துக்கடாக்கள்.
--------------------
போன வருடம் வாசமில்லா மலரிது என்று என் வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் சில பூக்கள் குறித்து எழுதி இருந்தேன். பெயர் தெரியாத பூவின் பெயரை கீதமஞ்சரி எப்படியோ தேடிக் கண்டு பிடித்து அதை blood lilly அல்லது football lilly என்று தெரிவித்தார். அதில் விசேஷம் என்னவென்றால் சொல்லி வைத்தாற்போல் மே மாதம் செடி துளிர் விட்டு வந்து ஒரே ஒரு பூ பூக்கும். சுமார் பத்து நாட்கள்வரை இருக்கும் .அதன் பின் செடியும் பூவும் காணாமல் போய்விடும். இந்த வருடம் மே மாதம் ஒருவாரம் கழிந்தும் செடியைக் காணவில்லையே என்றிருந்தோம். குருவாயூர் பயணம் முன்பு சிறிதாய் துளிர் கண்டோம். மே 11-ம் தேதி செடி நன்றாகத் தெரிந்தது. என்ன ஆச்சரியம் ஒரு வாரத்தில் ஒரு செடி இருந்த இடத்தில் நான்கு செடிகள் வந்தன. செடிக்கு ஒன்றாக இப்போது நான்கு பூக்கள் இருக்கின்றன. நேரம் காலம் என்று ஒரு ஒழுங்குடன் செடி வளர்ந்து பூ பூப்பதைக் காணும் போது இயற்கையின் சக்தியில் பெருமையும் ஆச்சரியமும் தோன்றுகிறது.இந்தச் செடிகள் எப்படி இனப் பெருக்கம் செய்கின்றனவோ?
![]() | ||||
| போன வருடம் பூத்த BLOOD LILLY |
![]() | ||||||
| இந்த வருடம் பூத்த நான்கு மலர்கள். |
திருட்டு மெஷின்
----------------
திருடனைக் கண்டு பிடிக்கும் மெஷின் ஒன்று கண்டு பிடிக்கப் பட்டதாம். அதனை demonstrate செய்ய பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப் பட்டதாம். அமெரிக்காவில் அது 30 நிமிடங்களில் 20 திருடர்களைக் கண்டு பிடித்ததாம்.இங்கிலாந்தில் 30 நிமிடங்களில் 50 திருடர்களைக் கண்டு பிடித்ததாம். ஸ்பெயினில் 30 நிமிடங்களில் 65 திருடர்களை கண்டு பிடித்ததாம். கானாவில் 30 நிமிடங்களில் 600திருடர்களைக் கண்டு பிடித்ததாம்.இந்தியாவில் 15 நிமிடங்களில் அந்த மெஷினே திருட்டுப் போய் விட்டதாம். !
நான் ஒரு இந்தியன்
------------------
பாட்டிலில் ஷாம்பூ காலியான பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி இன்னும் ஒரு குளியலுக்கு அதை உபயோகிப்பேன்.
பற்பசை காலியானாலும் அதைத் தட்டி தகடாக்கி சுருட்டி எல்லாப் பேஸ்ட்டையும் வெளியில் எடுப்பேன்.
இருநூறு ரூபாய்க்குக் காய்கறிகள் வாங்கினாலும் கொஞ்சம் கொத்துமல்லித் தழை கொசுராக வாங்குவேன்.
கிடைத்த பரிசுப் பொருட்களையே மீண்டும் பரிசாகக் கொடுக்க அது பொதிந்து வந்த வண்ணத் தாளையே உபயோகிப்பேன்.
என் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த bone chjna கோப்பை, தட்டுகளை விருந்தினர் வரும்போதுமட்டும் வெளியில் எடுப்பேன்.
ஒரு பொட்டுத் தங்கம் வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட அதன் விலை ஏற்றம் பற்றிக் கவலை கொள்வேன்.
TV ரிமோட்டைத் தட்டித் தட்டி அதன் உயிர் எடுப்பேன். புது பாட்டரி வாங்காமல் காலம் கழிப்பேன்.
விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வேன்
என்னுடைய T ஷர்ட் பழையதானால் அதை இரவில் உடுத்துவேன். இன்னும் பழையதானால் ஹோலி அன்றைக்கு உடுத்துவேன். இன்னும் பழையதானால் வீடு துடைக்க உபயோகிப்பேன்.
நாம் இந்தியர்கள்.
----------------
ஆண்குழந்தைக்காக வேண்டுவோம். பெண்சிசுக்களை வேண்டோம்.முடிந்தால் கருவிலேயே அழிப்போம். பெரியோர்களின் ஆசியும் ஆண்மகவுக்கே பெண்ணுக்கல்ல.
ஆனால்
செல்வம் வேண்டுமென்றால் மஹாலக்ஷ்மியை வேண்டுவோம்.
கல்வி வேண்டுமென்றால் சரஸ்வதியை வேண்டுவோம்.
துக்கங்களில் இருந்து நிவாரணம் கிடைக்க தாய் சக்தியை நாடுவோம்
பேய் பிசாசுகளில் இருந்து பயம் அகல காளிமாதாவை தரிசிப்போம்.
நாம் இந்தியர்கள். WE ARE HYPOCRITES.!
குருவாயூர் நாராயணீய பாராயணம் செய்தபோது எடுத்த சில படங்கள். இப்போதுதான் கிடைத்தது.


.jpg)


