நினைவடுக்குகளில் இருந்த பயணம் -3
----------------------------------------------------------
(எனது பதிவுகளை தமிழ் மணத்தில் நானே இணைத்துக் கொள்வேன்.கடந்த சில பதிவுகளை யாரோ இணைக்கிறார்கள். தயவு செய்துவேண்டாமே.)
இரண்டு
மூன்று நாட்களுக்குப் பின் 8-ம் தேதி மாலை மதுராவில் இருந்து வாரணாசி நோக்கிப்
பயணமானோம். ஏற்கனவே சொல்லி இருந்தபடி என் பெரிய அண்ணாவும் அண்ணியும் இப்போது
எங்களுடன். அண்ணா தெரிந்த ஒருவர் மூலம் வாரணாசியில் சங்கர மடத்தில் தங்க ஒரு
சிபாரிசுக் கடிதம்கொண்டு வந்தார். வாரணாசியில் நாங்கள் நேராக சங்கர மடத்துக்குச்
சென்றோம். அது ஹனுமான் கட்டத்துக்கு அருகில் இருக்கிறது. ஆனால் மடத்துக்குப்
போய்ச் சேர்ந்தவுடன் எங்களுக்கு ஒரே
ஏமாற்றம். தங்குவதற்கு இடம் கிடைத்ததே தவிர படுக்கக் கட்டிலோ பாயோ தரப் படவில்லை. அங்கேயே
ஒரு மாமி உணவு சமைத்துக் கொடுக்கிறார். முன்னாலேயே சொல்லி விட வேண்டும். அங்கு
நாங்கள் சென்றிருந்தபோது உணவறையில் ஒரே கூச்சல். “ சித்தி “ வந்திருக்கிறார் என்ற
பரபரப்பு. பார்த்தால் நடிகை ராதிகா அவர் கணவர் சரத் குமாருடன் வந்திருந்தார்.
அவர்கள் தம்பதி பூஜை செய்ய ஏற்பாடு செய்யவே அந்த வருகை.
என்
அண்ணாவுக்குக் காசியில் சிரார்த்தம் செய்ய விருப்பம். என் குணம் தெரிந்து என்னைப்
பார்த்தார். நான் எனக்கு எந்த ஈடுபாடில்லாவிட்டாலும் அண்ணா செய்வதில் ஆட்சேபம்
இல்லை என்றேன். மறுநாள் காசி ஹனுமான் (g)காட்டில் ஒரு படகில்
சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டது.
அதெல்லாம் முடிந்தபின் அங்கிருந்து ஒரு துழாவும்
படகில் பிரயாகையில் உள்ள திருவேணி சங்கமத்துக்குப் பயணமானோம். இப்போது நினைத்தாலும்
சிலிர்ப்பாய் இருக்கிறது. படகில் நாங்கள் நால்வருடன் படகோட்டியும் ஒரு சாஸ்திரியும்
மட்டும்தான். கங்கை ஆறில் படகில் பயணிக்கும் போது விலங்கு மற்றும் மனித சடலங்களும்.
நடு ஆற்றில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்.... அது பற்றிய சிந்தனைகள் இப்போதே
வருகிறது திருவேணி சங்கமம் அருகே படகை நிறுத்தினார்கள். அங்கிருந்து நங்கூரம்
பாய்ச்சப் பட்ட இன்னொரு படகுக்கு மாறினோம். அதிலிருந்து இரு பக்கங்களிலும் கயிறால்
கட்டப் பட்ட மூங்கில் கழியில் கால்களை வைத்தால் நம் கனத்தால் மூங்கில் கழி கீழே
போகிறது. நாம் வெள்ளத்தில் இறங்குகிறோம். அப்போதே முழுக்குப் போட்டு மேலே வர
வேண்டும். . இது எல்லாம் ஒரு வித்தியாசமான அனுபவம். கங்கையில் மூழ்கும் முன் சிரார்த்தம்
செய்தவர்களின் மனைவி சற்று முடியை வெட்ட வேண்டும் என்றார்கள். என் அண்ணி முதலில்
பிடிவாதமாக, கணவர் இருக்கும் போது முடி வெட்டல் பாவம் என்று சொல்லி மறுத்து
விட்டார். பிறகு அண்ணா மிகவும் கேட்டுக் கொண்டதற்கிணங்க முடி நுனியில் சிறிது
வெட்ட அனுமதித்தார் கங்கையில் எடுத்த சில புகைப் படங்கள் கீழே.
கங்கையில் படகில் சிரார்த்தம் |
படகில் பிண்டம் தயாராகிறது |
கங்கையில் படகிலிருந்து ஸ்நான (G) கட்டங்கள்ஒரு காட்சி |
கங்கையில் துழாவும் படகில் to பிரயாகை |
பிரயாகை சங்கமத்தில் முழுக்கு |
பிரயாகையில் அண்ணா |
மறுநாள் காசி
விசுவநாதர், அன்ன பூர்ணேஸ்வரி விசாலாட்சி சன்னதிகளில் தரிசனம் செய்தோம். காசி
விசுவநாதரை நம் கைகொண்டு தொட்டு மகிழலாம். ஆனால் தரிசனத்துக்குப் போகும் போது
செக்யூரிடி கெடுபிடிகள் மிகவும் அதிகம். வெளியே பிரயாணம் செய்யும்போது பழங்கள்
வாங்கினால் நறுக்க என்று என் மனைவி ஒரு சிறுகத்தி வைத்திருப்பாள். பையை எல்லாம்
துழாவித் துழாவி சோதனை இட்ட காவல் துறையினர் கண்களுக்கு அந்தக் கத்தி தென்படாதது
அதிசயமே. அங்கு பைரவர் சன்னதியில் இருக்கும் பாண்டா, பிரசாதம் கொடுத்து பக்தர்கள்
முதுகில் ஓங்கித் தட்டுகிறார். என் முறை வந்தபோது நான் ஆட்சேபம் தெரிவித்து தட்ட
விடவில்லை. காசி விஸ்வநாதர் கோவிலும் ஒரு மசூதியை ஒட்டியே இருப்பதால் பதட்டம்
நிலவுகிறது அங்கிருந்து வெளியே வரும்போது ஒரு புடவை கடைக்காரர் நாங்கள் தமிழ்
பேசுவது கேட்டு விடாப்பிடியாக அவரது கடைக்கு அழைத்துச் சென்றார். போனவுடன் என்
கால்களைப் பிடித்து விடுவதும் தடவிக் கொடுப்பதுமாய் எங்களை அவர் திக்கு முக்காடச்
செய்து விட்டார். பேச்சின் ஊடே அவர் பெங்களூரு
ஹலசூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கூறி ஒரு விசிடிங் கார்டும்
கொடுத்தார். எல்லாமே வியாபார தந்திரம் என்பது என் மனைவி அங்கு புடவை வாங்கியதில்
தெரிந்தது மாலை கங்கை மாதாவுக்கு மஹா ஆரத்தி எடுப்பதைப் பார்த்தோம். கூட்டம்
அதிகமாயிருந்ததால் நாங்கள் இருவர் செருப்புகளுக்குக் காவல் இருக்க மற்ற இருவர்
அங்கிருந்த கங்கா மாதா கோவிலுக்குச் சென்று வருவதாகத் திட்டம் அப்போது
கோவிலுக்குச் சென்ற எங்கள் அண்ணி காணாமல் போக நாங்கள் அவரைத் தேடத்துவங்கினோம்.
அவர் கோவிலை விட்டு எதிர் திசையில் சிறிது தூரம் சென்று விட்டார். புறப்பட்ட
இடத்துக்கு வர வழி தெரியவில்லையோ என்றே எண்ணினோம் ஆனால் அது மறதி நோயின் ஆரம்பம்
என்று அப்போது தெரியவில்லை. ,.
மறுநாள் 11-ம் தேதி முற்பகல் 11 மணி அளவில்
அலஹாபாதுக்கு ரயில் ஏறினோம். அலஹாபாதிலும் ஒரு மடத்தில் தங்க அண்ணா ஏற்பாடு
செய்திருந்தார். அன்றிரவு அங்கு கழித்தது மறக்க முடியாது. ஏதோ டஞ்சன் போல் ஒரு
அறை. அதில் பல மூட்டைகளுக்கு நடுவே எங்களுக்கு இடம். இப்படி என்று
தெரிந்திருந்தால் ஏதாவது ஹோட்டல் நாடிப் போய் இருக்கலாமே என்று காலம் கடந்து
புத்தியில் உறைத்தது. இரவு நேரமாகி விட்டதாலும் ஊரில் எதுவுமே தெரியாது என்பதாலும்
சரியாக திட்டமிடப் படாததாலும் அன்றிரவு எலிகளுடன் வாசம். அலஹாபாத் பயணமே
ஹரித்த்வார் ரயில் ஏறத்தான். விசேஷமாக எதையும் திட்ட மிட்டிருக்கவில்லை. சாரனாத்
போய் வரலாம் என்றால் ஹரித்வார் ரயில் கிளம்பும் முன் வரமுடியுமா என்ற சந்தேகத்தால்
அதைக் கைவிட்டோம். அலஹாபாத் நகரைச் சுற்றிவரும் போது பண்டிட் ஜவஹர்லாலின் ‘ஆநந்த
பவனைக் ‘கண்டோம்.அலஹாபாதிலிருந்து ஹரித்வார் போகும் வண்டி வருமுன்பே நாங்கள் ஏறவேண்டிய
கோச் இதுதான் என்று போர்ட்டர் ஒருவர் கூறினார். ” என் அப்பா அம்மா போல் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தவறான
செய்தி சொல்ல மாட்டேன் “ என்று அவர் சொன்னவிதம் திருப்தி அளித்தது. மறு நாள்
ஹரித்வார் சென்றால் எங்கு தங்குவது என்று நாங்கள் பேசிக் கொண்டு இருந்தபோது சக
பயணி ஒருவர். ஹர்த்வாரில் நிறையவே சத்திரங்கள் இருப்பதாகவும் நல்ல வசதிகள்
இருக்கும் என்றும் கூறினார். அவரே எங்களை ஒரு நல்ல இடத்துக்குக் கூட்டிப் போவதாய்க் கூறினார். ஹரித்வார் ரயில் நிலையத்துக்கு எதிரே ஒரு இடத்துக்கு
எங்களைக் கூட்டிப் போய் தங்கும் வசதிக்கு ஏற்பாடு செய்தார். நன்றாகவே இருந்தது.
என்ன ஒரு குறை என்றால் எங்களுக்கும் அண்ணா அண்ணிக்கும் கொடுக்கப்பட்ட இடங்கள் இரண்டு தலங்களில் இருந்தது ஹரித்வார் அனுபவம் அடுத்த பதிவில்( வாசக நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் என் வீட்டில் சில மராமத்து வேலைகள் நடக்க இருப்பதால் இன்னும் சில நாட்களுக்கு என்னால் கணினிப் பக்கம் வரமுடியாது. பின்னூட்டம் எழுத முடியாது.பதிவு எழுத முடியாது. பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.) : . . .
கணிணிக்கு வர முடியாது என்பதைக்கேட்டு வருந்துகிறேன். உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குகாசியில் இருந்து ப்ரயாகைக்குப் படகிலா போனீர்கள்!!!!
பதிலளிநீக்குபயண நேரம் அதிகமாக இருந்திருக்குமே! ஆனாலும் அது ஒரு புதிய அனுபவமாகவே இருந்திருக்கும், இல்லையா?
நாங்கள் காரில் இலஹாபாத் போய், அங்கே ஒரு படகில் த்ரிவேணி சங்கமம் சென்று வந்தோம்.
வேணிதானம் கொடுப்பது ப்ரதானமாம்.
சாரநாத் பயணம் இங்கே நம் துளசிதளத்தில் இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.
எதையுமே சுருக்கத் தெரியாததால் இதுக்கும் மூணு இடுகை:-)
http://thulasidhalam.blogspot.co.nz/2014/05/blog-post_7.html
http://thulasidhalam.blogspot.co.nz/2014/05/blog-post_9.html
http://thulasidhalam.blogspot.co.nz/2014/05/blog-post_12.html
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குபேஸ்புக்கில் கூட காசியாத்திரை அனுபவங்கள் என்று ஒரு தொடரை நண்பர் ஒருவர் எழுதி வருகிறார்.
உங்களுடன் கூடவே வருவது போல உணர்ந்தோம்.
பதிலளிநீக்குஹரித்வார் அனுபத்தையும் அறிய ஆவல் கொண்டேன்.
//கங்கையில் மூழ்கும் முன் சிரார்த்தம் செய்தவர்களின் மனைவி சற்று முடியை வெட்ட வேண்டும் என்றார்கள். என் அண்ணி முதலில் பிடிவாதமாக, கணவர் இருக்கும் போது முடி வெட்டல் பாவம் என்று சொல்லி மறுத்து விட்டார். பிறகு அண்ணா மிகவும் கேட்டுக் கொண்டதற்கிணங்க முடி நுனியில் சிறிது வெட்ட அனுமதித்தார் கங்கையில் எடுத்த சில புகைப் படங்கள் கீழே.//
பதிலளிநீக்குவேணி தானம் மிகவும் விசேஷம். காசியிலிருந்து படகிலேயே பிரயாகை சென்றிருக்க முடியாது. இலஹாபாத் சென்று அங்கு தான் படகு மூலம் திரிவேணி சங்கமம் செல்ல வேண்டும். அங்கு தான் படகு மாற வேண்டும்.
இலஹாபாத் மறுநாள் சென்றதாகவும், அங்கே தங்கி இருந்ததாகவும், ஆனந்த பவனைப் பார்த்ததாகவும் எழுதியுள்ளீர்கள். கங்கைக்கரையிலேயே இருக்கும் பாரத்வாஜர் ஆசிரமம், மற்றும் காஞ்சி மடத்தில் கட்டிய கோயில் இரண்டையும் கூடப் பார்த்திருக்கலாமே! ஆகவே அலஹாபாத் போகவில்லை. வேறு எங்கோ தங்கி இருந்திருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் காசியிலேயே அலஹாபாத் பயணத்துக்கும் சேர்த்து ஏற்பாடு செய்து தருவார்கள். காசியில் மட்டும் பிண்டம் போட்டால் போதாது. அருகிலுள்ள கயாவுக்கும் சென்றிருக்க வேண்டும். அங்கே அக்ஷய வடத்தில் பிண்டப் பிரதானம் தான் மிக முக்கியம். அதை யாரும் உங்களுக்குச் சொல்லவில்லை என நினைக்கிறேன். நாங்கள் சென்றபோது கயாவில் தான் தங்குமிடம் சுமாராக இருந்தது. இலஹாபாதில் தங்கவில்லை. காலை போய் விட்டு மாலை வாரணாசிக்கே திரும்பி விட்டோம்.
பதிலளிநீக்குபயண அனுபவம், படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவேணி தானத்தின் போது கணவன் மனைவிக்குத் தலை பின்னிவிட்டுப் பூச்சூட்டிப் பின்னர் பின்னலின் நுனியில் ஓர் அங்குலம் மட்டும் மயிரைக் கத்தரிக்கோலால் கத்தரித்து அதைத் திரிவேணி சங்கமத்தில் போடுவார்கள். அது சங்கமத்தின் அந்தச் சுழலில் கூட மிதக்கும். உள்ளே போகாது. இந்த வேணி தானம் மிகவும் விசேஷமானது. வயதான முதிர்ந்த சுமங்கலிப் பெண்கள் கூடச் செய்து கொள்வார்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
அனுதாபங்களை ஏற்றுக்கொள்கிறேன் நன்றி/
பதிலளிநீக்கு@ துளசி கோபால்.
காசியில் ஹனுமான் காட்டில் சங்கர மடத்தில் தங்கினோம். என் அண்ணாவின் விருப்பத்து இணங்கி அங்கே சிராத்தம் செய்யப் பட்டது. அங்கிருந்து அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சாஸ்திரிகளே பிரயாகைக்குக் கூட்டிப் போவதாகச் சொல்லி படகு ஏற்பாடு செய்து அவரும் கூடவே வந்து திருவேணி சங்கமத்திலும் சில கிரியைகள் செய்து உதவினார். பின்னூட்டங்களைப் பார்க்கும் போது படகில் போவ்து நினைத்துப் பார்க்க முடியாதது போலிருக்கிறது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள்சென்று வந்த நிகழ்வுகளை மீட்டெடுக்க புகைப் படங்களே உதவின. காசியில் இருந்து படகில் திருவேணி சங்கமம் என்னும் இடத்துக்குக் கூட்டிப்போய் அவரே மீண்டும் எங்களை ஹனுமான் காட் சங்கர மடத்தில் கொண்டு விட்டார், இது தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
தொடர்வதற்கு நன்றி. நான் ஃபேஸ்புக் பக்கம் எப்பவாவதுதான் போகிறேன். என் நண்பர்கள் லிஸ்டில் நீங்கள் சொல்லும் அன்பர் இருக்கிறாரா தெரியவில்லை.
பதிலளிநீக்கு@ டி.என். முரளிதரன்
என் அடுத்தபகுதி ஹர்த்வார் ரிஷிகேசம் பற்றியதே. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
/வேணி தானம் மிகவும் விசேஷம். காசியிலிருந்து படகிலேயே பிரயாகை சென்றிருக்க முடியாது. இலஹாபாத் சென்று அங்கு தான் படகு மூலம் திரிவேணி சங்கமம் செல்ல வேண்டும். அங்கு தான் படகு மாற வேண்டும்./
எங்களுக்கு அதெல்லாம் தெரிந்திருக்கவில்லை. ஹனுமான் கட்டத்திலிருந்து துழாவும் படகில் திருவேணி சங்கமம் சென்று வந்ததுதான் தெரியும். நான் கூறி இருப்பது போல் ஹரித்வாருக்கு ரயில் ஏற அலஹபாத் சென்றோம். பார்க்க வேண்டிய இடங்கள் பற்றித் தகவல்கள் சேகரிக்கவில்லை. அந்தமாதிரி படகில் சென்றதால்தானோ என்னவோ அனுபவங்கள் நினைவிலாடுகிறது. வருகைக்கு நன்றி.
காசியிலிருந்து இலஹாபாத் சென்று திரிவேணி சங்கமம் அடையக் குறைந்தது நான்கு, ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகும். இது நான் சொல்வது காரில் இலஹாபாத் செல்வது குறித்து. படகில் ஹனுமான் காட்டிலிருந்து பிரயாகை திரிவேணி சங்கமம் செல்வதோ அன்றே திரும்புவதோ இயலாத ஒன்று நடக்கவே முடியாத ஒன்று. மேலும் இலஹாபாத் என்னும் அலஹாபாதில் தான் திரிவேணி சங்கமமே இருக்கிறது. காசியில் இல்லை.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
காசி சங்கர மடத்தில் இருந்து ஒருவர் கொடுத்த ஒரு சிபாரிசுக் கடிதம் மூலமாகவே அலஹாபாதிலொரு டஞ்சன் மாதியான இடத்தில் தங்கினோம் . அங்கு இரவு பட்ட அவஸ்தையே மறக்க முடியாத அனுபவமாகி விட்டது. நான் பட்ட அனுபங்களைத்தானே எழுதுகிறேன்அக்டோபர் 11-ம் தேதி மஹாநகரி எக்ஸ்ப்ரெஸில் சுமார் 11/-30-க்கு வாரனாஸியிலிருந்து அலஹாபாதுக்குஸ்S3 கோச்சில் 33 36 இருக்கைகளி ரயில் பயணப் பட்டோம். மறுநாள் மாலை ஹர்த்வாருக்கு ரயில் ஏறினோம். `அப்படி இருக்க நாங்கள் அலஹாபாத் போயிருக்க மாட்டோம் என்று சொன்னால் எப்படி. ?
@ கீதா சாம்பசிவம்.எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கமே இடங்களைப் பார்ப்பதுதான். போன இடத்தில் அண்ணா விரும்பியபடி சிராத்தம் செய்தார் ஆகவே கயா போன்ற இடங்கள் எங்கள் பயணதிட்டத்தில் இடம் பெறவில்லை. வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி மேடம்.
சார் உங்களுடனே பயணிப்பது போல் இருந்தது. அத்தனை அழகான வருணனை...அதுவும் அந்த கங்கை ஆற்றுப் ப்யணமும், டஞ்சன் ரூம் தங்கலும்...ஏதோ நாங்களும் அங்கு இருந்தது போல்.....நல்ல பயண அனுபவம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
எங்களைக் கூட்டிச் சென்ற காசி சங்கர மடத்தினர் எங்களைத் திருவேணி சங்கமத்துக்குக் கூட்டிச்செல்வதாகக் கூறினார். எங்களை ஒரு இடத்தில் நங்கூரம் பாய்ச்சிய படகுக்கு மாற்றி எங்களை சங்கமஸ்நானம் செய்யச் சொன்னார். மற்றபடி எனக்கு நாங்கள் திருவேணிக்குச் சென்றோமா இல்லை காசியிலேயே ஒரு இடத்தில் எங்களை சங்கமஸ்நானம் செய்வித்தாரா தெரியாது. சென்ற இடங்களை நினைவு கூர்ந்து புகைப்பட ஆதாரங்களுடன் பதிவு எழுதி இருக்கிறேன் எது உண்மை எது நடக்க இயலாதது என்பதெல்லாம் அந்த பகவானுக்கே வெளிச்சம். மீண்டும் நன்றி.
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து.
ஐயா வருகைக்கு நன்றி. நான் நடக்க இயாலாத ஏதோ ஒன்றை எழுதியதுபோல் மேடம்கீதா சாம்பசிவம் பின்னூட்டமிடுகிறார்.
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
திருமதி கீதா சாம்பசிவத்தின் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது நாங்கள் திருவேணி சங்கமம் தான் போனோமா என்னும் சந்தேகம் எழுகிறது. என் அனுபவங்களே சரியில்லை என்பதுபோல் இருக்கிறது வருகை தந்து ரசித்ததற்கு நன்றி,
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
உங்கள் பின்னூட்டங்களையும் துளசி கோபாலின் பின்னூட்டத்தையும் பார்த்த பின் எனக்கு என் நினைவுகளிலேயே சந்தேகம் வருகிறது. ஒரு வேளை அலஹாபாத் டஞ்சன் இடத்திலிருந்து நாங்கள் பிரயாகை போய் இருப்போமோ.? சாத்தியக் கூறு இருப்பதுபோல் தெரிகிறது. 11 ஆண்டுகள் ஆகி விட்டது அல்லவா. ?மேலும் அந்த துழாவும் படகின் புகைப்படத்தின் பின்புறம் 12-ம் தேதி இருக்கிறது.நீங்கள் சரியென்றேநினைக்கிறேன்.நன்றி.
ஐயா,
பதிலளிநீக்குதவறாக நினைக்க வேண்டாம்.
காசியில் இருந்து இலஹாபாத் தரை வழியே 121 கிலோ மீட்டர். கங்கை நதி வளைந்து வளைந்து செல்வதால் இன்னும் கூடுதல் தூரம் போகவேண்டி இருக்கும். 140 கிமீ இருக்கலாம்.
அதனால் ஒருவர் துழாவும் படகில் அத்தனை தூரம் போகமுடியுமா என்பது தான் இங்கே:(
அதுவும் கங்கை ஓடும் திசையில் இல்லாமல் எதிர்ப்புறமாக வேற துடுப்பு போடணும். அதனால்தான்......
தவறாக நினைக்க வேண்டாம்,ப்ளீஸ்.
அண்மையில் தாங்கள் கூறிய பல இடங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. தாங்கள் நினைவுகூர்ந்து அவ்விடங்களைப் பற்றி எழுதிவருவது சிறப்பாக அமைந்துள்ளது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
இதில் தவறாகஎண்ண எதுவும் இல்லை. நீங்கள் எழுதியதைப் படித்ததாலே நான் என் நினைவுகளை மறு பரிசீலனை செய்தேன். என் நினைவுகள் என்னை ஏமாற்றிவிட்டது தெரிகிறது. 11-ம் தேதி வாரணாசியில் இருந்து அலஹாபாதுக்குப் பயணப் பட்டிருக்கிறோம். துழாவும் படகின் புகைப்படத்தின் பின்னே தேதி 12 என்றிருக்கிறது obviously நாங்கள் 12 ம் தேதிதான் சங்கமத்துக்குப் போய் இருக்கிறோம். அதாவது அலஹாபாதிலிருந்துதானென்று தெரிகிறது. 11 ஆண்டுகால நிகழ்வை நினைவு படுத்தும் போது அந்தப் புகைப் படத்தின் தேதியை நான் கவனித்திருக்க வேண்டும். சுட்டிக் காட்டியதற்கு உங்களுக்கும் கீதா சாம்பசிவத்துக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் நன்றி... நன்றி.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கு நன்றி ஐயா. நினைவு கூறும் போது சில தவறுகள் ஏற்பட்டு விட்டது. பின்னூட்டங்கள் அதை எனக்குத் தெரியப் படுத்தின.
தவறை ஒப்புக் கொண்ட உங்கள் பெரிய மனதுக்குத் தலை வணங்குகிறேன் ஐயா. மிக்க நன்றி.கங்கையை எதிர்த்துக் கொண்டு படகுப் பயணம் அதிலும் துடுப்புப் போடும் படகில் பயணம் என்பது சாமானியமானது அல்ல. புரிதலுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்! மீண்டும் சந்திப்போம்!
பதிலளிநீக்கு