சனி, 30 ஜனவரி, 2016

தொடர் பயணம் ( மதுரை ) 1


                            தொடர் பயணம் ( மதுரை ) 1
                              ---------------------------------------
காலையில் எட்டரை மணி அளவில் மதுரை வந்து சேர்ந்த நாங்கள் முன் பதிவு செய்யப்பட்ட  மேற்கு ஆவணி மூல வீதியில் இருந்த ஹோட்டல் நம்பிக்கு வந்து சேர்ந்தபோது ஒன்பது மணிக்கும் மேலாகி விட்டது  அனைவருக்கும்  ஊர்தி கிடைத்து அறைக்கு வந்து சேர நேரம் ஆகிவிட்டது எல்லோரும் குளித்து  காலை உணவருந்தத் தயார் ஆகும் போது மணி பத்தாகி இருந்தது. அன்று என் கடைசி மச்சினியின் பிறந்த நாள். மகிழ்ச்சியுடன் மதுரை மீனாட்சியையும்  சுந்தரேஸ்வரரையும் தரிசிக்கும் பாக்கியம் என்றாள் எங்களுக்கு ஏற்கனவே பரிச்சயப் பட்ட  கோவில் அர்ச்சகர் ஒருவரைத் தொடர்பு கொள்ள அவர் நாங்கள் தரிசனம் செய்ய உதவினார்.அவருக்காகக் காத்திருந்த நேரத்தில்அங்கிருந்த காவல் அதிகாரி எங்கள் குழு பற்றி விசாரித்தார் கோவிலில்சிற்பங்கள் நிறையவேஇருப்பதாகவும் கண்டும் புகைப்படமெடுத்தும் மகிழலாம் என்றும் கூறினார் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது  எப்படித்தான் இவ்வளவு கூட்டம் வருகிறதோ …! ஒரே நெரிசல் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலா..? கோவிலில் புகைப்படம் எடுக்கத் தடை செய்யப் பட்டுள்ளது.  ஆனால் உள்ளே வந்தால் ரூபாய் ஐம்பது செலுத்தினால் மொபைல் காமிராவில் படம் எடுக்கலாம் என்று தெரிய வந்தது என்ன பிரயோசனம் கைபேசிகளை வெளியில் வைத்து வந்திருந்தோமே என் மச்சினி ஒரு சாய் பாபா விக்கிரகத்தை கைப்பையில் வைத்திருந்தாள் அதை எடுத்துவர அனுமதிக்க வில்லை யாதலால் வெளியிலேயே விட்டு வந்தாள். தரிசனம் செய்யும் போது ஒரு அர்ச்சகரிடம் இன்னொருவர் இன்னும் வீட்டுக்குப் போகவில்லையா என்று கேட்டார். அதற்கு அவர் இன்னும் போதிய வருமானம் வரவில்லையே என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார்
தரிசனம் எல்லாம்செய்து முடித்து வெளியே வரும்போது பன்னிரண்டரை மணிக்கும்  மேலாகி இருந்தது.கீதா மேடம் கோவிலில் இருக்கும் மியூசியம் பற்றி கூறி இருந்தார்  அது பற்றிய நினைவே மறந்துவிட்டது வெயிலின்  தாக்கம் தெரியத் துவங்கியது மதிய உணவுக்குச் சென்றோம்  அதன் பிறகு முதலில்  திருமலை நாயக்கர் மகால் சென்றோம் நாயக்கர் மகாலில் ஒலி ஒளி நிகழ்ச்சி மாலை நடப்பது தெரிய வந்ததால் மாலை மீண்டும் செல்லத் திட்டமிட்டோம்எல்லோரும் மகாலைக் கண்டு மகிழ்ந்தனர். நிறையவே புகைப்படங்கள் எடுக்கப்பட்டன
Add caption
      
     
                                     



  
                


 
    
                   
 திருமலை நாயக்கர் மகாலில் மாலை நேரத்தில் ஒலி ஒளி காட்சி நடைபெறு வதைக் காண வேண்டும் என்று பலரும் விரும்பினார்கள்  ஆகவே நாளின் கடைசி நிகழ்வாக அதைப் பார்க்க முடிவாயிற்று
 நாயக்கர் மகாலை அடுத்து காந்தி மியூசியம் சென்றோம் அதை ஒரு சுற்று வந்தால் ஏறத்தாழ இந்திய சரித்திரமே புகைப்படக் கண்காட்சியாக இருப்பது தெரிகிறது ஆற அமரப் பார்க்க வேண்டுமானால்  அதிக நேரம் ஆகும்  என்பதால் மேலோட்டமாகப் பார்த்து வந்தோம்உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லையாதலால் ஞாபகார்த்தமாக வெளியே எடுத்த ஒரு காணொளி. 

அங்கிருந்து அழகர் மலைக்குச் சென்றோம் மாலை நேரமாகிவிட்டல்  மலைப் பாதையில் பயணிக்க அனுமதிக்க மாட்டார்களென்பதால் முதலில் மலைக்குச் சென்று பிறகு வரும்போது கள்ளழகரைக் காணலாம் என்று தீர்மானிக்கப் பட்டது. மதுரைஸ்பெஷல் ஜிகிர் தண்டா பற்றித் தெரிவித்தேன்அனைவரும் ருசித்து அதன் சுவைக்கு அடிமை ஆகிவிட்டார்கள்
 மலையில் நூபுர  கங்கை நான் ஏற்கனவே பார்த்த இடமென்பதாலும் படி ஏறுவதைத் தவிர்க்கவும்  குரங்குகளின்  தொல்லையில் இருந்து தப்பிக்கவும் நானும் என் மனைவியும் வெ;ளியே போகாமல் வண்டியிலேயே அமர்ந்திருந்தோம் வண்டியிலிருந்தே சில காணொளிகள்  படம் பிடித்தேன்  முக்கியமாகக் குரங்குகளை குறி வைத்தே. ஆனால் நீளம் அதிகமாகி விட்டதால்  பதிவிட முடியவில்லை. ராக்காயி அம்மன் கோவிலும்  நூபுரகங்கையும்  மற்றவர்களுக்குப் புதிது என்பதால் அவர்கள் படியேறிச் சென்று ரசித்தனர்
     திரும்பி வரும்போது அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலைக் கோவிலுக்குச் சென்றோம் அங்கு ஒரு மரத்தைக் காட்டி அதுதான் குமரன் ஔவைக்கு சுட்ட பழம் கொடுத்த நாவல் மரம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள் என்னதான் நாம்நவீன உலகின் வாரிசுகள் என்றாலும் இதையெல்லாம் நம்புபவர் எண்ணிக்கையும் குறைய வில்லை.  கேட்டால் நம்பிக்கைதான் முக்கியம் என்று பதில்.!
பழமுதிர்ச் சோலை முருகன்  கோவில் 

முருகனைத் தரிசித்துப் பின் கள்ளழகரைக் காண வந்தோம் கள்ளழகரின் கோவில் வளாகத்துக்கு வெளியே  18-ம் படி கருப்பண்ணச் சாமி குடியிருக்கிறார். இந்த கருப்பண்ணச் சாமியைத்தான்  ஐயப்பனாக்கி விட்டார்கள் என்று குறை கூறுவோரும் உண்டு. சர்ச்சைக்குரிய விஷயம் என்பதால்  அது பற்றி வேண்டாம்
கருப்பண்ண சாமிக் கோவில் 

கள்ளழகர் கோவில் கோபுரம் 
பரந்து விரிந்து கிடக்கும் இடம் இங்கும் குரங்குகளின் நடமாட்டம் அதிகம்ஆனால் நூபுரகங்கையில் இருக்கும் குரங்குகள் போல் இல்லாமல் சாதுக்களாக இருக்கின்றன
 கள்ளழகரைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் தெப்பக் குளம்  மாரி அம்மன் கோவிலுக்குச் சென்றோம்
தெப்பக் குளம் மாரி அம்மன் கோவில்

மீண்டும் நாயக்கர் மகாலுக்கு ஒலி ஒளி காட்சி காணச் சென்றோம் இரவு எட்டுமணி அளவில் காட்சி துவங்கியது. பலமுறை மதுரைக்கு வந்தும் இக்காட்சியை நான் காண்பது இதுவே முதல் தடவை  எதிர்பார்ப்புகள் அதிகமானால் ஏமாற்றமும் அதிகமாகும் இந்த ஒலி ஒளிக் காட்சி ஏதோ ஒழுங்காகக் கோர்வையாக சொல்லப்படாத வானொலி நாடகம் கேட்பதுபோல் இருந்தது. நாயக்கரைப் பற்றியும் சரித்திர நிகழ்வுகள் பற்றியும் ஏதோ சொல்ல  முயற்சிக்கிறார்கள்  என்பது மட்டும் புரிந்தது.வானொலி நாடகம் கேட்கும் போது வராத சில ஒளி வெளிச்சங்கள் இருக்கின்றன என்பதுதான் வித்தியாசம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதே என் அபிப்பிராயம்
இரவு உணவுக்காக கோனார் கடைக்குச் சென்றோம் நான் என் மனைவி மற்றும் ஒருவர் தவிர்த்து மற்றவர்கள் அந்த இடத்துக்குப் பெயர் தேடிக் கொடுக்கும் கறி தோசை சாப்பிட்டனர், நாஙள் சைவ இட்லி மட்டுமே உண்டோம் 
வெயிட்டிங் ஃபர் கறி தோசை. 

           ( தொடரும் )
    
                                          


                   


 

வியாழன், 28 ஜனவரி, 2016

தொடர் பயணம் ..... துவக்கம்


                         தொடர் பயணம்........ துவக்கம்
                        -----------------------------------------------
 2015-ம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில்  ஒரு நீள் சுற்றுலா உறவினர்கள் சிலர் செல்லத் திட்டமிடுவது அறிந்தேன் நானும் என் மனைவியும் வர விரும்புவதாக என் மச்சினனிடம் கூறினோம் / அவன்தான் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டு வழி நடத்திச் செல்பவன் போகத் திட்டமிட்டிருந்த இடங்கள் நாங்கள் ஏற்கனவே சென்று பார்த்ததுதான்  இருந்தாலும் பயணிப்பது எனக்குப் பிடிக்கும் என்பதாலும்  இந்த வயதில் இவ்வளவு நீண்ட பயணத்தை என் உடல் தாங்கும் என்று எனக்கு நானே நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளவுமே  நானும் கலந்து கொள்ளத் தீர்மானித்தேன்
இம்மாதம் 17-ம் தேதி துவங்கி 26-ம் தேதி முடிய மதுரை, இராமேஸ்வரம்  நாகர் கோவில் போன்ற இடங்களில்  தங்கி சுற்று வட்டார இடங்களுக்குச் சென்று வருவதாகத் திட்டம்
இந்தப் பயண நிரல்களைத் தயாரிக்க உதவிய திருமதி கீதா சாம்பசிவம் , திரு எஸ்பி செந்தில் குமார் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்  பயணத்தில் பங்கு கொண்டோர் அனைவருமே உறவினர்களே. அதில் நானும் என் மச்சினனும் மட்டுமே ஆண்கள் மற்ற எல்லோரும் பெண்கள்.  ஒரு பெண்ணையே சமாளிப்பது எவ்வளவு கஷ்டம் என்று பலரும் அறிவார்கள் இந்த நிலையில் என் மச்சினன் ஒன்பது பெண்களை சமாளித்து சரியான மேய்ப்பனாக விளங்கினான் அவனுக்கு எங்கள் நன்றிகள் கலந்து கொண்ட பெண்கள் அவனை ரிங் மாஸ்டர் என்றே அழைத்தனர் எந்த நேரத்திலும் கோபம் கொள்ளாமல்எல்லோர் தேவையையும் பூர்த்தி செய்த  அவன் பயணத்துக்குத் தேவையான ரயில் முன்பதிவுகளையும்  தங்குவதற்கான அறை முன் பதிவுகளையும்  திறம்படச் செய்திருந்தான்
18-ம் தேதியும் 19-ம் தேதியும் மதுரையிலும் 20-ம் தேதிதொடங்கி 23-ம் தேதி முடிய இராமேஸ்வரத்திலும் 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடியநாகர் கோவிலிலும் தங்கினோம் எல்லோருக்கும் குளிரூட்டப் பட்டுள்ள வசதியுடன் கூடிய தங்கும் அறைகள்  பயணத்தின் போது ஏசி த்ரீ டியர் ரயில் டிக்கட்டுகளும்  எடுத்திருந்தான் முதலில் பத்து பெண்கள் வருவதாக இருந்தது. அதில் இருவர் கடைசி நேரத்தில் வர முடியாமல் போகவும் கடைசி நேரத்தில் வேறொரு பெண்மணியும்  சேர மொத்தம் ஒன்பது பெண்கள் இரு ஆண்களுடன்  சுற்றுலா தொடங்கியது
மைசூர் தூத்துக்குடி ரயிலில் 17-ம் தேதி இரவு நாங்கள் ஏறிய போது எனக்காக ஒதுக்கப் பட்டிருந்த இருக்கை/ கிடக்கையில்  ஏற்கனவே ஒருவர் படுக்கை விரித்துப் பயணித்துக் கொண்டிருந்தார்  ஆனால் என்ன துரதிர்ஷ்டம் என்றால் அவர் செல்ல வேண்டிய ரயில் கொச்சுவேலி  எக்ஸ்ப்ரெஸ். வண்டி மாறி பயணிக்கிறார் என்று சொன்னதும் பாவம்  என்ன செய்தாரோ தெரியவில்லை. மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருக்கையைக் காலி செய்தார்.  18-ம் தேதி காலை எட்டரை மணி அளவில் மதுரை வந்து சேர்ந்தோம்   ( தொடரும்)


இடமிருந்து- என் மச்சினன் மதுரையில் வண்டி ஓட்டுனர் மற்றும்  பயணித்த பெண்மணிகள்






 (சுமார் இரு வாரங்கள் பதிவுப்பக்கம் வராமல் இருந்து இன்று வந்து பார்த்தால் என் பதிவுகளைத் தொடர்பவர்களில்  எட்டுபேரைக் காணவில்லை 162 ஆக இருந்தவர் எண்ணிக்கை  154 ஆகக் குறைந்து இருக்கிறது..! )         
                                          


                   

     

வியாழன், 14 ஜனவரி, 2016

தையலே தைப் பெண்ணே வருக


                                      தையலே தைப் பெண்ணே வருக.
                                      ____________________________________
                                                       காயத்திரி தேவி
                                                        ------------------------

            தையலே தைப் பெண்ணே வருக வருக...
               -----------------------------------------------------
                  பொங்கல் வாழ்த்துக்கள்.
                    ----------------------------------

          மார்கழிப் பனி விலக
          பாவையர் நோன்பு முற்ற,
          தையலே தைப் பெண்ணே-வருக
          உன் வரவால் வழி பிறக்க

          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
          பொங்கலாக்கிப் படைத்திடவே

          பகலவனும் பாதை மாறிப்
          பயணம் செய்யத் துவங்கும்
          இந்நாளில் பொங்கும் மங்களம்
          எங்கும் தங்க வணங்குகிறோம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



புதன், 13 ஜனவரி, 2016

தெய்வத்தின் குரல் விநாயகர்


                                       தெய்வத்தின் குரல் விநாயகர்
                                       -----------------------------
இந்தப்பதிவை நான் எழுதத் துவங்கும் முன் நிறையவே கேள்விகள்  நானாக சிந்தித்து எழுதாததை என் பதிவு என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை.  இருந்தாலும்  மனித மனத்தை ஓரளவு புரிந்து கொண்டவன் என்னும் முறையில்  இதில் காணும் செய்திகளைப் பலரும் அறிந்திருந்தாலும் ஒரு ரிவிஷனாகப் படிப்பதில் அக்கறை குறையாது என்று  தெரிந்து கொள்ளுகிறேன் இதில் காணப்படும் செய்திகள் பல இடங்களில் வெகுவாகவே என்னைக் கவருகிறதுகாஞ்சிப்பெரியவரின்  கருத்து என்று தெரியும் போது அதை விமரிசிக்கப் பலரும் தயங்குவது தெரிகிறது விமரிசனம் என்றால் மாறுபட்டக் கருத்தாகதான் இருக்கவேண்டும் என்று இல்லை.  ரசித்ததைக் கூறலாம்எதிர்மறைக் கருத்துக்கள் இருந்தாலும் பகிரலாம் நம் வழக்கப்படி எந்த ஒரு பணியானாலும் விநானாயகனை முன்னிட்டெ துவங்குவது முறை. அதையேதான்  காஞ்சிப்பெரியவரும் செய்திருக்கிறார் 

நான் சுமார் இரண்டு வாரகாலம்  பயணத்தில் இருப்பேன்  அதுவரை என்  பதிவில் தொடக்கமாக தெய்வத்தின் குரலில் முதலில்( அனைவருக்கும் என் இனிய பொங்கல்நல் வாழ்த்துக்கள்)

விநாயகர்

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
விநாயகர்
தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். "கோயில்" என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் "பிள்ளையார்" என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். "பிள்ளை" என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே "பிள்ளை" என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் "பிள்ளையார்" என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
"குமாரன்" என்றால் "பிள்ளை" என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் "குமரக் கடவுள்" என்கிறோம். ஆனால், அவரைக் "குமரனார்" என்பதில்லை; "குமரன்" என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.
முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.
குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான "விநாயகர் அகவலை"ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, "நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்" என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர்....
என்பதில் சொல்லாமல் சொல்கிறார். "அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே" என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.
(தொடரும் )





ஞாயிறு, 10 ஜனவரி, 2016

தெய்வத்தின் குரல்


                                தெய்வத்தின் குரல்
                                 -----------------------------
காஞ்சி பரமாச்சாரியாரின் சொற்பொழிவுகளை  தெய்வத்தின் குரல் என்று பதிவிட்டிருப்பதை அண்மையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது வழக்கம் போல் இதை வாசகர்களிடம் பகிரலாம் என்று எண்ணம் ஆனால் அது மிக நீஈஈஈஈண்ட தொடர். கீதைப்பதிவை விட நீளமாகலாம்  வாசகர்களிடம் ஒரு  sustained  interest  இருக்குமா தெரியவில்லை. மேலும் அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் பலவற்றோடு நான் ஒத்துப் போகிறேனா என்பதும் கேள்வி. இது என்  ஏரியா அல்ல.  இருந்தாலும் எல்லாதரப்பு நியாயங்களையும்  அறிந்து கொள்ள  இது பயன் படலாம்  என் பதிவுகளை வாசிப்போரில் பலரும் ஆத்திகப் பெருமக்கள் இதை வரவேற்கலாம்  பதிவில் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்துப் பெரியவர் சொல்லும் வாதங்களும் இருக்கும்  இதில் என் பணி இருப்பதை இருப்பதுமாதிரியே காப்பி பேஸ்ட் செய்து பதிவிடுவதுதான்  இதில் கூறப்பட்டிருக்கும் எல்லா செய்திகளும் தெய்வத்தின் குரல் என்னும்  தொகுப்பில் உள்ளது நான் எல்லாவற்றையும் அப்படியே பதிவிடலாம் . இல்லையெனில் தேர்ந்தெடுத்த சில பகுதிகளை வெளியிடலாம் இப்பதிவின் பின்னூட்டத்தில் கூறப் போகும் எண்ணங்களின் பேரில் நடக்கலாம் என்று எண்ணுகிறேன்  கருத்துக்களை வெளிப்படையாகக் கூறுங்கள் நண்பர்களே
மொத்தம் ஏழு பகுதிகள் ஒவ்வொரு பகுதியிலும்  விஸ்தாரமாகக் கூறப்பட்டிருக்கும்கருத்துக்கள் பலரும் அங்கும் இங்குமாகப் படித்திருக்கலாம் உங்கள் பின்னூட்டம் பொறுத்து என் பதிவு அமையும்  நன்றி
முதல் பகுதியில் மங்களாரம்பம் என்று துவங்கிஅத்வைதம் மதம் வைதிக மதம் பொதுவான தர்மங்கள், சமூக விஷயங்கள், பண்பாடு கர்ம மார்க்கம் ,பக்தி , தேவதா மூர்த்திகள்அவதாரபுருஷர்கள்,முடிய மங்களார்த்தி என்று போகிறது ஒவ்வொரு தலைப்பிலும் விஸ்தாரமாகச் செய்திகள் சொல்லிப் போகிறார்  இதேபோல் ஏழு பகுதிகள் . என் பணி உள்ளதை உள்ளபடியே பதிவிடுவதுதான் . இருந்தாலும் இப்பகுதிகள் என்னுள்ளும் சில சலனங்களை ஏற்படுத்தும்  அல்லவா. ? ஏறத் தாழ எல்லா பின்னூட்டங்களும் முடிந்தபின்   என் மனதில் பட்டதைக் கடைசியாகப் பின்னூட்டமாக எழுதத் திட்டம் என்ன வாசகர்களே நான்  ரெடி  நீங்க ரெடியா






புதன், 6 ஜனவரி, 2016

மழை வேண்டுமா கூப்பிடுங்கள்........


                                     மழைவேண்டுமா  கூப்பிடுங்கள்..........
                                     ----------------------------------------------------------


 பதிவு எழுத விஷயங்களே புலப்படாத வேளையில் என் பழைய பதிவுகளில் மேய்ந்து கொண்டிருந்தேன் 2014 –ம் ஆண்டு ஃபெப்ருவரி மாதம் மீண்டும் பதிவுகளில் தொடர என்னும் பதிவில் நான் சென்னைக்குச் சென்றிருந்ததையும் பதிவுலக நண்பர்கள் பலரையும்  சந்தித்தது பற்றியும் எழுதி இருந்தேன்  அது என்ன ராசியோ நான் சென்னை போகும்போதெல்லாம்  மழை வருகிறது என்று எழுதி இருந்தேன்  அதன் பின்னூட்டத்தில் அப்பாதுரை அவர்கள்மழை வேண்டும் என்றால் ரிஷ்ய சிருங்கரை  அழைப்பார்களாம்  என்று எழுதி இருந்தார்.  நான் எனது மறு மொழியில்  யார் அந்த ரிஷ்ய சிருங்கர் என்று கேட்டு எழுதி இருந்தேன்  இப்போது அதைப் படித்ததும் எனக்குத் தெரிந்த ரிஷ்ய சிருங்கர் கதையை எழுதலாம் என்று தோன்றவே இதோ துவங்கிவிட்டேன்

 அங்க தேசத்து  அரசர் ரோமபாதரும் தசரத மஹாராஜாவும் நண்பர்கள் ஒரு முறை ரோமபாதர் தசரத ராஜாவைச் சந்திக்க வந்திருந்தார்  தசரத ராஜாவுக்கு மூன்று மனைவிகள் கௌசல்யா சுமித்திரா கைகேயி என்று யாவரும் அறிந்ததே. ஆனால் பலரும் அறியாதது தசரதருக்கும் கௌசல்யாவுக்கும் ஒரு பெண்குழந்தை இருந்தது என்றும் அவள் பெயர் சாந்தா என்பதும் . அவள்  ராமலக்ஷ்மண சகோதரர்களுக்கும் மூத்தவள் என்பதுமாகும்
 அங்க தேச ராஜா ரோமபாதருக்கும் மக்கட் செல்வம் இல்லை. அவர் தசரதரிடம் அவரது பெண்ணை  தத்துகொடுக்க வேண்டிக் கேட்டுக் கொண்டார் தசரதரும் தமக்கு மூன்று மனைவிகள் இருப்பதாலும் இன்னும் குழந்தைகளைப் பெற வாய்ப்பு இருந்ததாலும்  மிகுந்த யோசனைக்குப் பின் தன் மகள் சாந்தாவை தத்து கொடுக்க சம்மதித்தார்அங்க அரசர் மிக்க மகிழ்ச்சியுடன் சாந்தாவைத் தத்து எடுத்துக் கொண்டார்
அங்க தேச அரசகுமாரியாக சாந்தா வளர்ந்துவந்தாள்
ஒரு முறை அங்கதேசம் மழையின்மையால் மிகவும் வரண்டு போய் இருந்தது. அரசரும் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையுடன் இருந்தார்  அப்போது அவரிடம் முனி குமாரன் ரிஷ்ய சிருங்கரை வரவழைத்தால் மழைபெய்யும் என்று ஆலோசனை கூறப்பட்டது யார் இந்த ரிஷ்ய சிருங்கர்?
அங்க தேசத்து வனாந்திரத்தில் காஷ்யப முனிவரின் மகன்  விபாந்தகருக்குப் பிறந்தவர்தான் இந்த ரிஷ்ய சிருங்கர். மான் கொம்பைத் தலையில் தாங்கியதால் அப்பெயர் பெற்றார்.  சிருங்க என்றால் மான் கொம்பு என்னும் பொருள் உண்டாம்  விபாந்தகருக்கும் ஒரு மானுக்கும் பிறந்தவர். முனிவரின் ஆசிரமத்தில் வேற்றுலக மக்களின் கண்படாமல் வளர்ந்து வந்தவர். தவவலிமை மிக்கவர். இவரை அங்க தேசத்துக்கு வரவழைத்தால் மழைபெய்து வரட்சி நீங்கும் என்று கூறப்பட்டது ஆனால் அவரை எப்படி வரவழைப்பது?நேரில் சென்று கூப்பிட்டால்  விபாந்தக முனிவரின் கோபத்துக்கு ஆளாகி சாபம் கிடைக்கப் பெறலாம் வேற்று மனிதரின் வாடையே தெரியாத ரிஷ்யசிருங்கரை ஏதாவது யுக்தி செய்துதான் வரவழைக்க வேண்டும்  அங்க தேசத்து அழகு மிகு வேசிகள் சிலரை அழைத்துஎப்படியாவது ரிஷ்ய சிருங்கரை மயக்க்கி அங்க தேசத்துக்கு கூட்டிவர பணித்தார் ஆனால் இது விபாந்தக முனிவருக்குத் தெரியக் கூடாது என்றும் தெரிந்தால் சாபத்துக்கு ஆளாகக் கூடும்  என்றும் எச்சரிக்கப்பட்டனர். அவர்களும் ஒரு அழகிய கப்பலைத் தோப்புபோல் அலங்கரித்து  ஆசிரமம்  ஒன்றமைத்து இவர்களும் முனிவர்கள் போல் வேடமணிந்து கானகம்  சென்றனர். விபாந்தக முனிவர் இல்லாத நேரத்தில்  ரிஷ்ய சிருங்கரை சந்தித்து நட்பைப் பெற்றனர் சிறிது நேரம் கழித்து திரும்பி விட்டனர். ரிஷ்யசிருங்கருக்கு அது புது அனுபவம்  மறு நாள் வந்தபோது  அவரை நாட்டியமாடி மயக்கி அவர் மனதில்  ஆவலை உண்டு பண்ணினர்  மறுபடியும் அவர்கள் திரும்பும் போது அவர்களுடன் வந்தால் இன்னும் அழகிய மக்களைச் சந்திக்கலாம் என்று கூறி ஆசையை வளர்த்தனர் விபாந்தக முனிவருக்குத்தெரியாமல் அடுத்தமுறை ரிஷ்ய சிருங்கரை அங்க தேசத்துக்கு
கூட்டி வந்தனர்  அங்கதேசத்தில் இவரது கால் பட்டதும் மழை பெய்தது ரோமபாதர் நன்றி மிகுதியால் அவருக்கு சாந்தாவை மணமுடித்து ரிஷ்யசிருங்கரை  அரச பீடத்தில் அமர்த்தினார்
 விபாந்தக முனிவர் திரும்பி வந்து பார்த்தபோது  ரிஷ்ய சிருங்கரைக் காணாமல்  கோபமடைந்து அங்க தேசத்துக்கு வந்தார். வந்தவரை எல்லா மரியாதைகளுடனும் ரோமபாதர் வரவேற்றார். முனிவரின் கோபம் சற்றே தணிய  அவரை மேலும் மரியாதைகளுடன் அரச மண்டபத்துக்குக் கூட்டி வந்தார் .அங்கு ரிஷ்ய சிருங்கர் அரச குமாரனாகவும் அரச குமாரி சாந்தாவின்  கணவனாகவும் இருந்தது கண்டு கோபத்தை அறவே ஒழித்து அவர்களை ஆசிர்வாதம் செய்தார் இந்தக் கதையைத்தான் திரு அப்பாதுரை குறிப்பிட்டு இருந்தார் என்று நினைக்கிறேன் 
ரிஷ்ய சிருங்கரின் கதை இதோடு முடியவில்லை.
கௌசல்யாவின் மகளை ரோமபாதருக்குக் கொடுத்த தசரதருக்குஅதன் பின் புத்திர பாக்கியம் இருக்கவில்லை. தனக்குப் பின் அரசாள வாரிசில்லையே என்னும் கவலை மிகுந்து வாடிய தசரதரிடம் வசிஷ்ட முனிவர் ஒரு புத்திர காமேஷ்டி யாகம் செய்யவும் அதை நடத்திக் கொடுக்க ரிஷ்ய சிருங்கரே தகுந்தவர் எனவும் கூறினார். அதன் படி தசரதர்  ரிஷ்ய சிருங்கரை வேண்டி அழைக்க அவரும் மனமுவந்து வந்து புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்திக் கொடுக்க  அந்த யாகத்தில் மகிழ்ச்சியடைந்த அக்னி பகவான் யாகத் தீயில் வந்து பாயசம் கொடுத்ததும்  தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்து ராம லக்ஷ்மண பரத சத்துருக்கனர் ஆக வளர்ந்தது அநேகமாக அனைவரும் அறிந்ததே                        


                   

 



ஞாயிறு, 3 ஜனவரி, 2016

புத்தாண்டை வரவேற்றோம்


                                      புத்தாண்டை வரவேற்றோம்
                                       --------------------------------------------
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்பது நான் ஓய்வு பெற்று வந்தபின் ஏறக்குறைய அறவே இல்லாது போயிற்று பணியில் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி பிஎச்இஎல் ஆஃபிசர்ஸ்  கிளப்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சியோ  அல்லது வேறு ஏதாவது கலை நிகழ்ச்சியோ இருக்கும் இரவு டின்னரும் இருக்கும். நாங்கள் டின்னருக்குப் போகமாட்டோம் இளைஞர்கள் ஆர்க்கெஸ்ட்ரா  இசைக்கு ஆட அமர்க்களமாய் இருக்கும்  பெங்களூரு வந்தபின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டே இருப்போம்  12 மணி அடித்ததும் வீட்டில் புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டு உறவுகளைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறுவோம் . பிறகு அதுவும் குறைந்து போயிற்று.  பலருக்கும் 12 மணிக்குக் கூப்பிடுவது தொந்தரவாகத் தெரிந்தது( எங்களுக்கும் சேர்த்து)
ஆகவே இந்த ஆண்டு என் இளைய மகன் அவனது அபார்ட்மெண்டில் புத்தாண்டு கொண்டாட  அழைத்தபோது ஒரு மாற்றமாய் இருக்குமென்று போனோம் பல ஆண்டுகளுக்குப் பின் ஆட்ட பாட்டங்களுக்கிடையே புத்தாண்டை வரவேற்றோம்அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் சுமார் முன்னூறு பேர் பங்கெடுத்தனர். நான் அந்த நிகழ்ச்சிகளை என் காமிராவில் படமாகவும் காணொளிகளாகவும் பதிவு செய்து கொண்டேன் இந்த நிகழ்ச்சியின் பிரதம காம்பியர் என் மகன்  என் பேத்தியின் ஒரு நடனமும் இருந்தது. என் பேரன் ஃபாஷன் பரேடில்  பங்கு கொண்டான்  சில காணொளிகள் நீளம் அதிகமாய் இருப்பதால் பதிவில் அப்லோட் ஆக மாட்டேன் என்கிறது. படங்களில் சிலவற்றையும் நீளம் அதிகமில்லாத காணொளிகள் சிலவும் பதிவிடுகிறேன் பெங்களூர்க் குளிரில் இரவு நேரத்தில் விழித்திருந்து பங்கு கொண்டது ஒரு வித்தியாசமான அனுபவம் 
                 
 
விழா மேடை
என் பேரன் ஃபேஷன் பரேடுக்கு தயார்

     
என்மகன் பிரதான காம்பியர்
            
  
 
சிறு குழந்தைகளின் நடனம்
நாட்டியம் 
 


 
நடனம் 
பாட்டு
பாட்டு
பாட்டு

புத்தாண்டு விழாக் குழு

காணொளி -இறை வணக்கம் 





கடைசியாக டிஸ்கோ ஜாக்கி என்னும் நிகழ்ச்சி.  அதில் டிஸ்கோ ஜாக்கியால் போடப்படும் பாட்டுக்களுக்கு கூடியிருந்தோர் ஆடும் நடனம்