Monday, July 18, 2011

கலாச்சாரக் காரணங்கள் .


        
 .
                                            ராம  ராஜ்ஜியம் எப்போது.?
                                           ------------------------------------ 
           

             லஞ்சம் ,ஊழல் , கையூட்டு, என்று நாளொரு வண்ணம் ,
பொழுதொரு கதையுமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த அளவுக்குப் பேசப்படும் விஷயத்துக்கு அடிப்படைக் காரணம்
குறித்து சிந்தித்தபோது, சில எண்ணங்கள் தோன்றின. அதையே
அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.வழக்கம்போல் என்
எண்ணங்களுக்கும், எழுத்துக்கும் எதிர்மறைக் கருத்துக்கள்
நிச்சயம் இருக்கும். இருக்கட்டுமே. ஆரோக்கியமான சிந்தனைக்கும்
விவாதத்துக்கும்,நம்மை நாமே உணரவும் இது ஒரு வாய்ப்பாக
இருக்கும் என்ற நம்பிக்கையே என்னை இதை எழுதச் செய்கிறது

           இந்தியாவில் லஞ்சம் ,ஊழல் , கையூட்டு, எல்லாமே நம்
கலாச்சாரத்தின் பரிணாமமே. நாம் ஊழலையும் லஞ்சத்தையும்
சர்வ சாதாரணமாக அணுகுகிறோம். எடுத்துக்கொள்கிறோம். அது
வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சம் என்று நம்மை அறியாம
லேயே எடுத்துக்கொள்கிறோம், நம்புகிறோம். எந்த இனமும்
ஊழல் இனமாக இருக்கமுடியாது. ஆனால் கலாச்சாரமே
ஊழலுக்கு வித்தாக இருக்க முடியுமா.?இருக்கும்போல்தான்
தோன்றுகிறது.

           முதலில் இந்தியாவில் மதமே பேரம் பேசுதலை ஒப்புக்
கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நாம், இந்தியர்கள்
கடவுளிடமே பேரம் பேசி ( TRANSACT  BUSINESS.) கடவுளுக்குப்
பணம் கொடுக்கிறோம். அதற்குப் பலனை எதிர்பார்க்கிறோம்.
இந்த முறையில் தகுதி இல்லாதவரும் பலன் பெருவதை
சாதாரணமாக நினைக்கிறோம். பணம் படைத்தவன் கடவுளுக்கு
ப்ணமும், பொன்னும் மணியும் வாரிக்கொடுக்கிறான்.பலனை
எதிர்பார்க்காமலா.?இந்தக் காரியம் கோயில் சுவர்களுக்கு
வெளியில் நடந்தால் லஞ்சம் என்ற பெயரில்தானே அழைக்கப்
படுகிறது. கடவுளின் உண்டியலில் வாரிக் கொட்டுபவன் பசித்
திருக்கும் தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதை, வீண் என்றும்,
பலன் இல்லாதது என்றும் எண்ணுகிறான்

          2009/-ல் ஒரு செய்தி பத்திரிகைகளில் இரண்டு மூன்று 
நாட்கள்  வந்து கொண்டிருந்தது.கர்னாடகா மந்திரி ஒருவர், 
திருப்பதி ஏழுமலையானுக்கு  ரூபாய்  45/- கோடி  செலவில், 
தங்கத்தில் வைரங்கள் இழைக்கப்பட்ட ஒரு கிரீடம் சாத்தினார். 
அதனால்தான் இதுவரை எந்த  சிக்கலிலும்  சிக்கிக்  கொள்ளாமல் 
தப்பி வருகிறோம் என்று நினைக்கிறாரோ என்னவோ.!

           கோயில்களில் கொட்டிக் கிடக்கும் பணம் பெரும்பாலும் 
என்ன செய்வது என்று தெரியாமலேயே வைக்கப் பட்டுள்ளது..
மேலை நாட்டவர் இந்தியா வந்தபோது, பள்ளிகள் கட்டினார்கள். 
இந்தியர்கள் வெளிநாட்டுக்குப்போய், கோயில்கள் கட்டுகிறார்கள். 
கடவுளே அருளைத்தர, பணம் பெற்றுக்கொள்ளும்போது, சாதா
மனிதர்கள் காரியங்களை நடத்திக் கொடுக்க, லஞ்சம் வாங்குவது, 
தவறில்லை என்ற மனோபாவம் வளர்ந்து விட்டது. லஞ்சம் 
வாங்குவதோ கொடுப்பதோதவறில்லை என்றும், அது அவமானப்
பட வேண்டிய விஷயம் அல்ல என்றும் சாதாரணமாகக் கருதப் 
படுகிறது. Ther is no stigma attached to being corrupt. இது வாழ்வின் இன்றி 
யமையாத அம்சம் என்ற எண்ணம் அநேகமாக எல்லோருக்கும் 
இருக்கிறது. Corruption has become a way of life. இல்லையென்றால் ஊழல் 
குற்றங்களுக்குப் பெயர் போய், பல குற்றச்சாட்டுகள்  நீதி 
மன்றங்களில் நிலுவையில் இருந்தும், எதுவுமே நடக்காதது
போலும், நாட்டையே ரட்சிக்க  வந்தவர் போலும்  வேடமிடும் 
ஒருவர், மக்களின் பெரு மதிப்போடு ஒரு மாநிலத்துக்கு முதல்வர் 
ஆக முடியுமா.? 

         இந்தக் கலாச்சாரக்கேடு நம் இந்திய சரித்திரத்தை புரட்டினாலே
புரியும்.நகரங்களும் நாடும் மாற்றானுக்கு அடிமைப்பட தேவைப் 
பட்டதெல்லாம் கையூட்டுதான். கோட்டையின் கதவுகள் திறந்து 
விடப்படும். சேனாதிபதிகள் சரணடைவார்கள். இந்தியாவில் 
நடந்த போர்களெல்லாம் ஐரோப்பா மற்றும் பழைய கிரேக்கப் 
போர்களோடு ஒப்பிடும்போது எப்படி பிசுபிசுத்தது என்று புரியும். 
துருக்கியின் நாதிர்ஷாவுடனான போரின் உக்கிரம் கடைசி மனிதன் 
இருக்கும்வரை நடந்ததாக சரித்திரம் கூறுகிறது. இந்தியாவில் 
ஆயிரக்கணக்கான போர் வீரர் இருந்தாலும் அவர்களை வெல்ல 
சில நூறு பேர்களே போதுமானதாக இருந்தது. ஏனென்றால் 
இந்தியப் படைகளில் கறுப்பு ஆடுகள் லஞ்ச லாவண்யத்துக்கு 
மயங்கி, மாற்றானின் வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்திய 
சரித்திரப் புகழ் பெற்ற ப்ளாஸி யுத்தம், ராபர்ட் க்ளைவ்  மீர் ஜாஃபரை 
தன் கைக்குள் போட்டுக் கொண்டதால் ,வெறும் 3000  வீரர்களை 
வைத்துக்கொண்டு, வங்காளத்தை  வளைத்துப் போட்டு 
பிசுபிசுத்துப் போனது.

           1687-ல் கோல்கொண்டா கோட்டை ரகசியப் பின் வாசல் 
திறக்கப் பட்டதால் வீழ்ந்தது. முகலாயர்கள் மராத்தியரையும் 
ராஜபுத்திரர்களயும் வெறும் வஞ்சத்தாலும் லஞ்சத்தாலும் 
வென்ற கதைகள் நிறைய உண்டு. 

          இந்த பேரக் கலாச்சாரங்கள் ஏன் கேள்வி கேட்கப்படாமலேயே 
தழைத்து வருகிறது.?

           இந்தியர்கள் அனைவரும் சமம் என்று எண்ணுவதிலலை. 
எல்லோரும் முன்னேற முடியும் என்று நம்புவதில்லை. ஏன் 
என்றால் வாழையடி வாழையாக அவர்கள் அவ்வாறு போதிக்கப் 
படவில்லை. இதனாலேயே ஹிந்து மதமே பிளவு பட்டு, சீக்கியம், 
ஜைனம், புத்தம் என்று பிரிந்தது. சாதி,மத இன வேறுபாடுகள் 
காரணமாக நாம் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. இந்தியாவில் 
இந்தியர்கள் இல்லை. ஹிந்துக்களும், கிருத்தவர்களும், முஸ்லீம்
களும், இன்னும் பல பிரிவு சார்ந்தோரே இருக்கின்றனர். இதில் 
வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த ஏற்ற 
தாழ்வுகளெல்லாமே சமூக மத அங்கீகாரம் பெற்றவை.


           இதையெல்லாம் எண்ணிப்பார்த்து ஆராயக்கூடிய கல்வி
அறிவு,பெரும்பாலானோருக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. 
இன்னவனுக்கு இன்ன வேலை யென்று வரையறுத்து ,அவர்களை 
கிணற்றுத் தவளைகளாகவே மாற்றிவிட்ட சமுதாயம் இது. 
 நிலைமை மாறி, தற்போது எல்லோருக்கும் கல்வி, என்ற நிலை 
வரும்போது, தாழ்ந்திருந்தவர்கள் முதன் முதலில், கற்றுக் கொள்
வது, இந்த சமுதாயத்தின் எல்லா சீர்கேடுகளையும்தான். மன்னன் 
எப்படி மக்கள் அப்படி. தற்காலத்துக்கு தலைவனெப்படி தொண்டன் 
அப்படி.கடந்த சமுதாயம், தற்கால சமுதாயம் எல்லாமே, நல்லதை 
விட்டு அல்லாதவற்றைப் பின்பற்றுகிறது. Exception can not be a rule.   

           சுமார் நானூறு ஐநூறு வருடங்களுக்கு  முன் அனைவரும் 
ஒரே இனமாக எண்ணப்பட்டிருந்தனர். இதற்குப் பின் ஏற்பட்ட 
பிரிவினைகள் கலாச்சார சீர்கேட்டுக்கு வித்திட்டு இருக்கிறது. 
இந்தியாவில் ஒவ்வொருவனும் மற்றவனுக்கு எதிரி. ஆண்ட
வனைத் தவிர என்று எடுத்துக் கொள்ளலாமா.?
------------------------------------------------------------------------- 

          
                            

                                                                         

11 comments:

 1. //ஆனால் கலாச்சாரமே ஊழலுக்கு வித்தாக இருக்க முடியுமா.?//

  முடியும். கையாலாகாத்தனம் என்பதும் ஒரு எதிர்மறை கலாச்சாரம் தானே?

  //பணம் படைத்தவன் கடவுளுக்கு ப்ணமும், பொன்னும் மணியும் வாரிக்கொடுக்கிறான்//

  முன்பு எப்படியோ, இப்போது ஏய்த்து ஈட்டிய பணத்தில் ஒரு பகுதியை உண்டியலில் போட்டு, தனது குற்ற உணர்வைக் குறைத்துக் கொள்ளத் துடிக்கிறானோ என்று தோன்றுகிறது.

  //கர்னாடகா மந்திரி ஒருவர், திருப்பதி ஏழுமலையானுக்கு ரூபாய் 45/- கோடி செலவில், தங்கத்தில் வைரங்கள் இழைக்கப்பட்ட ஒரு கிரீடம் சாத்தினார்.//

  பல வருடங்களுக்கு முன்னர், திருப்பதி உண்டியலில் ஒரு நவீனத்துப்பாக்கி இருந்ததாகவும் செய்தி வந்ததே! குற்றவாளிகள் கடவுளையும் கூட்டுச் சேர்க்கிறார்கள் என்பதற்கு சான்று.

  ஊழல் அரசியல்வாதிகள் தேர்தலில் ஜெயிப்பதற்கு முக்கிய காரணம், எதிர்க்கட்சிகளின் லட்சணம் தான்.

  உங்களது பெரும்பாலான கருத்துக்களோடு எனது அபிப்ராயங்களை அடையாளம் காண முடிகிறது ஐயா.

  ReplyDelete
 2. இன்னவனுக்கு இன்ன வேலை யென்று வரையறுத்து ,அவர்களை
  கிணற்றுத் தவளைகளாகவே மாற்றிவிட்ட சமுதாயம் இது.//

  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அதன்
  சிற்ப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையால் என்ற வாக்கு மற்ற நாடுகளில் டிக்னிட்டி ஆப் லேபர் என்று நடைமுறைப்பட்டுள்ளது.

  ReplyDelete
 3. //இந்தியாவில்
  இந்தியர்கள் இல்லை. ஹிந்துக்களும், கிருத்தவர்களும், முஸ்லீம்
  களும், இன்னும் பல பிரிவு சார்ந்தோரே இருக்கின்றனர். ///
  மிக உண்மையான வார்த்தைகள் அய்யா

  இந்தியர்களின் பேராசையும் உச்ச பட்ச சகிப்புதன்மையும் , குறுக்கு வழியில் காரியம் சாதிக்கும் எண்ணமே அனைத்திற்கும் காரணி.

  ReplyDelete
 4. இலவசங்கள் சோம்பேறீித்தனத்தை வளர்கிறது
  சலுகைகள் திறமை தேவையில்லை என போதிக்கிறது
  ஊழல் அனைத்தையும் சர்வ நாசம் செய்து போகிறது
  தங்கள் குறிப்பிடிருப்பதைப்போல அதற்கு
  மிகப் பெரிய சரித்திர பின்புலனும் உள்ளது
  அதுதான் இந்த ஆட்டம் போடுகிறது
  தரமான பதிவு தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 5. //சுமார் நானூறு ஐநூறு வருடங்களுக்கு முன் அனைவரும்
  ஒரே இனமாக எண்ணப்பட்டிருந்தனர். இதற்குப் பின் ஏற்பட்ட
  பிரிவினைகள் கலாச்சார சீர்கேட்டுக்கு வித்திட்டு இருக்கிறது.
  இந்தியாவில் ஒவ்வொருவனும் மற்றவனுக்கு எதிரி. ஆண்ட
  வனைத் தவிர என்று எடுத்துக் கொள்ளலாமா.?
  //


  இது ஆள்பவர்கள் தமக்கு வசதியாக ஏற்படுத்திக் கொண்ட சூழ்ச்சிதானே..

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் சார் ! கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக ஊள்ள்ளது உள்ளது.

  ReplyDelete
 7. கந்து வட்டி,கள்ளக்கடத்தல்,கலப்பட வியாபாரம் போன்ற சமூக விரோதிகளில் ஒரு சிலர், கடவுளை தங்கள் வியாபாரத்தின் ஒரு பார்ட்னர் போல நினைத்து, உரிய பங்கினை உண்டியலில் சேர்த்து வருகின்றனர் என்பதே உண்மை.

  திரு. சேட்டைக்காரன் அவர்கள் கூறியுள்ளது போல அவர்கள் இதன்மூலம் தங்கள் குற்ற உணர்வை குறைத்துக் கொள்கிறார்கள்.

  ReplyDelete
 8. மிகச் சரியான விவாதம் அய்யா. இத்தனை குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியிலும் இந்தியக் கரங்கள் இருப்பது உண்மை தானே. கையூட்டு கொடுத்தால் எந்தக் குற்றத்திலிருந்தும் தப்பிக்கலாம் என்ற எண்ணம் வளர்ந்து வருவது கலாச்சார சீர்கேடன்றி வேறென்ன ?

  ReplyDelete
 9. உண்மையை ஒளிக்காமல் எழுதியதற்கு தலை வணங்குகிறேன்.
  இதை ஆராய்ந்து சரி செய்யும் வழி காண வேண்டும்.
  உலகிலே அதிக கடவுள்கள் வாழும் நாட்டில் தான் அதிக அளவு சமுக இழிவு உள்ளது.
  எல்லா பொறுப்புகளையும் கடவுள் மேல் தூக்கி போட்டு விட்டு தங்கள் மட்டும் தான் தோன்றி தனமாக வாழ வாழும் கலை கற்பித்துள்ள நாடு இது.
  மனிதனால் தான் முடியும் என்று இனி வரும் மக்களையாவது நம்ப வைத்தால் புதிய இந்திய உருவாகும்.

  ReplyDelete
 10. என்ன... ஒன்றும் சொல்லமுடிய வில்லை!.. பெருமூச்சு தான் மிச்சமாக இருக்கின்றது.. சின்னஞ்சிறு சுண்டெலி சிங்கத்தை வீழ்த்தியதைப் போல் ஆகிவிட்டது.

  ReplyDelete