வெள்ளி, 10 ஜூன், 2022

அறிந்த அளவு

 

அறிந்த  அளவு.
-----------------------
                 என்னதான் எழுதுவது.?
                 எதைத்தான் எழுதுவது ?
                 ஏன் இந்த மயக்கம்,?
                 எழுதவா இல்லை சேதிகள்.

ஓடும் நதி, ஒளிரும்  நிலவு,
வீசு  தென்றல், விளையும் பயிர்,
முத்துச்சிப்பி, மோகனப் புன்னகை,
எழுதலாம்  அல்லவா,
ஏன் இன்னும்  தயக்கம்.?

                அறிந்த மொழி  அழகு தமிழில்,
                 எழுத எண்ணும்  எண்ணங்களை
                அலங்காரம் செய்யவும்,
                ஆங்காங்கே  இட்டு நிரப்பவும்,
                இல்லையா வார்த்தைகள்..
                கூவும்  குயிலே,   தோகை மயிலே,
                கண்ணே, மானே, தேனே,
                என்றொரு பாட்டில்  வருவது போல.

எண்ணங்களுக்கு   வடிவம் கொடுத்து,
என்னதான்   தயார் செய்து
எழுதத்   துவங்கினாலும்,
எழுத  முடிவதென்னவோ
என் நினைவுகளில் நீக்கமற
நிறைந்தென்னை ஆட்டுவிக்கும், 
என்  ஆதங்கங்களும்  வாழ்வின்  அவலங்களுமே.

                 நானென்ன  செய்ய   நானும் ஒரு
                 பசுமாட்டுக்  கதை   சொல்லும்  பாலகனன்றோ

பசுமாட்டுக்கதை   அறியாதவர்களுக்கு
--------------------------------------------------------
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு வரும் கட்டுரை எழுத நிறையத் தலைப்புக்கள் கொடுத்து தயார் படுத்தி இருந்தார் ஆசிரியர்,கட்டுரைகள்  பல  தலைப்பிலிருந்தாலும் சிறுவன்  ஒருவன்  படித்து  அறிந்தது  பசுமாடு  பற்றிய  கட்டுரை மட்டுமே. பரீட்சையில்  தென்னை மரம் பற்றி  எழுத வேண்டி  வினா வந்தது. சிறுவனும்  அழகாக எழுதினான். " ஒரு வீட்டில்  ஒரு தென்னை  மரம்   இருந்தது. அதில் ஒரு பசுமாடு கட்டப்  பட்டிருந்தது."-என்று எழுதத் துவங்கி  பசுமாட்டைப்  பற்றிய கட்டுரை எழுதி  முடித்தான்.
===================================================


16 கருத்துகள்:

  1. சிலர் கண்களில் அவலங்கள் மட்டுமே படும்.  சிலர் கண்களில் நல்ல விஷயங்கள் மட்டுமே படும்.  ஜோதிடம் பார்க்கப் போனாலும் சிலர் அதில் உள்ள நல்ல பலன்களை மட்டும் சொல்வார்கள். சிலர் முதலில் அதில் உள்ள கெட்ட பலனைத்தான் சொல்வார்கள்!  ஒவ்வொருவர் ஒவ்வொரு ரகம்!

    பதிலளிநீக்கு
  2. ஆதங்கம் ஆனாலும் கவிதையாய் எழுதியது சிறப்பு.

     ஆயிரம் நல்ல சங்கதிகள் இருந்தாலும் ஒரே ஒரு கெட்ட சங்கதி இருந்தால் அதுதான் முதலில் புலப்படும் என்பது இயற்கை. ஆகவே அது  பற்றி கவலை வேண்டாம். எழுதுவது எண்ணங்களின் வடிகால். அதை எழுதியபின் ஏற்படும் திருப்தி அளவிடமுடியாதது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. சொல்ல நினைப்பதையே கவிதை போன்று அழகாக சொல்லி விட்டீர்கள் ஐயா
    குட்டிக்கதை உள்பட...

    பதிலளிநீக்கு
  4. நான் பள்ளி மாணவனாக இருந்தகாலத்தில் நானும் இதேபோல் 'பசுமாடு-தென்னை மரம்' உத்தியை ஒருமுறை கடைப்பிடித்ததாக ஞாபகம்!

    பதிலளிநீக்கு
  5. பலமுறைஎன்று இருக்கவேண்டுமோ

    பதிலளிநீக்கு