப்பட்டு ,வேதனையுடனே
வேலைக்குச் சென்றேன்.இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு 
க்விக் ஃபிக்ஸ் தீர்வாக அக்குபங்சர் முறை யில் சிகிச்சை 
எடுத்துக்கொள்ள பலர் ஆலோசனை வழங்கினார்கள்.குண்டூரில் 
ஒரு அக்குப் பங்சர் ஸ்பெஷலிஸ்டைப் பார்க்க என் மனைவி
யுடன் சென்றேன்.என்னை பரிசோதித்த அந்த டாக்டர், நான் 
தொடர்ந்து பத்து நாட்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள
வேண்டும் என்றும், சிகிச்சையினால் எனக்கு எந்த பாதிப்பும் 
இருக்காது என்றும், நான் எல்லா வேலைகளையும் எப்போதும் 
போல் செய்யலாம் என்றும் கூறினார். சிகிச்சை காலத்தில் 
நான் அகலமாகக் கால்களை வைக்கக் கூடாது என்றும், ஜெர்க் 
எதுவும் இருக்கக் கூடாது என்றும் கூறினார். சிகிச்சையில் 
இருந்த சில பேரை நாங்கள் பார்க்க நேர்ந்தது. என் மனைவி 
பயந்து போய் விட்டாள்.உடலின் பல பாகங்களில் மெல்லிய 
ஊசிகள் செருகப் பட்டு (ஐம்பது, அறுபது இருக்கும்.)உட்கார்ந்
திருந்தனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஊசிகளை எடுப்
பார்களாம். இந்த சிகிச்சைக்கு ஃபீஸ் ஆக அவர் ரூ.400/-
கேட்டார்.(1979-ல்)அவரிடம் விடை பெற்று நாங்கள் திரும்பி
வரும்போது, என் மனைவி ரூ.1000/- திருப்பதி உண்டியலில் 
போடுவதாக வேண்டிக்கொண்டார். 

        நானும் விஜயவாடாவில் இரண்டு அனல் மின் நிலை
யங்கள் மின்சார உற்பத்தி செய்யும்வரை  பணி புரிந்துவிட்டு
டாக்டர்களின் ஆலோசனைப்படி திருச்சிக்கே மறுபடியும் 
மாற்றலாகி வந்தேன். வேதனைகளுடனும் வலிகளுடனும் 
வாழப் பழகிக் கொண்டுவிட்டேன். நான் வேண்டுமானால் 
என் வேலைக்குப் பயப்படலாம். ஆனால் எனக்கிருந்த உடல் 
உபாதைகள் எனக்குப் பயப்படவில்லை. தொடர்ந்து தொல்லை 
கொடுத்துக் கொண்டிருந்தது.

        மறுபடியும் பி எச். இ.எல் டாக்டர்களிடம் சிகிச்சை.இடுப்பு 
வலியுடன் கூட செர்விகல் ஸ்பாண்டிலைடிஸ் என்ற கழுத்து 
வலியும் சேர்ந்து கொண்டது. கழுத்துக்கும் காலுக்கும் தினம் 
அரை மணி நேரம் ஆஸ்பத்திரியில் ட்ராக்‌ஷன்.கழுத்துக்கு 
ட்ராக்‌ஷன் போடுபவரிடம் தமாஷாக எனக்கு தூக்குப் போடு
மாறு கூறுவேன். ஸ்கூட்டர் ஓட்டக்கூடாது என்ற டாக்டர் 
என்னை ஸ்கூட்டரில் பார்த்தால் மறுநாள் ஒரு பிடி பிடிப்பார். 

       இப்படியாக நான் அவதிப் படுவதைக் கண்ட என் மனைவி
திருப்பதி வேண்டுதல் இருப்பதை நினைவுபடுத்திக் கொண்டு 
இருந்தாள். வேண்டுதலை நிறைவேற்றி வரும் வழியில் 
மெட்ராசில், நியுரோ நிபுணர் டாக்டர் ராமமூர்த்தியையும் 
பார்த்து வருவது என்று தீர்மானித்தோம். ஒரு சுபயோக சுப 
தினத்தில் குடும்பத்தோடு திருப்பதி சென்று வேண்டுதல் 
கடன் கழித்து மெட்ராசில் டாக்டர் ராமமூர்த்தியின் 
அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமல் திருச்சி திரும்பினோம். 
பிறகு கொஞ்ச நாள் கழித்து என் உடல் உபாதைகள் தொந்தரவு 
தரவில்லையே என்ற எண்ணம் வந்தது. டாக்டரும் என்னை 
ஒருமுறை க்ளப்பில் பார்த்து ஏன் ஆஸ்பத்திரிக்கு வருவ
தில்லை என்று கேட்டார். நான் அவரிடம் உலகிலேயே 
சிறந்த மருத்துவரிடம் என் மனைவி என்னை அழைத்துப் 
போயிருந்தாள் என்று கூறினேன். அவர் கொஞ்சம் முழிக்க 
அந்த தலை சிறந்த மருத்துவர் ஏழுமலையான் என்று விளக்கம் 
கூறினேன். 

        எனக்கே தெரியாமல் என் வலிகள் குறைந்து நான் குணமாகி
விட்டேன் என்று எண்ணத் துவங்கினால் “இல்லையடா, நான் 
உன்னைவிட்டுப் போகவில்லை” என்று அவ்வப்போது வந்து 
ஆஜர் கொடுத்து இரண்டொரு நாட்கள் இருந்து செல்லும்.

        உடல் உபாதைகளுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் 
கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு அவற்றின் ஆதிக்கம் நம் 
மேல் இருக்கும்BHEL-ல் திரு. நாகப்பா என்றொரு அதிகாரி 
இருந்தார். அவருக்குப் பக்கவாதம் வந்து மூன்று நான்கு 
மாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு ஒரு வயதுக் குழந்தை நடப்பது 
போல் தட்டுத்தடுமாறி வாக்கிங் ஸ்டிக்குடன் வேலைக்கு வர 
ஆரம்பித்தார். அவர் கூறும் ஒரு வாசகம் என் மனதில் நீங்கா
இடம்பிடித்துள்ளது. நாம் நம் உடல் இதற்கு மேல் தாங்காது
நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது , என்று நினைக்கும் 
நிலையை விட ஆறு மடங்கு அதிகம் வேதனைகளையும் 
கஷ்டங்களையும் தாங்கக் கூடியது என்பார்.இதையும் 
டாக்டர் சமரத்தின் எதுவும் கடந்து போகும் , இது நடக்கா
விட்டால் உலகம் உன் தலையில் விழாது என்ற அறிவுரை
யையும் நான் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்

(சில டாக்டர்களின் குணாதிசயங்களைப் பற்றி எழுத நினைத்தது .என்னை 
அறியாமலேயே எங்கோ சென்று முடிந்து விட்டது. அதுவும் நல்லதற்கே)

    
  
        
               



                                                                                         
-
  

வியாழன், 21 ஜூலை, 2011

கான மயிலாட......

கான மயிலாட............
---------------------------
இங்கேயும் ஒரு கலிடாஸ்கோப்....?
-------------------------------------------------
            சமுத்ராவின் பதிவுகளில் என்னைக் கவருவது அவருடைய
கலிடாஸ்கோப் பதிவுகளே.வெவ்வேறு விஷயங்களை அவர்
தொகுத்து, சுவையாக எழுதுவது எனக்குப் படிக்க மிகவும்
பிடிக்கும். என் போன்றோரின் எழுத்து மிகக் குறைந்த
வாசகர்களையே கவரும்.யாருக்கும் சீரியஸான பதிவுகளை
படிக்க விருப்பமிருப்பதில்லை. என் எழுத்துக்களை தொடர்ந்து
படிப்பவர்களுக்கும் என் எண்ணங்களில் உடன்பாடு உண்டா
அத்தகைய எழுத்துக்களை ரசிக்கிறார்களா தெரியாது. நானும்
சலிக்காமல் எழுதுகிறேன். சரி. ஒரு மாற்றத்துக்கு கலிடாஸ்கோப்
மாதிரி எழுதிப் பார்க்கலாமே என்றே இந்த முயற்சி. காப்பியடிக்கும்
எண்ணம் இல்லை.

           சமுத்ராவின் ஒரு பதிவில் தமிழ் சோறு போட்டது என்பது
போல , என் வீட்டிற்கு நான் அவரை அழைத்தது குறித்து எழுதி
இருந்தார். அவரை சந்தித்ததிலும் அவரை சந்தித்ததிலும் சிறிது
நேரம் உரையாடியதிலும் மகிழ்ச்சி எனக்கும்தான் இருந்தது. .
இருநூறுக்கும் மேலாக தொடர்பாளர்களைக் கொண்டுள்ளவர்,
மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் இருந்தார். பின்
நூட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது டெம்ப்லேட்
பின்னூட்டம் இடுவோர் பற்றியும் பேச்சு வந்தது.  அவருடைய
அடுத்த பதிவிலேயே சில மாதிரி பின்னுட்டம் எழுதுபவர்களை
சாடியிருந்தார். அதற்கு எங்கள் பேச்சு காரணமோ என்று எனக்கு
தோன்றியது. இத்தனை தொடர்பாளர்கள் இருந்தும் கருத்திடு
பவர்கள் மிகவும் குறைவே. அவருக்கே அப்படியென்றால்
எனக்கு வரும் கருத்துக்கள் எண்ணிக்கை பற்றி நான் குறைபடு
வது சரியல்ல.எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில் எழுதுவது
கடினம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித எழுத்து பிடிக்கும்.
மேலும் நான் என் எண்ணங்களைக் கடத்தி படிப்பவர் சிந்தனை
களை தூண்டவே விரும்புகிறேன். கருத்து திணிப்பே கிடையாது.
இந்த முறை சற்றே வித்தியாசமாக எழுத முயல்கிறேன். உபயம்.:-
சமுத்ரா.

           ஆங்காங்கே கேட்டவைகளையும் படித்தவைகளையும்
நினைவில் வைத்து எழுதுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும்
இது ஒரு முயற்சியே.

            ஒரு காதலன் காதலிக்கு எழுதுவது.
             ------------------------------------------------
மரம் வாடினால் தண்ணீர் விடுவேன்.
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்.
நீ வாடினால் என் உயிரை விடுவேன்.
நீ சந்தோஷப்பட அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்.

           சில பொன் மொழிகள்
          -------------------------------
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன.
ஆனால் அனுபவமோ, தவறான முடிவுகளிலிருந்து
கிடைக்கிறது. --------------(பில் கேட்ஸ்.)

நீ தனிமையாய் இருக்கும்போது உனக்கு என்ன என்ன
தோன்றுகிறதோ அதுவே உன் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
                                                   ( விவேகானந்தர் )
மிகவும் நேர்மையாய் இருக்காதீர்கள்.ஏனெனில் நேரான
மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன. நேர்மையானவரே
முதலில் பழி தூற்றப் படுகிறார்கள். கொஞ்சம் வளைந்து
கொடுங்கள். வாழ்க்கை லகுவாய் இருக்கும்.
                                                      (சாணக்கியர் )
தவறு செய்வது மனித குணம்;அதற்கு வருத்தப்படுவது
தெய்வ குணம். மேலும் மேலும் செய்வது அரக்கத்தனம்.
                                                       ( பெஞசமின் ஃப்ராங்க்லின்)
அந்தக் காலத்தில் அவன் புத்திசாலியாக இருந்தான்.
அப்போதெல்லாம் அவன் என் அறிவரைப்படிதான் நடப்பான்.
                                                        (வின்ஸ்டன் சர்ச்சில்)
சிக்கல்கள் என்பது ஒரு ரயிலில் இருந்து பார்க்கப்படும்
மரங்களைப் போன்றது. அருகில் போனால் அவை பெரிதாகத்
தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகி விடும்.
இதுதான் வாழ்க்கை.             (யாரோ)

வெற்றி என்பது நிரந்தரமானதல்ல.  தோல்வியானது இறுதி
யானதுமல்ல. ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
                                                        ( யாரோ)
எல்லா விஷயங்களிலும் உண்மை நிலையை அறிந்துகொள்.
பிறகு அவற்றை உன் இஷ்டப்படி திரித்துக்கொள்ளலாம்.
                                                         ( யாரோ)
ஏதாவது தவறு நடக்க வேண்டும் என்றால் அது நடந்தே தீரும்
நியூட்டனின் மேலே செல்வது கீழே வரும் எனும் நியதி போல.
                                                          (மர்ஃபி)
வாயைப்போல் எதுவுமே அடிக்கடி தவறாகத் திறக்கப்படுவது
இல்லை.                                        ( யாரோ )

மெழுகு வர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீக்குச்சி.
அதை நினைத்து நினைத்து உருகியது
மெழுகு வர்த்தி.

விட்டுக்கொடுங்கள் , விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக்
கொடுங்கள் தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள்
அன்பு பெருகும்.

காலங்கடந்து அறியப்படும் தவற்றின் விதை  ஆரம்பத்திலேயே
விதைக்கப் பட்டது.

அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல் இருக்கும்போது நீங்கள் மனசு
சொல்வது மட்டும் கேளுங்கள் .ஏனென்றால் அறிவு..........சரி.
விடுங்கள்,இல்லாததைப் பற்றி ஏன் பேச வேண்டும்.?

நவீன இந்தியாவில் முன்னேறிய மாணவர்கள் ( F C ) எல்லாக்
கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

கொஞ்சம் சிரிக்க.
------------------------
மேலாளர்:-உன் தகுதி என்ன.?
சர்தார்.:-நான் Ph. D.
மேலாளர் :--Ph. D. என்றால் என்ன.?
சர்தார்:- Passed high school with difficulty.


நண்பன் 1:-நான் எது செய்தாலும் என் மனைவி குறுக்கே
                      நிற்கிறாள்.
நண்பன் 2:- காரை ஓட்டிப் பாரேன்.

      பல பொருட்களை வாங்கும்போது, அதன் விலை எம்.ஆர்.பி.
என்று ஒரு குறிப்பிட்ட தொகை எழுதியிருப்பதைக் காணலாம்
சில கடைகளை மார்ஜின் ஃப்ரீ ஷாப் என்று விளம்பரப்படுத்து
கிறார்கள்.அவர்கள் MRP யிலிருந்து கொஞ்சம் குறைத்து விற்கி
றார்கள். இருந்தும் லாபமில்லாமலா விற்கிறார்கள்.?அநேக
கடைகளில் MRP-க்கே விற்கிறார்கள்.சுத்திகரிக்கப்பட்ட சூரிய
காந்தி எண்ணை, சில கடைகளில் 3 அல்லது 4  ரூபாய்  குறை
வாகவும், சில கடைகளில் 7 அல்லது 8 ரூபாய் குறைவாகவும்,
அநேக கடைகளில் MRP-க்கே யும் விற்கிறார்கள்.

        இந்த MRP யாரால் நிர்ணயிக்கப்படுகிறது.?சாதாரண மனிதன்
குறிப்பிட்டுள்ள விலையை விட அதிகம் கொடுக்காமல் இருந்
தால் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டுமா.?உற்பத்தியாளர்
களுக்கும், டீலர்களுக்கும் ஏதோ அண்டர்ஸ்டாண்டிங் இருப்பது
போல் தோன்றுகிறது. நான் ஒரு மிக்சர் க்ரைண்டர் ரூ.2400-/
கொடுத்து வாங்கினேன். அதில் MRP யாக ரூ.3345-/ குறிப்பிட்டு
இருந்தது. கடைக்காரர் அவருக்குள்ள லாபத்தைக் குறைத்து
அந்த விலைக்கு எனக்குக் கொடுத்ததாகக் கூறினார். கடைக்காரர்
அதை ரூ.2000-/ க்கு வாங்கி யிருப்பதாக வைத்துக் கொண்டாலும்
MRP யாக ரூ.3345-/  இருப்பது, மிகவும் நெருடுகிறது. வாடிக்கை
யாளன் எஜமான் என்று கூறுவதெல்லாம் வெறும் கதைதானோ.?
-----------------------------------------------------------------------------------
.

( எழுதியதை படித்துப் பார்க்கும்போது கலிடாஸ்கோபில் வெரைட்டி 
இல்லை என்று தெரிகிறது. தலைப்பைப் பாருங்கள், புரியும்.)
-------------------------------------------------------------------------------------------------------. 
                     

         

திங்கள், 18 ஜூலை, 2011

கலாச்சாரக் காரணங்கள் .


        
 .
                                            ராம  ராஜ்ஜியம் எப்போது.?
                                           ------------------------------------ 
           

             லஞ்சம் ,ஊழல் , கையூட்டு, என்று நாளொரு வண்ணம் ,
பொழுதொரு கதையுமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த அளவுக்குப் பேசப்படும் விஷயத்துக்கு அடிப்படைக் காரணம்
குறித்து சிந்தித்தபோது, சில எண்ணங்கள் தோன்றின. அதையே
அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.வழக்கம்போல் என்
எண்ணங்களுக்கும், எழுத்துக்கும் எதிர்மறைக் கருத்துக்கள்
நிச்சயம் இருக்கும். இருக்கட்டுமே. ஆரோக்கியமான சிந்தனைக்கும்
விவாதத்துக்கும்,நம்மை நாமே உணரவும் இது ஒரு வாய்ப்பாக
இருக்கும் என்ற நம்பிக்கையே என்னை இதை எழுதச் செய்கிறது

           இந்தியாவில் லஞ்சம் ,ஊழல் , கையூட்டு, எல்லாமே நம்
கலாச்சாரத்தின் பரிணாமமே. நாம் ஊழலையும் லஞ்சத்தையும்
சர்வ சாதாரணமாக அணுகுகிறோம். எடுத்துக்கொள்கிறோம். அது
வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சம் என்று நம்மை அறியாம
லேயே எடுத்துக்கொள்கிறோம், நம்புகிறோம். எந்த இனமும்
ஊழல் இனமாக இருக்கமுடியாது. ஆனால் கலாச்சாரமே
ஊழலுக்கு வித்தாக இருக்க முடியுமா.?இருக்கும்போல்தான்
தோன்றுகிறது.

           முதலில் இந்தியாவில் மதமே பேரம் பேசுதலை ஒப்புக்
கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நாம், இந்தியர்கள்
கடவுளிடமே பேரம் பேசி ( TRANSACT  BUSINESS.) கடவுளுக்குப்
பணம் கொடுக்கிறோம். அதற்குப் பலனை எதிர்பார்க்கிறோம்.
இந்த முறையில் தகுதி இல்லாதவரும் பலன் பெருவதை
சாதாரணமாக நினைக்கிறோம். பணம் படைத்தவன் கடவுளுக்கு
ப்ணமும், பொன்னும் மணியும் வாரிக்கொடுக்கிறான்.பலனை
எதிர்பார்க்காமலா.?இந்தக் காரியம் கோயில் சுவர்களுக்கு
வெளியில் நடந்தால் லஞ்சம் என்ற பெயரில்தானே அழைக்கப்
படுகிறது. கடவுளின் உண்டியலில் வாரிக் கொட்டுபவன் பசித்
திருக்கும் தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதை, வீண் என்றும்,
பலன் இல்லாதது என்றும் எண்ணுகிறான்

          2009/-ல் ஒரு செய்தி பத்திரிகைகளில் இரண்டு மூன்று 
நாட்கள்  வந்து கொண்டிருந்தது.கர்னாடகா மந்திரி ஒருவர், 
திருப்பதி ஏழுமலையானுக்கு  ரூபாய்  45/- கோடி  செலவில், 
தங்கத்தில் வைரங்கள் இழைக்கப்பட்ட ஒரு கிரீடம் சாத்தினார். 
அதனால்தான் இதுவரை எந்த  சிக்கலிலும்  சிக்கிக்  கொள்ளாமல் 
தப்பி வருகிறோம் என்று நினைக்கிறாரோ என்னவோ.!

           கோயில்களில் கொட்டிக் கிடக்கும் பணம் பெரும்பாலும் 
என்ன செய்வது என்று தெரியாமலேயே வைக்கப் பட்டுள்ளது..
மேலை நாட்டவர் இந்தியா வந்தபோது, பள்ளிகள் கட்டினார்கள். 
இந்தியர்கள் வெளிநாட்டுக்குப்போய், கோயில்கள் கட்டுகிறார்கள். 
கடவுளே அருளைத்தர, பணம் பெற்றுக்கொள்ளும்போது, சாதா
மனிதர்கள் காரியங்களை நடத்திக் கொடுக்க, லஞ்சம் வாங்குவது, 
தவறில்லை என்ற மனோபாவம் வளர்ந்து விட்டது. லஞ்சம் 
வாங்குவதோ கொடுப்பதோதவறில்லை என்றும், அது அவமானப்
பட வேண்டிய விஷயம் அல்ல என்றும் சாதாரணமாகக் கருதப் 
படுகிறது. Ther is no stigma attached to being corrupt. இது வாழ்வின் இன்றி 
யமையாத அம்சம் என்ற எண்ணம் அநேகமாக எல்லோருக்கும் 
இருக்கிறது. Corruption has become a way of life. இல்லையென்றால் ஊழல் 
குற்றங்களுக்குப் பெயர் போய், பல குற்றச்சாட்டுகள்  நீதி 
மன்றங்களில் நிலுவையில் இருந்தும், எதுவுமே நடக்காதது
போலும், நாட்டையே ரட்சிக்க  வந்தவர் போலும்  வேடமிடும் 
ஒருவர், மக்களின் பெரு மதிப்போடு ஒரு மாநிலத்துக்கு முதல்வர் 
ஆக முடியுமா.? 

         இந்தக் கலாச்சாரக்கேடு நம் இந்திய சரித்திரத்தை புரட்டினாலே
புரியும்.நகரங்களும் நாடும் மாற்றானுக்கு அடிமைப்பட தேவைப் 
பட்டதெல்லாம் கையூட்டுதான். கோட்டையின் கதவுகள் திறந்து 
விடப்படும். சேனாதிபதிகள் சரணடைவார்கள். இந்தியாவில் 
நடந்த போர்களெல்லாம் ஐரோப்பா மற்றும் பழைய கிரேக்கப் 
போர்களோடு ஒப்பிடும்போது எப்படி பிசுபிசுத்தது என்று புரியும். 
துருக்கியின் நாதிர்ஷாவுடனான போரின் உக்கிரம் கடைசி மனிதன் 
இருக்கும்வரை நடந்ததாக சரித்திரம் கூறுகிறது. இந்தியாவில் 
ஆயிரக்கணக்கான போர் வீரர் இருந்தாலும் அவர்களை வெல்ல 
சில நூறு பேர்களே போதுமானதாக இருந்தது. ஏனென்றால் 
இந்தியப் படைகளில் கறுப்பு ஆடுகள் லஞ்ச லாவண்யத்துக்கு 
மயங்கி, மாற்றானின் வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்திய 
சரித்திரப் புகழ் பெற்ற ப்ளாஸி யுத்தம், ராபர்ட் க்ளைவ்  மீர் ஜாஃபரை 
தன் கைக்குள் போட்டுக் கொண்டதால் ,வெறும் 3000  வீரர்களை 
வைத்துக்கொண்டு, வங்காளத்தை  வளைத்துப் போட்டு 
பிசுபிசுத்துப் போனது.

           1687-ல் கோல்கொண்டா கோட்டை ரகசியப் பின் வாசல் 
திறக்கப் பட்டதால் வீழ்ந்தது. முகலாயர்கள் மராத்தியரையும் 
ராஜபுத்திரர்களயும் வெறும் வஞ்சத்தாலும் லஞ்சத்தாலும் 
வென்ற கதைகள் நிறைய உண்டு. 

          இந்த பேரக் கலாச்சாரங்கள் ஏன் கேள்வி கேட்கப்படாமலேயே 
தழைத்து வருகிறது.?

           இந்தியர்கள் அனைவரும் சமம் என்று எண்ணுவதிலலை. 
எல்லோரும் முன்னேற முடியும் என்று நம்புவதில்லை. ஏன் 
என்றால் வாழையடி வாழையாக அவர்கள் அவ்வாறு போதிக்கப் 
படவில்லை. இதனாலேயே ஹிந்து மதமே பிளவு பட்டு, சீக்கியம், 
ஜைனம், புத்தம் என்று பிரிந்தது. சாதி,மத இன வேறுபாடுகள் 
காரணமாக நாம் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. இந்தியாவில் 
இந்தியர்கள் இல்லை. ஹிந்துக்களும், கிருத்தவர்களும், முஸ்லீம்
களும், இன்னும் பல பிரிவு சார்ந்தோரே இருக்கின்றனர். இதில் 
வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த ஏற்ற 
தாழ்வுகளெல்லாமே சமூக மத அங்கீகாரம் பெற்றவை.


           இதையெல்லாம் எண்ணிப்பார்த்து ஆராயக்கூடிய கல்வி
அறிவு,பெரும்பாலானோருக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. 
இன்னவனுக்கு இன்ன வேலை யென்று வரையறுத்து ,அவர்களை 
கிணற்றுத் தவளைகளாகவே மாற்றிவிட்ட சமுதாயம் இது. 
 நிலைமை மாறி, தற்போது எல்லோருக்கும் கல்வி, என்ற நிலை 
வரும்போது, தாழ்ந்திருந்தவர்கள் முதன் முதலில், கற்றுக் கொள்
வது, இந்த சமுதாயத்தின் எல்லா சீர்கேடுகளையும்தான். மன்னன் 
எப்படி மக்கள் அப்படி. தற்காலத்துக்கு தலைவனெப்படி தொண்டன் 
அப்படி.கடந்த சமுதாயம், தற்கால சமுதாயம் எல்லாமே, நல்லதை 
விட்டு அல்லாதவற்றைப் பின்பற்றுகிறது. Exception can not be a rule.   

           சுமார் நானூறு ஐநூறு வருடங்களுக்கு  முன் அனைவரும் 
ஒரே இனமாக எண்ணப்பட்டிருந்தனர். இதற்குப் பின் ஏற்பட்ட 
பிரிவினைகள் கலாச்சார சீர்கேட்டுக்கு வித்திட்டு இருக்கிறது. 
இந்தியாவில் ஒவ்வொருவனும் மற்றவனுக்கு எதிரி. ஆண்ட
வனைத் தவிர என்று எடுத்துக் கொள்ளலாமா.?
------------------------------------------------------------------------- 

          
                            

                                                                         

சனி, 16 ஜூலை, 2011

விளக்கம் வேண்டி.....

    விளக்கம் வேண்டி....
--------------------------
          இந்த பதிவை வெளியிட எனக்கு சற்று வருத்தமாக
இருக்கிறது. வலையுலகில் பதிவர்களாக இருப்பவர்கள்,
பலர் பல விஷயங்களில் விற்பன்னர்களாக இருக்கலாம்.
ஒருவருக்கொருவர் ஊக்கம் கொடுத்து, நல்ல விஷயங்கள்
வெளிவரும்போது, ஆதரவு கொடுத்து, கருத்து மாற்றங்கள்
இருந்தால் அதை ஆரோக்கியமான முறையில் எடுத்துரைத்து
போவதுதான் நன்மை பயக்கும் என்பது என் நம்பிக்கை.

    “ஆலய தரிசனப் பயணம் “என்ற என் பதிவில், ரத பந்தனக் கவி
பற்றி தமிழறிஞர்கள் விளக்கம் த்ரக்கேட்டு எழுதியிருந்தேன்.சங்க
காலப் பாடல்களுக்கு எளிமை வடிவம் தர விரும்புபவர்களும்
அதற்கு கோனார் நோட்ஸ் போடத்தயாராய் இருப்பவர்களும்
எனக்கு விளக்கம் தர முயல்வார்கள் என்றும், ஒரு சமயம்                           அவர்கள் என் பதிவுகளைப் படிக்காதவர்களாய் இருந்தால் , வேறு             படித்தவர்,அறிந்தவர் விளக்கம் தர முயல்வார்கள் என்றும்           நம்பியிருந்தேன்ஆனால் தமிழில் வல்லுனர்களாக நான்
மதிக்கும் யாரும், என் பதிவைப் படிக்கவோ,படித்திருந்தால்
விளக்கம் அளிக்கவோ முயலவில்லை என்பது தான் வருத்தம்
தருகிறது. ஒரு வேளை, நான் அந்தப் பாடல்களை வெளியிடாதது
காரணமாயிருந்தால், அதனை நிவர்த்தி செய்ய இத்துடன்
அவ்விரு பாடல்களையும் வெளியிடுகிறேன். எனக்குப் பொருள்
விளங்குவது கடினமாயிருக்கிறது என்று ஏற்கெனவே கூறி
இருந்தேன். மேலும் இது கவிதையின் ஒரு வரிவடிவமாக
இருக்கலாமோ என்று விளக்கம் வேண்டியும் எழுதியிருந்தேன்.
கால தாமதமானாலும் விடை கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
இந்தக் கவிதைகளை நான் எடுத்து எழுதும்போது ஏதாவது பிழை
இருந்தால், நானே அதற்குப் பொறுப்பு. எழுதிய நேரமும், கிடைத்த
அவகாசமும் காரணமாயிருந்திருக்கலாம். இனி அந்தப்
பாடல்கள்:-

    திருமங்கையாழ்வார் அருளிச் செய்த திருவெழுக்கூற்றிருக்கை
------------------------------------------------------------------------------------
ஒரு பேரூந்தியிருமர்த்தவிசில்
ஒருமுறையயனையீன்றனை* ஒருமுறை
இருசுடர்மீதினிலியங்கா*மும்மதி
ளிலங்கையிருகால்வளைய *ஒருசிலை
யொன்றிய ஈரயிற்றழல்வாய்வாளியி
லட்டனை*மூவடி நானிலம் வேண்டி*
முப்புரிநூலொடு மானுரியிலங்கு
மார்வினில் *இருபிறப்பொரு மாணாகி*
ஒருமுறையீரடிமூவுலகளந்தனை*
நாற்றிசைநடுங்கவஞ்சிறைப்பறவை
யேறி*நால்வாய்மும்மதத்திருசெவி
யொருதனிவேழத்தரந்தையை*ஒருநா
ளிருநீர்மடுவுள் தீர்த்தனை*முத்தீ
நான்மறை ஐவகைவேள்வி*அறுதொழி
லந்தணர்வணங்கும் தன்மையை*ஐம்புல
னகத்தினுள்செறுத்து *நான்குடனடக்கி
முக்குணத்திரண்டவையகற்றி*ஒன்றினி
லொன்றிநின்று*ஆங்கிருபிறப்பறுப்போ
ரறியும் தன்மையை*முக்கண்நாற்றோ
ளைவாயரவோடு*ஆறுபொதிசடையோ
 னறிவரும் தன்மைப்பெருமையுள் நின்றனை*
ஏழுலகெயிற்றினில் கொண்டனை*கூறிய 
வறுசுவைப்பயனுமாயினை*சுடர்விடு
மைம்படையங்கையுள மர்ந்தனை*சுந்தர
நாற்றோள் முந்நீர் வண்ணா !*நின்னீரடி
யொன்றியமனத்தால்*ஒருமதிமுகத்து
மங்கையரிருவருமலரென*அங்கையில்
முப்பொழுதும் வருடவறிதுயிலமர்ந்தனை*
நெறிமுறை நால்வகை வருணமுமாயினை
மேதகுமைப்பெரும் பூதமும் நீயே*
அறுபதமுரலும் கூந்தல்காரணம்*
ஏழ்விடையடங்கச்செற்றனை*அறுவகைச்
சமயமுமறிவரு நிலையினை*ஐம்பா
லோதிகையாகத்திருத்தினை*அறமுதல் 
நான்சுவையாய்மூர்த்திமூன்றாய்*
இருவகைப்பயனா றொன்றாய்விரிந்து
நின்றனை*குன்றாமதுமலர்ச்சோலை
வண்கொடிப்படப்பை*வருபுனல்பொன்னி 
மாமணியலைக்கும்*செந்நெலொண்கழனித்
திகழ்வனமுடுத்த *கற்போர்புரிசை
கனகமாளிகை*நிமிர்கொடிவிசும்பி
விளம்பிறை துவக்கும்*செல்வமல்குதென்
திருக்குடந்தை*அந்தணர்மந்திரமொழியுடன்
வணங்க *ஆடரவமளியிலறிதுயிலமர்ந்த 
பரம *நின்னடியினைப்பணிவன்
வருமிடரகலமாற்றோவினையே..!
---------------------------------------------

  திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருவெழு கூற்றிருக்கை.
---------------------------------------------------------------------------------
ஓருருவாயினை;  மானாங்காரத்து
ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் 
படைதளித்தழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவனாகி நின்றனை;
ஓசால் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழுதேத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை
இருநிதி அரவமொடு ஒரு மதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூவிகச் சூலம்
நாற்கால் மான்மதி ஐந்தலை அரவம்
ஏந்தினை;காய்ந்த நால்வாய் மும்மதத்து 
இருகோட்டு ஒருகரி ஈடழித்து உரித்தனை;
ஒருதனு இருகால் வளைய வாங்கி 
முப்புரத்தோடு நானிலம் அஞசக் 
கொன்று தலத்துற அவுணரை அறுத்தினை;
ஐம்புலம் நாலாம் அந்தக் காரணம் 
முக்குண இருவளி ஒருங்கிய வானோர் 
ஏத்த நின்னை;ஒருங்கிய மனத்தோர்
இருபிறப்புஓர்ந்துமும்பொழுதுகுறைமுடித்து
நான்மறை ஓதி ஐவகை வேள்வி 
அமைத்து ஆறங்க முதல் எழுத்து ஓதி
வரன்முறை பயின்று, எழுவாந்தனை 
வளர்க்கும் பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலியமைந்துணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை; 
பரணி மூவுலகும் புதைய மேல் மிதந்த தோணிபுரத்து 
உறைந்தனை;தொலையா இருநிதிவாய்ந்த பூந்தராய்
ஏய்ந்தனை;ஒருபுரம் என்றுணர் சிரபுரத்து 
உறைந்தனை;ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கொடுத்து அருளினை;புறவும் புரிந்தனை;
முந்நீர் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை; ---------அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உரைங்க் காழியமர்ந்தனை;
எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும் ஐந்தமர்க்கல்வியும்
மறைமுதல் நான்கும்
மூன்று காலமும் தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் 
அடைத்தன்மையை யாதலின் நின்னை
நினைய வல்லவரில்லை நீள் நிலத்தே.
------------------------------------------------------ 
 (திருக்கோயில்களில் எழுதியிருந்தவற்றை பிரதி எடுக்கவும்
  அவற்றை தட்டச்சு செய்து கணினியில் ஏற்றவும் நான் மிகவும் 
 பிரயாசைப்பட்டு விட்டேன். தமிழில் நான் அறிந்தது கடுகளவிலும் 
 சிறியது என்று என்னை உணரவைத்த அனுபவம் இது. பார்ப்போம். 
 யார் யார் சிரமப் படுகிறார்கள் என்று. )

வியாழன், 14 ஜூலை, 2011

ச்சும்மா .....தமாஷுக்கு.

ச்சும்மா    தமாஷுக்கு....
-------------------------------
தமாஷ் 1/
                        தன் தாயிடம்  அடி வாங்கிய சிறுவன் ஒருவன் சோகமாக 
ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அதைக்  கண்ட அவன்  தந்தை 
அவனருகில் பரிவுடன் வந்து,  நடந்தது  என்ன என்று  விசாரித்தார். 
கோபமும் , அழுகையும் ஒருங்கே  சேர  அந்த   சிறுவன்  “ அப்பா வரவர 
உன் மனைவியின்  தொல்லை அதிகமாகிறது. உன்னைப்  போல்  உன் 
மனைவியுடன் என்னால் ஒத்துப்போக  முடியவில்லை.  நான் ஒத்துப்
போக  எனக்கு ஒரு மனைவி  வேண்டும்  “ என்றான். 

தமாஷ் 2/- 


                       சிறுவன் ஒருவனுக்கு சின்ன சின்ன செலவுகளுக்கு  பணம் 
தேவைப் பட்டது. அப்பா, அம்மா  யாரிடம் கேட்டாலும் கிடைக்க வில்லை. 
பலவாறு சிந்தித்து  கடைசியில் ஒரு உபாயம் கண்டான். கடவுளிடமே 
பணம் கேட்க முடிவு செய்து  தன் கஷ்டங்களைக் கூறி  தனக்கு ரூபாய் 50/-
அனுப்புமாறு வேண்டி கடிதம் எழுதி --கடவுள்   இந்தியா--- என்று விலாசம் 
எழுதி தபாலில் போட்டான்..கடிதம் கண்ட தபால் துறையினர் அந்தக் 
கடிதத்தை  இந்திய ஜனாதிபதிக்கு  அனுப்பினார்கள்.
                      கடிதம் கண்ட ஜனாதிபதி பையனின் சாதுர்யத்தை  மெச்சி
அவனுக்கு  பணம் அனுப்ப  முடிவு செய்தார்.சிறுவனுக்குப் பணத்தின் 
அருமை தெரிய வேண்டுமென்று  கருதி கேட்ட பணம் ஐம்பதுக்குப் 
பதில்  ரூபாய் 20/- அனுப்பச் சொன்னார்.  பணம் கிடைத்த சிறுவன் 
மகிழ்ச்சி அடைந்து  கடவுளுக்கு  நன்றி  கூறி ஒரு கடிதம் எழுதினான். 
கடவுளே, என் வேண்டுதலுக்கு இணங்கி நீங்கள் பணம்  அனுப்பியதற்கு 
மிக்க நன்றி. இருந்தாலும் நான் உங்களுக்கு  ஒரு விஷயம் தெரிவிக்க 
வேண்டும். ஜனாதிபதி  அலுவலகம் மூலமாக  நீங்கள்  அனுப்பச் சொன்ன 
பணத்தில்  ரூபாய் 30/- லஞ்சமாக எடுத்துக் கொண்டு  ரூபாய் 20/- மட்டுமே 
அனுப்பினார்கள் ’
------------------------------------------------------------------------------------  
         ( சீரியஸான ஒன்றிரண்டு பதிவுகளுக்கு முன் சற்று ரிலாக்ஸாக. )

செவ்வாய், 12 ஜூலை, 2011

ஆலய தரிசனப் பயணம்.

         
                         அடியவன்  கை வண்ணத்தில்  சமயபுரத்து அம்மன். 
                                      ================================.    

பதிவுலகில் பத்து நாட்கள் வரை தொடர்பில் இல்லாமல் இருந்தது
எதையோ இழந்த மாதிரித் தோன்றுகிறது. ஒவ்வொரு வருடமும்
ஜூன் மாதக் கடைசியிலோ, ஜூலை மாதத் துவக்கத்திலோ சமய
புரம், வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு
கடந்த சுமார் இருபது வருடங்களாகத் தொடர்ந்து சென்று வருவது,
வழக்கமாகி உள்ளது. சில நம்பிக்கைகள் நம்மை நகர்த்துகின்றன.
நாங்கள் விஜயவாடாவில் இருந்த சமயம், என் மனைவியின்
இடது கை கட்டைவிரல் பக்கம், ஓரிறு மருக்கள் ( பாலுண்ணி   என்பார்கள்.)தோன்ற ஆரம்பித்து, நாளடைவில் பார்ப்பவர்
எல்லோரும் கேட்கும் விதத்தில் வளர ஆரம்பித்திருந்தது.

    அங்கிருந்த டாக்டர். சமரம் என்பவர் (இவர் ஆந்திராவின் பெரியார்
என்று அறியப்பட்ட திரு. கோரா என்பவரின் மகன் ) அவற்றால்
பாதகமில்லை என்றும், தேவை என்றால் அறுவை சிகிச்சை
மூலம் அகற்றி விடலாம் என்றும் கூறின்ர்.பிற்கு பார்த்துக்                  கொள்ளலாம் என்று நாங்களும் விட்டு விட்டோம்.எனக்கு
மறுபடியும் திருச்சிக்கே மாற்றலாகி வந்தபோது, அந்த மருக்கள்
எண்ணிக்கை அதிகரிக்க, பி.எச்.இ.எல்  -ல்சருமநோய் டாக்டர்.
லால் என்பவரிடம் காண்பித்தோம். இதற்கெல்லாம் டாக்டரிடம்
வரத் தேவை இல்லை; சமயபுரத்திலும் ,வைத்தீஸ்வரன்
கோயிலிலும் வேண்டிக்கொண்டு, உப்பு ,மிளகு போடுதல்
போதும் என்றார். ஒரு சரும நோய் டாக்டர் இப்படிக் கூறியது
ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும்நாங்கள் அவர் சொன்னபடி,
கோயில் சென்று வேண்டிக்கொண்டோம். எங்களுக்கே தெரியா
மல் அந்த மருக்கள் இருந்த இடம் காணாமல் போய்விட்டன.
கிட்டத்தட்ட அந்த  சமயத்திலிருந்து எங்கள் வருடாந்திர பிரார்த்
தனை துவங்கியது எனலாம்

        நாங்கள் இந்த முறை, திருச்சியில் சமயபுரம், ஸ்ரீரங்கம், திரு
ஆனைக்கா, வெக்காளி அம்மன் கோயில், உத்தமபுரம் ,மலைக்
கோயில், போன்ற இடங்களுக்கும், வைத்தீஸ்வரன் கோயில் ,
சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லை காளி கோயில், திருவாரூர்,
திருநாகேஸ்வரம் ,ஒப்பிலியப்பன் கோயில், குடந்தையில் சாரங்க
பாணி கோயில், இராமநாதஸ்வாமி கோயில், கும்பேஸ்வரர்
கோயில் என்று ஆலய தரிசனம் செய்து வந்தோம். எங்கள்
தரிசனம் பற்றியோ, அங்குள்ள தெய்வங்களின் பெருமை மற்றும்
வரலாறு பற்றியோ நான் இங்கு எழுதப் போவதில்லை. இந்தப்
பயணத்தில் ஒரு சில விஷயங்களைப் பற்றி மட்டும் பகிர்ந்து
கொள்கிறேன். எல்லாக் கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழி
கிறது. இதைப் பார்க்கும்போது மக்களின் நம்பிக்கையே
அவர்களின் வாழ்வை நகர்த்துகிறது என்பது தெளி வாகிறது.

         எல்லாக் கோயில்களிலும் அலைமோதும் பக்தர்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள்  கூடுவதைக் காணும்போது, எத்தனை
பேருக்கு என்னென்ன தேவை ,முறையீடு, எல்லாவற்றையும்
கவனித்து ஆட்கொள்ளும் ஆண்டவனிடம் உள்ள நம்பிக்கையே
நம் மக்களை நகர்த்துகிறது என்பது கண்கூடு.

         இந்த வயதில் மலையேறி தரிசனம் செய்ய வேண்டுமா,
உடம்பு தாங்குமா என்றெல்லாம் கவலைப்பட்ட மனைவியையும்
கூட்டிக்கொண்டு மலையேறி தரிசனம் செய்தோம். திருச்சி மலைக்
கோயிலில் தாயுமானவர் சன்னதியிலிருந்து, உச்சிப் பிள்ளையார்
சன்னதிக்குப் போகும் வழியில் பல்லவனின் கல்லில் குடைந்த
கோயில் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுக்களில் இருக்கும் பாடல்
பற்றியும் திரு.ஹரணி அவர்கள் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பல முறை நான் அங்கு சென்றிருந்தும் என் கண்ணில் படாத அந்த
கல்வெட்டுப் பாட்டைக் காணவேண்டும் என்ற என் ஆவல் நிறை
வேறவில்லை. அங்கு வரும் மக்கள் அந்த இடத்தை அசிங்கப்
படுத்துகிறார்கள் என்பதால் அங்கு போக முடியாதபடி வழியை
அடைத்திருந்தார்கள் ( நாங்கள் போன சமயம். )

         ஒவ்வொரு முறை போகும்போதும் மாற்றங்கள் தெரிந்து
கொண்டே இருக்கின்றன. கூரையில்லாத வெக்காளி அம்மனுக்கு
மட்டும்தான் இப்போது கூரையில்லை. மற்றபடி எல்லா
விதத்திலும் மாற்றம் தெரிகிறது.

        அரங்கத்தானை தரிசிப்பது மிகவும் கடினமான காரியமாகத்
தெரிகிறது. நேரம் காலம் என்று திட்டமிட்டு பயணிப்பவர்க்குத்
தரிசனம் கிடைப்பது திண்டாட்டம்தான்.தலைக்கு ரூபாய் 250/-
கொடுத்தும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில்
நிற்க வேண்டி இருந்தது.

       சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாள் விழா நடந்து
கொண்டிருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் வீதி உலா துவங்கு
கிறது. தில்லை திருக்கோயிலில் இதுவரை பார்க்காத உண்டியல்
கள் ஆங்காங்கே காணப்படுகிறது. தில்லை அந்தணர்களுக்கும்
அரசாங்கத்துக்குமான உரிமைப் பிரச்சினை,கோர்ட் வாசல் வந்து
உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. பதினைந்து பதினாறு
வயசுப் பெண்கள், மடிசார்ப் புடவை கட்டி வருவதைப் பார்த்து,
குழந்தை திருமணம் சட்டப்படி செல்லாது என்று சொன்னால்
தீக்‌ஷிதர்கள் சொல்லும் காரணமே வேறு .கோயில்
கைங்கர்யங்களில் பங்கு கொள்ள அந்தணர்களுக்குத் திருமணம்
நடந்திருக்க வேண்டும். அதற்காகவே இந்த பால்ய விவாகங்கள்
என்று கூறுகின்றனர். இந்த முறை திருவிழாவின்போது மேலை 
நாட்டினர் பலரும், நம் நாட்டவரைப்போல் உடையணிந்து ( ஆண்
களும் பெண்களும் ) விழாவில் முன் நின்று பங்கு கொண்டதைக் 
காண முடிந்தது. நாம் அவர்கள் கலாச்சாரத்தைப் பின்பற்ற முயல, 
அவர்களோ நம் நடையுடை பாவனைகளில் மனம் லயிக்கிறார்கள். 

           கடந்த இருமுறையும்  திருவாரூர்  சென்றிருந்தும், எங்கள் 
கட்டுப்பாட்டில் இல்லாத ஏதோ சில காரணங்களால் ஆரூரானைத் 
தரிசிக்க முடியவில்லை. இந்த முறை எப்படியும்  தரிசித்தே தீருவது 
என்று சென்று கண்டு மகிழ்ந்தோம். என்ன..... மாலை ஆறு  மணிக்குத் 
தான் நடை திறக்கிறார்கள்.

          கும்பகோணத்தில் பலமுறை சென்றிருந்தும், கண்ணில் படாத,
பட்டும் மனசில் பதியாத ஒரு விஷ்யம், பதிவுலகிற்கு வந்த பிறகு 
கண்ணில் பட்டது. சாரங்கபாணி கோயிலிலும், கும்பேஸ்வரர் 

கோயிலிலும், சுவற்றில் ஒரு தேரின் படம் வரைந்து அதில் 
ஆண்டவனைப் பற்றிய பாடல்கள் எழுதப் பட்டிருக்கிறது. கட்டங்கள் 
 இட்டு, அதிலுள்ள எண்களின்  குறியீட்டைத் தொடர்ந்தால்  அழகான 
கவிதை தெரிகிறது. சாரங்கபாணி  கோயிலில், திருமங்கை  ஆழ்வார் 
அருளிச்செய்த  திருவெழுக் கூற்றிருக்கை  என்னும்  ரத பந்தனக் கவி
எழுதப் பட்டிருக்கிறது.  கும்பேஸ்வரர் கோயிலில்  திரு ஞான
சம்பந்தர்  அருளிய   திருவெழுக் கூற்றிருக்கை   ரத பந்தனக் கவயாக
காணப்படுகிறது. படித்துப் பார்த்தேன். எனக்குப் பொருள்  புரிவது 
கடினமா யிருந்தது. இரண்டு கவிதைகளையும்  எழுதி வந்திருக்கிறேன். 
பதிவர்களில் பலர்  தமிழறிஞர்கள்  என்று எனக்குத் தெரியும். இது 
பற்றி  திரு. ஹரணி, திரு. ஜிவி, திரு.எல்.கே. ,திரு.சுந்தர்ஜி, புலவர். இராமானுசம் யாராவது விளக்கம் கூறினால்  நன்றாயிருக்கும் என்று 
நினைக்கிறேன். அவை கவிதையின் ஒரு வரிவடிவம் என்று எண்ணு
கிறேன்.

          ஒவ்வொரு மாதமும்  குறிப்பிட்ட நட்சத்திர  நாட்களில் அர்ச்சனை 
செய்து  பிரசாதம்  அனுப்ப  வேண்டி  சில கோயில்களில்  பணம்  கட்டும் 
வழக்கம் உண்டு.  ஒரு நட்சத்திர  அர்ச்சனைக்கு  ஆண்டுக்கு ரூபாய் 200/- 
கட்டும்  காலம் கடந்து போய், இப்போது  ரூபாய் 600/- கொடுக்க வேண்டி 
உள்ளது. விலைவாசி உயர்வு அர்ச்சகர்களுக்கும்  உண்டுதானே.!

          ஒன்றை நிச்சயம் சொல்லியே தீர வேண்டும். ஒவ்வொரு  முறையும் 
கடவுள் சன்னதியில்  ஆண்டவன்  திரு உருவை சரியாகக் காண முடியாத
போதெல்லாம், ( விளக்கொளி  போதாமல் ) எனக்கு  மாதங்கி  மாலியின் 
நினைவே வந்தது. என் சந்தேகங்கள் என்ற பதிவுக்கு அவர் எழுதி இருந்த 
பின்னூட்டத்தில் , எந்த வடிவமானாலும் அது நாம் உருவகப் படுத்தியதே 
என்ற விதத்தில் இருந்தது. எவ்வளவு  உண்மை.! “நச்”  சென்ற பின்னூட்டம். 

          அடுத்த முறை ( அப்படி ஒரு நம்பிக்கை ) ஆலய தரிசனப்  பயணம் 
செய்யும்போது  இன்னும் என்னென்ன  நிகழ்வுகள்  நடந்திருக்குமோ.? 
--------------------------------------------------------------------------------------------


 

 
 
                                                                                                                                                                       
                                                                                             
.