புதன், 13 ஜனவரி, 2016

தெய்வத்தின் குரல் விநாயகர்


                                       தெய்வத்தின் குரல் விநாயகர்
                                       -----------------------------
இந்தப்பதிவை நான் எழுதத் துவங்கும் முன் நிறையவே கேள்விகள்  நானாக சிந்தித்து எழுதாததை என் பதிவு என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை.  இருந்தாலும்  மனித மனத்தை ஓரளவு புரிந்து கொண்டவன் என்னும் முறையில்  இதில் காணும் செய்திகளைப் பலரும் அறிந்திருந்தாலும் ஒரு ரிவிஷனாகப் படிப்பதில் அக்கறை குறையாது என்று  தெரிந்து கொள்ளுகிறேன் இதில் காணப்படும் செய்திகள் பல இடங்களில் வெகுவாகவே என்னைக் கவருகிறதுகாஞ்சிப்பெரியவரின்  கருத்து என்று தெரியும் போது அதை விமரிசிக்கப் பலரும் தயங்குவது தெரிகிறது விமரிசனம் என்றால் மாறுபட்டக் கருத்தாகதான் இருக்கவேண்டும் என்று இல்லை.  ரசித்ததைக் கூறலாம்எதிர்மறைக் கருத்துக்கள் இருந்தாலும் பகிரலாம் நம் வழக்கப்படி எந்த ஒரு பணியானாலும் விநானாயகனை முன்னிட்டெ துவங்குவது முறை. அதையேதான்  காஞ்சிப்பெரியவரும் செய்திருக்கிறார் 

நான் சுமார் இரண்டு வாரகாலம்  பயணத்தில் இருப்பேன்  அதுவரை என்  பதிவில் தொடக்கமாக தெய்வத்தின் குரலில் முதலில்( அனைவருக்கும் என் இனிய பொங்கல்நல் வாழ்த்துக்கள்)

விநாயகர்

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
விநாயகர்
தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். "கோயில்" என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் "பிள்ளையார்" என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். "பிள்ளை" என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே "பிள்ளை" என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் "பிள்ளையார்" என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
"குமாரன்" என்றால் "பிள்ளை" என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் "குமரக் கடவுள்" என்கிறோம். ஆனால், அவரைக் "குமரனார்" என்பதில்லை; "குமரன்" என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.
முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.
குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான "விநாயகர் அகவலை"ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, "நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்" என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர்....
என்பதில் சொல்லாமல் சொல்கிறார். "அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே" என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.
(தொடரும் )





10 கருத்துகள்:

  1. காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகளின் தெய்வத்தின் குரல் படித்திருக்கின்றேன்..

    மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு ஆரம்பம்...

    தொடர்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா தெய்வத்தின் குரல் தங்களால் அறிந்து கொள்ள காத்திருக்கிறேன் தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. @ துரைசெல்வராஜு
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ கில்லர்ஜி
    வருகைக்கு நன்றி தெய்வத்தின் குரல் அவ்வப்போதுஎன் பதிவில் ஒலிக்கும்

    பதிலளிநீக்கு
  5. விகடனில் தொடராக வந்த நினைவு! அப்போது சிறுவனாக இருந்த சமயம்! படித்தது இல்லை! பகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. தெய்வமே ஒரு பெரிய கேள்வியாக இருக்கும் பொது...அதற்கு எது குரல்?
    கும்பகோணம் மடத்தை சார்ந்தவர்களுக்கு அது ஒரு 'தெய்வத்தின்' குரலாக இருக்கலாம். கும்பகோணம் மடம் இந்த நூற்றாண்டில் காஞ்சி மடமாக மாறியது--Of, course-அரசியல் செலாவ்க்கினால் மட்டுமே அது சாத்தியமானது---அதில் அதில் தப்பில்லை. அது அதோட நிற்கணும்! அப்படியென்றால்.......

    மற்ற இதுக்க்கள் மீது "இந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை", "தெய்வமாகாதீர்கள்"---அது தவறு! வரலாற்றுப் பிழை மற்றும் பயங்கர இடைச்செருகல்...இது தவறு!

    ஆதனால், ஒட்டு மொத்த இந்துக்களுக்கும் எக்காலதிலேயும் அந்த ஒரு குறிப்பீட்ட சமுதாயத்தின் தலைவர் (நீங்கள் தெய்வம் எனாலம்) வெறும் ""குரல்"" தான்!

    பதிலளிநீக்கு
  7. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

  8. @ நம்பள்கி
    வருகைக்கு நன்றி. நமக்குத் தெரியாதவிஷயங்கள் ஏராளம் தனிப்பட்ட மனிதரிடம் காழ்ப்பு உணர்ச்சி காட்டாமல் விருப்பமிருந்தால் அவர் கூறியுள்ளதை வாசித்துத் தெரிந்து நம் அபிப்பிராயத்தை உண்டாக்கிக் கொள்ளலாம் என்பதே நான் நினைப்பது யார் எப்படி நினைத்தாலும் நாம் அனைவரும் சமம் என்று எண்ணமிருந்தால் வெறுப்போ காழ்ப்போ இருக்காது என்றே எண்ணுகிறேன் திரு சங்கராச்சாரியார் கூறியுள்ளதில் எல்லாவற்றிலும் உடன்பாடு இருந்துதான் நான் பதிவிடவில்லை. அவர் சொல்வதையும் கேட்கலாமே என்னும் எண்ணம்தான் குரல் நன்கு ஒலிக்கும்போது ஏற்று கொள்வோம் இல்லையென்றால் விட்டு விடுவோம் மீண்டும் நன்றியுடன்

    பதிலளிநீக்கு

  9. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    வருகைக்கும் வாழ்த்ட்க்ஹுக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  10. ! @ திரு யாழ்பாவாணன்
    மேலே வாழ்த்துக்கும் என்றிருந்திருக்க வேண்டும் தட்டச்சுப் பிழை பொறுத்தருள்க

    பதிலளிநீக்கு