வியாழன், 28 ஜூலை, 2011

எது கவிதை.?



    குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் கண்ட ரதபந்தன கவிதை
          -----------------------------------------------------------------------                   
                                    திருவெழுக்கூற்றிருக்கை
                                    -----------------------------------
     
எது கவிதை.?
-----------------
     -


  பாட்டெழுதுவது என்ன பெரிய பாடா, பாட்டா,
  என்றென் பேரன் கேட்டது ,கவிதை எழுத 
  கருவுக்காக காத்திருந்தபோது நினைவிலாடியது.
  உணர்வினால் உந்தப்பட்டு எழுதினால்
  அதில் உயிரிருக்கும், கவிதையும் வசமாகும்
 என்று நான் கூறியதும், உணர்வை சொல்லில்
 குழைத்துப் பார்த்தால் உதடு உதிர்ப்பதும்
 கவிதையாகும் என நண்பர் ரமணி எழுதியதும்
 என் சிந்தனையில் வந்து மோதியது.

       உணர்வுகள் முட்டி மோத நிகழ்வுகள்
       நடந்திருக்க வேண்டும். மனசும் பாதிப்படைந்து
       இருக்க வேண்டும்.புனைவுகளில் சாத்தியமா.?
       எழுதும்போது சொல்லாடல் செய்து
       இல்லாததை இருப்பதாய் கற்பிதம் செய்தால்,
       எழுதும் எழுத்தில் உயிர் இருக்குமோ ,உண்மை
       இருக்குமோ , எண்ணங்கள் கடத்தப்படுமோ.?

எண்ணியதை சொல்லவே தட்டுத் தடுமாறும்
நெஞ்சம் மரபுப்படி எழுத அறிந்திருக்க வேண்டியது
என்னென்ன.?நிலவைப் பிடித்து அதன் கறைகள்
துடைத்து குறுமுறுவல் பதித்த முகம் என்று
எழுதும்போது அது புனைவுதான் என்றாலும்,
எழுதியது உருவகப் படுத்தினால் தோன்றுவதென்ன.?
பார்க்க மனம் விழையுமா, இல்லை சகிக்குமா.?

     சில கவிதைகள் படிக்கையிலே எழுத்தின் பின்புலம்
    அறியப்படாவிட்டால், மொழி அறிவிருந்தும்
    பொருளறிவு தெரியாமல் போகும்.

அடி சீர் தளை என்று அநேகம் உண்டு,
இலக்கணமுண்ர்ந்து கவிதை வடிக்க
எனக்கியலுமோ, தெரியவில்லை. 
    
     அண்மையில் குடந்தையில் திருவெழுக்கூற்றிருக்கை 
     ரதபந்தனக் கவியாகக் கண்டேன். இறைவனிடம் 
     இறைஞ்சும் கவிதை என்றமட்டில் புரிந்தது.
    புரிந்ததன் விளக்கம் வேண்டி பதிவுலகை அணுகினேன். 
    பலரும் உதவினர். கணினியும் உறுதுணை செய்தது. 
    படிக்கப் படிக்க நான் எழுதுவது கவிதை என்றெண்ணுதல் 
    அறியாமையின் உச்சம் என்றே உணர வைத்தது. 

கவிதைக்கு இலக்கணமுண்டு, மரபுண்டு, நியமமுண்டு, 
இன்னும் என்னென்னவோ இருக்க, வெறும் வார்த்தை 
அலங்காரங்களால் போர்த்த முயலுதல் அறியாமையின் 
விளைவன்றி வேறென்ன சொல்ல.?
      
     உணர்ச்சிகளும், உணர்வுகளும் உந்த எழுதுதல் 
     படிக்கப் பலனளிக்கலாம்.நம்மை அறிய உறுதுணை
    செய்யலாம்.. ஆனால் கவிதையாகுமா.?
  -------------------------------------------------------------- 

  




17 கருத்துகள்:

  1. கற்றது -கடுகளவு என்ற லேபில் விளக்குகிறது மொத்தப் பதிவையும்.... வெறும் இலக்கணமோ உணர்வோ கவிதையாகாது. இரண்டும் இணைந்தால் நல்கவிதை கிட்டும்.

    பதிலளிநீக்கு
  2. பாரதியும் இப்படி யோசித்திக்கொண்டிருந்தார் எனில்
    நமக்கு பாரதியின் கவிதைகள் கிடைக்காமலே போயிருக்கும்
    அரண்மனைகளில் அந்தப் புரங்களில் மன்னர்களின்
    அரிப்புக்கு மருந்தாக இருந்த கவிதைகளை
    சன்னதிகளில் கற்றவர்களுக்கு தெய்வத்திற்கும் மட்டுமே
    புரிந்தால் போதும் என இருந்த அருந்தமிழை
    மக்களிடம் கொண்டு சேர்த்த பெருங்கவிஞன் பாரதி
    அவன் இல்லையெனில் தமிழும் சமஸ்கிருதம் போல்
    பண்டித மொழியாகிப்போயிருக்கும்
    பாரதியார் காலத்தில் பாரதியின் படைப்புகள்
    கவிதைகளே அல்ல என் வாதிட்ட பண்டிதர்கள்
    நிறைய இருந்தனர்
    இன்றைய மொழியும் இன்றைய பிரச்சனைகளும் புதிது
    எனவே இன்றைய கவி வடிவங்களும் மாறித்தான் ஆகவேண்டும்
    இது காலத்தின் கட்டாயம்.
    அன்றைய நிலை இன்றைய நிலையோடு
    ஒப்பிட்டு நாம் மனம் சோரவேண்டியதில்லை.
    இலக்கணம் அறிந்துஇலக்கணத்தை மீறுகையில்தான்
    அது நமக்கு கைவசமாகும்
    இலக்கணத்திற்கு பயந்து எழுதுவதல்ல புதுக் கவிதை
    இது குறித்து விரிவாகக் கூட அவசியம் எனில் ஒரு பதிவிடும்
    எண்ணம் உள்ளது,
    நீங்கள் உணர்ந்து எழுதுவதை நான்
    உணரக் கூடிய வகையில் உங்கள் எழுத்து இருக்குமாயின்
    அது கவிதைதான்.அது உங்கள் படைப்பில் உள்ளது
    என்வே அடுத்த கவிதையை அடுத்த பதிவில்
    தர வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. பின்னூட்டத்தில் விவரமாக எழுத முடியவில்லை. ரமணி சாரும் இதுபற்றி அவசியம் எனில் ஒரு பதிவு எழுதும் எண்ணம் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். எனது தளத்தில், 'இலக்கிய இன்பம்' பகுதியில், 'கவிதை எழுதப் பழகலாம், வாருங்கள்!' என்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன். முடிந்தால் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான
    கருத்துக்களை உள்ளடக்கிய
    அருந்தமிழ் கவிதை
    ரமணி சாரின் கருத்துக்களை
    மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  5. உணர்ச்சிகளும், உணர்வுகளும் உந்த எழுதுதல்
    படிக்கப் பலனளிக்கலாம்.நம்மை அறிய உறுதுணை
    செய்யலாம்.. ஆனால் கவிதையாகுமா.?//correct

    பதிலளிநீக்கு
  6. //நீங்கள் உணர்ந்து எழுதுவதை நான்
    உணரக் கூடிய வகையில் உங்கள் எழுத்து இருக்குமாயின் அது கவிதைதான்.அது உங்கள் படைப்பில் உள்ளது//

    இன்றைய புரட்சிக்கவி திரு. ”யாதோ ரமணி” சாரே சொல்லிவிட்டார். எதைப்பற்றியும் அஞ்ச வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. கவிதைக்கு சந்தம் வேண்டும் கருத்துக்கள் நிறையவேண்டும் உருவத்தால் சிறுத்திருந்தாலும்
    உள்ளத்தைக் கவர வேண்டும் புதுக்கவிதைகளில் இவைகள் இல்லை என்றால்தான் அது கவிதை இல்லை.
    பாரதி கவிதைகளை பரிசீலித்த காலம்போய் இன்று கவிதைகளே பாரதி கவிதைகளுக்கு முன் பாரதி
    கவிதைகளுக்குப் பின்
    என்றாகிவிட்டது.அன்று ஒதுக்கப்பட்ட புதுக்கவிதைகளின் வரவேதான்
    இன்று எம்போன்றவர்களையும் கவிதைகள் கிறுக்கத் துணிவைக் கொடுத்தது.நான் பாரதி
    கவிதைகளுக்குமட்டும்
    அடிமைப் பெண்.என் கருத்துகளில் தவறு இருப்பின் மன்னிக்கவும் .உங்கள் கவிதைகள் சிறப்புற என்
    வாழ்த்துக்கள் ........பகிர்வுக்கு மிக்க நன்றி உறவே....

    பதிலளிநீக்கு
  8. கவிதை(யும்) எனக்கு எழுத வராது. வார்த்தைகளை மடக்கிப் போட்டு தப்பித்து விடுவேன்! விதையாகும் எண்ணம் கதையாகும்போது சொல்லப் படும் மற்றும் படிப்பவர் மனதில் ஏறும் வகையால் கவிதையாகிறது!

    விதையாகும் எண்ணம்
    கதையாகும்போது
    சொல்லப் படும்,
    மற்றும் படிப்பவர்
    மனதில் ஏறும்
    வகையால்
    கவிதையாகிறது!

    இப்படி...! எனக்கு இலக்கியமும் தெரியாது. இலக்கணமும் வராது.

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம்!

    //எனக்கு இலக்கியமும் தெரியாது. இலக்கணமும் வராது...//

    'பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக் கூடந்தான் நானறியேன்' நினைவுக்கு வந்தது..

    பதிலளிநீக்கு
  10. கவிதையைப் பற்றி தோன்றின ஐயப்பாடு சிந்திக்க வைத்தது நண்பரே....

    வார்த்தை அலங்காரம் கொண்டிருக்கும் கவிதையெல்லாம் கவிதையாகுமா என்று தாங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி புதுக்கவிதைகளை நோக்கித்தான் என்று உணரப்படுகிறது..

    என்னைப்பொருத்தவரை கவிதை என்பது

    கண்கள் கண்ட நிகழ்வை,
    இதயம் பாதித்த ஒன்றை,
    பல வரிகளில் படைத்தான்..
    கவிஞன் ஒருவன்......

    படைத்தவனை பாதித்தது.... படிப்பவனை பாதித்தால்,,,

    அது "கவிதை"

    பதிலளிநீக்கு
  11. ஊமையாய் இருத்தலை விட உணர்ந்தோர் அதை பகிர்தல் மேலல்லவா..

    இலக்கணம் எல்லாவற்றிர்க்கும் உண்டு..அதைக் கொண்டு இலக்கியம் படைப்போரும் உண்டு..

    ஆயின் சிலர் இலக்கணமே படைக்கின்றனரே..அது தவறோ..?

    கருத்தும் காணும் பார்வையும் அல்லவோ முக்கியம்.

    உங்கள் பகிர்வே ஒரு கவிதையாய்த்தான் தோன்றியது எனக்கு.

    பதிலளிநீக்கு
  12. ஐயா!
    எது கவிதை.?என்ற தலைப்பிட்டு எழுதியள்ளதே
    கவிதை தான் துணிவாக எழுதுங்கள்
    நன்றாக வரும்.
    மேலும் இத் தலைப்பு பற்றி
    இன்றைய காலகட்டத்தில் விரிவாக
    நான் எழுதுவது வீண் சிக்கலை
    உருவாக்கும்
    தங்களின் மனவளம்
    கவிதை எழுதுவதற்கு உரியதே
    அச்சமின்றி தொடருங்கள்
    புலவர் சாஇராமாநுசம்
    முன்பே வந்து கருத்துரை
    தந்தீர்கள் நன்றி! வாருங்கள் மீண்டும்

    பதிலளிநீக்கு
  13. நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்.என் எழுத்தின் நோக்கமே ஆரோக்கியமான கருத்துப் பகிர்வுகளைஅறிந்து கொள்வதுதான்.கலாநேசன் சுருக்கமாகக் கூறிவிட்டார்.ரமணி அவர்கள் விஸ்தாரமாகக் கூறியுள்ளார்.ஜீவி அவர்களின் கவிதை எழுதப் பழகலாம் வாருங்கள் படித்தேன். நன்றாக அலசியிருக்கிறார்.படிக்க வேண்டிய பதிவு. ராஜகோபாலனும் கோபு சாரும் ரமணியின் கருத்துக்களை வழிமொழிகிறார்கள்.குணசேகரன் என் கருத்து ஒன்றை ஒப்புக் கொள்கிறார்அம்பாளடியாளும், ஸ்ரீராம், ஷெனிசி,வெட்டிப் பேச்சு முதலானோர் அவர்களுடைய எண்ண ஓட்டங்களை வெளியிட்டார்கள். மொத்தத்தில் ஒரு சிறந்த கருத்துரையாடல் நடந்திருக்கிறது. இந்தப் பதிவின் மூலம் எனக்கு வலையகத்தில் என் பதிவுகளை இணைக்க அழைப்பு வந்துள்ளது. புதிதாய் என் வலைப்பூக்கு வருகை தந்து கருத்து தெரிவித்த அம்பாளடியாள், ஷெனிசி, வலையகம் இவர்களுக்கு என் நன்றி . தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. புலவர் இராமானுசம் கருத்து தெரிவித்தால் சிக்கல் வரும் என்று எண்ணுகிறார். யார் மனமும் புண்படாமல் கருத்து தெரிவிப்பது தவறில்லை என்பதே என் எண்ணம், வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  15. எது கவிதை படித்தேன்.

    இது பற்றி சந்துருவின் பதிவின் இணைப்பு கொடுத்துள்ளேன் தங்களது கருத்துக்களை கூறலாம்.
    http://chandroosblog.blogspot.com/2010/04/tcp-ip.html

    பதிலளிநீக்கு
  16. சார் சத்தியமாகத் தங்கள் கேள்விகள் எங்களுக்குள்ளும் எழுந்தது. ஏனென்றால், கோவை ஆவி அவர்கள் ஆவிப்பா எனும் கவிதைநூல் வெளியீட்டின் போது, புலவர் ராமானுசம் ஐயா அவர்கள் பேசிய போது, மரபுக் கவிதையின் மேன்மை பற்றி பேசினார். அவரது கருத்தும் சரியே!

    ஆவிப்பா நூலில் உள்ளக் கவிதைகளை வாசித்தால் அவையும் இக்கால கட்டத்தின் ரசனைக்கேற்ப அழகான உணர்வுடன் கூடிய கவிதைகளாகத்தான் பட்டது. ஆனால் அதற்கும் பல எதிர்மறை விமர்சனங்கள் வந்தனதான். மகா கவி பாரதியாரின் கவிதைகளே விமர்சிக்கப்பட்ட போது, நாம் எழுதுவன எங்கே என்ற எண்ணம்தான் மேலோங்கியது எங்களுக்கு.

    நம் வலைப் பதிவர்களில் ரமணி ஜி புரட்சிகரமாய் எழுதுவது போல, புதிய வலைத்தளமான ஊமைக்கனவுகள் என்ற வலைத்தளத்தில் திரு விஜு ஜோசஃப் எனும் ஆங்கில ஆசிரியர் தமிழ் இலக்கணத்திலும், இலக்கணம் மாறா கவிதைப் புனைவிலும் அசத்தி வருகின்றார். அது போலத்தான் கவிஞர் கி பாரதிதாசன், கம்பங்கழகத் தலைவர், ஃப்ரான்ஸ் அவர்களும் வெண்பா, எழுசீர், அறு சீர் என்றெல்லாம் எழுதி வருகின்றார். அவரைப் போன்றே சகோதரிகள் பலரும் எழுதுகின்றனர். அதே சமயம் மரபு மீறிய, அறிவார்ந்த, உணர்வு பூர்வமானக் கவிதைகளைப் புனைந்து வருபவர்களும் உண்டு. கவிஞர் மு மேத்தா, கவிஞர் அப்துல் கோ எல்லோரும் இப்படிப் புனைபவர்கள்தான். அறிவும், உணர்வும், சார்ந்தவையாக இருக்கும், இப்போது சென்ரியு, ஹைக்கூ, லிமெரிக் கவிதைகள் என்று நல்ல கருத்துள்ளக் கவிதைகள் வலைத்தளங்களில் வருகின்றன.
    இப்படியாகக் கவிதைகள் பல மாறுதல்களுக்கு உட்பட்டுத்தான் இருக்கின்றன. மரபுக் கவிதைகளில் இருந்து, லிமெரிக் வரை.

    ஏதோ நாங்களும் எழுத முயன்றோம்.

    ரமணி அவர்களின் கருத்து சரியாகத்தான் படுகின்றது சார்.

    உங்கள் கவிதைகள் உணர்வுகள் உள்ளடக்கியவையே! மனதிற்கு புரிகின்றன. உணர்வுகள் மட்டுமல்ல, அறிவு சார்ந்தவையாகவும் உள்ளன.

    உணர்வுகளை, வார்த்தைப் பிரயோகங்களால் சொல்லுவதுதானே கவிதை சார்?!

    எங்களுக்கும் இலக்கணம் தெரியாது. இலக்கியம் தெரியாது. ஏதோ தோன்றியதுதான்....அது சரியா தவறா என்று தெரியவில்லை. ஏனென்றால் பின்னூட்டங்கள் அதைப் பற்றி விவாதிக்கவில்லை.

    எனவே தாங்களும் புனையாலாம். உங்கள் பாணியில்.


    பதிலளிநீக்கு

  17. @ புதிதாக கவிதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். பதிவின் பின்னூட்டங்களின் கலந்தாடல்கள் உங்கள் பார்வைக்கு வைக்கவே அழைப்பு விடுத்திருந்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு